இவரையெல்லாம் படிப்பதற்கே ஒரு மண்டை வேண்டும் என்ற நிலையில் இருக்கும் பொழுது என்னவோ இந்த தட்டைப்படுத்தல் சித்தாந்தம் சில கேள்விகளை என்னுள் எழுப்பியதால், விமர்சிக்கும் நிலையிலிருந்து தூரத்தில் நின்றாலும் பொதுவில் வைத்து வாசிக்கக் கிடைத்ததால் ஓர் ஓரத்தில் வைத்து நாங்களும் பேசித் தெளிந்து கொள்வோமே என்று இதனை எழுத்தாக்கி முன் வைத்திருக்கிறேன். வாங்க வாசிப்போம்.
சில வருடங்களுக்கு முன்பு நியூ யார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர் தாமஸ் ஃப்ரீட்மென் எழுதிய த ஃப்ளாட் வேர்ல்ட் புத்தகம் படித்தேன். அன்றைய வளர்ச்சியில் படிக்கும் பொழுது அதன் மேலோட்டமான சர்க்கரை தடவிய விசயங்கள் மயக்கத்தை ஊட்டி அடடா என்ன சிந்தனை என்ன சிந்தனை என்று வாசிக்கும் பொழுது கட்டிப் போட்டிருந்தது. அதன் அடி ஆழத்தில் ஒளிந்து கிடக்கும் பல கோடி மக்களின் நசுங்கிய வாழ்க்கையை அந்த எழுத்து எடுத்து காட்டிக் கொண்டிருக்கவில்லை; அதற்கு பின்னான ஃப்ரீட்மெனின் கொள்கை நோக்கு எதனைப் பொறுத்தது என்று புரிந்து கொள்ளும் பக்குவமுமில்லை அன்று எனக்கு. அந்த அரசியல் சார்ந்த எழுத்து அத்தனை மயக்கத்தை ரொம்ப இயல்பாக விதைத்து விட்டுப் போயிருந்தது.
அந்த புத்தகத்தின் வெற்றிக்கான எழுத்துச் சிந்தனைக்கான பாராட்டை நாம் அந்த பத்தி எழுத்தாளருக்கே வழங்க வேண்டும். ஏனெனில் அதற்குப் பின்னான உண்மைகளை மறைத்து உள்ளதை உள்ளபடியே வழங்குவதாக உலகம் முழுமைக்குமே ஒருமுகப் போக்கே (monopoly) சிறந்தது என்று வழங்கி அதனை எடுத்து முன் வைத்த புத்திசாலித்தனத்தினை வேண்டுமானால் பாராட்டலாம். ஆனால், அதனில் கூறப்பட்டிருக்கும் உண்மை என்னவெனில் மெக்டொனல்ஸ் போன்ற அதி விரைவு உணவகங்களில் உருவாகும் உணவை உண்டு செரித்துக் கொள்ள பழகி விட்டால் பல ஏற்றத் தாழ்வுகள் மறைந்து விடும். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மெக்டெனால்ஸ் பரப்புவதின் அவசியத்தை எடுத்தியம்பி அதனால் மட்டுமே உலக தட்டையாக்கப்படல் சிந்தனை ரீதியாக எப்படி எடுத்து கட்டியெழுப்பப்படும் என்று மயக்கம் ஊட்டக் கூடிய கருதுகோளின் அடிப்படையை நிறுவ முயன்றிருக்கும் அந்தப் படைப்பு.
இந்த உலகம் முழுதிலும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் லோகல் வாழ்வு ஆதாரத்தில் கிடைக்கும் பொருளாதாரச் சூழலில் அமைத்து கொள்ளும் தன்னிறைவு அணுகுமுறையைத் தவிர்த்து உலகினைத் தட்டையாக்கிவிட்டால் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்வும், ஒரு மித்த சிந்தனையும் எட்டி விடுவார்கள் பின்பு இந்த பூகோளத்தில் பஞ்சமும், போரும் அற்று ஜீவித்து வாழலாம் என்பதனை போல மிக மேலோட்டமான கருத்தை முன் வைத்து எழுதப்பட்டது. ஆனால் அந்தப் புத்தகம் அறிவுச் சுரண்டல் பண்ணுபவர்களுக்கான ஒரு கையேடு.
