Showing posts with label நோய். Show all posts
Showing posts with label நோய். Show all posts

Saturday, January 09, 2021

கதம்ப நிகழ்வுகளும் என் எண்ணங்களும் - 1

மக்களாட்சி மீதான வன்முறையும் ட்ரம்பும்: A Failed Coup

இவிங்க எல்லாம் 1650களில் பல்லு விளக்காம கரையேறின பற்களோட, குளிக்காம அழுக்கா, கண்கள் எல்லாம் பஞ்சடைத்துப் போயி, குதிரை மேல ஏறி வழிப்பறி பண்ணிக்கிட்டு திரிவானுங்களே அந்த மாதிரி தங்களை கற்பனை செய்து கொண்ட கற்காலத்து எண்ண மனிதர்கள். வெளியுலகத்தோட தொடர்பே இல்லாம திடீர்னு ஜுமான்சி படத்தில சம்பந்தமே இல்லாத காலத்திய மனிதர்கள் நகரத்திற்குள் புகுந்து ஓடித் திரிவது போன்று ஒரு காட்சி வருமே, அது போல இருந்தது நேற்று பார்த்த காட்சிகள்.

நிறைய பிள்ளைகள் அதிர்ச்சியில் அழுததாகவும் செய்தி வந்தது. கூட்டத்தில்
இருந்தவர்கள் ஏதோ அவுட் ஆஃப் டைமிலிருந்து வந்தவர்களாக புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும், ஆனா, போலிஸ் பெப்பர் ஸ்பிரே அடித்து விட்டது என்றும் கேவிக் கேவி அழுது கொண்டே நடைய கட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் இருந்த எண்ணப்பாடுகளை ஒத்த மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். இந்தச் சிறிய கூட்டத்தின் உலகமே வேறையப்பா! 12 பேக் பியரும், ஒரு ஷாட் துப்பாக்கியும், கராஜ்க்குள் அமர்ந்து கவ்பாய் வாழ்க்கையை கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையற்ற ஒரு கூட்டமது. நல்ல புத்தியில் உள்ளவனுக்கு அங்கே வேலையில்லை. இது நவீன அமெரிக்க வானில் படர்ந்து மறைந்த ஓரங்க கோமாளி நாடகம்!
                                                            @@@@@@@@@@@
                                                                @@@@@@
மழைக்காடுகள் அழிப்பும் Xவைரஸ்களும்

மழைக்காடுகள் அழிக்கப் படுவதாலே, ஈபோலா போன்ற உயிர்கொல்லி வைரசுகள் விலங்குகளிலிருந்து மனிதனுக்கு தாவும் புதிய திரிபு வைரசுகளாகி தொற்றுகிறது என்கிறது புதிய வகை ஆராய்ச்சிகள்.
எப்படி?
காடுகள் அழிந்து அங்கு வாழும் விலங்குகள் அழியும் பொழுது நம் கூடவும் வாழப் பழகிய எலி, பூச்சி, கொசு போன்றவைகள் அந்த இடத்தை நிரப்பி வைரஸ்களை அங்கிருந்து நம்முடைய இடத்திற்கு நகர்த்துகிறது. இப்பொழுது ஈபோலா போல புது விதமான வைரஸ் ஒன்று மனிதக் கரை ஏறி இருப்பதாக செய்தி கசிந்திருக்கிறது. அதுவும் ஈபோலா வைரஸை கண்டறிந்து அறிவித்த அதே ஆராய்ச்சியாளர் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.
எனக்கு இந்தத் தொடர்பு படுத்தல் மிக்க பொருள் உள்ளதாகப் படுகிறது. நம்முடைய செயல்பாடுகளில் சுற்றுச் சூழலைப் பேணும் வாழ்க்கை முறையோடு மாற்றிக் கொள்ளவில்லை என்றால், இந்த நுண் கிருமிகளே மனித குலத்தை அச்சுருத்தும் பெரும் சவலாக அமையும்.
                                                        @@@@@@@@@@
                                                                @@@@@@

100% திரையரங்க நிரப்பல் கொரோனாவிற்கான சிவப்பு கம்பள விரிப்பு! உருமாறிய நுண்மின்னு அலறி தீர்த்தது ஊடகங்கள். இன்று திரையரங்களில் 100% நிரப்பலோட படம் பார்க்கலாங்கிறதிற்கு விளம்பரம்.

இப்படி அரசிற்கும் பொறுப்பில்ல, ஊடகங்களுக்கும் பொறுப்பில்லன்னா, மக்களா பார்த்து தங்களது உசிரையும், குடும்பத்தின் உசிரையும் காப்பாத்திக்கிட்டாத்தான் உண்டு. ஜஸ்ட் பூனை கண்ணை மூடிக்கிட்டதாலே உலகம் இருண்டுவிடுவதில்லை, என்பதற்கிணங்க பணப் பைத்தியங்கள் தங்களது சுயநலத்திற்காக எடுக்கும் முடிவுகளால் தொற்று ஒழிந்து விட்டது என்று முடிவிற்கு போகாதீர்கள் மக்களே!
இன்னும் கொரோனா என்கிற கத்தி நம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டுதான் உள்ளது. ஞாபகத்தில் நிறுத்தி ஒதுங்கியே இருங்க!

Thursday, December 31, 2020

கொரோனா தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது?: Covid 19 Vaccine

 கோவிட் வைரசோட புரதம் எதனால் ஆனதுன்னு நம்முடைய உடம்பிலுள்ள நோய் எதிர்ப்புச் செல்கள் கண்டுபிடிக்க முடியாம முட்டி மோதிக் கொண்டு இருக்கிறதாலே தான் அந்த நோயின் தாக்கம் நம்மை மரணிக்கும் வரைக்கும் எடுத்துட்டுப் போகுது. இங்கே தான் நாம கண்டுபிடிக்கிற இந்தத் தடுப்பூசி நம்மை அதனின்று காப்பாற்றும் அரணாக அமைகிறது. எப்படி?

கோவிட் வைரசோட புரதம் எதனையொத்ததுன்னு நாம கண்டுபிடிச்சு, அதை நம் உடலினுள் செலுத்தி உண்மையான கோவிட் நம்மை தாக்குவதற்கு முன்னால் நமது உடம்பு உள்ளே நாம தடுப்பூசி மூலம் அனுப்பின புரதத்தை தாக்க வைப்பது. இதனால் என்ன ஆகிறது என்றால், உண்மையான கோவிட் கிருமி உள்ளே நுழையும் போது, "இதோட நாம ஏற்கெனவே சண்டை பிடிச்சு வெளியில அனுப்பி இருக்கோமே"ன்னு நம்மோட உடம்பில் கொரோனாவிற்கான எதிர்ப்பு சக்தியை தயார்படுத்தி வைப்பது.
உடம்பின் நோய் எதிர்ப்புச் செல்களின் ஞாபகத்தில் அந்தச் சண்டையைச் சேமித்து வைத்துக் கொள்வதின் மூலம் உண்மையான கோவிட் நம்மை தாக்கும் போது, குறைந்த நேரத்தில் நமது எதிர்ப்புச் சக்தி, "ஓ இவிங்களான்னு" உடனே கண்டுபிடித்து டேமேஜ் அதிகமில்லாமல் பாதுகாத்து நம்மை நோய்வாய் படுவதில் இருந்து காப்பாற்றி விடுகிறது.
எனவே தடுப்பூசி நம் நோய் எதிர்ப்பு சக்திக்கு கை கொடுப்பான் தோழன்!

