மனிதர்கள் குறைந்து மனிதம் அரிதாகவே காணப்பெறும் நிலை பரவலாக கண்ணுறும் கால கட்டமிது. முல்லை பெரியாறு அணை கட்டியெழுப்பிய பென்னிகுக் போன்ற மனிதர்களும் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறிய நேரும் பொழுது, மனிதர்களின் மனத்தினை எத்தனை எளிதாக நிறமூட்டி பார்த்து விட முடிவதாக எண்ணச் செய்கிறது.
மனம் என்பதிலிருந்துதான் ஆலமரத்திற்கான பெரும் விருட்சமும் விதையாகிறது, கடுகினைப் போன்று சிறுத்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடிக்கும் சுயநலத்தமான எண்ண விதைகளும் சூல் கொள்கிறது. தமிழக பகுதியில் வசிக்கும் வன விலங்குகள் குறிப்பாக யானை/காட்டெருமைகளைப் போன்ற பெரிய விலங்குகள் கோடையின் வறட்சி பொருட்டு அவைகள் எல்லை கடந்து பெரும் வலசையேற்றம் செய்து கேரளா மற்றும் கர்நாடக காடுகளுக்கு சென்று வருகிறது. அவைகளுக்கு கிடைக்கும் உரிமை கூட மொழியறிவின் மூலமாக உரையாடத் தெரிந்த மனித மனங்களுக்கு நீரின் அவசியமுணர முடியவியலாதது விந்தையிலும் விந்தைதானே!
மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதற்கான நீதிக் கதையே இன்று நடந்து வரும் முல்லைப் பெரியாறு தண்ணீர் பிரச்சினை. ஒரு மனிதர் அந்த அணையை கட்டியெழுப்ப தனது சொத்தையே விற்றழித்து ஊருக்காக அதுவும் பிழைப்பு நடத்த வந்த இடத்தில் மனிதத்தை ஆழ ஊன்றிச் சென்றிருக்கிறார். அதனை நன்றாகவே உள்வாங்கிய அந்தப் பகுதி மக்கள் பென்னிகுக்கையும் ஒரு கடவுளாக்கி விட்டார்கள்.
இதன் நுண்ணிணைப்பு அறியாது இன்றைய அரசியல் சுயநலமிகள் பென்னிகுக்கிற்கும் அந்தப் பகுதி மக்களுக்குமிடையே உள்ள அந்த நுண்ணிழையினை அறுக்க முயற்சிக்கிறார்கள். அதன் விளைவு எப்படியாக இருக்கும் என்பதற்கு சான்றாக சமீபமாக சாரை சாரையாக ஆயிரக்கணக்கில் எல்லைப் பகுதியில் கொந்தளித்து நிற்கும் மக்களின் நன்றியுணர்வே அதற்கு சாட்சி.
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதை தொகுப்பான “ஆயுத எழுத்து” புத்தகம் மீண்டும் என் கண்ணில் பட்டது. அப்படியே புரட்டிக் கொண்டு வரும் பொழுது இந்த காலக் கட்டத்திற்கு தேவையான இந்த முல்லை பெரியாறு பற்றியான ”நீரில் மிதக்கும் நினைவுகள்” கட்டுரையை ஒத்த எழுத்து கவர்ந்தது. ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரும் முல்லை பெரியாறின் வரலாறு தெரிந்து கொள்ளும் அவசியத்தில் இருப்பதால் மெனக்கெட்டு இதனை இங்கு மறு தட்டச்சு செய்திருக்கிறேன்.
பென்னிகுக் பற்றி தெரிந்து கொள்ளவும் அந்தப் பகுதி மக்களின் இதயத்தில் எப்படி அவர் சிறு கடவுளர் ஆகிப்போனார் என்று தெரிந்து கொள்ளவும் அவசியம் வாசிங்க. நன்றி - எஸ். ரா!
