Sunday, January 24, 2021

பெரியாரின் பொருளடக்கம்: Periyar In A Nutshell!

நீங்களும் மனிதர்களாகி கொஞ்சமே சிந்திக்க ஆரம்பித்து இதில் ஏதாவது ஒன்றை தொட்டுப் பேசினாலும், வெறுக்கப்படுவீர்கள்.

பெரியார் என்ற மனிதரின் உள்ளடக்கம். 👇
1. இடஒதுக்கீடு,
2. பெண்ணுரிமை,
3. கைம்பெண் மறுமணம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு,
4. திருக்குறள் மாநாடு,
5. தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் எழுத்து சீரமைப்பு,
6. ஆங்கில மொழியின் அவசியம்,
7. மாநில உரிமைகள்,
8. சாதிய ஒழிப்பு,
9. சமூகநீதிக்காக கடைசி வரையிலும் பாடுபட்டது
10. சுயமரியாதை,
👉11. சனாதன கொள்கையை போட்டுடைத்தது,
12. ஹிந்தி மற்றும் சமஸ்கிருத எதிர்ப்பு.
இத்தனையும் இருக்கும் போது ஏன் பெரியார் "கடவுள் மறுப்பு. (#11)" மட்டுமே பேசினார்னு உருட்டுரானுங்க. அந்த அரசியல் புரிஞ்சிட்டா நீங்க வயசிக்கு வந்திட்டீர் என்று உணர்வீராக!

ட்ரம்ப் அரசவைக்கு பை : Joe Biden's Inauguration!

 "பன்முக கலாச்சாரம் என்பது மட்டுமே அமெரிக்கா அல்ல" - வெளியுறவுத் துறை அமைச்சர், மைக் பாம்பையோ. - செய்தி.

இவர் வெளியேறும் ட்ரம்பு அரசவை அமைச்சர். போறதுதான் போறேன் இந்தா வாங்கிக்கோன்னு அப்படி தன்னோட அக அழுக்கை அவிழ்த்து கொட்டிட்டு போயிருக்கார்.
...Secretary of State Mike Pompeo's tweet that multiculturalism “is not who America is," sent on his last full day at the State Department, infuriated American diplomats who described it as a final insult by the Trump administration...
இன்றும் சரி, அன்றும் சரி அமெரிக்காவை நவீன பொருளடக்கத்தில் "பன்முக கலாச்சாரங்கள் கூடி இரண்டர கலக்கும் (melting pot) நாடு" என்றளவில் தான் புரிந்து கொள்ள முடியும். என்னுடைய 25 ஆண்டு கால வாழ்க்கையில் அப்படியாகத்தான் இந்த நாட்டின் முகம் அறிமுகமாகி அதனை இன்றும் நுகர்ந்து வருகிறேன்.
அப்படியாக இந்த நாடு என்றும் துடிப்போடு இளமையாக இருக்கக் காரணம், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல விதமான எதிர்பார்ப்புகளோடு குடியேறும் மக்களுக்கு அவரவர்களுக்கான ஒரு வாழ்விடச் சூழலை வழங்கி தழுவிக் கொள்கிறது. அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களிலும் கூட பெரிதும் தலையிட்டு ஒரு தர்மசங்கடத்தில் தள்ளாமல், அடுத்தவர்களின் மூக்கை தட்டாதவரை ஒகே என்றே பார்த்து பண்புடன் நகருகிறது.
இதுவே இன்றையளவில் நவீன உலகின் நாகரீகக் கூரை எனக் கொள்ளலாம். எனக்கு முதன் முதலில் அறிமுகமான நகரம் நியூயார்க். வாரத்திற்கு இரண்டு நாட்கள் ப்ராடுவேயில் நடந்து திரியத்தக்கதொரு வாய்ப்பு. விதவிதமான மனிதர்கள், மொழிகள் என களைகட்டி பரபரப்பாக இருக்குமொரு இடம்.
ஆனால், அதற்குள்ளும் மைக், ட்ரம்ப் போன்ற மனிதர்களும் தங்களுக்கான வாய்ப்பை எதிர்பார்த்து உறங்கிக் கிடந்திருக்கிறார்கள். அமெரிக்கா என்பது இன்னொரு கிரகத்திற்கு மனிதகுலம் சென்று காலனி ஏற்றம் செய்தால், எப்படியொரு வாழ்வுமுறையை அமைத்துக் கொண்டு அனைவருக்கும் பொதுவான ஒரு அரசை கட்டியெழுப்பி , அங்கு வந்து சேரும் பிற வேற்றுகிரக இனத்தவரையும் அரவணைத்து வாழப் பழகும் ஒரு பயிற்சி கூடத்திற்கு ஒப்பானது.
இங்கு புதிதாக குடியேறிய மக்கள் அந்த அமெரிக்க ஸ்பிரிட்டை புரிந்து கொண்டு கலந்து விடுவது அனைவருக்கும் நல்லது. வெறுப்பில் பேசித் தெரியும் ட்ரம்பை ஒத்தவர்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவர். நம்பி ஏமாந்து சென்று விடாதீர்கள்.
**************************************

