Showing posts with label எழுத்தாளர்கள். Show all posts
Showing posts with label எழுத்தாளர்கள். Show all posts

Sunday, April 23, 2023

நெறிமுறையற்ற விளையாட்டுத் தளமே வரலாறு: Sapiens - 5

இன்று உலக புத்தக தினம். 

முகநூலில் இதுவரை எழுதிவந்த #சேப்பியன்ஸ் தொடரைப் பற்றிய பதிவுகளை இங்கு அறிமுகம் செய்கிறேன்.

நிறைய வாசிப்போம்..நாம் கடந்து வந்த பாதையை புரிந்து உலகை நேசிப்போம்.

சேப்பியன்ஸ் - 1

https://m.facebook.com/story.php?story_fbid=10216266244002319&id=1639793180

சேப்பியன்ஸ் - 2

https://m.facebook.com/story.php?story_fbid=10216165801571321&id=1639793180

சேப்பியன்ஸ் - 3

https://m.facebook.com/story.php?story_fbid=10216225088013445&id=1639793180

சேப்பியன்ஸ் - 4

https://m.facebook.com/story.php?story_fbid=10216240898848706&id=1639793180


நெறிமுறையற்ற விளையாட்டுத் தளமே வரலாறு: Sapiens - 5


ஹோமோ சேப்பியன்ஸ் நூல் எனக்கு என்னவோ மலிவு விலையில் பதிப்பிக்கப்பட்டு பள்ளி மேற்படிப்பு படித்த அனைவரும் கட்டாயமாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகமாகப்படுகிறது.

இப்பொழுது நான் அந்த புத்தகத்தின் எட்டாவது அத்தியாயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாகரீகங்களுக்குள்ளும் எப்படி சமூக அடுக்கதிகார முறை கட்டமைக்கப்படுகிறது, அது எதன் பொருட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது, அதன் பயன்பாடு என்ன என்று தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

அந்த பக்கங்கங்களை வாசிக்கும் பொழுது எதற்காக இந்த சமூகம் இப்படி ஏற்றத் தாழ்வுகளுடன் இயங்குகிறது என்ற எளிய கேள்விக்கு பதிலுரைக்கிறது. முதல் கட்ட அறிதலின் பொருட்டு வாசிப்பை நாடுபவர்களுக்கு இது ஒரு முக்கியமான அத்தியாயம். 

வரலாறு தோறும் இந்த ஏற்றத் தாழ்வுகளை ஓரளவிற்கேனும் சமப்படுத்த பல அவதார புருஷர்கள் வர வேண்டியத் தேவைதான் என்ன, எதன் பொருட்டு அவர்கள் தொடர்ந்து பேசி, சண்டை செய்ய வேண்டியுள்ளது என்பது அனைத்தும் நமக்கு  விளங்கிவிடும் இந்தப் பக்கங்களை நாம் கடந்துவிடுவதற்குள்.

சமூக அடுக்கு "ஆண்டான் அடிமை" என்ற எளிய கட்டமைப்பில் அதற்குள் பல அடுக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பயன் உயர் அடுக்கில் இருப்பவர்கள் கீழ் அடுக்கில் உள்ளவர்களை சுரண்டி கொழுத்து வாழ்வதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை நிறுவி அதன் பயன்பாட்டினை அறுவடை செய்ய பல கட்டுக்கதைகள் தேவைப்படுகிறது. அதனயொட்டிய புனைக் கதைகள் மனிதர்களின் ஆழ் மனதில் நம்பிக்கை நச்சுக்களாக விதைக்கப்பட்டோ (வர்ணாஷ்ரம), சட்டங்களாக இயற்றியோ (வெள்ளையர்களும், கருப்பினத்தவர்களும் சமமல்ல, ஏழை, பணக்காரர்களின் வாழ்வமைவு ஆசீர்வதிக்கப்பட்டது) காலப்போக்கில் ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.


இந்த கட்டமைப்பை விளக்க முற்படும் போது இந்த நூல் மிக தாராளமாக இந்து மதத்தின் பால் பிறந்த சாதிய சமூக அடுக்கு யாரால், எதற்கு உருவாக்கிக் கொள்ளப்பட்டது, அது எவருக்கு பயனளிக்கும் விதத்தில் இன்றும் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை சமகால இந்திய அரசியலமைப்பைக் கொண்டு மிகத் தெளிவாக விளக்க எடுத்து கையாண்டுள்ளார் இந்த நூலின் ஆசிரியர்.

இந்த புத்தகம் உலகம் முழுதிலும் மில்லியன் கணக்கில் விற்பனையாகி இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் சமூக அடுக்கு உருவாக்கத்திற்கு பின்னான அயோக்கியத்தனங்களை, சூழ்ச்சிகளை அப்பட்டமாக அடிக்கோடிட்டு இந்த உலகத்திற்கே புரிய வைக்க இந்துக்களின் சாதியக் கட்டமைப்பை பயன் படுத்திக் கொண்டுள்ளார். 

தீட்டு, தீண்டாமை, தூய்மை, மோலோன், கீழோன் அனைத்தும் ஒருவனை தரம் பிரித்து எவனை எந்தளவிற்கு வளர்ந்து வர இடம் கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்வதற்கும், ஒவ்வொரு முறையும் பின்புலத்தை தோண்டித் துருவி அறிந்து கொள்வதற்கு பதிலாக கூட்டு அடுக்களைக் கொண்டு பிரித்து வைத்து விட்டால் பொதுப் புத்தியில் அதற்குண்டான புத்திகளை இவன் உள்ளடக்கியவன் என்ற கற்பிதங்களையும் நம்ப வைத்து அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயங்க வைக்க முடியும் என்பதே இதன் ஏற்பாடு.

இப்பொழுது உதாரணமாக ஒன்று பார்ப்போம். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான். நல்ல திறமையானவன் ஏதோ ஒன்று அவனுடைய இரத்தத்திலோ அல்லது மரபணுவிலோ இருக்கிறது அதனால் தான் கருப்பர்களை விட அதி புத்திசாலிகளாக, பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறியும் அறிஞர்களாக இருக்கிறார்கள் என்ற வாதம்.

இரண்டு, நம்ம ஊரில் ஒரு குறிப்பிட்ட சாதி இனங்களில் பிறந்த குழந்தைகள் இசையிலும், நாட்டியத்திலும் மிக்க திறமை உள்ளவர்களாக இருக்கக் காரணம் இறைவனால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அந்த குலத்தில் பிறப்பதால் தான் என்றொரு வாதம்.

ஆனால், இந்த இரண்டு கதைகளுக்குப் பின்னாலும் மாபெரும் உழைப்புச் சுரண்டலும், சூழ்ச்சியும் புதைந்து கிடக்கிறது என்கிறார் இந்த நூலாசிரியர். பிறக்கும் போது எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் மெருகேற்ற மெருகேற்ற அவைகளை நம்மால் வார்த்தெடுத்துக் கொள்ளும் திறமைகளை உள்ளடக்கியே பிறக்கிறது, ஆனால் அதற்குரிய வசதி, வாய்ப்பு அதற்குண்டான நேரத்தை எப்படி வழங்குவது?

இங்குதான் அந்த சமூக அடுக்கமைவு ஒரு சாரருக்கு எளிய வழியையும், அங்கீகரிப்பையும் கொடுத்து மெருகேற்றிக் கொள்ள, மேல் நிலைக்கு செல்லும் படியாக கட்டமைக்கப்பட்டு பயனளிக்கிறது. பயனளிக்காமல் போகக் கூடிய அந்த போர்வை சாதி'யம் கொண்டு மற்றவர்களிடத்தே கண்டறியப் படுகிறது.

இந்த சாதிய கட்டமைப்பு உடையாமல் கட்டிக் காக்கப்படுவதின் சூட்சுமம் இதுதான். இப்போ சாதி மறுப்பு மணங்கள் பெருகும் போது இந்த அடித்தளம் சுக்கு நூறாக தகர்ந்து விடுமல்லவா? தகர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் தான் ஏனைய சமூக அநீதிகள் அடங்கி இருக்கிறது.

இப்போ புரிகிறதா இந்த நவீன தீண்டாமை உலகில் நீட், கேட் என்ற வடிகட்டல்கள் எதற்கு என்று? அவதாரப் புருஷர்கள் இத்தனை வரலாற்று ரீதியாக சக்தி படைத்த ஒரு சூழ்ச்சிக் கூட்டத்தை வெற்றியடைய வேண்டுமாயின் எத்தனை பெரிய பரந்து பட்ட பொது நோக்கும், கட்டற்ற பரிவும், விசாலமான பார்வையும் கொண்டிருக்க வேண்டும். 

நமக்கு அந்த முழுப் பயன்பாடும் வந்து கிட்டுவதற்கு முன்னதாகவே பல கட்டுக்கதைகளின் மூலமாக அவர்களுடைய பங்களிப்பு முடக்கப்படுகிறது. அந்த அரசியலை நாம் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் பொழுது போராட்டம் மீண்டும் ஒன்றாவது படிக்கி சறுக்கி வந்து நின்றிருக்கும்.

வரலாற்று புத்தகங்களை எந்த

கரையிலிருந்து நின்று கொண்டு மீள் வாசிப்பு செய்கிறோமென்பதும், இது போன்ற மானுடவியல் சார்ந்த புத்தகங்களை வயதோடு வாசித்து அவரவர்கள் நிலையில் தெளிவடைதும் முக்கியமாகிறது.

ஏனெனில் வரலாற்றில் எப்படி விளையாண்டோம் என்பது ஒரு பொருட்டே அல்ல! பிழைத்து அடுத்த கட்டத்திற்கு நமது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்வுச் சூழலைக் கொடுத்துச் செல்கிறோமா என்பதே படிமலர்ச்சியில் நம்மை படியெடுக்க இந்த இயற்கை வைத்திருக்கும் ஒரே ரூல்ஸ்!


#சாப்பியன்ஸ் - 5

#Homosapiens book

Thursday, December 31, 2020

இருபது ஆண்டுகள் பின்தங்கியுள்ள சமஸ்!

 ...2014 வரை தமிழகம் குறித்து மிக மோசமாகவே எழுதி வந்தேன். அந்த ஆண்டு 2014ல் இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்தேன். அதன் பிறகுதான் 50 ஆண்டுகள் இந்தியாவை விட தமிழ்நாடு முன்னாடி இருப்பதை அறிந்து கொண்டேன். - எழுத்தாளர் சமஸ்...