***************************************
நீரில் மிதக்கும் நினைவுகள் - by எஸ். ராமகிருஷ்ணன்
சில மாதங்களுக்கு முன் ஒரு நண்பரின் திருமண நிகழ்சிக்காக தேனிக்கு அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தேன். மணப் பெண்ணின் தந்தை பெயர் பென்னிகுக் தேவர் என்றார்கள். விசித்திரமாகயிருந்தது. நான் சற்றே தயக்கத்துடன் திரும்பவும் அவரது பெயரைக் கேட்டேன். அவர் தனது திருக்கை மீசையைத் தடவியபடியே “பென்னிகுக்” என்றார். தோற்றத்துக்குத் தொடர்பில்லாத பெயராக இருக்கிறதே என்று நான் யோசிப்பதை உணர்ந்தவரைப் போல, இன்னொரு இளைஞரை அழைத்து, “மாப்பிள்ளை, உன் பேரைச் சொல்லுப்பா” என்று அவர் சொன்னது “லோகந்துரை” என அந்த இளைஞன் மிக இயல்பாகச் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை இரண்டும் ஆங்கிலோயர்களின் பெயர்கள்!
கருப்பணன், கலுவன், பெருங்காமன், விருமாண்டி, மூக்கவிருமன், தொத்தன் என குலசாமிகளின் பெயர்களுக்கு ஊடாக லோகந்துரையும் பென்னிகுக்கும் எப்படிக் கலந்தார்கள் என்று ஆச்சரியமாகயிருந்தது. என்னோடு வந்திருந்த கவிஞர் வெங்கடேசன், ‘இவை இரண்டும் பெரியாறு அணையைக் கட்டிய வெள்ளைக்கார இன்ஜினீயர்களின் பெயர்கள்’ என்றதோடு, ‘இதை விடவும் ஒரு ஆச்சரியம் இருக்கிறது பார்க்கலாம், வாருங்கள்’ என்று அழைத்துக்கொண்டு போனார்.
சாலையோரத்திலிருந்த டீக்கடையினுள் நுழைந்தோம்.லேசான இருட்டு படிந்த திண்டில் உட்கார்ந்தபடி சுவரைக் காட்டியபோது, அங்கே வேலும் மயிலோடு நிற்கும் முருகன் படமும், வழுக்கை விழுந்த ஏறு நெற்றியும் தொங்கு மீசையும் இடுங்கிய கண்களுடன் கறுப்புகோட் அணிந்த பென்னிகுக்கின் புகைப்படமும் தொங்கிக்கொண்டிருந்தன. அதனடியில் ‘கர்னல் ஜெ.பென்னிகுக்’ எனச் சிறியதாக எழுதப்பட்டிருந்தது. தெய்வ சமானம் கிடைத்த வெள்ளைக்காரனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
”எதற்காக இந்த வெள்ளைக்காரன் படத்தை கடையில் மாட்டிவைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். டீக்கடைக்காரன் பாலைக் கொதிக்கவிட்டபடியே ”பென்னி துரை மட்டுமில்லேன்னா இந்நேரம் இந்தச் சீமையே நாதியத்துப் போயிருப்போம்” என்றவன்., “ஒண்ணு ரெண்டுல்ல, எத்தனை ஆயிரம் பேரு ராத்திரியும் பகலும் காட்டுக்குள்ளயே கிடந்து கல்லு மண்ணு சுமந்து போட்டுக் கட்டுன அணை தெரியுமா? ஆம்பளை, பொம்பளை பச்சைப் பிள்ளைகள்னு செத்த உசிரை கணக்குப் பாக்க முடியாது - அப்படி உயிர்ப்பறி கொடுத்து கட்டினதுய்யா பெரியாறு அணை!” என்றபடியே வெந்நீர்விட்டுக் கண்ணாடி டம்பளர்களைக் கழுவிக்கொண்டிருந்தான்.
அன்று இரவெல்லாம் பென்னிகுக் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நண்பர் வெங்கடேசன் தன் வீட்டில் இருந்த பெரியாறு அணை பற்றிய ஆவணங்கள், ஒரிஜினல் ரிக்கார்டுகளின் பிரதிகளைக் காட்டிக்கொண்டிருந்தார். “பென்னிகுக்குக்கு ஒரு சிலை இருக்கிறது. மலையில் அணைக்கட்டு கட்டும் நாட்களில் இறந்துபோனவர்களின் சமாதிகள் கவனிப்பாரற்று இருக்கின்றன.”
