லிபியாவில் ‘ஆபரேசன் ஆடிசி டாவ்ன்’ தொடங்கி கடாஃபி மற்றும் அவர்களது மகன்களின் கொக்கரிப்பிற்கு ஒரு முடிவுரை உலக நாடுகள் சேர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏன் நமது அ’ஹிம்சையை மட்டுமே விரும்பும் தேசம் இங்கிருந்து கடாஃபியை அடிக்காதீங்க, அடிக்காதீங்கன்னு கூக்குரலிடுகிறது. யாருக்காவது என்ன ஏதுன்னு ஏதாவது தெரியுமா?
லிபியாவில் கடந்த 40 வருடங்களாக தனது இரும்பு கரத்தைக் கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி பெட்ரோல் வளத்தின் மூலமாக கிடைக்கும் அத்தனை பொருளாதாரத்தையும் தானும், தன் மகன்களின் மூலமாகவும் வெளி நாட்டு பாடகிகளை கொண்டு வந்து நாலு பாட்டு பாடு மில்லியன் கணக்கா பணம் தாரேன்னு நாட்டின் பணத்தை செலவு பண்ணி களிக்கும் கூட்டத்திற்கு ஏன் இத்தனை பெரிய ஜனநாயகம், சர்வதிகார அரசாங்கத்திற்காக குரல் கொடுக்கிறது?
கிட்டத்தட்ட எகிப்தில் மக்கள் எழுச்சி எழ ஆரம்பித்த சமயத்திலேயே லிபியாவிலும் மக்கள் துணிந்து தெருவிற்கு வந்து விட்டார்கள். சர்வதிகாரிக்கு எதிராக எழுந்து போராட்டம் நடத்த முன் வர வேண்டுமென்றால் தனது உயிரை இரண்டாம் பட்சமாக பனயம் வைத்து விட்டுத்தான் முன் வந்திருப்பார்கள். அதுவும் இத்தனை ஆண்டுகள் வறுவலுக்கு பிறகு.
இது போன்ற ஒரு வாய்ப்பை பயன்படுத்தி ஜனநாயகத்தில் திளைத்த நாகரீக நாடுகள் அது போன்று தானாக மக்களே முன் வந்து கேக்கும் நிலையில் தன்னாலான உதவிகளை செய்து, ஏனைய சர்வாதிகாரிகளுக்கும் ஓர் எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் செயல்களை செய்து மக்களுக்கு ஒரு தீர்வை வாங்கி கொடுப்பதல்லவா முறையாக இருக்க முடியும்.
இருந்தாலும் யூ. என்_க்கு செலக்ட்டிவ்வா மனித உரிமைகள் பாதிக்கப்படும் பொழுது, தட்டிக் கேட்கப் போகும் இடம் எது போன்றது, செல்வதின் மூலமாக ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்பதனை எல்லாம் கருத்தில் கொண்டுதான் இறங்குகிறது என்பதனை மறுப்பதற்கில்லை. ஈழத்திலோ அல்லது உகண்டாவிலோ நடந்தேறிய இனப் படுகொலையின் போதெல்லாம் இது போன்ற செலக்ட்டிவ் முன் உரிமைகளே முன் நின்றன. இது போன்ற சமயங்களில் உலக நாடுகளுக்கிடையே முடிவு எடுப்பதில் பிளவுற்று இருந்தாலும் அங்கே சென்று செலவழிப்பதில் எந்த பயனுமில்லை என்றால், மனித உரிமை மீறல்களைக் கூட கிடப்பில் போட்டு வேடிக்கை பார்க்க வைத்து வந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?
கடாஃபி தனது நாட்டின் தேசீய தொலைக்காட்சியிலேயே தோன்றி போராட்டக்காரர்களை நோக்கி - இதோ எனது கூலிப்படை இன்று இரவு வருகிறது, எந்த ஈவு இரக்கமும் காட்டப் போவதில்லை சாவதற்கு தயாராக இருங்கள் என்று அறைகூவல் விட்டே கோரக் கொண்டாட்டத்தை தொடர்கிறார். இதனை யூ. என் என்ற அமைப்பு அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்க வேண்டுமா? இதன் மூலமாக என்ன இந்த உலகத்திற்கு செய்தியாக கொடுக்க முடியும்? மேலும் பல ஈழ, உகாண்டாவை ஒத்த படுகொலைகளை நடத்துங்கள் உங்களின் சொந்த குடும்ப பேராசைக்காக என்று விட்டுவிடலாமா.