வெளியேறும் ட்ரம்ப் பதவியேற்கும் போது, அன்று வந்திருந்த கூட்டத்தின் எண்ணிக்கை கூட பெரியளவில் இல்லை. ஆனால், கூட்டுத்தொகையில் ஏதோ சூடு வைத்து அதீதப் படுத்தி இருந்ததாக நாளிதழ்கள் எழுதின. ஃபோட்டோஷாப்பை வைத்து ஓபாமா பதவியேற்பு விழாவிற்கு நெருக்கமாக கொண்டு வர முயற்சித்தார்கள்.
ஆனால், இன்று அவரின் கரிசனமற்ற, மக்களிடையே வெறுப்பை சம்பாதித்த நிலையில் வெளியேறும் நாளில் சி என் என், Trump departs Washington as a Pariah என்று தலைப்பிட்டு எழுதி இருக்கிறது (எவண்டா, இவிங்களுக்கு அந்தச் சொல்லின் அரசியல் வக்கிரம் புரியாமல் பயன்பாடு சொல்லிக் கொடுத்தது 🙄).
இந்த நிலையில் ஜோ பைடனின் பதவியேற்பு விழாவிற்கு ஹாலிவுட் பிரபலங்களும், பரந்த சிந்தனையாளர்களுமாகிய (லிபரல்ஸ்) டாம் ஹாங்க்ஸ், லேடி காகா, ஜெனிபர் லோபஸ் போன்றவர்கள் வரவேற்பு நிகழ்சி நடத்துகிறார்கள். இதனைக் கவனித்த ட்ரம்ப் தாங்கிக் கொள்ள முடியாமல் "கடுமையான கோபத்தில் உள்ளதாகத் தெரிகிறது."
... Donald Trump is furious that so many top celebrities, including Lady Gaga, Jennifer Lopez and Tom Hanks, are going to feature at president-elect Joe Biden’s inaugural celebrations on Wednesday, in stark contrast to his own event four years ago...
ட்ரம்ப் தனது 2005 மெலோனியாவுடனான திருமணத்தின் போது எல்டன் ஜான், பான் ஜோவி போன்ற பிரபலமான மேற்கத்திய இசை பாடகர்கள் சிறப்பிக்க வாழ்ந்து பார்த்தவர். 2016ல் ஆரம்பித்த அவருடைய அரசியல் அடாவடிகள் பிடிக்காமல், ஹாலிவுட் ஒதுங்கிக் கொண்டது.
இப்பொழுது அவரின் வெளியேற்றத்தை வெளிப்படையாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட தயாராகி விட்டது.

Saturday, January 09, 2021

கதம்ப நிகழ்வுகளும் என் எண்ணங்களும் - 1

மக்களாட்சி மீதான வன்முறையும் ட்ரம்பும்: A Failed Coup

இவிங்க எல்லாம் 1650களில் பல்லு விளக்காம கரையேறின பற்களோட, குளிக்காம அழுக்கா, கண்கள் எல்லாம் பஞ்சடைத்துப் போயி, குதிரை மேல ஏறி வழிப்பறி பண்ணிக்கிட்டு திரிவானுங்களே அந்த மாதிரி தங்களை கற்பனை செய்து கொண்ட கற்காலத்து எண்ண மனிதர்கள். வெளியுலகத்தோட தொடர்பே இல்லாம திடீர்னு ஜுமான்சி படத்தில சம்பந்தமே இல்லாத காலத்திய மனிதர்கள் நகரத்திற்குள் புகுந்து ஓடித் திரிவது போன்று ஒரு காட்சி வருமே, அது போல இருந்தது நேற்று பார்த்த காட்சிகள்.