Tuesday, January 19, 2016

நட்சத்திரம் பயணிக்கச் சென்ற ரோகித் வெமுலா: Casteism!

கரையான் புற்றிலிருந்து கிளம்பும் ஈசல்கள் போல இந்த சமூகத்தில் தான் எத்தனை கோடி தலைகள் இந்த பூமியின் மேலோட்டில் தினமும் சிறகெடுத்து வெளிக்கிளம்பி, போராடி உணவு சேகரித்து, பொருளீட்டி, இனப்பெருக்கம் செய்து கிடைக்கும் அற்ப ஆயுளுக்குள் தங்களுடைய தடயத்தை விட்டுச் செல்ல வித விதமான முறையில் தங்கள் பாதையில் வைக்கப்படும் சவால்களை சந்தித்து மூன்றுக்கு ஆறில் கனிமமாக தங்களை மாற்றிக் கொள்ளும் இடைவெளியில் எதனை வென்றெடுக்க போராடுகின்றது?

ரோகித் வெமுலா வகை மன வெற்றிடங்களை உருவாக்குவதில் தான் இந்த ஈசல்களுக்கு எத்தனை கொண்டாட்டம். இங்கே ஒரு மனதின் நேர்மையான கேள்விகளுக்கு, தன்னுடைய இருப்பின் அவசியமான தேடல்களுக்கு பொய்மையான, வெற்றுத் தனமான போலி அவசியங்களின் பொருட்டு தொடர்ந்து ரோகித்துகளின் சிறகுகள் சிதைக்கப்பட்டு அவர்கள் மலர்ந்து மணம் பறப்புவதற்கு முன்னாலேயே கசக்கி, சமூக கூட்டு கொலை செய்து எதனையோ தொடர்ந்து நீட்டித்து கொள்ளும் அவசியம் இந்த சமூகத்திற்கு இருந்து போகிறது.

அவர்களின் கடின உழைப்பும், எதிர் நீச்சலின் மூலமாக தாங்களே கற்று கொண்ட மொழி, அறிவுச் சுடரின் பேனா முனையில் தங்களையே உள்ளே மையாக நிரப்பி, வைத்திருந்த அத்தனை மனக் குமுறல்களையும் ஓரு ஏ4 சைஸ் தாளில் நிரப்பி வைத்து விட்டு நட்சத்திரங்களை தேடிச் செல்ல வைத்து விடுகிறது இந்த நாற்றமெடுத்த சமூகம்.

இந்த ஈசல்களின் குறுகிய, சாதீயம் என்ற புற்றால் இந்த அறிவியலுக்கே சிறிதும் சம்பந்தமில்லாத கனன்று கொண்டிருக்கும் அந்த ’தீ’ மரபணுக்குள் புகுந்து அடுத்த தலைமுறைக்கும் கடத்தி விட்டுச் செல்லும் அத்தனை சாத்தியங்களையும் கொண்டதாக இந்த தோல் சார் இன வெறுப்பு கையிறக்கம் செய்யதக்கதாக அமையப் பெற்று ஒரு சமூகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் சமூக கூட்டுக் கொலைகளை நிகழ்த்திக் கொண்டே ஒன்றுமே அதில் தங்களுக்கு பங்கு இல்லை என்ற வாக்கிலும் கடந்து போயி கொண்டே இருக்கிறது. இதற்கு அடிப்படையான துர் நாற்றத்தின் மூல குழிதான் எங்கே இருக்கிறது? மருத்துவத்தில் ஒரு புற்றுக் கட்டியை அகற்றி கொள்ள அதற்கான வழிகள் இருக்கிறது. ஆனால், உணர்வுகளில் சாக்கடைத் தண்ணீரை கலந்தது போல இருக்கும் இந்த வெறுப்பை எப்படி டைலயசிஸ் செய்வது கொள்வது? அதனை ஓன் ஆன் ஓன் செய்து கொள்வது சாத்தியமா?

இல்லை, இல்லை என்று கூறி கொண்டே மண்டையின் மறு பக்கம் கோரப் பற்கள் துருத்த, ஓநாயின் எச்சிலை ஒழுக விட்டபடி அடுத்து எங்கே கூட்டு சமூக கொலையை நிகழ்த்த முடியுமென்று தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறோம்.

சமூக ஆற்றின் ஒவ்வொரு துளைகளிலும், இடுக்குகளிலும் இந்த சாக்கடை நீர் கலந்தே இருக்கிறது. கடவுளர்களின் உருவத்தில், அவர்களுக்கு செய்யும் பூஜை அதனையொட்டி செய்யப் படும் சடங்களில், அதுக்கென அழைக்கப்படும் ஈசல் கூட்டங்களில், தோலின் நிறத்தில், அமற வைக்கப்படுமிடத்தில் , திருமண நிச்சயத்தில், பெயர் சூட்டலில், பந்தலில், பேருந்தில், கிணற்றடியில், கல்விச் சாலையில் இது போன்று எத்தனை எத்தனையோ தினசரி வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பிளவுகளை தொடர்ந்து அறிந்தோ அல்லது மூளை என்ற ஒரு வஸ்து தங்களுக்கு இருப்பதே அறியாமலேயோ செய்து கொண்டு தான் வருகிறது.

கிஞ்சித்தும் சக மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஒரு சமூகத்திற்கான கேடு வரலாற்று புத்தகங்களில் நமக்கு பாடமாக கற்றுக் கொடுக்க காத்திருக்கிறது. ரோகித் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டிய “எனது உடலுக்கும் ஆன்மாவிற்குமான தூரம் அதிகரித்து கொண்டே இருக்கிறது” இந்த ஒரு விசயமே அந்த இளைஞனின் மன அழத்தை, அறிவை, பக்குவத்தை, தொலை நோக்கு பார்வையை எடுத்து பறைசாற்றக் கூடியது.

அவன் எவர்களை எதிர்த்து போராடினான்? எதற்காக போராடினான்? தான் வாழும் ஒரு சமூகத்திற்குள்ளயே ‘தன்னுடைய பிறப்பே ஒரு தேவையற்ற விபத்து என்றும் சரியாக அங்கீகரிக்கப்படாத தன்னுடைய குழந்தமை” என்று வெம்பி தொடர் இன்னல்களை அவன் வழியில் பொதித்து மனதை வெற்றிடமாக, நம்பிக்கையிழப்பை உருவாக்கி கொடுத்தது எது? நமது அன்றாட வாழ்க்கையில் நட்சத்திரங்களை பற்றியும், இயற்கையின் இயல்பியலையும் நம்மில் எத்தனை பேர் தொடர்ந்து ஒன்றுடன் மற்றொன்றிற்கு தொடர்பு படுத்தி வாழத் தலைப்படுகிறோம்?

