Friday, August 04, 2006

ஏன் கோயம்புத்தூர் மாவட்டம் வெற்றியடைந்தது...?

இது போன்ற ஒரு கட்டுரையை என்னை எழுத தூண்டிய விசயம் நண்பர் *செல்வம்* கோக் ஃபாக்டரிகளை தனது சொந்த மண்ணுக்கு அனுப்புங்கள் நாங்கள் எப்பொழுதும் போல புத்திசாலிகளாக பிழைத்துப் போகிறோம் என்று கிண்டல் அடிக்கும் தொனியில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.

அதனை படித்ததும் எனக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் துளைத்தெடுத்தன. பிறகு அதுவே ஒரு நேரத்தில் இந்தப் பதிவினை இடுமளவிற்கு என்னை கொணர்ந்தது.

ஏன் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அவ்ளவாக தொழில் புரட்சி வெற்றியடையவில்லை என்பது, வெறுமனே மக்களின் அணுகுமுறையும், இயற்கை எல்லா நல்ல மூளை உள்ள மக்களையும் கொங்கு நாட்டில் இருக்குமாறும், ஏனையோரை மற்ற மாவட்டங்களில் தூக்கி அடித்ததாலும் இது நிகழ்ந்து விட்டது போல எனக்கு அந்தக் கட்டுரை ஒரு பரிமாணத்தை வழங்கியது.

சற்றே நான் அதனை உள் வாங்கிகொண்டு சிந்திக்கும் பொழுது, உண்மை அதுவல்லவே என்பது விளங்கியது. கோவைக்கு இயற்கையாகவே பல ப்ளஸ்கள் அமைந்திருக்கின்றன. இயற்கை, அம் மாவட்டத்தை தனது மடியில் கிடத்தி தாலாட்டும் அன்னையினை போல ஊட்டி வளர்க்கத் தக்கவாக அமைந்த மழைக்காடுகள், அதனையொட்டி கோவை மாநிலத்தில் கிடைக்கும் மழையளவு, வெப்ப நிலை மற்றும் ஏனைய பிறவற்றை கொடுத்து சீராட்டி வைத்திருக்கிறது.

இது போன்ற ஒரு இயற்கைச் சூழல் தமிழகத்தில் மற்ற எந்த மாவட்டத்திற்கும் ஒருமித்து அமைந்தாக எனக்குத் தெரியவில்லை. அப்படியே திருநெல்வேலியை ஒட்டி அமைந்திருந்தாலும், புவியல் அமைப்பில் கோவைக்கு மேலும் கிடைத்திருப்பது பல நன்மைகளே... மற்ற பெரும் நகரங்களுக்கான சமீபம், போக்குவரத்து வசதி etc.,

மனித சக்தி மூலமாக உற்பத்தி திறன் பெருக வேண்டுமாயின் அந்த இடத்தின் சீதோஷ்ண நிலையிம் பெருமளவிற்கு உதவ வேண்டும். அப்பொழுதுதான், உடல் சோர்வு அடையும் பாங்கு அங்கு சற்றே ஒத்தி வைக்கப்படுவதால் உற்பத்தி திறனும், வேலை பார்ப்பதற்கு புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.

அது கோவைக்கு இயற்கையாகவே அமைந்திருப்பது ஒரு வரப்பிரசாதம் தானே? இதில் எங்கிருந்து வருகிறது, எவர் புத்திசாலி மக்கள் எவர் இழிச்சவாயர்களென்று? பாலைவனத்தில் வசிப்பவன் இழிச்சவாயன், மலையும் மழையும் சார்ந்த இடங்களில் வசிப்பவர்கள் புத்திசாலிகளா?

சரி அப்படியே பார்த்தாலும் அவ் புத்திசாலி பூமியும் இயற்கை சார்ந்து தானே தொழில் நடத்தி வருகிறது?

சரி ஏன் கோயம்புத்தூர் எந்த கோக் மாதிரி தண்ணீர் அருந்தும் கம்பெனிகளையும் தனது மாவட்டத்தில் இணைத்துக்கொள்ள வில்லை? கண்டிப்பாக மற்ற இடங்களுக்கு செல்வதற்கு முன்னால் தொழில் புரட்சியில் முன்னேற்றத்தில் உள்ள மாவட்டத்தை அணுகியே இருப்பார்கள், இல்லையா?

எவ்விடத்தில் சொன்று எது போன்ற தொழிலமைத்தாலும் அங்கு நிகழும் இயற்கை சார்ந்த குறிப்புகளை கருத்தில் கொள்ளாமலா தொழில் தொடங்குவார்கள்.