இந்தக் கணக்கை வைத்துப் பார்த்தால் சமஸ் 20 ஆண்டுகள் என்னை விட பின் தங்கி இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில், நான் இந்தியாவை 1994லயே சுத்த ஆரம்பித்து விட்டேன். அப்பவே வயசுக்கும் வந்துட்டேன்! 😁
அப்போ நான் வடக்கில் பார்த்த காட்சிகள் உடனடியா நாம எவ்வளவு ஸ்பாய்ல் செய்யப்பட்டு இருக்கோம்னு உணர வைச்சிருச்சு. முதல் விசயம் உ.பி_ல ஒரு ஊருக்கு போக நான்கு மணி நேரத்திற்கு மேல பேருந்துக்காக காத்துக்கிடந்தது. பேருந்துகளின் நிலை, சாலை கட்டமைப்பு. கங்கையில என்னோட முன்னாள் வெள்ளைக்காரி பார்ட்னரோட சங்கிகள் செய்த அலுச்சாட்டியோத்தோட மல்லுக்கட்டினதுன்னு ஒரு புத்தகம் போடுற அளவிற்கு விசயம் இருக்கு.
அது ஒரு சமுகமாக நாம எவ்வளவு தூரம் நாகரீகமடைந்து வித்தியாசப்பட்டு நிற்கிறோங்கிறதை உடனடியாக கண்ணைத் திறந்து விடக் கூடிய பயணமாக அமைந்தது.
அதனை சாத்தியப் படுத்திக் கொடுத்த திரவிடச் சிந்தனையாளர்களுக்கே அனைத்து க்ரீடிட்டும் செல்லும்.
பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் சமஸின் மனசாட்சியை ஒரு சிறு குறுக்கு வெட்டு செய்து பார்ப்போமா? நேற்று நீயா நானா_வில் தோன்றி 2014ம் ஆண்டில், தான் செய்த வட இந்தியப் பயணமே, இந்தியாவை விட தமிழ்நாடு 50 ஆண்டுகள் முன்னேறிய நிலையில் இருப்பதை உணர்த்தியது என்று கூறினார். அதிலும் கவனிக்கத்தக்க வகையில் அதற்கு திராவிடக் கட்சிகளின் திட்டங்களே அடிப்படைக் காரணம் என்று அழுத்தம் திருத்தமாக கூறுவதைக் கூட தவிர்த்து விட்டார்.
அதற்கு முன்பு இவர் மிகக் கறராக காங்கிரஸையும், திமுகவையும் விமர்சித்து வந்திருப்பதாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2016ல், திமுக தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அந்தக் கட்சியின் "அஸ்தமனம் தொடங்கிவிட்டதாக" ஆருடம் வேறு சொல்லி இருக்கார்.
இவர் மிகவும் அடர்த்தியாக தனது சிந்தனையை முன் வைத்து நகரும் ஒரு படிப்பாளியாகவும் தெரிகிறார். வீட்டிற்கு நான்கு தினசரிகளை வரவைத்து தினமும் வாசிப்பதாகவும் அவரே நீயா நானா நிகழ்ச்சியின் போது கூறினார்.
இந்த நிலையில், தன்னுடைய 40வது வயதிலேயே தமிழ்நாடு பிற மாநிலங்களை விட சமுகநீதியின் வழியாக ஒரு முன்னோடி மாநிலமாக இருப்பதை அறிந்து கொண்டேன் என்பதாகக் கூறும் கூற்று உண்மையாக இருக்க முடியுமா?
நான் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்கிறேன். எதன் அடிப்படையில் என்றால்-
ஒரு நண்பரின் அவதானிப்பு...
👉🏿//சமஸ்ஸோட பதிவுகள்ல எனக்கு நிறைய இடத்துல முரணிருக்கும்.
Many a times i felt like he is wanna be paapan based on his writings. Don't have much regards to him. //
ஏன் அப்படி முரணாக எழுதி பேசி வந்திருக்கிறார்?
இது ஓர் அடையாளச் சிக்கல் என்பதோடு, வளரும் பருவத்தில் இருப்பவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ எடுக்கும் ஒரு நிலை. சமஸ் மாதிரி ஆட்கள் தெரிந்தே அப்படி ஒரு நிலையை எடுத்திருக்க வாய்ப்புண்டு (Trying to be inclusive, so that their personal growth will go in the desired direction without any hurdle. A mere opportunistic strategy!).
ஏன்னா, ஒரு சமுகத்தினுடைய உளவியலையே புட்டுப் புட்டு போடுகிறவர் பிற இந்திய நிலப்பரப்பில் என்ன அரசியல் முன்னெடுப்புகள் எடுத்து கையாளப்படுகிறது என்று தெரியாமல் இருந்து இருப்பார் என்று சொல்வதை நம்புவதற்கில்லை. அதிலும் ஒரு நாளைக்கு நாலைந்து தினசரிகளை வீட்டிற்கு போட வைச்சுப் படிக்கிறவர். பத்திரிக்கையாளர். ஒப்பீட்டுளவில் ஒரு திட்டத்தின் சாதக பாதகங்களைப் பற்றியும் எழுதக் கூடியவர்.
இவர் தன்னுடைய மாநில மக்களின் ஒட்டு மொத்த சமுகநீதி நலனுக்காக இன்னும் உண்மையாக இருக்கலாம்.
விடலைப்பசங்களுக்குத்தான் அடையாளச் சிக்கல் வரணும் இவ்வளவு சிக்கலான விசயங்களைப் பற்றி எழுதும், பேசும் எழுத்தாளருக்கு அல்லவே!



எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும் by கண்ணதாசன்

 கண்ணதாசன் இந்தப் புத்தகத்தில் முழுக்க முழுக்க சினிமா சார்ந்த எம் ஜி ஆரின் பல்டிகளைப் பற்றி மட்டுமே பேசி இருக்கிறார். அரசியல் சார்ந்து தொடவே இல்லை. சினிமாத்துறையில் எவ்வளவு சில்லரைத் தனமாக இருந்திருக்கிறார் என்பதைப் பற்றியே நேரடியாக விமர்சித்திருக்கிறார்.

