அன்புக்கதைன்னு பொருத்தமா ஒரு தலைப்பு வைச்ச பதிவு ஒண்ணு படிச்சேன். அது ஒரு குறும்படத்தைப் பற்றியது. என்னைத் தவிர்த்து அங்கே பின்னூட்டமிட்டிருந்த அனைவரும் ஏதோ ஒரு வகையில அந்த குறும்படத்தைப் பற்றி தெரிஞ்சு வைச்சிருந்தாங்க. எனக்கு இப்பத்தான் முதன் முறையா பார்க்க கிடைச்சிச்சு. சரி என்னதான் இருக்கும் அதில, அதிலும் 5 நிமிடத்திற்குள்ள அப்படி என்னாத்தை பெரிசா சொல்லிட முடியுங்கிற ஒரு நினைப்போட பொத்தானை அமுக்கிப் பார்க்க ஆரம்பிச்சேன்.
அந்தப் படத்தின் தாக்கத்தால் பார்த்து முடிச்சவுடன் பேசாமே கொஞ்சம் நேரம் அமர்ந்து இருக்கிற மாதிரியாகிடுச்சு. அந்தப் படத்தில வந்த பெஞ்ச், பார்க் மாதிரியான அமைப்பில தனியா நான் அமர்ந்திருக்கிற மாதிரியான ஒரு உணர்வு. அப்படியே பார்த்தாலும் நானெல்லாம் அந்தப் படத்தில வர்ற அந்த மகன் மாதிரி இல்லாம பேச ஆரம்பிச்சா "தம்பீ உனக்கு வாய வலிக்கலையாடா"ன்னு கேட்கிற அளவிற்கு அறுத்து சாச்சர்றது பெத்தவிங்கள. அப்படி இருக்கும் பொழுது இந்த குறும்படத்தை பார்த்தவுடன் மற்ற பெற்றோர்களுக்காகவும், பெரிய வயசானவிங்களையும் நினைச்சு "ஏன் இப்படி"ன்னு மனசு தொங்கிப் போனது.
அந்த நிலையில ஒரே ஃபீலிங்ஸோட ஒரு பின்னூட்டத்தை தட்டி விட்டுட்டு வந்திட்டேன். காலையில போயி பார்த்தப்போ அங்கே நம்ம தருமி ஒரு பின்னூட்டத்தின் மூலமா அந்தப் படத்தில் நெருடலான லாஜிக்கல் சமாச்சாரம் இருப்பதாக இதனைச் சுட்டிக் காட்டியிருந்தார்...
...தருமி said...
சொல்ல வந்த விஷயம் சொல்லப்பட்ட விதம் நல்லா இருக்கு.
ஆனா ஒரு நெருடல்: நினைவின்றி குருவியைத் திரும்பத் திரும்ப கேட்கும் அப்பா தன் டைரியில் எப்படி அவ்வளவு சரியா நல்ல நினைவாற்றலோடு அந்தப் பக்கத்தை எடுத்துக் காண்பிக்கிறார் என்று மனதில் ஒரு நெருடல் ....
8/27/2009 9:21 AM...
தருமிக்கு என்னான்னா எப்படி அந்த நினைவாற்றலற்ற(மாதிரியான - காட்சிப் பிழை அது) அப்பா ஒரு சிட்டுக்குருவியை அது என்னா, அது என்னான்னு கேட்டும் வைச்சிப்புட்டு பின்னே ரொம்ப ஞாபகத்தோட அந்த டயரியை எடுத்து கொடுத்திருக்க முடியுங்கிறார்.
