ஒரு திரைப்படத்தைப் பார்த்தால் அந்தப் படத்தினுடைய கதாபாத்திரங்கள், கடைசியாக நம்முடன் கூடவே வாழ்ந்து போனவர்களாக உணர வைக்கத்தக்க வகையில் வடிவமைக்கப் பட பல காரணிகள் தேவைப்படுவதாக உள்ளது. திரைப்படத்தின் சூல், திரைக்கதை, படமாக்கப்படப் போகும் இடம், கதாப்பாத்திரங்கள் மற்றும் இயக்குனர்.
என்னுடைய விட்டேத்தியான ஞாபக சக்தி திறமைக்கு ஓர் ஆறு மாதத்திற்கு முன்பாக பார்த்த படத்தின் கருவோ, அதன் பெயரோ கூட நினைவில் நிறுத்த முடியாத ஆள். பார்த்த படத்தையே, கடல் மணலைப் போல கொட்டிக் கிடக்கும் திரைப்படங்களிக்கிடையே மீண்டும் போஸ்டரைப் பார்த்து ஏமாந்து போய், தேர்வு செய்து பத்து நிமிடங்கள் ஓட விட்டுப் பார்க்கப் பார்க்க பார்த்த மாதிரியே இருக்கே என்று வெளி வந்து விடும் அளவிற்கே உண்டு.
மேலும் படங்கள் கிடைக்கிறதே என்று துணிந்து க்ளிக்கி விடும் ஆளும் கிடையாது. பனி படர்ந்த மலைப்பாங்கான வெளி, பெரிய ஏரி, வானம் தொட்டு நீளும் பாலை அல்லது கடல் அதில் ஒரு படகு... இப்படியாக போஸ்டர் அமையும் படி இருந்தால் அந்த தூண்டிலை கண்டிப்பாக கடிக்கும் ரகம் எனது ரசனை.
அப்படியாக இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு போஸ்டர் கண்ணில் சிக்கியது. அந்தப் படத்தை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. படத்தின் கதாபாத்திரங்களான ஃபாக்சியும் (நிலா), வில்காவும் (கதிரவன்) பெரு நாட்டின் ஆன்டெஸ் மலை உச்சியில் அவர்களுடைய குடிசையோட மனதை விட்டு அகல்வேணா என்று அடம்பிடித்தபடி அமர்ந்து விட்டார்கள். வேறு வழியே தெரியாமல் இதை எழுதத் துணிகிறேன்.
படத்தின் பெயர் எடெர்னிடி (Eternity) 2017லில் வெளி வந்த படம். படத்தினுடைய கதாபாத்திரங்கள் இரண்டு பேருமே அய்மாரா மொழி பேசும் பழங்குடி முதியோர்கள். முதியோர்கள் என்றால் தங்களது அந்திமத்தின் கடைசி நாட்களை (உண்மையிலும்) வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அந்த இருவரைத் தவிர படத்தில் நான்கு செம்மறியாடுகள், ஒரு லாமா, நாய் உண்டு. இவைகளைத் தவிர்த்து அவர்களோடு நாமும் சேர்ந்து உண்டு, உறங்க, சும்மா கைகளாலேயே கருங்கற்களை கொண்டு அடுக்கப்பட்ட சுவரையும், கோரைப் புற்களால் வேயப்பட்ட கூரையுமான ஒரு குடிசை உண்டு. பின்பு வீட்டை விட்டு வெளியே வந்தால் பச்சைப் பசேல் என நெஞ்சில் ஒட்டும் கண்ணுக்கெட்டிய தூரம் கொண்ட ஈரமான புல்வெளி மேடும், பனிகாலத்தில் அதே மலைகள் உறைபனியை போர்த்தியுமென கதை சொல்லும்.