MGR அந்தப் போலிப் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்தப் புத்தகத்தைக் கூட உளவுத்துறை, காவல்துறையைக் கொண்டு சந்தையில் இருந்து துடைத்தொழித்ததோடு, எழுதிய கண்ணதாசனையே அரசவைக் கவியாக பேரம் பேசி இருக்கிறார்.
இப்போ அப்படியே கண்ணாடிய கலைஞர் பக்கம் திருப்பினா, வனவாசம் வனவாசம்னு நேரடியாக கண்ணதாசன், கலைஞரின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லாததையெல்லாம் பொழிப்புரையாக எடுத்துக்கட்டி அவரின் மீது பழிக்க அந்த நூலை நடுநிலை கொமார்கள் பயன்படுத்தி வந்தன. அந்தப் புத்தகமும் இன்னும் அச்சில் தான் உள்ளது. மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயமிருக்கும் என்பதற்கிணங்க கலைஞர், காலத்தின் கைகளில் அதனை ஒப்படைத்து விட்டார்.
இதுவே ஒரு பெரிய மனுசனுக்கும், அல்பைகளுக்கும் உள்ள வித்தியாசம். இப்போ இந்தப் புத்தகத்தைக் கூட கலைஞர் நினைச்சிருந்தா பெரிய அளவில் மக்களிடத்தே கொண்டு போய் சேர்த்திருக்க முடியும் தானே? ஏன் அப்படி அவர் செய்யல அதான் கலைஞர். அவர் எல்லோருக்கும் பெய்யும் மழையாக இருந்திருக்கார்! நம்மை கண் திறந்து பார்க்க, பேசப்படாத பல பக்கங்களை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.
இப்போ ஏன் உள்ளும் புறமும் புத்தகம் பரபரப்பா பேசப்படுது? ஏன்னா, எல்லாரும் கலைஞர் மாதிரி இருந்திட முடியாது. சினிமாக்காரய்ங்க வேற அதே ஒப்பனையோட மடியில படுத்தேன், தோள்ல தூங்கினேன்னு படுவர் அடிச்சிக்கிட்டு கிளம்ப்பிட்டாய்ங்க!
சரி, எம் ஜி ஆர் பொருட்டு கண்ணதாசன் இதில் சினிமாத் துறையின் ஒரு பகுதியை மட்டுமே பேசி இருக்கார். எம் ஜி ஆரின் முழுப் கோணல் பகுதியும் கீழே உள்ள கட்டுரையில் மிக அழகாக தொகுத்திருக்காங்க... சுமதி விஜயகுமார்! அவசியம் படிங்க.
🔹️🔹️🔹️🔹️🔹️🔹️
பொதுவாகவே தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியை எதிர்ப்பவர்கள், நேர்மைக்கு எடுத்துக்காட்டாய் முன்னிறுத்துவது காமராஜரை தான். அவருக்கு முன்போ பின்போ நல்லாட்சி செய்த தலைவர்கள் யாருமே இல்லையா என்ற கேள்வியை புறந்தள்ளிவிட்டு பார்த்தால், காமராஜரின் ஆட்சி ஏழை எளிய மக்களுக்கான ஆட்சி என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இப்போது புதிதாக, திரைத்துறையில் வாய்ப்பிழந்த நடிகைகள் தொலைக்காட்சிக்கு போவது போல் நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமாக கமல் மற்றும் ரஜினி இருவரும் முன்னிறுத்தும் தலைவர் எம்ஜிஆர். உண்மையில் கமல் ரஜினியின் நோக்கம் என்ன , உண்மையான மக்கள் தொண்டிற்காகத்தானா , அப்படியென்றால் அவர்கள் மக்களுக்காக எதனை பிரச்சனைகளில் குரல் கொடுத்தார்கள் , எத்தனை போராட்டங்களை முன்னெடுத்தார்கள் என்பதையும் ஒதுக்கி விடுவோம். அவர்கள் முன்னிறுத்தும் எம்ஜிஆரின் ஆட்சி எவ்வளவு சிறப்பாய் இருந்தது என்பதை பார்ப்போம்.
ஒருவரின் திருமண வாழ்க்கை என்பது அவரவர் விருப்பம். பொது வாழ்க்கைக்கு வந்தாலும் அவரது திருமண வாழ்க்கை பற்றி விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும் கலைஞரின் மனைவியை ஒன்று , இரண்டு , மூன்று என்று வரிசை படுத்தும் யாரும் தவறி கூட எம்ஜிஆரின் மனைவியை பற்றி மூச்சு விடுவதில்லை. இரண்டு மனைவிகள் இறந்த நிலையில் எம்ஜியார் ஜானகியை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது ஜானகிக்கு திருமணம் ஆகி கணவரும் உயிருடன் தான் இருந்தார். எம்ஜியார் ஜானகிக்கு எழுதிய காதல் கடிதம் கையில் கிடைக்க ஜானகி அம்மையாரின் கணவர் பெரும் பிரச்சனையை உருவாக்கி விட்டார். நள்ளிரவில் தன மகனுடன் வீட்டைவிட்டு கிளம்பிய ஜானகி எம்ஜியாருடனான திருமணத்திற்கு முன்னர் 12 ஆண்டுகள் Living Togetherரில் இருந்தார். (உண்மையில் திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் பெண்ணிடம் காதல் வயப்பட்டு அவரையே காத்திருந்து திருமணம் செய்து கொண்ட எம்ஜியாரை பாராட்டியே ஆக வேண்டும்)
காங்கிரஸில் பற்று கொண்டு பின்னர் திராவிட கொள்கையால் ஈர்க்கப்பட்ட பல கோடி மக்களில் எம்ஜியாரும் ஒருவர்.திமுகவின் பிரச்சார முகமாகவே இருந்தார் MGR. அண்ணாவின் மறைவிற்கு பின்னர் திமுகவில் இருந்து பிரிந்து வந்த MGR அதிமுகவை துவங்கினார். பின்னர் அது அஇஅதிமுகவானது . எதனால் என்று கேட்டல் ரஜினி கமலுக்கு விடை தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை. இந்திராகாந்தி கொண்டு வந்த அவசர நிலை காலத்தில், மாநில கட்சிகளை கலைத்து விடுவார் என்கின்ற பயத்தில் அதிமுகவை அகில இந்திய அதிமுகவாக மாற்றிய வீரம் மிக்கவர் தான் திரையில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆவார். இந்திரா காந்தி என்று இல்லை. மத்தியில் எந்த ஆட்சி இருக்கிறதோ அதற்கு எப்போதும் இணக்கமாகவே நடந்து கொள்வார்.
சர்க்காரியா கமிஷன் அனைவர்க்கும் தெரியும். பால் கமிஷன் மற்றும் ரே கமிஷன் எத்தனை பேருக்கு தெரியும். திருச்செந்தூர் முருகன் கோவிலின் உதவி ஆணையர் சுப்பிரமணியம் மர்மமான முறையில் இறக்க , அதற்கு நீதி கேட்டு கலைஞர் மதுரை இருந்து திருச்செந்தூர் வரை நடை பயணம் மேற்கொண்டார்.அந்த அழுத்தத்தின் காரணமாக எம்ஜியார் CJR Paul தலைமையில் குழு அமைத்தார். அந்த குழு கொடுத்த அறிக்கை அதிமுக அரசுக்கு எதிராக இருந்ததால் அந்த அறிக்கையை MGR வெளியிடவேயில்லை. பின்னர் கலைஞர் அதை வெளியிட்டார். ரே கமிஷன் அதைவிட சுவாரசியமானது.
1974 ஆம் ஆண்டு கலைஞரின் திமுக அரசு மதுவிலக்கை கொண்டு வந்தது.1981ல் MGR மது விலக்கை நீக்கினார். அதற்காக அவர் சொன்ன காரணம், கள்ள சாராயம் அதிகரிக்கிறது அதனால் பலர் இறக்கிறார்கள் என்பதே. மது ஆலை நடத்த ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கே கொடுக்கப்பட்டது. உரிமைகள் அனைத்தும் அதிமுக காரர்களுக்கே கொடுக்கப்பட்டது. மது விற்பனையின் மூலம் வரும் excise வரி அதிக அளவில் உயர்ந்தது. அதாவது தன் குடிமக்களுக்கு தங்கு தடையின்றி ஊத்தி கொடுத்தது MGR அரசு. அதனை தொடர்ந்து தமிழக அரசு மற்றும் கேரள அரசு ஒரு ஒப்பந்தம் போட்டது. அதன் படி தமிழக அரசு கெளரவிற்கு 65 லட்சம் லிட்டர் சாராயம் கொடுக்க வேண்டும். 33.50 லட்சம் லிட்டர் அனுப்பிய தமிழக அரசு கையிருப்பு இல்லை என்று நிறுத்தி கொண்டது. காலாவதியான அந்த ஒப்பந்தத்தை வைத்து கொண்டு கேரளா பெரும் புள்ளிகள் தமிழக சாராய உரிமையாளர்களிடம் கள்ள கடத்தலில் சாராயத்தை வாங்கியது. ஒருமுறை அப்படி நடந்த கள்ளக்கடத்தல் கேரளா அரசால் பிடிக்க பட, கடத்தல் கும்பலோ MGRகு 5 கோடி ருபாய் கொடுத்ததாக தெரிவித்தது. சுதாரித்து கொண்ட MGR, கமல் போல விசாரணையே அமைக்க கூடாது என்றெல்லாம் சொல்லாமல், தன் மேல் இருந்த குற்றச்சாட்டிற்கு தானே விசாரணை குழு அமைத்தார். திமுகவின் கடும் போராட்டத்திற்கு பின்னர் அந்த குழு கலைக்கப்பட்டு மத்திய அரசு பாலின் தலைமையின் கீழ் குழு அமைத்தது.
மேற்சொன்ன இரண்டும், நேர்மைக்கும் ஊழலற்ற அரசிற்கும் MGRகும் எந்த தொடர்பும் இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். இந்த உத்தமரின் ஆட்சியை தான் தாங்கள் தருவோம் என்று கமலும் ரஜினியும் கூறி வருகிறார்கள். ரஜினியாவது கட்டாயத்தின் பெயரில் வருகிறார் என்றால் காப்பியடிப்பதில் பெயர் போன கமல் இப்போது MGRரை ஏன் காப்பி அடிக்க முயல்கிறார் என்று தான் தெரியவில்லை. மேற்சொன்னவைகள் மட்டும் அல்லாமல் இன்னும் விவசாயிகள் படுகொலை , மீனவர்கள் படுகொலை, வன்னிய இடஒதுக்கீடு படு கொலைகள், கம்யூனிஸ்ட்கள் படு கொலை, மாணவர்கள் படுகொலை என்று MGRரின் ஆட்சி முழுவதும் ரத்த சிதறல்கள் உண்டு.
ஏழை எளிய மக்களின் உழைப்பு அனைத்தையும் சாராய விற்பனை மூலம் உறிஞ்சி எடுத்த MGR கல்வி துறையையும் விட்டு வைக்கவில்லை. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், MGRக்கு உங்களை பிடித்திருந்தால் போதும் தனியார் பள்ளி கல்லூரிகளை திறந்து கொள்ளலாம். சாராய வியாபாரிகள் பலர் கல்வி தந்தை ஆனது MGR தயவில் தான்.
MGRரின் திரைத்துறை வாழ்க்கை முதல் பாதியில் திராவிட சித்தாந்தத்தை முன் வைத்து எடுக்கப்பட்டது என்றால் இரண்டாம் பாதி அனைத்தும் ஒரு குடும்பமாக பார்க்க முடியாத அளவிற்கு ஆபாசம் நிறைந்ததாகவே இருக்கிறது. ஒரு சில பாடல்கள் எல்லாம் இன்றைய இரண்டாம் தர படங்களை மிஞ்ச கூடியதாகவே இருக்கிறது.
கமலஹாசன் தந்தி தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த கமல் திமுக, அதிமுக , பிஜேபியிடன் கூட்டணி இல்லை என்பதை சொன்னதும் காங்கிரஸுடனான கூட்டணிக்கு பிடிகொடுக்காமல் நழுவ முயன்றததற்கு என்ன அர்த்தம் என்பதை கமல் தான் விளக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வந்த கமல் காங்கிரஸ்சுடன் கூட்டணி வைக்க போகிறாரா இல்லை தனித்து போட்டியிட போகிறாரா என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும்.அவர் பேட்டி கொடுத்த ஓரிரு நாட்களில் புதிய தலைமுறை செய்தியில் இந்தியாவிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் அதற்கு காரணம் இங்குள்ள கட்டுமானம் தான் என்றும் செய்தி வெளியானது. அந்த கட்டுமானத்தில் MGRரின் பங்கு என்ன என்பதை கமல் விலகுவாரா என்பதை பொறித்திருந்து தான் பார்க்க வேண்டும்.
திரைத்துறையில் மட்டுமில்லை , அரசியலிலும் MGRருக்கு பொருத்தமான வாரிசாகவே இருப்பார் கமல்.
Coutesy: Thank you, சுமதி. விஜயகுமார்.



Saturday, July 27, 2019

Dragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்

1870கள் அமெரிக்காவிற்கு ரொம்ப முக்கியமானதொரு பத்தாண்டு. ஒரே நேரத்தில் இரு வேறு கரைகளிலிருந்து இரு வேறு இனங்களுக்கு இடையேயான
போராட்டத்தை வாசிப்பனுபவத்தின் மூலமாகப் பெற முடியுமா? முடியும் என்கிறது இரு வேறு வித்தியாசமான தளங்களைக் கொண்ட புத்தகங்கள்.
இதில என்ன முக்கியமானதொரு விசயம்னா- ஒரு புத்தகம் முழுக்க முழுக்க வரலாற்று உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் சிவப்பிந்தியர்களின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது (Bury My Heart At Wounded Knee by Dee Brown).
மற்றுமொன்று நம்ம ஜுராசிக் பார்க், ப்ரே, நெக்ஸ்ட், மைக்ரோ போன்ற பிரபலமான நாவல்களை கொடுத்த மைக்கேல் க்ரிக்டன் எழுதிய Dragon Teeth என்ற புனைவு நூல்.
சிவப்பிந்தியர்களை பற்றிய புத்தகத்தில் நாம் அவர்களுடன் திறந்த வெளியில், பனியில், மலைகளின் குடைவிடங்களில், பள்ளத்தாக்குகளில் அவர்களுடன் அவர்களது எருது தோலில் கட்டப்பட்ட குடிசையில் உண்டு, படுத்துறங்கி, குதிரையில் பயணித்து நட்ட நடு இரவில் காலனி காலத்தைய அரசு அதிகாரிகளுக்காக காத்திருந்து, நீட்டும் இடத்தில் கையெழுத்திட்டதை சாட்சியாக இருந்து பார்ப்பதாகட்டும்...
அவ்வாறு பெற்றுக் கொண்ட நிலத்திற்கு இணையாக அவர்களுக்கு ரேஷன் முறையில் கொடுக்கப்படும் காபி, சீனி, கம்பளி மற்றும் துப்பாக்கி வெடி பொருள் கொடுப்பதை தாமதப் படுத்தி அதன் மூலமாக ஏற்படும் பிரச்சினைகளில் ஒருவனாக நின்று பார்ப்பதுதாகட்டும்...
தங்களுக்கென ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட நிலத்திற்குள் உள்ள மலைகளில் தங்கம் கிடைப்பதாக செய்தி பரவி, ஒப்பந்தத்தையும் மீறி அப்பொழுதே புதிதாக கட்டப்பட்ட புகை வண்டி பயணத்தின் மூலமாக மேற்கத்திய பயணம் எளிமை பட, திபுதிபுவென் கூட்டம் சிவப்பிந்தியர்களின் நிலத்திற்குள் படையெடுக்க ஆரம்பித்ததும் அவர்களுக்குள் நடைபெற்ற மன சஞ்சலங்களை கேட்டவாறு, புகை வண்டியை மறித்து பொருட்களை கொள்ளையடிக்க குதிரைச் சவாரி செய்வதில் ஒருவனாக ட்ரைனை விரட்டிச் செல்வதுமாக சென்று...
அவ்வாறு அடிக்கடி நிகழும் பொழுது அவர்களைத் தேடி அழிக்க வரும் காலனி படை வீரர்களை தந்திரமாக சுற்றி வளைத்து கொன்று போடுவதாகட்டும்...
பின்பொரு நாள் அவர்களது கிராமங்களுக்குள் காலனி படை வீரர்கள் வந்து குடும்பம் குடும்பமாக கொன்று தலைத் தோலோடு வெட்டிப் போடுவதை நடுங்கிய உடலோடு கண்ணுருவதாக இருக்கட்டும்... சிவப்பிந்தியர் வாசிப்பு நம்மை அவர்களில் ஒருவனாக இருந்து அந்த போராட்டத்திற்கான நீதிகளை பார்க்க வைக்கும்.
அதே நேரத்தில் மைக்கேல் க்ரிக்டனோட புனைவில் அந்த வெள்ளையர்களின் பூட்டிய இரயில் பெட்டியின் அறைக்குள் இருந்து நம்மை எது போன்ற உரையாடல் நடைபெறுகிறது சிவபிந்தியர்களை பற்றி என கேட்கும் வாய்ப்பைக் கொடுக்கிறது.
அந்த புகை வண்டி உரையாடல்கள் டைனோசார்களின் புதை படிமங்களை தேடிச் செல்லும் அறிவியலாளர்களுக்கிடையே நடைபெறும் பேச்சுக்களுக்கிடையே சிவப்பிந்தியர்கள் பற்றியான அச்சம், அன்றைய போரில் எந்த ஜெனரல் கொல்லப்பட்டார் என்றும், மணிக்கு 10 கி.மீ வேகத்திலே நாள் கணக்கில் நம்மை அந்த புகை வண்டியில் கூட்டிச் செல்கிறார்கள்.
இதில் வரும் ஆண்டுகளும், சம்பந்த்தப்பட்ட இடங்களும், இரண்டு இனங்களில் முக்கியமான மனிதர்களின் பெயர்களுகும் சிறிதும் மாற்றமில்லாமல் கொடுப்பதை வாசிக்கும் போது, மாறி மாறி நாம் குதிரையின் மீதேறி அமர்ந்தவாறு அந்த புகை வண்டியை தடுத்து நிறுத்த திட்டமிடுவதாகவும், புகை வண்டிக்குள்ளிருந்து உணவின் விலையைப் பற்றிய குறைகூறலும், கடந்து போகும் ஸ்டேசன்களிலிருந்து எங்கே சிவப்பிந்தியர்கள் தாக்கி விடுவார்களோ என்ற பயத்துடன் பயணம் செய்வதாகவும் எடுத்துச் செல்வது ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவம்.
இரண்டு புத்தகத்திற்கும் பேக் ரெஃபரன்ஸ்ல் கடுமையான உழைப்பு தெரிகிறது. புனைவுதானே என்று க்ரிக்டனும் விட்டுவிடவில்லை...

