ஓ! பாய்!! எங்கிருந்து இந்த பகுதியை நான் ஆரம்பிக்கிறதிங்கிறதிலேயே ஜாங்கிரி சுத்துற அளவிற்கு விசயமிருக்கு. ம்ம்ம் நான் பதிவ எழுத ஆரம்பிச்சு ஐந்து வருஷமாகிப்போச்சப்போய்... எனக்கு இந்த கணினியில தமிழ்ல கூட எழுத முடியுங்கிறதை நானே தட்டு தடுமாறி விழுந்து, அங்க நின்னு இங்க நின்னு கடைசியா இந்த வலைப்பூக்கள், பிறகு தமிழ்மணம் அப்படின்னு ஒண்ணு ஒண்ணா என் சொந்த தேடல்ல (இப்பெல்லாம் இத பயன்படுத்தவே வெக்கமா இருக்கு...) இங்க வந்து விழுந்தேன்.
ஏன் அப்படி நிகழ்ந்ததுன்னா, ஏதோ ஒண்ணு இன்னும் நிறைய மனிதர்கள்கிட்ட இருந்து கத்துக்க இருக்கின்னு தேடித் தேடி கண்டம் கண்டமா பராக்கு பார்த்திட்டு கத்துக்கிட்டு வந்தாலும், நம்ம மக்கள், நமக்கு நெருக்கமானவங்க எப்படியா உரையாடிகிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும்னு வாரது இயற்கைதானே? அதானே சம்பந்தமோ, பொருத்தமோ இல்லாத இடமின்னாலும் இதுக்குள்ளர கெடக்கணும்னு ஒரு உறுதியும் கொண்டு அதுவும் நானே எடுத்துக்கிட்டது (இல்லன்னா, நான் விலகுகிறேன்னு பதிவ போடச் சொல்லும்...), யாரும் எனக்கு அறிவுரை கொடுக்கல. இங்க இருக்கவங்க யாரு என்னான்னு கூட அறிமுகப் படுத்தி அதுக்குப் பிறகு எழுந்து நடக்கவோ, தவழவோ சொல்லிக் கொடுக்கல. புதிசா வாரவங்க நிறைய பேரு நிறைய பக்க பலத்தோட, பின்னணியோட இப்பொல்லாம் வருவதனையும் அவதானிக்கிறேன்.
எல்லாமே என்னுடைய சொந்த முயற்சியில என்னோட அறிவு தளத்தில யார், என்ன சொல்லுறாங்க, எங்க உண்மை இருக்கு, எங்க பாசாங்கு நிரம்பி இருக்கு, எங்க சும்மா நேரத்தை கொல்ல யாகூ, கூகுள் சாட் அறையில இருந்து நேரடியா இங்க வந்து பழகிக்கிறதுக்கு மட்டும் இருக்காங்கன்னும், அதனைத் தாண்டி எப்படி மரணத்தை கண்ணுக்கு கண்ணாக பார்த்தவனாக, வாழ்க்கையையும் வாழ்ந்து, புரிந்து கொண்டவர்கள் யார் என்பதனையும் என்னளவிலான புரிதல்களோட மேலும் வாழ்வினை படிப்பதற்காக அவர்களின் வீடு தேடி போய் வாசிப்பதுமாக எனது ஐந்து வருட வலையுலக வாழ்க்கையை ஓட்டியிருக்கிறேன். இங்கு பல வலையுலகப் போர்களை பார்த்திருக்கிறேன், பல மனிதர்களின் நிறங்களைக் கண்டிருக்கிறேன், அவர்களுக்கான அங்கீகாரப் போரில் வாழ்வின் காலத்தினையும், தேய்வினையும் கண்டுணர்ந்ததிருக்கிறேன்.
இது எப்படி இருக்கின்னா எனக்கு, இப்படியாக; கற்பனைய விரிச்சிக்கோங்க கீழ் கண்டவாறு, எனக்கு திடீர்னு ஒரு 1000 வருஷம் வாழுற மாதிரியான வரம் கிடைச்சிருச்சு (அய்யோ நிஜ வாழ்க்கையில அப்படியான ஒரு தப்பை செய்ய மாட்டேங்க...). அதுவும் அந்த சிறப்பு வரத்தில ஒரு முப்பத்தஞ்சு மைலுக்கு மேல நிலையான இடத்தில பூமியை மட்டும் சுத்த விட்டு நான் கீழிருப்பவர்களின் வாழ்வையும், தேய்வையும் அவர்களின் பாரம்பரியம்/கலாச்சாரம்/பண்பாடு போன்ற மற்ற காலத்தினூடாக அழித்தெழுதும் விசயங்களையும் கண்ணுற்றுக் கொண்டே வாழ்ந்து வருவதனைப் போன்றதாக.
உங்களால் அனுமானிக்க முடிகிறதா அப்படிப்பட்டதான ஒரு வாழ்க்கையின் அவதானிப்பில் எத்தனை விசயங்களை கண்டுணர்ந்து எத்தனை விதமான நம்முள் எழும் கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கும் தனிமனித/சமூக வாழ்வின் பொருட்டு எது போன்ற விசயங்களில் அலட்டிக் கொள்வது நலம் பயக்கும், பயக்காது என்பதிலிருந்து இன்னும் எது எதுக்கோ சுயமாக கற்றுக்கொள்ள முடிந்திருக்கும்!
சமூகத்தில வாழ்ந்திட்டு இருக்கும் போது பிச்சை எடுத்து சாப்பிடுற நிலைக்கும் போறோமா அதுவும் நம்மோடதான், இல்ல ஊழல் செஞ்சு கோடி கோடியா சுருட்டிக் கொண்டு வாழுறோமா அதுவும் நம்மோடதான். அதப்பொருத்து ஒருத்தனுக்கும் கவலை இருக்காதுங்கிறதையும் தெரிஞ்சிக்கணும். காலம் பாட்டுக்கு இயங்கி போயிட்டே இருக்கு!
திரும்பவும் கதை. இப்போ அந்த பூமிக்கு மேல நின்னு பார்த்துட்டு இருந்தப்போ, மூணு தலை முறைக்கு முன்னாடி நம்மோட பாட்டி மொட்டை போட்டுக்கிட்டு ஆறு வயசில கல்யாணம் கட்டி, 17 வயசில அதுவோட கணவன் புட்டுக்கப் போக இதுக்கு ஒரு மொட்டை போட்டு, வெள்ளப் புடவை சாத்தி திண்ணைக் கொண்டையில உட்கார வைச்சி எத்தனை ஈ போகுது வருதுன்னு எண்ணிக்கிட்டு உட்கார வைச்சிருந்ததையும் பார்த்தோம், அதே நேரத்தில ஒரு 200 வருஷத்தை பாஸ்ட் ஃபார்வேர்ட் பண்ணி இன்னைக்கு மறுமணம் பண்ணவிட்டு அதே வயசு ஆள ISOல வேலைக்கு அனுப்பி அடுத்த நிலாவிற்கு போற ராக்கெட்டின் திசையறி மானியின் புரெஜெக்ட் கட்டுறதின் தலைமைக்கு ஆளாப் போடுற அளவிற்கு மாறியிருந்தா அதிசயமா இருக்குமா இல்லையா. வெயிட், வெயிட், இந்த நிலையில பாவம் அந்த மொட்டை போட்ட பாட்டி, வெறும் ஈயை எண்ணியே, போர் அடிச்சுப் போயி சேர்ந்திருக்கும் சமூகத்தின் மேல அத்தனை கோபத்தையும் வைச்சிட்டு; நியூக்ளியார் வெப்பனையே மனசிக்குள்ளர அது கட்டி முடிச்சிருக்கும் தான் சாவும் பொழுது இந்த ஊரையே எவனெல்லாம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருந்தானோ அவனப் பூராவும் கூடவே வாரிக்கிட்டு போற ரேஞ்சிற்கு... யாருக்குத் தெரியும் அது என்ன புத்தகமா எழுதினிச்சு, நாம தெரிஞ்சிக்க.