நிறைய பிள்ளைகள் அதிர்ச்சியில் அழுததாகவும் செய்தி வந்தது. கூட்டத்தில்
இருந்தவர்கள் ஏதோ அவுட் ஆஃப் டைமிலிருந்து வந்தவர்களாக புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும், ஆனா, போலிஸ் பெப்பர் ஸ்பிரே அடித்து விட்டது என்றும் கேவிக் கேவி அழுது கொண்டே நடைய கட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் இருந்த எண்ணப்பாடுகளை ஒத்த மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். இந்தச் சிறிய கூட்டத்தின் உலகமே வேறையப்பா! 12 பேக் பியரும், ஒரு ஷாட் துப்பாக்கியும், கராஜ்க்குள் அமர்ந்து கவ்பாய் வாழ்க்கையை கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையற்ற ஒரு கூட்டமது. நல்ல புத்தியில் உள்ளவனுக்கு அங்கே வேலையில்லை. இது நவீன அமெரிக்க வானில் படர்ந்து மறைந்த ஓரங்க கோமாளி நாடகம்!
                                                            @@@@@@@@@@@
                                                                @@@@@@
மழைக்காடுகள் அழிப்பும் Xவைரஸ்களும்

மழைக்காடுகள் அழிக்கப் படுவதாலே, ஈபோலா போன்ற உயிர்கொல்லி வைரசுகள் விலங்குகளிலிருந்து மனிதனுக்கு தாவும் புதிய திரிபு வைரசுகளாகி தொற்றுகிறது என்கிறது புதிய வகை ஆராய்ச்சிகள்.
எப்படி?
காடுகள் அழிந்து அங்கு வாழும் விலங்குகள் அழியும் பொழுது நம் கூடவும் வாழப் பழகிய எலி, பூச்சி, கொசு போன்றவைகள் அந்த இடத்தை நிரப்பி வைரஸ்களை அங்கிருந்து நம்முடைய இடத்திற்கு நகர்த்துகிறது. இப்பொழுது ஈபோலா போல புது விதமான வைரஸ் ஒன்று மனிதக் கரை ஏறி இருப்பதாக செய்தி கசிந்திருக்கிறது. அதுவும் ஈபோலா வைரஸை கண்டறிந்து அறிவித்த அதே ஆராய்ச்சியாளர் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.
எனக்கு இந்தத் தொடர்பு படுத்தல் மிக்க பொருள் உள்ளதாகப் படுகிறது. நம்முடைய செயல்பாடுகளில் சுற்றுச் சூழலைப் பேணும் வாழ்க்கை முறையோடு மாற்றிக் கொள்ளவில்லை என்றால், இந்த நுண் கிருமிகளே மனித குலத்தை அச்சுருத்தும் பெரும் சவலாக அமையும்.
                                                        @@@@@@@@@@
                                                                @@@@@@

100% திரையரங்க நிரப்பல் கொரோனாவிற்கான சிவப்பு கம்பள விரிப்பு! உருமாறிய நுண்மின்னு அலறி தீர்த்தது ஊடகங்கள். இன்று திரையரங்களில் 100% நிரப்பலோட படம் பார்க்கலாங்கிறதிற்கு விளம்பரம்.

இப்படி அரசிற்கும் பொறுப்பில்ல, ஊடகங்களுக்கும் பொறுப்பில்லன்னா, மக்களா பார்த்து தங்களது உசிரையும், குடும்பத்தின் உசிரையும் காப்பாத்திக்கிட்டாத்தான் உண்டு. ஜஸ்ட் பூனை கண்ணை மூடிக்கிட்டதாலே உலகம் இருண்டுவிடுவதில்லை, என்பதற்கிணங்க பணப் பைத்தியங்கள் தங்களது சுயநலத்திற்காக எடுக்கும் முடிவுகளால் தொற்று ஒழிந்து விட்டது என்று முடிவிற்கு போகாதீர்கள் மக்களே!
இன்னும் கொரோனா என்கிற கத்தி நம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டுதான் உள்ளது. ஞாபகத்தில் நிறுத்தி ஒதுங்கியே இருங்க!

அமெரிக்க மக்களாட்சி உலகிற்குச் சொல்லும் செய்தி என்ன?