அன்று முதல் பென்னிகுக்கைக் பற்றித் தெரிந்து கொள்வதற்காக மதுரை மாவட்டம் முழுதும் அலைந்துதிரியத் துவங்கினேன். தேனி, மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமும் பென்னிக்குக்கைப் பற்றி எத்தனையோ கதைகளை வைத்திருக்கின்றன. தங்கள் மூதாதையர்கள் பென்னிகுக்கோடு சேர்ந்து வேலை செய்தவர்கள் என்பதற்காகப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். அணைக்கட்டு வேலைக்காக கிராமம் கிராமமாக ஆட்களைத் திரட்டி வேலைக்குக் கொண்டுபோய், அவர்களது நல்லது, கெட்டதுகளைப் பகிர்ந்துகொண்ட பேய்காமத் தேவரைப் பற்றிய செய்திகளும் வியப்பாகயிருந்தன. நேற்று நடந்து முடிந்த சம்பவத்தைச் சொல்லுவதுபோல அவர்கள் பென்னிகுக்கைப் பற்றி நினைவுகொண்டார்கள்.
பெரியார் அணையைப் பார்ப்பதற்காக மலையின் மீது பயணம் செய்து கொண்டிருந்தேன். மூச்சுக் காற்றில்கூடப் பசுமை படிந்துவிடுமளவு குளிர்ச்சியான அந்தக் காட்டின் ஊடாக அணைக்கட்டு கண்களால் அளவிட முடியாததுபோல நீண்டுகிடக்கிறது. தண்ணீர்மீது கண்கள் ஒரு பூச்சியைப்போல ஊர்ந்து நகர்கிறது.
காட்டாறுகள் மிருகங்களைப்போல மூர்க்கமானவை. தன்னிடஷ்டப்படி வனத்துக்குள்ளாகச் சுற்றி அலையக்கூடியவை. அதன் குறுக்கே எது வந்தாலும் தடையை மீறிப் பாயக் கூடியவை.
ஒருமுறை மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆதிவாசிகளான காணிகளில் ஒருவன் சொன்னான் -
”மலையில இருக்கிறவரை தண்ணீரை எந்தக் கொம்பனாலும் கட்டுப்படுத்தி வைக்கவே முடியாது. தரையிறங்கினால்தான் அது அடங்கிச் சாந்தமாகும். யானை மாதிரிதான் தண்ணியும்.”
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு சிற்றோடையைப்போல பென்னிகுக்கின் வாழ்க்கைக் கதை ஓடிக்கொண்டிருக்கிறது. பெரியாறு அணையின் தண்ணீருக்குள் பென்னிகுக்கின் முகம் இன்றும் அடியாழத்தில் அசைந்துகொண்டேயிருக்கிறது.
அணையைப் பார்வையிட்டபடியே பருந்து உயர்ந்த மரங்களினூடே நடக்கும்போது சருகுகளைக் போலவே கடந்த காலத்தின் நினைவுகளும் சப்தமிடுகின்றன.
நூறு வருடங்களுக்கு முன்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பொறியாளராகப் பணியாற்ற வந்த பென்னிகுக்கிடம் நில அளவையாளர் ஒருவர், பெரியாற்று நீரை ஓர் அணை கட்டித் தடுத்து நிறுத்தினால் மதுரை, ராமநாதபுர மாவட்டங்களுக்குப் பாசன வசதியை உண்டாக்கலாம் என்று மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில் இருந்து ஒரு திட்டமிருப்பதாகத் தெரிவித்தார். பெரியாற்றைப் பார்க்கும்வரை பென்னிகுக்குக்கு அது சாத்தியமானதுதானா என்று சந்தேகமாகவே இருந்தது. பெரியாற்றின் வரைபடங்களையும் அதன் நீர்வரத்தையும் நேரில் பார்த்தபோது, அந்தக் கனவு பென்னிக்குக்கையும் பிடித்துக் கொண்டது.
மேற்கு நோக்கிச் சென்று வீணாகும் ஆற்றுநீரைக் கிழக்காகத் திருப்பி வைகையில் இணைத்துவிட்டால், மதுரை சீமை முழுவதும் பாசன பூமியாகவிடும் என்று திட்ட வரைவுகளைத் தயாரித்தார். ஆனாலும் நினைத்ததுபோல எளிதாக இல்லை வேலை. தடைகளையும் குறுக்கீடுகளையும் தாண்டி, சென்னை மாகாண ஆளுநர் வென்லாக் முன்னிலையில் 1895-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி இந்த அணைக்கட்டுக்காக அடிக்கல் நாட்டும் பணியைத் துவக்கினார். அப்போது, 65 லட்ச ரூபாய் செலவில் அதைக் கட்டி முடிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. பணிகள் துவங்கின. கடினமான வேலை, காட்டு யானைகளின் பயம், பூச்சிகளின் விஷக்கடி, ஆயிரக்கணக்கான பணியாளர்கள். குளிர் தாங்க முடியாமல் சாவு. காலரா, எதிர்பாராத கடும் மழை. தனது கனவை நிறைவேற்றுவதற்காக காட்டு மழைக்குள்ளாகவும் பென்னிகுக் அலைந்துகொண்டிருந்தார். பணியாளர்களோடு தங்கியிருந்து அவர்களது சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொண்டவன், பென்னிகுக்கோடு வேலைசெய்த இளம் பொறியாளர் லோகந்துரை.
