றோர்க்கிற்கும், டாமினிக்கிடையேயான காதல் ஆழ்ந்து கவனிக்கும் மட்டிலுமே எத்தகைய நுண்ணிய நுண்ணுணர்வுகளின் அடிப்படையில் பின்னப்பட்டிருக்கிறது என்று விளங்கிக் கொள்ள முடிகிறது. அதற்கு உதாரணமாக சில இடங்களை சுட்டிக்காட்ட முடியும். எங்கோ பாஸ்டனுக்கு அருகே றோர்க் ஒரு ப்ராஜெக்ட் செய்து கொண்டிருக்கிறான். டாமினிக், வைனாண்டை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக அவனை இரண்டு வருடங்கள் கழித்து சந்திப்பதற்காக அந்த இடத்திற்கு வருகிறாள்.
வரும் வழியில் அவன் நடந்து திரியும் கடை வீதிகளில் உள்ள கடைகளில் உள்ள காட்சி பொருட்களை பார்த்தவாறு இவைகளைத்தானே தினமும் றோர்க் பார்த்து திரிவான், உணவகங்களை பார்த்து இங்கேதானே உணவருந்தி இருக்க வேண்டும் என்று வாஞ்சையுடன் அவன் பார்த்த, பழகிய அனைத்து விசயங்களையும் இந்த ஊரில் தானும் செய்வதற்கு எல்லா உரிமையையும் இருக்கிறது என்பதாக நினைத்துக் கொள்கிறாள்.
அவனை சந்தித்து இருவரும் உரையாடிக் கொள்கிறார்கள். அப்பொழுது டாமினிக் அவனுடன் அவனது அறையில் இன்று இரவு தங்கிச் செல்லவா என்று கேட்கிறாள், வேண்டாமென மறுத்து அருகிலுள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்தே அழைத்துச் செல்கிறான்.
அப்பொழுது காற்றில் அடித்து புரட்டிச் சென்ற பழைய செய்தித்தாளொன்று அவள் காலில் சுருட்டியபடி சுற்றிக் கொள்ளும், அதனைக் குனிந்து எடுத்து மடித்து டாமினிக், றோர்க்கின் நினைவாக தன் பையில் வைத்துக் கொள்ள எத்தனிப்பாள். றோர்க் அதனை செய்வது பொருளற்றது என்று புரிந்து கொண்டவனாக பிடிங்கி கசக்கி தூரப் போடுவான்.
மற்றுமொரு இடத்தில் பீட்டர் தனது தொழில் ரீதியான அந்திம காலத்தில் ஒரு ப்ராஜெக்ட் மட்டுமே தன்னை விழும் பாதாளத்திலிருந்து தூக்கி நிறுத்த முடியுமென்று கெஞ்சி கூத்தாடி வாங்கி வந்து, அதனையும் றோர்க் மட்டுமே எதிர்பார்த்தபடி திட்டத்தை வரைந்து கொடுக்க முடியுமென்று அவன் முன்னால் வந்து கேட்டு குறுகி நிற்பான்.
றோர்க்கும் ’தொலைந்து போ’ என்ற வாக்கில் நான் செய்து கொடுக்கிறேன், ஆனால் நான் வரைந்த வரைபடத்தில் கட்டடமாக எழும் பொழுது எந்த ஒரு மாற்றமும் இருக்கக் கூடாது என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் செய்து கொடுப்பான். ஆனால், பீட்டர் தனது நிலையை மாற்றிக் கொண்டு கட்டடத்தில் சில மாற்றங்களை செய்து விடுவான். றோர்க் நம்பிய அந்த கட்டடத்தின் ஆன்மா சிதைக்கப்பட்டது என்றபடி அந்த கட்டிடத்தையே வெடி வைத்துத் தகர்த்து விடுவான்.
அப்படியாக அந்த குற்றத்தை செய்வதற்கு முன் றோர்க், டாமினிக்கின் உதவியை முதல் முறையாக கேட்டு நிற்பான். டாமினிக் எதனை நினைத்து பயந்தாளோ அது இப்பொழுது றோர்க்கிற்கு நிகழ்கிறது, என்பதனை டாமினிக் வெளிப்படுத்தும் உணர்வுகள் சொற்களில் அடங்காது. வேறு எந்த வார்த்தையும் சொல்லாமல் அந்த ஆபத்தான வேலைக்கு துணை நிற்பாள். இதுவும் பரஸ்பரமாக ஒருவரின் மீது மற்றொருவர் வைத்திருக்கும் காதலின் ஆழத்தையும், நம்பிக்கையையுமே காட்டுவதாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த காட்சி சிறப்பாக சினிமாவில் வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
றோர்க்கிற்கு கட்டுமானப் பணியில் முழு உரிமையுடன் கிடைத்த மற்றொரு ப்ராஜெக்டான செக்யூலர் கோவில் கட்டும் திட்டத்தில் முதன்மை ஹாலில் டாமினிக்கை மாடலாகக் கொண்டு முழு நிர்வாணச் சிலையொன்று நிறுவ எண்ணி அவளிடம் அதனைக் கூறும் பொழுது வேறு மறுப்பே இல்லாமல் ஒத்துழைக்க முன்வருவாள்; அது டாமினிக் எந்த அளவிற்கு றோர்க்கை நேசிக்கிறாள் என்பதனை புரிந்து கொள்ள வைக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. அங்கு றோர்க் பெண்களுக்கு கொடுக்கும் முன் உரிமையையும் அதன் ஊடாக சொல்ல வரும் தத்துவார்த்த சித்தாந்தமும் புரிந்து கொள்ளக் கூடியது. கூடுதலாக றோர்க் தான் காதலித்த பெண்ணையே அதற்கென தேர்ந்தெடுப்பது எத்தனை அளவிற்கு டாமினிக்கை நேசிக்கிறான் என்று சொல்லி நிற்கிறது.
இது போன்ற இடங்களிலிலேயே அவர்களுக்கிடையேயான காதல் எத்தனை வலிமையானது என்று புரிய வைத்து விடுகிறார் கதையாசிரியர். அவர்களுக்கிடையேயான பிரிதல்கள் வருடக் கணக்கில் ஓடினாலும், மனிதர்களில் சிலர் உறவு நிலைகளில் மாறி குறுக்கே வந்தாலும் காதல் நிலையாக நிற்கிறது.
சிலை வடிப்பவன் மீதான டாமினிக்கின் எண்ணம் வழியாக ஆண்/பெண் நட்பின் மாண்பை சொல்லிச் செல்லத் தவறவில்லை. ஏனெனில் சிலை வடிப்பவன் டாமினிக்கின் முழு நிர்வாணத்தை தினமும் தரிசித்தவனாகினும், அவர்களுக்கிடையே எல்லைகளற்ற நட்பு விரிந்து செல்கிறது. அந்நோன்யம் உணரப்படுகிறது. எந்த திரைச்சீலைகளும் அற்று இருப்பினும் உடல் சார்ந்த நட்பை தாண்டி எடுத்துச் சொல்லும் இடம் ஒரு ஸ்பெஷல் ஹைலைட்.
காதலுக்குண்டான இத்தனை அழுத்தமானதொரு மரியாதையை வேறு எந்த புதினத்திலும் கொடுத்து படித்ததாக எனக்கு ஞாபகத்தில் இல்லை.
நமது நிதர்சனத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் காதலித்த காதலி வேறொருவரின் மனைவியாகி, இன்று குழந்தையுடன் விதவையாகிப் போனால் மீண்டும் இந்த சமூகம் அவளின் தலையில் தூக்கிச் சுமக்க வைத்து செல்லும் பாராங்கல்லை - தன் பொறுப்புகளாக கொண்டு ஒரு நாள் இறக்கி வைத்து விட்டு திரும்பி பார்க்கும் பொழுது இன்னமும் அங்கு காதலன் ஏதோ ஒரு சூழலில் தனக்கு மீண்டும் கிடைக்கும் நிலையிலிருந்தால் தனி மனித மனதில் எது தடுக்கக் கூடும்?
