Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

Tuesday, April 16, 2013

கவிதா கலக்கின கேப்பங்கஞ்சி for தெகா - II

இது டந்த நேர்காணல் பதிவின் தொடர்ச்சி. நிறைவுப்பகுதி!


கவிதா:- நீங்கள் நிறைய படிக்கிறீர்கள் என்று தெரிகிறது..எனது தூசி தட்டப்பட்ட நூலகம்.... இதை தவிர உங்களின் பொழுதுபோக்கு...

தெகா: நிறைய மேய்ஞ்சேன்னு ஒத்துக்க மாட்டேன். ஆனா, அதன் பாதையில் செல்வதற்கு இன்னமும் என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்னு வேணா சொல்லலாம், அந்தப் பாதையில் இருப்பதுனாலோ என்னவோ குறைவாகவே இங்க எழுத முடியுது :). மற்றபடி ஏனைய பொழுது போக்குன்னா, பிடிச்சவங்களோட நீண்ட நேரம் கடலை வறுத்து புகையை கக்க வைப்பது; அப்பாம்மா, துணைவி, பிடித்த நண்ப/பிகள் கூடன்னு. நான் ஆர்வமூட்டக் கூடியது என்று நினைக்கிற விதத்தில் அமைந்த சில பதிவுகளையும், என்னோட சொந்த கிறுக்கல்களையும் அவங்கள வம்படியா பிடிச்சு உட்கார வைச்சி, அவங்க நான் வாசிக்கிறதை கேக்கும் பொழுது கஷ்டப்படுவதை பார்த்து ரசிப்பது.

மேலும் பிடியளவே உள்ள நண்பர்கள் கூட அப்பப்ப அரட்டைக் கச்சேரி நடத்துவது. பிறகு என் குழந்தைகள், அதிலும் குறிப்பா இப்பொழுது என்னய ஹை டிமாண்டில் வைத்திருக்கும் 1 வயது பெண் புதுசு, புதுசா நானே வடிவமைத்து வாய் தாலத்தில் மெட்டிசைச்சு போடும் குத்தாட்டாம் அவளிடத்தே ஹிட்டாகி சூடு பிடித்திருப்பதால் # 6ல் கூறியபடியே ரீ-சார்ஜ் போட்டுக் கொள்வதில் இதுவும் கொஞ்சம் கூடவே எனக்கு உதவுகிறது. ட்டி.வியில் பொழுது போக்குன்னா டாகுமெண்டரிகள் பார்ப்பது.

கவிதா:- உங்கள் சொந்த ஊர், அதன் சிறப்பு, வெறுப்பு ஏதாவது.

தெகா: என்னோட சொந்த ஊர் கரம்பக்குடிங்க. புதுக்கோட்டையிலருந்து பேருந்தில் புழுதி பறக்க ஒரு 40 கிலோமீட்டர் பயணம் செய்தால் பட்டுக்கோட்டைக்கு போகிற வழியில் உள்ள ஊர். அந்த ஊருக்கே இன்னமும் தன்னை எந்தப் பக்கம் சேர்த்துகிறதுன்னு தெரியாம முழிக்கிற ஒரு கிராமமுமல்லாத சிறு டவுனுமல்லாத ஊர் 12,500 மக்களோட. என் சொந்த ஊரைப் பற்றி சொல்லிக்கணுமின்னா என்னோட டீனேஜியத்துப் பருவம்தான் நான் அங்கே வயசுக்கு வந்தது ;), நண்பர்களோட பள்ளிக்கு டிமிக்கி கொடுத்துட்டு மீன் பிடிச்சு விளையாண்டது.

நாவற்பழம் பறிக்க ஐந்து கிலோமீட்டர் மிதிவண்டி அழுத்தி மரத்திலயே குரங்குக் கணக்கா நாள் முழுக்க தொங்கிறது இப்படி எத்தனையோ மனசில பசுமையா இருக்கிற ஞாபகங்கள். இப்போ எனக்கு அங்கே ஒண்ணுமே இல்ல. என்னோட அப்பாம்மாவை தவிர்த்து சொல்லிக்கிற மாதிரின்னு இருந்தாலும், இன்னமும் ஊர் மேல ஒரு இனம் புரியா காதலுண்டு.