அது அப்படி இருப்பின் இயற்கையை மொட்டையடித்து மொட்டையடித்து, சுரண்டிச் சுரண்டி பணம் சேர்க்கும் இவ் அணுகு முறை எத்துனை நாட்களுக்கு நகரும்? சுரண்டுவதற்கு ஒன்றுமற்ற நிலையில் இயற்கை வளங்களை உருகி ஒன்றுமே அற்ற நாள்தானே? அதுவும் வெகு தூரத்தில் இல்லை என்பது நமக்கும் தெரியும் தானே?

34 comments:

நாமக்கல் சிபி said...

கோயமுத்தூர் எப்பொழுது தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது என்று கொஞ்சம் விளக்குவீர்களா?

நாமக்கல் சிபி said...

//சரி ஏன் கோயம்புத்தூர் எந்த கோக் மாதிரி தண்ணீர் அருந்தும் கம்பெனிகளையும் தனது மாநிலத்தில் இணைத்துக்கொள்ள வில்லை?//

Sivabalan said...

தெகா,

இயற்கையை நேசிக்கிறீர்கள்.. சரி..

கொஞ்சம் யோசித்து பாருங்கள் தொழிற்சாலைகள் இல்லா கோவையை... உலக வரைப் படத்தில் முக்கியமான இடம் என்று இல்லாமலேயே போயிருக்கும். ஆக தொழில் இல்லா கோவை நீங்களும் ஆதரிக்க மாட்டீர்கள். .. சரி..

இயற்கை சார்ந்த விசயங்கள் நிச்சயம் கோவைக்கு உதவின என்பதில் மாற்று கருத்து இல்லை..

ஆங்கிலேயர்களால் அரவனைக்கப் பட்ட நீலகிரியால் கோவையும் முன்னதாகவே கல்வி மற்றும் பிற விசயங்களில் கொஞ்சம் முன்னேறிவிட்டது என்பது மிகையல்ல.

ஆக கோவை தொழில் அதிபர்களால் எளிதாக அரவனைக்கப் பட்டுவிட்டது.

ஆனால் இதையும் மீறி, ஒரு விசயம், கோவை மக்களின் தகவமைத்தல், அது தான் கோவையை தொடர்ந்து முன் நிறுத்துகிறது என்பது என் கருத்து.

தோட்டம் வைத்து தொழில் செய்தவர்கள்தான் இன்றைய பெரிய பெரிய பனியன் கம்பெனி தொழில் அதிபர்கள். காரணம் தகவமைத்தல் (பரிமாணப்படுதல் என்று கூட கூறலாம்- சரியான வார்த்தை தெரியவில்லை)

மீன்டும் வருவேன்

Thekkikattan|தெகா said...

கொங்கு நாட்டுச் சிங்கமே... ;-))

//கோயமுத்தூர் எப்பொழுது தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது என்று கொஞ்சம் விளக்குவீர்களா? //

அதிலென்ரும் உ.கு இல்லை. சற்றெ மனம் ஊஞ்சலாடியதில் கிடைத்த கச்சா பொருளே மாவட்டத்திற்கும் மாநிலத்திற்குமிடையே நிகழ்ந்த அடிதடி...

மேலும் தெகா காட்டான் என்ற நிலையிலிருந்து அமெரிக்கன் ஆகிக் கொண்டே சட்டையும் போட ஆரம்பித்திருக்கிறான் என்பதும் அந்த தடுமாற்றத்திலிருந்து இந்த கொங்கு சிங்கம் அறிந்து கொள்க!! ;-)))

Anonymous said...

இதை படிக்கவும்...

http://tamilarangam.blogspot.com/2006/08/blog-post_04.html

நன்றீ,
அசுரன்

Thekkikattan|தெகா said...

//உலக வரைப் படத்தில் முக்கியமான இடம் என்று இல்லாமலேயே போயிருக்கும்.

ஆங்கிலேயர்களால் அரவனைக்கப் பட்ட நீலகிரியால் கோவையும் முன்னதாகவே கல்வி மற்றும் பிற விசயங்களில் கொஞ்சம் முன்னேறிவிட்டது என்பது மிகையல்ல.//

அவனுக்கு அது உதிக்காமல் போயிருந்தால் ஏன் காப்பி, ட்டீ தோட்டங்களுக்கு ஒரு நடுநிலையான ஊரான கோவையை அந்த வெள்ளைக்கார துரைகள் தேர்ந்துதெடுத்திருக்க மாட்டார்கள்?

