Friday, March 15, 2019

வெறுப்பின் எச்சமே அழிவு: Hatred Is Self-destruction


நியூசிலண்ட்ல இரு வேறு துப்பாக்கிசூடுகள். ஆனா, இரண்டிற்கும் அடிப்படை காரணம் ஒன்றே. அது வெறுப்பு! மனித மனம் எப்போதும் எதிர்மறை எண்ணங்களின் மீது அதீதமான பிடிப்பு உள்ளதைப் போல நடிக்கும். இருப்பினும் ஓர் ஓரத்தில் நம்முடைய எதிர் முனையில் இருக்கும் நேர்மறை நாட்டாமையின் மீது கண் வைத்தவாரே, முதலில் அது ஒரு சிறு உவப்பு இல்லாத விசயத்தை செய்து பார்க்கும்.
நாம் உடனே விழித்துக் கொண்டு அதட்டி அது இருக்க வேண்டிய இடத்தில் சுருட்டி அமர வைத்து விட்டால் விளைச்சல் நிலத்தில் ஊடுருவும் களைகள் பெருகி பயிரின் விளைவு குறைவாகிவிடுவதைப் போல குறைந்து விடும்.
தவிர்த்து, எதிர்மறை எண்ணங்களை தொடர்ந்து கேட்டும், பார்த்தும் தவறான வாசிப்புகளும் செய்து வந்தால் அது காட்டுத்தீ போல மட்டுக்குள் கொண்டு வர முடியாத வாக்கில் வளர்ந்து காடு, மேடு, பள்ளம், குழந்தை, முதியோர், நான், நீங்கன்னு பார்க்காம எல்லாரையும் அழித்து விடும்.
இந்த ஐந்து வருட ஆட்சியில் இந்தியா முழுமைக்கும் வெறுப்பு விதைக்கப்பட்டு மெதுவா அது அனைவர் புத்தியிலும் ஊடுருவச் செய்யப்பட்டிருக்கிறது. அது கொளுந்து விட்டு எரிந்து வாழும் வீட்டையே எரித்து சாம்பாலாக்கிக் கொள்வதற்கு முன்னால் விழித்துக் கொண்டால் அனைவருக்கும் நலம்.
இந்த வெறுப்பு, தூய்மை வாதம் பேச வைக்கிறது. குறுகிய சாளரங்களை திறந்து விடுகிறது. அவன் வடுகன், முஸ்லீம், க்ரிஸ்டியன், தாழ்த்தப்பட்ட சாதி என்று இல்லாத ஒன்றை வைத்து அடையாளப் படுத்தி குறுக்கிக்கொள்ளச் செய்கிறது. இன்று ஒரு குழுவை, ஓர் அடையாளப்படுத்தி அவனை அதற்குள் குறுக்கும் அதே மனது நாளை வேறொரு குழுவை இன்னொரு பாட்டிலிலுக்குள் அடைத்துப் பார்க்காது என்று என்ன நிச்சயம்.
நான் தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொண்டே இரவோடு இரவாக தங்களை தற்காப்பு செய்து கொள்வதற்குக் கூட ஆற்றல் இல்லாத ஒரு தாயையும், இரண்டு குழந்தைகளையும் இரத்தச் சகதியில் வெட்டிப் போட்டு விட்டு தலை மறைவாகி விடுபவர்களும் அதே தமிழர்கள் தான். காரணம் உயர் சாதியாம், அவர்கள் தாழ்ந்த சாதியாம். இந்த லட்சணக் கட்டையில் அரசாட்சியை அவர்கள் கையில் கொடுத்து விட்டால் அனைவரும் ஒரே இரவில் ஒரு தாய் பிள்ளைகளாக ஆகி விடுவார்களாம். இதெல்லாம் என்ன மாதிரியான கதை?
பெரியாரும் வந்தேறி, கலைஞரும் வந்தேறி, சு. வெங்கடேசனும் வந்தேறி என்றால் நீ மட்டும் அப்போ யாரு? நீ உன்னுடய நிலப்பரப்பையும் அடையாளத்தையும் குறுக்கக் குறுக்க உன்னுடய இருப்பையே கேள்வி குறியாக்கி விடும் இயற்கையே அது தெரியுமா உனக்கு. வனத்தில் பரந்து விரிந்த காடுகளில் மட்டுமே ஆரோக்கியமான வழியில் பல்லுயிர் பேணல் நடந்தேறுகிறது.
