Friday, December 21, 2007

தருமியின் நம்பிக்கையும் நம் இளைஞர்களும் - II

எனது முதல் பதிவில் சொல்லியிருந்தேன் என்னோட சொந்தக் கதைகளையும், என்னை சுத்தி நடந்தவைகளையும் விளாவாரியா பகிர்ந்துக்கிறேன்னு. யோவ், தெகா என்னாத்தையா புதுசா நீ வந்து சொல்லி பொலம்பப் போறேன்னு சொல்றீங்களா, உண்மைதான். நம்ம இயக்குனர் ஷங்கரும் எட்டுப் போடாம, அலுவலக பக்கத்திலேயே போகாம RTOலருந்து லைசன்ஸ் எப்படி வாங்கிறாங்கன்னு அங்கே நடக்கிற ஊழல்களை எடுத்துக் காட்டித்தானே அவரு தன் பையை நிரப்பினாரு. அதுக்காக, நமக்கெல்லாம் அங்கே என்ன நடக்குதுன்னு தெரியாதுன்னா பொருள்.

ஆனா, படத்தில ஒரு ஆளை வைச்சு அடிக்கிற மாதிரி காமிச்சவுடனே நாமளே அந்த குணச்சித்திரமா மாறி குத்தறதா, அடிக்கிறதா பார்த்து சிலாகித்துக் கொள்வதில்லையா? அதே மாதிரி, படத்துக் கதை இல்லாட்டியும் உங்க பக்கத்து வீட்டுக்காரன் பட்ட கஷ்டத்தை சொன்னா கேக்காம போயிடுவீங்களா என்ன? அந்த மாதிரி(அடுத்தவன் வீட்டுக் :-) கதைகளுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு இருக்கும் தானே.

வெளி நாட்டிலிருந்து வருகிற எவருக்கும் நம்மூர்ல பளிச்சின்னு தெரியற ஒரு விசயம் அலுவலங்களில் ஏதாவது ஒரு வேலை நடத்த வேண்டுமெனில் அங்கே இருக்கிற நிர்வாகச் சீர்கேடுகள், கட்டுப்பாடுகள், சில்லூண்டி அரசியல், சேம்போறித்தனம், அடிப்படை நாகரீகமற்றத்தன்மை இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். இதனூடாக மேலிடத்திலேயே அதாவது டெல்லியிலேயே அடி பட்டு நொந்து போனவர்களுக்கு எப்படி பிறகு வரும் நாளில் நாட்டினுள் பிரிதொரு இடங்களை சுத்திப் பார்க்கும் பொழுது நல்லெண்ணம் செழித்தோங்கப் போகிறது.

சேகரித்த அனுபவங்களை எப்படியாக அவர்கள் பின்னாலிள் தான் எழுதும் புத்தகங்களிலும் (உ.தா - லோன்லி ப்ளானட்), சுற்றுலா கட்டுரைகளிலும் வெளிப்படுத்தப் போகிறார்கள். இதற்கு ஒரு உதாரணமாக நான் பட்ட அனுபவத்தை, அவ் வெளி நாட்டவர்களுடன் நின்று பார்க்கும் சந்தர்பம் கிடைத்தது அதனைப் பற்றி சிறிது கூறுகிறேன்.

சிச்சுவேஷன் நெம்பர் ஒன். இடம்: டெல்லி. நான் வெளி நாட்டு கடவுச் சீட்டு வைத்திருப்பவன். இந்தியாவிற்கு நான் வந்து திருமணம் செய்ததால், என் கடவுச் சீட்டு வைத்திருக்கும் நாடு ஒரு நிபந்தனை இட்டது. அப்படி திருமணம் செய்து எனது மனைவியை இங்கு கொணர வேண்டுமெனில், நான் இந்தியாவில் 90 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து தங்கியிருந்ததற்கான சான்றிதழை பெற்று வழங்கினால், டெல்லியிலேயே உள்ள எம்பசியில் மனைவியின் விசாவிற்கு என்னால் மனு தாக்கல் செய்ய முடியுமென்று கூறினார்கள்.