அங்கே அந்த காதல் அதுவரையிலும் மரணித்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியுமா? இங்கே நம்முடைய சமூகத்தில் அந்த மரணம் நமக்கு தேவைப்படுகிறது. ஆனால், சற்றே வளர்ந்த, நாகரீமடைந்த சமூகத்தில் பிடித்து கட்டிப்போட்டு சோறு போடாமல் அவர்களின் வாழ்க்கையை அவர்களின் கைகளிலேயே ஓப்படைத்து விடுகிறார்கள், அவ்வளவே!
புதினத்தின் முடிவில் வைனாண்ட், றோர்க் மற்றும் டாமினிக்கின் குணாதிசியங்களை வளைக்க முடியாமல் தனது எண்ணப்பாட்டை நினைத்து அதற்கு முன்பாக வந்த தற்கொலை எண்ணங்களை தவிர்த்தவன் தான் ஈட்டி வைத்திருந்த பெயர், புகழ் அனைத்தையும் றோர்க்கிற்கென இழக்க முன் வருகிறான். அவர்கள் நல்ல நண்பர்கள் நிலைக்கும் உயர்கிறார்கள். இங்கே வைணாண்ட் பற்றிய பார்வையே சற்று சிந்திக்க வைக்கிறது. எது போன்ற மன நிலை அவனை அப்படியாக ஒரு ‘யூ’ டர்ன் அடிக்க வைக்கிறது றோர்க்கிற்கென எடுக்கும் ஒரு நிலை.
கடைசியில் இதுவே சரியான நேரமென றோர்க்கிடம் இந்த நகரத்திலேயே பெரிதாக எழுந்து நிற்கும் வாக்கில் ஒரு கட்டிடம் எழுப்புமாறான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு அதற்குண்டான அனைத்து பொருளாதார முன்னேற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து விடுகிறான், வைனாண்ட்.
டாமினிக் வானாளாவி எழுந்து நிற்கும் அந்த கட்டடத்தின் உச்சத்தில் நிற்பவனை பார்ப்பதற்கென லிஃப்டில் பயணம் செய்தபடியே, மேலே மேலே என்று முடிவற்றதாக பயணம் செய்தபடி அவள் காலுக்கு கீழே பல ஈயடிச்சான் சராசரிகளின் வாழ்வமைப்பை பல கட்டிடங்களை கடந்து மேலெழும்பி செல்வதின் குறியீடாக மனிதர்களின் குழு மனப்பான்மைக்கு எடுத்துக் காட்டியபடி அந்த உயர்ந்த மனிதனிடம் சென்று அடைவதாக கதையை முடித்திருப்பார்.
************
புத்தகத்தின் நீதி:பட்டங்கள் வாங்குவது என்பது ஒரு திரையரங்கத்திற்குள் நுழைவதற்கான நுழைவுச் சீட்டினை ஒத்தது. அதுவும் அந்த குறிப்பிட்ட காட்சியினை பார்ப்பதாக இருந்தால் மட்டுமே முட்டு மோதல் எல்லாம். இங்கு பட்டம் வாங்கி ஒரு பதவியில் அமர்வது மட்டுமே குறிக்கோள் என்றால் முட்டி உடைய, உடைய அதனை ஈட்டிவிட்டு அந்த திரையரங்கத்திற்கு நுழைவதனையொத்த தொழில் குழுவோட சேர்ந்து தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளலாம். ஆனால், றோர்க் போன்ற எத்தனையோ பேர் தனது இயல்பிலேயே தனித்துவமாக நின்று அந்தத் துறையில் சிறக்க முடியும். முயன்றால் இது ஓரளவிற்கு எல்லாத் துறையிலும் சாத்தியமே!
ஆகினும் இந்த உலக, சமூக அரசியல் மேடையில் அது எத்தனை போராட்டங்களை கொண்டதாக அமைகிறது என்பதே கதையில் முதன்மையாக ஓடும் அடி நாதம். அவ்வாறாக தனித்தன்மையுடன் ‘சுயம்’ இழக்காமல் இருப்பதின் அவசியத்தை, தன்னம்பிக்கையை ஊட்டுவதற்கெனவே இந்த புதினத்தின் களம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய இந்திய கல்விச் சூழலில் போட்டிகள் நிரம்பியதாகவும், ஈயடிச்சான் காப்பிகளை உருவாக்குவதுமாகவே பரிணமித்திருக்கிறது. குழந்தைகளின் மீதாக தூக்கி சுமத்தப்பட்டிருக்கும் இந்த சமூக நிர்பந்தம் சிறிதே தளர்த்தப்பட்டு (அவர்களிடம் தற்கொலை எண்ணங்கள் எட்டிப்பார்க்காமல் இருக்க...) அவர்களின் உண்மையான ஆக்கங்களை/திறமைகளை கண்டறிந்து அந்த குழந்தைகளின் ’சுயம்’ பேணி பாதுகாக்கப்படுவதற்கு இது போன்ற ஆழ்ந்த சிந்தனைகளை கிளறும் புத்தகங்களும் நமக்கு உதவலாம். நன்றி!
பி.கு: இந்த புத்தகத்தை வாசிக்க முடியாவதர்கள் முடிந்தால் இதனை திரைப்படமாக பாருங்கள். ஆனால், திரைப்படத்தில் நிறைய விசயங்கள் மிஸ்ஸிங். எனது ஓட்டு புத்தகத்திற்கே!
ஓர் ஆறு மாதங்களுக்கு முன் முதன் முதலாக அய்ன் ராண்ட் என்ற பெயரை வலையுலகின் மூலமாக கேள்விப்பட்டேன் அதுவும் ஒரு சர்ச்சையின் மூலமாக. அந்த சர்ச்சையின் பேசு பொருள் எதுவாக இருந்தது என்றால் , டமிள் சமூகத்தின் ஆன்மா ஒன்று அந்த பெண் எழுத்தாளாரை இடக்கையால் தள்ளி வைத்து விட்டு நகர்ந்து சென்று விட வேண்டும் என்றும், ஒழுக்க நெறிகளற்ற பெண்மணி கடைசி காலத்தில் மனநலம் குன்றிய நிலையில் மருத்துவமனையிலேயே கிடந்து உயிரை விட்டார் என்ற படியாக மலினப்படித்தி எழுதியதின் பொருட்டு சில முணுமுணுப்புகளை கிளப்பி விட்டிருந்தது.
அந்த சர்ச்சையின் மூலமாக அய்ன் ராண்டின் பெயரை தெரிந்து கொள்ள நேர்ந்த எனக்கு நல்ல வேலையாக சுய புத்தி இருந்ததினால் ஓரங்கட்டி வைத்துவிடாமல் ஒரு நாள் ராண்டின் The Fountainhead என்றதொரு முக்கியமான படைப்பையும் வாசிக்கும் படியான ஒரு நாளையும் அமைத்து கொடுத்திருந்தது. அந்த வாய்ப்பை ராண்டின் - படைப்புகளாக முன் மொழிந்த ப்ரியாவிற்கும், பிடிஎஃப் புத்தகங்களை கொடுத்து மகிழ்ந்த வானம்பாடிகள் பாலா சாருக்கும், நீ அவசியம் படித்தே ஆகவேண்டும் என்று முதலில் வாசித்து விட்டு உசிப்பேத்திய குட்டிபையா சீதாவிற்கும் இத்தருணத்தில் எனது கோட்டான கோட்டி நன்றிகள். இத்தனை பேர் சேர்ந்து என்னை அந்த சமுத்திரத்திற்குள் தள்ளி விட தேவைப்பட்டிருக்கிறது.
நானும் இரண்டு வாரங்களுக்கும் மேலாக முங்கி எனது கொள்ளளவிற்கும் அதிகமான விசயங்களை சவ்வூடு பரவல் ரேஞ்சிற்கு என்னுள் ஏற்றிக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு போதை நிலையிலேயே அந்த புத்தகத்தை முடிக்க மனதில்லாமல் முடித்து வைத்திருக்கிறேன்.
எங்கிருந்து எப்படி அத்த புத்தகத்திற்கான எனது பார்வையை இறக்கி வைப்பது என்பதனைப்பற்றி எந்த ஓர் ஐடியாவுமில்லாமல் ஓர் இலக்கற்ற முறையில் ஆரம்பித்திருக்கேன். எழுத்தும், மனதும் அதன் வேலையை மிகச் சரியாகச் செய்யும் என்ற நம்பிக்கையில். நண்பர்களுடன் இந்த புத்தகம் சார்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது புதினத்தில் வரும் சில முக்கியமான கேரக்டர்களுக்கு ஒரு கட்டுரையாக எழுதலாமென்று முடிவெடுத்தோம். ஏனெனில், பேசுவதற்கு பல கோணங்கள் இந்த புதினத்தில் இருக்கிறது. ஒவ்வொரு குணாதியசமும் இந்த மானுடத்தின் மாண்பை, தனது மனத்தின் தனிப்பட்ட சுயநல குண நலனை அழுந்த பதித்துச் செல்கிறது.
