நான் என்னுடைய பள்ளி இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுது நன்றாக ஊன்றிப் படிக்க வேண்டி நண்பர்களுடன் ஒரு தங்கும் அறை எடுத்து தங்கச் செய்தோம். அது என் வீட்டிலிருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரமே இருந்தது. என்றாலும், இரு வேறு கண்டங்களில் வசிப்பவர்களுக்கான சில வேறுபாடுகள் அந்த சமூகத்தில் வாழ்பவர்களுக்கும் என்னுடைய வீட்டினுள் வாழும் மக்களுக்குமிடையே இருந்தாக உணர முடிந்தது.
சரி அப்படி என்னதான் பெரிய வித்தியாசத்தை உணர்ந்தேன். அவ்வாறு அங்கு தங்கியிருந்த இடம் ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களின் கடவுள் சார்ந்த நம்பிக்கைகள் கொஞ்சம் அதீதமான வெளிப் பகட்டிற்காக அமைந்ததாக இருந்தது.
அவர்களின் பெருவாரியான தொழில் வட்டிக்கு வட்டி போட்டு கறுப்புப் பணத்தை பெருக்குவது. இது பரம்பரையாக கையிறக்கம் பெற்று ஜரூராக வாழும் ஒரு கூட்டம் இருக்குமிடமாக திகழ்ந்தது. அங்கு வருடந்தோறும் இந்த புரட்டாசி என்ற மாதம் வந்துவிட்டால், தினமும் பெண் பிள்ளைகள் தவறாமல் வீட்டைக் கழுவி, துடைத்து, மொழுகி விரதச் சாப்பாடு செய்து அமர்க்களப் படுத்தி விடுவார்கள்.
இதிலென்ன இருக்கிறது என்று கேக்குறீர்களா? நல்லதுதானே வீட்டை சுத்தம் செய்து, ஆரோக்கியமான உணவு சமைத்து சாப்பிட்டால் என்று கேக்கத் தோன்றும். இதில பாருங்க இந்தக் குடும்பங்கள் எல்லாம் சம்பாரிக்கிறதே ஒரு மார்க்கமான முறையில்தான், அடுத்தவர்களின் வயிற்றில் அடித்து பிடிங்கி.
அப்படியாக செய்யும் பொழுது அதற்கு வடிகாலாக இது போன்ற பரிகாரங்கள் அவசியமென கருதி, திருடிய பணத்தில் கொஞ்சமேனும் அந்த பெரிய சாமீக்கு படைக்க வேண்டுமென்ற நியாயத்தனத்தில் செய்தாலும், பல வீடுகளில் ஆண்கள் இதனில் கலந்து கொள்ளாமலேயே (சாப்பிடுவதை தவிர்த்து), தெருவில் நின்று அடவடிப் பேசி வட்டி வசுலிக்கும் அதே மன நிலையிடன் தன் வீட்டிலும் உள்ள பெண்களை அவர்கள் உடம்பிற்கு முடியாமல் இருக்கும் பட்சத்திலும் கடவுளுக்கு சேவை செய்யச் சொல்லி கொல்லாமல் தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் மனிதர்களின் அடிப்படை அறிவை அறிந்து கொள்ளவே இப் பதிவு.
கடவுளின் அருளைப் பெற வேண்டி, இந்த சோம்பேறித் தாதாக்கள் தன் கட்டிய மனைவியே சுவாசக் கோளாறால் பீடித்திருக்கும் சமயத்தில் கூட, ஒட்டடை அடிக்க வைத்து மேலும் அந்த நோயின் தாக்கத்தை அதிகப் படுத்தினால் அந்த கண்ணை கட்டிக் கொண்டிருக்கும் சாமீ என்ன பலனை இந்த சோம்பேறிக் கணவன் சாமீகளுக்கு வழங்கும்?
இந்த வன்புறுத்தலின் மூலமாக அவர் பெறுவது வரமா அல்லது சாபமா? சிந்திப்பார்களா அவர்கள்??