Monday, March 29, 2010

கோடியக்கரை பறவைகள் சரணாலயம்: Photography

கோடியக்கரை விலங்குகள் சரணாலயத்தில இருந்து விழுந்தடித்து வனச்சரகர்கிட்ட பேசி முடிச்சிட்டு பறக்கப் பறக்க சூரியன் ஓடி ஒளிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி அந்தாளைப் பிடிச்சி நிறுத்தி கொஞ்சம் என் கேமரா பெட்டிக்குள்ளர அடைச்சிக்கணுமின்னு ஓடினோம்னு இங்கே சொல்லியிருந்தேன், இல்லையா?

அதே மாதிரியே மிகச் சரியா சூரியனாரும் ஒப்பனை எல்லாம் போட்டுக்கிட்டு சும்மா புது மாப்பிளைக் கணக்கா இருந்தாரா, கீழே பாருங்க நீங்க கூட அழையா விருந்தாளியா விருந்துக்குப் போயி கை நனைச்சிட்டு வந்திருவீங்க, அந்த அளவிற்கு அந்தாளு அம்பூட்டு சேட்டை பண்ணிக் காமிச்சிருக்கார்.

கோடியக்கரை பறவைகள் சரணாலயம் கொஞ்சம் சொல்ல முடியாத அளவிற்கு சில மாற்றங்களை சந்தித்து வருகிறது, நம் கண்ணுக்கு முன்னாடியே திரும்பப் பெற முடியாத பாதையில் நடக்க வைச்சு கூட்டிட்டு போயிட்டு இருக்கோம். :-(

அங்கே இரண்டரை லட்சம் பூ நாரைகள் தரையிறங்கும் காலம் போயி இப்போ வெறும் ஐம்பதனாயிரம் கூட வருவதில்லையாம். தனிப் பதிவா எழுதி பேச வேண்டிய விசயங்கள், அவ்ளோ இருக்கு. சரி, வாங்க நாம சூரிய மாப்பிள்ளை உலாவில் கலந்துக்குவோம் இப்போ...





நிலாவை கொஞ்சம் அப்படியே ஓரங்கட்டி வைச்சிட்டு முகம் சிவக்க ஆரம்பிச்சிருக்கும் பெண்ணான கீழ்வானம்...





கொஞ்சம் பக்கமா போயி பார்ப்போமேன்னு நெருங்கினா - என்னத்தா நான் சொல்லுறது...





முழு சரணாலயத்தின் சிம்னியாக தூரமா நின்னு சிவக்க வைக்கிறாரு பாருங்க...





இன்னும் கொஞ்சமே இழுத்து பிடிச்சிப் பார்த்தா அவரே சிவந்து காமிக்கிறார்...




அதுக்கு கீழே தனிமையில் உப்பு ஏறிப்போன தண்ணீரில் உணவைத் தேடியலையும் வண்ணநிற நாரை (Painted Stork)...



போஸ்ட்கார்டுக்கு உகந்த மாதிரி அழகு காட்டி நிற்கும் மாப்பிள்ளை...






அப்படியே வலப்பக்கமா திரும்பும் போது பார்த்தா, தன் கழுத்துப் பகுதியையே கேள்விக் குறியா மாத்தி சோகத்தோட தன் எதிர்காலத்தைப் பற்றி கவலைப் பட்டு நிற்கும் ஃபளமிங்கோ...





இந்தப் பறவைகளின் வருகைக்கு குறுக்காக நின்று அந்தப் பகுதிகளில் விரைந்து உப்பேற்றம் செய்வதின் பொருட்டு நீரின், நிலத்தின் அமிலத் தன்மையை மாற்றி உணவுப் பெருக்கம் தடுக்கப்படுவதில் ஒரு வேதியற் தொழிற்சாலையின் பங்கு அதிகமென தெரிகிறது, அதன் ஒற்றைக் கை கீழே...





பி.கு: மேலே உள்ள படங்களில் சிலவற்றை சென்னை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் பார்த்திருந்தால் அதற்கு நான் என்ன செய்றது ;-) ...

Monday, March 15, 2010

பேசாத்துணை



கட்டிய துணைவியும்
சுயநலம்வேண்டி
சுமங்கலியாய்
முன்சென்றோட
பிள்ளைகளோ பிழைப்புத்தேடி
அவசர உலகத்தில்
கரைந்து போக...

ராஜ யோகாசனத்தில்
இன்று நானமர்ந்து பொழுதைக்
கழித்தாலும்
அடுத்தவேளை உணவைத்தேடி
நானெழுந்து அமர்கையில்
அகங்காரமேதுமற்று
பட்டினி நிகழ்த்தாமலும்
பாசத்திற்கு விலைவைக்காமலும்
கூடவே ஒட்டிப்பிறந்தவனாய்
பாரம் சுமக்க காத்துநிற்கும்
கைத்தடி!



குறிப்பு: இதனை என் குரலில் வாசித்து கேக்க-



Wednesday, March 03, 2010

உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா!