Wednesday, April 24, 2019

பொதுபுத்திக் கனவுகள்: Sapiens - 4


கட்டுக்கதைகளே நம்மை உலகினோடு ஒட்டி ஒழுக கட்டியெழுப்பப் பட்டுள்ள சிறைகளின் மதில்களை ஒத்தது என்கிறார் சேப்பியன்ஸ் புத்தகத்தின் ஆசிரியர். இதனை நிறுவ இவர் மதங்கள், அரசுகள், அரசியல் கொள்கைகள், ஒரு பெரிய கார்ப்பரேட்டின் வியாபார முழக்கங்கள் என்ற விசயங்களை கையில் எடுக்கிறார்.
நம்முடைய அன்றாட சொந்த அக விருப்பத்தின் பால் நாடுகின்ற தன்னியல்பில் வாழ்வது (live your life), கனவுப் பயணம் (dream trip) போன்ற விசயங்களில் கூட எந்த அளவுக்கு வெளியிலிருந்து கட்டமைக்கப்படுகிற கற்பனை வாதம் நம்மை அகத்திலும் வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது என்று அலசி அதிர வைக்கிறார்.
இதனை சற்றே விரித்துப் பார்த்தால் குழந்தைகளை நாம் தற்சார்பு (independent) முறையில் வளர்த்தெடுக்கிறோம் என்ற அணுகுமுறையில், தேனிலவிற்கு சென்றே ஆக வேண்டுமென்ற இடத் தேர்வில், நம்முடைய பெற்றோர்களை எப்படி நலம் பேணுவது என்று எடுக்கப்படும் முடிவுகளில் என்று அனைத்திலும் இன்று கார்ப்பரேட் விளம்பரங்கள் நமக்கான தேவைகளை பொதுமைப் படுத்தி அதன் வழியில் நம்மை வழி நடத்தி வருவதை தெரிந்து கொள்ள முடியும்.
எண்ணிப்பார்க்கும் பொழுது அதில் பெரிய உண்மைகள் இருப்பதாகவே படுகிறதெனக்கு. இன்றைய அளவில் பயணங்கள் மேற்கொள்வது என்பது ஊருக்கு சொல்லிக் கொள்ளத்தக்க மெச்சும் செயலாகிப்போனதுதானே. அது போன்ற பயணங்கள் தன்னியல்பில் உந்தப்படாமல், பயண ஏற்பாட்டு மையங்களும், விமான போக்குவரத்துக் கழகங்களும், ஏனைய சுற்றுலாத் துறை மேம்பாட்டு நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பற்றி புனையப்பட்ட கருத்துக்கள் நம்மை அந்த இடத்திற்கு செல்லத் தூண்டுவதில் முதன்மைப் பங்கு வகிக்கிறதுதானே.
மிகுந்த பொருட்செலவில் மேற்கெள்ளப்பட்டும் அது போன்ற பியர்ப்ரஷ்சர் (அடுத்தவர்களுக்கான) பயணங்கள் ஏதாவது நமக்கு படிப்பினைகளை ஆழ் மனதில் விட்டுச் செல்கிறதா என்றால் மிகவும் சொற்பமானவர்களே அதனை பெற்றதாக ஒப்புக்கொள்வோம்.
இப்படியான பொது கற்பனைவாத விதைப்புகளே பொதுவான விசயங்களான மதம் பொருட்டோ, ஒரு கார்ப்பரேட்டின் விற்பனை சார்ந்த மூளை மழுங்கடிக்கும் வியாபார யுக்தி பொருட்டோ கூட ஒற்றிணைந்து நம்மை இயக்கிச் செல்கிறது என்கிறார் ஆசிரியர். இதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டுமாயின் தனிப்பட்ட முறையில் இவைகளை கேள்வி எழுப்பி அதன் பொருட்டே நம்மை வெளிக் கொண்டு வர முடியும் என்கிறாரவர்.
பெரும்பாண்மையானவர்களால் ஒரு கதை நம்பப்பட்டு அதுவே சிறந்தது என்று எனும் பொழுது வெகு சிலர் தன்னிச்சையாக அதிலிருந்து வெளிக்கிட்டு, மற்றவர்களுக்கு தான் அறிந்ததை உணர்த்தி அதிலிருந்து மீட்டெடுக்க, ஏற்கெனவே நம்பிக்கொண்டிருக்கும் கதையை விட இன்னும் வலிமையான ஒரு கதையை கட்டமைப்பது அவசியமாகிறது (உ.தா: இன்றைய இந்திய அரசியலை எடுத்துக்கொள்ளலாம் - செக்கியுலர் வெர்சஸ் அடிப்படைவாதம்).
பெரிய அளவில் இன்றும் அடையாளப் பேணல் கருதி கண்டங்களை தழுவி நிற்பது மதங்கள். இது பல தரப்பட்ட மனிதர்களையும் ஒரு சில குறிப்பிட்ட சித்தாந்தங்களின் அடிப்படையில் ஒன்றிணைத்து கட்டி இழுத்துக் கொண்டு போக ஒரு கால கட்டத்தில்உருவாக்கப்பட்டது. இதன் தேவை மனித ஓட்டத்தில் அவனுடைய சிந்தனைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த கதையின் ஆணி வேர் சற்றே நெகிழ்ச்சியுறும் பொழுது, அந்த சித்தாந்தின் மீதான நம்பிக்கை பெருமளவில் மக்களிடத்தில் குறைந்து அது காற்றோடு கரைந்து காணாமல் போய்விடும் வாய்ப்புண்டு.
இந்த கால கட்டத்தில் நமக்கு இன்னொரு புனைவு தேவை. அது இந்த ஒட்டுமொத்த மனித குலத்தையும் அடுத்தக்கட்ட பரிணாம நவீனப்படுதலுக்கு தயார் படுத்துவதாக அமைய வேண்டும். எந்த கதை சொல்லி எதிலிருந்து ஆரம்பிப்பார்?

Saturday, March 02, 2019

நரி மனிதர்கள் ஒரு சிறுகதையின் ஊடாக நிகழ்கால அரசியல்!

