Sunday, July 28, 2019

Dragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்

1870கள் அமெரிக்காவிற்கு ரொம்ப முக்கியமானதொரு பத்தாண்டு. ஒரே நேரத்தில் இரு வேறு கரைகளிலிருந்து இரு வேறு இனங்களுக்கு இடையேயான
போராட்டத்தை வாசிப்பனுபவத்தின் மூலமாகப் பெற முடியுமா? முடியும் என்கிறது இரு வேறு வித்தியாசமான தளங்களைக் கொண்ட புத்தகங்கள்.
இதில என்ன முக்கியமானதொரு விசயம்னா- ஒரு புத்தகம் முழுக்க முழுக்க வரலாற்று உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் சிவப்பிந்தியர்களின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது (Bury My Heart At Wounded Knee by Dee Brown).
மற்றுமொன்று நம்ம ஜுராசிக் பார்க், ப்ரே, நெக்ஸ்ட், மைக்ரோ போன்ற பிரபலமான நாவல்களை கொடுத்த மைக்கேல் க்ரிக்டன் எழுதிய Dragon Teeth என்ற புனைவு நூல்.
சிவப்பிந்தியர்களை பற்றிய புத்தகத்தில் நாம் அவர்களுடன் திறந்த வெளியில், பனியில், மலைகளின் குடைவிடங்களில், பள்ளத்தாக்குகளில் அவர்களுடன் அவர்களது எருது தோலில் கட்டப்பட்ட குடிசையில் உண்டு, படுத்துறங்கி, குதிரையில் பயணித்து நட்ட நடு இரவில் காலனி காலத்தைய அரசு அதிகாரிகளுக்காக காத்திருந்து, நீட்டும் இடத்தில் கையெழுத்திட்டதை சாட்சியாக இருந்து பார்ப்பதாகட்டும்...
அவ்வாறு பெற்றுக் கொண்ட நிலத்திற்கு இணையாக அவர்களுக்கு ரேஷன் முறையில் கொடுக்கப்படும் காபி, சீனி, கம்பளி மற்றும் துப்பாக்கி வெடி பொருள் கொடுப்பதை தாமதப் படுத்தி அதன் மூலமாக ஏற்படும் பிரச்சினைகளில் ஒருவனாக நின்று பார்ப்பதுதாகட்டும்...
தங்களுக்கென ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட நிலத்திற்குள் உள்ள மலைகளில் தங்கம் கிடைப்பதாக செய்தி பரவி, ஒப்பந்தத்தையும் மீறி அப்பொழுதே புதிதாக கட்டப்பட்ட புகை வண்டி பயணத்தின் மூலமாக மேற்கத்திய பயணம் எளிமை பட, திபுதிபுவென் கூட்டம் சிவப்பிந்தியர்களின் நிலத்திற்குள் படையெடுக்க ஆரம்பித்ததும் அவர்களுக்குள் நடைபெற்ற மன சஞ்சலங்களை கேட்டவாறு, புகை வண்டியை மறித்து பொருட்களை கொள்ளையடிக்க குதிரைச் சவாரி செய்வதில் ஒருவனாக ட்ரைனை விரட்டிச் செல்வதுமாக சென்று...
அவ்வாறு அடிக்கடி நிகழும் பொழுது அவர்களைத் தேடி அழிக்க வரும் காலனி படை வீரர்களை தந்திரமாக சுற்றி வளைத்து கொன்று போடுவதாகட்டும்...
பின்பொரு நாள் அவர்களது கிராமங்களுக்குள் காலனி படை வீரர்கள் வந்து குடும்பம் குடும்பமாக கொன்று தலைத் தோலோடு வெட்டிப் போடுவதை நடுங்கிய உடலோடு கண்ணுருவதாக இருக்கட்டும்... சிவப்பிந்தியர் வாசிப்பு நம்மை அவர்களில் ஒருவனாக இருந்து அந்த போராட்டத்திற்கான நீதிகளை பார்க்க வைக்கும்.
அதே நேரத்தில் மைக்கேல் க்ரிக்டனோட புனைவில் அந்த வெள்ளையர்களின் பூட்டிய இரயில் பெட்டியின் அறைக்குள் இருந்து நம்மை எது போன்ற உரையாடல் நடைபெறுகிறது சிவபிந்தியர்களை பற்றி என கேட்கும் வாய்ப்பைக் கொடுக்கிறது.
அந்த புகை வண்டி உரையாடல்கள் டைனோசார்களின் புதை படிமங்களை தேடிச் செல்லும் அறிவியலாளர்களுக்கிடையே நடைபெறும் பேச்சுக்களுக்கிடையே சிவப்பிந்தியர்கள் பற்றியான அச்சம், அன்றைய போரில் எந்த ஜெனரல் கொல்லப்பட்டார் என்றும், மணிக்கு 10 கி.மீ வேகத்திலே நாள் கணக்கில் நம்மை அந்த புகை வண்டியில் கூட்டிச் செல்கிறார்கள்.
இதில் வரும் ஆண்டுகளும், சம்பந்த்தப்பட்ட இடங்களும், இரண்டு இனங்களில் முக்கியமான மனிதர்களின் பெயர்களுகும் சிறிதும் மாற்றமில்லாமல் கொடுப்பதை வாசிக்கும் போது, மாறி மாறி நாம் குதிரையின் மீதேறி அமர்ந்தவாறு அந்த புகை வண்டியை தடுத்து நிறுத்த திட்டமிடுவதாகவும், புகை வண்டிக்குள்ளிருந்து உணவின் விலையைப் பற்றிய குறைகூறலும், கடந்து போகும் ஸ்டேசன்களிலிருந்து எங்கே சிவப்பிந்தியர்கள் தாக்கி விடுவார்களோ என்ற பயத்துடன் பயணம் செய்வதாகவும் எடுத்துச் செல்வது ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவம்.
இரண்டு புத்தகத்திற்கும் பேக் ரெஃபரன்ஸ்ல் கடுமையான உழைப்பு தெரிகிறது. புனைவுதானே என்று க்ரிக்டனும் விட்டுவிடவில்லை...

0 comments:

Related Posts with Thumbnails