இனிமே பார்த்தீங்கன்னா, கொஞ்ச நாட்களுக்கு வேறு எங்குமே "அது மாதியான" பத்திரிக்கைகள் அல்லது கதைகள் தேடிப் படிக்க வேண்டாத குறைக்கு எங்கு திரும்பினும் நம்மூரு புவனேஸ்வரியைப் பற்றி, பத்தி பத்தியா விலாவாரியா எல்லா வெகு ஜன பத்திரிக்கைகளும் எழுதி சமூகச் சேவை பண்ணிக் கொண்டு இருப்பதனைப் பார்க்க முடியும்.
இதனை நன்றாக உற்றுப் பார்த்தால் என்னமோ கன்னாபின்னான்னு இடிக்கிற மாதிரி ஒரு பக்கச் சார்பு நிலை கொண்டு நம் சமூகம் புவனேஸ்வரிகளை கையாள்வதாகப் படுகிறது. எழுதுற பத்திரிக்கைகளில் ஒவ்வொரு கட்டுரையும் சுமார் இரண்டு அடிகளுக்கு குறைச்சலில்லாமல் ஓடுகிறது. முழுமையா மூளை வளர்ச்சியுற்ற எவனுக்கும் தெரியும் எது போன்ற "சமூக நிர்பந்தங்கள்" இது போன்ற புவனேஸ்வரிகளை உருவாக்கவும் செய்து, அது போன்ற நிலையிலிருந்து அவர்கள் நழுவி விடாமல் இருக்க இறுக்கியும் கட்டுறச் செய்கிறது என்பதனை.
இந்தப் பின்னணியில் கோவி கண்ணன் எழுதியிருந்த கட்டுரைக்கு வந்த சில பின்னூட்டங்களை படிக்கும் பொழுது, அட எப்படிய்யா நம்ம மக்கள் முழு பூசணிக்காய சோத்துக்குள்ளர வைச்சு மறைக்க வைக்கப் பார்க்கிறாங்கன்னு தோன்றியதின் விளைவா வந்ததுதான் இந்தப் பதிவு.
ஆமா, அது போன்ற பெண்கள் எங்கு வானத்திலிருந்தா குதிக்கிறார்கள்? இல்லை மூளையில் எழுதப்பட்ட ஒரு சமிக்கை வார்த்தையைக் கொண்டு தன் தொழிலை தொடங்குகிறார்களா? பெண் குழந்தைகளையே அதிகமாக பெற்றெடுத்த பெற்றோர்கள் அந்தக் குழந்தைகள் வளரும் காலம் தோறும் அதிகமாக பயந்தே வாழ்வது இந்தச் சமூகம் அந்த அப்பா என்கிற ஒரு 'சூப்பர் மேன்' அருகிலிருந்து பார்க்க முடியாத ஏதோ ஒரு சூழல் அது துர்ச் சம்பவமாக நிகழும் மரணம், அல்லது விபத்தின் மூலமாக இயங்க முடியா ஒரு நிலை, அல்லது திருமணமாகிய ஒரு பெண்ணே அது போன்ற கணவன் அற்ற நிலையில் எப்படியாக இந்தச் சமூகம் அவர்களை மெல்லமே இந்தச் சமூக ஆற்றுக்குள் இழுத்துச் சென்று விடும் என்று அஞ்சியே வாழும் சூழலைத்தானே நம் 'புனித' மஹாத்மாக்களும், கழுதைப் புலிகளும் பக்கம் பக்கமாக வாழும் ஒரு சமூகத்தில் நடைபெறுகிறது என்பதில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும்.
அது போன்ற சூப்பர் மேன்கள் (தகப்பன்/அண்ணன்/கணவன்) இல்லாத ஒரு வாழ்வுச் சூழ்நிலையில் அங்கே பெண்களும் கொஞ்சம் இளமையாகவோ அல்லது அழகாகவோ இருந்து போனால் அவர்களுக்கு எந்தந்த ரீதியில் எல்லாம் 'அதுவாக'ஆகிப் போக அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கக் கூடும். அப்படியே தாக்குப் பிடித்து நேர் வழியில் அவர்கள் இயங்கிச் சென்றாலும், அக்கம் பக்கம், புனை கதைகளை ஊட்டுவதின் பேரில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி, கடைசியில் அங்கே கொண்டு போய் சேர்ப்பதிலும் நம் பங்குதானே முன்னணியில் இருக்கக் காண்கிறோம்.