புதினம் காதல், தனிமனித விடுதலை, சிந்தனை, தன்முனைப்பு, வஞ்சனை, விஷ மனிதர்களின் கண்ணுக்கு தெரியா தகிடுதத்தங்களின் அணி வகுப்பென பன்முக பரிமாணங்களில் புகுந்து விளையாண்டு நம்மை காலப் பெருங்கடலில் அடித்துச் சென்று விட வைக்கிறது. நிச்சயமாக கதையின் கரு, நடை, வெளிப்படுத்தும் மொழியின் ஆளுமை இவைகளை கருத்தில் கொண்டால் இந்த புதினம் கடந்த பத்தாண்டுகளுக்குள்தான் எழுதி இருக்கப்பட வேண்டுமென்ற பிரமையை கொடுக்கிறது.
ஆனால், நம்பவே முடியாத வாக்கில் 1943ஆம் ஆண்டு இந்த புத்தகம் பதிப்பிற்கு வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ட்ராஃப்டாக எழுதப்பட்டு இருபத்தைந்து வருடங்கள் கிடப்பில் போட்டு தூசு தட்டல் வேறு நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்றால் இந்த புதினத்தின் வயதினை நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.
இருப்பினும் கதையின் களம், கரு இன்றும் நம்மிடையே நடந்து கொண்டிருப்பதுதான். ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருப்பவருக்கு இது தனக்கும் இந்த கம்பெனிக்குமான உறவு நிலையை அல்லவா பேசிச் செல்கிறது என்ற பின்னணியை பதித்துச் செல்லுவதாகட்டும்; ஒரு தினசரி நாளிதழ் நடத்தும் நிறுவனத்தின் தொழில் சார்ந்த நுணுக்கங்களை எடுத்து இயம்பும் இடமாகட்டும்; கட்டடக் கலையின் நுணுக்கங்களை அதன் வேருக்குச் சென்று எப்படி ஒரு கவிதை படிப்பவன் தனது படைப்பில் ‘ஆன்மா’ இருக்க வேண்டும் என்று நம்புகிறானோ அதனைப் போன்றே இந்த புதினத்தில் கட்டடங்களுக்கும் ஆன்மா உண்டு என்று வாதிடுவதிலாகட்டும்; மேலாக தீராக் காதலின் நிலையாமையை அடிக்கோடிட்டு சொல்லும் இடமாகட்டும் அனைவருக்கும் இந்த புதினத்தில் கவனித்து செல்ல இடமுண்டு.
புதுமைகளை புகுத்துவதில் எத்தனை தூரம் வைராக்கியமும், தொலை நோக்கு சிந்தனையும் கொண்டிருந்தால் மட்டுமே எதிர்ப்புகளை சந்தித்து தன்னுடைய பார்வையை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்ற விசயம் இந்த இடத்தில் என்னுடைய சுய அனுபவத்தில் தெரிந்து கொண்டது வந்து போகிறது. ஊரில் எனது அப்பாம்மாவிற்கு வீடு கட்டும் பொழுது நடைபாதையை சற்றே வித்தியாசமாக வளைத்து செய்ய எண்ணி, கயிறு போட்டு நெளிக்கும் பொழுது - வந்த எதிர்ப்பு லோகல் கொத்தனாரிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும்.
அந்த நிலையில் பள்ளம் வெட்டிக் கொடுக்க உதவிய துரைராஜ் மட்டுமே எனக்காக நின்றார். அது போன்றே சமையலறை திறந்த வெளியாக லிவிங் அறையுடன் இருக்க வேண்டுமென்று மீண்டும், மீண்டும் கூறியும் தனி அறையாக ஆக்கி அதற்கு கதவு வழியும் விட்டிருந்தார்கள், எதிர்ப்பை மீறியும் மீண்டும் இடித்து எனக்கு தேவையான வழியில் செய்து கொண்டது இந்த புதினத்தை வாசிக்கும் பொழுது ஆங்காங்கே எட்டிப்பார்த்தது.
இந்த புதினத்தின் நாயகன் றோர்க் ஹவொர்ட் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவதில் ஆரம்பிக்கிறது நம் பிள்ளைகள் நேர்மையாக வாழ்க்கையை கற்று, ஏற்றுக் கொள்ளும் மனத் தின்மையை விதைப்பதற்கான முதல் தன்னம்பிக்கை விதை. அவன் அவ்வாறு வெளியேற்றப்படுவதற்கான காரணம் தனது சுயமான சிந்தனையில் உதித்த கட்டட வரைபடத்தை தனது செய்முறை பயிற்சிக்கான வழங்கலாக தனது உயர் ஆசிரியர்களிடம் முன் வைக்கும் பொழுது அது அவர்களுக்கு உவப்பானதாக இல்லை.
கேள்விகள் கேக்கப்படும் நிலையில் அவன் வாதிட்டு நிற்பது எப்படி மனிதர்களுக்கு தேவையில்லாமல் எந்த உறுப்பும் அநாவசியமாக இந்த இயற்கை வழங்க வில்லையோ அது போன்றே எந்த தேவையற்ற கலப்புமில்லாமல் ஒரு கட்டடத்திற்கு தேவையான கச்சா பொருட்களை பயன்படுத்துவதும், அதன் அங்கங்களை அமைப்பதும் அவசியமென்று கூறி ரோமானிய கட்டடங்களையே (Parthenon) குறை கூறிச் செல்கிறான், றோர்க். அப்படியாக கூறியதின் விளைவாக வெளியேற்றப்படும் நிலையிலும், தான் சிந்தித்து வடிவமைத்ததில் எந்த தவறுமில்லை என்று அவன் மீது வைக்கும் நம்பிக்கையே அவன் நம்மிடையே வாழ தகுதியற்றவன் என்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது. அந்த ஓட்டத்தில் எந்த சமரசமுமில்லாமல் எப்படி அவன் பயணம் தொடர்கிறது என்பதாக விரிந்து செல்கிறது. இதிலிருந்தே ஓரளவிற்கு யூகிக்க முடியுமே இந்த கதையாசிரியை எப்படியாக மனிதர்களுக்கு நிறமூட்டி நமக்கு கதை சொல்லிச் செல்லப் போகிறார் என்று.
றோர்க்கின் மறுமுனையை நிறமூட்ட எண்ணி அவனது கல்லூரியிலேயே சீனியர் மாணவனாக மேற்படிப்பு படிப்பதற்கென பண முடிப்புடனும், வேண்டாத பட்சத்தில் உடனடியாக வேலையில் சேருவதற்கான ஒரு பெரிய கம்பெனி அழைப்புடனும் வெளியேரும் பீட்டர் கீட்டிங்ஸ்; நமது மெஜாரிடி மனிதர்களின் எதார்த்த உருவம் அவன். அடுத்தவர்களின் உழைப்பையும், காரியத்திற்காக எதனையும் இழக்க தயாராக இருக்கும் சுயபுத்தியற்ற, குழப்பமான குணாதிசியம் - எடுப்பார் கைபிள்ளை. சூழல்கள் தோறும் அவனது சுரண்டலையொட்டிய வளர்ச்சியே குற்ற உணர்ச்சியாக வந்து போவதனை எப்படி தவிர்த்து முன்னேறிச் செல்கிறான் போன்ற இடங்கள் நம்மை நாமே தரிசித்து செல்வதாக அமைந்து விடுகிறது.
பல வருடங்களாக காதலித்து கொண்டிருக்கிற ஒருத்தியை தனது சொந்த லாபத்திற்காக திருமணம் செய்து கொள்வதாக திட்டமிட்ட முதல் நாள் மாலையில் விட்டுவிட்டு தான் வேலை செய்யும் கம்பெனி முதலாளியின் பெண்ணை (டாமினிக் ஃப்ராங்கன்) திருமணம் செய்து கொள்கிறான். அதற்கு பின்னணியில் அவன் அம்மா கொடுக்கும் பாடங்கள் ‘பணம், புகழ்’ என்ற போதையின் அடிப்படையில் இயங்கும் குடும்பங்களுக்கு சாலப்பொருத்தமான குணாதிசியமாக வந்து போகிறது.
