அறுவடையாக
இருந்தும் பட்டுத் தெளியா சமூதாயம்
என்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...
Wednesday, December 24, 2008
Posted by Thekkikattan|தெகா at 6:04 PM 6 comments
Labels: கவிஜா
Sunday, December 07, 2008
சமீபகாலமா பதிவுகள் எழுதவே தோணுவதில்லை. நடைபெறும் நிகழ்வுகளை கொண்டு எனது எண்ணவோட்டத்தை சுடச்சுட பதியும் பொழுது, அந்த ஒட்டு மொத்த நிகழ்வின் பரிமாணமோ வேறு மாதிரியாக நாட்பட நாட்பட வெளிச்சத்திற்கு வருகிறது. அதுவும் இந்தியாவில் நடைபெறும் அரசியல், கலவரங்கள் சார்ந்த நிகழ்வுகள்.
அதற்கு ஒரு உதாரணமாக அண்மையில் அரசு சட்டக் கல்லூரியில் (எல்லா அரசாங்க கல்லூரிகளிலுமே என்று கூட கூறி விட முடியும்) காலங் காலமாக நடைபெற்று வரும் இந்த ஜாதிச் சண்டையின் பின்னணியை ஆர அமர கவனிக்கும் பொழுது யாருக்கும் தெரிய வந்திருக்கும். இதனில் முக்கியமாக கேமராவும் கையுமாக, ஒருவர் தற்கொலைக்காக ஒரு உயரமான நீர்த் தொட்டியின் மீது ஏறி குதித்து உயிரை மாய்த்து கொள்வதனை நேரடி ஒளிப்பரப்பு செய்வதாகட்டும், கல்லூரியில் ஒருவரை ஒருவர் மாட்டடி அடித்துக் கொண்டு அவர்களும் செத்துக் கொண்டு பார்ப்பவர்களுக்கு வன்முறை சார்ந்து இம்யுனிடி கொடுப்பதில் காட்டும் அக்கறையாகட்டும் இந்த வியாபார மீடியாக்களின் பங்கு சகிக்க முடியா அளவிற்கு சந்தை படுத்தப் பட்டிருக்கிறது. அது நம் வளர்ச்சியில் ஒரு அபாயகரமான சந்திப்பில் நின்று தவறான பாதையில் வழி நடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறோமென்பதற்கான ஒரு வழியாக எனக்குப் படுகிறது.
________________________________
சரி இப்பொழுது பதிவின் கருவிற்குள் செல்வோம். அவந்திகா அண்மையில் நடந்தேறிய மற்றுமொரு ரியல் லைஃப் ஷோ இதுவும் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பெற்றது "மும்பை தீவிரவாத தாக்குதலுக்குக்" காரணம் இந்திய அரசியல்வாதிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டுமென்றும், சரியான, நேர்மையான அரசியல்வாதிகளை இந்தியா பெற்று விட்டால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் குறையுமா என்றும் வினவி ஒரு தொடர் விளையாட்டை ஆட அழைத்திருக்கிறார்.
இந்த தீவிரவாத தாக்குதல் அல்லது உலகம் தழுவிய நவீன தீவிரவாத அணுகுமுறை சார்ந்து என் மனதில் எண்ண அலைகள் அவ்வப்பொழுது தீவிர'மாக எழுந்து வீழ்வதுண்டு. இருந்தாலும், இன்றைய பொருளாதார கட்டமைவில் நடைபெறும் சித்து விளையாட்டுக்களும், புவியிருப்பில் அமைந்திருக்கும் நாடுகளின் அரசியல் சார் நகர்வுகளையும் ஒட்டு மொத்தமாக கவனிக்கும் பொழுது, மனித பரிணாம நகர்வில் ஆண்ட்ரோஜனையும், அட்ரீனலின் ஓட்டத்தினையும் கொண்டே எடுக்கப்படும் சுயநலத்தனமான முடிவுகளின் வெளிப்பாடே இந்த நவீன தீவிரவாத விளையாட்டோ என்று என்னை ஒரு கணம் யோசிக்க வைக்கிறது.
காலம் தொட்டே மதங்களின் இருப்பும் மறுப்பும் அவைகளின் நெகிழ்வுறும் தன்மையைக் கொண்டே மக்களால் மானசீகமாக பின்பற்றப் பட்டு தலைமுறையாக கையிறக்கம் பெற்று பல நூறு ஆண்டுகள் மாற்றத்தினூடே தன்னையும் மாற்றியமைத்துக் கொண்டு மக்களின் தேவைக்கும் விட்டுக்கொடுத்து தலை தப்பி நிற்பதாகவும், லாஜிக்கலாகவே இயற்கையின் நியதிப்படியே அதுவே சாத்தியமாகவும் தோணச் செய்கிறது எனக்கு.