தன்னுடைய தாய் ஒரு சாதாரண தையல் மிஷினைக் கொண்டு அத்தனை தூரம் அவனை கொண்டு வந்ததிற்கு பலனாக அவன் தன்னுடைய இருப்பை அத்தனை பெரிய குன்றில் ஏறி அமர்த்திக் கொள்ள செய்த முயற்சி சரிதானே. அவன் நட்சத்திரங்களையும் இயற்கையின் மான்பையும் போற்றி வாழும் இடத்திற்கு தன்னை நகர்த்திக் கொண்டது அவன் பெற்ற கல்வியும், அந்த இடத்திற்கு தன்னை நகர்த்தி வைத்துக் கொள்ள உதவிய அந்த உண்மையான புத்தகங்களும், அது போன்ற தொலை நோக்கு கொண்ட நல்ல மனிதர்களுமே காரணமாக இருக்க முடியும். சரியான பாதையில் தானே பயணித்து கொண்டிருந்திருக்கிறான்?

ஆனால் இந்த ஈசல்களின் பார்வையில் அதுவே அவனை எதிர் முனையில் நிறுத்தி விட்டது. இன்று அவன் “நான் அந்த நட்சத்திரங்களில் வேறு மாதிரியான வாழ்க்கை ஏதாவது இருக்கிறதா” என்று தேடித் செல்கிறேன் என்று தேடிச் செல்ல வைத்து விட்டது. இது போன்ற எத்தனையோ கடிதங்களை நாமும் வாசித்து கடந்து சென்று கொண்டே இருக்கிறோம்.

அவன் வயதை ஒத்தவர்களும், கல்விச் சாலைகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களும் சமூக அக்கறையும், அறிவும் கொண்டு அரசியல் நிலைப்பாடுகளை இப்பொழுது செதுக்கி கொள்ள வில்லை என்றால் பின்பு எந்த வயதில் அவர்கள் தங்களுக்கான மன வெளிப்பாடுகளை செதிக்கி கொள்ள முடியும். அரசியல் வாதங்களும், நிலைப்பாடுகளும் தானே நம்முடைய வாழ்க்கையையே செதுக்குகிறது. யார் எங்கே இருக்க வேண்டும், எதனை வணங்க வேண்டும், எந்த வழிபாட்டு தளத்துக்குள் யார் நுழைய வேண்டும் நுழையக் கூடாது என்பது வரைக்குமாக அது நீட்டுகிறது. இந்த வயதில் என்ன அரசியல் வேண்டிக் கிடக்கிறது என்று கேட்பவர்களை நோக்கி இந்த கேள்வியை வைக்கிறேன்.

இந்த சமூகத்திற்கு எந்த விதமான கடவுளர்களும், பிழைப்பு வாத நீதிமான்களும், கட்சி தலைவர்களும், மத குருமார்களும், கதை புக் எழுத்தார்களும் உணர்வூட்டமோ, மனசாட்சியோ கொடுத்து விட முடியாது என்பது ஊர்ஜிதமாகி வருகிறது. கூட்டமாக மீண்டு வரவே முடியாத ஒரு பெரும் சாம்பல் பள்ளத் தாக்கை நோக்கி மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.

தான் வணங்கும் ஒரு கடவுளின் அடையாளத்தில் ஒருவன் தன்னுடைய ஆளுமையை, சாதியை காட்டிக் கொள்ள முடியுமெனில் இந்த ஈசல் சமூகம் எப்படி தன்னிரைவோடு தனக்கென அக மன ஆராய்ச்சி செய்து கொள்ளும். வெளியுலகில் இல்லை நரகமும், சொர்க்கமும் அடித்து பிடித்துக் கொண்டு துண்டு போட்டு வைக்க, இங்கயே இப்பொழுதே அதனை உருவாக்கியும், அழித்து வரும் நம் கைகளிலேயே அது உள்ளது.

ஏன் மனிதத்தை நம்பிய ரோகித் போன்றவர்களுக்கு பேய், பிசாசுகளின் பேரிலும் கடவுளர்கள் பேரிலும் நம்பிக்கை இல்லையென்பது, இது போன்ற அகால மரணத்தை தழுவியர்கள் கூட இருண்மையில் அதற்கு காரணமானவர்களை ஒன்றுமே செய்து விட முடியவில்லை என்பதனை தனது நிகழ்கால வலியின் ஊடாக எழுப்பி கொண்ட கேள்விகளின் விளைவாகத்தன் இருக்கக் கூடும்.

எது எப்படியாகினும் சானம் தொடர்ந்து ஒரு சமூகத்தை மென்மேலும் மூடிக் கொண்டே வருகிறது. இங்கே தாராசு தட்டுகளில் இருக்க கூடிய நியாய, அநியாங்களின் எடை சமமானதாக இல்லை. எடுத்து கொண்டிருப்பவர்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கொடுத்து கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இங்கே விட்டு கொடுப்பதும், அனுசரித்து போவதும் பலவீனமாக பார்க்கப் படுகிறது.

நட்சத்திரங்களையும், பிரபஞ்ச துகள்களையும் தினசரி வாழ்வில் இணைக்கத் தெரிந்தவன் இங்கு வாழ தகுதியற்றவனாகிறான். சிறுமைக்கு பிறந்தவனாகிறான். தன்னை முனைவர் அளவிற்கும் அறிவியலை மூச்சாக சுவாசிக்க தெரிந்தவன் ‘இன்னொரு உலகிற்கு தனது ஆவியை அனுப்பி பயணம் செய்ய நிர்பந்தப்படுத்தப் படுகிறான்.”

ஒரே கிணற்றுக்குள் கிடந்து உழண்டு கொண்டிருக்கும் தலைபிரட்டைகளில் எது உயர்வு, எது தாழ்வு! இது ஒரு சமூக அவலம்!! வெட்கித் தலை குனிய வேண்டிய விசயம். யாருக்கு என்ன, துடைத்து போட்டு விட்டு நகர்ந்து கொண்டே இருப்போம். எத்தனையோ பார்த்து விட்டோம் இதனையும் பார்க்கத் தெரியாதா!

P.S: இந்த கடிதத்தை வாசிக்கும் பொழுது என்ன மாதிரியான உணர்வுகளை உங்கள் மனது கடந்து செல்கிறது... முதலும் கடைசியுமான கடிதம்


Monday, July 22, 2013

வாத மூட்டழற்சி ஓரு மரபணுப் பிறழ்வு - Rheumatoid Arthritis

என்னோட ப்ளஸ்டூ நாட்கள்லே எங்களுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுடைய வீடு என் வீட்டிற்கு போகும் வழியில் சாலையை பார்த்தபடி அமர்ந்திருக்கும். என் வீட்டிலிருந்து நாங்கள் சந்தித்து மாலைகளைக் கொல்லும் இடத்திற்கு மிகச் சரியாக 750 நடையடிகள் பிடிக்கிறதென்றால் அவனுடைய வீடு சரியாக 550வது அடியில் அமைந்திருக்கும்.