அப்படியெனில் இயற்கை சார்ந்த வளங்களே அதற்கு முதலீடு இல்லையா? அன்றிருந்த ஒரு இரு நூறு வருடங்களுக்கு முன்பிறுந்த மேற்கு மலைத்தொடர் வளமா இன்று நம்மிடத்தே இருப்பது?

ஊட்டியின் அவலத்தை பார்த்தீர்கள் தானே? இன்னமும் அது வளர்ச்சி அடைகிறதா அல்லது இழந்து வருகிறா?

Sivabalan said...

தெகா

தொழில் மயமாக்கப்பட்ட நகரங்கள் எல்லாமே தனது இயற்கை வளங்களை செலவு செய்து தான் ஆகவேண்டும்.

இப்பொது பிரச்சனை கோவை எப்படி வெற்றி பெற்றது என்பதைப பற்றித்தான்.

கோவையைப் பொருத்தவரை கலப்பு கலாச்சாரம் என்பது அதன் சிறப்பு அம்சம்.

இது மற்ற இடங்களில் இதன் சாத்திய கூறு எவ்வாறு என தெரியவில்லை.

நாமக்கல் சிபி said...

//மேலும் தெகா காட்டான் என்ற நிலையிலிருந்து அமெரிக்கன் ஆகிக் கொண்டே சட்டையும் போட ஆரம்பித்திருக்கிறான் என்பதும் அந்த தடுமாற்றத்திலிருந்து இந்த கொங்கு சிங்கம் அறிந்து கொள்க!! ;-)))//

கொங்கு நாட்டு சிங்கம் அறிந்து கொண்டது!

:))
குளிர் காலம் என்ற கட்டாயம் சட்டை அணிய வைத்திருக்கிறது!

Thekkikattan|தெகா said...

//தொழில் மயமாக்கப்பட்ட நகரங்கள் எல்லாமே தனது இயற்கை வளங்களை செலவு செய்து தான் ஆகவேண்டும்.//

சிவா, இந்த தருனத்தில் இங்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், நான் எந்த பொருளாதார வளர்ச்சிக்கும் எதிராளி கிடையாது.

எனக்கு வேண்டியதெல்லாம் Sustainable Utilization strategy என்ற கோட்பாட்டை இயற்கையை மிகவும் சேதப்படுத்தி விடாமல் போற்றி பயன்படுத்தப் பட வேண்டும் என்பதே.

Sivabalan said...

தெகா

Sustainable Utilization strategy பற்றி பேசும் போது வளர்ந்துவரும் மக்கள் தொகையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.

உலமயமாக்கப்படுதல் மற்றும் பல் முனைப் போட்டிகளை சாமலித்தாக வேண்டிய கட்டாயத்திலும் உள்ளோம்.

இலவசக்கொத்தனார் said...

செல்வன், தெகி,

நீங்க ரெண்டு பேரும் ரெண்டு எக்ஸ்ட்ரீம் கருத்துக்களை சொல்லறீங்க.

முதலில் இந்த கோக் விஷயத்துக்கு வருவோம். வள்ளுவர் சொல்லறது மாதிரி என் நிலமை இதுல கனியிருப்ப காய்கவர்ந்தற்றுதான்.

பாருங்க. கோக்கில் ஒரு சத்தும் கிடையாது. வெறும் சக்கரை, சோடா, கலர் தண்ணி. அதை குடிக்கிறதுனால இங்க உள்ள குழந்தைகள் குண்டா ஆயிக்கிட்டே போகுதுன்னு இங்க பள்ளிகளில் இதற்கு அனுமதி மறுத்து வருகிறார்கள்.

அப்படி இருக்கும் போது அங்க பெரிய லெவலில் அட்வர்டைசிங் பண்ணி குழந்தைகளின் மனதில் இதனை புகுத்துகிறார்கள். கோக் வேணுமா மோர் வேணுமான்னு கேட்டா எத்தனை குழந்தைகள் மோர் வேணுமுன்னு சொல்லுவாங்க?

எப்பவாவது ஒரு கோக் குடிச்சா தப்பு இல்லை, நானும் குடிப்பேன். ஆனா கோக் தவிர வேற எதுவும் குடிக்க மாட்டேன்னு என் பையன் சொன்னா அது எனக்கு ஒவ்வாததுதான்.

சத்தில்லா கோக்கை விட சத்தான பழரசங்கள் குடிக்க வேண்டும். இதுதான் என் நிலமை.

அடுத்தது இந்த தொழிற்சாலை அமைப்பது பற்றிப் பார்ப்போம்.

இலவசக்கொத்தனார் said...