இருப்பினும் தான் ஏற்கெனவே காதலித்த காதலியிடத்தில் அத்தனை நெருக்கமாக தன்னை உணர முடிந்தாலும், பணத்திற்காகவும், வெளிப்புற தேவைகளுக்காகவும் தன்னை விட, தனது அலைவரிசைக்கு சற்றும் பொருத்தமில்லாத வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறான். இந்த சூழ்நிலை விலங்கினை போட்டுக் கொள்பவர்கள் நம்மில் எத்தனையோ பேர் உண்டுதானே? ஏதேதோ தேவைகளுக்காக, எத்தனை சமரசங்கள் செய்து கொண்டு வாழ்க்கைத் துணை விசயத்திலும் சோடை போய் விடுகிறோம். இந்த புத்தகத்தில் மண வாழ்க்கைக்கு பின்னான பீட்டரின் வாழ்க்கை டாமினிக்குடன் நடக்கும் உரையாடலைக் கொண்டு, அது போன்ற மனிதர்கள் எது போன்ற நடை பிணங்களாக உலாவக் கூடுமென்ற படத்தை நன்கே திரைவிரித்துக் காட்டுகிறது.
பிரிதொரு நாளில் தான் கட்டிக் கொண்டவளையே, தனக்காக ஒரு பெரிய கட்டட ப்ரொஜெக்டை அடைய வேண்டி வேறு ஒருவனுக்கும் விட்டுக்கொடுத்து அதன் மூலமாக வரும் பணத்தையும் பேரையும் ஈட்டுகிறான். அது போன்ற சூழ்நிலைகள் எதார்த்த வாழ்வில் திரைமறைவிற்கு பின்னாக, இருட்டடிக்கப்பட்ட மன விகாரங்களாக சமூகத்தில் நடைபெறுவதினை போகும் போக்கில் அந்தந்த சூழ்நிலைகளில் அதற்கான குணாதிசியங்களைக் கொண்டு பேசிக் கொள்ளும் அழுத்தமான, அழுக்கான வார்த்தைகளைக் கொண்டு நகர்த்திச் செல்கிறார் அய்ன் ராண்ட்.
பீட்டர், தொழில் சார்ந்து பெரும்பாலான சூழ்நிலைகளில் றோர்க்கின் உதவியையே நம்பிக் கிடந்தாலும், எப்படியாக சூழ்ச்சிகளின் வழி முன்னேறி மறுமுனையில் சரேலென சறுக்கி ஆரம்பித்த இடத்தை விட இன்னும் பாதாளத்தில் விழுந்து கூனிக் குறுகி, ஒழுக்க நெறி போண்டியாகி மனதில் தன்னை ஒன்றுமற்ற வெற்றிடமாக உணர்ந்து கொள்கிறான் ஒருநாள் என்பதாக விரிந்து செல்கிறது. அவனுக்கான ஒவ்வொரு வார்த்தைகளும் நம்மை நாமே மறுபரிசீலனை செய்து கொள்ள சொல்வதாக அமைந்துவிடுகிறது.
டாமினிக் ஃப்ராங்கன் முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையையும், தைரியத்தையும் முதன்மையாகக் கொண்டு இந்த புதினத்தின் சில முக்கியமான குணாதிசியங்களுக்கு முகமூடி கழட்டும் வேலையில் கன கச்சிதமா செய்ய வருகிறது. மற்றவர்களுடன் அவளுக்கான உரையாடல் மிகவும் கூர்மையானது. எந்த பாசாங்குமில்லாமல், ஆன்மா ஊடுருவி தன் நிலை உணர்த்துவதாகவே அமைந்திருக்கும். ஆனால், டாமினிக்குகும், றோர்க்குமிடையேயான காதல் எப்படியாக வார்த்தையில் போடுவதென்றே தேடுமளவிற்கான அதிர்வுகளை உருவாக்கவல்லது.
காதலில் மிக்க முதன்மையானது விட்டுக் கொடுப்பது. றோர்க்கின் குணாதிசியம் எதற்காகவும் தொழில் ரீதியில் தனது கொள்கையை தளர்த்தி கொள்ளாதது. நேர்மாறாக டாமினிக்கின் மீதான காதல் வெளிப்படையாக றோர்க்கிடையே இருந்து மொழி அளவில் வெளிப்படுத்ததுதில்லை எனினும், டாமினிக்கின் எதிர்மறையளவில் முதலில் தொழில் ரீதியாகக் கூட றோர்க்கிற்கு பல நஷ்டங்களை ஈட்டித் தந்தாலும் றோர்க், டாமினிக்கிடம் தனது வெறுப்பை உமிழ்வதாகவே இல்லை.
டாமினிக்கின் மனதினுள் றோர்க் ஓர் உயர்ந்த இடத்தை பெற்றிருக்கிறான். நடைமுறையில் ஒருவன் பல உயரங்களை எட்ட வேண்டுமானால் பல சமரசங்களை, மனிதர்களை ஈட்டிக் கொண்டாலே அதற்கு தகுதியான ஆள் எனும் எதார்த்த நிலையில் றோர்க்கின் எதிர் நிலையை நன்கு அறிந்தவளாக டாமினிக் அவனைப் பற்றி கவலை கொள்கிறாள்.
எப்படியாக இந்த குணத்துடன் இவன் எதிர்காலத்தில் எது போன்ற பிரச்சினைகளை எல்லாம் சந்திக்கக் கூடும் என்று பயத்தின் பொருட்டே அவனுக்கு எப்பொழுதாவதே அமையும் கட்டட ப்ராஜெக்ட்களை கூட எதிர்மறையாக விமர்சனம் எழுதுவதாக எழுதி, அந்த தொழிலிருந்தே விலக்கி விடுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதாக நினைத்து இயங்குகிறாள். இது இந்த புதினத்தில் பொதித்து வைக்கப்பட்ட ஒரு அருமையான காதல் கதை.
இது போன்ற காதலின் அடிப்படையில் அதனை பேசுவதற்கென ஒரு நாளும் அமைகிறது. யாரிடமும் காட்டாத தனது மற்றொரு முகத்தை காட்டுகிறாள். றோர்க்கின் மீதான அதீத காதலால், அவனை இந்த தொழிலை அப்படியே விட்டுவிட்டு, நகரத்திலிருந்து தூரமாக விலகி, எங்காவது கிராமத்திற்கு சென்று பிழைத்து கொள்ளலாம் என்று அதற்கான தனது தரப்பு காரணத்தையும் வைக்கிறாள். டாமினிக்கின் நியாயமற்ற பயத்தையொட்டி காரணங்களை மறுத்து முதலில் அவளின் எண்ணங்களை திருத்திக்கொள்ளச் சொல்கிறான்.
ஆனால், அவளுக்கு பயமே எஞ்சியிருப்பதால் ஒரு உயர்ந்த காதலனுக்கே உரிய தொனியில், அவன் கூறுவது - நீ எடுக்கும் எந்த ஒரு முடிவிலும் நான் தலையிட போவதில்லை எனவும், நீ எப்பொழுது அந்த பயத்திலிருந்து மீண்டு நம்பிக்கை பெறுகிறாயோ அந்த நாள் வரையிலும் காத்திருக்கிறேன், உன்னை நான் காதலித்து கொண்டிருமிருப்பேன் என்று கூறி வழியனுப்பி வைக்கிறான் - பின்னான தத்துவம் நேசிப்பவளுக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கிப் பார்ப்பது தானே நேசிக்கப்பட்டுக் கொண்டிருப்பவனுக்கு அழகு என்ற கான்செப்ட் மென்மையாக பொதித்து வைக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பின்னான டாமினிக்கின் ஓட்டம் மிகவும் ஆர்வமூட்டக் கூடியது. இங்குதான் அய்ன் ராண்ட் பல எதிர்மறை விமர்சனங்களை, சலசலப்பை வாசிப்பவர்களின் மனத்தினுள் ஏற்படுத்தியிருக்கக் கூடும். பீட்டர் கீட்டிங்ஸ், டாமினிக் அப்பாவின் கம்பெனியிலேயே வேலை செய்து வருவதால், அவளை திருமணம் செய்து கொண்டால் அந்த நிறுவனத்தை தனக்கானதாக ஆக்கிக்கொள்ளலாம் என்று கணக்கு போட்டு வைத்திருப்பான்.
