படைத்த கடவுளுக்கு தொழில் சுத்தமாக படைக்கத் தெரியாதா? பறக்கத் தெரியாத பறவைக்கு இறக்கைகள் எதற்கு? வாலில்லாம வாழப் போற நமக்கு எதற்கு வால் எலும்பு? புல்லு, பூண்டு, இலை, தழை, கொடி சாப்பிடாம இருக்கப் போற நமக்கு குடல்வால் எதற்கு? வாங்க படைத்தவனை கூண்டுல நிப்பாட்டி கேள்வி கேட்போம்.
படிமலர்ச்சி நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறக்கிறது என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?
எப்பொழுதாவது எண்ணிப்பார்த்திருக்கீர்களா ஏன் கோழிக்கும், மயிலுக்கும்,
ஆஸ்ட்ரிச்சிற்கும் இறக்கைகள் இருந்தாலும் அவைகள் நீண்ட தூரம் பறக்க உதவுதில்லைன்னு? அதிலும் குறிப்பாக தீவுகளில் வாழும் பல பறவையினங்கள் நில வாழ்வன வகைகளாகத்தான் இருக்கிறது. ஏன் அப்படி? தான் சார்ந்து வாழும் சுற்றுப்புறச் சுழலுக்கு தகுந்த மாதிரிதான் உயிரினங்களின் படிமலர்ச்சி அமைகிறது என்று பார்த்தோம்.
அவ்வாறான தீவுப் பறவை வகைளுக்கு மரங்கள் அதிகமாக இருக்கக் கூடிய வாழ்விடமோ, அங்கு ஆபத்து அதிகமில்லாத பகுதியாகவோ இருந்து போவதால் நாள் போக அவைகளுக்கான பறக்கும் மரபியல் பண்பு தேவையற்றதாகிறது. அந்தப் பின்னணியில் உயிரினங்களின் வாழ்விடத் தேவைகள் பொருட்டே தன்னுடைய இருத்தலை நிலை நிறுத்திக் கொள்ள மரபணுப் பிறழ்ச்சியின் (genetic mutation) ஊடாக சிறப்பியல்புகளை பெற்றும், இழந்தும் அடுத்த நிலைக்கு நகர்கிறது.
நிலத்தில் வாழும் பறவையான ஆஸ்ட்ரிச் ஓடும் பொழுது கவனித்தீர்களேயானால் தன்னை சமநிலைப் படுத்திக் கொள்ள இறக்கைகளை விரித்தவாறே விரைந்து ஓடும். அது போலவே பென்குயின்களுக்கு இறக்கைகள் இருக்கிறது, ஆனால், அதனை தண்ணீருக்குள் அதி விரைவில் நீந்தும் தன்மை கொண்டதாக பயன்படுத்துகிறது. இது ஒரு புறம் என்றால் நமக்கும், திமிங்கிலத்திற்கும் மூதாதைகளால் பயன்பாட்டில் இருந்து வந்த பல (பாக) உறுப்புகள் இப்பொழுது சான்றுறுப்புகளாக (Vegtigial) மட்டுமே இருந்து வருகிறது.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் திமிங்கிலங்கள் நான்கு கால்களை கொண்ட தரைவாழ் விலங்கிலிருந்துதான் படிமலர்ச்சி அடைந்தது என்பதின் எச்சமாக பின்னங்கால்களும், இடுப்பெலும்பும் முற்றிலும் வளர்ச்சியுறா நிலையில் உடலின் உள்ளாகவே ஏதோ நிலையில் இருந்து விடுகிறது. அது போலவே நம்முடைய தூரத்து உறவுகளான குரங்குகளிருந்துதான் நாம் படிமலர்ச்சியடைந்தோம் என்பதனை சான்றளிக்க குடல்வாலும் (appendix), வால் எலும்பும் (tail bone) முழுமையடையா நிலையில் சான்றுறுப்பாக இருக்கிறது. குடல்வால் நம்முடைய தூஊஊரத்து சொந்தக்காரய்ங்களான இலை சாப்பிடும் குரங்களில் செல்லுலோசை செரிப்பதற்கென வாழும் பாக்டீரியாக்களை கொண்ட குடல் பகுதியாக இருந்திருக்கிறது. இப்பொழுது நமக்கு அது தேவையற்ற ஓர் ஆணி.