சரி, என்னோட தங்கும் நாட்களும் அந்த 90 நாட்களை தழுவியே வந்ததால் இதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது அது தொடர்பான சான்றிதழ் ஒன்று வாங்கி, எம்பசிக்கு கொடுப்பதிலென்று அப்பாவியாக நம்பினேன். டெல்லியிலேயே உள்ள மத்திய தலைமை வெளியுறவுத் துறை அலுவலகத்திற்கு சென்றேன்; அங்கேதான் நான் பெற வேண்டிய ஒரு சான்றிதழ் வாங்க வேண்டுமென. அதாவது இந்த தேதியில் நான் இந்தியாவிற்கு வந்து இது நாள் வரையிலும் இங்கேதான் உள்ளேன், என்பதற்கென ஒரு கடிதம் அடித்து தரவேண்டும் அந்த அலுவலகலத்திலிருந்து.

விசாரித்து தெரிந்துகொண்ட பிறகு அந்த முகவரி அறிந்து கொண்டு ஆட்டோ வாலாக்களிடம் பதில் சொல்லி முடித்து வாசலில் வந்து இறங்கும் பொழுது காலை மணி 11 இருக்கும். அதற்குள்ளும் அங்கு கருப்பு, வெளுப்பு, மஞ்சள், வெள்ளை என்று அனைத்து நிறத்தவரும் அடிதடி நடப்பது போல ஒரு மூன்றடி வாசலுக்கு வெளியே குவிந்து கிடந்தார்கள். ஒரு வழியாக ஒரு சீக் மாமாவிடம் பல இடிபாடுகளுக்கிடையே அவரை கண்டெடுத்து ஒரு கேள்வி, ஒரே ஒரு கேள்வி கேட்பதற்கு முன்னாலேயே அவர் போயிட்டு நாளைக்கு வாங்க, இன்னிக்கு பார்க்கப் போறவங்களுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னவே டோக்கன் கொடுத்து முடிச்சாச்சி, நாளைக்கு வாங்கன்னுட்டார்.

அடப் போங்கப்பான்னு வெறுத்துப் போயி அங்கே நின்னுட்டு இருந்த இன்னொரு கனெடியன் குடியுரிமை பெற்ற இந்தியர்கிட்ட கொஞ்சம் நம்ம சூழ்நிலையை சொல்லி விசாரிச்சா அவர் கேட்டாரு ஒரு கேள்வி. நீங்க இன்னமும் இந்திய கடவுச் சீட்டை கையில வைச்சிருந்தா முதலில் அதனை கொண்டுபோய் இதனோட இன்னொரு கிளை அலுவலகத்தில ஒப்படைச்சிட்டு அங்கிருந்து அந்த ஒப்படைச்சிட்டதிற்கான நகலை இங்க கொண்டு வந்து காமிச்சாத்தான் உங்க கேசையே இந்த அலுவலகத்தில பார்ப்பாங்கன்னு 'நச்'சின்னு சொல்லிட்டார். ஆஹா, பெரிய தகவலாச்சேன்னு வாங்கிட்டு, அடுத்து அந்த கிளை அலுவல முகவரி வாங்கிட்டு அடுத்த நாள் அங்கே போனேங்க.

தெரிஞ்சுப் போச்சு நம்மளை மாதிரியே நிறைய பேரு இங்கே திரியறாங்க நாம மட்டும் ஒண்ணும் ஓவியமில்லன்னு. எதுக்கும் கொஞ்சம் சீக்கிரமாகவே போயிடுவோமின்னு காலையில 7 மணிக்கெல்லாம் அலுவலக வாயிலிள் போய் நின்னாச்சு. எங்களுக்கும் முன்னாலேயே அங்கே இன்னொரு பெரிய கூட்டம் கேட்டுக்குள் போட்டிருந்த ஒரு 20 இருக்கைகளை நிரப்பிட்டு உட்கார்ந்திருக்கு. அதுக்கு பிறகு வந்த நாங்க எல்லாம் வெளியிலே, குச்சியும், துப்பாக்கியும் வைச்சிட்டு நிக்கிற அந்த காவலாளிகள், கேட்டுக்கிட்ட நெருங்கிற ஆட்களை சலோ, சலோன்னு விரட்டிட்டு இருக்கார். கொஞ்சம் குலோஷ் அப்பில் பேசினவர்கிட்டயெல்லாம் என்னமோ சைகையில் இரண்டு விரல்களில் காமிச்சார்.