சோ, நஷ்டம் அந்த தனி மனுசிக்குத்தான். ஆனா, அதே கால கட்டத்தில் ஏதாவது பலப்பல மனுசியோ/மனுசனோ அதன் வலியை நன்கு உள்வாங்கி சிறிது சிறிதாக நம்ம பாட்டியின் தெருமுனையிலோ ஊரின் மறு கோடியிலோ முனகியிருக்கக் கூடும். அந்த சிந்தனையின் பொருட்டு விளங்காத தடிமாட்டுத் தோல் கொண்ட மற்ற மனிதர்களுக்கும் விளங்கியிருக்கக் கூடும்; நாம் பேசிக் கொண்டிருக்கும் பாட்டியின் சிறு வயதின் தேவைகளும், ஏக்கங்களும், வலிகளும்... இது போன்றதாகத்தான் சமூகத்தின் தேவைகள் காலம் தோரும் விரித்து உள்வாங்க உதவியாக இருந்திருக்கிறார்கள். இந்தக் கால கட்டத்தில் பேசுவதற்கு கூட கூலி கிடைத்தால்தானே வாயைத் திறப்பதான சந்திப்பில் காலம் சுழன்று நம் கலாச்சாரத்தை கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் பொழுது, உண்மையான அக்கறையோடு பேசுபவர்களையும் காகம் கரைந்து கூட்டத்தை சேர்த்து அழுகி கெடக்கும் மாமீச எச்சத்தை உண்ணக் காத்து நிற்கும் ஹைனாக்கள் போல சுற்றி வந்து அவர்களை விரட்டியடிப்பதாலும், கிடைத்திருக்கும் சுய உணர்வோடு தன்னிச்சையாக சிந்திக்கும் காலங்களான ஒரு 30 வருடங்களுக்குள் என்னாத்தை பெரிசாக வாழ்ந்து முடித்ததினைப் போன்று உணர்ந்து விடப் போகிறோம்; தன் எண்ணத்தை கூட வெளிப்படுத்திவிடா வண்ணம்.
தனக்கான சிந்தனைகளுக்கு கூட வாய்பூட்டு போட்டு, நழுவிக் கொண்டு நன்றாக வாழ்ந்து முடித்திருக்கிறோம் (தனக்கு மட்டுமேயாக) என்று எண்ணி மண்ணுக்குள் புகுந்து பாறையின் ஒரு பகுதியா மீண்டும் ஆகிக்கொள்வதில், யாருக்கு லாபம்?
இப்போ பாயிண்டிற்கு வருகிறேன், என்னுடைய தளம் ஐந்து வருடங்களாக இயங்கி வருகிறது என்று கூறினேன். எழுதுவது அனைத்தும் எனக்கேயான சுய விமர்சனங்களும், என்னால் முடியாத, என்னை விட பெரிதாக எனக்கு முன்னால் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வாழ்வை பொருத்தான சிக்கல்களில் ஏன் நான் இப்படி ரியாக்ட் செய்கிறேன்; எப்படியாக எனக்கு வழங்கப்பட்ட சூழல்களிலிருந்து மீண்டு அதன் பொருட்டான தெளிவு சார்ந்த கட்டுரைகளையுமே, தேடல்களையுமே இங்கு பிரதானமாக வைத்து எழுதி வைக்கிறேன்.
இந்த வலைத்தளத்தின் மூலமாக என் அறிவார்ந்த தளத்தில் இயங்கும் மக்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவ்வளவுதான். வேறு எங்குமே இதனை வைத்துக் காரியம் சாதித்துக் கொள்ளவோ, அல்லது நாளக்கி அவர்கள் தேவைப்படுவார்கள் கர்மமே கண்ணாக கும்மியடிக்க வேண்டிய நிலையில் எந்த மனிதர்களையும் நான் பிடித்தும் வைத்திருக்கவில்லை, அவர்களும் என்னைப் பிடித்து வைத்திருக்கவில்லை? ஆச்சர்யம்தானே?! அப்படியான மனிதர்கள் இங்கு மென்மேலும் இருக்கக் கூடும்.
இது போன்ற புரிதல்கள் உண்மையாக தன்னுடைய கருத்துக்களை பதிய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு கண்டிப்பா உதவக் கூடும். இல்லையெனில் கூட்டமாக வந்து, கூட்டமாக சென்றால் நாம் எதுவுமே தனிமனித சோதனைகள் சார்ந்து முகம் கொடுத்து, அதிலிருந்து மீண்டு எழ ஒரு போதும் தன்னை தயார்படுத்திக்கொள்ள முடியாது.
மேலும் முன்னெப்பொழுதுமில்லாத வாக்கில் இப்பொழுது இந்த இணையம் ஒரு அருப்பெரும் கதவை திறந்து விட்டிருக்கிறது. அது பல வேறுபட்ட நிலைகளில், தளங்களில் இயங்கும் ஜாம்பவான்களையும் அவர்களின் வாசிப்பின் வீச்சம், வாழ்க்கையின் ஆழம், பிற பிரதேசங்களின் பழக்க வழக்கம்/அங்கே நிலவும் கலாச்சாரம்/பண்பாடு போன்ற பல விசயங்களை ஒருங்கே கொண்டு வந்து ‘உரையாட’ ஒரு அருமையான இடமாக்கிக் கொடுத்திருக்கிறது.
இதெல்லாம் ஒரு 20 வருடத்திற்கு முன்பு கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத விசயம். நானெல்லாம், அறிவார்த்தமாக இயங்கும் மனிதர்களை அவரவர்கள் இருக்குமிடங்களிலேயே சென்று பார்க்கும் நிலையிலேயே இருந்தது. அதுவும் தேடித் தேடி. இன்று அவரவர்களும் கிடைக்கும் நேரத்தில் இப்படி இணையத்தின் ஊடாக ‘உரையாட’ காத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களை படியுங்கள், எங்கிருந்து, எங்கு சென்று எது போன்ற வாழ்வுச் சாலையின் மூலமாக நடந்து எங்கே இருக்கிறார்கள், ஏன் இப்படி பேசுகிறார்கள் என்பதனை அவதானியுங்கள். நாம் செய்யும் பெரிய தவறு தனக்கு முன்னாக இருக்கும் வாய்ப்பினை பார்க்கத் தவறுவதுதான்.