சில கதைகள் படிக்கும் போதே தெரியும் இவை நம்மை நிலை குலைய வைத்து உலுக்கப் போகிறது என்று. அந்த வகையில் சற்றுமுன் ஒரு சிறு கதை ஒன்று வாசித்தேன். சாகித்திய அகாதெமி பிரசுரத்தில் வெளியான “ஆச்சரியம் என்னும் கிரகம்” என்ற தமிழ் தொகுப்பிலிருந்து ‘கோன் இச்சி வீடுமலை’ எனும் சிறுகதை.
தொடக்கத்தில் சிறுவர் கதை போன்று ஆரம்பித்து நமது இருமையின் ஓலத்தை உள்ளே செல்லச் செல்ல அதிகரிக்கச் செய்தது அச்சிறுகதை. கதை, கோன் இச்சி என்ற நரியைச் சுற்றி சுழல்கிறது. அந்த நரி தனது குடும்பத்துடன் மகிழ்வோட வாழ்ந்ததுதான். ஆனால், இடையில் தனது தினசரி நரி வாழ்வு மனச்சோர்வு ஊட்டி நகர வாழ்வு வாழ ஆசைப்படுகிறது. தனது காட்டின் அருகே அமைந்து போன காஃல்ப் தளத்திற்கு விளையாட வரும் பெரிய மனிதர்களைப் பார்த்து தானும் மனிதனாக வேண்டுமென்று உந்தப்படுவதே அதற்குக் காரணம்.
அங்கு வாழும் நரிகளுக்கு ஒரு சிறப்பு வரம் இருக்கிறது. ஓக் இலை ஒன்றை உச்சஞ்தலையில் வைத்தவாறு ஒரு மந்திரத்தை உச்சரித்தால் அது எதுவாக ஆக வேண்டுமென்று ஆசைப்படுகிறதோ அப்படியே ஆகிக்கொள்ள முடியும். ஆனால், மாறியது மாறியதுதான் மீண்டும் பழைய படியாக நரியாக திரும்ப வரவே முடியாது.
அம்மாவிடம் தனது விருப்பத்தை கோன் இச்சி தெரிவிக்கிறது. அம்மா அதனைக் கேட்ட உடனேயே மிகுந்த வருத்தம் கொண்டு,முன்னால் நம்மில் சில பேர் இப்படி மாறிச் சென்றிருக்கிறார்கள், ஆனால் அவர்களால் திரும்ப வரவே முடியவில்லை. மேலும் நீ நினைப்பது போல மனித பிழைப்பு ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேக்காமல் மனிதனாகிவிட்டது.
தான் ஆசைபட்டவாரே கோட், சூட், டை அணிந்து, நகர வீதியில் இறங்கி நடந்து அங்கே முதலில் பார்த்த ஒரு வேலைக்கான விளம்பரத்தைப் பார்த்து உள்ளே செல்கிறான் கோன் இச்சி. விண்ணப்ப மனு என்றால் என்ன என்று கூடத் தெரியாமல், அப்பாவியாக நிறுவனரிடமே திரும்பக் கேக்கிறான். அவர் வித்தியாசமான ஆளாக இருக்கிறானே என்று மேலும் விசாரித்து தான் ஒரு வனமகனென்றும், முகவரியே கூட வனத்தையொட்டி புனைந்து கொடுத்த பெயர்களை கொடுப்பதையும் கண்டு ஆர்வ மூட்ட தனது கம்பெனியும் “மயிர்த்தோல் ஆடை” நிறுவனம் தானே என்றும் இவன் மலைப்பிரதேச ஆளாக இருப்பதால் பொருத்தமாக இருக்கும் என்று வேலை கொடுக்கிறார்.
ஆனால், கோன் இச்சிக்கு நிறுவனத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்றளவிலேயே ஞானம் இருந்ததே ஒழிய உண்மையாக அது எது போன்ற வேலை என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
பெரிய வீடு, கை நிறையச் சம்பளம், ஆசைப்பட்ட படி ஒரு கம்பெனிக்கு அதிகாரி என்று பெருமிதம் கொள்கிறான். தானும் நிச்சயமாக ஒரு நாள் காஃல்ப் நமது பழைய வீட்டிற்கு அருகில் இருக்கும் புல் தளத்தில் விளையாடுவோம் என்ற கனவோடு உறங்கிப் போகிறான்.
மறுநாளிலிருந்து தனது உழைப்பை தீவிரப்படுத்தி அனைத்தையும் மிக வேகமாக கற்று, முதலாளியே இவனை ஒரு முன் உதாரணமாக காட்டி மற்றவர்களை வேலை வாங்கும் அளவிற்கு நல்ல பெயர் எடுத்து மென்மேலும் பதவி உயர்வு, சம்பளமென்று உயர்ந்தபடியே அவனது வாழ்க்கை நகர்கிறது. மாத மாதம் தனது நரியாக இருக்கும் அம்மாவிற்கு முயல், பன்றி இறைச்சி என்று நிறைய வாங்கிக் கொண்டுச் சென்று சந்தித்து விட்டு வருவான்.
அப்படியான ஒரு சந்திப்பில் அம்மா, கோன் இச்சியை தனது கடந்த கால வாழ்வு நரி என்பதை மறந்து விடுமாறு கூறுகிறாள்; அப்பொழுதுதான் மேலும் நீ மகிழ்வாக இருக்க முடியுமென்றும் எடுத்துச் சொல்கிறாள். ஆனால், கோன் இச்சிக்கு அப்பொழுது ஏன் சொல்கிறாள் அம்மா என்று விளங்கவில்லை.
வேலை இடத்தில் முன் பனி பருவகாலத்தில் நன்றாக விலை போகக் கூடிய தோல் ஆடைகளின் கையிருப்பு குறைவாக இருப்பதும், நிறுவனத்திற்கு அதன் மூலம் கிடைக்கும் உபரி வருமானம் குறையக் கூடுமென்றும் எண்ணுகிறான். அது வரையிலும் தொழிற்சாலை பக்கம் எட்டிப்பார்க்காதவன் உள்ளே நுழைகிறான். அங்கே கரடி, முயல், மான், அணில், நரி என்று அனைத்து வித விலங்குகளும் கொல்லப்பட்டு, தோல் குழு குழுவாக தொங்கவிடப்பட்டிருப்பதை முதன் முதலாக கண்ணுருகிறான்.
தலை ஒரு நிமிடம் சுற்றி நிற்கிறது. கதறி அழுகிறான் அவைகள் நம்மையே உற்றுப் பார்ப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. குற்ற உணர்வு பீரிட தள்ளாடிபடியே வெளியே வந்து வீடு சேர்கிறான். இரவெல்லாம் உறக்கம் கொள்ள முடியாத படிக்கு அவனுக்கு நினைவு அதனைச் சுற்றியே வட்டமிடுகிறது.
மறுநாள் முதலாளி இவனை அழைத்து விடுகிறார். பாராட்டு பத்திரம் வாசித்து விட்டு, வரும் பருவ காலத்தில் நிறுவனத்திடம் தோலின் கையிருப்பு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். அதற்கு அவரே ஒரு தீர்வையும் கொடுக்கிறார். கோன் இச்சியை மலைக்குச் சென்று வேட்டையாடி நிறைய தோல்களை சேகரித்து வருமாறு பணிக்கிறார். கோன் இச்சி ஒரு நிமிடம் ஆடிப்போகிறான். முதலாளி தொடர்ந்து அப்படியாக செய்தால் பணி உயர்வும், மேலும் சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பதாகவும் கூறுவதை கேட்டதும் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியில் திளைத்து ஒத்துக் கொள்கிறான்.
தனது வேட்டைக் குழுவுடன் இவனும் கையில் ஒரு துப்பாக்கியுடன் மலைக்குச் செல்கிறான். காடு அதிர அதிர வேட்டை நாய்களை அனுப்பி மிருகங்களை இவர்கள் பக்கம் அனுப்பி சுட்டு தோல்களை சேகரிக்கிறார்கள். இச்சி கோனும் தன் பங்கிற்கு மிக அழகான பளபளப்பான ஒரு நரியை தூரத்தில் மற்றுமொரு விலங்கை துரத்திச் செல்வதைக் கண்டு, அந்த நரியை சுட்டு எடுத்து வருகிறான்.
வேட்டையின் போக்கை காண வந்த முதலாளி கோன் இச்சி வேட்டையாடிய நரியின் அழகை மிகவும் பாராட்டி இது போன்றதொரு அழகான, பளபளப்பான தோலை நான் கண்டதே இல்லை என்று புகழ்கிறார். அப்பொழுதே அவன் அந்த நரியை பக்கமாக கொண்டு வந்து மிக அருகில் வைத்து முகத்தை பார்க்கிறான்.
முகம் வெளிரி, கால்கள் கிடுகிடுக்கிறது கையில் பிடித்திருந்த துப்பாக்கியும், நரியும் நழுவி பூமியில் விழுகிறது. கதறி அம்மா என்றழைத்தாவாறு, காட்டிற்குள் ஓட்டம் பிடிக்கிறான். எதிர்படும் மரங்களின் மீது மோதியவாறும், வேர்களில் இரடி கீழே விழுந்து எழுந்தும் ஓடுகிறான்.
அவன் வேட்டையாடியது வேறு யாருமல்ல. அவனது அம்மாவைத்தான். அதற்கு பிறகு நடப்பது நம் அனைவருக்கும் தெரியும். மனிதர்களை வெறுக்கிறான். யாரையும் பார்க்க பிடிக்காமல் தனது அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டது அதற்குப் பிறகு என்ன ஆனதென்றே தெரியவில்லை என்பதாக கதை முடிகிறது.
நீதி: இது கதையா? இது பாடம். வாசிக்கும் போது எனக்கு சமநோக்கில் இப்பொழுது உள்ள அதிமுக மந்திரி சபைதான் தொடர்ந்து மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது. வரலாறும் தெரியாமல், தங்களின் கையில் இருக்கும் அதிகாரத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பு, வியர்வை அதன் மகிமையும் உணராமல் ஏதோ தனக்கு இன்று இதமாக இருக்கிறது என்று கடும் உழைப்பின் பெயரில் ஈட்டிய உரிமைகளை எல்லாம் தாரை வார்த்து கொடுப்பதை பார்த்தால் அந்த கோன் இச்சிதானோ இவர்கள் என்று நினைக்க தோன்றவில்லை.
அதிலும் குறிப்பாக மாஃபா பாண்டியராஜனும், செங்கோட்டையனும் செய்து வருவது இச்சி கோன் செய்யத் துணிந்த அதே ”அம்மா நரியை” வேட்டையாடலை ஒத்த குழந்தைகளின் கல்வி உரிமையை பறிப்பது என்றால் மிகையாகுமா?
ஜப்பானிய மூலம்: ஷிஞ்ஜி தாஜிமா
தமிழில் : வெங்கட் சாமிநாதன்.