அந்தப் புத்தகத்தில் அவர் எப்படி வெளி நாட்டுத்தொழில்கள் இந்தியா போன்ற மூன்றாம் தர நாடுகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டித் தரக்கூடிய அமுத சுரபி, என்று கூறியபடியே இனிப்பு மிட்டாய் வழங்கியிருப்பார் (கசப்பை மறைத்து). அதற்கு அடிப்படையான மனித வளம், ஆங்கிலம் கற்றறிந்த பல கோடி இளைஞ/ஞிகளைக் கொண்டு மிக எதார்த்தமான சூழ்நிலையில் அமைந்து பட்டிருக்கிறது என்ற புள்ளி விபரத்துடன். அதற்குப் பின்னான விசயங்களான இந்த இளைஞர் கூட்டம் எப்படி உறிஞ்சப்பட்டு ஒரு நாட்டிற்கு கிடைக்கற்கறிய அறிவுச் சுரண்டல் நடந்து கொண்டிருக்கிறது என்பதனை உணர முடியாத வாக்கில், நமது இளைஞர்களின் ஆங்கில அறிவு சிலாகிக்கப் பெற்று எப்படி அவர்கள் பீட்சாவும், கோக்கும் வார இறுதி கேளிக்கைகளையும் நடத்தி அமெரிக்கர்களைப் போலவே இன்று சிறு சேமிப்பு அற்று, ஈட்டும் பணத்தை சுழற்சியில் போடுவதின் மூலம் லோகல் பொருளாதாரம் மேம்பாடு அடைய உதவுகிறார்களென்றும், இந்திய இளைஞர்களின் வாழ்க்கை அமெரிக்க இளைஞர்களைப் போலவே இருக்கிறது என்றும் புல்லரித்துப் போய் இருப்பார்.
படிக்கிற என் போன்றவர்களை அந்த மயக்கமூட்டல் என் தலைமுறைக்கும் தாங்கும் விதமாக தடம் பதித்து விட்டுவிடும்.அதற்குப் பின்னான சுரண்டல் புரியாமலேயே! இன்னும் ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்தாலே தான் ஓர் அறிவாளியாக எண்ணிக் கொள்ளும் மயக்கத்திலிருப்பவர்களுக்கு இது போன்ற வாசிப்பு பின்பு எதனை விட்டுச்செல்லும்.
இந்தக் கட்டுரை பேச வந்த விசயம் இதுவல்ல. இருப்பினும், அதே உலகமயமாக்கல் சந்தைப்படுத்தலுக்கான எழுத்து பிரதிநிதியை ஒத்தே இன்று நமது பகுதி உலகில் ஒருவர் எப்படி கடவுளுடன் உரையாட தகுதியான ஒரே மொழியான சம்ஸ்கிருதத்தைக் கொண்டு நாட்டார்கள் தெய்வத்தினையும், மற்ற கோடான கோடி கிராம கடவுளர்களையும் உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து எல்லைகளைக் கடந்து கடவுள் உலகமயமாக்கல் செய்ய முடியுமென்று நமக்கெல்லாம் ஒரு சித்தாந்த லாலிபாப் வழங்க தனது சிந்தனைக் கடையை விரித்திருக்கிறார். அதனை வாசிக்க நேர்ந்ததின் விளைவாக உருவானதுதான் இந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரையை வாசிக்க
இங்கே அழுத்துங்க...
எனக்கு அதனை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அந்த சித்தாந்தத்திற்கான அடிப்படை நல் கருத்தாக்கங்கள் மேலே அறிமுகப்படுத்தியிருந்த அதே ஃப்ரீட்மெனினுடைய உலகமயமாக்கலின் நன்மைகளை எப்படி இனிப்புத் தடவி அதற்கு பின்னாக அழுந்தி, நசுங்கி கொண்டிருக்கும் பன்முக வாழ்வு முறை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வாதாரம், மொழி போன்றவைகளை தவிர்த்து/மறைத்து பேசி ஒரு வித மயக்கத்தை தோற்றுவித்தாரோ அதே செயலை வேறொரு தளத்திலிருந்து நமது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வழங்கியிருக்கிறார் என்பதாக புரிந்து கொண்டேன்.