பல இடங்களில் நான் குறிப்பிட்டபடி இந்த தளத்திற்கு வந்து வாசிப்பவர்கள் முதலில் என் பெயரைக் கொண்டு முன் முடிவு செய்பவர்கள் அத்தோடு நிற்கட்டும், அதனைத் தாண்டியும் எடுத்தாளும் பேசு பொருள், எழுத்து நடை உவப்பாய் இல்லையா, கழியுங்கள். பொருட்டு கிடையாது. ஆழமறிந்தவர்கள் மட்டுமே எஞ்சினாலே போதும். இந்தத் தளம் எனக்கானது, என் விழிப்பு நிலையை மேலும் வளர்த்துக் கொள்ளவும், முகம் கொடுக்கவே அஞ்சும் கேள்விகளை எழுப்பிக் கொள்ளவுமே இந்தத் தளம்.
அதன் பொருட்டு எனக்கு உறுதுணையாய் இருப்பவர்கள், இங்கே பொழங்கி வருகிறார்கள். புரியாதவர்கள், புரியும் பொழுது படித்துக் கொண்டால் போதும்!
இது எந்த தனிமனித லாப நோக்கிற்காகவும் எழுதப்படும் தளமில்லை. த்தோ, அவரை தெரிந்து வைத்திருந்தால் அது ஆகும்; இவரைத் தெரிந்து வைத்திருந்தால் இதுவாகும் என்பதற்கு - என்னை மென்மேலும் வளர்த்தெடுக்க வைத்திற்கும் ஒரு விளையாட்டுத்தளம்.
என்னுடனான இந்த ப்ளாக்கின் மூலமாக நெருக்கமானவர்களுக்கு கூட பூர்ண சுதந்திரம் கொடுத்தே வைத்திருக்கிறேன், நேராகவே சொல்லி என்னுடனான கருத்துக்களில் ஒப்புமை இல்லையெனில் எப்பொழுது வேண்டுமானாலும், சுதந்திரமாக நடையை கட்டலாமென்று. ஏனெனில், எதுவும் கட்டிப் போட்டிருக்கக் கூடாது. அவர்களுக்காக நானும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது, என்ற நல்ல எண்ணத்திலேயே. முகமூடியுடன் பழகிக்கொள்வது நேர விரயம், இரண்டு பக்கமுமே.
என்னைப் போன்று ஓடித் தேய எண்ணமுள்ளவர்கள் சத்தமில்லாமல் வந்து போவது ஒன்றே போதும், இதற்கான நேரம் செலவழிப்பதற்கான தட்டிக் கொடுப்பதாக. முகமூடிகளற்ற, உண்மையை நேசிக்கும், மரணத்தை அதன் கண் நோக்க தைரியமுள்ளவன் எஞ்சக் கடவ!
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (42)
- அனுபவம் (105)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (109)
- நினைவோடை (19)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (11)
- மருத்துவம் (2)
- முதுமை (13)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Tuesday, November 16, 2010
நான் ஏன் வலைபதிகிறேன்: சுயசொரிதல்...
Posted by Thekkikattan|தெகா at 9:40 PM 47 comments
Labels: அனுபவம், தெளிதல் சார்ந்து, பதிவர் வட்டம், மொக்கை
Friday, November 12, 2010
கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு: A template post
கலாச்சாரம், பண்பாடு இன்னும் என்னன்னவோ சரியாகவே புரிந்து கொள்ளப்படாத ஒரு விசயத்தைப் பத்தி பேசிகிட்டு ரொம்ப அரைவேக்காட்டுத் தனமா விசனப்பட்டு பதிவுகள் மேல பதிவுகளா படிச்சு எனக்கு மண்டை காஞ்சிப் போச்சு. தேடித் தேடி அது மாதிரி பேசுற கட்டுரைகளை எல்லாம் போயி படிக்கிறதில்ல. எதிர்பாராத விதமா எடரி விழுந்து படிக்கப்போயி தனித்தனியா மறுமொழிகள் வேற இட்டு, அதனைச் சார்ந்து வேற்று சிந்தனைகளை கிளறி விடல் எண்ணி எப்பவோவது என்னோட சொந்த புரிதலை வைப்பதுண்டு.
நண்பர் கல்வெட்டு கலாச்சாரம் என்ற கழிச்சலில் போகும் வார்த்தைக்கு இப்படியாக அவரின் பதிவென்றில் விளக்கமளித்திருக்கிறார்...
...கலாச்சாரம் என்றால் என்ன என்று ஒருமுறை ஒரு பேராசியருக்கு பாடம் எடுக்கப்போய் அவர் அதில் இருந்து என்னிடம் இருந்து விலகிப்போய்விட்டார். நான் சொல்லும் பேராசிரியர் தமிழர் அல்ல வட இந்தியர் ஒருவர். கலாச்சாரம் என்பது எப்போதும் இறந்தகாலத்தைக் குறிக்கும். இறந்தகாலம் அல்லது கடந்தகாலம் என்பது எல்லை இல்லாதது. கி.பி என்று ஆரம்பித்து கடந்தகாலத்தை நோக்கிச் சென்றால் கிறித்துவின் பிறப்பில் நின்று அந்தர்பல்டி அடுத்து கி.மு என்றாகி எல்லையில்லாமல் விரியும்.
கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று புலம்பும் பெரிசுகளிடம் "எந்த காலகட்டத்திற்கான கலாச்சாரம் இப்போது இந்த ஆண்டில் கெட்டுவிட்டது?" என்று கேட்கலாம். ஒரு பேச்சுக்கு கண்ணகி காலத்தில் இருந்ததே அக்மார்க் கலாச்சாரம் என்றால், எல்லா ஊரிலும் பரத்தையர்கள் பகிரங்கமாக வாழ அதே பெரிசுகள் ஒத்துக்கொள்வார்களா? இல்லை, குறைந்த பட்சம் "கட்டைவண்டியில் மட்டும்தான் பயணம் செய்வேன்" என்று வாழ்வார்களா? டயர் வண்டி வந்த காலத்தில் கட்டைவண்டிக்காரர்களும், கட்டை வண்டிக்கு சக்கரம் செய்யும் தச்சர் மற்றும் மேல் இரும்புப்பட்டை பட்டை செய்யும் கொல்லரும் "இதெல்லாம் அழிவுக்கான அறிகுறி . டயர் வயக்காடில் போனா நல்லதா?" என்றுகூட அலுத்துக் கொண்டார்கள். ட்ராக்டரே போகும் காலம் வரவில்லையா? கூமுட்டைகள் பேசும் கலாச்சாரம் என்பது தனக்குத் தெரிந்த வரலாற்றில் இருந்து வசதிப்படி செலக்ட் செய்து கொள்வது.
இதுதான் டமிளனின் கலாச்சாரம் என்று ஏதேனும் ஒரு காலத்தை மட்டும் குறிக்க முடியாது. ஒவ்வொரு காலத்திலும் அந்த அந்த சூழலுக்கு ஏற்ப ஒருவித பழக்கங்கள் இருந்து இருக்கும். அடுத்து வரும் காலங்களில் அது மாறிவிடும். கண்ணகியின் பாட்டிகூட கண்ணகியிடம் "அந்தக்காலத்தில் இருந்த மாதிரியா இருக்கு? காலம் கெட்டுப்போச்சு. சூதானமா இரு புள்ள" என்று சொல்லி இருக்கக்கூடும். அந்தப்பாட்டிக்கு அவரின் காலம் நல்ல கலாசாரம். நமக்கு?
