Saturday, March 16, 2019

வெறுப்பின் எச்சமே அழிவு: Hatred Is Self-destruction


நியூசிலண்ட்ல இரு வேறு துப்பாக்கிசூடுகள். ஆனா, இரண்டிற்கும் அடிப்படை காரணம் ஒன்றே. அது வெறுப்பு! மனித மனம் எப்போதும் எதிர்மறை எண்ணங்களின் மீது அதீதமான பிடிப்பு உள்ளதைப் போல நடிக்கும். இருப்பினும் ஓர் ஓரத்தில் நம்முடைய எதிர் முனையில் இருக்கும் நேர்மறை நாட்டாமையின் மீது கண் வைத்தவாரே, முதலில் அது ஒரு சிறு உவப்பு இல்லாத விசயத்தை செய்து பார்க்கும்.
நாம் உடனே விழித்துக் கொண்டு அதட்டி அது இருக்க வேண்டிய இடத்தில் சுருட்டி அமர வைத்து விட்டால் விளைச்சல் நிலத்தில் ஊடுருவும் களைகள் பெருகி பயிரின் விளைவு குறைவாகிவிடுவதைப் போல குறைந்து விடும்.
தவிர்த்து, எதிர்மறை எண்ணங்களை தொடர்ந்து கேட்டும், பார்த்தும் தவறான வாசிப்புகளும் செய்து வந்தால் அது காட்டுத்தீ போல மட்டுக்குள் கொண்டு வர முடியாத வாக்கில் வளர்ந்து காடு, மேடு, பள்ளம், குழந்தை, முதியோர், நான், நீங்கன்னு பார்க்காம எல்லாரையும் அழித்து விடும்.
இந்த ஐந்து வருட ஆட்சியில் இந்தியா முழுமைக்கும் வெறுப்பு விதைக்கப்பட்டு மெதுவா அது அனைவர் புத்தியிலும் ஊடுருவச் செய்யப்பட்டிருக்கிறது. அது கொளுந்து விட்டு எரிந்து வாழும் வீட்டையே எரித்து சாம்பாலாக்கிக் கொள்வதற்கு முன்னால் விழித்துக் கொண்டால் அனைவருக்கும் நலம்.
இந்த வெறுப்பு, தூய்மை வாதம் பேச வைக்கிறது. குறுகிய சாளரங்களை திறந்து விடுகிறது. அவன் வடுகன், முஸ்லீம், க்ரிஸ்டியன், தாழ்த்தப்பட்ட சாதி என்று இல்லாத ஒன்றை வைத்து அடையாளப் படுத்தி குறுக்கிக்கொள்ளச் செய்கிறது. இன்று ஒரு குழுவை, ஓர் அடையாளப்படுத்தி அவனை அதற்குள் குறுக்கும் அதே மனது நாளை வேறொரு குழுவை இன்னொரு பாட்டிலிலுக்குள் அடைத்துப் பார்க்காது என்று என்ன நிச்சயம்.
நான் தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொண்டே இரவோடு இரவாக தங்களை தற்காப்பு செய்து கொள்வதற்குக் கூட ஆற்றல் இல்லாத ஒரு தாயையும், இரண்டு குழந்தைகளையும் இரத்தச் சகதியில் வெட்டிப் போட்டு விட்டு தலை மறைவாகி விடுபவர்களும் அதே தமிழர்கள் தான். காரணம் உயர் சாதியாம், அவர்கள் தாழ்ந்த சாதியாம். இந்த லட்சணக் கட்டையில் அரசாட்சியை அவர்கள் கையில் கொடுத்து விட்டால் அனைவரும் ஒரே இரவில் ஒரு தாய் பிள்ளைகளாக ஆகி விடுவார்களாம். இதெல்லாம் என்ன மாதிரியான கதை?
பெரியாரும் வந்தேறி, கலைஞரும் வந்தேறி, சு. வெங்கடேசனும் வந்தேறி என்றால் நீ மட்டும் அப்போ யாரு? நீ உன்னுடய நிலப்பரப்பையும் அடையாளத்தையும் குறுக்கக் குறுக்க உன்னுடய இருப்பையே கேள்வி குறியாக்கி விடும் இயற்கையே அது தெரியுமா உனக்கு. வனத்தில் பரந்து விரிந்த காடுகளில் மட்டுமே ஆரோக்கியமான வழியில் பல்லுயிர் பேணல் நடந்தேறுகிறது.
இலங்கையில் நடந்த இனப்போரை காரணம் காட்டுகிறார்கள். அதற்கு பின்னான வரலாற்று சூழ்ச்சி அறிவாயா? அதே பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் நீ சாதிப் பெருமை பேசி வடுகன், வந்தேறி என்று உன்னுடைய இனத்தின் அடையாளத்தையே குறுக்கி அதே பாதையில் செல்லத் துணிகிறாயா? நீ யாருக்கு இரையாகிக் கொண்டிருக்கிறாய் என்று சற்று நிதானித்துப் பார் உண்மை விளங்கும்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதுதான் நம்முடைய மந்தை கூட்டத்திற்கு நடந்தேறுவது. கூட்டத்தை சிதறடித்தால் வேட்டையாடும் ஊண் உண்ணிக்கு வேட்டையாடல் எளிது. எளிய மூளை உடனடி பயன்பாட்டினை எண்ணித் திளைக்கிறது. திறனுடைய மூளை நீண்ட கால அறுவடையின் மீது கண் வைக்கிறது. நீ யாராக இருக்க வேண்டும்?
ஒரு ஜனநாயகத்திற்கு சீமான், வேல்முருகன் போன்றவர்கள் பேசும் அரசியலும் தேவைதான். அது சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள பயன்படுத்தும் ஊறுகாய் அளவோட நிப்பாட்டிக் கொள்வது நல்லது. மிஞ்சினால் நஞ்சாகி, ஓர் இலங்கைப் போரைப் போன்று வீட்டிற்கே வரவழைத்து கொள்ளும் அனைத்து சாத்தியங்களையும் கொண்டது என்பதை உணருங்கள்.
பெரிய எண்ணங்களை, வெறுப்பை விதைவிக்காத, நிதானமாக நின்று முடிவெடுக்கும் மனித மாண்பு போற்றுபவர்களை தேர்ந்தெடுங்கள். எல்லாவற்றிற்கும் தெருவில் நின்று போராட்டம் நடத்தும் நிலையிலிருந்து மாறி, பதட்டமான சூழலிலிருந்து வெளிவந்து அனைவரும் மென்மேலும் ஒரு மகிழ்வான சமூதாயத்தை பெற்று வாழ்க்கை அமைதியாக நகர அது வழி நடத்தும்.

0 comments:

Related Posts with Thumbnails