Tuesday, February 26, 2019

போர் ஒரு வியாபாரம்! War Business

அமெரிக்காவிற்கு போர் என்பது ஒரு வர்த்தகம். அவர்களுக்கு அது பொருளாதாரத்தை வளர்தெடுக்கும் ஓர் அங்கம். அப்படி பார்க்கும் அவர்களுக்கே சில நேரத்தில் தங்களுடைய பொருளாதாரத்தின் அடிமடியிலேயே கை வைத்துக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுவதுண்டு. உதாரணம் அண்மைய கால ஆஃப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா போர்கள்.

அங்கிருந்தெல்லாம் பெரிய அளவில் எதிர்பார்த்த அளவிற்கு போட்ட பணம் திரும்ப வரவில்லை. நாட்டின் படை வீரர்களின் இழப்பும் அதிகம். அமெரிக்க பொது மக்களுக்கு பொருளாதார இடர் பாடுகளைத் தாண்டி உயிருக்கு அச்சுறுத்தல் பயம் கூட இல்லை. ஏன்னா, பூகோள ரீதியா ரொம்ப பாதுகாப்பான தொலைவில இருக்குற ஒரு நாடு.

இந்த நிலையில் நம்முடைய நிலப்பரப்பிற்கு வருவோம். இத்தனை பெரிய நெருக்கடியான மக்கள் தொகையை ஒரு குறுகிய இடத்திற்குள் வைத்துக் கொண்டு, சும்மா போர் போர் என்று இரண்டு பக்கமும் மார்தட்டினால் இழப்பு என்னவோ அனைத்து விதத்திலும் இரண்டு பக்கத்திற்கும்தான்; இரண்டு விதத்திலும், பெரும் பொருளாதார மற்றும் உயிர் சேதத்தை சந்திப்போம்.

உண்மையான போர் என்று வரும் போது இரண்டு நாட்டு நிலப்பரப்பிற்குள் வான்வழி தாக்குதல் நிகழ்த்தினால், எந்த எடை கொண்ட குண்டுகள் போட்டுக் கொண்டாலும் எதுவும் பயனற்று போகப் போவதில்லை. எங்கு விழுந்தாலும் பாரிய சேதத்தை உண்டு பண்ணும். அதனை யார் அனுபவிப்பது?

போருக்கு பின்னால் நம்முடைய திறமையைப் பார்த்து, நம்மை விட குட்டி நாடுகள் உங்களுடைய போர் தளவாடங்களில் நாலு அதில், பத்து இதிலன்னு ஆர்டர் கொடுத்து பிசினெஸ் செய்து கொள்ள உதவப் போகிறதா?

இப்படி நடக்கவே வாய்ப்பற்ற, தேவையற்ற ஒன்றை வைச்சு அரசியல் லாபத்திற்காக ஹாலிவுட் படக் கதை ரேஞ்சிற்கு செஞ்சா நம்முடைய நம்பிக்கையை, மானத்தை நாமே பன்னாட்டு மேடையில இழந்துடுவோம்.

ஆல்ரெடி, இந்தியாவில படிச்சு வாங்கின பட்டங்களை ஒரு பயலும் வெளியில மதிக்கிறதே இல்லை. அதிலே இந்த மாதிரியெல்லாம் சுய சொரிதல் செஞ்சா ...ஹ்ம்ஹும்.

ஆனா ஒன்னு மட்டும் தெரியுது...

நம்மை ஆள்பவர்களுக்கு பன்னாட்டு மேடையில் இந்தியாவை ஓர் உயர்வான இடத்தில் வைத்துப் பார்க்கும் எந்தவிதமான உண்மையான அக்கறையும் கிடையாது. இருந்திருந்தால் இந்தியா என்றோ அனைத்து துறைகளிலும் தன்னிறைவை எட்டியிருக்க முடியும்.

அவர்கள் யாருக்கும் இந்திய கான்ஸ்டிடியூஷன் மீது எந்த விதமான நம்பிக்கையுமில்லை, மரியாதையுமில்லை. 🙄

பார்த்து பொழச்சிக்கிடக்கிற வழியப் பார்ப்போம்!