செல்வன் - உங்க ஸ்டாண்ட் எந்த விலை கொடுத்தாவது தொழில் நிலை முன்னேற்றம்

தெகி - உங்க நிலமை. இயற்கை அழியக்கூடாது. அதன் விலை நமது தொழில் முன்னேற்றமாய் இருந்தாலும் ஓக்கே.

பாருங்க. இரண்டுமே நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராதது.

செல்வன், சரி ஒரு பேச்சுக்கு கோக் கோவையில் கடை போடறான்னு வெச்சுக்குங்க. சரி. அளவில்லாம தண்ணியை உறிஞ்சராம். அந்த 10 வருஷமோ 20 வருஷமோ அங்க நல்ல பொருளாதார வளர்ச்சி. ஆமா தண்ணி காலியாச்சின்னா அவன் அங்கயிருந்து கடையை மதுரைக்கோ மலேசியாவுக்கோ மாத்திக்கிட்டு போயிடுவான். ஆனா உங்க ஊரு மக்கள் கதி? எண்ணை இருக்கான்னு நோண்டிப் பார்க்க வேண்டியதுதான் இல்லையா?

சரி அப்போ எந்த தொழிலில்தான் மாசு இல்லை. அப்போ எந்த தொழிலும் தொடங்கக் கூடாதான்னு கேட்பீங்க. தெரியும். அதுக்கு முன்னாடி தெகியையும் ஒரு கேள்வி கேட்கறேன்.

இலவசக்கொத்தனார் said...

தெகி, இப்போ நம்ம நடைமுறை வாழ்க்கைக்கு பல தேவைகள் இருக்கு. அதெல்லாம் விட்டுட்டு பழங்கால வாழ்க்கை முறைக்குப் போகணுமின்னா அது சரியா வராது. அட எவண்டா இவன் லூசுன்னு சொல்லிக்கிட்டு போய்கிட்டே இருப்பாங்க.

நீங்க சொல்லற கருத்து நல்ல கருத்துதான், ஆனா அது படிப்படியாத்தான் செயல் படுத்த முடியும். இல்லைன்னு ஏட்டுச் சுரைக்காய்க்கு இருக்குற மதிப்புதான் உங்களுக்கும். இல்லையா?

அதுக்கு என்ன பண்ணனும்? மக்கள் நடுவில எந்த விதமான தொழிலுக்கு வரவேற்பு குடுக்கணும் எதை எதிர்க்கணும் அப்படிங்கிற ஒரு புரிதலைக் கொண்டு வரணும்.

இன்னொண்ணும் சொல்லறேன் கேளுங்க.

இலவசக்கொத்தனார் said...

புதரகத்தையே எடுத்துக்குங்க. நமக்கு ஒரு நல்ல பாடம் இருக்கு.

முதலில் எல்லாரும் மாதிரி விவசாயம்தான் முதன்மைத் தொழில். அப்புறம் அதை மெதுவா கார்ப்பரடைஸ் பண்ணினாங்க.

அப்புறம் தொழிற் புரட்சி வந்தது. அப்போ தயாரிப்புகளில் நம்பர் ஒன்னா இருந்தாங்க. எந்த விதமான தயாரிப்புகளிலும் தாந்தான் இருக்கணமின்னு பார்த்தாங்க.

ஆனா அடுத்த ஸ்டேஜ் வந்தது? நாம தயாரிக்கறத விட அதை அடுத்தவனை தயார் செய்ய விட்டு தான் கண்டுபிடிப்புகளிலும் சேவைகளிலும் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பிச்சாங்க. (தமிழில் சரியா வரலைன்னு நினைக்கிறேன் - they moved away from manufacturing into research and service industries)

அதாவது தன் மூளை மட்டுமே மூலதனமா வெச்சு மத்தவங்கள வேலை வாங்கறாங்க. தன் கண்டுபிடிப்புகள் தன் கிட்ட இருக்கும். அதனை அடுத்தவங்க பாவிக்கும் பொழுது தனக்குப் பணம்.

ஆனா அதே சமயம் தான் அத்தியாவசியம் என கருதும் தொழில்கள் மட்டும் தன்னிடமே. இதில் வேறு எவரும் வர முடியாது.

இப்படித்தான் இங்க வளர்ச்சி.

இலவசக்கொத்தனார் said...

நாமும் இத்தனை படிகள் கடந்துதான் ஆக வேண்டுமா? நான் நேராக இந்த கடைசிப் படியை அடைய முடியாதா?

இங்க இருக்கற கண்டுபிடிப்புகள் எல்லாம் யாரு மூளைங்க? எல்லாம் நம்ம ஆளுங்கதானே.