 மனிதனுக்கு புகழ் போதையும், கர்வமும் கூடவே கட்டற்ற அறியாமையும் ஒன்றித்து தனக்கு தகுதியற்ற அதிகாரமும் கிடைத்துப் போனால் என்னவாகும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அதிபர் ட்ரம்ப். இவர் உலகமே அன்னார்ந்து பார்க்குமிடத்தில் இருக்கும் இத்தனை பெரிய மக்களாட்சி அரசாங்கத்திற்கு அதிபரானது ஓர் விபத்து என்றால் மிகையாகாது.

கடந்த நான்கு ஆண்டுகளும் இவர் மைனாரிடிகள் பொருட்டு காட்டி வந்த வெறுப்பு என்பது சொல்லிலடங்காதது. பிறக்கும் போதே வாயில் வெள்ளி ஸ்பூனூடன் பிறந்ததாலோ என்னவோ பிற மனிதர்கள் பொருட்டான கரிசனம் என்பது மருந்துக் கூட இவரிடம் காண முடியாது.


இப்பொழுது தேர்தலில் தான் தோல்வியடைந்தாலும் அதனை நாகரீகமாக ஏற்றுக் கொண்டு நகரும் பண்பு இல்லாத குணத்தால், தான் ஏற்கெனவே ஊட்டி வைத்திருந்த நச்சுக் கூட்டத்திற்கு தூபம் போட்டு உலகமே பார்த்து சிரிக்கும் வகையில் ஒரு கூத்தை அரங்கேற்றி கோமாளி ஆகி நிற்கிறார் உலகரங்கில்.இவரின் பேச்சும் ரசனையும் கொஞ்ச கொஞ்சமாக ஊர்ப்புறம் வாழும் படிக்காத வெள்ளையினத்தவரையும், படித்திருந்தாலும் பிற இன மக்களின் மீது வெறுப்பை வைத்திருப்பவர்களுக்கும் மனதிற்கு நெருக்கமான மனிதராக்கிவிட்டிருந்தது. நான் வாழும் மாகாணத்தில் பார்க்க பண்பாடான மனிதராக இருக்கிறாரே என்று ட்ரம்ப் உதிர்க்கும் வார்த்தைகளை வைத்து, யேய், என்னப்பா இப்படியெல்லாம் பேசுகிறார் என்றால், அதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்பவர்களே அதிகம். அந்தளவிற்கு வெறுப்பு என்ற நச்சை ஊட்டி வந்தார்.

இது அமெரிக்காவிற்கான அவமானமாக நான் பார்க்கவில்லை. ஒரு முட்டாளின் ஆதி அந்தம் தெரியா தற்குறித்தனமான ஒருவரிடத்தில் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதையே காட்டக் கூடிய நிகழ்வாகப் பார்க்கிறேன். அந்த இடம் தாமஸ் ஜெஃப்பர்சன், லிங்கன், ரோசவெல்ட், கென்னடி போன்ற சிறந்த மனிதர்கள் வந்து போன இடம், இன்று இப்படி ஒரு மனிதர் அந்த இடத்தை கடந்து சென்றிருக்கிறார்.

ட்ரம்ப் அடித்த அத்தனை அலுச்சாட்டியத்தையும் இவருக்கு முன்னால் வந்து போன
அந்த மனிதர்களின் மாண்பே மக்களாட்சியின் பொருளை காப்பாற்றி இன்று கரை சேர்த்திருக்கிறது. இதுவே உலகத்திற்கு அமெரிக்காவின் ஓர் ஒழுங்குடன் ஒழுகும் டெமாக்ரசி சொல்லும் செய்தி!

இதுவே ஒரு நாள் இந்தியாவிற்கும் டெஸ்டிங் டைமாக வரலாம். இப்பொழுது அந்த திசையை நோக்கித் தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். நல்வாய்ப்பாக அமெரிக்காவின் ஊடகங்களும், நீதித் துறையும் இந்திய அளவிற்கு சிதைந்து போய் விடாமல் இருந்ததால் இன்று அமெரிக்க டெமாக்ரசி மிக்க சேதாரமில்லாமல் மீட்டெடுக்கப்பட்டுக் கொண்டுள்ளது.

ஆனால், நம் நாட்டில் அதற்கும் வாய்ப்பில்லை. இருண்ட காலம் நமக்கு முன்னால் காத்திருக்கிறது. மீட்டெடுப்பு என்பது மற்றுமொரு சுதந்திர போராட்ட நிகழ்வைக் காட்டிலும் மிக்க உழைப்பை கோரி நிற்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

Related Posts with Thumbnails