வெறுப்புன்னா - மக்கள் ஆசையை மட்டுமே நிறைய சுமந்துட்டு ஆனா உழைக்காம சாப்பிட நிறைய பேர் ரெடியா இருக்கிறதுனாலே நிறைய பொறாமையை மட்டுமே ஊர் சுவாசிக்க காற்றாக உற்பத்திதிட்டு இருக்கிற மாதிரியான ஒரு உணர்வு. மேலும் இயற்கையின் பொருட்டு கடந்த கால பசுமை மறைந்து எங்கும் ஒரே கள்ளிக்காடா மாறிட்டு இருக்கிறது. அதனைப் பற்றி கவலைப் படாமல் மென் மேலும் எல்லா நிலங்களிலும் யூகாலிப்டஸ் மரக் கன்றுகள் நடுவதும், வீடுகள் பெருகி நியுயார்க் மான்ஹட்டன் ரேஞ்சிக்கு நிலத்தின் விலை எகிறிவருவதும் எரிச்சல்.


கவிதா : பதிவர் சந்தோஷ் எப்போது உங்கள் பெயரை எழுதினாலும் "தோசை தெகா" என்று எழுதிகிறார். அதனால் நீங்கள் சமையல் செய்வீர்கள் என்று அறிவேன். சமையல் என்பது இந்தியாவை பொறுத்தவரை பெண் என்று தான் இன்றளவும் இருக்கிறது. பற்றாக்குறைக்கு நம் மீடியாக்கள் சமையல் என்பது பெண்ணுக்கு மட்டுமே சொந்தம் போல் குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்து மனதில் பதியவைத்து விடுகின்றன. இதைப்பற்றி உங்களின் கருத்து.

தெகா: "தோசை தெகா" அட இது வரைக்கும் எனக்கு இப்படி ஒரு பெயர் இருக்கிறதை சொல்லவே இல்லை. சந்தோஷ், கொஞ்சம் எட்டாம தூரத்திலதான் இருந்து போனாரு இல்லன்னா பாவம் அந்தாளை வைச்சே என்னோட எக்ஸ்பெரிமெண்ட் சாப்பாட்டு வகைகளை அவர் மேல வைச்சு ஒரு ஆராய்ச்சியே நடத்தி முடிச்சிருக்கலாம். அவருக்கு ஒரு சட்னி பண்ணினேன் பாருங்க, அப்படி ஒரு சட்டினியை எங்குமே சாப்பிட்டுருக்க வாய்ப்பே இல்லை. சமையலறையில் இருந்த அந்தனை முந்திரிப் பருப்பிலுருந்து, நிலக் கடலை, பொட்டுக்கடலை வரைக்கும் போட்டு ஒரு பஞ்ச் பண்ணி சட்டினியென படைத்தேன், தோசை கடைசியில எனக்கே கிடைக்கலங்க :)).

இந்த சமையல் விசயமாங்க, அது எல்லாம் தானாகவே செய்ய வந்துடும் ஏன்னா பசின்னு ஒண்ணு இருக்கில்ல, அப்படி அதுபாட்டுக்கு வரும் பொழுது யாரும் செஞ்சுப்போடன்னு ஆள் பக்கத்தில இல்லைன்னா தானாகவே தடபிபார்க்கிற மனசு வந்துடும். ஆனா, நம்மூர் சூழ்நிலையில் அதுக்கான அவசியங்களை பெரும்பாலானவர்கள் உருவாக்கிக் கொள்வதில்லை. நம் சமூகத்தில் அதற்கான அவசியமும் ஒரு நாள் வருமென்பதனை உணர்த்துவதுமில்லை. ஆனால், சமையல் என்பது என்னயப் பொறுத்த மட்டில் ஒரு அல்டிமேட் அன்பைக் காட்டும் ஒரு போர் கொல்லை. அங்கே வைத்து எல்லாவற்றையும் சரிசெய்து விடலாம் என்பதேயது! என்னோட மேற்கு மலைக்காடுகளின் தங்கலின் போது, எனக்கு இந்த சமையல் விசயம் ஒரு சர்வைவல் விசயமாத்தான் என்னிடம் ஒட்டிக்கிச்சு . அங்கிருந்து கற்றுக் கொண்டது ரொம்பவே கை கொடுத்தது இங்கு வந்து என் சமையல் கைவரிசையை பல இனமக்களிடம் காமிச்சு ஆஹா, ஒஹோ பட்டம் வாங்க. இருந்தாலும், நம்ம ஆட்கள் இந்த அனுபவத்தையும் ரொம்பவே மிஸ் பண்றாங்க, கமல் மட்டும் படங்களில் அப்பப்போ செஞ்சு காமிப்பார், வாஞ்சையோட...