இன்னும் ஒரு படி மேலே சென்று திடுக்கென அந்த முழு வளர்ச்சியடையா சான்றுறுப்புகள் ஒரு சிலரில் மட்டும், குறிப்பிட்ட மரபணுக்கள் பழைய நினைவிலிருந்து உயிர் பெற்று புற உறுப்புகளாக வளர ஆரம்பித்து விடுவதும் உண்டு. மனித குழந்தைகளில் வாலுடன் பிறப்பது, ஒவ்வொரு 500 திமிங்கிலங்களில் ஒரு திமிங்கிலம் பின்னங்கால்களுடன் வெளிப்புறமாக வளர்ந்த நிலையில் பிறப்பது இவையெல்லாம் அதில் அடங்கும்; இந்த நிலை, மீளுறுப்பு (Atavism) என்றயறிப்படுகிறது.
இவைகளெல்லாம் எதனை நோக்கி நம் கவனத்தைக் கோரி நிற்கிறது? கடவுள்தான் இந்த
உலகத்தை, உயிரினத்தை படைத்தான் என்றால் ஏன் இது போன்று விட்டக் குறை தொட்ட குறை உறுப்புகளை ஒன்றிற்கு மற்றொன்று தொடர்பில்லாத இனங்களிலும் வைத்து படைக்க வேண்டும்? ஏன் படைத்தவனுக்கு சுத்தமாக எந்த கோளாறுகளும் இல்லாமல் படைக்கத் தெரியாதா?
விசயம் அதுவல்ல. படிமலர்ச்சியில் மரபணு பிறழ்வின் போது தேவையானதை அடுத்தக் கட்ட இயற்கை தேர்ந்தெடுப்பின் (Natural Selection) போது ஆதரித்தும், தேவையற்றதை ஊக்கப்படுத்தாமலும் எடுத்துச் செல்கிறது. அவ்வாறு தேவையற்ற மரபணு பண்புகள் முற்றும் முழுதாக நம்முடைய செல்களிலிருந்து துடைத்தழிக்கப்படுவது கிடையாது. செயல்பாட்டில் உள்ளதாகவும், அற்றதாகவும் சில புரதப் பொருட்களால் தூண்டப்படுகிறது. செயல்பாட்டில் இல்லாமல் இருக்கும் அது போன்ற மரபணுக்களை போலி மரபணு (psuedogene) என்கிறார்கள்.
நவீன மரபணு ஆராய்ச்சி முன்னேற்றத்தில் இன்று நாம் கிட்டத்தட்ட நம்முடைய அனைத்து மரபணுக்களையும் அதன் பண்புகளையும் வரைவாக கண்டறிந்திருக்கிறோம். அதில் கிட்டத்தட்ட 3000ம் வகையான மரபணுக்கள் இறந்த மரபணுக்களாக இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். எலிகளில் இருக்கின்ற நுகர்வாற்றல் (Olfactory receptor) நம்மை விட பலப்பல மடங்கு அதிகம். ஆனால், அந்தப் பண்பு நம்மில் மிகக் குறைவு. ஏன் அப்படி? எலிகளுக்கு இரையை, நெருங்கி வரும் ஆபத்தை, இணையை கண்டறிவதில் மிகை நுகவுணர்வு உதவுகிறது. அதே அளவில் நமக்கு தேவையற்றதாகுகிறது. ஏனெனில் நாம் நம்முடைய பார்வையை அதிகளவில் நம்பி இருப்பதால் அதீத நுகர்ச்சி பண்பு சுமையாக அமைகிறது.
சரி உபரியாக அது போன்ற பண்புகளை வைத்துக் கொண்டால் தான் என்ன? என்று ஒரு கேள்வி வரலாம். உதாரணமாக குகைகளில் உள்ள நீர்நிலைகளில் வாழும் மீன்களுக்கு கண்கள் தேவையற்றது. கண்கள் இருந்தால் அதனை பயன்படுத்தப் போவது இல்லை என்றாலும் பாதுகாக்க வேண்டும். அதனை மேலாண்மை செய்ய சக்தி தேவை. இப்படி பல ஆணிகள். எனவேதான் காலப்போக்கில் அது போன்ற மரபணுக்களை செயலற்றதாகவோ, அல்லது மரணித்த நிலையிலேயோ படி எடுக்கப்படுகிறது. இருப்பினும் நமக்கு விட்டுச் செல்லும் ஒரு மரபணு சார்ந்த படிமலர்ச்சி சுவடுகள் இவை.
இதற்கு மேலும் படிமலர்ச்சிக் கோட்பாடு ஒரு பிதற்றல் எனக் கூற முடியுமா?
Ref: Why Evolution Is True by Jerry A. Coyne
Photo Courtesy: Net
0 comments:
Post a Comment