அந்த குறும்படத்தில காட்சி இப்படியாக நகரும் - அதி மும்முரமா செய்தித்தாளில் முங்கிக் கிடக்கும் மகன்கிட்ட கேட்டு, கேட்டு எரிச்சலூட்டும் போது, தன் மகன் கடுப்பாகி எத்தனை முறை சொல்றதுன்னு கத்தியவுடன், அப்பா முகம் வாட்டம் கண்டு எழுந்து வீட்டிற்குள் சென்று அவர் எழுதிய டயரிக் குறிப்பை எடுத்து அதே மகனுக்கு அவன் மூன்று வயதாக இருக்கும் பொழுது எப்படி 21 முறை இதே போன்ற ஒரு நாளில், இதே போன்ற பார்க்கில் அமர்ந்து தன்னிடம் கேட்டான் எனவும், அப்படி கேட்டதிற்கு எப்படி முகம் சுளிக்காமல் ஒவ்வொரு முறையும் பதிலுரைத்து விட்டு அதற்கு போனசாக வேறு கட்டியும் பிடித்தேன் என்பதனைப் போன்று எழுதியிருப்பதை மகனைவிட்டு சத்தமாக படிக்கச் சொல்கிறார் .
இதனை வைத்து தருமி எப்படி இவ்வளவு ஞாபக சக்தியோட இருக்கும் பெரியவருக்கு சிட்டுக் குருவி அடையாளம் மறக்கும் என்பதனைப் போன்ற காட்சியமைப்பில் கொஞ்சம் லாஜிக் இடிப்பதாக முன் வைத்திருக்கிறார்.
அதப் படிச்சிட்டு எனக்கு பக்குன்னு ஆயி என்னடா நம்ம தருமியே தப்பா எடுத்துட்டு இருக்காரேன்னு, அரக்கபரக்க பறந்து நானும் அவரோட கேள்விக்கு பதில் சொல்லுற மாதிரி இப்படி ஒரு பின்னூட்டப் பதிலைக் கொடுத்திருந்தேன்...
....Thekkikattanதெகா said...
//ஆனா ஒரு நெருடல்: நினைவின்றி குருவியைத் திரும்பத் திரும்ப கேட்கும் அப்பா தன் டைரியில் எப்படி அவ்வளவு சரியா நல்ல நினைவாற்றலோடு அந்தப் பக்கத்தை எடுத்துக் காண்பிக்கிறார் என்று மனதில் ஒரு நெருடல் ...//
தருமி, அப்பாங்கிறவர் அந்த இடத்தில ஒரு zen மாதிரி நினைச்சிக்கோங்க, தன் பிள்ளை பார்க்ல இருக்கும் பொழுது அதுவும் தன்னை மாதிரியான அப்பா பக்கத்தில இருக்கும் பொழுது - அங்கே என்ன நிகழணுமோ அதை விட்டுட்டு அப்படி என்ன செய்தித்தாளில் முங்க வேண்டும்.
அந்த வயசிலும் வாழ்க்கைப் பாடம் எடுக்கிறார்னு வைச்சிக்குவோமே... அதே பையன் தன் சிறு குழந்தையை அதே பார்க்குக்கு கூட்டியாந்தாலும் அதே பொறுப்பில்லாத்தனத்தைக் காட்டினா... சோ, அவரு தெரிஞ்சே செய்றார் :))
8/27/2009 6:32 PM...
அதுக்குப் பிறகு நேரடியாவும் பேசும் பொழுது திடீர்னு அவர்கிட்ட பேசின விசயத்தையெல்லாம் ஏன் பொதுப் பார்வைக்கு கொண்டுவரக்கூடாதுன்னு தோணுச்சு, ரெண்டு பேருக்குமே! சரி கொண்டு வந்துருவோம், நமக்கும் ஒரு எண்ணிக்கை கூடினுச்சு, மக்கா நீங்களும் அய்யோடான்னு வந்துட்டுப் போக ஒரு வாய்ப்பா இருக்குமின்னு இங்கன தட்டி வைக்கிறேன்.