ஆனா, இப்போ என்னயும் உட்கார வைச்சி சமைச்சுப் போட ஒரு ஆள் வந்தாச்சு. ரொம்ப சுகமாத்தான் இருக்கு. அப்படியே பழகிட்டா நானும் அதே குட்டைதான் :). இன்னொன்ன நல்ல கவனிச்சுப் பார்த்திங்கன்னா, சமையற் கலை வகுப்பிற்கும் சரி, எந்த மாதிரி உணவு விடுதிகளா இருந்தாலும் சரி பெருமளவில் சமையலில் ஈடுபட்டுருப்பது ஆண்கள்தானே? அது என்னாமாதிரியான முரணுங்க, அது.


கவிதா: பெண்' மாதவிடாய் இருக்கும் போது வீட்டில் தனியாக உட்கார வைப்பது, கோயிலுக்கு அனுமதிக்கப்படாததற்கு மருத்துவரீதியான காரணங்கள் இருக்கின்றன். அதற்கு நீங்கள் உடன்படுகீறீர்களா?

தெகா: அது என்னங்க "பெரிய மருத்துவ சம்பந்தமான" காரணங்கள் எனக்குத் தெரியலையே. எனக்கு தெரியறது இதுதாங்க அந்த நாட்களில் - உடம்பும் மனசும் சோர்வா இருக்கிறது அம்புட்டுத்தேன். மற்றபடி அந்தப் பதிவில பின்னூட்டங்களில் அடிச்சு விளையாண்டு இருப்பாங்க பாருங்க, மத்த விசயங்களை.

கவிதா: "ஒரு பெண்ணை உடம்பபை தாண்டி அவளின் மனதை தொட்டு அன்பை செலுத்த வேண்டும் - " - உங்களின் ஊரணிப்பார்வையில்...

தெகா: உண்மைதானே அது. அந்த மனசில மட்டுமே தானே நினைவுகளை நாம் தூக்கிச் சுமக்கிறோம் பின்னால் வரும் காலங்களிலும், சூழ்நிலை எப்படியாக மாறினாலும். இல்ல, உடம்பை வளர்த்து காமித்தோ, நல்ல ட்ரெஸ் பண்ணி, தலைக் கேசத்தை கோவிக் காமித்தோ மனதை வெல்ல முடியுமா? அப்படியே வென்றாலும் அது அப்படியே நிற்குமா இவையெல்லாமே உதிரும் காலம்தோரும்?

கவிதா:- குழந்தைகள் பெற்ற தம்பதிகளின் விவாகரத்து அவர்களின் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது (எந்த வயது குழந்தையாக இருந்தாலும.)

தெகா: மறுப்பதற்கில்லை. கண்டிப்பாக பாதிப்புறும், ஆனால் அவ்வாறு பாதிப்புறும் விகிதாச்சாரத்தை கூட்டுவதும், குறைப்பதும் அடல்டாகிய நமது கைகளிலேயே உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களினால் பிரிய நேரிட்டால் அப் பிரச்சினையை இரு அடல்டுகளுக்கிடையேனா பிரச்சினை என்ற விகிதத்தில் மட்டுமே அணுகி குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அத்துனை விசயங்களையும் கவனித்துகொள்வது, இன்றியமையாததது. அவ்வாறு அக் குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவரை பிரிந்து வளரும் சந்தர்ப்பத்தில் மற்றொரு பெற்றோரின் பொறுப்பில் வளரும் பொழுது, தனக்கு எதிரியான முன்னால் கணவனையோ/மனைவியைப் பற்றியோ இல்லாத அவதூருகளை பிஞ்சுகளின் மனதில் விதைப்பதை, தாம் அந்த குழந்தைகளின் வாழ்வையும், மனதையும் பாதிக்கிறோமென்றும், பின்னாளில் அதுவே பேக் ஃபயர் ஆகக் கூடிய வாய்ப்பாக இருக்குமென்பதனையும் அறிந்து நடந்து கொள்வது ரொம்ப நலம் பயக்கும், அக் குழந்தைகளுக்கு பிற்காலத்தில்.