நாம் பேசிக் கொண்டிருப்பது இரண்டாவது இந்தியாவைப் பற்றியோ? ஏனெனில் முதன்மை இந்தியாவில் இது வேறு ஒரு கோணத்தில் எடுத்துக் கொள்ளப்படலாம். இப்பொழுது, நாம் இரண்டாவது இந்தியாவைப் பற்றியே பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஏனெனில் இந்த இந்தியாவில்தான் நிறைய குழப்பங்களும், நடிப்பும், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதும் மிஞ்சிக் கிடக்கின்றன. அங்கிருந்துதான் இது போன்ற தீண்டத் தாகாத; அப்போ யார்தான் தீண்டி அவ்ளோ பெரிய தொகை எல்லாம் கொடுக்கிறாங்க? பேசா பொருட்களும்(பெண்) உருவாக்கப் படுகிறார்கள்.
அது போன்ற பேசாப் பொருட்கள் நமக்கு அவசியமாக தேவைப்படும் தேவையற்ற ஓர் ஒளி பொருள். அவ்வாறாக உருவாக்கப் பட்டவர்களுடன் நமது இயக்கம் வெளியில் ஏதோ பல சில உள் காரணங்களால் எப்பொழுதாவது வெளி வர நேர்ந்து போனால், அப்பொழுதும் அங்கு தீண்டப் பட்ட பாத்திரமே குற்றவாளி கூண்டினுள் வைத்து உருட்டப் படுகிறது. அதனை எடுத்து கையாள்பவரோ கூட்டத்தில் ஒருவனாக நின்று தண்டனை வாங்கிக் கொடுக்க குரல் கொடுக்கும் நிலைக்கு நகர்ந்து விடுகிறான். இது எது போன்ற நியாயத்தில் சேர்த்தி?
சரி பிரிதொரு நாளில் அந்தப் பாத்திரம் தான் பிடித்து தள்ளப்பட்ட நிலையை நிலை நிறுத்தி வெளி வந்து, இனிமேல் இது போன்ற ஒரு பிழைப்பு எனக்குத் தேவையில்லை என்று கருதி 'சோ கால்ட்' நேர் வழியில் சென்று வாழலாமென்று சிரத்தையுடன் வாழ எத்தனிக்கும் நாளில் கூட அது போன்ற 'கழுதைப் புலிகளும்' - புனித மஹாத்மாக்களும் சுலபமாக அவர்களை அவ்வாறு நல் வழி சமூக ஆற்றில் கலந்து விட விட்டுவிடுகிறார்களா என்ன? அது, அதுபோன்ற வாழ்ந்து கொண்டிருக்கும் 'பேசா பொருட்களின்' வாழ்வுச் சூழலில் இருந்து பார்த்தால்தான அதற்கான விடை காண முடியும் என்று நினைக்கத் தோன்றவில்லை.
முன்னமேயே அவர்களுடன் தொடர்புடைய "பெரியவர்கள்" துரத்தித் துரத்தி ஏதேதோ காரணங்களுக்காக மேலும் மேலும் பரிவாகப் பேசி, மசியாத பட்சத்தில் மிரட்டி, உருட்டி அது திருமணமே கட்டி நிம்மதியாக வாழலாமென்று புத்துணர்வுடன் வாழ்க்கையை தொடரும் முன்னால் 'பேசாப் பொருளாக' இருந்தாலும் கூட மீண்டும் உள்ளே கொண்டு வந்துவிட மாட்டார்களா என்ன ? இப்படியான ஒரு சமூகச் சூழலை நம்மைச் சுற்றியும் வைத்துக் கொண்டு, வெறுமனே இந்தப் பத்திரிக்கைகளும் ஏதோ அன்றைய வியாபாரத்தை அவசர அவசரமாக கூட்டிக் கொள்ள, அந்தப் பேசாப் பொருட்கள் நிர்பந்திக்கப்படுவதால் செய்வதனையே இவர்களும் எழுத்தின் மூலமாக மேம்போக்காக பேசிக் கொண்டே செல்வதனை எந்த தர்மத்தில் எடுத்துக் கொள்வது அல்லது சேர்ப்பது?