Thursday, February 14, 2019

ஆழிப்பேரலையை ஒத்த மனித இனம்: Sapiens 3

சேப்பியன்ஸ் புத்தகத்தின் முதலாம் பகுதியை முடித்த நிலையில் இதனை பகிர்ந்து கொள்ளாமல் நகர்வதற்கு மனம் ஒப்பவில்லை.
எப்பொழுது சேப்பியன்ஸின் மூளையளவு பெருத்து, நிமிர்ந்த நடை கொண்டு, இரண்டு கைகளை வீசி நடந்து திரியும் நிலைக்கு இந்த பரிணாமம் அவர்களை எடுத்துச் சென்றதோ அன்றே அவர்களின் அறிவுப் பசியும், குடற்பசியும் பல்கிப்பெருகி மிக்க அழிவுகளையும், கட்டுக்கடங்கா வளர்ச்சியையும் விதைத்து அவர்களின் வழித்தடம் தோறும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறது எனலாம்.
ஆஃப்ரிகாவின் கிழக்கு கடற்கரையோரம் மெதுவாக நடந்து ஆசியாவின் மத்தியப் பகுதியை அடைந்தவர்கள் அப்படியே கொஞ்சம் பேர் இந்திய துணைக்கண்டப் பகுதியிலும், மேற்படி நகர்ந்து தெற்காசியப் பகுதிகளிலும் குடியேறினர்.
இடையில் தங்களுடைய உப மனித இனங்களை சந்திக்கும் கணம் தோறும் அறிவின்பால் சார்ந்தவர்களை புணர்ந்து உள்கிரகித்தோ, அல்லது பகையுணர்ச்சியின்பால் போரிட்டு அழித்தோ சேப்பியன்ஸ் இனம் தங்களை அந்த சூழலியலுக்கு தகுந்தாற் போல் தகவமைத்துக் கொண்டு தழைத்து வாழ்கிறார்கள்.
வேட்டையாடிகளாக இருந்த காலத்தில், நம்முடன் புழக்கத்தில் இல்லாத விலங்கினங்களை சந்திக்கும் கணம் தோறும், அதி புத்திசாலித்தனமான மண்டையறிவுடன் உருவாக்கப்பட்ட நாம் பல்வேறு பட்ட வேட்டை உக்திகளைக் கொண்டு ஏனைய விலங்கினங்களை கொன்று குவிக்கும் ஒரு பேரழிவின் கருவியாக்கி இருந்தது நம்மை இந்த இயற்கை என்பதை நாம் இங்கு மறந்து விடக் கூடாது.
பல கோடி ஆண்டுகளாக பல கண்டங்களில் செழித்து வாழ்ந்து வந்த பல பெரும் பாலூட்டிகள் எங்கெல்லாம் இந்த வேட்டையாடி சேப்பியன்ஸ் காலூன்றினானோ அங்கெல்லாம் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளாகவே அழித்தொழிக்கப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில் நாம் வேட்டையாடிகளாக இருந்த காலத்தில் இயக்கமே அற்ற நாடோடிகள் என்றளவில் மட்டுமே நம்மை குறுக்கி பார்த்துக் கொள்ள முடியாது. நாம் பேரழிவுகளையும், போராட்டங்களின் ஊடாகவும் இந்த பரந்து விரிந்து கிடந்த கிரகத்தில் நம்முடைய ஆளுமையை மென்மேலும் வளர்தெடுத்துக் கொள்ள இரத்தம் சிந்தி ஆதி சேப்பியன்ஸ் செப்பணிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றளவில் புரிந்து கொள்ள வேண்டும்.
தெற்காசியாவின் தீவுகளிலிருந்து மெல்லப் பரவி என்று அவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலண்ட் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கும் பெருமளவிலான விலங்கு உணவுச் சங்கிலிகளையும், அதனைத் தொடர்ந்த சூழலியல் மாற்றங்களையும் உருவாக்கத் தொடங்கினார்களோ அன்றே நமது அடுத்தக்கட்ட நகர்வும் தொடங்கிவிட்டது.
அதற்கு சில பத்தாயிரம் வருடங்களுக்குப் பின்னால் சைபீரியாவின் மேற்கு நிலப்பரப்பில் பனி உறைவினால் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த இணைப்பு, மேம்பட்ட சூழலியல் தகவமையும், விலங்கு புரதத்தின் பால் ஈர்க்கப்பெற்றிருந்த அந்த பகுதியில் வாழ்ந்த சேப்பியன்ஸ்களை மெல்ல வலசை போகும் பாலூட்டிகளின் பின்னால் நகர வைத்து வட அமெரிக்கா கண்டத்திற்குள் காலூன்ற வைத்தது.
அங்கும் ஒரு மாபெரும் பேரழிவிற்கு இந்த வேட்டையாடி சேப்பியன்ஸ் வழி கோணி, சுற்றுச் சூழலில் ஒரு பெரும் மாற்றத்தினை உருவாக்குகின்றனர்.
இதிலிருந்து என்ன புரிய வருகிறது என்றால் எங்கெல்லாம் சேப்பியன்ஸ் காலடி பட்டதோ அங்கெல்லாம் அதி பயங்கரமான உருவத்தினை கொண்ட பாலூட்டிகளையும், எடையுடைய பறவைகளையும், பல்லூயிர்களையும் பெருமளவில் கொன்று குவித்திருக்கிறான். தங்களுடைய உடை, உணவு, பாதுகாப்பு என பல காரணங்களுக்காக.
அது மிக இயல்பாகவே நடந்திருக்கிறது. கற்கால கருவிகளை கையாண்ட காலத்திலேயே கிட்டத்தட்ட 50 விழுக்காடு அத்தனை பெரிய பேரழிவுகளையும் நிகழ்த்தியிருக்கிறது இந்த இருகால் கொண்ட அப்பாவிகளைப் போல் உள்ள சேப்பியன்ஸ் இனம்மென்று இந்த புத்தகம் பல சான்றுகளுடன் சுட்டிச் செல்கிறது.
பின் வந்த காலங்களில் அந்த பல்லூயிர்களின் நடமாட்டம் குறைந்த காலத்தில், வேளாண் இனம் அடுத்தக் கட்ட அலையாக இந்த நிலப்பரப்பெங்கும் ஆளுமை கொள்கிறது. முதல் ஆழிப்பேரலையையொத்த வேட்டையாடி சேப்பியன்ஸ் பரவலில் பெரும் விலங்கினங்கள் அழித்தொழிக்கப்பட்டன. இரண்டாவது அலையான வேளாண் குடிகள் நிலத்தினை திருத்தியும், அழித்தும் அடுத்த மாற்றத்தினை நிகழ்த்துகிறார்கள்.
மூன்றாவது அலையாக தொழிற்புரச்சி ஓங்கிய காலத்தில் நாம் இருக்கிறோம்... அவர்கள் அளவிற்கு அழிக்க ஒன்றுமில்லை என்றாலும் மிச்சமிருப்பது நம்முடைய இருப்பிற்கான இந்த பிராணவாயு அதுவும் மிச்சமிருக்கும் இந்த வனங்களில் மட்டுமே. அதனையும் கண் மூடித்தனமாக பழைய நினைப்புதான் பேராண்டி கணக்காக கையாண்டால், நாம் இந்த பூமிப்பந்தின் மேலடுக்கில் முகவரியில்லாமல் துடைத்தெரியப்படுவோம்.

Sunday, January 27, 2019

உரையாடலின் புனைவுதான் கடவுள்: Sapiens - 2

இதுவே முதல் முறை கட்டாரின் வழியாக இந்திய பயணம் மேற்கொண்டது. ஒன்று எனக்கு வயசாகி இருக்கணும் இல்லன்னா எனக்கு தோன்றுவது போலவே தோகாவிலிருந்து அட்லாண்டாவை அடைவது மிக... நீண்ட அயற்சியைக் கொடுக்கக் கூடியதாக உள்ளதுன்னு மற்றவங்களுக்கும் தோன்றக் கூடியதாக இருக்கணும்.
அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த நீண்ட பயணத்தை எப்படி பயனுள்ளதாக ஆக்கிக்க முடியும் என்பதின் பேரில் வாசிப்பிலுள்ள சேப்பியன்ஸ் புத்தகம் துணைக்கு வந்தது. இன்னொரு பத்து பக்கங்கள் வாசிக்க ஆரம்பித்த உடனேயே எனக்கான தனிப்பட்ட எண்ண வெடிப்புகள் நிகழத் துவங்கியது.
வாசித்துக் கொண்டிருக்கும் பக்கங்கள் எது சேப்பியன்ஸை ஏனைய மனித இனங்களிலிருந்து பிரித்து உலகம் தழுவிய முறையில் ஒரே அடிப்படை கருத்துருவாக்கத்தின் மீது நம்மை நிற்க வைத்து, பிற ஆதி மனித இனங்களை பின்னுக்குத் தள்ளி நம்மை முன்னேறச் செய்தது என்று பேசுகிறது.
அதற்கு அடிப்படையே மொழி என்கிறது இந்த புத்தகம். அதனை நிரூபிக்கும் வாக்கில் அருமையான உரையாடலோடு முன் நகர்த்துகிறார் புத்தக ஆசிரியர்.
ஏனைய உயிரினங்களும் அவையவைகளுக்கேயான சங்கேத ஒலி குறிப்புகளுடன் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருந்து தங்களின் பாதுகாப்பை, உணவு தேடும் யுக்தியை பரிமாற்றம் செய்து தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது. இருப்பினும் சேப்பியன்ஸ் அடுத்தக் கட்டத்திற்கு எப்படியாக தங்களை நகர்த்திக் கொண்டது? என்பதே அடிப்படைக் கேள்வி.
நெருப்பின் பயன்பாட்டை தன்னுடைய ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்தது ஒரு வகையில் பெரிய தாண்டல் என்றால், நம்முடைய சிக்கலான மொழியறிவு இரண்டாவதாகும்.
இந்த மொழியறிவே கூட சிக்கலான கட்டமைப்பை பெறக் காரணம் நம்முடைய பொரணி பேசத் தக்க கற்பனா வாதமே முதன்மைக் காரணம் என்பதாக சொல்லி விரிகிறது இந்த புத்தகம்.
உதாரணமாக, நம்மை விட குறைந்த பட்ச உரையாடலைக் கொண்ட குரங்கினங்கள் ஆபத்து/உணவு அங்கே இங்கே என்று சுட்டிக்காட்டுக் கொள்ள ஒரு சில ஒலிக்குறியீடுகளின் வழியாக மட்டுமே தங்களது குழுவினருடன் கடத்திக் கொள்கிறது. ஆனால், சேப்பியன்ஸ் எங்கே உணவு இருக்கிறது, அதனை நெருங்கும் போது உள்ள ஆபத்து, அதன் பரப்பிடம், அருகில் என்ன இருக்கிறது, எப்படியாக சென்றால் அந்த இடத்தை விரைவில் அடையலாம், ஆபத்தை தவிர்த்து மீண்டு வருதல் என்பதாக உரையாடத் தலைப்படும் பொழுது எத்தனை மொழியறிவு தேவைப்படுவதாக உள்ளது.
இங்கிருந்துதான் சேப்பியன்ஸ்க்கு இரண்டாவது பெரிய தாண்டல் கிடைத்தது. இந்த உரையாடல், எதார்த்த, கற்பனை, புனைவு என்று பல நிலைகளில் விரிந்து விரிந்து சிறு குழுக்களை இணைக்கத் தக்க பெரிய பொய்களை உருவாக்கி கற்பனை கடவுளர்களை, நிறுவனங்களை எழும்பச் செய்து பரந்த நிலப்பரப்பில் வாழும் ஏனைய குழுக்களையும் இணைத்து ஒரு ஐடியாவிற்கு கீழ் வாழும் எதிரிகளற்ற வாழ்விடங்களை உருவாக்கிக் கொள்ள முடிந்தது.
இதுவே நமக்கு முன்னால் வாழ்ந்த பிற மனித இனங்களுக்கு சாத்தியப்படாமல் போனது அவர்களின் இருப்பை ஆழ நிர்மாணித்துக் கொள்வதிலிருந்து தவறச் செய்தது.
புனைவுக் கதைகளே, உடல் இல்லாத ஒரு நிறுவனத்திற்கோ (நல்ல கதை சொல்லிகளே முதுகெலும்பு), கடவுளுக்கோ (சடங்குகள், சம்பிரதாய கட்டுப்பாட்டு புனைவுகளே முதுகெலும்பு) அல்லது நாட்டிற்கோ எல்லைகளை வகுத்து (வாழ்வு சார்ந்த விழுமியங்களை கடைபிடிப்பதாக சொல்லப்படும் புனைவுகளே முதுகெலும்பு) அதற்கென ஓர் உடலைக் கொடுத்து அது இருக்கிறது என்று நம் அனைவரையும் அதன் பின்னால் நிற்கச் செய்து ஒரு பெரும் இனக்குழுவாக கட்டி வைத்திருக்கிறது.
இந்த புனைவுக் கதைகள் சிக்கலான மொழிகளின் ஊடாக சேப்பியன்ஸ்களின் மனங்களில் விதைக்கப்படுவதின் பொருட்டே நம்முடைய இனம் தனித்துவம் பெற்றதாகிறது.
இப்பொழுது நான் நடு வானில் பறந்து கொண்டே இந்த சிந்தனை சிக்கல்களில் என்னை அமிழ்த்தி மீட்டெடுக்கும் வகையில் பறத்தலின் அபாயக் கவலைகளை மறக்கடித்தது கூட அதே கற்பனைப் புனைவுதான்.
பறத்தல் ஆபத்தற்றது என்ற எதார்த்த கற்பனைக் கதைகள் நன்றாகவே ஆழ விதைக்கப்பட்டதும் அது அனைத்து சேப்பியன்ஸ்களின் நம்பிக்கை பெற்றதுமேயாகும்.
இதன் ஒழுங்கிலேயே சென்று யோசித்தால் திருமணம், விழாக்கள், நல்ல பெயரைக் கொண்ட நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு கம்பெனி அனைத்துமே புனைவுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்பதாகிறதுதானே?
எனில் எது உண்மை? எல்லைகளற்ற நிலமும், இந்த மரங்களும், ஆறுகளும் மலைகளும்தான். மற்ற அனைத்தும் ஓர் ஐடியாதான். அதுவே நம்முடைய இருப்பை முழுமையாக எத்தினிக் (இனப்) போரில் விழுந்து அழிந்து விடாமல் இருக்க தப்பி பிழைத்துக்கிடக்க வைத்திருக்கிறது.
இந்த கதைகளே பெருமளவில் கேள்விகளற்று விதைக்கப்படும் போது பிற்காலத்தில் நமக்கு ஆப்பு வைக்கக் கூடியதாகவும் அமையக் கூடும். அது எப்படி என்று மேல் வாசிப்பில் பிரிதொரு நாள் என்னுடைய எண்ணங்களையும் இணைத்துத் தருகிறேன்.