இன்றைக்கு பார்த்தோமானால் பலவித காரணங்களாலும், தேவைகளாலும் உண்மையான வாழ்க்கையை தொலைத்துவிட்டு எது எதனையோ தேடிக்கொண்டிருக்கிறோம். வெளிமுகமாக. அதன் உப விளைவாக தவிர்க்க முடியா மன இறுக்கம். அது பெற்ற பிள்ளைகள், பெற்றவர்கள், துணைவி என்று யாரையும் பார்ப்பதில்லை. அதே நேரம் வயதான காலத்தில அது போன்ற வாழ்க்கை முறையில் ஓடித் தேய்ந்து போன பெரியவர்கள், ஒரு காலத்தில் தானும் இளைஞனாக உலக விசயங்கள் அனைத்தும் தினப்படி வண்டி வண்டியாக அறிந்து இது போன்ற ஒரு இறுக்க வாழ்க்கையை வாழ்ந்திருக்கக் கூடும்.
ஆனால், காலப் போக்கில் அவைகளை எல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்திருக்கிறோம் என்று இன்று அமர்ந்து யோசிக்கும் பொழுது அவர்களுக்கு அந்தச் செயல் ஒரு நகைப்புக்குரியதாக அமையலாம். அதாவது தன் பிள்ளைகளுடன் கூட சரியான படி நேரத்தை செலவழிக்க முடியாமல், உலக விசயங்களை உள்வாங்கி தன்னால், தன் சக்திக்கு அப்பால் நடைபெறும் விசயங்களை நேரத்தை கொல்லும் பொருட்டு அறிந்து வைத்ததில் என்ன நடந்திருக்கலாம் என்று அனுபவப் பூர்வமாக இன்று தெரிந்து வைத்திருக்கலாம். அடுத்த நாள் வேலை செய்யும் இடத்தில் நண்பர்களோடு எனக்கும் அந்த விசயம் பற்றிய ஞானம் இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லத் தேவையாக இருந்தது, என்கிறளவில மட்டுமே உதவியதாக இன்று அவர்கள் அறிந்து வைத்திருக்கலாமல்லவா?
அப்படி இருக்கும் பொழுது, இன்றைய இளைஞனான தன் மகன் ஒரு படி மேலே போய் தான் செய்ததையே மேலும் இறுக்கம் கொண்டு நன்றாக இன்று வாழும் ஒரு வாழ்க்கையில் எந்தவித ப்ரக்ஞையுமில்லாமல் வாழ்கிறானே என்று அறியும் பொழுது, தன்னை முட்டாளாக்கி கொண்டேனும் அந்த நாலும் தெரிந்த, வளர்ந்த மகனுக்கு உணர்த்தும் நிலையிலேயே ஒரு தகப்பனாக இருக்கலாமல்லவா?
இன்றைய காலக் கட்டத்தில் ஒரே காரில் நாலு பேர் பயணிக்க நேர்ந்தால் அதில் மூன்று பேர் தன் தன் அலைபேசியில் அங்கு இல்லாத நண்பர்களுடன் பேசிக் கொண்டு செல்லும் நிலைக்கு நகர்ந்திருக்கிறது, மனித உணர்வுகள். மேலும் நம் சமூகத்தில் எத்தனை எத்தனையோ பொறுப்பற்ற பிள்ளைகள், தான் பிள்ளைகளை பெற்று விட்டு தனது பெற்றோர்களை விட்டு வளர்க்கும் நிலையில் எத்தனையோ பேர் இருக்கிறோம். இவர்களுக்கு அந்தப் பெரியவர்களின் மனக் கஷ்டத்தை எந்த நாளில் யார் விளக்குவது, தன் பொறுப்பேற்று தனது வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுப்பதின் பொருட்டு.
இந் நிலையில் தன் மகன் என்ன தொலைக்கிறான் என்பதனை விளக்க அந்த குறும்படத்தில் வந்த அப்பா, தன் மகனிடத்தில் ஏன் அப்படி ஒரு நகர்வை நிகழ்த்தியிருக்கக் கூடாது. பொறுமையும் சகிப்புத் தன்மையின் உன்னதம் விளக்க. ஏனெனில் அந்த மகன் பொருட்டு - அவன் திருமணமானவனா, குழந்தைகளிடத்தில், வேலை பார்க்குமிடத்தில் எப்படி பரபரப்பாக, சிடு மூஞ்சியாக நடந்து கொள்கிறவனா என்கிற போக்கில் எதுவுமே விளக்கப்பட வில்லை.