அந்தத் தம்பதிகளுக்கிடையேயான உரையாடல் எந்த ஒரு மிகைப்படுத்தலுமில்லா மெல்லிய ஓடையைப் போல நகர்கிறது. தங்களைச் சுற்றி பரந்து விரிந்துள்ள இயற்கையை அவர்களுடைய வாழ்வின் ஒரு பகுதியாக, கூடவே சுவாசித்து, உண்டு, உறங்கி எழும் ஏனைய உறுப்பினராக கையாள்கிறார்கள்.
ஒரு ஹைலைட் சொல்கிறேன்- கணவரான வில்கா, சேகரித்த தானியத்தை தனது மனைவியான ஃபாக்சியுடன் தூற்றிக் கொண்டிருக்கிறார். நிற்க முடியாமல் நின்று கொண்டு ஒரு கையால் தானியம் நிரம்பிய மடித்துணியை பிடித்த வாரே, மறு கையால் அள்ளி அள்ளி காற்றுப் பட போடுவார். அப்பொழுது, காற்று குறைந்து விடும். வில்கா உன்னால் தான் காற்றை வரவழைக்க முடியுமே, செய்யேன் என்று கூறுவார். சரி, வில்கா உட்காருங்க என்று கூறியபடியே, பெருக்க வைத்திருந்த துடைப்பத்தை காற்றில் சுழற்றி தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து "மிஸ்ட் அழகி வந்திருக்கா வலிமையான காற்றே ஆடிப்பாடிக்கொண்டு வா" என்று ஆடிப்பாடிக் கொண்டே ஃபாக்சி காற்றை அழைப்பாள்... சற்று நேரத்தில் அந்தத் திசையில் நல்ல வேகமான காற்று வீசும். இதில் என்ன சிறப்புன்னா, அந்த ஃப்ரேம் ஒரே டேக்கில் எடுத்தது போலவே இருக்கும். காற்று கூட அவர்களுடன் பேசிப் புழங்குவதைப் போன்ற ஒரு தோற்றத்தை நம்மிடம் கடத்துவார்கள்.
ஆன்டெஸ் மலையின் 15 ஆயிரம் அடி உயரத்தில் வைத்து படமாக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த மக்களின் நடவடிக்கைகளும் காணவில்லை. வயதான காலத்தில் அந்த தட்பவெப்ப சூழலுக்கு தகுந்தவாறு அங்கு வாழ்வதில் அவர்களுக்கு பிரச்சினை மேல் பிரச்சினையாகுகிறது. தன்னுடைய ஒரே மகன், நகரத்திற்கு சென்று விடுகிறான். நகரம் அவனை மொழியை மறக்கச் செய்து விழுங்கிவிட்டதாக அரற்றுகிறார்கள். ஏன் நம்மை இப்படி தனியாக தவிக்க விட்டுவிட்டுச் சென்று விட்டான், என்ன தவறு இழைத்தோமென்று அவர்களின் உரையாடலுக்கிடையே புலம்பலாக வெளிப்படுத்துகிறார்கள், மகனின் பிரிவை. வருவான் என்ற நம்பிக்கையும், அவ நம்பிக்கையுமென எதிர்பார்ப்பில் நம்மையும் கூடவே அமர வைத்து தூரத்து வெளியைப் பார்க்க வைக்கிறார்கள்.
பிரச்சினையின் தீவிரமாக தீக்குச்சிகள் தீரப்போகிறது. ஃபாக்சி தினமும்
தீக்குச்சிகளை எடுத்து எண்ணி எண்ணிப் பார்த்துவிட்டு வில்காவிடம் புலம்பி வருகிறாள். ஒரு நாள் தீர்ந்தும் விடுகிறது. வேறு வழியில்லாமல், தனக்கு வயதாகிவிட்டது என்று மறுத்தாலும் பக்கத்து ஊருக்கு வில்காவை அனுப்பி வைக்கிறாள். அவரும் லாமாவை துணைக்கழைத்துக் கொண்டு செல்லும் வழியில், முடியாமல் சுருண்டு விழுந்து விடுகிறார். கணவர் இரவுதட்டியும் வீடு திரும்புவதற்கான எந்த அடையாளமும் இல்லாததால், ஃபாக்சி தேடிக்கொண்டு செல்கிறாள். பிறகு இருவருமாக தள்ளாடி வீடு வந்தடைகிறார்கள்.