ஏன் இந்தியா போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாடு யூ.என்_ல் கடாஃபி நிகழ்த்தும் வன்முறைக்கு எதிராக ஓட்டு போடுவதில் இருந்து வெளி வந்தது, வந்தும் ஏனைய நாடுகள் எடுத்திருக்கும் முயற்சியினை உடனடியாக நிறுத்துமாறும் கூறி வருகிறது. ஏன் இதனைப் போன்று அன்று ஈழத்தில் இறுதி கட்ட போரில் அத்தனை அப்பாவி உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள், சீனாவும் இலங்கை அரசாங்கத்திற்கு பக்க பலமாக நின்று கொல்லத் துணை போகிறது என்று தெரிந்தும் இந்தியா இன்று லிபியாவிற்கு விடும் அறை கூவலை அன்று ஈழ மக்களுக்காக விடவில்லை? ஒன்னுமே புரியலை...
சகாய விலையில் எண்ணெய் தருகிறேன் என்றால் மனித உயிர்கள் ஒன்று மற்றதாகி விடுகிறதா? இங்கேயும் நம் சுயநலம் வெட்ட வெளிச்சத்தில் அம்மணமாக நிற்கிறது.
பஹ்ரைனில் நம்மவர்கள் அந்த நாட்டு அரசருக்கு ஆதரவாக பாகிஸ்தானின் கூலிப்படைகள் எப்படி அந்த நாட்டு அரசருக்கு சாதகமாக போலீஸ் என்ற பெயரில் அடித்து கொல்வதற்கு துணை நிற்கிறதோ, அதே நிலையில் நம்மூரிலிருந்து சாதாரணமாக வேலைக்கு சென்றவர்களும் கிட்டத்தட்ட பாகிஸ் கூலிப்படைகளின் மனம் போன்றே தாங்களும் நடந்து கொள்வதாக படிக்க முடிகிறது.
அங்கும் 200-300 வருடங்களாக ஒரே பெரும்பான்மையற்ற சன்னி முஸ்லீம் நாட்டை ஆண்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் ஒடுக்கப்பட்ட ஷியா பிரிவினர் தங்களுக்கும் சம உரிமை வேண்டுமென்று போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் எங்கிருந்து நாம் இடையில் வருகிறோம். ஏன் இந்த சுயநலத்தனமான நிலையை எடுக்க வேண்டும்? அங்கே, நமக்கு வேலை போய் விடலாம் என்பதனைத் தவிர வேறு ஏதாவது யோசிப்பதற்கு இருக்கிறதா? இது போன்ற புத்தியைத்தான் நாம் ஐக்கிய நாட்டுச் சபையிலிலும் காட்டி வருகிறோம்.
நீதி, நியாயம் என்ற ஒன்றெல்லாம் நமது சுயநலத்திற்கு முன்பு ஒன்று மற்றதாகி விடுகிறது என்றுதான் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும் காட்டிக் கொள்கிறோம். இதனையே பிர தேசங்களில் தற்காலிகமாக இருக்கும் பொழுதும் கண்ணை மூடிக் கொண்டு முன் வைக்கவும் எத்தனிக்கிறோம் விளைவுகளை பற்றி சிறிதும் கவலையோ, அக்கறையோ இல்லாமல்.
லிபியாவிலும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் நடந்து வரும் மக்கள் எழுச்சியினையொட்டி வரும் ஆபத்திற்கு பின்னால் பல நாட்டு மக்கள் வெளியேறி வருகிறார்கள். நம்மூர்க்காரர்கள் ஊருக்கு சென்று என்ன செய்வது, நம்மூரில் எனக்கு உள்ள சூழ்நிலையை விட இதுவே பரவாயில்லை என்று அங்கயே இருந்து விடவும் துணிவதாக செய்திகள் படிக்கிறோம் அதுவும் லிபியா போன்ற நாட்டிலிருக்கும் நம்மூர் பெண்களே இப்படியாக முடிவு எடுத்து தங்கியிருக்கிறார்களாம். இதன் மூலமாக தெரிய வருவது என்ன? நம்மூரில் எத்தனை துயரங்களையும், பொருளாதார நலிவடைவையும் பார்த்திருந்தால் அப்படியான ஒரு துணிவிற்கு வந்திருப்பார்கள். இதனை நினைத்து பெருமைபட்டுக் கொள்ளவா முடியும்.
நம்மால் செய்ய முடியாததை அடுத்தவன் செய்யவாவது விட்டு விலகி நிற்போம். இந்த நேரத்தில போயி இரட்டை நிலை எடுப்பதெல்லாம் எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிற மாதிரி காட்டி கொடுத்துவிடும். கொஞ்சம் அப்படி ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கலாம், ஈழத்தில நடந்தப்போ இருந்த மாதிரியே!
P.S: Photo Courtesy: Net