கவிதா: இந்திய குடும்ப வாழ்க்கை முறைக்கும் அமெரிக்க வாழ்க்கை முறைக்கும் இருக்கும் அதிகபட்ச நன்மை தீமைகள்? அமெரிக்கவாழ் இந்தியர்கள் படும் கஷ்டங்கள்.

தெகா: இங்க குழந்தைகளுக்கு தீர்வு எடுக்கும் முடிவை ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் அவங்க கையிலயே கொடுத்திடுறாங்க, அது ரொம்பவே நல்ல விளைவுகளை ஏற்படுத்துறதா தெரியுதுங்க. அது ஆண்/பெண் என்றாலும் தான் முயன்று பார்க்கும் முயற்சி தோல்வியுற்றாலும் அதன் மூலமாக கிடைத்த அனுபவங்கள் அந்த தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வழங்குகிறது, அதுவே ஒரு பொறுப்புள்ள அடல்டாக வாழ்வதற்கும், நிறைய விசயங்களை சாதிப்பதற்கும் உறுதுணையாக இருக்க உதவுகிறது. இதில சில தீமைகளும் உண்டுதான் மறுப்பதற்கில்லை, ஆனால் தவறுகள் நிகழ்ந்து விடுமோன்னு பயந்திட்டே இருந்தா எப்படி அடுத்தடுத்து வரப் போகின்ற அனுபவங்களை தீர்க்கமாக அணுகி அதனில் வெற்றி பெறவும் முடியும். இப்படி தன்னிச்சையாக முடிவு எடுக்கவிடும் சமூகத்தால், சும்மா நடித்துக் கொண்டே தன்னோட முழு வாழ்க்கையையும் யாருக்காகவும் வாழ்ந்து தீர்த்துவிட முடிவதில்லை, கொஞ்சமே உண்மையாக வாழ்கிறார்களோன்னு தோணச் செய்கிறது. ஆனா, இதனையே அப்யூஸ் பண்ணுவதனையும் மறுப்பதற்கில்லை.

நம்மூர்ல இதுக்கு அப்படியே எதிர்மறையாக நடை பெறுகிறது. இதுனாலேதான், குடும்பமென்ற ஒன்று அமைத்துக் கொள்ளக் கூட பணம் கொடுத்து மணம் செய்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, யாரோ பார்த்து வைத்த பெண்ணை மண முடித்துக் கொள்ள முடிகிறது, அதனில் ஏதாவது பிரச்சினையென்றாலும், யாரையாவது விரல் சுட்டி காட்டி விட்டு எனக்கென்ன என்று இருந்து விட முடிகிறது... கடைசி வரைக்கும் திருமணமான தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளமலேயே சமூகத்திற்காக வாழ்ந்து முடித்திடும் நிலையும் அதிகமாக நடைபெறுகிறது. இப்படி எத்தனையோ, தவறே தான் செய்பவன் கிடையாது என்ற மன நிலையிலையே லயித்து உயித்து வாழ்ந்து அடுத்தவர்களின் உயிரை வாங்கிவிட்டும் சென்று விடுகிறோம்.

அமெரிக்காவில் இந்தியர்கள் படும் கஷ்டமின்னா, சில பேர் இங்க ஒரு கால் அங்கே ஒரு கால்னு வைச்சிட்டு முழுமையா இரண்டு பக்கமுமே வாழமே, குழப்பத்திலயே குழந்தைகளிலிருந்து தன்னோட சுற்றி வாழும் அணைவரையும் படுத்தி எடுத்துவிடுகிறார்கள். அப்படி ஒரு மன நிலை இல்லாத பட்சத்தில், ஏதோ அங்கே கிடைக்காத ஒரு வாழ்க்கைத் தேடித்தானே இங்கு வந்திருக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது கண்டிப்பாக மகிழ்ச்சியாத்தான் இருந்தாகணும், அப்படியில்லென்னா வேஸ்ட் எல்லாமே :)).