அந்தக் கட்டுரையின் சாரம்சம்:- இந்தியா போன்ற அகன்ற நிலப்பரப்பை கொண்ட ஒரு நாட்டில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் மதம் இந்து மதம். அதற்கென உள்ள கடவுள்களோ வாழும் மக்களை விட அதிகப்படியான எண்ணிக்கையில் உள்ளது. எப்படி இவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து தேசீய இனமாக கட்டியமைக்க எண்ணி, மத ரீதியாக இணைக்கும் நிலையிலாவது அது சாத்தியப்படுமா என்ற ஒரு முயற்சியின் நிமித்தம் இந்த சம்ஸ்கிருத பொது மொழியை முன் நிறுத்தி அந்த கட்டுரை பேசியிருக்கிறது.
எனது முப்பாட்டனான தாத்தா கூட எங்களுக்கு குல தெய்வம் ஆகிவிட்டார் எனும் பொழுது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அது போன்ற கடவுள் ஒருவர் இருப்பார்தானே? அப்போ அவர் சொல்வதும் சரிதான். சரி, ஆனால் என் முப்பாட்டன் பேசிய, புழங்கிய மொழியில் அவருடன் உரையாடுவதில்தான் எனக்கு கிடைக்கக் கூடிய நெருக்கமும், உணர்வுகளும் கடத்திப் பெறுவதாக எனது மனதும் லயித்து எனக்கு கிடைக்க வேண்டிய நம்பிக்கை சார் விசயங்களும் கிடைத்ததாக நகர்ந்து அடுத்த தலைமுறைக்கும் அதனை கடத்தப்பெற வைக்கிறேன்.
மாறாக, பக்கத்துத் தெரு கிஷ்மு உடைய கொள்ளுத் தாத்தா ஓரளவிற்கு அறியப்பட்டவர் என்பதால், அவர் பேசுகின்ற மொழியின் அ, ஆ கூட தெரியாமல் நான் எனது முப்பாட்டனை அவருக்கு கீழாக இணைத்துக் கொள்வதின் மூலமாக எனக்கான நெருக்கத்தினை எப்படி எட்ட முடியும்? அப்படியெனில் எனது முப்பாட்டன் அவரை விட இளக்காரமானவரா? எதன் பொருட்டு? அவர் எட்டியிருந்த பொருளாதார அடிப்படையிலா, அல்லது பேசும் மொழி சார்ந்தா? இப்பொழுது இந்த அடிப்படை வாதத்தை விட்டுவிட்டு சற்றே பெரிய கடவுளர்களுக்கு வருவோம்.
உதாரணமாக, எங்களூரில் மகமாயி கோவில் ஒன்று உள்ளது. அங்கே லோகல் பூஜாரியே சூடம் ஏத்தி, அவருக்கு தெரிந்ததைப்பாடி, எங்களுக்கு போதுமான நெருக்கத்தை உருவாக்கித் தருகிறார். அதுவே போதுமானதாக கருதி எத்தனையோ தலைமுறைகளை கடந்து வந்து அந்த வழிபாடும் நிற்கிறது. வருடம் ஒரு முறை கோழி, ஆடுகள் நேர்த்திக்காக பலியிடப்பட்டு அங்கேயே கிராமமாக அமர்ந்து, சமைத்து உண்டு கொண்டாட்டமாக நாளை கடத்துகிறோம்.
