தரையில் வாழும் மீன்களைப் பற்றி இரண்டு பதிவிற்கு முன்பு பேசினோம். அவ்வளவு முயற்சி செய்து பல மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கிட்டு தத்தி தவழ்ந்து கரையேறி நீர்நில வாழ்வனவாக படிமலர்ச்சி அடைந்து பிறகு, ஊர்வனவாக ஊர்ந்து டைனோசர்களாகி அதிலிருந்த படியே சிலவை சிறகுகளைப் பெற்று வானத்தில் மிதக்கும் பறவைகளாகின என்றறிந்தோம் (see previous post--> டைனோசர் பறவையான கதை: Part 2).
குளிர் இரத்த உயிரினங்களாகிய ஊர்வனவைகள் பறவைகளாக படிமலர்ச்சி அடைவதற்கான இடைப்பட்ட காலத்தில் பகுதி வெப்ப இரத்தப் (warm blooded) உயிரினங்களாகி, சிறகுகளுக்குத் தேவைப்படும் முடியையும் பெற ஆரம்பித்திருந்தது. சுமாருக்கு 340 மில்லியன் ஆண்டு வாக்கில் ஊர்வன-பறவை இனத்திற்கும் இடைப்பட்ட நிலையிலிருந்த எட்டு அங்குல நீளமுள்ள ஓர் ஊர்வன உயிரினமே முதல் பாலூட்டிக்கான மூதாதை. அது அனேகமாக ஓர் எலியையொத்த பூமிக்கடியில் வாழும் பாலூட்டியாக இருந்திருக்கக் கூடும்.
அதிலிருந்து கிளைத்து பன்முகத்தன்மையோடு பல்கிப் பெருகிய பாலூட்டிகளில் சில
இனங்கள் மீண்டும் தண்ணீருக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது ஏன் என்பதேஇன்றையப் பதிவு. தண்ணீருக்குள் வாழும் பாலூட்டிகள் என்றவுடனே நமக்கு நினைவில் வருபவை திமிங்கலங்கள், டால்பின்கள், கடல்சிங்கம், வால்ரஸ் கடல்பசுக்கள். இவைகள் நிலப்பகுதியில் வாழ்ந்தவைதான் என்றாலும் தண்ணீருக்குள் சென்று வாழப்பழகியது என்பதற்கு என்ன சான்று. அதற்கு நாம உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய விலங்கு, நமக்கு ரொம்ப அறிமுகமான நீர்யானை (hippopotamus - hippopotamus amphibius).
இவைகள் பெரும்பகுதியான நேரம் தண்ணீருக்குள்தான் வாழ்கிறது. அதாவது மூக்கையும், கண்ககளையும் மட்டும் தண்ணீர் மட்டத்திற்கு மேல் வைத்துக் கொண்டே அப்படியே தண்ணீருக்குள்ளரயே கிடக்கும் (அட நம்ம எருமை மாடே அப்படித்தானே!). அதற்கென அதோட மூக்கையும், கண்களையும் கவனிங்க எவ்வளவு அழக தண்ணீரில் வாழ்வதற்கான தகவமைவை பெற்றிருக்கிறது என்பது விளங்கும். அது மட்டுமல்ல அவைகள் தண்ணீருக்குள்ளாகவே இனப்பெருக்கத்தையும் செய்கிறது. அதற்குத் தேவையான முழுமையான உணவு மட்டும் அங்கேயே கிடைத்திருந்தால் நிலப்பரப்பிற்கு வந்து மேய்ச்சல் செய்யும் தேவையே இல்லாமல் போயிருக்கக் கூடும்.