ஆனா அந்த கண்டுபிடிப்புகள் வரணுமின்னா அதுக்கு அதிகம் பொருட்செலவு ஆகும். அதை சமாளிக்கத்தான் நமக்கு தொழில்கள் வேண்டும்.

நம்ம புத்திசாலித்தனம் எங்க வருதுன்னா எந்த தொழில் வேணும் எந்த தொழில் வேண்டாமுன்னு தேர்ந்தெடுக்கறதுலதான் இருக்கு.

இன்னும் சொல்லறேன்.

இலவசக்கொத்தனார் said...

நமக்கு எந்த விதமான ஒரு அட்வேண்டேஜும் தராத கோக் மாதிரி தொழிற்சாலை வேணுமா அல்லது அதன் மூலம் நமது தேசத்துக்கு அன்னிய செலவாணி வரும் ஒரு கார் தொழிற்சாலையோ அல்லது ஒரு விமானத் தொழிற்சாலையோ வரணுமா?

அதுதான் கேள்வி.

புதரகத்தில் பார்த்த இன்னொன்ணும் சொல்லறேன். அவங்க எண்ணைவளமெல்லாம் இருக்கற பகுதிகளை மூடி வெச்சு இருக்காங்க. அதை எடுக்காம வெளிநாட்டுலேர்ந்து இறக்குமதி பண்ணறாங்க. இப்போ காலன் விலை 3 டாலருக்கும் மேல. இங்க இருக்கறது கொஞ்சம் எடுத்தாங்கன்னா விலை குறையும். ஆனா அவங்க அதை செய்யலை. நாளைக்கு உலகில் மத்த இடங்களில் எண்ணை தீர்ந்தா, அது இருக்கும் நாடு இங்களுது. அந்த சக்திக்காக இவங்க குடுக்கிற விலை இந்த 3 டாலர் கேஸ் பணம்.

இந்த எண்ணை மாதிரிதான் இன்னைக்கு நிலையில் தண்ணியும். கொஞ்சம் யோசியுங்க.

Thekkikattan|தெகா said...

//Sustainable Utilization strategy பற்றி பேசும் போது வளர்ந்துவரும் மக்கள் தொகையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.//


அதற்கு சிவா, நல்லதொரு முறையில் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்து அரசு செயல் திட்டங்களை தெருவுக்கு எடுத்துச் செல்லுவோம், அதனுவிடுத்து இருக்கும் வீட்டை எரித்து மக்களுக்கு சாப்பாடு போடுவோம்மென்றால் எது புத்திசாலித்தனம்.

காலப்போக்கில் அருமையே இருக்கும் மேற்கு மலைத்தொடரும் சுரண்டப் பற்று, பக்கத்தில் இருக்கும் மாவட்டங்களை போன்றே வரட்சி நீண்டு, வெப்ப அளவும் எகிறிப் போனால், அங்கு வாழும் நம்மின் கெதிதான் என்ன?

ஏன் சிறுவானி ஆறு நான் வசித்த இடத்திலிருந்து 14 கி.மீ தொலைவுதான், இருப்பினும் வாரத்தில் இரண்டு முறைதான் அதுவும் ஒரு ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ தான் வரும். மிச்ச நீரெல்லாம் எங்கே... சிறுவானி என்ற பெயரில் பாட்டிலில் அடைக்க லாரி வைத்து அடிப்பதாக கேள்வி.

இப்படியாக ஒவ்வொன்றையும் சுருட்டினால் கடைசில் எங்கு சென்று பிச்சை எடுப்பது மீண்டும் இயற்கையை அன்றி, சிவா?

நாமக்கல் சிபி said...

// மிச்ச நீரெல்லாம் எங்கே... சிறுவானி என்ற பெயரில் பாட்டிலில் அடைக்க லாரி வைத்து அடிப்பதாக கேள்வி.
//

உண்மைதான் தெகா!
பாட்டிலில் அடைத்து அதிக விலைக்கு விற்பவருக்கு கொடுப்பதற்கு பதில்
அளவாய் எடுத்து அபகுதி மக்களுக்கு அரசே வழங்கலாமே!

இல்லை அவர்களுக்கு கொடுப்பதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய்தான் உள்ளதா?
(அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும்தான் உண்டு)

Thekkikattan|தெகா said...

/உண்மைதான் தெகா!
பாட்டிலில் அடைத்து அதிக விலைக்கு விற்பவருக்கு கொடுப்பதற்கு பதில்
அளவாய் எடுத்து அபகுதி மக்களுக்கு அரசே வழங்கலாமே!

