Sunday, August 28, 2016

சுமத்தலின் வலி...

ஒரிசாவில் ஒரு கணவர் தனது இறந்து போன மனைவியின் பொட்டலத்தை சுமந்தவாறு நடந்தார் நடந்தார் நடந்து கொண்டே இருந்தார்... தனது மகளும் கூடவே நடந்து வருகிறார்; அவ்வப்பொழுது மகள் உடைந்து அழுகிறார். கணவர் வீதியெங்கும் கடந்தகால போராட்ட வாழ்வை தனது மனைவியுடன் சேர்ந்து சமர் கொண்டதை அசை போட்டுக் கொண்டே அந்த பணிரெண்டு கிலோமீட்டரை கடந்து ரியோ ஒலிம்பிக்கில் ஹுசன் போல்ட் கூட தவழ்ந்து கடக்க முடியாத துயர தூரத்தை நடந்தே கடந்து விட்டார்.

இதனைக் கண்டு கொதித்த நெட்டிசன்களும், பொது மக்களும் பல விதமாக தங்களுடைய கையாலாகாத புலம்பல்களை கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், ஓவியமாகவும் தன்னிச்சையாக எழும்பும் உணர்ச்சிகளின் பொருட்டு பொங்கித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

அது போன்ற பொங்கலைத் தவிர வேறு என்ன பெரிதாக அவர்களால் செய்து விட முடியும்? கடந்த எழுபது ஆண்டுகளில் இது போன்ற எத்தனை பொங்கல்களை நாமும் கண்டு இன்று இந்த 3ஜி, 4ஜி, ப்ராடுபாண்ட் யுகத்திற்குள் நம்மை புகுத்தி வைத்திருக்கிறோம்.

சிறு மிளகு பொங்கலாக என்னுடையது எதுக்காக என்றால், இந்த சீற்றம் கொண்ட மக்களில் பெரும்பகுதியானவர்கள் என்னையொத்தவர்கள். கிராமப் பின்னணியில் விசயங்களை நேரடியாக பார்த்து அனுபவித்து வாழ்ந்தவர்களாக இருக்கக் கூடும். பொங்கல் வாதிகளில் சில பேருக்கு இது ஒரு சைக்கோசோமடிக் அன்சைட்டி. பல பேருக்கு தங்களது மனசாட்சியின் ஓலம்.

முரணாக, இந்த நிகழ்வையும் எப்பொழுதும் போல 2020ல் வல்லரசாக்க முன்னேற்றத்தில் கொண்டு போகும் பெரும் கம்பளிகளைக் கொண்ட நகர் புற சுகவாசிகள், நின்று நிதானமாக இந்த நிகழ்வை பார்த்து தீர்ப்பு எழுதுகிறார்கள்.

இது ஒரு தேசமாக தோல்வியடைந்தோம் என்று பார்க்கக் கூடாது, பொட்டலத்தை தூக்கிச் சென்றவருக்கு கடன் வாங்கும் தகுதியோ, அல்லது அவரைச் சுற்றி இருந்த மக்களின் குறையே இது என்பதாகத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆருடம் கூறு கிறார்கள்.

மாறாக கொதித்து எழுந்து இங்கு உணர்சிகளை வெளிப்படுத்தும் கிராம வாசிகளையொத்தவர்கள் தங்களின் கண்களுக்கு முன்னால் அந்த கணவரின் கால்கள் பூமிக்குள் புதைந்து பிணமாக கனக்கும் தனது மனைவியை அடுத்த அடியை இழுத்து சுமப்பதின் வேதனையை மிகத் துல்லியமாக உணர முடிந்ததாலோ என்னவோதான் அவர்கள் அப்படியாக பொங்குகிறார்கள்.

நான்கு பேர்களாக தூக்கிச் சென்று மயானத்தில் உதவக் கூட தனது தோள்களை கொடுக்காத எந்த ஒரு உள்ளத்தாலும் அந்த பொட்டலத்தின் கனத்தை அறிந்து கொள்ளவே முடியாது. எல்லா வியாக்கியானங்களையும் தூரத்தில் இருந்து நிதானமாக இருபது ரூபாயில் ஒரு குடும்பமே வாழ முடியும் என்று ஏழ்மையைக் கூட அழகியலாக்கும் பிறரிடத்தில் வேறு என்னத்தை தான் எதிர்பார்க்க முடியும்?

செத்து மடிந்து மயானத்தில் சாம்பலாக போகக் கூடிய கட்டையிடத்தில் கூட தீண்டாமை கருதி நான்கு கிலோமீட்டர் சுத்தித் தானே எடுத்து செல்லக் கூடிய மனிதத் தன்மையில் இருக்கும் ஊர்களையும், இருபது ரூபாய் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லையென கூலி வேலைக்கு செல்லும் தம்பதியினரை வழி மறித்து கழுத்தறுத்து கொல்லும் மனிதத்தையும் கொண்டவர்களாத்தானே நாம் பரிணமித்து நிற்கிறோம்.

ஒரு பக்கம் பகட்டு, மறு பக்கம் கும்மிருட்டு! நிதர்சனத்தை பொய்மை தின்னப்பார்க்கிறது, விளைவு போர்க் களத்தில் காணக்கிடைக்கும் காட்சிகள் போல இன்று அன்றாட நிகழ்வுகளாக இது போன்ற மனதை உலுக்கும் காட்சிகள் நம்மைச் சுற்றி நிகழ்வுறுகிறது. நாமும் கண்ணுற்று அனிச்சையாக மனம் மரத்துப் போன நிலையில் கடந்து செல்ல நம்மை தயார் படுத்தி வைத்திருக்கிறோம்.

நன்றி: படம் - பாரதி தம்பி.

1 comments:

VR said...

நீண்டநாள்களுக்குப் பிறகு பிளாக்கில் உங்கள் கட்டுரை! அதே உணர்வுகள் தான் எனக்கும். கார்டியன் தளத்தில் இந்த செய்தியினை படித்தபோது, பின்னூட்டத்தில் பலரும் நம்மைப் போலவே (இந்திய பகட்டு சிந்தனாவாதிகள் போல அன்றி), தங்கள் உணர்வுகளை பதிவுசெய்திருந்தனர். ஆனால் அங்கேயும் சில இந்திய புனித ஆத்மாக்கள் தங்கள் வியாக்கியானங்களை அள்ளித்தெளித்து இருக்கின்றன!

Related Posts with Thumbnails