இந்தப் பின்னணியில் திமிங்கலங்களின் மூதாதைகளை வைத்துப் பார்த்தால், அவைகள் (ஒட்டகத்தையொத்த) குளம்பிகளைக் கொண்ட தாவர உண்ணிகளாகத்தான் இருந்திருக்கிறது என்பது புலனாகும். 52 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இன்டுஹையஸ் (Indohyus) என்ற ஒரு தாவர உண்ணி ஓப்பீட்டுளவில் சிறிய மானளவு கொண்ட குளம்பியொன்று தண்ணீரையொட்டியப் பகுதியில் பாதுகாப்பிற்கெனவும், உணவிற்காகவும் திரிந்து கொண்டு, நிலப்பகுதிக்கும் சென்று உண்டு வாழ்ந்திருக்கிறது. அதனுடைய எலும்பு மற்ற பாலூட்டிகளைக் காட்டிலும் அடர்வானதாக இருந்திருக்கிறது. ஏன் அப்படி பருமனுடன் இருந்திருக்க வேண்டும்; நீரில் மூழ்கும் போது மிதந்து விடாமல் இருக்க. பற்களில் ஐசோடோப் சோதனை செய்து பார்க்கும் பொழுது நீரில் உள்ள பிராணவாயுவை உட்கிரகிக்கும் திறனுடனும் இருப்பது தெரியவந்தது.
திமிங்கலமாக அந்த இன்டுஹயஸ் தாண்டியது கால் கிணறு. அதற்கு அடுத்து 50
மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு படிமலர்ச்சியில் வந்த ஆம்புலோசெடஸ் (ambulocetus) என்ற இடைப்பட்ட இனம் கிட்டத்தட்ட முன்னேறி திமிங்கலம் பக்கத்தில் வந்தாலும் இன்னும் நான்கு கால்கள் அதில குளம்புகளோட இருக்கிறது. அதனை வைத்துக் கொண்டு இன்றைய சீல்கள் மாதிரி தரைக்கு வந்து தவழ்ந்து திரிந்து கொண்டிருக்கிறது.
அதிலிருந்து மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னால் வந்த இனமான ரோதோசெடஸ் (rodhocetus) இன்னும் நுட்பமான உறுப்புகளைப் பெறுகிறது; நீண்ட மண்டையோட்டையும், மூக்குத்துளைகள் இன்னும் பின்னாடி நகர்ந்தும் தகவமைவு கொள்கிறது. இருப்பினும் 50 அடி நீளமுடைய ஒரு விலங்கு அத்தனை எடையைத் தூக்கிக் கொண்டு சிறிய இரண்டு முன்னங்கால்களையும், மாற்றமடைந்த இடுப்பு எலும்பையும் கொண்டிருந்ததால் நிலத்தில் நடக்கவே வாய்ப்பற்று முழுதுமாக தண்ணீரில் இருக்கும் நிலைக்கு போனது.
சரி, ஏன் அவைகள் தண்ணீரைத் தேடி சென்றிருக்க வேண்டும்? நிலத்திலும், தண்ணீரிலும் வாழ்ந்த பெரும் பெரும் டைனோசர்கள் மாண்டழிந்த நிலையில் பின்னால் வரும் விலங்குகளுக்கு உணவிற்கோ, தங்களது பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தல் இல்லை எனும் நிலை வருகிறது. அங்கு புதுவிதமான வாழ்விடம் (ecological niche) அவைகளுக்கு முன்னால் பரந்து விரிந்து கிடக்கிறது. அந்த நிலையில் படிமலர்ச்சியில் சிறு சிறு மரபணு மாற்றங்களின் (mutation) மூலமாக வேகமெடுத்து, புதிய வாழ்விடங்களை நிரப்பிக்குள்ளும் நிலைக்கு விலங்கினங்கள் தள்ளப்படும். அப்படியாகத்தான் தாவர உண்ணியாக கரையோரத்தில் நடந்து திரிந்த ஒரு குளம்பி பிற்காலத்தில் திமிங்கலமாக நமக்கு காணக்கிடைத்தது. ஏன்னா, நவீன திமிங்கலம் ஒரு பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடியே தான் முழுமையடைந்ததாம்.
Ref: Why Evolution Is True by Jerry A. Coyne