மாதத்தின் பல நாட்கள்ல நல்லாத்தான் இருப்பான். திடீரென்று படுத்தபடி எழுந்து அமரவே ரொம்பச் சிரமப்படுவதாகவும், அப்படியே எழுந்து நடந்து திரிந்தாலும் குன்றியபடியோ அல்லது சிரமத்திற்கு இடையேயோ நடந்து திரிவதாகவும் காணக் கிடைப்பான். ஒரு முறை அவனை அருகே அமர்த்தி வைத்து என்ன பிரச்சினை என்று விசாரித்தேன்.

அப்பொழுது கூறினான் எலும்புகளின் சந்திப்புகளில் உபரியாக கால்சியம் படிந்து இணைப்புகளை இயக்கவே முடியாதபடிக்கு வலி உயிர்கொள்வதாக இருக்கிறது என்றான். அதிலும் குளிர்காலங்களிலும், காலை வேலைகளிலும் இந்த பிரச்சினை அதிகமாக இருப்பதாக கூறினான். அன்று அதன் தீவிரம் உணர்ந்து கொள்ள முடிவதாக இல்லை.

இன்று ஒரு 26 வயது மதிக்கத்தக்க பெண்ணை சந்தித்தேன். அவளுடைய பெயர் லோலா ஜேன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள். பேச்சு முதலில் புகை பிடிப்பதனைப் பற்றியதாக அமைந்தது. அப்படியே நகர்ந்து கஞ்சா புகைத்தால் தான் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் அளவையும், கீமோதெரபியின் தேவையையும் குறைத்துக் கொள்ள முடியும் என்று தனது உறவினர், கலிஃபோர்னியாவில் இருந்து கூறியதாக கூறினாள்.

சட்டென்று எனக்கு உள்ளே மணியடித்தது. இத்தனை சிறு வயது, ஆரோக்கியமாக காட்சியளிக்கும் ஒருத்திக்கு எதற்கு கீமோதெரபி தேவைப்படுகிறது. சற்றே தலையை சாய்த்து எதற்காக கீமோ எடுத்துக் கொள்கிறாய் என்று அன்னியத்தை உடைத்தேன்.

அவ்வளவுதான் அடுத்த இருபது நிமிடத்திற்கு மேல் எனக்கு ரூமாட்டாய்ட் ஆர்த்தரைட்டிஸ் (Rheumatoid Arthritis) பற்றி அத்தனை விபரங்களையும் அவளுடைய சொந்த அனுபவத்தின் ஊடாக வழங்கி சில இடங்களில் அவளுடைய வலியையும் எனக்குள் நகர்த்தி மீட்டெடுத்துக் கொண்டாள்.

இந்த வகை ஆர்த்தரைட்டிஸ் கை/கால் விரல்களின் இணைப்புகளில் சிறு வீக்கமாக ஆரம்பிக்கிறது. முதலில் வலியுடன் ஆரம்பித்து எலும்பு கரைவதும், பின்பு சிறுகச் சிறுக விரல்களை வளைக்கிறது. இது ஒரு மரபணு சார்ந்த வியாதி. தன்னுடை உடம்பில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியே தவறாக நம்முடைய உடல் திசுக்களைத் தாக்குவது autoimmune disorder.

இந்த வியாதி எலும்பு இணைப்புகளில் மட்டும் பிரச்சினை கொடுப்பதோடு விடுவதில்லை. தொடர்ந்த உடல் சோர்வும் அவ்வவப்பொழுது உடல் காய்ச்சல் வழங்குவதுமாக தொடர்கிறது. ஒரு சூழலில் மொத்தமாக முடக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்து விடும் நிலைக்கு இட்டுச் செல்வதாக தெரிகிறது.

என்னுடன் பேசிக்கொண்டிருந்த லோலாவின் வீட்டில் நான்கு தலைமுறையாக இது பெண் குழந்தைகளுக்கே அதிகமாக மரபணுவின் மூலமாக கடத்தப் பெற்றிருப்பதாக கூறினாள். இது வரையிலும் இந்த வியாதியை முற்றிலும் குணப்படுத்த மருத்துவத்தில் எந்த தீர்வையும் எட்ட வில்லையாம். மேலாண்மை செய்து வைத்துக் கொள்வது ஒன்றே வழியாம்.

இவர்களுடைய குடும்பத்தில் பல தலைமுறைகளாக இந்த வியாதியை அனுபவித்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒன்றை கவனித்தாகக் கூறினாள். அது கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில் இந்த வியாதிக்கான எந்த அறிகுறியும், வலியும் அண்டுவதில்லை என்பதாக. கொள்ளுப்பாட்டி ஒன்று இதனை அறிந்து தொடர்ச்சியாக பதினொரு வருடங்கள் அடுத்தடுத்து குழந்தைகளை பெற்றிருக்கிறார்.

இல்லையென்றால் சற்கர நாற்காலியில் அமர நேரிடும் என்ற பயத்தின் அடிப்படையில். அது போலவே இனிமேல் குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியாது என்ற நிலையில் சற்கர நாற்காலியில் அமரும் நிலையும் ஏற்பட்டதாம்.

லோலாவின் வலியின் அனுபவம் பற்றி சொல்லும் பொழுது கேட்ட எனக்கே மயிற் கூச்சரிப்பு ஏற்பட்டது. பாதங்களை வைத்து ஒரு அடிக்கு இன்னொரு அடி எடுத்து வைப்போம் என்ற எண்ணமே கிலியை ஏற்படுத்துமாம்; ஏனெனில், ஒவ்வொரு அடியும் ஏதோ உடைந்த கண்ணாடி சிதில்களில் எடுத்து வைப்பதனைப் போன்ற ஷார்ப்பான வலியை கொடுப்பதாக அமையும் என்று கூறினாள்.

ஏன் இங்கு லோலாவைப் பற்றி குறிப்பாக பேசி இந்த வியாதியைப் பற்றி பேச வேண்டும் என்று தோணலாம்.  ஏன்னா, இந்த வியாதி பொதுவாக நாற்பது வயதிலிருந்து அறுபது வயதுடையவர்களிக்கிடையே எட்டிப்பார்ப்பதாக தெரிகிறது. ஆனால், லோலாவிற்கோ 26ஏ வயதுதான், பார்க்க ரொம்ப ஆரோக்கியமான இளம் பெண். விரல்களை நீட்டி இப்பொழுதே இந்த வியாதியின் அறிகுறியாக சிறிதே நுனிப்பகுதி வளைவதை காண்பித்தாள். கண்களில்தான் எத்தனை அயர்ச்சி. இது ஏன் எனக்கு என்பதாக.

ஒரு பெண்ணின் முட்டையும், விந்தணுவும் இணைந்த மறு நொடியிலிருந்துதான் எத்தனை விதமான மரபணு சமிக்கைகள் இரண்டு பெற்றோர்களின் குணாதிசியங்களை உள்ளடக்கி பரிமாறி, மறுபதிப்பு நிகழ்ந்து அதுவும் சரியான இடத்தில் வைக்கப்பெற்று, சரியான காலத்தில் ஒவ்வொரு உடல் சார்ந்த குணாதிசிய பண்புகள் வெளிக்கிளம்ப காரணங்களாகின்றன.