Monday, February 25, 2019

முதல் கோணல் முற்றும் கோணல்: Sinking Ship PMK

நானும் அந்த ”பாமக சின்னய்யா” சம்பவத்தை பார்த்தேன் 🤓. என்ன சொல்லுறதுன்னே
தெரியல! இப்படி ஒரு (சாதிக்) கட்சியை கருத்தரிச்சு, அதை அடை காத்து தன் சமூக மக்களுக்காகவாவது சிறுக ஆசைப்பட்டு பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கலாம். நீங்க என்னதான் அழி ரப்பர் வைச்சு அழிச்சு நாங்க சாதிக் கட்சி இல்லன்னு இனிமே நிரூபிக்க நின்னாலும் எடுபடாது. தமிழக தமிழர்களையே காப்பாத்தறேன் அளவிற்கெல்லாம் யோசிச்சு நீங்க இப்படி இறங்கி இருக்க வேண்டாம்.
யாரையோ நம்பி இப்படி இத்தனை ஆபத்தான ஒரு சூறாவளியில சிக்கிச் சின்னாபின்னமாகிட்டீங்களே.
உங்க உழைப்பெல்லாம் இப்படி அவசரப்பட்டு இந்த கால கட்டத்தில அதுவும் தமிழகம் கொந்தளிச்சு போயி கிடக்கிற நேரத்தில போயி, அவிங்களோட சேர்ந்து உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு சோலியை முடிச்சிக்கிட்டீங்க.
சரி போறதுதான் போறேன் கொஞ்சம் டேமேஜ் செஞ்சிப்புட்டு போவோம்னு...
திராவிட நாடு கோரிக்கையை நிறைவேற்றினாங்களா, அதுக்காக எத்தனை பேரு சுடுகாடு போனாங்கன்னு- சம்பந்தா சம்பந்தமில்லாம எந்த கால கட்டத்தில இருந்த விசயத்தை எந்த கால கட்டத்தோட இணைச்சு டேக் டைவர்ஷன் போட்டு கோர்த்து விடப் பார்த்தீங்க 🙄.
அண்ணா எந்த காரணங்களுக்காக அதை சுருட்டி ஓர் ஓரத்தில வைச்சார்னு ஏன் எங்கயும் படிக்கலயா? ஏன் ஒரு புரட்டு வரலாற்றை தாங்களே வாசித்து அறிந்து கொள்ள விருப்பமில்லாத ஒரு கூட்டத்திற்கு ஊட்ட நிக்கிறீங்க.
நாம வாழற காலம் என்ன பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உயிரைப் பணயம் வைத்து போராடி இயக்கம் வளர்த்த காலமா? என்ன பெரிசா தியாங்களை செஞ்சு இன்றைக்கு இப்படி நாமல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா ஃபைவ் ஸ்டார் விடுதியில பத்திரிக்கை சந்திப்பு நடத்துர அளவிற்கு வளர்ந்திருக்கோம்.
எத்தனை ஆண்டுகள் நமக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் சிறைச்சாலைகளில் தங்களுடைய பொன்னான காலத்தை கழித்திருப்பார்கள். எத்தனை ஹார்ட்கோர் போராட்டங்களை முன்னின்று வழி நடத்தி இருப்பார்கள். நமக்கு ஒரு மூன்று தேர்தலுக்காக உழைத்த உழைப்பு பலன் கொடுக்க வில்லை என்றவுடன் இத்தனை ஆயாசத்துடன் சாணக்கியன் ஆகுகிறேன் என்று சகுனி வேலை செய்ய தயார் ஆகிவிட்டீர்களே நீங்கள். சரியா?
திராவிட நாடேதான் வேண்டுமென்றால் மற்றுமொரு ஈழத்தை இங்கே அவர் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? மாநில சுய ஆட்சிக்கான அழுத்தத்தை கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ள எடுத்த வியூகத்தை, நடக்கவே முடியாத விசயத்திற்காக எத்தனை பேர் சுடுகாடு போனார்கள் என்று கேக்குறீர்கள். எது மாதிரியான தர்க்கமிது?
அன்று அண்ணா சாதுர்யமாக காய் நகர்த்த வில்லை என்றால் இன்றைக்கு உங்களுக்கு இந்த மேடையே கிடையாது என்பதை உணருங்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கக் கூடாது. நாமதான் முழுந்துறோம்னா கூடவே இரண்டு பேரை சேர்த்து கூட்டிட்டு போவோம்னு நினைக்கக் கூடாது. Come up with some other valid argument, the one you uttered is utter nonsense!