இந்த ஜோதியில நானும் கலந்துகிறேனேன்னு எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் என்னுடைய எண்ணங்களை இந்தச் சந்திப்பில் இதன் பொருட்டு முன் வைக்கலைன்னா வரலாறு என்னை மன்னிக்கவே மன்னிக்காது என்பதால் இதோ என்னுடையதும், இந்த தேசிய நீரோடையில் ;-).

அந்த விடியோவை நானும் பார்க்க நேர்ந்தது. அதற்கு முன்னால் அந்த இளமை ததும்பும் அழகிய இளம் கன்று நித்தியின் ஒரு சில யுட்யூப் பிரசங்க க்ளிப்புகளை அளவற்ற எரிச்சலுடன் பார்க்க நேர்ந்தது. அவ்வளவு முதிர்ச்சியற்ற அணுகுமுறை! ம்ம்ம்... சரி இந்த நிலையில் இப்பொழுது இந்த விடியோ. எனக்குப் புரியவில்லை. ஏன், மக்கள் இப்படி ஒரு சாதாரண மனித நிகழ்வினை ஒட்டி இத்தனை வெறுப்பும், அருவறுப்பும் கொள்கிறார்கள். ஒரு நிமிடம் அந்தாளின் காவி உடையை தவிர்த்து பார்த்தால், அந்த க்ளிப்பில் அப்படி என்ன தவறாக அவர் நடந்து கொள்கிறார்?

அந்த காவி உடையைச் சுற்றி நாம் வைத்திருக்கும் நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கென ஒருவரை நடிக்கவும் வைத்து, பிழைப்பும் நடத்தி பின்பு அது நிறமிழக்கும் பொழுது ஏன் வருத்தப் படுகிறோம்? எப்பொழுது இது போன்ற பத்தாம் பசலித்தனத்திலிருந்து நமது மனதிற்கு விடுதலை? அந்த விடியோவில் எனக்கு மிகவும் வருத்தம் தருவதாக அமைந்த ஒரு விசயமென்றல் அது நித்தியின் சோம்பேறித்தனம் அளவற்ற முறையில் வளர்ந்து கிடப்பதனை காணும் பொழுதுதான் :-). அது, தன் வேலையை தானே செய்து கொள்ளக் கூட அடுத்த ஆளை நம்பி இருப்பது போன்ற தோற்றம்...

அப்படி என்னதான் செய்து விட்டார் என்று கேட்டீங்கன்னா, மனுசன் அசையவே மாட்டீங்கிறார், அங்கும் ராஜா கணக்கா கை விரலை சுடுக்கினால் ஓடி ஓடி சேவகம் செய்யும் அந்தப் பெண். அந்தப் பெண்ணும் எவ்வளவு மரியாதையின் நிமித்தமாக செய்வதாக எனக்குப் படுகிறது. அது போன்றே மிக்க பாசத்திலும், காதலிலும் இருவர் இணைந்து இருப்பதாகவே எனக்கு அது விளக்கியது. அங்கே நமக்கு என்ன வேலை?

இந்த சாமியார்/காவி உடை அதனையொட்டிய நமது எதிர்பார்ப்பு, அதற்கென அவர்களின் அளவற்ற நடிப்பு இவைகளை தவிர்த்து பார்த்தால் அங்கே நமக்கு வேலையே கிடையாது. அந்த ஆளு எப்படியோ இருந்திட்டுப் போறார் என்று எண்ணிவிடும் பட்சத்தில். பிரச்சினை நம் பக்கமே அதிகம் என நினைக்கிறேன்.

கி. ராஜநாராயணன் தொகுத்த 'மறைவாய் சொன்ன கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து படித்த ஒரு கதைதான் இந்த இடத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது. அதில் ராஜாவும், மந்திரியும் ஒரு விசித்திரமான ஆராய்ச்சியில் இறங்கி இருப்பார்கள், ஒரு பெண்ணின் கற்புத்தன்மையை கண்டறிய - அவளும் எப்படி அவர்களை ஏமாற்றிவிட்டு அவள் தனக்கு தாம்பத்திய சுகம் மறுக்கப் பட்ட போதும், அவர்கள் இருவரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு கள்ளத்தனமாக ஒருவனுடன் அந்தச் சுகத்தை அடைகிறாள் என்பதே அந்தக் கதையின் கரு - அதற்கு நீதியாக அந்தக் கதை கூறவருவது, மனிதனில் பாலியல் நாட்டம் எப்படியேனும் அடைந்தே தீர வேண்டிய ஒரு நடை முறை உடல் செயற்பாடு. அதனை எப்படி அடைத்து வைத்தாலும் ஏதாவது ஒரு வகையில் வழி கண்டு அதனை அடைந்தே தீரும் என்பதே அது - அதற்கென அது போன்ற செயல்பாடுகள் கொஞ்சமும் நாம் எதிர்பாராத, கற்பனைக்கு எட்டாத முறைகளிலெல்லாம் சென்று அவர்கள் அந்த தாகத்தை அடைந்திருக்க காணக் கூடுமென்று சொல்லி முடித்திருப்பார்கள்.