கொஞ்ச காலங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து தமிழகத்தை சார்ந்த இது போன்ற 'பேசாப் பொருட்கள்' பெருமளவில் மீட்டெடுக்கப் பட்டு தமிழகத்தில் வைத்து மறு மலர்ச்சி வாழ்வளிக்கப் போகிறோமென்ற திட்டத்தின் பேரில் கொண்டு வந்தவர்களின் இறுதிக் கதை என்னவாக அமைந்தது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்களை அவ்வாறு வாழ விட்டு வைத்திருப்பார்களா என்பதில் எனக்கு ஐயமே மிஞ்சுகிறது. அவர்களுக்கு நேர்ந்த கதையை தெரிந்தவர்கள் யாராவது இங்கு வந்து பகிர்ந்து கொண்டால்தான் உண்டு.
சரி, இந்தத் தொழிலில் இறங்குவதற்கு முன்னால் அது போன்ற பெண்களில் எத்தனை சதவீதம் பேர் எனக்குப் பிடித்தே இந்தத் தொழிலில் இறங்கினேன் என்ற வாய்ப்பை பெற்றவர்களாக இருக்கக் கூடும்? அப்படியே பிடித்தே இறங்கினேன் என்று சொல்லும் பட்சத்தில் இதனை ஏன் மற்ற நாட்டு அரசாங்கங்கள் போல அவர்களின் தொழிலின் இன்றியமையாமைக் கருதி அங்கீகரிக்கக் கூடாது? அப்படியாக ஆகும் பட்சத்தில் அதனையொட்டிய குற்றங்கள் குறைவதற்கான ஒரு வடிகாலாக அமைய முடியுமல்லவா?
சங்க காலத்திலிருந்து, சிலப்பதிகாரம் தொட்டு நேற்றைய தமிழ்ச் சினிமா வரைக்கும், வெறும் இயக்கப்படுபவர்களை மட்டுமே விமர்சித்து விமர்சனங்கள் வருகிறதே ஒழிய, இயங்குபவர்களை ஒன்றுமே தெரியாதவர்கள் போலவும், சுய சிந்தனையே மழுங்கடிக்கும் அளவிற்கு வசியம் செய்து அவர்களின் வீட்டு வாசலை அடைய வைத்ததாகவே பேசி வருகிறது. அப்படியெனில் 'நாடுபவர்கள்' அனைவரும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களா? புரியாமல் தான் கேட்கிறேன்.
சரி நம் வீட்டிலும் சரிசமமாக பெண் பிள்ளைகளுடன் (பல தளங்களில் - அம்மா/அக்கா/தங்கை/மனைவி/மகள் என்று) புழங்கிக் கொண்டு எப்படி ஊர் விவகாரம் என்றால் மிக எளிதாக இப்படி உண்மைகளை மறைத்து உதாசீனப் படுத்தி பேசி விட முடிகிறது? அதனைப் பற்றி பேச வருபவர்களையும் ஒரு தீண்டத் தாகாத ஆளாகக் கருதி மனதிற்குள் குறு குறுப்பை வைத்துக் கொண்டு நடித்தே வாழ்ந்து விட முடிகிறது?
என்னமோ போங்க, எத்தனை காலங்கள் வந்தாலும் சில விசயங்களில் தெரிந்தே செய்யும் அநீதிகளுக்கு எந்த விதமான மாற்று நீதிகளும் கிடைத்து விடுவதாக தெரியவில்லை. அது, அந்த நிலையில் பிறந்த அல்லது நிர்பந்திக்கப் பட்டவர்களின் போதாத காலம் என்ற அனேகத்தன்மையில் உஷ்ஷ்ஷ் யப்பாடா அது எனக்கு நடந்து விடவில்லை என்று மூச்சை பிடித்துக் கொண்டு ஓட்டிக் கழித்து விட வேண்டியதுதான் போல.