இல்லை அவர்களுக்கு கொடுப்பதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய்தான் உள்ளதா?
(அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும்தான் உண்டு//

பாத்தீங்களா, கொங்கு நாட்டுச் சிங்கமெ செல்வ புரத்தில் இருந்து கொண்டு குழாய் அடிச் சண்டையில் நசுங்கி பாதிக்கப் பட்டதானாம் தானகவே முன் வந்து இந்த உண்மையை இங்கு கக்கி விட்டார்.

நான் ரொம்ப தூரத்தில் இல்லை சிங்கமே, காளம்பாளையத்தில் தான் ஒரு மூன்று வருடங்கள் குப்பை கொட்டினேன்... அதனால் எனக்கும் தெரியும் என் கோவையை பற்றி. ஏனென்றால் நானும் ஒரு "வந்தேறிதான்." :-)))) //

Thekkikattan|தெகா said...

ச்சிபி,

//இல்லை அவர்களுக்கு கொடுப்பதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய்தான் உள்ளதா?
(அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும்தான் உண்டு//

அரசியவியாதிகள் அப்படியெல்லாம் கொங்கு நாட்டில் பண்ண மாட்டார்களே... மண்ணின் மைந்தர்கள் ;-))

Thekkikattan|தெகா said...

கோவை சிங்கமே,

//சரி ஏன் கோயம்புத்தூர் எந்த கோக் மாதிரி தண்ணீர் அருந்தும் கம்பெனிகளையும் தனது மாநிலத்தில் இணைத்துக்கொள்ள வில்லை?//

நான் கேட்ட கேள்வியையே எனக்கு திருப்பி கொடுத்து விட்டீர்களே இது நியாயமா?

இப்படியும் இருக்காலாம் தானே, ஏற்கெனவே மடா (தண்ணீ) குடிகாரர்கள் எல்லாம் அங்கே ஜரூராக கடை விரித்து வியபாரம் செய்யும் பொழுது இந்த பெரிய மீன் வந்து எல்லா சிறு மீன்களை தின்று கொழுத்து விட்டால்.

லாபி (lobby) நன்றாகவே செய்திருக்கிறார்கள், தெரியவில்லையா? எப்படியொ, ஒரு குடம் சிறுவானி தண்ணியை குடிக்கிறதுக்கு வைச்சுருந்தனை திருடி, தலை குளித்ததது இங்கு வந்து போகிறது ஏனோ தெரியவில்லை... உங்களுக்கு தெரிகிறதா?

Thekkikattan|தெகா said...

இ. கொ,

அப்பாடா, கடைசிய ஒரு முடிவுக்கு வந்து போட்டு தாக்கி இருக்குறீரு, படிச்சு பார்த்துபுட்டு நான் உங்களொட பேச்சு வார்த்தை வரிக்கு வரி பண்ணுகிறேன்...

அது வரைக்கும் இன்னும் சிந்திச்சு வையுங்க... ஒரு காட்டு வழிய இரண்டு நண்பர்கள் நடந்து போனர்களும் அப்ப ஒரு கரடி எதித்தப்லெ வந்துச்சாம், அப்ப ஒருத்தருக்கு இப்படி செய்தால் தப்பிக்கலாமின்னும் இன்னொருத்தருக்கு அப்படி பண்ணின தப்பிக்கலாமின்னும் ஐடியா இருந்துச்சாங்கிற கதை மாறி.... ..... ஏதாவது முழிப்பு தட்டுற மாதிரி கதை இருந்தா சொல்லுங்க...

இலவசக்கொத்தனார் said...

நான் செல்வனுக்கு போட்ட ஒரு பின்னூட்டத்தில் இருந்து...

செல்வன்,

கோக் வேணா வரட்டும், யாரு வேணா வரட்டும். ஓண்ணே ஒண்ணு யோசிங்க. இருக்க கொஞ்ச நஞ்ச வளங்களை எந்த மாதிரி தொழிலில் முதலீடு பண்ணனும் அப்படின்னு யோசிக்கணும். (நம்ம வளங்களை உபயோகப்படுத்தறதும் முதலீடுதாங்க.) அதான் நான் சொல்லறேன்.

Thekkikattan|தெகா said...

//http://tamilarangam.blogspot.com/2006/08/blog-post_04.html

நன்றீ,
அசுரன்//

நீங்க கொடுத்த சுட்டிக்கு மிக விரைவிலேயே செல்கிறேன். சுட்டி கொடுத்தமைக்கு நன்றி, அசுரா.

Thekkikattan|தெகா said...