தீக்குச்சிகளை எடுத்து எண்ணி எண்ணிப் பார்த்துவிட்டு வில்காவிடம் புலம்பி வருகிறாள். ஒரு நாள் தீர்ந்தும் விடுகிறது. வேறு வழியில்லாமல், தனக்கு வயதாகிவிட்டது என்று மறுத்தாலும் பக்கத்து ஊருக்கு வில்காவை அனுப்பி வைக்கிறாள். அவரும் லாமாவை துணைக்கழைத்துக் கொண்டு செல்லும் வழியில், முடியாமல் சுருண்டு விழுந்து விடுகிறார். கணவர் இரவுதட்டியும் வீடு திரும்புவதற்கான எந்த அடையாளமும் இல்லாததால், ஃபாக்சி தேடிக்கொண்டு செல்கிறாள். பிறகு இருவருமாக தள்ளாடி வீடு வந்தடைகிறார்கள்.
வந்து பார்த்தால், நாய் வேறு காணாமல் போனச் சூழலில் செம்மறியாடுகள் அனைத்தும் ஓநாயால் கொல்லப்பட்டு கிடக்கிறது. இருவரும் அரற்றி அழுகிறார்கள். அந்த ஃபாக்சியின் அழுகுரல் நம்மை எங்கோ கரையானைப் போல அரித்துக் கொண்டே இருக்கிறது. பிறகு தீக்குச்சிகளும் தீர்ந்து போன நிலையில் நெருப்பை காப்பாற்றி வைக்க சிறு ஓட்டில் சேமித்து வைத்த படி தூங்கச் செல்கிறார்கள். எதிர்பாரா விதத்தில் இரவில் தீ பரவி குடிசையும் எரிந்து நாசமாகி விடுகிறது.
பக்கத்தில் கால்நடைகளுக்கு போட்டு வைத்திருந்த குடிசைக்கு நகர்கிறார்கள், எப்படி கணவர் நோய் வாய்ப்பட, மகனாக வளர்த்த ஒரே லாமாவய் பசிக்கும் கணவருக்காக பலியிடத் துணிகிறாள் என்பதும், அதனை சமைத்து அவருக்கு ஊட்டுவதற்கு முன்பாக அவரின் கைகால்கள் காற்றில் உதறியவாரு உயிர் பிரிகிறது என்பதெல்லாம் நாமும் கூடவே அமர்ந்து அனுபவிப்பதைப் போல அவ்வளவு நேர்த்தியாக படைத்திருக்கிறார்கள்...
படத்தில் வந்த முதியோர்கள் இதற்கு முன்னாள் வேறு எந்த படத்திலும் நடித்ததாகத் தெரியவில்லை. அந்த முகங்கள் அந்தப் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியென அந்த முகமே கதை சொல்கிறது. இசையா மூச்! படத்தில் தாத்தா இசைக்கும் ஒரிரு புல்லாங்குழல் காட்சிகளைத் தவிர இசைக்கு வேலையே இல்லை. எப்படி இந்தப் படத்தை அந்த லெகேஷனில் வைத்து படமாக்கி இருப்பார்கள் என்பதே ஓர் ஆராய்ச்சிக்குறிய விசயம். அழுகாச்சிப் படம்தான். துணையோட பாருங்க, வாழ்வின் பல முரண்கள் கண் முன்னே துகள்களாக உதிர்வதை உணர்வீர்கள்.
ஃபாக்சி, வில்கா பெயர்கள் ஆன்டெஸ் மலைகளைத் தாண்டி நம் காதுகளில் பல நாட்கள் ரீங்காரித்துக் கொண்டிருப்பது உறுதி. A simply awesome movie!