மணி ஓடிட்டே இருக்கு. நாங்களும் நிக்கிறோம். ஒவ்வொரு அலுவலக பணியாளரா ஆற அமர கையில் லஞ்ச் பேக்குடன் 11.30 மணி வரைக்கும் வந்திட்டே இருக்காங்க. யப்பா, இதெல்லாம் நடக்கிறது கும்மிடிப் பூண்டி வி.யூ.ஓ அலுவலகத்தில இல்லைங்க, மத்திய வெளியுறவுத் துறை அலுவலகத்தில, அதுவும் டெல்லியீல மறந்துடாதீங்க. நாங்க இப்ப வெளியில நின்ன காவலாளிக்கிட்ட சத்தம் போட ஆரம்பிச்சாச்சு, சத்தம் கேட்டு வெளியில டீ குடிக்க வந்த ஒரு அலுவலர், அட விடப்பா அவரன்னு சொல்லிட்டு போனார். சரி, தொலைங்கடான்னு வசுல் பண்ண முடியாததலா முறைச்சிக்கிட்டே உள்ளே விட்டார்.

முதலிள் தவறான கூண்டை நோக்கி படையெடுப்பு ஏன்னா, எதுக்கு எங்கே நிக்கணுங்கிற எந்த ஒரு தகவலுமில்லை. அரைமணி நேரம் அதில காலி. கடைசியில வியர்த்து கொட்டிக்கிட்டு இருந்த அந்த கூண்டாளியை கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டதில, நான் போக வேண்டிய இடம் இரண்டாவது மாடியாம்.

அங்கிருந்து நகர்ந்து அந்த அலுவலகத்துக்குள் போவதற்கு முன்னால், 'சுவற்றில்' ஒரு வாசகம் இங்கே லஞ்சம் யாராவது கேட்டால் 'எங்களிடம்' தெரிவியுங்களென்று :). அங்கே ஒருத்தர் இருந்தாரு, அவரு ஆமை வேகத்தில என்ன வேணுமின்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, நான் எங்கே போகணுமின்னு சொல்லி மேலே அனுப்பினார். அந்த அலுவலக அறை அப்படியே எனக்கு 10 வருஷத்திற்கு முன்னே படிச்ச ஆர்.கே. நாரயண் நாவல்களில் வரக் கூடிய அலுவலக அறைக் காட்சிகளான லொடக், லொடக் சத்தத்துடன் ஓடுகின்ற கரை படிந்த மின் விசிறிகள், உரிந்து காலாவதியாகிப் போய் தொங்குகிற சுவற்றுப் பூச்சுகள், பழுப்படித்து மங்கிப் போன காகிதக் கட்டுக்கள், அதற்கெலாம் மேலாக ஊழியர்களின் மன நிலையை கிரகித்துக் கொண்டு எதிரொலிக்கும் தூங்க மூஞ்சி சூழ்நிலையில் அமைந்திருக்கும் மொத்த அறை என அவர் விவரித்த காட்சிகள் அனைத்தும் என் கண் முன் விரிந்தது.

அங்கே சென்ற பொழுது அவ்வளவு பெரிய அறையில் மொத்தமே இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் ஒரு லோக்கல் மேகசினை கையில் பிடித்துக் கொண்டும், மற்றொருவர் மூஞ்சிக்கு முன்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தினசரியை பிடித்த வாக்கில் உள்ளே தூங்கினாரா இல்லை படித்துக் கொண்டிருந்தாரா அந்த சுவற்றுப் பல்லிக்கே வெளிச்சம் என்கிற நிலையில் இருந்தனர். நான் உள்ளே நுழைந்த கையோடு 'எச்சூஸ் மீ' என்று சற்றே உற்சாக குரலில் கத்தி வைக்க, முதலில் மேகசின்காரர் ஸ்லோ மோசனில் தலையை நிமிர்த்தி, என்னாவாம் என்பது போல ஒரு லுக் விட்டார், பாஸ்போர்டை காமித்து இதனை இங்கு ஒப்படைக்கணும் என்றேன்.