கலாச்சாரம் என்பது வரலாறு. மேலும் கலாச்சாரம் என்பது மற்றவர்களால் மதிப்பிடப்படும் ஒன்று. பண்பாடு, கலாச்சாரம் குறித்து விரிவாக எழுதும் போது நிறைய உரையாட வாய்ப்புண்டு...
இப்போ என்னோடது. கீழ் படிக்க நேர்பவை பின்னூட்டமாக எழுத ஆரம்பித்தது இந்தப் பதிவிற்காக... ஆபத்தான கலாச்சாரம்...!
வாழ்க்கை என்பது ஒரே நேர் கோட்டில் ஓடுவது கிடையாது. அது மனிதருக்கு மனிதர் புரிந்து கொள்ளும் படிகளைக் கொண்டு வளைந்து வித்தியாசப்பட்டு நிற்கிறது; எப்படி வான்வெளியில் பொருட்களின் பருமனுக்கு ஏற்ப வெளியே வளைந்து பிற பொருட்களின் ஈர்ப்பினிலின்றி விலகி ஓடவோ, இழுத்து பிடித்து தன்னைச் சுற்றி சுழலலவோ ஆக்கிக் கொள்வதனைப் போன்று.
இந்த தவறாக புரிந்து உள்வாங்கி கொள்ளப்பட்ட “கலாச்சாரம்” என்ற ஒற்றைச் சொல் எப்படி அடுத்தவரின் உடல் நிலையையிம், அவரின் தினசரி வாழ்க்கையையில் கூட நிம்மதியாக இல்லாமல் ஆக்கும் அளவிற்கு, தன் கையை மீறிய ஒரு விசயம் பாதிப்பினை வழங்கி விடுகிறது.
ஒருவருக்கு ஒரு விசயம் அதிருப்தியையும், கலக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்பதற்காக காலம் பிறர் ஒருவர் தன் வளர்ச்சியைக் கொண்டு எடுத்திருக்கும் முயற்சிக்கு அவரது அனுபவத்தின் மூலமாக தேடிச் சென்றடையக் கூடிய பாடங்களை வழங்காமல் அவர்களின் வாழ்கையை முடித்து விடுவது கிடையாதுதானே!
எதார்த்த வாழ்வில் விசயங்களின் ஓட்டம் அவ்வாறாக சுழன்றடித்து ஓடித் தேய்கையில் எப்படி தனி ஒருவனாக கடந்த கால விழுமியங்களில் சிக்கி தனக்கு உவப்பாய் இருக்கிறது என்பதற்காக, முட்நோக்கியே நகரும் கால அம்புக்குறியை வளைத்து பின்னோக்கி இழுக்க முடியும்.
இங்கு நம்மால் முடிந்தது, ஒதுங்கி நின்று அது போன்ற அனுபவப் பாடம் வேண்டியவர்களை விட்டு அதன் சாதக பாதகங்களை பெற விடுவது மட்டுமே! அந்தக் கட்டுரையில் பேசப் பட்ட விசயம் ஆண்/பெண் திருமணம் கட்டாமல் “சேர்ந்து வாழ்வது”பற்றியது என்பதால் இப்படியாகச் சொல்லியிருந்தேன். அது போன்ற ஒரு வாழ்வுச் சூழலில் ஈடுபடுபவர்கள் ஒன்றும் வயது முதிராத பள்ளிச் சிறார்கள் இல்லையே, உடல்/மன ரீதியில் சுயமாக சிந்திக்கும் நிலையில்தானே இருக்கிறார்கள்... இந்த பின்னணியில் எல்லாம் அவர்களுத் தெரிந்தேதானே இறங்குவார்கள்; எல்லா சாதக/பாதங்களையும் நேர் கொள்ளும் முடிவோடு.
ஏன், அது போன்ற உறவு நிலைகளில் கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமே இல்லையா? ஏன், மனிதனின் மனம் எப்பொழுதும் ஆண்/பெண் உறவு நிலையை குறுக்கி காமம் என்ற ஊறுகாய்க்குள்ளரயே தன்னையும் சேர்த்து ஊற வைத்துக் கொள்கிறது? எங்கே அப்போ தவறு நிகழ்கிறது? ஒரு பெண்ணை ஆற்றைக் கடக்க தோளில் சுமந்து சென்று அத்துடனே சுமையை இறக்கிய நபரா நீங்கள், அல்லாது மனத்துடனேயே வாழ்வுச் சாலையெங்கும் தூக்கிச் சுமக்கும் நபரா?
.... அந்தக் கட்டுரையில் சில சமூகம் கெட்டுப் போகிறதே என்று விசனத்துடன் என்ன செய்து இதனை கட்டுப்படுத்தாலம் என்ற தொனியில் கீழ்காணும் வரிகள்...
//'நமது கலாசாரத்திற்கு களங்கம் கற்பிக்கும்' //
//என்ன செய்து இதனை நிறுத்த போகிறோம் அல்லது தடுக்க போகிறோம்...?//
அடுத்து கலாச்சாரம், கலாச்சாரம் என்று பேசுகிறோமே, எது கலாச்சாரம்? பெற்றவர்களை புறந்தள்ளி வாழ்வது, தனக்காக தனது படிப்பை/தேவைகளை விளக்கி வைத்து மற்றவருக்காக வழி விட்டு வாழ்ந்தவர்களை தன் தேவை முடிந்தவுடன் அவர்களை தூக்கி கடாசிவிட்டு வாழத் துணிவது, வரதட்சிணைக்கென வயதானவர்களையும் நொந்து சாகும்படியான சூழலுக்கு இட்டுச் செல்வது, நாட்டையே சுரண்டும் வாக்கில் ஊரான் சொத்தை திருடி கொண்டு போய் வைத்துக் கொள்ளும் களவாணித் தனம், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று ஏமாற்றிக் கொண்டு வாழ்வதெல்லாம் இந்த கலாச்சார கூண்டிற்குள் வராதா?
ஆண்/பெண் உறவு சார்ந்தும், ஆடைகள் உடுத்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பாங்கில் மட்டுமே இந்தக் கலாச்சாரம் விழிப்புடன் இருக்கிறதே அது ஏன்? அதுவும், இந்த உறவு நிலையில் போலியாக இணைந்தே 30, 40 வருடங்கள் என ஊருக்காக வாழ்ந்து முடிக்கும் நிலையில் - இடையில் அடிதடி, நிம்மதியின்மை, மனச் சோர்வு, அடுத்தவருக்கு என்ன வேண்டும், தன்னுடைய டேஸ்ட் என்ன, தனக்கே என்ன வேண்டும் என்றே தெரியாமல் விழிபிதிங்கி என்னமோ பிறப்பெடுத்துவிட்டேன் வாழ்ந்து முடிக்கணுங்கிற கடமை உணர்ச்சியோட மல்லுக்கட்டி அக்கப்போர் பண்ணி வாழ்வதில் என்ன சிறப்பு இருந்துவிடப் போகிறது?
