Monday, January 19, 2015

எழுத்தென்பது... : மாதொருபாகன் (Madhorupagan)

கடைசியாக எல்லா புத்தகப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்ததிற்குப் பிறகாக இணையத்தின் உதவியால் என்னுடைய கடைக்கோடி உலகத்திற்கு எட்டக் கிடைக்க நானும் பேராசிரியர் எழுதிய மாதொருபாகன் எனும் புதினத்தை வாசித்து முடித்து விட்டேன்.

ஓரளவிற்கு புத்தகம் கைக்கு கிடைப்பதற்கு முன்பாகவே மொத்தக் கதையின் மையக் கருவும் மனதில் பதியுமளவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக பல பக்கங்களை கூடவே வாசித்தவருடன் பயணிக்க, வாசிக்கக் கிடைத்தது.

அந்த கதையின் நாயகர்களான பொன்னா மற்றும் காளி இன்னமும் நமது சொந்தங்களில்/தெருக்களில் வாழும் ஒரு குழந்தை பேறற்ற தம்பதிகளாக இருக்கக் கூடும். அவர்கள் முகங்களற்ற வேறு வேற்று கிரகத்து மனிதர்களல்ல. நம்மை போன்றே உணர்வுகளால் செதுக்கப்பட்ட வெறும் மனிதர்கள்தாம்.

இருப்பினும் மனித உணர்வுகளை மதிக்கத் தெரியா தடித்த நாக்கையும், தோலையும் போர்த்தியுள்ள இந்த சமூகம் அவர்களை வாழத் தகுதியற்றவர்களாக்கி, ஒடுக்கிக் கொண்டு வாழும் நிலைக்கு தள்ளி வைத்து விடுகிறது. காரணம் - குழந்தை பேறின்மை!

பல வருடங்களாகவே நம் சமூகத்தில் புழங்கி வருகி்றது இந்த நாகரீகமற்ற வேலை.  ஏதோ பேச வெண்டுமென்பதற்காக புதிதாக திருமணமான மூன்றாவது வாரத்திலிருந்து போகிற போக்கில் எழுப்பப்படும் கேள்வி “ஏதாவது விசேசம் உண்டாவும்,” ”இன்னும் குழந்தை இல்லையா.” என்னமோ குழந்தை பெற்றுக் கொள்வது ஹிமாலயத்தில் ஏறி கொடி நட்டு இறங்கி வந்து விட்டதைப் போல, விபத்தாகப் பெற்றவர்கள் கேட்கும் அவலக் கொடுமை.

இந்தப் புத்தகத்தை ஒரு சாதாரண புதினமாக வாசித்து கடந்து சென்று விட முடியாது. அக்கறையுடன் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பல அதிர்வுகளை தன்னுள் கடத்திச் செல்லக் கூடிய வலிமை கொண்டது. கூடவே அது போன்ற சூழலில் வாழும் மனிதர்களை அவர்களாக இருக்க வைக்க நமக்கு வாழ்க்கை கல்வியும், அடிப்படை நாகரீகமும் கற்றுக் கொடுக்குமொரு கையேடும் கூட.

என்னளவில் ஒரு புதினத்தை எப்பொழுதும் நேரத்தை கடத்த வைக்கும் வெறும் எழுத்துகளின் கோர்வை என்றளவில் வாசித்துக் கடக்க முடிவதே இல்லை. இதுனாலேயே கண்டமேணிக்கு எழுத்து என்று ஏதோ பக்கம் நிரப்பும் ஆசாமிகளின் புத்தக குவியல்களை வாசிக்கும் ஆர்வமும் இருந்ததில்லை.

இந்தப் புத்தகம் தோண்டி எடுக்க ஆழத்தில் புதைப்பட்டுப் போன ஒரு தமிழக கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கதை நகர வைப்பதாக எழுதப்பட்டுள்ளது.

ஆசிரியரின் கூரிய அவதானிப்பும் கிராமத்து சொந்த வாழ்க்கை அனுபவமும் பல இடங்களில் பிரகாசிக்கிறது.

உதாரணமாக என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஒரு அவதானிப்பு என்றால் கதையின் நாயகன் ஊரைத் தாண்டி அமையப்பட்ட தோட்டத்தில் வசிப்பான். கால் நடைகளையும், கோழிகளையும், மரம் சொடி கொடிகளுடனான இயற்கையொன்றிய வாழ்வமைவுடனான ஒரு வாழ்வு. கோழி அடைகாப்பில் இருபது முட்டைகளுக்கு குறையாமல் பொரிக்க வைத்து அத்தனை குஞ்சுகளையும் வெற்றிகரமாக மற்ற பருந்து, கழுகு இனங்களுக்கு பறி கொடுக்காமல் வளர்தெடுப்பதனையொட்டி ஒரு சம்பாஷனை உண்டு.