இதன் அடிப்படையில் வாழ்க்கையை ஓரளவிற்கு அவதானிக்கும் எவரும், இது போன்ற உடற் செயல்பாடுகளின் அவசியத்தை அறிந்து கொள்ள முடியும். அப்படி அறியும் பொழுது இது போன்ற மாயைகளிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ள முடியும். பசி, ஏப்பம், சிரிப்பு, அழுகை, வெக்கம் போன்றதும் தானே பால் நாட்டம், கிளர்ச்சி எனும் விசயமும் மனித உணர்வுகளில் கட்டப்பட்ட ஒரு உணர்ச்சி - விடுங்கப்பா, சாமியார்களின் இமேஜை நாம் எதிர்பார்ப்புகளிலிருந்து கட்டவிழ்த்து. எதிர்கால சாமியார்களே உங்கள நீங்களே ஏன்யா இப்படி திருட்டு வேலையில போட்டுக்கிறீங்க. வாழ்ந்து பார்த்திட்டு வாங்கப்பா! ஹாஹாஹா - ஹையோ! ஹையோ!! என்னயெல்லாம் அட்வைஸு பண்ண வைச்சிட்டாய்ங்களே ...

Monday, March 01, 2010

மலம்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

ஓர் அருமையான நவம்பரில் மேகங்கள் மலைகளின் மீது புரண்டு அவைகளின் அழகை போர்த்தி மறைத்துக் கொண்டிருந்த நாளில், எங்களின் கார் விரைந்து கொண்டிருந்தது சிறிதே அந்த அழகை பருகிவிட வேண்டுமென்ற கொலை வெறியுடன்.

சூரியனார் கடையை இழுத்து மூடும் பரபரப்பான இயற்கைச் சூழலில் கடைசியே கடைசியென வரைந்து காட்டிவிட்டு ஒளிந்து கொள்ளும் இடைவேளைக்கிடையில் நான் உள்ளே புகுந்து கேமராவிற்குள் சுருட்டிக் கொண்டதை இந்த வையகமும் கண்டு களிக்கட்டுமென்ற ...

சுமாருக்கு ஒரு 75 படிக்கட்டுகளை முட்டி கெஞ்ச கெஞ்ச ஏறியதிற்குப் பிறகு இப்படியாக இருந்துச்சு பூமி கீழே...




மலம்புழா நீர்த் தேக்கத்தின் ஒரு பகுதி மலை முகடுகளை உள்ளடக்கியவாறே...




எங்களுக்காகவே கடைசி சவாரியென்று காத்து நிற்கும் சேட்டன்கள்...




இங்கிருந்து ஆரம்பிக்கிறது சூரியன் தன் கலையுணர்வை ஓளிக் கற்றைகளைக் கொண்டு, நிறங்கள் அப்பிக்காமிப்பது - மேகத்தின் கு்த்தாட்டத்தையும் கவனிக்கத் தவறாதீர்கள்...




சைனீஸ் ட்ராகன் ஒன்று எதனையோ தாவிப் பிடிக்கும் நோக்கோடு ...




படம் வரைய வானப்பலகை தயாராகி விட்ட நிலையில்...




இன்னும் வண்ணங்களை அடர்வாகக் கலந்து...




அப்படியாக கண்டு மிதந்து கொண்டே வரும் பொழுது கொஞ்சம் வெளி வானத்திற்கு (outer space) கேமராவுடன் சென்று கீழே பூமியைப் பார்க்கும் பொழுது ;-) ...



மீண்டும் திருப்பி படகுக்கே பிடித்து இழுத்துக் கொண்டு வந்திட்டாய்ங்க, இந்தப் படத்தை எடுக்க...




அப்படியே பார்த்திட்டே வரும் போது திடுமென்று இன்னொரு பத்து நிமிடத்திற்குள்ள இப்படியும்...



கூட வந்த நண்பர்களுக்கு அந்த ஒளி வெள்ளம் அவர்களின் இதயத்தை துளை போட்டு எதையோ திருடிக் கொண்டது போல, அவர்களின் நிறமும் கண்களில் இருக்கும் கிறக்கத்தையும் பாருங்க - பார்ததாவே தெரியும் இயற்கைக்கும் நமது மன நிலைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இல்லையா?






பி.கு: தெரியாதவர்களுக்கு - இந்த மலம்புழா அணைக்கட்டு (Malampuzha Dam) பாலக்காட்டிலிருந்து (கேரளா)ஒரு பத்து கிலோமீட்டர்கள் தொலைவிலையே அமைந்திருக்கிறது. வெறும் 40 ரூபாய்க்கு 45 நிமிடத்திற்கும் மேலாக நீரில் நம்மை மிதக்க வைக்கிறார்கள். திட்டமிடாமல் அரக்க பறக்க இருட்டு தட்டிய நேரத்தில் எங்களுக்கு அந்தப் பயணம் கிடைத்தது அதுவே இந்த ஒளியின் விளையாட்டை வாரி எங்களுக்கு வழங்க ஒரு வாய்ப்பை கொடுத்தது...

Related Posts with Thumbnails