இதனில் எங்காவது ஒரிடத்தில் ஒரு குளறுபடியென்றாலும் வாழ்க்கை முழுதுக்குமே அந்த உயிரினத்தை அரைகுறையாகவோ அல்லது முழுமையாகவோ முடக்கி விடுகிறது. இத்தனை நமது சக்திக்கும் உட்படாத விசயங்களை எல்லாம் ஏதோ இயற்கையின் ஒரு இயங்கு விதிக்கு உட்பட்டு பெறப்பட்ட இந்த உடம்பையும், பரிணாமம் வழங்கிய களிமண் மண்டையும் வைத்துக் கொண்டு நான் அவனை விட செத்த செவப்பா இருக்கேன், காசு இருக்கு என்று ஜல்லி அடித்துக் கொண்டு ஒருவன் உயிரை இன்னொருவன் எடுத்துக் கொண்டிருப்பதை எந்த மரபணு வியாதி இயக்குகிறது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

சுயநலமே உயர்வு என்பதாகப் படுகிறது! அதுவும் மரபணுவில் பொதிக்கப்பட்ட ஒரு விசயம்தானே!!

Thursday, April 07, 2011

துடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகள்:GM Pollution!

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நம்மாழ்வாரின் ஒரு காணொளி பார்த்ததிலிருந்து அவரிடத்தின் மீது எனக்கு அளவற்ற ஈர்ப்பை உருவாக்கியிருக்கிறது. அதற்கு முன்னால் நவதான்ய என்றமைப்பின் நிர்வாகியும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக முழங்கி வரும் டாக்டர். வந்தனா சிவா மீதும் இருந்த அதே கவனம் இப்பொழுது இவர் மீதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலாக அவரை இந்த முறை ஊருக்கு வரும் பொழுது எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்ற ஆவலை வளர்த்து விட்டிருக்கிறது.

இந்த நிலையில் பஸ்ஸில் ஒரு இழை ஓடிக் கொண்டிருந்தது. அங்கு பார்வையாளனாக மட்டுமே அந்த இழையை பின் தொடர்ந்து வந்தேன். அதில் நமது தஞ்சாவூரான் என்ற விவசாயி இப்படியாக தனது ஆதங்கத்தை இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்துவதின் பொருட்டு பேசிக் கொண்டே செல்லும் பொழுது இப்படியாக ஒரு விசயத்தை முன் வைத்தார்...

...தட்டான், ஈசல், மண்புழு, பிள்ளைப்பூச்சி, பாப்பாத்தி (செவப்பா கரும்புள்ளியோட இருக்கும்), குசுவினிபூச்சி, சில வகை எறும்புகள், தண்ணிபாம்பு, சாரை பாம்பு, பச்சை கொம்பேறிமூக்கன், வண்ணத்துப்பூச்சி, சிட்டுக்குருவி, அணில், ஓணான், அரணை, உடும்பு, தேரை, சாம்பிரானி, பால்நண்டு, நட்டுவாக்காளி, கூழைப்பாம்பு, பச்சைக்கிளி, மரங்கொத்தி, கொக்கு, நாரை, மடையான், மணிப்புறா, காடை, கவுதாரி, குயில், நரி, காட்டுப்பூனை - இது எல்லாமே வயக்காடு, கொல்லைக்காட்டுலேருந்து மறைஞ்சுபோச்சுண்ணே ;( ...

அதனை படித்த பின்பும் என்னால் ஒரு பார்வையாளனாக இருக்க முடியவில்லை. எனது புரிதலாக இயற்கையமைப்பில் எப்படி இந்த மரபணு மாற்ற தொழில் நுட்பம் பல பில்லியன் ஆண்டுகளாக இயற்கை எடுத்து செயல் படுத்தி சிறுகச் சிறுக கட்டியெழுப்பி வரும் உயிரின பன்முகத் தன்மையை, சூழலமைவை (ecosystem) ஒரு சில ஆண்டுகளிலியே துடைத்தெரிய தக்கது என்பதாக எனது கருத்தினை வைத்தேன். அங்கு கூறிக் கொண்டிருக்கும் பொழுதே தனிப்பதிவாக கொண்டு வருவதின் அவசியமும் உணர்ந்தேன்.

ஏற்கெனவே 2006, 07லிலுமாக இரண்டு பதிவுகளில் பல விசயங்கள் பின்னூட்டங்களின் மூலமாக அலசப் பட்டிருக்கிறது. இந்த பதிவில் பேசப்படாத விசயங்கள் அங்கே காணப்படலாம்.

அ) பரிணாமச் சீர்கேடு ஓர் அறிமுகம்

ஆ) இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா?


இப்பொழுது கொஞ்சம் விரிவாக எப்படி இந்த சர்வதேச பண முதலைகள் தன்னிறைவுடன் ஓடிக் கொண்டிருக்கும் தனியொரு விவசாயின் உயிர்வாதார பிழைப்பிலும், நேரடியாக கை வைத்து தங்களது பணப் பேராசையை தீர்த்துக் கொள்ள முயல்கிறார்கள் என்பதை லட்சக்கணக்கில் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் இந்த கால கட்டத்தில் பேசுவது உகந்ததாக இருக்கும்.

இயற்கையின் அமைவில் உணவு சுழற்சி என்பது தன்னியல்போடு ஓடிச் சேர்வது. அது காலங் காலமாக இயற்கை தேர்ந்தெடுப்பின் பொருட்டாக கிடைக்கும் சுற்றுப்புறச் சூழல் காரணிகளை கொண்டு மரபணு பண்புகளை கூட்டி குறைத்துக் கொண்டு அந்த சார்ந்து வாழும் ஊரின் மண்ணியல்போடு தொடர்பு கொண்டதாக பரிணமித்து வளர்கிறது. பெரிய படத்தில் சற்றே விரித்து பார்த்தால் அந்த மண்ணில் வாழும் ஆயிரக் கணக்கான நுண்ணுயிர்களையும் அந்த சுழற்சியில் பங்கேற்க வைத்து அவைகளையும் தழைத்து, செழிக்க வைத்து ஏனைய சார்பு உயிரினங்களையும் உய்வித்து வளர்ந்து வரும் சூழலியல் 'வானம்' அந்த நிலமும் அதனில் விளையும் பயிரும், உணவுப் பொருட்களும்.

எப்படி ஒரு குழந்தை உருவாவதில் ஒரு பெண்ணின் சார்பில் கரு முட்டையும், ஆணின் பங்காக ஒரு விந்தணுவும் மட்டுமே இயற்கையமைவில் போதுமானதாக இருக்கிறதோ, அது போலவே தாவர உணவு பொருட்களை சுய சுழற்சி செய்து கொள்ள நம்மிடம் இயற்கை எதிர்பார்க்கும் ஒரே விசயம் அதன் இயல்பில் கை வைக்காமல் விட்டு விடுவதுதான். ஏனெனில் ஒரு விதையின் வழியாக நமக்குத் தேவையான எதிர்கால உணவு உற்பத்திக்கான கருவையும் உள்ளடக்கியே விளைச்சலில் கொடுத்து நிற்கிறது. மாறாக மரபணு மாற்றமுற்ற விதையில் பூச்சிக் கொல்லியை முன்னமே வைத்து தைத்து கொடுத்து சமச்சீரை உடைப்பது மாதிரி இல்லாமல்.