டாமினிக் அப்பாவும் பீட்டர் திருமணம் செய்து கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்று ஆசைபடுகிறார். அது டாமினிக்கிற்கும் தெரியும். பீட்டர் அவளை இம்ப்ரெஸ் செய்வதற்கென போலியான காதல் வார்த்தைகளை சொல்லும் பொழுது டாமினிக்கின் எதிர்வினை வெரி ஷார்ப் அண்ட் ஸ்மார்ட். பின்னாளில், றோர்க்கிடமிருந்து விடைபெற்றவளாக, அவனது நண்பன் பீட்டர் கீட்டிங்ஸை அவளின் அப்பாவிற்கு பிடித்த மாதிரியே திருமணம் செய்து கொள்கிறாள்.
அவனுடன் வாழும் வாழ்க்கை பல பாடங்களை பீட்டருக்கு தேவையான உள் மன விசாரணைகளை நடத்திக் கொள்ள வாய்ப்பளிக்கிறது. கூடவே இருக்கிறாள். ஒரு மனைவியாக, அலங்கார பொருளாக அவனுக்கு தேவையான முறையில் எந்த வித எதிர்ப்புமே இல்லாமல், அவனுக்கு தேவையான ஒரு கண்ணாடியாகவே பிரதிபலித்து வருகிறாள். அதனையும் பீட்டர் உணர்ந்தவனாக அந்த மண வாழ்க்கையில் வளர்ந்தும் வருகிறான்.
ஒரு நாள் அதற்கு மேலும் அவனால் எடுத்து கொள்ள முடியாத சூழலில் நேராகவே கேட்கும் பொழுது அவனுடனான சம்பாஷணை ஒவ்வொரு திருமணத்திற்குள் ஊறி நொதித்துப் போன மன நிலையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது. அந்த நிலையில் பீட்டரை அணுகும் டாமினிக்கின் நிலை தன்னை விட பல படிகள் வளர வேண்டி உள்ள ஒரு குழந்தையை மதிப்பது போலவேயான காட்சி விரியும்...
பேசியே தனது ஆளுமைக்குள் வைத்துக் கொள்ளும் சூழ்ச்சிகள் நிரம்பிய மத போதகரையொட்டிய ஒரு குணாதியசம்; கிட்டத்தட்ட ஏனைய அனைத்து கதாபத்திரங்களின் வாழ்க்கையிலும் குறிக்கீடுவது போல எல்ஸ்வொர்த் டூஹே கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தின் மூலமாக மத போதகர்கள் எது போன்ற வேலையை நம்முடைய சமூகத்தில் செய்து வருகிறார்கள் என்று வாழை பழத்தில் ஊசியை ஏற்றுவது போல சொல்லி விளக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் அது போன்ற மனிதர்களின் செயற்பாடுகளும் வெளிப்புற தோற்றத்தில் சுயநலமற்ற செயல்களாக காட்சியளிப்பதால், இனங்காண்பதும் கடினம்.
டூஹே, மிக மிக நல்லவராக பேச்சு சாமார்த்தியத்தை வைத்து சமூகத்தின் அனைத்து தரப்பிலும் உள்ள பெரிய மனிதர்களை இந்த இயற்கைக்கு, கடவுளுக்கு முன்னால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதாக நம்ப வைத்து இவரை விட பெரிய ஆளாக ஆகிவிடாத படிக்கு ஒரு செக் மேட்டாக இருந்து கொண்டு, தன்னை ஒரு கடவுள் அவதாரமாக காட்டிக் கொள்கிறார். அதனை கதையோட்டத்தின் ஊடாக அய்ன் ராண்ட் தோலுறித்து அருமையாக நம் முன்னால் காட்டத் தவறவில்லை.
சராசரிகளின் குணாதிசியங்களில் பொருந்திப் போகாத றோர்க் போன்றவர்களின் ஆன்மாவை உடைக்க, கட்டட துறை சார்ந்த ஏனைய இஞ்சினியர்களை தான் வேலை செய்யும் நாளிதழிலில் பாராட்டி எழுதுபவர் கடைசி வரையிலும் கண்டும் காணாமல் இருப்பது போலவே இருக்கிறார், டூஹே. டாமினிக்கும் அதே பத்திரிக்கை கம்பெனியில் வேலை செய்யும் பொழுது அவருக்கு இணையாக சாலஞ்சிங் முறையில் உரையாடக் கூடியவராக டாமினிக் அமைந்து போவதால், டூஹேவிற்கு, டாமினிக் மீதான கவனம் திரும்புகிறது. டாமினிக்கிற்கும் டூஹேயின் சூழ்ச்சியும் எதனை நோக்கிய ஓட்டமாக அவரின் வாழ்க்கை ஓடுகிறது என்பதனையும் அறிந்தவளாக இருக்கிறாள். ஆரம்பித்திலிருந்தே றோர்க்கிற்கும், டாமினிக்கிற்கும் இடையிலான வெறுப்பு-காதல் பகுதி டூஹேயால நன்றாகவே புரிந்து கொள்ளப்படுகிறது . பீட்டர் குழப்பமான சராசரி மனிதன் என்பதால் மிக எளிமையாக டூஹேயால் அவரின் பிடிக்குள் ஆழ்ந்து அழிவுப் பாதையை தேர்ந்தெடுக்கிறான்.
டாமினிக், டூஹே இருவரும் வேலை பார்க்கும் நாளிதழின் முதலாளியான க்கெய்ல் வைனாண்டையே, தனது சூழ்ச்சி வளையில் தள்ளி விட்டு பார்க்கிறார். வைனாண்ட், மத போதகருக்கு எதிர் முனையிலிருந்து (சரியான கல்விச் சூழ்நிலையற்று, குடும்பமையாமல், ரெளடி வாழ்வுச் சூழல்) வாழ்க்கையில் முன்னேறி பெரும் தொழிலதிபராகிறான். இருவருக்குமே தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்ள அனைத்து விதமான சூழ்ச்சிகளையும், தேவையான பொழுது மனிதர்களை பயன்படுத்தி கொள்வதும், தூக்கி எறிவதுமான அனைத்து குணாதிசியங்களும் பொருந்தி வருவதாக ஒரு முன்னால் கேங்க் தலைவனான வைனாண்டை, டூஹேவுடன் இணைத்து சொல்வது மிக கவனிக்கதக்கது. இதுனாலேயே இந்த புதினத்திற்கு பல கோணங்கள் உண்டு என்றும், மிக்க விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கக் கூடுமென்றும் கருதுகிறேன்.
டாமினிக்கிடமிருந்து பீட்டர் விலகி செல்வதற்கான சூழ்நிலையையும் டூஹேயே வழங்குகிறான். வைனாண்ட் தன்னை வளர்த்து எடுத்துக் கொண்ட சூழல் பணமும் அதற்குண்டான சக்தியும் எந்த மனிதரையும் வளைக்கும் சக்தி வாய்ந்தது என்று நம்பவைக்கிறது. அப்படியாக அவைகளைக் கொண்டு பல மனிதர்களையும் அவர்களின் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு விலைக்கு வாங்கி, பிடிக்காத பொறுப்புகளை எடுத்து நடத்துமாறு அமைத்து கொடுத்து குரூர திருப்தி அடைந்து கொள்பவான்; இது போன்று இன்றளவும் எத்தனையோ பேர் இருக்கத்தானே செய்கிறார்கள்?