அதற்கு சார்! என்று கையில் பல்லி மட்டுமே பார்க்க அமர்ந்திருந்தவரை விளித்து உங்களைத்தான் பார்க்க வந்திருக்கார் என்றார். அவரும் மெதுவாக திரைச் சீலை விளக்கி எனக்கு காட்சியளித்ததுடன், ந்தோ பாரு நாலாவது டேபில் அங்க இருக்கிறவர்தான் இதனை பண்ணிக் கொடுப்பார் அவர் இன்னும் வரலை ஒரு மணி நேரம் கழிச்சி வந்து பாருன்னு, பாஸ்போர்ட்டை இங்கே வைச்சுட்டுப் போயிக்கன்னு சொல்லிட்டாரு. மணியப் பார்த்தா கிட்டத்தட்ட 10.30க்கும் மேலே யாரோ அந்தக் கடவுள் இன்னும் படியேறலை.

வெளியிலேயே உட்கார்ந்து ஈ'விரட்டிட்டு திரும்ப உள்ளே போய் பார்த்தா அந்த டைப் அடிக்கிற ஆள் வந்திருந்தார், நம்ம ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆள் சொல்லச் சொல்ல அவரு அடிக்கிறார் :). இதெல்லாம் என்னாது. சரி லூஸ்ல விடுன்னு, 6x12 இஞ்ச் சிங்கம் போட்ட முத்திரைத்தாளில் எழுதிக் கொடுத்துட்டாங்க ஒரு வழியா. முடிச்சுட்டு நேரத்தைப் பார்த்தா மணி 1.45.

இனிமே என்ன, நாளைக்கு படையெடுப்பு அடுத்த கிளை அலுவலகத்திற்கு... அங்கும் சொல்றேன் எப்படியெல்லாம் நம் மக்கள் efficientஆ வேலை பார்க்கிறாங்க அப்படின்னு, இப்ப வர்ட்டா...

Thursday, December 20, 2007

தருமியின் நம்பிக்கையும் நம் இளைஞர்களும் - I

ஓவ்வொரு முறையும் தருமி ஏதாவது புதிதாக கண்டுபிடித்து அதனை நம்மிடத்தே கொண்டு வந்து சேர்க்கும் கணம் தோறும், எனக்கு அவர் பொருட்டு உள்ள மரியாதை பண் மடங்கு உயர்கிறது. இந்த வயதிலும் அவருக்குள்ள நம்பிக்கை, அளவிற்கரிய!

அவர் இந்த தலைப்பில் "உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்" என்றதொரு நம்பிக்கையூட்டு பதிவிட்டிருக்கிறார். எல்லோரும் இதனை பயன் படுத்திப் பாருங்கள். எந்த அளவிற்கு நமது அரசாங்க இயந்திரம் செயல் படுகிறது என்பதனை கண் கூடாக காணலாம்.

அவர் அங்கு ஒரு சிறு குழந்தைக்கே உரிய மகிழ்ச்சியுடன், நம்பிக்கையூட்டுமிதத்தில் அப்பதிவை இயற்றிருந்தார். ஆனால், என்னுடைய பதிவு சற்றே அவ் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்தி அதிலிருந்து நழுவிச் செல்வதாக இருக்கலாம். அவர் பதிவிலேயே என்னூடைய பின்னூக்கியாக இப்படிச் சொல்லியிருந்தேன்...

...Thekkikattanதெகா said...