இலங்கையில் நடந்த இனப்போரை காரணம் காட்டுகிறார்கள். அதற்கு பின்னான வரலாற்று சூழ்ச்சி அறிவாயா? அதே பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் நீ சாதிப் பெருமை பேசி வடுகன், வந்தேறி என்று உன்னுடைய இனத்தின் அடையாளத்தையே குறுக்கி அதே பாதையில் செல்லத் துணிகிறாயா? நீ யாருக்கு இரையாகிக் கொண்டிருக்கிறாய் என்று சற்று நிதானித்துப் பார் உண்மை விளங்கும்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதுதான் நம்முடைய மந்தை கூட்டத்திற்கு நடந்தேறுவது. கூட்டத்தை சிதறடித்தால் வேட்டையாடும் ஊண் உண்ணிக்கு வேட்டையாடல் எளிது. எளிய மூளை உடனடி பயன்பாட்டினை எண்ணித் திளைக்கிறது. திறனுடைய மூளை நீண்ட கால அறுவடையின் மீது கண் வைக்கிறது. நீ யாராக இருக்க வேண்டும்?
ஒரு ஜனநாயகத்திற்கு சீமான், வேல்முருகன் போன்றவர்கள் பேசும் அரசியலும் தேவைதான். அது சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள பயன்படுத்தும் ஊறுகாய் அளவோட நிப்பாட்டிக் கொள்வது நல்லது. மிஞ்சினால் நஞ்சாகி, ஓர் இலங்கைப் போரைப் போன்று வீட்டிற்கே வரவழைத்து கொள்ளும் அனைத்து சாத்தியங்களையும் கொண்டது என்பதை உணருங்கள்.
பெரிய எண்ணங்களை, வெறுப்பை விதைவிக்காத, நிதானமாக நின்று முடிவெடுக்கும் மனித மாண்பு போற்றுபவர்களை தேர்ந்தெடுங்கள். எல்லாவற்றிற்கும் தெருவில் நின்று போராட்டம் நடத்தும் நிலையிலிருந்து மாறி, பதட்டமான சூழலிலிருந்து வெளிவந்து அனைவரும் மென்மேலும் ஒரு மகிழ்வான சமூதாயத்தை பெற்று வாழ்க்கை அமைதியாக நகர அது வழி நடத்தும்.

Saturday, March 02, 2019

நரி மனிதர்கள் ஒரு சிறுகதையின் ஊடாக நிகழ்கால அரசியல்!

சில கதைகள் படிக்கும் போதே தெரியும் இவை நம்மை நிலை குலைய வைத்து உலுக்கப் போகிறது என்று. அந்த வகையில் சற்றுமுன் ஒரு சிறு கதை ஒன்று வாசித்தேன். சாகித்திய அகாதெமி பிரசுரத்தில் வெளியான “ஆச்சரியம் என்னும் கிரகம்” என்ற தமிழ் தொகுப்பிலிருந்து ‘கோன் இச்சி வீடுமலை’ எனும் சிறுகதை.
தொடக்கத்தில் சிறுவர் கதை போன்று ஆரம்பித்து நமது இருமையின் ஓலத்தை உள்ளே செல்லச் செல்ல அதிகரிக்கச் செய்தது அச்சிறுகதை. கதை, கோன் இச்சி என்ற நரியைச் சுற்றி சுழல்கிறது. அந்த நரி தனது குடும்பத்துடன் மகிழ்வோட வாழ்ந்ததுதான். ஆனால், இடையில் தனது தினசரி நரி வாழ்வு மனச்சோர்வு ஊட்டி நகர வாழ்வு வாழ ஆசைப்படுகிறது. தனது காட்டின் அருகே அமைந்து போன காஃல்ப் தளத்திற்கு விளையாட வரும் பெரிய மனிதர்களைப் பார்த்து தானும் மனிதனாக வேண்டுமென்று உந்தப்படுவதே அதற்குக் காரணம்.
அங்கு வாழும் நரிகளுக்கு ஒரு சிறப்பு வரம் இருக்கிறது. ஓக் இலை ஒன்றை உச்சஞ்தலையில் வைத்தவாறு ஒரு மந்திரத்தை உச்சரித்தால் அது எதுவாக ஆக வேண்டுமென்று ஆசைப்படுகிறதோ அப்படியே ஆகிக்கொள்ள முடியும். ஆனால், மாறியது மாறியதுதான் மீண்டும் பழைய படியாக நரியாக திரும்ப வரவே முடியாது.