அதே சமயத்தில் இப்படியாக ஆண்/பெண் உறவுகளின் சிக்கல்களை புரிந்து கொண்டு மீண்டும் நிலையான உறவுகளுக்குள் வருவது எவ்வளவு மேல் எனலாம்; தன்னைப் பற்றிய சுயமான முடிவுகளோட, தேவைகள், குறிக்கோல் என பெற்ற அனுபவங்களைக் கொண்டு தனக்குத் தகுந்த மாதிரி தைத்துக்கொண்ட உடையை மட்டும் அணிந்து கொள்ளும் பக்குவத்தோடு. ... sum of experiences = lifely wisdom for future harmony.
இன்னும் எவ்வளவோ இருக்கிறது பேசுவதற்கு. அதற்காக எல்லாரும் இப்படி செய்து வாழ்க்கை புரிஞ்சிக்கோங்கப்பான்னு சொல்லல. தனக்குப் புரிஞ்சதை வைச்சு, தன்னோட வளர்ச்சியை வைச்சு, தான் வாழும் சூழலை வைச்சு மட்டுமே இந்த மொத்த உலகத்தையும் அளந்துவிட முடியாது. அதுனாலே உடம்ப பார்த்துக்குவோம். தனிமனித நிலையில் அவங்கவங்களும் தனக்குத் தேவையான வழியில, வாழ்க்கை பாடத்தை பெற அனுமதிப்போம். அடிச்செல்லாம் பழுக்க வைக்க முடியுமா??
புது ஃபேஷன் ஷெட்டி, ஐயர், ரெட்டி, மேனன்: Is it fool's identity?
Posted by Thekkikattan|தெகா at 12:05 PM 146 comments
Labels: அனுபவம், சமூகம், தெளிதல் சார்ந்து, மொக்கை
Wednesday, November 10, 2010
பிள்ளைகளுக்கான பாலியல் உபத்திரமும், நம்மூர்ச் சட்டமும்...
தனி மனித ஒழுக்கம் சார்ந்த குற்றங்கள் ஒரு சமூக பார்வையில் பார்க்கப்படும் பொழுதும், அதே நேரத்தில் மிக நெருக்கமாக உணரும் பொழுதும் எவ்வாறாக அந்த பிரச்சினை திசை திருப்பப்படலாம் என்பதற்கு அண்மைய கோயம்புத்தூரின் சிறார்கள் கடத்தலும் அதனைத் தொடர்ந்த அவர்களின் படுகொலையும் ஒரு உதாரணமாகக் கொள்ள முடியும்.
பரவலாக இது போன்ற குற்றங்கள் ஒரு சமூகத்தில் முற்று முழுதாக தவிர்த்து வாழ்ந்து கொண்டிருப்பதாக எந்த நாட்டிலும் காண முடியாதுதான். ஆனால், இது போன்ற ransomக்காக குழந்தைகளை கடத்தி வைத்து பணம் பறிப்பதென்பது ஆங்காங்கே பரவலாக இப்பொழுது தலையெடுத்து வருகிறது நம்மூரில் என்பது கவணிக்கப்பட வேண்டிய ஒரு க்ரைம். ஏனெனில், நம் போன்ற ஒரு ஃப்ரீ ரேஞ்சிங் சமூகத்தில் அவ்வாறாக தொடர் நிகழ்வுகளாக ஆகிப் போவதற்கு மிக்க வாய்ப்புகளும் இருக்கிறது.
ஆனால், நான் அவதானித்த வரையிலும் நம் சமூகத்தில் குழந்தைகளின் மீதான வன்முறை கட்டவிழ்ப்பிற்கு போதுமான சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லை என்றுதான் கருதச் செய்கிறது. இது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் சட்டம் சார்ந்த தண்டனைகளில் சிறிதும் சமரசங்களற்று எல்லா இடங்களிலும் விரவி பயன்பாட்டில் இருக்கும் போதுதான், அது போன்ற செயல்களில் இறங்க எத்தனிக்கும் எதிர்கால மனிதர்களுக்கு ஒரு விழிப்பேற்றும் அரணாக இருந்து குற்றங்கள் குறைப்பதற்கான வழியாக அமைய முடியும்.
அதற்கு மாறாக ஒரு சமூகம் கண்டும் காணாததுமாக வீட்டிற்குள்ளும், வெளியிலும் பாலியல் சார்ந்த உபத்திரங்கள் தன் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கும் பொழுது கட்டப்பஞ்சாயத்து நிகழ்த்தியோ, அல்லது வெளியில் தெரிந்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்காலமே பாலாய் போய்விடுமென்றோ அல்லது தன் குடும்ப மானத்திற்கே கலங்கமென்றோ அல்லது குற்றமிழைத்தவர் தனக்கு ரொம்ப வேண்டியவராகிப் போய்விட்டார் வெளியில் தெரிந்தால் அவரின் குடும்பமே நடுத்தெருவிற்கு வந்து விடுமொன்றோ நாம் சாதாரணமாக கடந்து போய் விடுவது மென்மேலும் இது போன்ற உபரத்திரவாதிகளை வளர்த்தே விடும் என்பதில் ஏதாவது ஐயமுண்டா?
இதுவேதான் மீண்டும், மீண்டும் அடக்கி வைக்கப்பட்ட புற வய உணர்வுகள் ஒரு சமூகத்தில், இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளிடத்திலும் கூட மென்மேலும் வளர்தெடுக்க வழிகோணிவிடுகிறது. உதாரணமாக, பள்ளிகளில் இது போன்ற துன்புறுத்தலை பழக்க விதத்தில் (habitual behavior) தொடர்ந்து ஒரு மனிதர் செய்து வருகிறார், அவருக்கு நல்ல பின்புலமும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மனிதரும் சமூகத்தில் ஒரு குடும்பத்துடன் எல்லாரையும் போலவே தானும் முழுதுமாக வாழ்ந்து முடிக்க வேண்டுமென்ற ஆசையுடனே வளைய வந்து கொண்டிருக்கிறார்; தான் செய்வது தவறு என்று தெரிந்தும் கூட அந்த குற்றத்தை தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே.
இந்த சூழலில் சட்டம் தன் வேலையை மிகச் சரியாக செய்தால் இது போன்ற சபல மனிதர்கள் மிகச் சுலபமாக தன்னை அந்த பழக்க நிலையிலிருந்து தன்னோட குடும்ப கெளரவத்திற்காகவேனும் தன்னை மாற்றி எழுதிக் கொள்வார். மாறாக, ஒவ்வொரு முறையும் அவரின் சபல இயக்கம் வெளிப் பட்டு அவருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பாதுகாப்புடன் திரியும் பொழுது, பின்னாலில் அதே முறையில் இயங்க எத்தனிப்பவர்களுக்கு எப்படியானதொரு விழிப்புணர்வு கிட்டியிருக்கக் கூடும்.