அந்த இயற்கையின் அமைப்பை உடைத்து, சார்பு நிலையையும், அடிமை தனத்தையும் வளர்க்கும் மரபணு மாற்றமுற்ற மலடி விதைகளை விளைவித்து உண்டது போக மீண்டும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆய்வகத்தில் உருவாக்கித் தரும் விதைகளுக்கு கையேந்தி நிற்பதில் எத்தனை சுதந்திரம் ஒரு விவசாயிக்கு இருந்து விட முடியும். இதுவும் இன்றைய கால கட்டத்தில் பெட்ரோலிய விலை நிர்ணயம் பண்ணக் கூடிய ஒரு சார்பு பொருளாதார நிலைக்கு நாளை நம்மை இந்த உணவு உற்பத்தி திறன் சார்ந்து எடுத்துச் சென்று விடாதா?

பணத்தை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுத்தப் படும் மலடி ரக விதைகளை ஊக்குவிக்கும் மரபணு தொழில் நுட்பம், ஒரு நாட்டின் ஒட்டு மொத்த விவசாயிகளின் உரிமையை மட்டும் பரித்து எடுத்துக் கொள்ள முயலவில்லை, ஒரு தேசத்தின் உணவு தன்னிறைவையும், அதன் உணவுசார் பாரம்பர்யத்தையும், வாழையடி வாழை விவசாய அறிவையும் பிடுங்கிக் கொள்ள முயற்சிக்கிறது என்பதனை ஏன் நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை?

இது வரையிலும் நாம் இந்த தொழில் நுட்பத்தின் வழியாக இழக்கும் அரசியல்/சமூக/பொருளாதார சுதந்திரத்தை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம்! இதே செய்கை எப்படி பெரியளவில் சுற்றுப் புறச் சூழலையே சிதைத்து நாம் பார்த்து வளர்ந்த நமது கிராம பூமியையே கோரமாக்கிக் காட்டும் என்பதற்கு மேலே தஞ்சாவூரானின் பின்னூட்டமே சாட்சி. ஓர் ஊரில் வாழும் தாவர விலங்குகளுக்கும் அங்கு விளையும் உணவிற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எங்காவது ஒரு மாற்றம் அதனில் ஏற்படுமாயின் மொத்த வாழ்வுச் சங்கிலியுமே அறுபட்டு போகிறது.

ஐரோப்பாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விளை நிலத்தின் பக்கமாக வந்து போகும் வண்ணத்து பூச்சிகளின் எண்ணிக்கை 40% சதவீதம் குறைந்து போனதாகவும், ஸ்கைலார்க் எனும் பறவையின் வரத்து போக்கும் சுத்தமாகவே நின்று போனதாகவும் பக்கத்து பக்கத்து வயல்காடுகளில் மரபணு மாற்றமுறச் செய்த விளைபயிர்களையும், இயற்கை முறையில் சாகுபடியாகும் வயல்களுக்கிடையில் செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. இதனில் கீழே சிந்திய இயற்கை பயிர்களினான விதைகள் மீண்டும் முளைக்கும் சாத்தியமிருப்பதால் அதனையொட்டிய ஜீவராசிகளின் வரத்து போக்கிற்கான காரணமாக தெரிய வந்திருக்கிறது.

இந்த மரபணு மாற்று பயிர்களுக்கென தூவப்படும் உரங்கள் பயிர்களுக்கான போஷாக்கை தருவதற்கெனவே என்ற வகையில் பாவித்தாலும் மண்ணை நாட்போக மலட்டுத் தன்மைக்கு இட்டுச் செல்கிறது. மண்ணும் சுவாசிக்கிறது என்பதனை இந்த இடத்தில் மறந்து போகிறோம்! பூச்சிக் கொல்லிகள் பயிர்களை தாக்கும் தேவையற்ற பூச்சிகளை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளவே என்ற போதிலும் இயற்கையிலேயே அங்கு வாழும் மற்ற ஜீவராசிகள் அதனதன் வேலைகளை செய்வதிலிருந்து முற்றிலுமாக விளக்கி விடுவதால் நன்மை தரும் பூச்சி, பட்டுகள் கூட காலப்போக்கில் சுத்தமாக துடைத்தெரியப் படுகிறது. அல்லது அவைகளிலும் ஏதோ ஒரு வகையில் மரபணு மாற்றத்தை முடுக்கி விட்டு சூப்பர், டூப்பர் வகையில் புது விதமான நச்சு வகையாக மாறிப் போய் விடும் அபாயமாகவும் ஆகிவிடுகிறது. இந்த ரசயானங்களும், பூச்சி கொல்லிகளும் விளைந்த உணவுகளின் ஊடாக நமக்கு வந்தடைகிறது என்று சொல்லிதான் விளங்கிக் கொள்ள வேண்டுமென்று இல்லை.

புதிதாக நம் உடம்பிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பல வேதிய பொருட்களின் இருப்பு (chemical traces) இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது இரு வேறு கால அவகாசங்களில் ஒரே மனித உடலில் இருக்கும் வேதிய tracesகளின் மூலமாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. இது எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும்? இது போன்ற புற வேதிய பொருட்கள் உடலில் எகிரும் பொழுது புதிது புதிதாக வியாதிகளின் வருகையும் அதிகரிப்பதினில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும். செயற்கையாக கரவை மாடுகளில் வளர்ச்சியைச் தூண்டும் மாற்று மரபணு வளர்ச்சிக் ஹார்மோன்களை உட்செலுத்தி அதிக பாலை பெறும் முயற்சியில் நமக்கு கிடைக்கும் உபரி - (IGF-1- இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி) அந்த பாலின் மூலமாக கிடைக்கப் போய் அதுவே புற்று நோயைத் தூண்டுவதாக அமைந்து விடுகிறது.

நாமே மரபணு மாற்றங்களை உருவி, சொருவி தேவையானதை சிருஷ்டித்து கொள்வதின் மூலம் உடனடி லாபம் ஈட்டினாலும், இயற்கையில் நிகழ்வுறும் பரிணாம சங்கிலித் தொடர் மாற்றங்கள் நிகழ்வுருவதை சிதைத்தவர்களாகிறோம்.

மேலும் இயற்கையில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் இந்த இயற்கை சுற்று சூழலியியல் பின்னணியில் பின்னி பிணைந்து கிடப்பது. ஒரு சில பூச்சிகள் ஒரு சில தாவரங்களை மட்டுமே உண்டு அவைகளின் இனப்பெருக்கத்தையும், பரவலையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதாக இருக்கலாம். ஒரு சில பூச்சிகள், ஒரு சில தாவரங்களில் மட்டுமே அழிவைக் கொடுக்கும் பூச்சிகளின் லார்வாக்களை உண்டு அந்த பூச்சிகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் இயற்கையமைவு இது.

எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கையின் பன்முகத் தன்மை போற்றி பாதுக்காக்கபட வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம், ஏனெனில் அந்தந்த சுற்றுப் புறச் சூழ்நிலையில் தமக்கேயான மருத்துவ குணங்களுடன் உள்ள indigenous, ethnollogically முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் இயற்கை நமக்கு கொடுத்த கொடை, அதனை பேணி பாதுகாப்பதும் நமது எதிர் கால தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்தே!

Selective breeding is wiping out the natural biodiversity! which is not good in the long run - full stop!

தஞ்சாவூரானின் ஊர் வயல் காடுகளில் அவர் பார்க்கும் சாதாரண ஜீவராசிகள் இவ்வளவு சீக்கிரமாக அவரின் பார்வையிலிருந்து காணாமல் போனதிற்கு ஒரு விளக்கமாக இதனையும் கொள்ளலாம். இந்த மறைந்து போனதிற்கு பின்னணியில் கூட நான் மேலே சொன்ன பரிணாமச் சங்கிலி (உணவுச் சங்கிலியும்) சிதைவுற்றதும் ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக, நாம் தடைசெய்யப் பெற்ற ஒரு பூச்சிக் கொல்லியை நம் வயலில் பயன்படுத்துகிறோமென்று வைத்துக் கொள்வோம் அது அங்கு வாழும் தவளைகள், நண்டுகள் போன்றவற்றை நேரடியாக பாதிக்கிறது அடுத்த முறை அவைகளின் இனப்பெருக்க முறையில் பெரிய மாற்றமெனில் அவைகளையே உணவாக கொள்ளும் மற்ற பறவைகள், விலங்கினங்களின் நிலை என்னவாக இருக்கும்...? இதுவே மாற்று மரபணு தாவரங்களுக்கும் பொருந்தும், அந்த தாவரங்கள் அந்த லோகல் இயற்கை உணவுச் சங்கிலியை அறுப்பதாக இருக்கலாம் அப்படி அது சிதைவுரும் பொழுது நம்பி உள்ள ஏனைய பிராணிகளும், பூச்சிகளும் உடனடியாக பாதிக்கப்பட்டு மாண்டழியலாம்... :(.

இந்த பரிணாம மாசுபாட்டையும், இயற்கையின் சுழற்சியில் தலையிட்டு ஊடறுப்பையும் நிறுத்திக் கொள்வது எல்லா முட்டையையும் ஒரே கூடையில் போட்டு ஒரு நாள் போட்டு உடைத்து கொள்வதனை போலல்லாமல், தப்பி பிழைத்துக் கொள்ள சிந்தித்து செயல் படுவோம்! இதுவே ஒரு தேசத்தின் உணவு தன்னிரைவிற்கும், அமைதிக்கும், தனி மனித சுதந்திரத்திற்கும் குறியீடான ‘முளை விதை’ பொருள் சொல்லி நிற்கட்டும்.

முற்றிலுமாக நமது பன்முக உணவுத் தாவர விதைகளை இழந்ததிற்கு பின்பாக குய்யோ, முறையோ என்று கதறிக் கொண்டு எங்கோ செயற்கையாக விதைகளை உற்பத்தித் தரும் ஆய்வுக் கூடங்களை நம்பியே கையேந்தி நிற்பதில் பொருளொன்றுமிருக்காது.

அப்படியே இந்த காணொளியையும் பார்த்து விசயத்தின் வீரியத்தையும், தீவிரத்தையும் உணர்ந்து கொள்ளுவோம்...




Wednesday, September 16, 2009

எபோலா வைரஸ்: Ebola Virus(RNA)

காலையில ஒரு நண்பர் கூட பேசிட்டு இருக்கும் போது சொன்னாரு HIV வைரஸையே குழந்தையாக்கும் இன்னொரு புதுவிதமான வைரஸ் மனித சந்தைக்கு வந்திருப்பது தெரியுமான்னு. அது என்ன வைரஸ்ய்யா அப்படின்னு சுதாகரிச்சிக்கிட்டு கேட்டேன் அப்போ அவரு எபோலா வைரஸ் அப்படின்னார். குறைந்தது ஒரு நாளாஞ்சு முறை திரும்பத் திரும்ப சரியாத்தான் பேரை சொல்லுறாரா இல்ல எகோலை (Ecoli)யைத்தான் அப்படி மாத்திச் சொல்லுறாரான்னு உறுதிச் செஞ்சிட்டு, அவரு சொன்ன நோயின் அறிகுறிகளை கேக்க கேக்க ரொம்ப அதிர்ச்சியா வந்துச்சு.

சரின்னு கொஞ்சம் அந்த நோயைப் பத்தி தெரிஞ்சுக்குவோமேன்னு படிக்க உட்கார்ந்தப்போ அடே சாமீன்னு ஆயிப் போச்சு. அதனோட நோயின் தீவிரத்தை அறிந்து கொண்டே வரும் பொழுது, அவ்வளவு சீக்கிரமா மனிதனை சுருட்டிருதுங்க அந்த எபோலா வியாதி.

அந்த நோய் இப்போதைக்கு ஆஃப்ரிகா கண்டத்தில மட்டும் அதுவும் காங்கோ, கேபோன், சுடான், ஐவோரி கோஸ்ட் மற்றும் உகாண்டா போன்ற நாடுகளில் மனிதர்களிடையே இருக்கும் நிலையில் அறியப்பட்டுள்ளது. எங்கிருந்து குறிப்பாக இந்த நோய் பரவியது என்று தெரியவில்லையாம், இருப்பினும் காங்கோ - குரங்குகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறதாம்.

இதன் பரவும் தன்மை மனிதர்களிடையே நேரடித் தொடர்புனாலேயோ அல்லது உடல் சுரப்புகளின் நேரடித் தொடர்பால் பரவுகிறது.

நான்கு வகையான எபோலா வைரஸ் இனங்கள் இருப்பதாகவும் அவற்றில் ஒன்று மட்டும் மனிதனுக்கு பரவும் வகை இல்லையெனவும் தெரிகிறது.

இதன் பரவும் தன்மை ஹெச் ஐ வி யைவிட பல மடங்கு எகிறுவதாக உள்ளது. இந்த நோய் ஒருவரை தொற்றியவுடனேயே உடலுக்குள் பல்கிப் பெருக ஆரம்பிக்கிறது. நான்கிலிருந்து ஆறு நாட்களுக்குள் இந்த நோயின் அறிகுறிகள் தட்டுப்பட ஆரம்பிக்கிறது. நோய் தொற்றிய நாளிலிருந்து அறிகுறி தெரிய வரும் இடைப்பட்ட நாட்களை அடைகாக்கும் பருவம் என்று கூறுகிறார்கள். அந்த அடைக்காக்கும் பருவம் இரண்டு நாட்களிலிருந்து 21 நாட்கள் வரை கூட நடைபெறலாமாம்.