கவிதா: காதல் - எந்த வயது காதல் முதிர்ச்சி அடைந்ததாக இருக்கும், வெற்றி பெரும். ? மொழி,இனம், நாடு இவை கடந்த காதல் கல்யாணம் வெற்றி பெருமா?

தெகா: என்னோட "ஏன் நடிக்கணும்" பதிவு படிச்சீங்களா, அதில ரொம்பத் தெளிவா நம்மூர்க் காதல் திருமணங்கள் வெற்றிப் பெறணுமின்னா என்னன்ன அதுக்கு அடிப்படைத் தேவைகள்னு பேசியிருப்பேன். காதலுக்கு முதன்மைத் தேவை... எதனையும் திறந்த மனதுடன் அணுகும் பண்பு, மன முதிர்ச்சி, பொருளாதார தன்னிரைவு, ஒருவரின் மீது ஒருவர் வைக்கும் அசைக்க முடியா நம்பிக்கை இது போல பல பண்புகளை வளர்த்துக்ககணும் அந்தக் காதலை, மணத்தை கடைசி வரை கொண்டு போய் சேர்க்க வேண்டுமாயின்.

மனப் பொறுத்தம் அமைந்துவிட்டால் அது எல்லா தடைகளையும் தாண்டி வந்துவிடும் மேற்கூறிய ஏனைய "தேவைகளுடன்." இது இனம், மொழி, நாடு கடந்து நடை முறை படுத்தக் கூடியதுதான் என்றாலும் அசாத்திய மனத் துணிவும், வாழ்க்கை சார்ந்த தெளிவுமில்லையானால் அதுவே பின்னாளில் பெரும் இடைஞ்சலாக இருக்கக் கூடும், வரும் வாழ்க்கைச் சவால்களை எதிர் கொள்ளும் பொருட்டு.

கவிதா: உங்களிடமிருந்து அடுத்தவர்கள் (குறிப்பாக நான்) கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்/குணம்/பண்பு ?

தெகா: வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே வாழ்ந்து பார்க்கணுமின்னு எல்லாச் சூழ்நிலையிலும் நினைக்கிற மனசு. எத்தனை முறை வீழ்ந்தாலும் வாழ்க்கையை ஒரு கடமையா வாழ நினைக்காம, திரும்பவும் ஆசை ஆசையாக வாழ நினைத்து எழுந்து நிற்கிற குணம். மற்றவங்களுக்கு எடுத்துக்காட்டா இருக்கணுமின்னுட்டு வாழ்க்கை பூராத்தையும் முகமூடி போட்டு வாழ்ந்திட்டு, எனக்கின்னு வரும்பொழுது உள்ளே வெறுமையா உணர்ரதில எனக்கு உடன்பாடு கிடையாதுங்க. அதுனாலே, எனக்கு எது சரின்னு படுதோ, அதனை எடுத்து நடத்துறேன், அதனையே என்னை சுற்றி இருப்பவர்கள் சரின்னு பார்க்கும்படியும் பக்குவப்படுத்துறது, அதுவே தவறாக என்னய பார்க்கும் பொருட்டு அது அவர்களின் பார்வைன்னு ஏற்றுக்கிற பக்குவத்தை எனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் பாதையிலன்னு சில கோடுகளில் பயணித்திட்டு இருக்கேன். இது போன்ற வரையறை செய்யப்பட்ட பாதையிலிருந்து விலகி, முடிவற்ற கோடுகளில் பயனிப்பதால் காலத்திற்கேற்ப வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மன நிலையோட இருக்க முடியுது. இது போன்ற மன நிலையை வளர்த்துக் கொள்ள எல்லோரும் தங்களை தயார்படுத்திகொண்டால் எத்தனை பிரச்சினைகள் காணமலே போய்விடுமென்று நினைக்கும் பொழுது சற்றே அயர்சியாக இருந்ததுண்டு.


ஓடவிட்டு அடித்து கேட்ட கேள்விகள் :

1. உங்களுக்கு பிடித்த சிறந்த 3 புத்தங்கங்கள்

1) த அல்கெமிஸ்ட் 2) கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சிக் காவியமும் 3) ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் த தேர்ட் சிம்பன்சி.

2. ஜார்ஜ் புஷ் ஷிடம்- பிடித்த ஒரு குணம்

அவரின் அசட்டுத் துணிச்சல், அதனை சொல்லிட்டு ஹக் பிக்னு சிரிச்சு வைக்கிறது.

