ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் எனக்கு நமது ஊரின் இளையராஜா எந்த அளவிற்கு வாழ்வெனும் இந்த பெரும் ஆறு காட்டாற்று வெள்ளமாக அடித்து இழுத்துச் செல்ல எத்தனிக்கும் கணம் தோறும் கரையில் அள்ளி வந்து போட்டுவிட்டுச் செல்லும் துடுப்பாக அமைவாரோ, அது போலவே அக்கரையில் வில்லியம்ஸ் எனக்கானவர். அவரின் மரணம் என்னை மிகவும் நெருக்கமாக உணரச் செய்கிறது. எத்தனையோ மரணங்களை கண்ணுற்றும், கேள்வியுற்றும் கடந்து செல்கிறேன். அவைகளை ஒரு மரத்தின் பூப்பதற்கும் உதிர்வதற்கும் ஒப்பானதாகவே எடுத்துக் கொண்டு. எனது உதிர்வையும் ஓர் ஒரத்தில் நிறுத்திக் கொண்டே!
ஹாலிவுட் நடிகர்களில் குறிப்பிடும் படியாக ஒரே நபரை இலக்காக கொண்டு பல படங்கள் பார்த்திருக்கிறேன் என்றால் அது ராபின் வில்லியம்ஸ் நடித்த படங்களாகத்தான் இருக்க முடியும். இவர் பெரும்பாலும் நடித்த அத்தனை படங்களும் மனித மன சிக்கல்களோட வாழத் தலைப்படும் விளிம்பு மனிதர்களுடன் வாழ்வதை ஒத்ததாகவே இருந்திருக்கிறது. மேலோட்டமான ஒரு நகைச்சுவையுணர்வுடன் அழுத்தமான கதைக்களம் கொண்டதாக இருக்கும். குறிப்பிடும் படியாக என்னை மிகவும் பாதித்த படங்களென கூற வேண்டுமானால் - Good Will Hunting, Good Morning Vietnam, House of D, Bicentennial Man, Mrs. Doubtfire இப்படி அடிக்கிக் கொண்டே செல்லலாம்.
ஒவ்வொரு சிரிப்பை வழங்கும் கண்களுக்கு பின்னாலே எங்கோ ஓர் ஒரத்தில் அவர்களே அறியாத தனது சோக பிம்பம் அமர்ந்திருக்கிறதென அறிகிறேன். இவர் எத்தனை சிவப்பு கம்பளங்களையும், பளபளக்கும் கார்களையும், நடிகர்களையும், நடிகைகளையும் உலகின் பெரும் பணக்காரர்களையும், நிலங்களையும் கண்டிருப்பார்.
இவை அத்தனையும், இப்படி தன் தனிமையில் கண்டதாகவோ, இவை எதுவும் தன்னுடைய துயருக்கு மருந்தாகவோ இருக்க முடியாது என்ற நிலையிலேயே தன்னுடைய வாழ்வை எடுத்திருக்க துணிந்திருப்பார். அதுவும் தனது 63வது வயதில்! நல்ல மனித நேயரும் கூட என்பது எனது தோல் உரசும் தூரத்திலிருந்து பழகிய ஒருவரின் சொந்த வாக்குமூலம். அது சார்ந்த புகைப்படங்களையும் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு மனதிற்குள்ளும் திறக்கப்படாத இன்னும் எத்தனையோ கதவுகள் சிலந்தி வலைகளுடன் தூசி படிந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆயிரம் பேருக்கிடையிலும் தனிமையை உணர்வது போல! அவைகளில் ஒரு கதவை திறந்து தீர்க்கமாக பிரவேசிக்கும் பொழுது இந்த வாழ்வே சூன்யமாகி விடுகிறது போல. இந்த இழப்பு தனி மனித ‘தனிமையை’ சுட்டி நிற்கும் கேள்வி வினா? என்ன செய்யப் போகிறோம்... ஆழ்ந்த வலிகளோடு...
சில வருடங்களுக்கு முன் பார்த்த மாத்திரத்தில் கடந்து போக விடாமல் அமரச்செய்து வில்லியம்ஸிற்கு நான் செலுத்திய நன்றியாக ஒரு பதிவு - House of D(the movie that stole my heart).