அணை கட்டி முடிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்பாராத வெள்ளத்தால் சில நாட்களிலேயே அணை உடைந்துபோனது விசாரணை, தவறான செயல்பாடு என்று குற்றம்சாட்டப்பட்ட பென்னிகுக், தடுப்பணைகள் உருவாக்கப்படாததால்தான் உடைப்பு எற்பட்டது என்று முடிவுசெய்து, காட்டுக்குள் தடுப்பணைகள் கட்டுவதற்கான நிதியுதவி கேட்டு விண்ணப்பித்தார். ஆங்கிலேய அரசாங்கம் பணம் தருவதற்கு மறுத்துவிட்டது.
வேறுவழியின்றி இங்கிலாந்தில் இருந்த தனது சொத்துக்களை விற்று, பணத்தைத் திரட்டிக் கொண்டுவந்து, மீண்டும் தடுப்பணைகளை உருவாக்கினார். மதுரை மாவட்டப் பகுதிகள் முழுவதும் இந்த அணையால் பாசன வசதி கண்டது. பின்னர், ஆங்கிலேய அரசே பென்னிகுக்கை கெளரவப்படுத்தியது. எந்த தேசம் நம்மை அடிமையாக்கியதோ, அந்த தேசத்திலிருந்து வந்தவர் தமது சொத்தை விற்று, நமது நலனுக்காகப் பாடுபட்டிருக்கிறார்.
அன்று முதல் ஒவ்வொரு கிராமமும் இந்த வெள்ளைக்காரப் பொறியாளர்களைத் தங்களது குலசாமிகளைப் போல மனதுக்குள்ளாக வணங்கி வருகிறார்கள். லோகந்துரையும் பென்னிகுக்கும் இப்போது உள்ளூர்ப் பெயர்களாகிவிட்டன.
காலம் எத்தனையோ கதைகளைத் தன் உள்ளங்கை ரேகையைப்போல, மாற்றாமல் வைத்துக்கொண்டேயிருக்கிறது. தண்ணீருக்காக ஒவ்வொரு கோடையிலும் நடக்கும் போராட்டமும் பிரச்சினைகளும் முடிவற்று தொடரும்போதொல்லாம் எவரோ பென்னிக்குக்கை நினைத்துக்கொள்கிறார்கள். இன்று வன உயிர்க்காப்பமாக மாற்றப்பட்டுவிட்ட பெரியாறு பகுதி மலையில் யானைகளுடன் ஈரப்புகையைப்போல, கடந்த காலத்தின் நினைவுகளும் சுற்றியலைகின்றன.
பின்குறிப்பு: இங்கிலாந்திலிருந்து பென்னிகுக்கின் கொள்ளுப்பேரன் சாம்சன், தனது தாத்தா கட்டிய அணையைப் பார்ப்பதற்காகச் சமீபத்தில் தமிழகத்துக்கு வந்திருந்தார். முதல்முறையாக இந்தியா வந்த அவருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்து, பென்னிக்குக்கின் சிலையைப் பார்வையிடச் செய்தார்கள். கூட்டத்திலிருந்த ஒரு பெண் தனது குழந்தைக்கு ‘பென்னிகுக்’ என்று பெயர் வைக்கும்படி சாம்சனிடம் கொடுத்தாள். உணர்ச்சிப்பெருக்கோடு சாம்சன், தனது தாத்தாவின் பெயரை அந்தக் குழந்தைக்கு வைத்தார். கிராமவாசிகளில் ஒருவர், சாம்சனின் கையைப் பிடித்துக்கொண்டு விளையும் ஒவ்வொரு நெல்லிலும் பென்னிகுக்கின் பெயர் ஒட்டிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். உண்மையை எந்த பாஷையில் சொல்லும்போதும் புரிந்துவிடும் என்பார்கள். அது நிஜமென்று அப்போது காண முடிந்தது.