அந்த பின்னணியில் உள்ள வைனாண்ட் ஒரு கட்டட புராஜெக்டிற்கென யோசித்து கொண்டிருக்கும் பொழுது பீட்டரை தந்திரமாக அவரிடம் சிபாரிசு செய்து முதலில் டாமினிக்கை சந்திக்க வைக்க திட்டமிடுகிறார் டூஹே. வைனாண்ட், டூஹேவை நன்கறிந்தவராக (பாம்பின் கால் பாம்பறியுமாம்) ஒரு மாமா அளவிற்கு இறங்கிவிட்டாயா இதனால் உனக்கு என்ன லாபமென்றும் கேட்டு வைக்கிறான். எப்படியோ டாமினிக்கை சந்திக்க வைத்து விடுகிறார் டூஹே, அந்த சந்திப்பில் நேரடியாகவே, டாமினிக்கிடம் டூஹேவிற்கும், பீட்டருக்குமான தொடர்பு இந்த சந்திப்பு எதன் அடிப்படையில் டூஹே செய்து கொடுத்தான் போன்றவற்றை உள்ளது உள்ளபடியாக வைனாண்ட் எடுத்து முன் வைத்து விட்டு, இந்த ப்ராஜெக்டை பீட்டருக்கு நான் கொடுக்க வேண்டுமானால் டாமினிக்கை தன்னுடன் குரூஸ் வர சம்மதிக்க வேண்டும் என்று நிபந்தனையை முன் வைக்கிறான். அதற்கு டாமினிக் அது பீட்டரின் முடிவினையொத்தது என்று விலகி நிற்கிறாள்.
மேலே கூறியபடியே பீட்டரின் முன் இந்த நிபந்தனை வரும் பொழுது, அவன் டாமினிக்கை உனக்கு இதனில் உடன்பாடா என்று கேட்டபடியே வைனாண்டின் ப்ராஜெக்டை விட்டுக் கொடுக்க மனமில்லாதவானாக அவளை விட்டு கொடுத்து விட்டுச் சென்று விடுகிறான். ஒரு வகையில் வைனாண்ட், டூஹே மற்றும் பீட்டர் அனைவருமே றோர்க் போன்றோரின் நேர்மையான, தன்னம்பிக்கை மிக்கவர்களை கடை கோடியில் தள்ளி முகமிழந்த வாழ்விற்கு தள்ளுவதில் முதன்மையில் இருக்கிறார்கள். இங்கு றோர்க் நேரடியாக பல சந்தர்பங்களில் வைனாண்ட் நாளிதழிலின் மூலமாக அவனுடைய புராஜெக்ட்கள் பகடிக்கு உள்ளாகி எதிர்கால வாய்ப்புகள் நழுவி செல்லும் சூழலை உருவாக்கி கொடுத்திருக்கிறது.
எல்லாவற்றிற்கும் பழி வாங்கும் ஒரு பயணமாகவே, றோர்க்கின் மீது கொண்ட காதலின் வயப்பாட்டில் பீட்டரிலிருந்து, வைனாண்ட் வரையுமாக மிக அருகிலிருந்தே அவர்கள் செய்த தவற்றை அவர்களே உணர்ந்து வருந்துமாறு அப்படியொரு வலியேற்ற மிக்க பயணத்தை மேற்கொள்வதாக டாமினிக்கின் குணாதிசியத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பின்னாளில் வைனாண்ட், முற்றிலுமாக தனது மற்றொரு முகத்தை எந்த முகமூடியுமில்லாமால் திறந்து நிற்பதும் டாமினிக்கிடமே!
இந்த புதினத்தின் மீதான எனது பார்வை எழுத எழுத போததாக நீண்டு கொண்டே செல்வதால், இரண்டு பகுதியாக உடைத்திருக்கிறேன். பகுதி இரண்டில் சந்திப்போம்...
தமிழ்மணம் இல்லைன்னா கால் ஒடிஞ்ச மாதிரியில்ல ஆயிப் போச்சு! முடிஞ்ச அளவிற்கு எல்லாரும் கொஞ்சம் பொருளாதார ரீதியில தமிழ்மணத்திற்கு கிள்ளிப் போடுங்க - நானும் செய்றேன். முக்கியமான திரட்டியாச்சே!
நேத்து எனக்கு எட்டின வரைக்கும் சமச்சீர் கல்வியின் தேவையையொட்டி லஞ்ச ஒழிப்பில் சமச்சீர் கல்வியின் பங்கு’ன்னு...
ஒரு பதிவு போட்டிருந்தேன். தமிழ்மணத்தில வரவே இல்லை. அதான் திரும்பவும் மைக் டெஸ்டிங். ஏற்கெனவே வாசிச்சவங்க தாண்டி போயிக்கோங்க எதுக்கும் பின்னூட்ட பகுதியை ஒரு எட்டு எட்டிப் பார்த்திட்டு :)... இன்னமும் வாசிக்காதவங்க ஒரு நடை எட்டிப் பாருங்க. நன்றி!
சமச்சீர் கல்வித் திட்டம் தேவையா இல்லையான்னு ஊரு பூராவும் குறைந்த பட்சம் வலையுலகில் நோட்டீஸ் அடிச்சு ஒட்டிப் பேசுற அளவிற்கு பேசி, உரையாடி கழட்டி காயப்போட்டிருக்காங்க. அதுக்கு முத்தாய்ப்பு வைச்ச மாதிரி நம்ப நண்பர்தேவியர்கள் இல்லத்தில ஒரு பதிவு போட்டுருக்கார் அங்கயும் போயி படிச்சிக்கலாம்.
ஒவ்வொரு முக்கியமான சந்தர்ப்பத்திலும் என்னுடைய குருவி மண்டைக்கு எத்தனை தூரம் எட்டியிருக்கோ அந்த அளவிற்கு எந்த புள்ளி விபரங்களும் இல்லாம லாஜிக்கலாக எனது பார்வையை வைத்து விடுவது என்னுடைய பாணி. இந்த விசயம் பொருட்டு கூடுதலாக எனக்கு பேச அருகதை இருக்கிறது என்பதற்கு நான் படித்து வந்த பள்ளிகளின் தரம் ஒன்றை வைத்தே சொல்லி விட முடியும். நானும் கடைசி பெஞ்ச். ஆனா, போராடி எப்படி முதன்மை தரத்தில் கல்வி பெற்று வருபவர்களோட வெளி உலகம் சென்று போராட வேண்டி வந்தது என்பது இன்னமும் பச்சையாக மனத்தில் பதிந்திருப்பதால் அவசியம் நானும் என்னுடைய பார்வையை வைப்பதில் எந்த தவறுமில்லை என்பதால் இந்த பகிர்வு.
நான் ஒன்னாப்புல இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் அரசாங்க பள்ளிகளில் படித்து தேர்ந்தவன். அந்தப் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களின் திறன், ஆர்வம், அக்கறை சார்ந்தே எனக்குள் இருக்கும் பல நிறை, குறைகளுடன் வார்த்து எடுத்து ஒரு நாள் திடீரெண்டு வெளி உலகத்திற்கு தள்ளப்பட்டேன். அங்கே ஊட்டி ஷெஃப்பர்ட் சர்வதேச பள்ளியில் படித்தவர்களிலிருந்து, சேஷாத்திரி வித்யா நிகேதனில் சிறப்பு பாடம் படித்தவர்களிலிருந்து குருவிக்கரம்பை அரசாங்க மேல் நிலை பள்ளியில் படித்தவர்களுடனும் போட்டி போட்டு வெற்றி பெறுவதாக அமைந்து பட்டிருந்தது அந்த விளையாட்டு மைதானம்.
என் பெற்றோர்கள் ஏதோ சுமாருக்கான அளவில் ஆரம்ப பள்ளியளவில் படித்தவர்களாயினும் அவர்களுக்குள் இருந்த ஆர்வம் அவர்களின் பிள்ளைகளை எப்படியோ தம் கட்டி கல்லூரி வரைக்கும் அனுப்பி வைத்து பார்த்தது. இது போன்ற குடும்பப் பின்னணியில் மிக்க சிரத்தையுடன் குழந்தைகளின் எதிர்கால உளவியல் எப்படியாக அமையும் என்று கருதி காரியத்துடன் வீட்டினுள் கருகருவென சிறப்பு வகுப்புகளும், பெற்றோர்களின் சிறப்பு கவனமும் பேசிக் கொண்டே அன்றைய வகுப்பறையில் நடந்தவைகளை ஊடாடிக் கொண்டோ வளர்த்தெடுக்கும் பின்னணி இல்லை.