நாமும் தினசரிகளிலும், அண்டை அயலர் வீடுகளிலும் பல இது போன்ற குழந்தைகள் சார்ந்த பாலியல் உபத்திர இன்னல்கள் பற்றி வாசித்து விட்டு நகர்ந்து கொண்டேதான் இருப்போம். ஆனால், இதற்கு பின்னான சமூக படிப்பும், சட்டத்தின் கிடுக்கிப் பிடியான முறையான தண்டனையும் அமுலில் இருந்தால் கண்டிப்பாக விசயம் பரவலாக சென்றடைந்து மனசாட்சிக்கு பயப்படாதவர்களுக்கு இந்த சட்டமாவது பயமுறுத்தி நேர் பாதையில் பயணிக்கச் செய்யலாம்.
பல நிகழ்வுகளில் கவனித்திருக்கிறேன், அமெரிக்கன் மீடியாக்களில் இது போன்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறும் கனம்தோரும் பலவிதமான சட்ட ரீதியான பாய்ச்சல்கள் அந்த குற்றம்சாட்டப்பட்டவரின் மீதானது மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. ஒரு முறை மாட்டினால், சொச்ச மிச்ச காலங்களும் அந்த மனிதரின் பின்னாலே அந்த குற்றம் ஊர் உலகறிய தொடர்கிறது. அதுவும் எதார்த்த ரீதியில் மிகவும் உண்மை. முதலில் தேசிய அளவில் மீடியாக்களில் அந்த நபரின் முகம் நிறுத்தி நிதானமாக காட்டப்படுகிறது. பின்பு அவருக்கான தண்டனை சிறைச்சாலையில் கழித்து முடித்து வெளியில் வந்தால் அவருக்கான child predator என்ற அடைமொழியுடன் கூடிய ஒரு எண்ணும், முழுமையான மற்ற விபரங்களும் அடங்கிய ப்ரோஃபைல் ஒன்றும் தயார் செய்யப்பட்டு அது கணினியிலேயே பொது மக்களும் பெறத்தக்க வகையில் போட்டு வைத்து விடுகிறார்கள்.
இப்பொழுது அந்த குறிப்பிட்ட நபரோ அல்லது அது போன்ற குற்ற பின்னணியில் சிறை சென்று வெளி வந்தவர் எந்த நகரத்தில், எந்த தெருவில் வசிக்கிறார் என்றளவில் தெரிந்து கொள்ளக் கூடிய வசதிகளை செய்து தந்து விடுகிறார்கள். எனவே எப்பொழுதும் அது போன்ற நபர்கள் தொடர் கண்கானிப்பில் இருப்பதனைப் போன்றே ஆகிவிடுகிறதல்லவா?
இது போன்ற கடுமையான சட்டம் தன் வாழ் நாள் முழுதும் தன்னைச் சுற்றி வருகிறது என்று ஒரு சமூகத்தையே விழிப்புணர்வு அடையச் செய்யும் பொழுது, குற்றமிழைக்க எண்ணும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கொண்டு வெளிக்கிட துணிந்தாலும் சம்பந்தப்படுபவர் ஒரு கனமேனும் எண்ணிப்பார்க்கக் கூடிய நிலையை உருவாக்கித் தருகிறது. ஆனால், நம்முடைய சமூகத்தில் இப்படியா செய்திகளில் படிக்கிறோம்? முதலில் பத்தி பத்தியாக சம்பவ வர்ணனை விரசமூட்டும் வகையில், பிறகு கட்டுரையின் கடைசி பத்தியில் போனால் போகிறதென்று அந்த நபரின் அடுத்த நிலை எப்படியாகும் என்ற சொல்லிவிட்டு ஊத்தி மூடிவிட்டு நகர்ந்து விடுவார்கள். அடுத்த கேசு கிடைக்கிறதா வேறு எங்காவது என்று, இதுதானே நிலமை?
மேலும் சட்டத்தை முறை படுத்தி செலுத்த வேண்டியவர்களே சிறு, சிறு சபலங்களுக்கு பின் சென்று தங்களுடைய வாலிடிட்டியையே இழந்து நிற்கும் பொழுது, எப்படி குற்றம் இழைக்க வரிசை கட்டுபவர்களிடத்திலும் சட்டம் முறைப்படி இயக்கப்படுமென்ற விழிப்புணர்வு இருக்கும். இது போன்ற சிவிக் சென்ஸ், சாலை விதிகளை கடைபிடிக்காதவர்களிடமிருந்து ஆரம்பித்து எந்த சமரசமுமின்றி, ஏழை/பணக்காரன்/பதவி என்று பார்க்காமல் இயக்கப்படுத்தி சட்டம் உயிரோடும், உயிர்ப்போடுமிருக்கிறது என்று காட்டினாலே ஒழிய குற்றங்களின் வீச்சம் குறையாது.
அப்படி ஒரு நாள் மலர்ந்து விட்டால் இது போன்ற ரசிக மனோபாவ ‘என்கவுண்டர்கள்’ தேவைப்படாது. இந்த என்கவுண்டரின் மூலமாக என்னதான் நமக்கு புரிய வைக்க எத்தனிக்கிறார்கள், ஒரு சமூகமாக இது போன்ற நிகழ்வுகளுக்கு பின்னான சட்ட மாற்று மாசோதாக்களை எழுப்பவதற்கான வாய்ப்புகளைத் தவிர்த்தும், சமூக அறிவியல் ரீதியில் குற்றவாளியிடமிருந்து மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் எது போன்ற விசயங்களை கரந்து அதனை நடைமுறை படுத்த முடியுமென்ற ஆய்வுகளற்றும், பிராச்சார தொனியில் சமூகமறிய வழங்குவதனைத் தவிர்த்து, ஊழல் மலிந்து வழியும் ஒரு சமூகத்தில் ப்ரீமெச்சூர்டாக வேக வேகமா ஒரு கேசை மூடுவதின் மூலம் இன்னும் காத்துக்கிடக்கும் குற்றவாளிகள் அறியாமை வழி நடந்தேரவே காத்துக் கொண்டிருப்பார்கள்.
பி.கு: குற்றங்கள் குறைப்பதற்கான ஒரே வழி சட்டத்தை சரியாக முறையாக சமரசங்களற்றும், கை நீட்டுவதை அரவே நிப்பாட்டுவதின் மூலமுமே சாத்தியம். முறைப்படி சட்டம் பின் தொடரப்படும் பொழுது அது கண்டிப்பாக மக்களின் மனதில் (pyschic) ஆழமாக பதியப்பட்டுவிடும். காசு கொடுத்து வெளிய வந்திரலாம்னு தோன்றுவது நின்றுவிட்டால், encounterபண்ணி கேசை மூட வேண்டிய அவசிமிருக்காது.
Posted by Thekkikattan|தெகா at 4:21 PM 45 comments
Labels: அரசியல், அனுபவம், சமூகம், நிகழ்வுகள், வன்முறை
Wednesday, October 27, 2010
கலவை: அருந்ததி ராய்-கரன் தாபர்/காஃப்கா - (Metamorphosis-ஈ புக்)
டாக்டர் ருத்ரன் சமீபத்தில காஃப்காவின் பிம்பம் என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக அந்த எழுத்தாளனைப் பற்றிய அறிமுகத்தை நமக்கு வழங்கியிருந்தார். முதன் முதலாக காஃப்காவினை கேள்விப்படும் அன்பர்களுக்கு Metamorphosis வாசிக்கும்மாறும் கேட்டிக் கொண்டிருந்தார்.