ஆனால் இன்றைய நிலவரப்படி அது போன்ற ஒரு பாதையில் எந்தவொரு மதத்தினையும் நாம் பரிணமிக்க போதுமான கால அவகாசம் கொடுப்பதாக தெரியவில்லை, அந்தந்த குழுமங்களும் தங்களின் "கடவுளர்களை" காப்பாற்றி அடுத்த தலை முறைக்கு விட்டுச் செல்வதற்காக போராடுவதாகப் படுகிறது. இச் சூழலில் வன்முறையும் ஒரு வாழ்வின் அங்கமாக தேவைப்படாத நாடுகளின் மீது கூட வைத்து திணிக்கப் படுகிறது.
இப்பொழுது இந்திய துணைக் கண்டச் சூழலுக்கு வருவோம். நம் புவியியல் இருப்பு உலக வரைபடத்தில் உற்று நோக்கினால் ஒரு சூடான பகுதியில் (geo-politicaly we are located in a complex place) இருப்பதனைக் பார்க்கலாம். இச் சூழலில் எந்தவொரு முடிவினையும் நம் நாடு எடுத்தோம் கவிழ்த்தோமென்று தான் தோன்றித் தனமாக எடுத்து அதனை நிறைவேற்றி பார்த்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.
உண்மை அப்படியாக இருக்க "கொம்பு சீவி" விடப்படுவதினால் கோபம் கொப்பளித்து 'பாடம் கற்பிக்கிறேன் பார்!' என்று மல்லுக்கு நின்றால் தொலைதூரப் பார்வையில் நாம் சந்திக்கவிருக்கும் இன்னல்கள் நம் கற்பனைக்கும் எட்டாதது. எனவே நம்மூர் அரசியல்வாதிகள் அண்டைய நாடுகளுடன் பகை பாராட்டி அதன் மூலம் ஓட்டு அரசியல் வேண்டுமானால் செய்து கொள்ளலாமே தவிர இது நடைமுறைக்கு சாத்தியப் படாத ஒன்று!
இருக்கும் வழி ஒரே வழியே! பொருளாதார வகையில் தன்னிறைவு எட்டி, தன் நாட்டிற்கு போதுமான பாதுகாப்பை, எல்லை கடந்த தீவிரவாதத்தை எல்லையிலேயே தடுத்து நிறுத்தற்குரிய வழிமுறைகளைக் கண்டு, நாட்டின் எல்லைக்குள் வாழும் எல்லாரும் நிறைவாக வாழும் ஒரு வழிவகை கண்டு, பிரிவினை வாத அரசியலை தவிர்த்து நாட்டினை எடுத்துச் செல்வதே வாழும் மக்களுக்கும் ஒரு நம்பிக்கையளிக்கும் கட்டத்தில் இருப்பதாக ஏனைய தீவிரவாத விசயங்களில் கவனத்தை செலுத்தாமல், தான் பயனுறும் உடனடித் தேவைகளில் கவனம் செலுத்த முடியும்.
நாம் வெறுமனே அரசியல்வாதிகளை குறை கூறுவதில் எந்த பொருளும் கிடையாது, என்னமோ அரசியல்வாதிகள் எங்கிருந்தோ குதித்து நம்மிடையே தோன்றிவிட்டதாக நினைத்துக் கொள்வதற்கு! அவர்கள் நம் ஒட்டு மொத்த சமூகத்தின், எண்ணவோட்டத்தின், ஒழுக்க நெறிகளின் பிரதிநிதிகளே! அது அப்படியாகக் கிடையாது என்று கூறினால், கண்டிப்பாக நம்மால் அது போன்ற பொய்யான பிரதிநிதிகளை சகித்துக் கொண்டிருக்க முடியாதல்லவா? மாற்றுத் தலைவர்களை நம் எண்ணங்களின் பிரதிபலிப்பானை தேடிக் கொண்டே இருப்போமே...! இத்தனை கோடி மக்களிருந்தும் நமக்கு கிடைப்பதெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாமே எனும் பொழுது என்ன தெரியவருகிறது அதிலிருந்து?
ஒண்ணு மட்டும் நிச்சயம் ஒட்டு மொத்த இந்திய மக்களின் எண்ண வோட்டம் இந்த "சுயநலப்" போக்கு சார்ந்து மாற வேண்டும், அதற்குத் தேவை என்னன்ன அப்படின்னு ஒவ்வொரு தனிமனிதனும் தீவிரமாக யோசிக்க வேண்டும், அப்படி யோசித்து தன்னைத் தானே திருத்திக் கொண்டு பொது வாழ்க்கைக்கும், ஏனைய துறைகளுக்கும் சென்றால் மட்டுமே ஒரு விடிவுகாலம் நம் நாட்டிற்கு கிட்டும் என்பது எனது எண்ணம்.
நானும் இன்னோட பங்கிற்கு ஒரு நாலு பேரை முன்னுரைக்கிறேன்...
1) தருமி
2) சுரேகா
3) சுகா
4) சந்தோஷ்
மேலும் இவங்க இல்லாம யாரெல்லாம் தானும் தன்னோட பார்வையை முன் வைக்கணுமின்னு நினைக்கிறீங்களோ கண்டிப்பா செய்ங்க. நன்றி!
Posted by Thekkikattan|தெகா at 8:31 AM 18 comments
Labels: சமூகம், தீவிரவாதம், தொடரழைப்பு, மதங்களும் நானும், வன்முறை