இந்த முறையை மாற்றி மிருக பலியிடல் நாகரீகமற்ற செயல். அதனில் ஓர் அழகில்லை. காட்டுமிராண்டித் தனமாக இருக்கிறது. மாரியாத்தாளிடம் உரையாடும் மொழியும் அப்படியே இருக்கிறது என்று கூறி 99% சதவீத மக்களுக்கு புரிந்த மொழியைத் தவிர்த்து புரியாத ஒரு மொழியில் அன்னியமாக உணர்ந்து கொண்டு, தன் சார்ந்த நிலத்திற்குள்ளாகவே வேறுபட்டு ஏதோ மற்றுமொரு கட்டமைக்கப்பட்ட உலக கடவுள் நிறுவப்படலின் அவசியத்தில் எனது கொண்டாட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்வது அந்த மண்ணின் மணத்தையும், வாழ்வு முறையையும் சிதைக்குமா சிதைக்காதா?
...இவ்வாறாக இந்து மதத்தின் மையப்போக்கில் சம்ஸ்கிருதம் வழிபாட்டுமொழியாக உள்ளது. ஒரு தெய்வம் இந்து மையப்போக்குக்குள் நுழையும்போதே சம்ஸ்கிருதத்தில் அதற்கான மந்திரங்களும் தோத்திரங்களும் உருவாகிவந்துவிடுகின்றன. வழிபாட்டுக்கு அது தேவையாகிறது...
எழுத்தாளர் ஜெயமோகனின் வாதம் - சம்ஸ்கிருதத்தை கடவுளுடன் உரையாடும் ஒரே பொது மொழியாக ஆக்கிவிட்டால் கன்னியாகுமரியிலிருந்து கேதர்நாத் வரையிலும் ஒரே சங்கீதமே ஓதப்படும். அதனால் மிசோரத்திலிருந்து குஜாரத் வரையிலும், தமிழகத்திலிருந்து கஷ்மீரம் வரையிலும் அனைத்து இந்தியர்களும் கடவுளின் பொது மொழி புரிந்து தங்களை ஒரே தாயின் பிள்ளைகள் என்று உணர்ந்து அனைத்து சிறு கடவுளர்களும் பெரும் கடவுளர்கள் போன்றே இந்தியாவின் ஏனை பகுதி மக்களின் கவனத்தை பெற்று, என் ஊர் மாரியம்மா கோவிலுக்கு மிசோரத்து பிரஜை வந்து போக வசதியாக இருக்கும் என்று மத ஒருமுக போக்கை கட்டியெழுப்புகிறேன் என தனது மத தட்டைப்படுத்தல் சித்தாந்தத்தை முன் வைத்திருக்கிறார்.
...சென்ற நூறாண்டுக்காலத்துக்குள்தான் ஐயப்பனுக்கு சம்ஸ்கிருத தோத்திரங்கள் உருவாயின. அதன்பின்னர்தான் கேரள நாட்டார் தெய்வமான ஐயப்பன் இந்தியாவெங்கும் , உலகமெங்கும் இந்துக்கள் வழிபடும் தெய்வமாக ஆகியது. சபரிமலையில் மலையாளம் மட்டுமே ஒலித்திருந்தால் இத்தனை தமிழர்களும் ஆந்திரர்களும் பிகாரிகளும் அங்கே ஒன்றாக நின்று வழிபட்டிருக்க முடியாது...
மோலோட்டமாக வாசிக்கும் பொழுது அதே எண்ணம் ஃப்ரீட்மெனிடம் கிடைத்த அடடா என்ன சிந்தனை, என்ன சிந்தனை என்று சித்தம் கலங்க வைக்கக் கூடிய மயக்கமே வந்தது. ஆனால், அதற்குப் பின்னான அபத்தமும், 3000 வருடங்களாக நடந்தேறும் அதே குயுக்தியும் அந்த வார்த்தைகளுக்குப் பின்னான நிழலில் ஒளிந்து நிற்கிறது. இந்த வாரத்தில் ராகுல் சங்கிருத்தியாயன் எழுதிய
“வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற ஆய்வாராய்ச்சியினை ஒத்த புத்தகம் ஒன்று வாசிக்கக் கிடைத்தது. சற்றே புனைவு கலந்து மிக அழகாக 6000 வருடங்களுக்கான பின்னோக்கிய நடையில் தொடங்கி முன்னேறி 1940களில் வைத்து முடித்திருக்கிறார்.
