கட்டுக்கதைகளே நம்மை உலகினோடு ஒட்டி ஒழுக கட்டியெழுப்பப் பட்டுள்ள சிறைகளின் மதில்களை ஒத்தது என்கிறார் சேப்பியன்ஸ் புத்தகத்தின் ஆசிரியர். இதனை நிறுவ இவர் மதங்கள், அரசுகள், அரசியல் கொள்கைகள், ஒரு பெரிய கார்ப்பரேட்டின் வியாபார முழக்கங்கள் என்ற விசயங்களை கையில் எடுக்கிறார்.
நம்முடைய அன்றாட சொந்த அக விருப்பத்தின் பால் நாடுகின்ற தன்னியல்பில் வாழ்வது (live your life), கனவுப் பயணம் (dream trip) போன்ற விசயங்களில் கூட எந்த அளவுக்கு வெளியிலிருந்து கட்டமைக்கப்படுகிற கற்பனை வாதம் நம்மை அகத்திலும் வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது என்று அலசி அதிர வைக்கிறார்.
இதனை சற்றே விரித்துப் பார்த்தால் குழந்தைகளை நாம் தற்சார்பு (independent) முறையில் வளர்த்தெடுக்கிறோம் என்ற அணுகுமுறையில், தேனிலவிற்கு சென்றே ஆக வேண்டுமென்ற இடத் தேர்வில், நம்முடைய பெற்றோர்களை எப்படி நலம் பேணுவது என்று எடுக்கப்படும் முடிவுகளில் என்று அனைத்திலும் இன்று கார்ப்பரேட் விளம்பரங்கள் நமக்கான தேவைகளை பொதுமைப் படுத்தி அதன் வழியில் நம்மை வழி நடத்தி வருவதை தெரிந்து கொள்ள முடியும்.
எண்ணிப்பார்க்கும் பொழுது அதில் பெரிய உண்மைகள் இருப்பதாகவே படுகிறதெனக்கு. இன்றைய அளவில் பயணங்கள் மேற்கொள்வது என்பது ஊருக்கு சொல்லிக் கொள்ளத்தக்க மெச்சும் செயலாகிப்போனதுதானே. அது போன்ற பயணங்கள் தன்னியல்பில் உந்தப்படாமல், பயண ஏற்பாட்டு மையங்களும், விமான போக்குவரத்துக் கழகங்களும், ஏனைய சுற்றுலாத் துறை மேம்பாட்டு நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பற்றி புனையப்பட்ட கருத்துக்கள் நம்மை அந்த இடத்திற்கு செல்லத் தூண்டுவதில் முதன்மைப் பங்கு வகிக்கிறதுதானே.
மிகுந்த பொருட்செலவில் மேற்கெள்ளப்பட்டும் அது போன்ற பியர்ப்ரஷ்சர் (அடுத்தவர்களுக்கான) பயணங்கள் ஏதாவது நமக்கு படிப்பினைகளை ஆழ் மனதில் விட்டுச் செல்கிறதா என்றால் மிகவும் சொற்பமானவர்களே அதனை பெற்றதாக ஒப்புக்கொள்வோம்.
இப்படியான பொது கற்பனைவாத விதைப்புகளே பொதுவான விசயங்களான மதம் பொருட்டோ, ஒரு கார்ப்பரேட்டின் விற்பனை சார்ந்த மூளை மழுங்கடிக்கும் வியாபார யுக்தி பொருட்டோ கூட ஒற்றிணைந்து நம்மை இயக்கிச் செல்கிறது என்கிறார் ஆசிரியர். இதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டுமாயின் தனிப்பட்ட முறையில் இவைகளை கேள்வி எழுப்பி அதன் பொருட்டே நம்மை வெளிக் கொண்டு வர முடியும் என்கிறாரவர்.
பெரும்பாண்மையானவர்களால் ஒரு கதை நம்பப்பட்டு அதுவே சிறந்தது என்று எனும் பொழுது வெகு சிலர் தன்னிச்சையாக அதிலிருந்து வெளிக்கிட்டு, மற்றவர்களுக்கு தான் அறிந்ததை உணர்த்தி அதிலிருந்து மீட்டெடுக்க, ஏற்கெனவே நம்பிக்கொண்டிருக்கும் கதையை விட இன்னும் வலிமையான ஒரு கதையை கட்டமைப்பது அவசியமாகிறது (உ.தா: இன்றைய இந்திய அரசியலை எடுத்துக்கொள்ளலாம் - செக்கியுலர் வெர்சஸ் அடிப்படைவாதம்).
பெரிய அளவில் இன்றும் அடையாளப் பேணல் கருதி கண்டங்களை தழுவி நிற்பது மதங்கள். இது பல தரப்பட்ட மனிதர்களையும் ஒரு சில குறிப்பிட்ட சித்தாந்தங்களின் அடிப்படையில் ஒன்றிணைத்து கட்டி இழுத்துக் கொண்டு போக ஒரு கால கட்டத்தில்உருவாக்கப்பட்டது. இதன் தேவை மனித ஓட்டத்தில் அவனுடைய சிந்தனைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த கதையின் ஆணி வேர் சற்றே நெகிழ்ச்சியுறும் பொழுது, அந்த சித்தாந்தின் மீதான நம்பிக்கை பெருமளவில் மக்களிடத்தில் குறைந்து அது காற்றோடு கரைந்து காணாமல் போய்விடும் வாய்ப்புண்டு.
இந்த கால கட்டத்தில் நமக்கு இன்னொரு புனைவு தேவை. அது இந்த ஒட்டுமொத்த மனித குலத்தையும் அடுத்தக்கட்ட பரிணாம நவீனப்படுதலுக்கு தயார் படுத்துவதாக அமைய வேண்டும். எந்த கதை சொல்லி எதிலிருந்து ஆரம்பிப்பார்?