அந் நிலையில், அந்த ஒரு காட்சியைக் கொண்டு பார்க்கும் தருணத்தில் தன் அப்பா ஏன் அப்படி நடந்து கொள்கிறார், தன் கவனத்தைப் பெறவா என்கிற ( attention seeking strategy - குழந்தைகளும் அப்படித்தானே) ஒரு சிறு எண்ணம் கூட இல்லாமல் நடந்து கொள்ளும் பொழுது, அவரை விட வயதில் சிறிய குழந்தைகளிடம் எப்படியாக நடந்து கொள்வான் அந்த மகன் என்று கருதி இந்தப் பாடத்தை வழங்க வேண்டுமென எண்ணி ஏன் அந்த அப்பா அப்படி ஒரு நாளில் அது போன்ற ஒரு நிகழ்வைக் கொண்டு அரங்கேற்றியிருக்கக் கூடாது என்பதனைப் போலத்தான் என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.
அங்கே அந்தத் தகப்பன் எதனையும் எதிர்பார்த்து அப்படியாக நடந்து கொண்டதாக தெரியவில்லை. நீ என்ன செய்கிறாய் என்பதனை உணர்ந்து கொள் என்பதனை உணர்த்த ஒரு சரியான வாய்ப்பை பயன் படுத்திக்கொண்டார் என்பதாகத்தான் பார்க்க வேண்டும். பெரியவர்கள் எப்படியாக தன் பிள்ளைகள் வளர, வளர ஒதுங்கிக் கொள்கிறார்கள் - பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டது, சுயமாக நிற்க ஆரம்பித்துவிட்டது, நல்ல வேலையில், சம்பளத்தில் தன்னை விட சில செய்ய முடியாத விசயங்களை எல்லாம் செய்து வருகிறது என்று எண்ணி அந்நியமாக தன்னை தூரமே நிறுத்திக் கொள்கிறார்கள்.
அவ்வாறாக ஒதுங்கிக் கொள்வதற்கு பிள்ளைகளின் நடவடிக்கைகளும் ஒரு காரணமாக அமைந்து போகிறது. இந் நிலையில் சில முக்கியமான விசயங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் வளர்ந்த பிள்ளைகள் வாழ்வியல் சார்ந்து எல்லாமே அது அறிந்து கொண்டதாக நினைத்து எப்படி வெட்டி விலகி விட முடியும்? மனித உறவுகளின் பொருட்டு, வாழ்வை முன்னமே தனது தனிப்பட்ட சிந்தனையின் வழியாக அணுகி எதன் சாரம் அதிக, நீட்டித்த இன்பத்தை வழங்குகிறது என்று உணர்ந்த தனது பெற்றோர்களின் ஒரு சில டச்'கள் இல்லாமலே எப்படி தான் தோன்றித் தனமாக இது போன்ற வளர்ந்த பிள்ளைகள் வாழ்ந்து காட்டி விட முடியும்?
எனவே, வளர்த்து விட்டபின் பெற்றோர்கள் சுத்தமாக எல்லாமே அவர்களுக்குத் தெரியும் என்று எந்த எதிர்பார்ப்புமில்லாமல் வாழ்கிறேன் பேர்வழி என்று ஒதுங்கி இருப்பதும் தவறு, இன்று இளைஞ(ஞி)னாக, தந்தையாக(தாய்) பொறுப்பெடுத்துக் கொண்டவர்களும் பெரியவர்களை ஒதுக்கித் தள்ளுவதும் தவறாகப் படுகிறது எனது பார்வையில். இது போன்ற பாடங்களை வழங்குவதிலும், பெற்றுக் கொள்வதிலும் எந்த விதமான எதிர்பார்ப்போ, குறுக்கீடோ இல்லையென்றே கருதத் தோன்றுகிறது.