அப்படியாக கல்வியறிவு ரீதியான பிரக்ஞையை முற்றும் முழுதுமாக மேற்சொன்ன அனைத்து காரணிகளை என்னுள் வளர்க்க அவர்களும், நானும் ஏன் என்னை ஒத்த முழுச் சமூகம் நான் சென்ற பள்ளியையும், கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையும், கற்பிக்கும் பாட நூல்களையும், அதற்குண்டான உபகரணங்களையுமே நம்பியே அனுப்பப்படுகிறோம்.
இந்த சூழ்நிலையின் அடிப்படையிலேயே அருதிப் பெரும்பான்மையினர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில், பள்ளிகளில் போதுமானளவிற்கு தேவையான கல்வி போதிக்கும் உபகரணங்களும், உலகத்தின் இன்றைய தேவையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட பாடத் திட்டங்களும் அல்லது அணுகுமுறையும் அற்று, எல்லாவற்றிற்கும் மேலாக கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கே போதுமான பொது அறிவும், மாணவர்களிடத்தே புழங்கும் உளவியல் செயற்பாடுகளுக்கான பிரக்ஞையுமற்று ஏதோ சம்பளத்திற்காக வந்து போகிறேன் என்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டால், அந்த எதிர்கால நாட்டின் குடிமகன் எப்படி அதற்கு எதிர் முனையிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு சர்வதேச பள்ளித் சூழ்நிலையில் படித்தவனுடன் முகம் தரிக்க முடியும்? இது ஒரு பகுதி-
அடுத்தது. மேற்சொன்னவைகளில் அரசாங்க பொதுக் கல்வி தோல்வியுற்று இருப்பதாக பெரும்பாலனாவர்களால் உணரப்படுவதாலும், நம்பப்படுவதாலும் தனியார் பள்ளிகளை என் பெற்றோரைப் போன்ற பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களும் தன் விரலுக்கு ஏத்த வீக்கத்தை காட்டிலும் பெரிதாக ஆசைப்பட வேண்டி வருகிறது. அதற்காக அவர்களை குற்றம் சொல்லுவதிற்குமில்லை. ஏனெனில் எந்த பெற்றவர்களுக்குத்தான் தனது பிள்ளைகள் சான்றோன் என்ற சொல்லை கேக்க கசக்கும். எனவே, எங்கே பிடிங்கியாவது தனியார் பள்ளிகளில் போடக் கூடிய ஒரு கட்டாயத்தில் திணிக்கப்படுகிறார்கள்.
ஏற்கெனவே சாதியைக் கொண்டும், பண பலத்தைக் கொண்டும் அடுத்த மனிதர்களை எறும்புகளாக மதிக்க கற்றுக் கொண்டு வாழப் பழகின நம்முடைய சமூகத்திற்கு எனது பிள்ளை இது போன்ற பள்ளியில், இத்தனை பணம் கட்டி படிக்கிறது, விடாம ஆங்கிலத்தில் ரைம்ஸ் கக்குது என்று சொல்லி பீத்தி, கூரை வீட்டில் வாழ்பவனைக் கூனி குறுக மற்றொரு வாய்ப்பையும் கொடுத்ததாகத்தான் எடுத்துக் கொண்டு நீ முந்தி, நான் முந்தி என்று கேள்வி கேப்பாடு இல்லாமல் ஈயடிச்சான் காப்பி அடிக்க செல்லுவோம்.
அங்கே ஏன் இப்படி அதிகப்படியான ஃபீஸ் வாங்குகிறார்கள், எந்த வித்தியாசத்தின் அடிப்படையில் இது போன்ற கட்டணச் செலவில் நாம் முன் வந்து நமது பிள்ளையை படிக்க வைக்கிறோம் போன்ற எந்த அடிப்படை கேள்விகளும் கிடையாது. ஆங்கிலம் பேசும், சீருடை அழகாக இருக்கிறது, பக்கத்து வீட்டு மாமி அங்கேதான் தன் பிள்ளையை படிக்க வைத்திருக்கிறாள், அந்தப் பள்ளியில் படிக்க வைத்தால் பெருமை (மற்றதெல்லாம் எருமை), எல்லாத்துக்கும் மேல நம்ம ஸ்டேடஸ்க்கு அதுதான் சரியான பள்ளி. இப்படியாக செல்கிறது இன்றைய நடைமுறை தனியார் பள்ளிகளில் மொய்க்கும் ஈக்களின் எண்ணிக்கையின் பெரும்பாலான எண்ண ஓட்டம்.
இந்த ஆட்டு மந்தை எண்ணத்தை அடிப்படையாக கொண்டு, பணமயமாக்கும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை காளான்கள் பூத்து குலுங்குவதனைப் போன்று இன்று காண்கிறோம். அவர் அவர்களின் வசதிக்கு ஏற்ப தெருவிற்கு ஒன்றாக, பல ஜொலிக்கும் பெயர்களுடன் மண்ட ஆரம்பித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படையில் அமைந்த முதலீடு- ஒரே மாதிரி உடையணியும் ஒரு 5-10 அடிமாட்டு விளைக்கு வாங்கின ஆசிரிய, ஆசிரியைகள். மாணவர்களுக்கு டை கட்டின சீருடை. போதும். நேற்று வரை சாராயம் காச்சி பணம் பெருக்கியவர் கூட இன்றைக்கு பள்ளி தாளாலர் ஆகிவிடலாம். இதே ரேஞ்சுதான் இன்றைய மருத்துவ, இஞ்சினிய, கலைக் கல்லூரிகளில் முதலீடும் கூட என்பது யாவரும் அறிந்ததே!
இப்படியாக ஒரு சமூகம் அமைந்து போனால் எப்படி அந்த நாடு வெளங்கும்? பணம் படைத்தவர்கள் எந்த தொழிலையும் ஆரம்பிப்பது போலவே பணம் பெருக்குவதனையும், பாதுகாப்பான முதலீடு என்ற தொணியிலும் கல்வித் துறைக்குள்ளும் வந்தால் அதனிடத்தில் பொதிக்கப்பட்ட சாதா மனிதர்களின் நிலைதான் என்ன?
பத்தாயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒரு அரசு ஊழியருக்கு தனது இரண்டு பிள்ளைகளை எல்.கே.ஜி_ல் போட ஐம்பது ஆயிரம் டொனேஷன் தலைக்கு என்றால் அந்த மனிதர் எங்கிருந்து அந்த பணத்தை புரட்டிக் கொண்டு வந்து சேர்ப்பார்? அது மட்டுமின்றி மாதமாதம் தன் தலையின் சைஸை விட அதிகமாக பள்ளிக்கு ஆகும் செலவிற்கென அடுத்தவர்களின் மடியில் கை வைக்காமல் எப்படியாக அந்த பணம் புரட்டப்படும்? இப்படியாகத்தான் நமது தேவைகளை நம்மை விட பெரிதளவாக வளர்த்துக் கொள்கிறோம். அதற்கு இந்த சமூகமும் பொறுப்பாகித்தானே போகிறது.
அதன் பின்னணியில் பேருந்து நடத்துனர் ஐம்பது ரூபாயில் சில்லரை பாக்கியாக இரண்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் வரைக்கும் திரும்ப கேட்டால் எரிந்து விழுகிறார் என்று ஏன் கோபித்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனையின் வாசலில் நிற்கும் காப்பாளர் உள்ளே அனுமதிக்க இருபது ரூபாய் கேக்கிறார் என்று எதற்கு கடுப்பேற வேண்டும். அதனை விட சற்று பெரிய வேலையாக அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் தனது பேனாவின் கொண்டை ஆட பணம் கேட்டு இழுத்து அடிக்கிறார்கள் என்று மண்டை காய வேண்டும். அந்த பணத்திற்கான அனைத்து தேவைகளையும் நாம் ஒரு சமூகமாக நம்முள்ளே நாமே வைத்து திணித்துக் கொண்டோம்.
ஆசைகள் பெரிதாகி வருகிறது அதனை தாங்கிப் பிடிக்கும் அமைப்பு அப்படியே இருக்கிறது. ஊழலும், லஞ்சமும் மலிந்து விட்டதென்று மேகத்திலிருந்து இறங்கி வந்து ஓர் அன்னா ஹாசரே நம்மை மீட்டெடுப்பார் என்று கனவில் மயங்கிக் கிடக்கிறோம். மாறாக, அது போன்ற ஊழல், லஞ்சம் பெருகி வழிவதற்கான மூல ஊற்றை கண்டுபிடித்து அடைப்பதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. அந்த ஊற்றுகள் பல முகங்களில் கட்டயாமாக நம்மிடையே நாமே அமைத்துக் கொண்டுள்ளோம். எல்லவற்றின் அடிப்படை கட்டமைப்பு ஆசையும் அரசாங்கத்தின் கையாலாகத்தனமுமே!