அம்மாவிடம் தனது விருப்பத்தை கோன் இச்சி தெரிவிக்கிறது. அம்மா அதனைக் கேட்ட உடனேயே மிகுந்த வருத்தம் கொண்டு,முன்னால் நம்மில் சில பேர் இப்படி மாறிச் சென்றிருக்கிறார்கள், ஆனால் அவர்களால் திரும்ப வரவே முடியவில்லை. மேலும் நீ நினைப்பது போல மனித பிழைப்பு ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேக்காமல் மனிதனாகிவிட்டது.
தான் ஆசைபட்டவாரே கோட், சூட், டை அணிந்து, நகர வீதியில் இறங்கி நடந்து அங்கே முதலில் பார்த்த ஒரு வேலைக்கான விளம்பரத்தைப் பார்த்து உள்ளே செல்கிறான் கோன் இச்சி. விண்ணப்ப மனு என்றால் என்ன என்று கூடத் தெரியாமல், அப்பாவியாக நிறுவனரிடமே திரும்பக் கேக்கிறான். அவர் வித்தியாசமான ஆளாக இருக்கிறானே என்று மேலும் விசாரித்து தான் ஒரு வனமகனென்றும், முகவரியே கூட வனத்தையொட்டி புனைந்து கொடுத்த பெயர்களை கொடுப்பதையும் கண்டு ஆர்வ மூட்ட தனது கம்பெனியும் “மயிர்த்தோல் ஆடை” நிறுவனம் தானே என்றும் இவன் மலைப்பிரதேச ஆளாக இருப்பதால் பொருத்தமாக இருக்கும் என்று வேலை கொடுக்கிறார்.
ஆனால், கோன் இச்சிக்கு நிறுவனத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்றளவிலேயே ஞானம் இருந்ததே ஒழிய உண்மையாக அது எது போன்ற வேலை என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
பெரிய வீடு, கை நிறையச் சம்பளம், ஆசைப்பட்ட படி ஒரு கம்பெனிக்கு அதிகாரி என்று பெருமிதம் கொள்கிறான். தானும் நிச்சயமாக ஒரு நாள் காஃல்ப் நமது பழைய வீட்டிற்கு அருகில் இருக்கும் புல் தளத்தில் விளையாடுவோம் என்ற கனவோடு உறங்கிப் போகிறான்.
மறுநாளிலிருந்து தனது உழைப்பை தீவிரப்படுத்தி அனைத்தையும் மிக வேகமாக கற்று, முதலாளியே இவனை ஒரு முன் உதாரணமாக காட்டி மற்றவர்களை வேலை வாங்கும் அளவிற்கு நல்ல பெயர் எடுத்து மென்மேலும் பதவி உயர்வு, சம்பளமென்று உயர்ந்தபடியே அவனது வாழ்க்கை நகர்கிறது. மாத மாதம் தனது நரியாக இருக்கும் அம்மாவிற்கு முயல், பன்றி இறைச்சி என்று நிறைய வாங்கிக் கொண்டுச் சென்று சந்தித்து விட்டு வருவான்.
அப்படியான ஒரு சந்திப்பில் அம்மா, கோன் இச்சியை தனது கடந்த கால வாழ்வு நரி என்பதை மறந்து விடுமாறு கூறுகிறாள்; அப்பொழுதுதான் மேலும் நீ மகிழ்வாக இருக்க முடியுமென்றும் எடுத்துச் சொல்கிறாள். ஆனால், கோன் இச்சிக்கு அப்பொழுது ஏன் சொல்கிறாள் அம்மா என்று விளங்கவில்லை.
வேலை இடத்தில் முன் பனி பருவகாலத்தில் நன்றாக விலை போகக் கூடிய தோல் ஆடைகளின் கையிருப்பு குறைவாக இருப்பதும், நிறுவனத்திற்கு அதன் மூலம் கிடைக்கும் உபரி வருமானம் குறையக் கூடுமென்றும் எண்ணுகிறான். அது வரையிலும் தொழிற்சாலை பக்கம் எட்டிப்பார்க்காதவன் உள்ளே நுழைகிறான். அங்கே கரடி, முயல், மான், அணில், நரி என்று அனைத்து வித விலங்குகளும் கொல்லப்பட்டு, தோல் குழு குழுவாக தொங்கவிடப்பட்டிருப்பதை முதன் முதலாக கண்ணுருகிறான்.