Thursday, February 21, 2019

5, 8th STD பொதுத்தேர்வு குலக்கல்விக்கான நுழைவுவாசல்!

நியூஸ் 18ல குணசேகரன் 5 மற்றும் 8 வகுப்பிற்கு பொதுத் தேர்வு தேவையான்னு தலைப்பு வைச்சு அழகான கேள்விகளோட நகர்த்தும் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஒரு பதினைந்து நிமிடம் தான் அதுவும் அந்த உலகமகா மேதாவி பத்ரி வாய திறக்கிற வரைக்கும்தான் முடிஞ்சது.
தெரியாமத்தான் கேக்குறேன் அதெப்படிடா ஊருக்கே ஒத்து வராத ஒரு விசயம் உங்களுக்கு மட்டும் சரின்னு படுது? எங்கிருந்து உங்க மாதிரி ஆளுங்களுக்கு மட்டும் இத்தனை அறிவு பொத்துகிட்டு மண்டைக்குள்ளற இறங்குது.
ஒரு பத்து வயது பிள்ளைக்கு ஐந்தாவதுல இருக்குடி உன்னோட வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏத்தன்னு மிரட்டி மிரட்டியே பள்ளிக்கு அனுப்பினா அந்தப் பிள்ளை விளங்குமா? நீயெல்லாம் அமெரிக்காவில வந்து என்னாத்தை நொட்டிட்டு போயி அங்க சமூக காராச்சேவை ஆற்றப் போயிருக்க? பிள்ளைகளின் குழந்தமையை முளையிலேயே கிள்ளி போட்டுட்டு அப்படி என்ன மாதிரி வாழ்க்கையை வாழ கத்துக் கொடுக்கிறீங்க?
ஃபெயில் செஞ்சு மீண்டும் அதே வகுப்பிற்கு அனுப்பினா ஒவ்வொரு நாளும் எவ்வளவு அசிங்கமாக ஃபீல் செய்யும் அந்த பிஞ்சு மனசு. படுக்கையை விட்டு எழ ஆர்வம் வருமா? ஏன் பத்தாவது, பணிரெண்டாவது பிள்ளைங்க மதிப்பெண் அழுத்தத்தில தங்களை தற்கொலைக்கு தள்ளிக்கிறது போதாதா? அதையும் இன்னும் குறைத்து 10 வயசிலயே யோசிக்க சொல்லுறீங்களா?
இப்படி மிரட்டி பள்ளிக்கு அனுப்பினா அந்த மனசு எப்படியான பயங்களோட தன்னை வளர்த்தெடுத்து அடுத்த நிலைக்கு எடுத்துட்டுப் போகும்? பத்ரி கேக்குறார், ஏன் அப்போ பத்தாவது, பணிரெண்டாவது பிள்ளைங்களுக்கு பொதுத் தேர்வு வைக்கணும், ஏன் கல்லூரியிலயே வைக்கணும் அதுங்களும் பிள்ளைங்க தானே, அதுங்க என்ன பாவம் பண்ணுச்சின்னு கிண்டல் மசிறு வேற ...மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுற கணக்கா. இதெல்லாம் இன்னும் எத்தனை வக்கிரத்தை உள்ளர போட்டு பூட்டி வைச்சிக்கிட்டு சாந்த சொரூபியா குரலை தனிச்சு, முடியல!
மிடில் ஸ்கூல் வரைக்குமே வகுப்பறையில் குழந்தைகளை கவனிச்சு அவுங்களுக்கு என்ன தேவைன்னு கவனிச்சு, ஆசிரியர்கள் மாணவர்களுக்கிடையே இருக்கக் கூடிய பரஸ்பர நம்பிக்கையை எப்படி வளர்க்கிறது, அதன் மூலம் எட்டக் கூடிய தன்னம்பிக்கையை எப்படி அதீதப்படித்தி தாங்கள் கற்றுக்கொள்ளும் விசயங்களை தன்னெழுச்சியா உள்வாங்கி பிற்காலத்தில் அவனவனும் சொந்தமா சிந்திச்சு அவனவன் துறையில சிறக்கும் படியா facilitate செய்ய முடியுங்கிற வழியப் பாருங்க.
அதை விட்டுட்டு அந்த குழந்தைகளோட சிரிப்பையும் வாழ்க்கையையும் திருட நிக்காம. எனக்கு புரியுது அவிங்களுக்கு கை நிறைய வேலைய கொடுக்கிற மாதிரி குழந்தைகளோட பெற்றோர்களுக்கும் அள்ளி வைச்சிட்டா நீங்க பிற்காலத்தில் செய்யப்போற அயோக்கியத்தனம் ஒன்னுக்கும் ஒருத்தனும் தெருவிற்கு வர மாட்டான்... அதுக்கும் சேர்த்து ஓர் ஆப்பு அடிச்ச மாதிரி இருக்கு 5, 8, 10, 11 அண்ட் 12. சரியா போச்சா மக்களே!
சில மூஞ்சிகளை நினைச்சாவே குமட்டிக் கொண்டு வருகிறது. உங்களோடெல்லாம் இன்றைய என்னுடைய இருப்பை பகிர்ந்துக்க நேர்ந்ததை நினைச்சாவே கேவலமாக இருக்கிறது. இதெல்லாம் ஒரு பிழைப்பா!?