3. உங்களின் மனைவியின் சமையலில் உங்களுக்கு பிடித்தது.

கலவைச் சாதங்களில் சிலதுகள்(மாங்காய், தேங்காய் இப்படி...).

4. இயற்கை நேசிக்கு பிடித்த கலர், பிடித்த இடம் (இந்தியாவில்), பிடித்த உடை

இப்படியெல்லாம் யோச்சித்ததே இல்லை - ட்ராபிகல் கலர்ஸ்னு. பிடித்த இடம் நிறைய இருக்கே , மலையும் மலையும் சார்ந்த இடங்களும். அமைதியா யாருமே இல்லாத இடங்கள். பிடித்த உடையன்னா "லூஸ் குலோத்திங்" கவ்வி பிடிக்காத எல்லா உடைகளும்.

5. உங்கள் குழந்தைகளுக்கு இந்திய கலாசாரத்தை சொல்லிகொடுத்து வளர்க்கறீர்களா?

குறிப்பாக இப்படித்தான்னு இருக்கிற மாதிரி எந்தவொரு அடையாளமும் காமிச்சு வாழ்றதில்லை, அப்படியே எப்படியாக நானிருக்கேனோ அதனையே பார்த்து வேணுங்கிறதை எடுத்துட்டு வேணாததை விட்டுட்டுப் போனாலும் அப்படியே எடுத்துக்கிற மனசோட நான் இருக்கேன். திணிப்பது இல்லை.

6. எல்லா பொருளிலும் ஏதோ ஒரு பதிவு நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். இன்னும் எழுத வேண்டும் என்று நினைக்கும் ஏதாவது?

நிகழ்வுகள் நடைபெற நடைபெற நமது எண்ணத்தையும் அதனைச் சார்ந்து பதிந்து வைத்து விடுவோம், அவ்வளவுதான். அதுவும், இது என்னோட வளர் நிலையில் நான் எங்கிருந்துருக்கிறேன் என்பதனை பிரிதொரு நாளில் திரும்ப புரட்டிப் பார்க்க உதவும் என்ற எண்ணத்தில்தான்.

7. அமெரிக்காவை விட்டு துரத்திவிட்டால் என்ன செய்வீர்கள்?

அடச் ச்சே ஏண்டா இவ்வளவு கால தாமதம், அப்படின்னு நினைச்சிக்கிட்டு சந்தோஷமா மூட்டை, முடிச்ச கட்டிக்கிட்டு அடுத்த டெண்ட் அடிக்க கிளம்பிட வேண்டியதுதான்.

8. உங்களுடைய வலைபதிவில் தருமி' என்ற பெயரை நிறைய பார்த்தேன்.ஏன் ன்னு சொல்ல முடியுமா?

அத அவர்கிட்ட இல்லே கேக்கணும் :). இருந்தாலும், அவரு தன்னோட எண்ணத்தை என் பதிவில் விட்டுச் செல்ல காரணமா நான் நினைக்கிறது என்னன்னா "பயகிட்ட சொன்னா எடுத்துக்கொள்ளும் மன நிலையில் இருக்கிறான்"னு நினைச்சு அப்பப்போ வந்து அவரோட தடத்தை விட்டுட்டு போறார் போல. இன்னொன்னு, அடுத்த கேப்பங்கஞ்சி நீங்க கொடுக்கப் போறது அவருக்காகத்தான் இருக்கணும், ஆனா, நிறைய தோண்டணும் அங்கே, செய்வீங்களா??

தெகாவின் இன்றைய தத்துவம் :- காகா, காகாவா இருந்தாத்தான் அதுக்கு அழகே... அதுவே தான் மயிலுக்கும்!