ஆசை தனிமனிதனின் சிந்தனையை தொட்டு அணை போட்டும் உடைத்தும் கொள்வதற்கான குமிழ்களை கொண்டது. ஆனால், அரசாங்கத்தின் வலியமைற்ற சட்டங்கள் ஒட்டு மொத்த சமூகத்தையுமே பாதிக்கிறது. சமச்சீர் கல்வி நம் போன்ற சமச்சீரற்ற சமூகத்தில் மிக மிக அவசியம் என்பது என்னுடைய நோக்கு. அதற்கான காரணங்கள் என்னளவில், என்னுடைய குடும்ப அமைப்பை கொண்டே விளக்கியிருக்கிறேன்.
யுனிவெர்சல் பாடத் திட்டங்களையும் கொண்டு வந்து, அரசாங்க பள்ளிகளின் தரத்தினையும் உயர்த்தி, ஆசிரியர்களும் தங்களது பொறுப்பையும், தனிப்பட்ட மாணவர்களின் தேவையறிந்து கருசணையுடன் அணுகி கற்பதில் மாணவர்களுக்கு எந்த விதமான மனத் தடையுமில்லாத ஒரு சூழலை, நண்பகத் தன்மையை உருவாக்குவது நல்ல தன்னம்பிக்கையுள்ள, ஆரோக்கியமான மாணவர்களை/மனிதர்களை உருவாக்க உதவும்.
இப்பொழுது உள்ள சமச்சீர் கல்வியின் தரம் அந்தளவிற்கு உயர்ந்ததாக இல்லையெனில், பின் வரும் காலங்களில் நிச்சயமாக இன்றைய நடைமுறைத் தேவைகளை கருத்தில் கொண்டு உயர்த்திக் கொள்வார்கள் என்று நம்புவோம். இந்த அமைப்பில் அரசியல் சார்புகளை விட்டு விலக்கி கொள்வது அனைவருக்கும் நலம் பயக்கும் - குறைந்த பட்சம் கூடுதல் திருடர்களை உருவாக்குவதனையாவது குறைக்கலாம்.
அமெரிக்காவில் பொது பள்ளிகள்:
பி.கு: அமெரிக்காவில் உயர் நிலை பள்ளி வரையிலான படிப்பிற்கு பெரும்பாலும் இங்க உள்ள மக்கள் அரசாங்க பொதுப் பள்ளிகளையே பயன் படுத்துகின்றனர். தனியார் பள்ளிகள் மிகவும் அரிதாகவே காணக்கிடைக்கிறது. அது போன்ற பள்ளிகளில் மிகவும் பணம் படைத்தவர்களே தங்களது பிள்ளைகளை கல்வித் தரத்திற்குமட்டுமல்லாது வேறு பல காரணங்களுக்காகவும் போடுகிறார்கள். இருப்பினும் பெரும்பான்மையினரின் தேர்வு பொதுப் பள்ளிகளே! எப்படி அவர்களால் நாடு முழுமைக்குமே செல்லு படியாகும் பாடத்திட்டங்களைக் கொண்டு கல்வியும் வழங்கப்பட்டு பள்ளியிலிருந்து கல்லூரிக்குக்கு செல்லும் வாய்ப்பையும் பெற்றுவிட்டால் ஒரு திறன் வாய்ந்த சமூகத்திற்கு பங்களிப்பூட்டும் ஒருவரை பெற்று கொள்ள முடிகிறது?
அது போன்றே ஏன் நம் ஊரில் காளான்களாக முளைத்திருக்கும் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் இங்கு கணக்கற்று காணக் கிடைப்பதில்லை. அவிழ்த்து விட்டு நம் ஊரைப் போலவே இங்கும் தரமற்ற கல்வியை பெற்றுக் கொள்வதற்கு எவ்வளவு நேரமாகும்? அப்படியெனில் எது அவர்களை தடுக்கிறது? பிசினெஸ் செய்யத் தெரியாவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
மற்றொரு விசயம் கவனிக்க வேண்டியது, நம்முடைய சமூகத்தில் இருப்பதனைப் போன்ற தொற்று வியாதி என் பிள்ளை இந்த பள்ளியில் படிக்கிறான் அதனால் நான் ஒரு ’வெண்ணை’ என்று அடுத்தவனின் மூக்கினுள் கையை விடுவது கிடையாது.
கீழே உள்ள காணொளியை அவசியம் பாருங்க. சமச்சீர் கல்வி மற்றும் ஏனைய கல்வித் திட்டங்களுக்கான வித்தியாசங்களையும் சமச்சீர் கல்வியின் தேவை பற்றியும் ஒப்பீட்டு பேசியிருப்பார் டாக்டர். ரமணி.
காணொளியை உருவாக்கி வழங்கிய ஓசை செல்லாவிற்கு நன்றி!
அன்னார்ந்து பார்க்கும் திராணியற்ற ஒரு செக்குமாட்டு ஓட்டத்தில் பார்த்தே ஆகவேண்டுமென அதட்டலாக தினமும் ஒரு கோலமாக மாலை வேளைகளில் வானம் போட்டுக் காண்பித்த ஆயில் பெயிண்டிங்களை எனது கேமராக் கண்களின் வழியாக பார்த்து, உங்களின் பார்வைக்கும் சிலவற்றை வைத்துச் செல்கிறேன் ...
பக்கத்தில ஒரு சர்வதேச குதிரைகள் விளையாட்டு மைதானம் (International Horse Park) ஒண்ணு இருக்கு, அங்கே வருடந்தோறும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் குதிரைகளுடன் வந்து மக்கள் போட்டியில் கலந்துக்குவாங்க. சரி, அந்தப் பக்கம் பொயிட்டு வரலாமின்னு ஒரு மாலை வேளை பயணிப்பு செய்த பொழுது இப்படியாக சூரியனார் கவிழ்ந்து சாலையின் மறு பக்கம் ஓடி ஒளிந்து கொள்ள முயற்சிக்கும் பொழுது...
சில தினங்களுக்குப் பிறகு இப்படியாக மழை மேகம் திரண்டு ‘இடியுடன் கூடிய, மழை பெய்தது...’ இது எனது வீட்டின் ஒரு பாகக் கூரையை உள்ளடக்கியவாரு...
மேகக் கூட்டத்தின மறுகோடியை பார்க்க எத்தனித்த பொழுது - கூடுதல் ட்ராமாவிற்கு கேமராவின் ’மோடை’ கொஞ்சம் மாற்றி...
கீழே சுருட்டின புகைப்படங்கள் நேற்று மாலை கிடைத்தது. வானத்தை பார்த்தவாறு நானும், எனது மூன்று வயது பெண்ணும் குறுக்கும் நெடுக்குமாக பறந்து திரியும் பறவைகளை எண்ணிக்கொண்டு படுத்துக் கிடந்த பொழுது எழுந்து ஓட வைக்கும் வாக்கில் வானம் திடீரென்று இப்படியாக பவுடரை அடித்துக் கொண்டு வந்து நின்றது.
#1
#2
#3
#4
#5
இந்த இரண்டு மாலை நேரத்து சூரிய ஒளியல் பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு அருமையான மாலை நேர மொபட் பயணத்தின் போது காணக் கிடைத்தது... சீதாம்பாள்புரம் என்ற ஊருக்கு பக்கத்திலே...
#1
#2
இன்னொரு மொபட் பயணத்தின் பொழுது கோவை ஈஷா மையத்திற்கு செல்லும் வழியில் இப்படியாக சூரியன் படுத்திக் கொண்டிருந்தது...
இதனை தனிமையின் ஏகாந்தம் என்று அழகியலோடு தொடர்பு படுத்தி பார்ப்பதா... அல்லது அவரின் கண்களில் காணப்படும் பசியினை உற்று நோக்கி தரையில் கால் ஊன்றி நிதர்சனத்தை பார்க்க கற்றுக்கொள்வதா?