//அடிமேல் அடி வைத்துப் பார்ப்போமே என்ற நம்பிக்கைதான்; ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற ஆதங்கம்தான்.//

இந்த நம்பிக்கைங்கிற ஒரு விசயத்திற்கு மதிப்பளித்து எல்லோரும் செய்யணும். ஆனா பாருங்க தருமி, டெல்லியில இருக்கிற Ministry of External Affairs-அலுவலகத்துக்குள்ள நுழைய இன்னமும் நுழைவாயிலிள் நிற்கும் காவலாளிக்கு ரூ 200 அழுதாத்தான் உள்ளே விடுவேன்னு அடம் பிடிக்கிறது இன்னமும் நடக்குதே... இது ஒரு ஆறு மாசத்திற்கு முன்பு நடந்தது.இப்படி இருக்கும் பொழுது வெளிப்பகட்டிற்கென்று திட்டங்களை இயற்றிவிட்டு ஒன்றும் நடைபெறாமல் இருப்பதில் என்ன இருக்கிறது.

Wednesday, December 19, 2007 10:00:00 AM ...

அதற்கு மறுமொழியாக - நம்ம வவ்வால் நிசர்தனத்தை ஒப்புக் கொண்டு இப்படியும்...

வவ்வால் said...

தெகா,நீங்க எதுக்கு டெல்லி வரைக்கும் போறிங்க, இங்கே லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல போய் ஒரு கம்பிளெய்ண்ட் கொடுத்து முதல் தகவல் அறிக்கை வாங்க முடியாது காந்தி நோட்டு இல்லாம? அவன் குற்றவாளியைப்பிடித்து நமக்கு நிவாரணம் தருவது அடுத்த விஷயம்...


ஆனா, நம்ம டாக்டர் ...

delphine said...

தெகா மாதிரி ஆளுங்க காசு கொடுப்பதால்தானே லஞ்சம் தலைவிரித்தாடுகிறது?.. no hard feelings thekaa... but thats the truth!
Wednesday, December 19, 2007 10:21:00 AM ... இப்படியும்,

சர்வேயர் வந்து அடிச்சி இப்படியும் ...

SurveySan said...

எல்லாரும் எடுத்து எடுத்து கொடுத்துத்தான பழக்கப் படுத்தியிருக்கோம்? ஒரு ரெண்டு பேர் கொடுக்காம, உள்ள போய் புகார் கொடுத்துப் பாத்தா ப்ரச்சனை சரியாகியிருக்கும் ;)...
Wednesday, December 19, 2007 9:03:00 PM .

பாருங்க, தருமி அவரோட தரப்பு ஒரு விசயத்தை சொல்லிட்டு, இப்படியும் சொல்லியிருந்தார் ... தெக்ஸ் சொல்வது போல் எப்போதும் எங்கும் அப்படி நிமிர்ந்து நிற்க ஆசையாயிருந்தும் அது முடியுமான்னு தெரியாதுதான்... ஒரு அனுபவஸ்தர்ங்கிற முறையில.

அவைகளை எல்லாம் படிச்சிட்டு நான் சொல்லணுமின்னு நினைச்சு தள்ளி தள்ளிப் போட்டு வந்த விசயம் எப்பொழுதும் போலவே தருமியால் இன்னிக்கு இங்கே வந்து சொல்ல வேண்டியாதாப் போச்சுங்க. எல்லா, அடிக்கும் பதில் சொல்றமாதிரி அவர் பதிவுக்கே ஒரு பதில் எழுதினேன், ஆனா, சொல்றதுக்கு அம்பூட்டு இருக்கும் பொழுது ஒரு abstractஆக எழுதினா என்ன அதில இருந்து கிடைக்குமின்னு சொல்ல முடியாம அவர்கிட்ட பேசிட்டு இருக்கும் பொழுதே, சரி தருமி நான் தனிப் பதிவா போட்டு விடுகிறேன்னு சொல்லிட்டு இப்ப இங்க கொண்டாந்து இருக்கேன்.

