தொலைக்காட்சி விவாதங்களில் அபாண்டமாக ஓர் உண்மைக்கு எதிராக பரப்பப்படும் பிரச்சார வாதங்களை சொல்லிவிட்டு, அதனை எதிர் தரப்பினர் அவர்கள் எத்தனை பொய்யர்கள் என்பதாக சான்றோடு எதிர் வாதம் வைக்கும் பொழுது- பொய்யர்களுக்கு ச்சீ இதுவும் ஒரு பொழப்பா என்று கூனிக் குறுகும் உடல் மொழியை காண்பதில் ஒரு சுவராசியம் இருக்கிறது.
அப்படியான ஒரு விவாதத்தை புதிய தலைமுறையில் கண்டேன். பெரியார் ஒரு சாதி வெறியர் என்றும், சாமி சிலைகளை உடைத்தார் என்றும் அப்பட்டமான ஒரு பொய்யை தான் சாமார்த்தியமாக எடுத்து வைப்பதாக வைத்து விட்டு நகர்ந்தார். அதற்கு பதிலுரைக்கும் விதமாக தொல். திருமா அவர்கள் மிக அழகான விதத்தில் அந்த உண்மையை எடுத்து வைத்தார். அப்பொழுது அந்த மய்யநிலையாளர் அவசரமாக தண்ணீர் எடுத்து அருந்திய விதம் பார்க்க கண் கோடி வேண்டுமென்பதாக இருந்தது.
பெரியார் சாதி வெறியை ஊட்டி வளர்த்திருப்பாராயின் எதற்காக அவரை நீங்கள் எதிர்த்திருக்க வேண்டும்? உங்களுடைய அரசியலே சாதிய கருத்தாக்கத்தில், பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில் தானே ஆயிரம் ஆண்டு காலங்களாக ஒப்பேறி வருகிறது. அதற்கு வெடி வைக்க வேண்டித் தானே, அதன் ஆணி வேரான இறை நம்பிக்கை என்ற பெயரில் மனிதனை பிரித்தாளும் இடமான நீங்களே நம்பாத அந்த கடவுளர்கள் சன்னிதிக்குள் நீங்கள் விரும்பாத பிற இந்து மனிதர்களையும் அழைத்துக் கொண்டு நுழைய வேண்டி வந்தது.
அந்த ஊரில் உள்ள அனைத்து ஹோமோ செப்பியன்ஸ்ம் ஆலயத்திற்குள் நுழைய வேண்டுமென்றவர் எப்படி ஒரு சாதி வெறியர் ஆகிப்போனார்? பெரியார் என்ன நாட்டில் உள்ள அனைவரும் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக்க வேண்டுமென்றா ஓர் இயக்கத்தை நடத்தினார்? ஒரு முட்டாளுக்கு கூடத் தெரியும் அது எந்த நாட்டிலும் முடியாத விடயமென்று.
ஏனெனில் அதனின்று விடுபட சில அடிப்படை அறிவு விரிவாக்க பயிற்சி தேவைப்படுகிறது. மனத்திண்மை தேவைப்படுகிறது. எதனையும் கேள்விக்குள்ளாக்கும் ஆராய்ச்சி மனோபாவம் தேவைப்படுகிறது. இயல்பாக நமக்கு வருவது எந்த வித சலனமுமில்லாத தன் முயற்சியற்ற மரவட்டை வாழ்க்கை. அந்த ஓட்டத்தில் இத்தனை ஆழமாக சிந்திக்க திராணி ஏது?
எனவே பெரியார் நம் எல்லாரும் துணுக்குற்று முழித்துக் கொள்ளும் வகையில் எதனை எதிர்த்தால் கவனத்தைப் பெற முடியுமோ அந்த இடத்தை கேள்விக்குள்ளாக்கினார். அதிலொன்றுதான், தானே காசு கொடுத்து வாங்கி போட்டுடைத்த பிள்ளையார் சிலை உடைப்பு. அதனை அன்றைய நீதி மன்றமே கூட அவரிடத்தில் கேள்வி எழுப்பும் பொழுது என்னுடைய காசு நான் வாங்கி உடைத்தேன் என்றாராம்.
வரலாற்றிலிருந்து எதனை யாரிடமிருந்து மறைப்பதற்காக இத்தனை பொய்களை, இத்தனை அதிகார பீடத்திலிருந்து இயக்குகிறார்கள்? அப்படியாயின் யார் எதனைப் பெறக்கூடாது? இது இன்று நேற்று தொடங்கியதாக தெரியவில்லை. வீழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு 300, 500 வருடங்களையும் தாக்கு பிடித்து மீண்டும் மீண்டும் மனித மேன்மைக்கு எதிரான துரு பிடித்து நாசியை துளைக்கும் கேவலத்தை அரங்கேற்ற துடிக்கிறார்கள்.
அதற்கு உதவியாக ஜீன்ஸும், டிஷர்ட்டும் போட்ட புது யுக இளைஞ, இளைஞிகளும், கமலும், ரசியினும் இன்னும் புதுப்புது வேடமணிந்து தொடர் மனித மேம்பாட்டிற்கு எதிரான காட்டுமிராண்டி அடிமை தனத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போவது மனித இன அவலமன்றி வேறென்ன?
0 comments:
Post a Comment