//தொழில் மயமாக்கப்பட்ட நகரங்கள் எல்லாமே தனது இயற்கை வளங்களை செலவு செய்து தான் ஆகவேண்டும். //

நீங்க சொல்றத ஏத்துக்கிறேன் சிவா, ஆனா கொஞ்சம் நிதானித்து மடையை திறந்து விடணுங்கிறதுதான் என்னுடைய நிலைப்பாடு. சும்மா இங்கிருந்து நீர் கிடைக்குது, எது எப்படியோ எங்கிருந்தோ வருகிறது, நாம பாட்டுக்கு கிடைக்கிற வரைக்கும் சுரண்டுவோமின்னு எண்ணத்திற்கு வந்துற கூடாது சிவா.

நின்னு நிதானம மேலை நாடுகள் எந்த தவறை செய்து எதனை திருத்திக் கொள்ள பார்க்கிறது அப்படிங்கிறதெல்லாம் கவனிச்சு ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கணும். ஒரு தடவை இயற்கையில இருந்து ஒரு விசயத்தை இழந்தோமின்னா திரும்ப அதனை கொண்டு வராது, "ஹாலிவுட் சுராசிக் பார்க்" படத்தில பார்த்த மாதிரி திரும்ப கொண்டுவரமுடியாது.

இன்னும் அது போன்றவைகள் வெள்ளித்திரை வடிவத்தில் தான் இருக்கிறது.

மேலும் கொடையில் உள்ள Fuji Film தயாரிப்பு (அங்குதான் இருக்கிறதான்னு சரியா தெரியால-ஆனா படிச்ச ஞாபகம் இருக்கு) செய்த காலங்களில் அதிலிருந்து கிடைத்த கழிவுகள் குடிக்கும் தண்ணீரில் சென்று பெரும் அளவிற்கு சுற்ற வாட்டாரத்தில் வசித்த மக்களை பாதித்தாக, தெரிய வந்தது.

Thekkikattan|தெகா said...

//கோவையைப் பொருத்தவரை கலப்பு கலாச்சாரம் என்பது அதன் சிறப்பு அம்சம்.//

சிவா, எந்த கலப்பு கலாச்சாரத்தைப் பற்றி பேசுகிறீர்கள் என்பதனனை கொஞ்சம் குறிப்பாக கூறமுடியுமா?

Sivabalan said...

தெகா

அங்கே பார்தீங்கன்னா,

1. கேரள மக்கள்
2. முஸ்லிம்கள்
3. தெலுங்கு மக்கள்
4. வட நாட்டவர்

மற்றும் தமிழ் மக்கள்...

இந்த கலப்புவும் ஒரு காரணம்...

Sivabalan said...

தெகா

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளதார நிலைமையின் காரனமா பல விசயங்களில் Compromise பண்ணவேண்டியுள்ளது..

நாம எடுத்தோ கவுத்தோன்னு இருக்க முடியாதே..

Thekkikattan|தெகா said...

//இந்த கலப்புவும் ஒரு காரணம்... //

எங்கு பசை இருக்கிறதோ அங்கே மக்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை சிவா.

நான் பார்த்த அளவில் அங்கும் பிளவுகள் இருக்கத்தான் செய்கிறது, நாம் கோவையை பற்றி ரோஸி பக்கம் மட்டுமே பார்க்கிறோம். நீங்கள் சொன்ன அத்துனை மக்களும் அவர் அவர்களுக்கென்று உள்ள ஏரியாவில்தான் வாழ்கிறார்கள், அவர் அவர்களின் வசதிக்கேற்ப வீடுகளும் சிறுவானி தண்ணீயின் வரத்துப் போக்கும் இருக்கத்தான் செய்கிறது.

இதெல்லாம் எதற்கு செல்ல வருகிறேன். ஏதோ ஒன்று இதில் இருக்கத்தான் செய்ய வேண்டும்.

Thekkikattan|தெகா said...

//நாம எடுத்தோ கவுத்தோன்னு இருக்க முடியாதே.. //

பொருளதார தன்னிரைவு அடைந்த நாடுகள் எல்லாம் அதனையேத்தான் செய்திருக்கிறது, எடுத்தம கவுத்தமான்னு... நாமலும் அதையே செஞ்சு தவறுகளை திருத்திக்க வேண்டாமே என்பதுதான்...

வளர்வோம் நமது சொந்த புத்தியிலேயே, நமது சுற்றுப் புற சூழலுக்கு எது ஒத்து வருமே அதற்கு ஏற்றார் போல் முடிவுகளை இயற்றி நம்மிடம் பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ள இயற்கை வளங்களை நமதி பின்வரும் சந்ததினருக்கு அனுபவவிக்கவும் விட்டுச் சொல்லுவோமே, சிவா...
...