அந்த பின்னூட்டம் இதுதான்... Thekkikattanதெகா said...
//நீங்க எதுக்கு டெல்லி வரைக்கும் போறிங்க, //


வவ்ஸ், நான் டெல்லியில இருந்து தொடங்கினத்துக்கு ஒரு காரணம் உண்டு. தலை அங்கேதானே இருக்கு. ஒரு திட்டம் உருவமெடுத்து, அதனை சர்வ தேச தரத்திற்கு இயக்கணுமின்னு நினைச்சு தொடங்கிற திட்டங்கள் அங்கேதானே தொடங்கி பிறகு மெல்ல, மெல்ல நிறமிழந்து, ஓடித்தேய்ந்து நமது வட்டத்திற்கும், ஒன்றியத்திற்கும் வந்தடைகிறது.இது இப்படியாக இருக்க, புல்லூருவிகள் அங்கேயே தலை விரித்தாட, இன்னும் கீழே வர, வர அடிப்படை அரசியல் நாகரீகமே தெரியாதவர்கள் எப்படி அதனை கையாளுவார்கள்?

//தெகா மாதிரி ஆளுங்க காசு கொடுப்பதால்தானே லஞ்சம் தலைவிரித்தாடுகிறது?//

டாக், நான் அங்கே லஞ்சம் கொடுத்தேன் என்று கூறவேயில்லையே. அப்படி நடந்ததை கண்ணால் பார்த்ததின் விளைவே இது.இந்த மினிஸ்ட்ரி விஷயமே, ஒன்றும் பெரிதாக அவர்களிடமிருந்து எதிர் பார்த்து சென்றதல்லவே, டாக், என்னூடைய இந்தியக் கடவுச்சீட்டை அவர்களிடம் ஒப்படைக்கத்தான் அங்கே சென்றேன்:-)).

கையூட்டுக்கு எதிர்ப்பாக புதுக்கோட்டை திருமண சர்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தன்று பட்டு வேஷ்டியும், கழுத்து மாலையுமாக நின்று தகராறு செய்து, மாவட்ட ஆட்சியரை சந்திக்க நான் தயார் என்று நின்ற காலம் என் கண் முன்னால் இன்று வந்து போகிறது... சரி விடுங்க என்னோட அனுபவத்தை தனிப் பதிவ போட்டுடுறேன் ;)...
Thursday, December 20, 2007 8:27:00 AM .

அடடே, நான் இன்னமும் சொல்ல வந்ததை சொல்ல வருவதற்கு முன்னால் இப்படி நீண்ண்டு கிட்டு போகுதே இந்தத் தொடர்... சரி, நான் எதனைப் பற்றிப் பேசப் போகிறேன் என்பதற்கு முன்னால், நம்மூரில் எந்த அளவிற்கு பணமும், செல்வாக்கும் கொடி கட்டி பறக்கிறது எல்லா நிலைகளிலும் என்ற உண்மையிருக்க, ஆனால், நாம் இன்னமும் இந்த இணையத்தின் மூலமாக ஒரு அரசாங்கத்தையே நடத்த ஆசைப்படுகிறோம் என்ற முரண்பாட்டுடன் நாம் எவ்வளவு தொலைவு போக வேண்டி உள்ளது என்பதனை இந்தப் "பெண்ணாகப் பிறந்தால் by இரா. முருகப்பன்" கட்டுரையைப் படித்தால் வெளிச்சம் போட்டு காமிக்கும், படிச்சிட்டு அப்படியே எல்லோரும் முடிந்தால் தருமி கொடுத்த தளத்தில் ஒரு கம்ளெயிண்ட் கடிதமும் அனுப்பி வையுங்க... கண்டிப்பாக நிறைய பேர் அந்த கட்டுரையை தவற விட்டுருப்பீங்க, அவசியம் படிங்க.

ஏன்னா, நான் பேசப் போற சின்ன சின்ன விசயங்களும் பெரிதாக மாறி பிறகு இதற்கு தொடர்புடையதாக மாறிப்போய் விடுகிறது... பாகம் இரண்டில நான் சந்தித்தவைகளை பகிர்ந்து கொள்கிறேன்...

Related Posts with Thumbnails