Sunday, August 30, 2020

மீன்கள் நடந்தனவா ஓர் படிமலர்ச்சிப் பார்வை! :Part 1



குரங்கையும் நம்மையும் பக்கம் பக்கமா வைச்சுப் பார்த்திங்கன்னா இரண்டு பேருக்கும் உடல் புற உறுப்புகளின் அமைவு ரீதியாக எந்த விதமான வித்தியாசங்களும் இருக்காது. ஏன் ஆடு மாடுகளுக்கே கூட ஒரே விசயம்தான், இல்லையா? எப்பொழுதாவது எண்ணிப் பார்த்திருக்கீங்களா என்ன பெரிசா நாம மட்டும் பொதக்டீர்னு வானத்திலிருந்து குதித்து வந்து சிறப்பு வாய்ந்த ஒரு பாலூட்டி இனமான மனிதனாகி விட்டோமென்று?
ஒரிரு விசயத்தில நாம அவைகளை காட்டிலும் படிமலர்ச்சியில அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து கொண்டோம். இரண்டு கால்களில் எழுந்து நின்றது, சிந்திப்பது மற்றும் சிக்கலான சொற்களைக் கொண்டு பேசுவது. ஏனைய விசயங்கள் அனைத்தும் நமக்கும் மற்ற பாலூட்டிகளுக்கும் ஒன்றுதான்; கைகள், கால்கள், காதுகள், கண்கள், மூக்கு, வாய், ஆசன வாய், இனப்பெருக்க உறுப்புகள் இத்தியாதி இத்தியாதி...
அப்படி என்றால் எப்படி இது போன்றதொரு ஒத்திசைவுன்னு கேட்கத் தோன்றும் இல்லையா. இதில வாலில்லா குரங்கிற்கும் நமக்கும் ரொம்பவே ஒப்புமையில் நெருங்கி வருவோம். இருப்பினும் அவைகள் முழுதாக மனித நிலையை எட்டாமலும் இருக்கிறது.
இங்கேதான் மனிதன் ஆதிக் குரங்கிலிருந்து வந்தான் என்றால் இடைப்பட்ட (transitional) குரங்கு இப்பொழுது எங்கே என்று கேட்பீர்கள். படிமலர்ச்சி அடைவது என்பது இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது, நுண்ணிய (micro) மற்றும் பெரியளவில் (macro).
இப்போ தண்ணீருக்குள் மட்டுமே வாழ்ந்த முதுகெலும்பு உடைய மீன் எப்படி நீர் நில வாழ்வனவாக (amphibian) படிமலர்ச்சி அடைந்த பொழுது, இடைபட்ட இனம் என்னவெல்லாம் மாற்றமடைந்தது என்பதனைக் கொண்டு நாம் எப்படி இந்த நிலைக்கு வந்து சேர்ந்தோம்னு ஒரு சிறு உதாரணத்தோடு பார்ப்போம்.
மீன்களின் மண்டை, கழுத்தே இல்லாமல் நேரடியாக முதுகெலும்போடு இணைக்கப்பட்டிருக்கும். விலா எலும்புகளும் பெரிய அளவில் ஒரு கூட்டையொத்த அமைவில் இல்லாமல் ஓடியிருக்கும். மேலும் தண்ணீரில் சுவாசிப்பெதற்கென செதில்களை கொண்டிருக்கும், இல்லையா? இவை மூன்றிலும் சுமார் 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்த மீன் இனங்களில் சில மாற்றங்கள் உண்டாக ஆரம்பித்தது.
அதாவது நீரில் இருந்து வெளியேறி ஒரு குட்டையை விட்டு இன்னொரு குட்டைக்கு தாவி ஏறி முறையான நான்கு கால்களைப் பெறாமலேயே முன், பின் துடுப்புகளில் இன்றைய நம் கால், கைகளுக்கு பயன்படுத்தப் போகும் அதே எலும்புகளை மெல்ல மெல்ல படிமலர்ச்சியுனூடாகப் பெற்று வெளிக்கிட விடிந்தது, நீர் நில வாழ்வனவற்றின் முன்னோடி.
அந்த டிக்டாலிக் ரோஸியே (Tiktaalik roseae) என்ற இணைப்பு மீன் இனம் (missing link spp) மட்டும் அந்த ஆபத்தான விளையாட்டை மேற்கொள்ளவில்லை என்றால் நமக்கு கிடைத்த கால், கைகள் கிடைத்திருக்காது. ஏன்னா, அந்த மீனின் கால்களையொத்த துடுப்பில் இருந்த அடிப்படை எலும்பமைவே இன்று இன்னும் நுட்பமான முறையில், நீண்டு ஒடுங்கியென நம்முடைய கை, கால்களில் இருக்கும் அதே எண்ணிக்கையிலான எலும்புகளுமாகும். எத்தனை விந்தையான விசயம்?
இப்படித்தான் படிப்படியாக காலங்கள் தோறும் முயற்சியே திருவினையாக்கும் என்றளவில் உயிரினங்கள் யாவும் படிமலர்ச்சியடைந்ததின் உண்மை.
கீழ்கண்ட புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிக்க வாசிக்க ஆர்வமூட்டக் கூடிய பகுதியை கடக்கும் போது பகிர்ந்து கொள்கிறேன்.
Ref: Why Evolution Is True by Jerry A Coyne







0 comments:

Related Posts with Thumbnails