Thekkikattan|தெகா said...

//முதலில் இந்த கோக் விஷயத்துக்கு வருவோம். வள்ளுவர் சொல்லறது மாதிரி என் நிலமை இதுல கனியிருப்ப காய்கவர்ந்தற்றுதான். //

இதேதான் நான் சொல்ல வாரதும். எதுக்கு தெருவுல போர ஓணானே மடியில கட்டிட்டு அப்புறம் குத்துதே குடைதேன்னு, மண்டையை போட்டு ஒடைச்சுக்கணும் அப்படிங்கிறதுதான்.

//அப்படி இருக்கும் போது அங்க பெரிய லெவலில் அட்வர்டைசிங் பண்ணி குழந்தைகளின் மனதில் இதனை புகுத்துகிறார்கள். //

ஆமா, கையை நெருப்புக்குள்ள உடாதடா சுடும் அப்படின்னு சொன்ன கேக்கமா, வுட்டுதான் தெரிஞ்சுக்குவேன்ன என்ன பண்ணறது. அதான் இப்ப இங்க நடக்கிறதும்.

Thekkikattan|தெகா said...

//ஆமா தண்ணி காலியாச்சின்னா அவன் அங்கயிருந்து கடையை மதுரைக்கோ மலேசியாவுக்கோ மாத்திக்கிட்டு போயிடுவான். ஆனா உங்க ஊரு மக்கள் கதி? எண்ணை இருக்கான்னு நோண்டிப் பார்க்க வேண்டியதுதான் இல்லையா?//

இதோ மாதிரி பல இடங்கள்லே நடந்திருக்கு இ.கொ. சரியான கேள்வி. எது எதையோப் பத்தி கேள்வி கேக்கிறோம் இது போன்ற வாழ்கைக்கு உதவுற அத்தியாவாசிய இயற்கை வளங்களைப்பத்தியான எதிர்கால இறுத்தலை பற்றி கேள்வி எழுப்புவது வருமுன் காப்போம் என்கிற அடிப்படை "காமன் சென்ஸ்."

aathirai said...

கோவையின் வளர்ச்சிக்கு காரணம் சுத்து வட்டாரத்தில்
பருத்தி விளைச்சல் என்று நினைக்கிறேன்.

இலவச கொத்த்னார்,
ஆராய்ச்சியில் முதலீடு செய்ய நம் தனியார்கள் முன் வருவதில்லை.
பணம் வைத்திருக்கும் ஆட்களுக்கு ஒரு ரூபாய் போட்டால் பத்து
பைசா வட்டி வர வேண்டும். இந்திய தனியார் நிறுவனங்கள்
5 சதவிகிதத்திற்கு மேல் ஆராய்ச்சிக்கு செலவு செய்ய
மாட்டார்கள். அரசாங்க ஆராய்ச்சி ரொம்ப தூரம்
செல்வதில்லை. வெளிநாட்டில் பேடந்ட் பாதுகாப்பு
இருப்பதால் தனியார்கள் ஆராய்ச்சியில் முதலீடு
செய்கிறார்கள். இந்தியாவில் ஆராய்ச்சி முதலீட்டை
அதிகரிக்க வேண்டுமென்பது சரி.

அறிவை மட்டும் வைத்துக்கொண்டு இந்தியாவை விட
ஏழை நாடுகளில் உற்பத்தி செய்து உலகம் முழுவதும்
அந்த பொருட்களை விற்று வல்லரசாக வேண்டுமென்பது
இந்தியாவும் சிறந்த சுரண்டல் நாடாக்கும் உத்தி.
அன்னிய செலாவணி எதற்கு வேண்டும்? வெளிநாட்டிலிருந்து
ஆயிலும், போர்டும், வின் டோ ஡ஸும் வாங்கதானே. இதைவிட
தரமான பொருட்களை இந்திய வளத்தைக்கொண்டு
தயாரிப்பது நேரு கண்ட தன்னிறைவு கனவுக்கே என் ஓட்டு.

Phil said...

நான் செல்வனுக்கு போட்ட ஒரு பின்னூட்டத்தில் இருந்து... செல்வன், கோக் வேணா வரட்டும், யாரு வேணா வரட்டும். ஓண்ணே ஒண்ணு யோசிங்க. இருக்க கொஞ்ச நஞ்ச வளங்களை எந்த மாதிரி தொழிலில் முதலீடு பண்ணனும் அப்படின்னு யோசிக்கணும். (நம்ம வளங்களை உபயோகப்படுத்தறதும் முதலீடுதாங்க.) அதான் நான் சொல்லறேன்.

Related Posts with Thumbnails