https://www.youtube.com/watch?v=eYBWJxMDHnI&fbclid=IwAR3WgI4e65bbzpSUJt6-V0KHFlynvJeyUFQA5nux-5UYw6jOJIz_x7-xOZ8

Thursday, February 14, 2019

ஆழிப்பேரலையை ஒத்த மனித இனம்: Sapiens 3

சேப்பியன்ஸ் புத்தகத்தின் முதலாம் பகுதியை முடித்த நிலையில் இதனை பகிர்ந்து கொள்ளாமல் நகர்வதற்கு மனம் ஒப்பவில்லை.
எப்பொழுது சேப்பியன்ஸின் மூளையளவு பெருத்து, நிமிர்ந்த நடை கொண்டு, இரண்டு கைகளை வீசி நடந்து திரியும் நிலைக்கு இந்த பரிணாமம் அவர்களை எடுத்துச் சென்றதோ அன்றே அவர்களின் அறிவுப் பசியும், குடற்பசியும் பல்கிப்பெருகி மிக்க அழிவுகளையும், கட்டுக்கடங்கா வளர்ச்சியையும் விதைத்து அவர்களின் வழித்தடம் தோறும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறது எனலாம்.
ஆஃப்ரிகாவின் கிழக்கு கடற்கரையோரம் மெதுவாக நடந்து ஆசியாவின் மத்தியப் பகுதியை அடைந்தவர்கள் அப்படியே கொஞ்சம் பேர் இந்திய துணைக்கண்டப் பகுதியிலும், மேற்படி நகர்ந்து தெற்காசியப் பகுதிகளிலும் குடியேறினர்.
இடையில் தங்களுடைய உப மனித இனங்களை சந்திக்கும் கணம் தோறும் அறிவின்பால் சார்ந்தவர்களை புணர்ந்து உள்கிரகித்தோ, அல்லது பகையுணர்ச்சியின்பால் போரிட்டு அழித்தோ சேப்பியன்ஸ் இனம் தங்களை அந்த சூழலியலுக்கு தகுந்தாற் போல் தகவமைத்துக் கொண்டு தழைத்து வாழ்கிறார்கள்.
வேட்டையாடிகளாக இருந்த காலத்தில், நம்முடன் புழக்கத்தில் இல்லாத விலங்கினங்களை சந்திக்கும் கணம் தோறும், அதி புத்திசாலித்தனமான மண்டையறிவுடன் உருவாக்கப்பட்ட நாம் பல்வேறு பட்ட வேட்டை உக்திகளைக் கொண்டு ஏனைய விலங்கினங்களை கொன்று குவிக்கும் ஒரு பேரழிவின் கருவியாக்கி இருந்தது நம்மை இந்த இயற்கை என்பதை நாம் இங்கு மறந்து விடக் கூடாது.
பல கோடி ஆண்டுகளாக பல கண்டங்களில் செழித்து வாழ்ந்து வந்த பல பெரும் பாலூட்டிகள் எங்கெல்லாம் இந்த வேட்டையாடி சேப்பியன்ஸ் காலூன்றினானோ அங்கெல்லாம் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளாகவே அழித்தொழிக்கப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில் நாம் வேட்டையாடிகளாக இருந்த காலத்தில் இயக்கமே அற்ற நாடோடிகள் என்றளவில் மட்டுமே நம்மை குறுக்கி பார்த்துக் கொள்ள முடியாது. நாம் பேரழிவுகளையும், போராட்டங்களின் ஊடாகவும் இந்த பரந்து விரிந்து கிடந்த கிரகத்தில் நம்முடைய ஆளுமையை மென்மேலும் வளர்தெடுத்துக் கொள்ள இரத்தம் சிந்தி ஆதி சேப்பியன்ஸ் செப்பணிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றளவில் புரிந்து கொள்ள வேண்டும்.