Link for Part 3: ஆழிப்பேரலையை ஒத்த மனித இனம்: Sapiens-3

Saturday, January 26, 2019

மகப்பேறு மரணங்கள் ஒரு பரிணாமப் பார்வை: Sapiens வாசிப்பு - 1

இந்த முறை சென்னை புத்தகத் திருவிழாவில பல முக்கியமான புத்தகங்கள் வாங்கினேன். அதில் யுவால் நோவா ஹராரி எழுதிய "சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு" ம் ஒன்று.

இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. மேலும் மொழி பெயர்ப்புகள் மிகத் தேவையான ஒன்று என்று பல இடங்களில் உணர்கிறேன்; அதுவும் 25 பக்க வாசிப்புக்குள்ளாகவே இந்தப் புத்தகம் அதனை உறுதி செய்கிறது!

ஏனெனில் பரிணாம உயிரியலின் (evolutionary biology) அடிப்படை இயங்குதளம் பற்றிய அறிவு போதுமானதாக இருக்கும் எனக்கே இந்த நூல் பல இடங்களில் அட என்று நிமிர்ந்து உட்காரச் செய்வதாக உள்ளது.

இதன் பின்னணியில் அந்த வாசிப்பே அற்ற மற்ற துறை சார்ந்த வாசகர்களுக்கு எது போன்றதொரு வாசிப்பனுவத்தை வழங்கக் கூடும் என்று எண்ணும் பொழுது அறிவியல், வரலாறு சார்ந்த தமிழ் மொழி பெயர்ப்புகள் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு அறிவுசார் நிலையில் நகர்த்தக் கூடிய முக்கிய கருவியாகும் என்று தோன்றச் செய்கிறது.

இந்த புத்தகம் இன்றும் நாம் எதிர் கொள்ளும் பல நிகழ்கால உடலியல், உளவியல் சார்ந்து நம் கைகளுக்கு அப்பால் உள்ள பிரச்சினைகளுக்கு எதுவெல்லாம் காரணிகளாக இருந்து செயல்படுகிறது என்பதை ஆழமாக அலசிச் செல்கிறது.

உதாரணமாக மகப்பேறு சமயத்தில் ஏன் தாய் சேய் மரணம் நிகழ்கிறது என்பதை நம்முடைய எழுந்து நின்று இரண்டு கால்களில் (bipedal) நடக்கும் காலத்திலிருந்து தொடங்கி, நம்முடைய மூளையின் அளவு, எடை என பிணைத்து பிறப்புறுப்பின் குறுகலே அதற்கான மூலம் என்று நம்மை புரிந்து கொள்ள கோரி நிற்கிறது. இங்கே உடனே ஏன் மகப்பேறு நேரத்தில் மருத்துவர் பேறு வழியை பெரிதாக்க கத்தி வைத்து சிறிது கிழித்து விடுகிறார் என்பதற்கான பரிணாம வழி விடைகிடைக்கக்கூடும்😲

மூளையின் எடையே ஒரு சுமை அதனை இந்த பரிணாமம் நம் தலையில் தூக்கி வைத்து உடலின் 25% சக்தியை உட்கொள்ளும் பேர்பசி கொண்ட வஸ்துவை, நாம் வேலை வாங்க சிந்தனையின் வீச்சம் அதிகரிக்கச் செய்தோமெனவும் அதுவே ஏனைய விலங்குகளைக் காட்டிலும் அதி வேகமாக முன்னேறி பரிணாம உச்சாணிக் கொம்பில் அமர வழி வகுத்தது எனவும் புரிந்து கொள்ளச் செய்தது.

இல்லையென்றால் வேட்டையாட உடல் திராணியற்ற நிலையில் ஊனுண்ணி சாப்பிட்டு மிச்சம் வைத்த மாமிசத்தை கழுதைப் புலிகள் வரண்டியது போக, நாம் இன்னமும் எலும்பை உடைத்து மஜ்ஜை உண்ணும் நிலையிலேயே இருந்திருப்போம்தானே.

அதே மூளையின் எடையே நம் தோள்களுக்கு மேல் வைக்கப்பட அதன் இன்னலாக கழுத்துப் பிடிப்பும், முதுகு வலியும் வரக்காரணம் என்று சொல்லும் போது, நிறைய உடல் சார்ந்த உபாதைகளுக்கு காரணம் கிடைக்கிறது.

அப்படியே தொடர்ந்து ஏன் பிற பாலூட்டிகளில் முழுமையாக வளர்ச்சியுற்ற குட்டி பிறந்து விழுந்த சில மணிதுளிகளுக்குள்ளாகவே எழுந்து நின்று நடக்கவும், சில வாரங்களுக்குள்ளாகவே இரைதேடிச் செல்லத் தக்கதாகவும் அமைந்து விடுகிறது எனக் கேள்வி எழுப்பி பதிலாக மனித மூளையின் வளர்ச்சி அளவும், கருப்பையில் சிசு இருக்கும் காலளவும், பிறக்கும் பொழுது பிறப்புருப்பின் குறுகல் கூறுகளுமே பரிணாமத்தில் இன்றளவும் ப்ரீமெச்சூர்டுத் தனமாக மனிதக் குழந்தைகள் ஈன்றெடுப்பிற்கான காராணமென சுட்டிக்காட்டுகிறார்.

இதுவே மனிதன் ஒரு நாகரீமாக பிற்காலத்தில் பரிணமிப்பதற்கான முதன்மைக் காரணி என்றும் அடையாளப்படுத்துகிறார். ஏனெனில் மனிதக் குழந்தைகளின் சார்ந்து வாழும் ஆண்டுகள் நீண்டிருப்பதால் அதற்கு குழுவாக சார்ந்து வாழும் ஒரு சூழல் தேவைப்படுகிறது, பின்னே அது ஒரு சமூகமாக கட்டமைக்கப்பட்டு, பிற்சேர்க்கைகளான மதம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்ற கற்பிதங்களை அளவிற்கு அதீதமாக ஏற்றிக் கொண்டு எப்படி நம்முடைய இருப்பையே இன்று கேள்விக்குறியதாக ஆக்கிக் கொண்டது சேப்பியன்ஸ் என்பதாக இந்தப் புத்தகம் பின் வரும் பக்கங்களில் பேசுமென்று நினைக்கிறேன்...

அப்பப்போ எழுதுவேன் as I further continue reading this book, I suppose! 😏 Part 2 Link : உரையாடலின் புனைவுதான் கடவுள்: Sapiens - 2

Wednesday, February 28, 2018

பேரரசன் அசோகர் - பகுதி 1 by தருமி

இந்த அத்தியாயத்தில் வரலாற்றை, புராணங்களின் வழியாக திருத்தி, இடைச்செருகல் செய்து தங்களுக்கு தேவையானதை செய்து வந்திருக்கிறார்கள் வேத விற்பன்னர்கள் என்பதாக தெளியவைக்கிறது.
இன்றைய காலத்தில் மோடி, எடப்பாடி, பன்னீர் போன்ற அடியாட்களை (ஷத்ரியர்களை) முன் நிறுத்தி வேலை நடத்திக்கொள்வது போலவே, ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பும் வேத விற்பன்னர்கள் அதே ஒட்டுண்ணி பாவனையில் வயிற்று பிழைப்பு நடத்தி இருக்கிறார்கள் என்பதும் இதன் மூலமாக தெளிவாகுகிறது.
இப்பொழுது கூட எடப்பாடிக்கு பக்கத்தில் ஒரு தேனீயின் சுறுசுறுப்புடன் ஒரு தலைமை செயலளாலர் சுற்றித் திரிவது நவீன ஏற்பாட்டின் ஓர் குறியீடு.
இத்துடன் அந்த நூலின் பக்கத்தை இணைத்துள்ளேன், அன்றும் இன்றும் அதே நிலைதான் நடந்தேறுகிறது. தவறாமல் வாசித்து விடுங்கள்.


Monday, February 26, 2018

பேரரசன் அசோகன் by ’தருமி’ மொழிபெயர்ப்பு

பேராசான் தருமி மொழி பெயர்த்த பேரரசன் அசோகன் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் ஒன்றை வாசித்து கொண்டிருக்கிறேன். வாசித்து கொண்டிருக்கும் பொழுதே அடக்க முடியாத உந்துதலின் பேரில் ஒன்றை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது (இது அந்த புத்தகத்திற்கான முழு நீள வாசிப்பனுபவமல்ல. முழுதும் வாசித்தவுடன் முழுமை படுத்தலாமென்று எண்ணியுள்ளேன்).
.
பல நூற்றாண்டுகளை அநாயசியமாக அந்த நூல் ஓரிரு பத்திகளில் கடந்து செல்கிறது. அந்த பத்திகளில் எது போன்ற அரசன் ஆண்டான் என்பதனைக் கொண்டு மக்கள் எது போன்ற வாழ்வுச் சூழலில் வாழ்ந்திருப்பார்கள் என்பதனை நினைக்கும் பொழுதே திகீர் என்கிறது.

அரசியல் சித்தாந்தமற்ற வர்ணாசிரம சூழ்ச்சியும், அதனையொட்டிய அண்டைய நாட்டு படையெடுப்பின் போது அந்த அரசு கவிழ்ந்து வேறு ஓர் அரசிற்கு கீழ் சில நூற்றாண்டுகள் ஆளப்பட்டு மீண்டும் வீழ்த்தப்பட்டுன்னு... காலச் சுழற்சியின் ஒவ்வொரு பக்கத்திலும் நிலையாமையை சுட்டியபடியே நகர்கிறது அந்த நூல். அடிநாதமாக பொதுத் தன்மையே நின்று நிலைக்கும் சித்தாந்தமென நிரவ முற்படுகிறது. வரலாறு மாற்றி எழுதப்பட்டாலும் நீடித்து நிற்பது அறம் சார்ந்த அரசாட்சியே!