இந்த மானிட வளர்ச்சியும்/வீழ்ச்சியும், அதற்குப் பின்னான உண்மையான அரசியலும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அந்த வாசிப்பு ஒரு நல்ல தொடக்கம். ஒரு மானுட இனமாக எங்கிருந்து தொடங்கியது நமது நடை என்று அறிந்து கொள்ள எத்தனித்து தெளிவு வேண்டி நிற்பவர்களுக்கு நல்ல தொடக்கப் புள்ளி அந்த வாசிப்பு. அதனை வாசித்து விட்டு ஜெயமோகனின் கட்டுரையை வாசித்தால் அந்த எழுத்திற்கு பின்னான ஒருமுக நோக்குமயம் எதனை வேண்டி நிற்கிறது என்பதனை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். இந்த போராட்டம்/பரப்புவாதம் இன்றைய நேற்றைய விசயமாக படவில்லை.
இஸ்லாத்திற்கு பொது மொழி அரபி, கிருஸ்துவத்திற்கு இன்றைய நாளில் ஆங்கிலம் எனவே மதம் வளர்கிறது என்று நினைத்திருப்பார் போலும். அதனைக் கருத்தில் கொண்டு இந்தியச் சூழலில் நமக்கு இந்த சம்ஸ்கிருத கடவுள் உரையாடல் மொழியை பொது மொழியாக்க முயன்றிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அவரின் சிந்தனை ஓர் உயர்ந்த நோக்கத்திற்கானது என்றாலும் அதற்கு பின்னான பூர்வீக நிலத்தின் விழுமியங்கள் சிதைவுக்குள்ளாவதை ஏன் அவர் கருத்தில் நிறுத்த வில்லை என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.
ஜெயமோகன் கூறிய வழியில் நடந்தால், எப்படி உலமயமாக்களின் பக்க விளைவாக சிறு விவசாயிகளும், லோகல் பண்ட சந்தையைச் சார்ந்த சிறு தொழில்களும், மக்களும் அதற்கே உண்டான மொழியும், சொல்லாடல்களும், கொண்டாட்டமும் இழந்து ம்யூசியத்தில் வைத்து பார்த்து கல்லா கட்டும் நிலையை அடைய வைத்ததோ அதனைப் போன்றே இந்த கடவுள் பொது மொழியும் நிலத்திற்கான அடையாளங்களை சிதைத்து அந்த மண்ணிற்கே உண்டான கலாச்சார விழுமியங்களை சிறுமைப் படுத்தி அழிக்கவே செய்யும்.
பன்முகத் தன்மையில்தான் உலகின் அழகே செழித்து, கொழித்து வாழ்வதில் பொருளுள்ளதாகவும் இந்த ப்ரபஞ்சத்தின் பிரமாண்டம் உணர வைக்கக் கூடியதாகவும் உள்ளது. இதற்கு மேலும் இது போன்ற உலகமயமாக்கம் அது பொருளாதார, மத, கடவுள் சார்ந்து எடுத்து நிறுத்துவது மென்மேலும் அடிப்படை வாதம் பல்கிப் பெருகவே வழி நடத்திச் செல்லும். இருக்கும் பிரச்சினைகள் போதுமே!
டிஸ்கி: ஜெயமோகனின் கட்டுரையில் மொழியின் வளர்ச்சி, பிற மொழிகளுடன் ஒரு மொழி ஊடாட நேரும் பொழுது எப்படி ஒன்றிற்கு பிரிதொன்று கொடுத்து, வாங்கி அதன் இலக்கண நெகிழ்வினைக் கொண்டு அந்த மொழி தன் காலங்கள்தோறும் நிலை நிறுத்திக் கொள்கிறது என்பது வரைக்கும் புரிந்து கொள்ள முடிகிறது. ஓர் இயற்கைசார் அறிவியலாளன் என்ற முறையில். அதனைத் தவிர்த்து ஜெமோ நிறுவ வந்த மத அடிப்படையிலான சம்ஸ்கிருத சித்தாந்த முன் நிறுத்தலை மட்டுமே இங்கே பிரித்திருக்கிறேன்.