Posted by Thekkikattan|தெகா at 6:15 PM 19 comments
Labels: பதிவர் வட்டம், மொக்கை
Saturday, October 16, 2010
இசையமைப்பாளர் சந்திரபோஸ் ரீ-மிக்ஸ்...
இசையமைப்பாளர் சந்திரபோஸ் 1980களில் பல பாடல்களை திரையுலகத்திற்கு வழங்கியவர். மறக்க முடியாத பல பாடல்களையும் கொடுத்திருக்கிறார். அண்மையில் அவர் மரணமடைந்ததாக அறிந்தேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் அவரின் மரணத்தையொட்டி.
Posted by Thekkikattan|தெகா at 3:55 PM 6 comments
Labels: செய்தி, நிகழ்வுகள், பதிவர் வட்டம்
Saturday, October 02, 2010
ஆஃப்கான் புத்தர் சிலை வெடிப்பு - பாபர் மசூதி இடிப்பு!
இந்த நிலத் தகராறு விசயமா இவ்வளவு நாலு இத்தனை பேரு எங்கப்பா போயிருந்தீங்கன்னு எல்லாருக்கும் தோணும். எனக்கும் தோணுச்சு. ஆனா எந்த நேரத்தில குரல் எழுப்பணுமோ அந்த நேரத்தில மட்டும் சில விசயங்களுக்கு குரல் எழுப்பினாத்தான் பொருத்தமா இருக்கும்.
சரி நானும் இந்த வரலாற்று சந்திப்பில என்னோட நிலை என்னான்னு சொல்லி வைச்சிர்றது என்னோட பசங்களுக்கும், என்ன உன்னிப்பா கவனிச்சிட்டு இருக்கிற என் நண்பர்கள் வட்டம் பல்முக கலாச்சார மத, இன மக்களையும் உள்ளடக்கி இருப்பதால் நாளக்கி உதவும்னு சொல்லி வைச்சிடுறேன். இது போன்ற சூழல்களில் மட்டுமே தன்னுடைய பார்வையை வைப்பதின் பொருட்டே எது போன்ற தனி மனித புரிதல் இந்த சமூகம் பொருட்டும், இந்த உலக ஞானம் பொருத்தும் தனிமனிதனாக தம்முள்ளையே வளர்த்தெடுத்திருக்கிறோம் என்பதனை முன் மொழிய வாய்ப்பாக இருக்கிறது என்று எண்ணி முன்வைக்கிறேன். நான் மற்றுமொரு மண்ணு மூட்டையாக இருந்து மடிய ஆவணப் படுத்திக்கொள்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
சரி விசயத்திற்கு போவோம். மனிதன் ஆஃப்ரிகா சமவெளிகளில் கற்களை கொண்டு மாமிசம் பிளந்து சாப்பிடுவதற்கு முன்னால் மனித குரங்குளாக நாலு கால்களில் அலைந்து திரிந்த கால யுகங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மரங்களில் தஞ்சம் புகுந்திருந்தான். பிறகு எழுந்து நின்றால் சமவெளியில் வெகு தூரம் பார்க்கும் வாய்ப்பிருப்பதால், தன்னை அணுகி வரும் அபாயத்தை கண்டறியும் திறன் இருப்பதனையொட்டி காலப் போக்கில் சிறுகச் சிறுக அந்த உடற்சார்ந்த தகவமைவினை பெற்றுக் கொண்டான். குறைந்தது இந்த ஒண்ணரை லட்ச வருஷங்களுக்கிடையேதான் இன்றைய முழு நிலையை நாம் எட்டியிருக்கிறோம். ஆனால், இன்னும் போக வேண்டிய தொலைவு வெகு தூரம் இருக்கு; அதுவரைக்கும் நம்மை நாமே விட்டு வைச்சிக்கிட்டா.
அதற்குப் பிறகான சமூகமாக கூடி வாழ்தல். இந்தத் தன்மை பாலூட்டிகளில் பல விலங்குகள் நம்மை போலவே இன்றும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறது வனங்களிலும், சமவெளிகளிலும். அது போன்ற கூடி வாழ்தல் ஒரு தற்காப்பு யுக்தியாகவே படைப்பில் அறியப்படுகிறது. அங்கிருந்துதான் நாமும் அது போன்ற வாழ்வமையை கற்றறிந்திருக்க முடியும். சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து, கிடைக்கும் உணவு, சீதோஷ்ண நிலையைக் கொண்டு இனப்பெருக்கமும், அதனையொட்டிய இடப்பெயர்வும் பிரிதொரு குழுவின் மீதான வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கான சூழ்நிலையை இயற்கையே அமைத்து கொடுத்து அதனை எப்படி நாம் எதிர்கொள்கிறோம் என்பதனைப் பொருத்தே இயற்கை ஒரு உயிரினத்தின் இருத்தலை இந்த பூமிப்பரப்பில் நிர்ணயம் செய்கிறது எனலாம்.
இந்த நிலையில் ஒரு பிராந்தியத்தில் வாழும் பல சிறு குழுக்கள் ஒன்றாக இணைந்திருந்தாலே ஒழிய பிரிதொரு குழு ஊடுருவி நிலத்தையோ அல்லது அங்கிருக்கும் இயற்கை வளங்களையோ சுரண்டும் பாங்கில் ஆக்கிரமிக்கும் பொழுது தன்னை தற்காத்து தனது நிலத்தை மீட்டெடுக்க ஒரு பெரும் இனமாக தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் யுக்தி அவசியமாகிப் போகிறது.
இங்குதான் ஏதோ ஒன்றின் பொருட்டு அனைத்து சிறு சிறு குழுக்களையும் இணைக்கும் விதமாக மொழி, நிறம், பின்பு கல்லு, மண்ணு, தெருப் புழுதி என்று எதனையோ ’பயத்தின்பால்’ சார்ந்து தங்களது மனக் கவலையை அல்லது தன்னிடமிருக்கும் பயத்தை போக்கிக்கொள்ள பயன்படுத்துவதாக தனிமனித நிலையில் வைத்திருந்த ஒரு விசயத்தை ஒரு பரந்துபட்ட குறியீடாக நிறுவனப்படுத்தி ஒரு மதமாக உருத் தேத்துவதின் அவசியம் வந்திருக்கக் கூடும்.
நாம பேசிக்கிட்டு இருக்கிறது எல்லாம் பல ஆயிரம் வருஷங்களை கடந்து, இன்னும் மனிதன் முழுதுமாக நாகரீகமடையாமல் இருந்ததிற்கு முன்னாடி உள்ள கதை. அது போன்ற இடப்பெயர்வு ஓரளவிற்கு கற்காலம் தாண்டி, நாகரீகமடைந்ததாக கருதிக் கொள்ளும் அய்ந்தாயிரம் வருடங்களுக்குப் பின்னாலும் பல்வேறு தேவைகளால் நாடு விட்டு நாடு போயி இடம் பிடிப்பதும், பிரிதொரு கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டு அவர்களை இவர்களாக்குவதும் வரலாறறிந்ததே!