நாயகன் எப்படி தோட்டத்தில் இருக்கும் பனை மரத்திலுள்ள கருக்குகளை அடர்த்தியாக வளரவிட்டு, அதில் கரிச்சான் குருவி வந்து கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் காலத்தையொட்டியே, தனது கோழியை அடை காக்க வைத்து பொரிக்க வைப்பதின் மூலம், கரிச்சான் குருவி தனது குஞ்சுகளுக்கென காப்பாத்த போராடும் போரட்டத்தின் பேரில் தனது கோழிக் குஞ்சுகளை மற்ற வேட்டையாடும் பறவை இனங்களிடமிருந்து குஞ்சுகள் தப்பிப் பிழைக்க வைக்க வழியறிந்தாக கூறுவான். இயற்கையுடனான ஒத்திசைவு வாழ்க்கை எந்தளவிற்கு ஒரு தனிமனித கற்றறிதலின் மூலமாக கடத்தப்பட்டு வந்திருக்கிறதென அறிந்து கொள்ள கிடைத்த விதம், ஆசிரியரின் மீதான பிரமிப்பை சில படிகள் உயர்த்தியது.

சிக்கனமான எழுத்து. ஆழமான கதைக்களன். ஒரு சமூக அறிவியல் மாணவனுக்கான நூலாகவும், யாரும் வாசித்து புரிந்து கொள்ளக் கூடிய கொங்கு வட்டார பேச்சுத் தமிழில் எழுதப்பட்டு அவர்களின் மொழியும், நிலமும் அதனையொட்டிய பழக்க வழக்கங்களும் சொலவடைகளாகவும், மொழியின் செழுமையும் சேகரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்த புதினத்தின் மையக் கருவாக எடுத்துக் கொள்ளப்பட்ட ‘குழந்தை பேறின்மை’ எப்படி சமூகத்தின் சாடல்களுக்கு உட்பட்டு போகும் பட்சத்தில், கதையின் நாயகி அந்த காலக் கட்டத்தின் சூழ்நிலைக்கென பொழங்கி வந்த ’சாமிக் குழந்தை ஏற்பு’ செய்வதை சுட்டிக் காட்டப் போக இன்றைய மத/சாதீய அரசியலுக்கு உள்ளாகி புத்தக விற்பனைக்கு தடை என்றளவில் சென்று முடிந்திருக்கிறது.

கதையின் அடிநாதமாக ஓடுவது சமூக நிர்பந்ததிற்கெனவே நாயகி கோவில் திருவிழாவில் அப்படி ஒரு பாலியல் தொடர்பால் பிள்ளை பெற்றுக் கொள்ளவும், தனது கணவனுக்கு வீராதி வீரர் பட்டமும், தான் மலடியல்ல என்று நிரூபணம் செய்யக் கூடிய சூழலாலயே அப்படி ஒரு திருவிழாவும், சாமீ பிள்ளை கொடுக்கும் ஆண்களும்,பெண்களும் அவதரிக்கிறார்கள். இதனை சுட்டிக்காட்டிய ஆசிரியர் ஒரு மாபெரும் பாவியாய்யா?  உண்மை எப்பவும் கசக்கவே செய்கிறது!

இதுவும் அருந்ததி ராயின் ‘சின்ன விசயங்களின் கடவுள்’ (god of small things) வரிசையில் உலகப் பார்வையை திரும்ப வைக்கக் கூடிய கதைக் கருவை கொண்டது.

எழுத்து என்பது ஈவு இரக்கமற்று ஒரு சமூகத்தை பீடித்திருக்கும் நோயை தாக்க வல்லதாக இருக்க வேண்டும்.  அது ஒரு சமூகத்தையே உலுக்கி தனது குரூர புத்தியை குற்ற உணர்வுக்கு ஆட்படுத்தி மாற்றங்களை ஏற்றுக் கொண்டு முன் நகர வைப்பதாக அமைய வேண்டும். அந்தளவில் இந்த புத்தகம் நமது சமூகத்தின் மேல் அடர்ந்து படிந்திருக்கும் கருமையின் மீதாக ஒரு அதிர்ச்சி விளக்கொளியை பாய்ச்சி இருக்கிறது.


பி.கு; விரைவில் அத்தனை தடைகளையும் தகர்த்து பேராசிரியர் தனது ஆக்கப்பூர்வமான எழுத்துப் பணியை தொடர்வாரென நம்புவோம்



Related Posts with Thumbnails