தலை ஒரு நிமிடம் சுற்றி நிற்கிறது. கதறி அழுகிறான் அவைகள் நம்மையே உற்றுப் பார்ப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. குற்ற உணர்வு பீரிட தள்ளாடிபடியே வெளியே வந்து வீடு சேர்கிறான். இரவெல்லாம் உறக்கம் கொள்ள முடியாத படிக்கு அவனுக்கு நினைவு அதனைச் சுற்றியே வட்டமிடுகிறது.
மறுநாள் முதலாளி இவனை அழைத்து விடுகிறார். பாராட்டு பத்திரம் வாசித்து விட்டு, வரும் பருவ காலத்தில் நிறுவனத்திடம் தோலின் கையிருப்பு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். அதற்கு அவரே ஒரு தீர்வையும் கொடுக்கிறார். கோன் இச்சியை மலைக்குச் சென்று வேட்டையாடி நிறைய தோல்களை சேகரித்து வருமாறு பணிக்கிறார். கோன் இச்சி ஒரு நிமிடம் ஆடிப்போகிறான். முதலாளி தொடர்ந்து அப்படியாக செய்தால் பணி உயர்வும், மேலும் சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பதாகவும் கூறுவதை கேட்டதும் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியில் திளைத்து ஒத்துக் கொள்கிறான்.
தனது வேட்டைக் குழுவுடன் இவனும் கையில் ஒரு துப்பாக்கியுடன் மலைக்குச் செல்கிறான். காடு அதிர அதிர வேட்டை நாய்களை அனுப்பி மிருகங்களை இவர்கள் பக்கம் அனுப்பி சுட்டு தோல்களை சேகரிக்கிறார்கள். இச்சி கோனும் தன் பங்கிற்கு மிக அழகான பளபளப்பான ஒரு நரியை தூரத்தில் மற்றுமொரு விலங்கை துரத்திச் செல்வதைக் கண்டு, அந்த நரியை சுட்டு எடுத்து வருகிறான்.
வேட்டையின் போக்கை காண வந்த முதலாளி கோன் இச்சி வேட்டையாடிய நரியின் அழகை மிகவும் பாராட்டி இது போன்றதொரு அழகான, பளபளப்பான தோலை நான் கண்டதே இல்லை என்று புகழ்கிறார். அப்பொழுதே அவன் அந்த நரியை பக்கமாக கொண்டு வந்து மிக அருகில் வைத்து முகத்தை பார்க்கிறான்.
முகம் வெளிரி, கால்கள் கிடுகிடுக்கிறது கையில் பிடித்திருந்த துப்பாக்கியும், நரியும் நழுவி பூமியில் விழுகிறது. கதறி அம்மா என்றழைத்தாவாறு, காட்டிற்குள் ஓட்டம் பிடிக்கிறான். எதிர்படும் மரங்களின் மீது மோதியவாறும், வேர்களில் இரடி கீழே விழுந்து எழுந்தும் ஓடுகிறான்.
அவன் வேட்டையாடியது வேறு யாருமல்ல. அவனது அம்மாவைத்தான். அதற்கு பிறகு நடப்பது நம் அனைவருக்கும் தெரியும். மனிதர்களை வெறுக்கிறான். யாரையும் பார்க்க பிடிக்காமல் தனது அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டது அதற்குப் பிறகு என்ன ஆனதென்றே தெரியவில்லை என்பதாக கதை முடிகிறது.
நீதி: இது கதையா? இது பாடம். வாசிக்கும் போது எனக்கு சமநோக்கில் இப்பொழுது உள்ள அதிமுக மந்திரி சபைதான் தொடர்ந்து மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது. வரலாறும் தெரியாமல், தங்களின் கையில் இருக்கும் அதிகாரத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பு, வியர்வை அதன் மகிமையும் உணராமல் ஏதோ தனக்கு இன்று இதமாக இருக்கிறது என்று கடும் உழைப்பின் பெயரில் ஈட்டிய உரிமைகளை எல்லாம் தாரை வார்த்து கொடுப்பதை பார்த்தால் அந்த கோன் இச்சிதானோ இவர்கள் என்று நினைக்க தோன்றவில்லை.
அதிலும் குறிப்பாக மாஃபா பாண்டியராஜனும், செங்கோட்டையனும் செய்து வருவது இச்சி கோன் செய்யத் துணிந்த அதே ”அம்மா நரியை” வேட்டையாடலை ஒத்த குழந்தைகளின் கல்வி உரிமையை பறிப்பது என்றால் மிகையாகுமா?
ஜப்பானிய மூலம்: ஷிஞ்ஜி தாஜிமா
தமிழில் : வெங்கட் சாமிநாதன்.

Related Posts with Thumbnails