அது நூல் அல்ல ஒரு பாடம் போல இருக்கிறது. அப்பட்டமான முறையில் ஒரிடத்தில் இந்திய துணைக்கண்டம் ஏன் நண்டு தனத்தினாலும், வர்ணாசிராமத்திற்கு அடிமைத் தனம் அடைந்ததாலும் அந்த தேசம் வரலாற்று சுவடுகள் தோறும் வீழ்த்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த பதிவு அந்த புத்தகத்திற்கான விமர்சனமாக நீண்டு கொண்டே செல்கிறது. இன்னும் முழுமையாக வாசித்து முடிக்காத நிலையில் அப்படி எழுதுவது அறமாகாது என்பதால் நிறுத்திக் கொள்ளலாம்.

சொல்ல வந்தது எப்பொழுதும் மனித வரலாற்றில் தொடர்ந்து அநீதிக்கும் நீதிக்குமான போராட்டம் நடந்து கொண்டேதான் வந்திருக்கிறது. குட் அண்ட் ஈவில்கான சமநிலை எட்டலில் எந்த கால கட்டத்தில் எந்த பக்கம் அதிகமான நல்ல/கெட்ட எண்ணவோட்டம் அதிகமாக குவிகிறதோ அதன் நீட்சியாக நாம் கண்டுணரும் செயல் பாடுகள் ஒரு சமூகத்துள் பாவி நிரையும்.

அநீதி ஓங்கும் பொழுது எதிர் முனையில் இருப்பவர்கள் சோர்வுற்று இனிமேல் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று ஒதுங்கிக் கொள்ள முடியாது. ஒரு சொட்டு நஞ்சு அற்ற தூய்மையான துளி என்றாலும் அது அடர்த்தியாக உள்ள நஞ்சுக் குடுவைக்குள் செலுத்தப்படும் பொழுது அதன் வீரியம் குறைக்கக் கூடியதாக அமைவதைப் போல ஆங்காங்கே தொடர்ந்து எழுப்பப்படும் அநீதிக்கெதிரான குரல்கள் அவசியம் (அது இன்றைய சிரியா, ஆதிவாசி மது, விழுப்புரம் ஆராயியின் குடும்பம் என்பதாக நீள்கிறது...).

ஆகவே, மக்களே தொடர்ந்து பேசிக்கொண்டே இருங்கள். சிறு துளி பெரு வெள்ளம்.

Tuesday, February 09, 2016

தேர்ந்த மனதும் அஞ்சலியும் by Prabhakar

.. *நிலமே அற்றவன் போலத்தெரியும் இந்தப்பையனைக் கவர்ந்தது எது? அந்த நிலத்தில் வேரூன்றி எழுந்த புனைவுலகின் மலர்ந்த மலர்களை மட்டுமே இவன் பார்க்கிறான். கலை அப்படியும் சென்றடையக்கூடும் போலும்* ...

இந்த முடிவு பத்தியிலிருந்து என்னுடைய உரையாடல் தொடங்குகிறது. அந்த *நிலமற்றவன்* என்ற ஒற்றை சொல்லாடல் எத்தனை எள்ளலையும், அலட்சியத்தையும் கொண்டதாக உள்ளது. ஹ்ம்ம்.

மனித வாழ்வின் எதார்த்தமான வாழ்வை ஒரு படைப்பாளி படைக்கும் பொழுது அதனை தரிசிக்க வாய்ப்பு கிட்டியவர்கள் அவரவர்களின் வாழ்வுப் பின்னணியில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டோ, அல்லது தன்னுடைய முன்னோர்களின் வாழ்விட அமைப்பு, வாழ்க்கை முறை, கடந்த வந்த ஏற்ற இறங்கங்கள், மொழி போன்றவைகள் தாக்கமூற்றி ஆழமாக மனதினில் தடயங்களை விட்டு சென்று பார்வையாளனை, அல்லது வாசகரின் ஆன்மாவை நெஞ்சிலிருந்து உருவி ஆணி அடித்து கட்டிப் போட்டு விட்டதாக உணரச் செய்ய வல்லது. இதனை இன்னொரு கூடு விட்டு கூடு பாயும் கதை சொல்லிக்கு சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமன்பதல்ல.
சில சூழ்நிலைகளில் வாழ்வியலின் எதார்த்ததை அப்படியே பருக நினைப்பவர்களுக்கு மொழியோ அல்லது உணவு, உடை சார்ந்த பழக்க வழக்கமோ தடையாக இருந்து விட முடியாது. கண்களின் வழியாக ஊடுருவி ஒரு ஆன்மாவை தரிசிக்கும் அந்த குழந்தைமைக்கே ஆனா சூழ்ச்சியற்ற தூய மனமிருந்தாலே அந்த கதையின் மையத்திற்குள் தங்களை உள்ளே நகர்த்தி கதா மாந்தர்களுடன் அழுவும் பொழுது அழுதும், சிரிக்கும் பொழுது சிரித்தும், கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்தும் மீண்டும் வரக் கூடிய ஆன்ம சிதைப்பு, மறு கட்டெடுப்பு நடத்தி மயான வைராக்கியத்துடன் வெளி வரக் கூடிய அளவிற்கு ஒரு கிராமத்தின் பாலக்கட்டையை வைத்தே கூட நாடுகளின் எல்லைகளை கடந்து மனதுகளின் மையத்துக்குள் அந்த மண் சார்ந்த மக்களை, அவர்களின் வாழ்வியலைக் கொண்டு சேர்க்க முடியும்.
இந்த பின்னணியில் வைத்து பார்க்கும் பொழுது அந்த ஒற்றை பாலத்தை பின்புலமாக கொண்டு கதை சொல்லிய இயக்குனர், எழுத்தாளர் ஒரு மலையாளியாக இருந்து போகும் பச்சத்தில், இரண்டு தலைமுறைக்கு முன்பே புலம் பெயர்ந்த தாய் தந்தைகளை பின்புலத்தில் கொண்டிருந்தாலும், மலையாள வாசிப்பு, நல்ல சினிமா ரசனையுள்ள மக்கள் தங்களுடைய சந்ததிகளுக்கு நல்ல படைப்புகளை கண்டெடுக்கவும், அடையாள படுத்திக் கொடுக்கவும் தவறி இருப்பார்களா என்ன?
எல்லாவற்றுக்கும் மேலாக தனி மனித மனது ஏதோ ஒரு வகையில் தனக்கு தேவையான வற்றை அடைந்து கொண்டதாக எண்ணும் பச்சத்தில், இந்த பொருள் சார் உலகிலிருந்து தப்பி அதனையும் தாண்டி வேறு எதனையோ தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கும். அது போன்ற உள்ளங்கள் நாடு, எல்லை, மதங்கள் தாண்டி வெளியுலகில் பயணித்து கொண்டே இருக்கிறது. சில பேருக்கு அது இந்த வாழ்விலேயே, குறிப்பிட்ட வயதுகுள்ளேயே அமைய பெற்றவர்களாக இருக்கும் பச்சத்தில் இது போன்ற ட்ரைப்யூட் கிடைப்பதில் ஒன்றும் எனக்கு ஆச்சர்யமில்லை.
நான் கோவையில் இருக்கும் பொழுது சுத்தமாக ஒரு வார்த்தை கூட மலையாளம் தெரியாமல் மிகககக மெதுவாக ஊர்ந்து நகரும் படங்களை கூட பார்த்ததுண்டு. என்னுடைய முனைவர் வழிகாட்டி ஒரு மலையாளி. ஒரு முறை அப்படியான ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அவரிடம் மிக குதுகலமாக அந்த படத்தைப் பற்றிச் சொல்லி, நீங்கள் பார்த்தே ஆக வேண்டுமென்று கூறி அவரும் திரையரங்கு சென்று படத்தை பார்த்துவிட்டு என்னை பார்த்து புன் முறுவலுடன் 'இனிமே, சாமீ ஆளைவிடு' என்ற ரேஞ்சிற்கு நடந்த நிகழ்வு அது.
அது ஏன் இங்கே என்றால், மொழி ஆங்கில உப தலைப்பு இல்லையென்றாலும் கதா பாத்திரங்களுடன் தங்களை இணைத்துக் கொண்ட ஒரு சிறந்த கதை சொல்லி மையத்துடன், கதாபாத்திரங்களுடன் வைத்து தைத்து விட முடியும். தேவை அதற்கான ரசனையாளன் அல்லது முற்றிய மனது!
இந்த ஒரு சிறு ரசனைக்கான/தான் வாசிக்கும், படங்களின் ரகங்களை தேர்ந்தெடுக்கும் பின்னணியில் எது போன்ற ரசிகன் இருக்க முடியும் என்று புரிந்து கொள்வதில் என்ன குழப்பம் அல்லது ஆச்சர்யம். எதற்காக அந்த கதை சொல்லி இப்படியான ஒரு ரசிகனை தான் சம்பாதித்து இருக்கிறோமா என்று தெரிய வரும் பச்சத்தில், அவரே துணுக்குற வேண்டும்?
இதிலிருந்து எனக்கு தெரிய வருவது என்னவென்றால் அந்த கதை சொல்லியின் ஜெனியூன் ஈடுபாடு, கலப்படமற்ற எழுத்து, இயக்கம் மற்றும் வழங்கிய விதம்- தன்னுடைய மண்ணைப் பற்றியும், அந்த மண் சார் மக்களைப் பற்றியும் அதன் விழுமியங்களைப் பற்றியும் எந்த விதமான சாய்வுகளுக்கும் உட்படுத்தாமல் காலங்களை தாண்டி எதார்த்தம் சொல்லி நிற்பவையாக வழங்கியிருக்க வேண்டும்.
இன்னும் நான்கு தலைமுறைகளைக் கடந்து ஈழத்திலிருந்தோ/தமிழகத்திலிருந்தோ புலம் பெயர்ந்த ஒரு தமிழன் இதே போன்றதொரு ட்ரைப்யூட் ஏதாவது தன் மண் சார்ந்த விழுமியங்களை, விளிம்பு நிலை வாழ்க்கையை சொல்லும் ஓர் உண்மையான கதை சொல்லிக்கு எடுப்பான். அப்பொழுதும் இது போன்றே இத்தனை மொழியறிவோடு இருக்கும் ஒருவன் எப்படி பத்து மிதி/மாட்டு வண்டிகளோடு வாழ்ந்த ஒரு கதை சொல்லியைப் பற்றி அறிந்து இத்தனை உருக்கத்தோடு வயொலின் பின்னணியில் ஒலிக்க நம்மை விசும்பச் செய்யும் வகையில் ஓர் அஞ்சலி செலுத்த முடியுமென்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருப்போம்.
தொடர்ந்து ஆழ் மனதின் எல்லைகளற்ற பெரும் விசும்பல்களும், பொறாமையும், அகங்காரமும் மட்டுமே வேப்ப மரத்தின் உச்சியில் நின்று அசைந்தாடுவதை ஒத்து காட்டிக் கொடுப்பதாக உள்ளது இந்த அண்டமகா பேரொளியின் பெருமூச்சுகளை செவி மடுக்கும் பொழுது.
பி.கு: இந்த தொடர்புடைய சுட்டிகள் சம்பந்தபட்டவர்களைபற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது அதற்கு ஒரு சிறப்பு நன்றி! தெறிஞ்சிக்காமயே செத்தாலும் நெஞ்சு வேகும்தேய்ன்... இருந்தாலும்...

Related Links:




Related Posts with Thumbnails