எபோலாவின் அறிகுறிகளாக அறியப்படுவது சுரம், தொண்டைவலி, சக்தியற்ற நிலை, கடும் தலைவலி, தசை மற்றும் எலும்பு இணைப்புகளில் வலி, பேதி, வாந்தி, வறட்டு இருமல் மற்றும் வயிற்று வலி என பட்டியல் நீளுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ரொம்பவே அச்ச மூட்டியது நோய் அறிகுறி தட்டுப்பட ஆரம்பித்த இரண்டாவது வாரத்திற்குள்ளாகவே நாம் மண்டையை போடும் அளவிற்கு செல்லுவதுதான். முத்தாய்ப்பாக அந்த நிலையில் உள்ளும், புறமுமாக இரத்தம் வடிந்து இறக்க நேரிடுகிறதாம். எனவே, பெருமளவில் இரத்தம் இழப்பாலேயே இறுதியாக மரணிக்க நேர்வதாகப் படுகிறது.

இந்த எபோலா பத்தி இப்படியும் சொல்லிக்கிறாங்க, செப்டம்பர் 2001க்கு பிறகு பேரழிவைத் தரும் உயிரின ஆயுதமாக மனிதனால் பின் வரும் காலங்களில் இந்த வைரஸ் உருவாக்கப்படலாமென்று.

ஆத்தாடி என்னங்கடா நடக்குது, இந்த பூமியில, எய்ட்ஸ், எபோலா இப்போ பன்றிக் காய்ச்சல் - இப்படி போயிட்டே இருக்கே பட்டியல், ஜனத்தொகைய கண்ண மூடிக்கிட்டு பெருக்கிப்புட்டமோ, இயற்கையே கட்டுப்படுத்த ஆரம்பிச்சிருச்சா இல்ல மனுசப்பய ஆய்வுக் கூடங்கள்ளே ஏதாவது ஏடா கூடமா தயாரிச்சு வெளிய விட்றாய்ங்களா... ஒண்ணுமே புரியலப்பூ.



Source: Ebola hemorrhagic fever (also known as Ebola) is a contagious illness caused by an infection with the Ebola virus. It is often fatal in humans, monkeys, gorillas, and chimpanzees. The virus was first recognized in the Democratic Republic of the Congo (formerly Zaire) in 1976. No case of this illness in humans has ever been reported in the United States. There is no cure; treatment usually consists of providing supportive care while the body fights the infection.

Friday, November 30, 2007

இரவு நேர வேலையால் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள்!

இன்றைய சூழ்நிலையில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் கொடுத்த பகல் பொழுது போதாமல் இரவையும் பகலாக்கி உற்பத்தியைப் பெருக்கி பெரியத் திரை ட்டி.வி பெட்டி வாங்க வேண்டுமென அயராமல் நாடுகள் தோரும் உழைத்து வருகிறோம். இதில் என்ன வேதனையான மற்றுமொரு விசயமென்றால் இது போன்ற ஷிஃப்ட்களில் வேலையிலிருப்பவர்கள் மிக சொற்பமாகவே தன் வீட்டாருடன் ஊடாடி மகிழும் சூழ்நிலை என்று நினைத்த நேரம் போய், இப்பொழுது தலையில் ஒரு இடியை இறக்கி இருக்கிறது அண்மைய ஆராய்ச்சிகள்.

அது என்னவெனில் இது போன்ற இரவு நேர ஷிஃப்ட்களில் (Graveyard Shift) வேலை செய்யும் பெண்களுக்கு மார்பக, ஆண்களுக்கு ப்ராஸ்டேட் (Prostate) புற்று நோய் வருவதற்கான அனேகத்தன்மை அதிகமாக இருக்கிறது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதற்கான காரணமாக மெலடோனின்(Melatonin) என்ற நிறமியின் குறைவுத் தன்மை பெண்களில் ஓவரியன் ஈஸ்ரோஜனை அதிகரிக்கச் செய்கிறதாம். ஆனால், இந்த மெலடோனின் வந்து உடம்பில் கட்டிகளை வளர விடாமல் தடுக்கும் சக்தி கொண்டதாம், ஆனால் இரவு நேரங்களில் கூட அதிக வெளிச்சத்தில் இருந்து வேலை செய்ய நேர்வதால் இதன் உற்பத்தி பாதிக்கப் பட்டு உடலில் முன் சொன்னது போல சில ஹார்மோன்களின் உற்பத்தியை சமச்சீரற்ற நிலைக்கு தள்ளுவதால் இது போன்ற வியாதிக்கு காரணமென்று அறியப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 75,000 இரவு நேர பணி புரியும் செவிலியர்களிடம் நேர்காணல் கண்டு அவர்களின் புற்று நோய் பின்புலம் சார்ந்த கேள்விகளை அறிந்து 10 வருடங்கள் மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டதில், இவர்களுக்கு இரவு நேர பணியிலேயே இல்லாத பெண்களை விட (60%) அதிக அளவில் புற்று நோய் தாக்கியதாக கண்டறிந்தார்களாம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது நமக்கு, இயற்கைக்கு புறம்பாக உயிரிய(உடம்பு) சங்கீதத் (Biological Clock) தன்மையை உடைத்து நாற்பட்டு தொடர்ந்து இது போன்று உடம்பை தவறுதலாக உட் படுத்தினால், லாஜிக்கலாக யோசித்தாலே நிறைய பின்விளைவுகளை சந்திக்கக் கூடுமென்பது தெளிவாகிறது, இல்லையா?


நன்றி: இது சார்ந்த செய்திகளை மேலும் படிக்க இங்கே, இங்கே மாற்றுக் கருத்தாய்வுக்கு இங்கே போங்க...

Wednesday, May 02, 2007

காட்டானின் மறு வருகை ஆ'ரம்பம்...

ஹி... ஹி...ஹி யாரோ, என்னமோ இங்கன ஒருத்தன் காட்டான் காட்டான்னு எழுதி நாட்டையே திருத்திக்கிட்டு இருந்தானே பொக்குன்னு ஆளையே காணமேன்னு மக்கள்ஸ் எல்லாம் வலை போட்டு தேடின மாதிரியும், திரும்ப வரும் போதே, இதோ வந்துட்டேன்னு சவுண்டு வேற விட்டுக்கிட்டு வாரேன்.

சரி அப்படித்தான் யாராவது இத்தனிக்கூண்டு என்னைப் பத்தி யோசிச்சு இருந்தா அவங்களுக்கு, நான் தெரிவிச்சுக்கிறது என்னான்னா, காடு கண்ட கழுதையா இந்தியா பக்கமா போயி ஒரு மூன்றரை மாதம் எல்லாத்தையும் அனுபவிச்சுப்புட்டு திரும்ப வந்துருக்கேன்.

நிறைய இருக்கு உங்க கிட்டப் பேசி பொலம்பறதுக்கு. ஏன்னா, என் ப்ளாக்கர் முகப்பே "ஏன் இப்படி"த்தானே, பர்சனாலிடி மெயிண்டைன் பண்ணணுமில்ல... ;-) வாரேன், பார்ப்போம்.

Related Posts with Thumbnails