அந்த காலக் கட்டத்தையும் நாம் கடந்து அண்மைய 1000 வருடத்திய வரலாற்றை புரட்டினாலும் இது போன்ற அவசியமே இருந்து வந்திருக்கிறது. ஏன் இன்று கூட ஓர் அந்திய நாட்டின் இயற்கை வளத்தைச் சுரண்ட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு நாடு விட்டு நாடு சென்று ஆளுமை செய்து வருவதும் நடந்துதான் வருகிறது. கண்டும் வருகிறோம்.
அது போன்ற கால கட்டத்தில் இடப்பெயர்வின் பொருட்டு பிரிதொரு கலாச்சாரத்தை உட்கொள்ளுவதோ, இடம் பிடிப்போ ஒன்றும் புதிதல்ல. அது அன்றைய காலத்து நடைமுறை, எதார்த்தம்! அப்படியாகத்தான் வட அமெரிக்காவிலேயே ஒரு நாள் கொலம்பஸ் கால் வைத்து ‘யுரேகா!’ என்று கத்தி கூப்பிட்ட அன்றைய தினத்திலிருந்து செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டு இந்த பரந்த நிலப்பரப்பை தனதாக்கிக் கொண்டார்கள், காலனிய மக்கள். அதற்காக, நவீன அமெரிக்காவின் இடம் பூர்வீக குடிகளான எங்களுடையது என்று நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும் இன்றைய நாளில் அவர்கள் ஒரு கோரிக்கையை வைத்தால் நிலத்தை மீட்டெடுக்க விட்டுவிடுவார்களா? கனவிலும் நிகழாதுதானே!
இப்போ நம்ம விசயம். மொகலயா காலத்தில் அப்படியாக இடப்பெயர்வு பண்ணி இங்க வந்து தனக்கு வேணுங்கிற (அதுக்கும் முன்னடி எங்கங்கோ இருந்து எல்லாம் புகுந்து அள்ளிகிட்டு கொண்டு போயி வைச்சிருக்காங்க அது வேற விசயம்) மாதிரி ஆட்சி நடத்தி ஒரு நாட்டை ஆண்ட காலத்தில தனக்குத் தேவையான வழிபாட்டுத் தளம், அரசாங்கம் நடத்த கட்டடமின்னு கட்டி ஜெக ஜோதியா வாழ்ந்திட்டு பிரிதொரு நாள் கிளம்புற நேரம் வந்தவுடன் மிச்சங்களாக இது போன்ற சுவடுகளையும், அவர்களின் வழியை பின்பற்றி வாழ்ந்த மக்களையும் விட்டுட்டு போயிருக்காங்க.
அதுக்குபிறகு, இன்னுமொரு நாடு பிடிப்பு நடக்கிது. அது போன்றே அவர்களும் செய்துவிட்டு போகிறார்கள். இடையில் ஒரு நாடா சேர்ந்து போராடி, நாடுங்கிற ஒரு கான்செப்டிற்குள்ளர நாம முதல் முறையா நுழையிறோம். அன்றைய தேதியிலிருந்து அதுக்குள்ளர வருகிற எல்லா இன, மத, மொழி மக்களும் ஒரு நாடுங்கிற கட்டமைப்பிற்குள்ளர அவங்கவங்க வழித் தோன்றல், வரலாறு என்றும் உள்ளடங்கி வந்தாச்சு, நல்லா புரிஞ்சிக்கணும். இனிமே உள்நாட்டு குழப்பமே டைம் பாசிற்கு கூட இருக்கக் கூடாது. ஒரு நாடாக இருந்து அத்துனை பன்முகத் தன்மையையும் உள்வாங்கி அது வரைக்கும் எது நடந்தேறி இருக்கிறதோ, அதனையும் ஏத்து அவர்களின் வாழ்வு முறைக்கும் மரியாதை கொடுத்து, உயிருக்கும் உத்திரவாதம் வழங்கி ஒரு பாதுகாப்பான இடத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று உணர வைப்பதில்தான் ஒரு நாட்டின் அமைதியும், முன்னேற்றமும் இன்றைய நிகழ்காலத்திற்கு உகந்ததாகவும் இருக்க முடியும்.
அதனைத் தவிர்த்து, புராண கால இதிகாசங்களைக் கொண்டு நம்பிக்கையின் அடிப்படையில் 500 வருடங்களுக்கு முந்திய வரலாற்று சிக்கலை இன்றைய நாகரீகமடைந்த நாடாக, தனக்கென சட்டங்களையும் கொண்டு இயங்கும் ஒரு நாடு ‘பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை’ மட்டுமே அடிப்படையாக கொண்டு நிகழ்காலத்தை சிதைத்துக் கொள்வது எந்த விதத்தில் சமயோசித யுக்தியாக இருக்க முடியும்? கண்டிப்பாக பண்படைந்த மக்களை உள்டக்கிய ஒரு நாடாக இது போன்ற நிகழ்வுகள் நம்மை மிகவும் வெட்கித் தலை குனிய வைக்க வேண்டிய இடத்திற்கே நகர்த்தும்! இன்றைய வரலாற்றுச் சின்னங்களை நேற்றைய பழிக்குப் பழி சிறுமையைக் கொண்டு சிதைப்பதும், அதன் வழியில் இன்றைய வாழ்வு சார் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பங்கம் வருமாறுபிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வதும், தன் தலையை தானே கொல்லிக்கட்டையால் சொரிந்து கொள்வதற்கு சமம் என்பேன்.
இந்த பாபர் மசூதி இடிப்பும், ஆஃப்கானிஸ்தீய புத்தர் சிலை இடிப்பிற்கும் பெரிய வித்தியாசமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த சிலை இடிப்பு இன்னமும் உலக அரங்கில் ‘காட்டுமிராண்டித்தனமாகத்தான்’ அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. அது போலவேதான் இந்த நவீன உலகில் புராண காலத்து நம்பிக்கையைக் கொண்டு ஒரு வரலாற்றுச் சின்னத்தை அன்று இடித்ததும். ஆக மொத்தத்தில இந்த ஓட்டு ஆண்டிங்க அவங்களோட வயித்துப் பொழப்பிற்கு எல்லா பயலையும் தூண்டி விட்டு அடிச்சிக்கிட்டு சாக விடவும் தயாரா இருக்காங்க!
I feel very sad this day!
Posted by Thekkikattan|தெகா at 5:54 PM 25 comments
Labels: அரசியல், சமூகம், நிகழ்வுகள்
Monday, September 20, 2010
ஊடுருவி...
ஒற்றை வார்த்தையின் சுகத்தில்
அடர்வான ஒரு பாடலொன்றை கேட்டவாறு
காலச் சுழிப்பற்ற ஓர் ஆழ்கறுந்துளையின்
வழியாக பயணித்தவாறே அமிழ்ந்து திளைக்கிறேன்...
சிதறிய வெண் வண்ணத்தினூடே
கண் முன் குமிழ்ந்த உயிரினங்களுடன் ஒன்றித்து
உட்கொண்ட சங்கீதத்தில் நனைந்தபடி எனை தொலைத்து
வெளியேறுகையில்
வெளியெங்கும் சிதறியொடுங்கிய
வார்த்தை இடிபாடுகள் கிறுக்குநிலையின்
மகத்துவமறிய நிழலாடியது!
Posted by Thekkikattan|தெகா at 7:01 PM 6 comments