தெற்காசியாவின் தீவுகளிலிருந்து மெல்லப் பரவி என்று அவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலண்ட் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கும் பெருமளவிலான விலங்கு உணவுச் சங்கிலிகளையும், அதனைத் தொடர்ந்த சூழலியல் மாற்றங்களையும் உருவாக்கத் தொடங்கினார்களோ அன்றே நமது அடுத்தக்கட்ட நகர்வும் தொடங்கிவிட்டது.
அதற்கு சில பத்தாயிரம் வருடங்களுக்குப் பின்னால் சைபீரியாவின் மேற்கு நிலப்பரப்பில் பனி உறைவினால் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த இணைப்பு, மேம்பட்ட சூழலியல் தகவமையும், விலங்கு புரதத்தின் பால் ஈர்க்கப்பெற்றிருந்த அந்த பகுதியில் வாழ்ந்த சேப்பியன்ஸ்களை மெல்ல வலசை போகும் பாலூட்டிகளின் பின்னால் நகர வைத்து வட அமெரிக்கா கண்டத்திற்குள் காலூன்ற வைத்தது.
அங்கும் ஒரு மாபெரும் பேரழிவிற்கு இந்த வேட்டையாடி சேப்பியன்ஸ் வழி கோணி, சுற்றுச் சூழலில் ஒரு பெரும் மாற்றத்தினை உருவாக்குகின்றனர்.
இதிலிருந்து என்ன புரிய வருகிறது என்றால் எங்கெல்லாம் சேப்பியன்ஸ் காலடி பட்டதோ அங்கெல்லாம் அதி பயங்கரமான உருவத்தினை கொண்ட பாலூட்டிகளையும், எடையுடைய பறவைகளையும், பல்லூயிர்களையும் பெருமளவில் கொன்று குவித்திருக்கிறான். தங்களுடைய உடை, உணவு, பாதுகாப்பு என பல காரணங்களுக்காக.
அது மிக இயல்பாகவே நடந்திருக்கிறது. கற்கால கருவிகளை கையாண்ட காலத்திலேயே கிட்டத்தட்ட 50 விழுக்காடு அத்தனை பெரிய பேரழிவுகளையும் நிகழ்த்தியிருக்கிறது இந்த இருகால் கொண்ட அப்பாவிகளைப் போல் உள்ள சேப்பியன்ஸ் இனம்மென்று இந்த புத்தகம் பல சான்றுகளுடன் சுட்டிச் செல்கிறது.
பின் வந்த காலங்களில் அந்த பல்லூயிர்களின் நடமாட்டம் குறைந்த காலத்தில், வேளாண் இனம் அடுத்தக் கட்ட அலையாக இந்த நிலப்பரப்பெங்கும் ஆளுமை கொள்கிறது. முதல் ஆழிப்பேரலையையொத்த வேட்டையாடி சேப்பியன்ஸ் பரவலில் பெரும் விலங்கினங்கள் அழித்தொழிக்கப்பட்டன. இரண்டாவது அலையான வேளாண் குடிகள் நிலத்தினை திருத்தியும், அழித்தும் அடுத்த மாற்றத்தினை நிகழ்த்துகிறார்கள்.
மூன்றாவது அலையாக தொழிற்புரச்சி ஓங்கிய காலத்தில் நாம் இருக்கிறோம்... அவர்கள் அளவிற்கு அழிக்க ஒன்றுமில்லை என்றாலும் மிச்சமிருப்பது நம்முடைய இருப்பிற்கான இந்த பிராணவாயு அதுவும் மிச்சமிருக்கும் இந்த வனங்களில் மட்டுமே. அதனையும் கண் மூடித்தனமாக பழைய நினைப்புதான் பேராண்டி கணக்காக கையாண்டால், நாம் இந்த பூமிப்பந்தின் மேலடுக்கில் முகவரியில்லாமல் துடைத்தெரியப்படுவோம்.

Related Posts with Thumbnails