Wednesday, March 20, 2013

கவிதா கலக்கின கேப்பங்கஞ்சி for தெகா - I

இந்த கேப்பங்கஞ்சிக்காக உழை உழைன்னு உழைத்த கவிதாவை எப்படியாவது கெளரவித்து காட்டிவிட வேண்டுமென்று அவரது தளத்தில் வெளியிடப்பட்ட எனது இந்த நேர்காணல் மறுபிரசுரிப்பு செய்ய பல முறை கேட்டும் எனக்கு அனுமதி வழங்காமலேயே கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

ஒரு வழியாக மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டு சரி எடுத்து போட்டுக் கொள்வதனால் போட்டு கொள்ளுங்கள் என்று அனுமதியும் கொடுத்தாகி விட்டது. அப்படி போராடி இதன் மறு பிரசுரிப்பு வாங்கியதற்கான காரணமாக சட்டென்று என் மனதில் படிவது என்ன வென்றால், பத்தி பத்தியாக நான் சிந்திச்சு எனது பார்வையை பகிர்ந்து கொண்டதை விட, இதற்கென பல மாதங்கள் என்னுடைய அத்தனை பதிவுகளையும் வாசித்து, அதனின்று கேள்விகளை உருவி மீண்டும் எங்கும் அடி பிராளமல் நான் சென்று கொண்டிருக்கிறேனா என்று என்னை மறு தோண்டுதல் செய்த கவிதாவிற்கு நன்றி கடனாகவாவது இருந்து விட்டு போகட்டுமே என்று மொத்த நேர்காணலையும் இரண்டு பகுதிகளாக பிரித்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இது எனது கடந்த வருடங்களுனுடைய முக்கிய பதிவுகளின் சாரம்சமாக அமையும் என்றால் மிகையாகது. நன்றி! Squirrel Kavitha, are you happy now! 

இதோ அந்த ஆறிப்போன கேப்பங்கஞ்சியை மைக்ரோவோவ் பண்ணி கவிதாவுடன் சேர்ந்து உங்களுக்காகவும்...

**************************************


2005ல் வலைப்பதிவு தொடங்கியுள்ள பிரபா என்ற தெகா'வின் முதல் பதிவிலே கண்டெடுத்த வார்த்தைகள் "தெக்கிக்காட்டானுக்கு முகமூடி கிடையாது, பெயரிலே தெரிந்திருக்கலாம்." முகமூடிகளோடு எழுதும் பலரின் மத்தியில், முகமூடி என்று ஒன்று இல்லாமல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல், ஓரளவிற்கு தன்னை தானாக இருக்க வைத்துக்கொண்டு, எல்லாவிதமான பரிமாணங்களிலும், எல்லா பொருள்களிலும் எழுதக்கூடிய நண்பர் தெக்கிக்காட்டான் இன்று எங்களுடன்.

லிவிங்ஸ்மைல் வித்யா'விற்கு பிறகு கேள்விகள் கேட்க மிகவும் யோசித்த ஒரு நண்பர் இவராகத்தான் இருப்பார். இது வரை மிக எளிதாகவே எல்லோரிடமும் கேள்விகள் கேட்டு இருக்கிறேன். ஆனால் தெகாஜி ஐய் கேள்விக்கேட்க 2005-08 வரை அவருடைய எல்லா பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்து கேட்க வேண்டியதாக இருந்தது. காரணம் எதுவுமே கான்ரோவா, அவரை துருவி கேட்கும்படியாக இல்லை. இப்பவும் இவரை என்ன கேட்பது என்ற தெளிவில்லாமலேயே...


இதோ தெகா...

அடக் கொடுமையே! 2005-'08வரைக்கும் ஒரே மூச்சில படிச்சீங்களா? ஏன் டாக்டர் ஏதும் அறிவுருத்தினாரா எப்படித் தூக்கம் வராதவங்களுக்கும் தூக்கம் இது போன்ற போரிங்கான பதிவுகளை படிப்பதின் மூலமாக தூங்க வைக்க முடியுங்கிறமாதிரி. எப்படியோ பொழச்சுப் கெடந்து வந்து கேள்வியும் கேட்டுறீக்கலே அதுவும் இன்னமும் அந்தத் தூக்கத்திலிருந்து "தெளியாமலயே..." :)). அதுக்காகவாவது இந்தப் பதில்களை தாரேன், திரும்பவும் தூங்கவாது பயன்படுத்திக்கோங்க.

நகைச்சுவை ஒரு பக்கம். பை த வே, கவிதா உங்கள் அனைத்துக் கேள்விகளும் ரொம்பவே ஆழமாக உணர்ந்து இங்கு கொணரப்-பட்டதாகவும் என்னய நானே உட்முகமாக மேலும் பார்த்துக் கொள்ள வேண்டி கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகவும் எண்ணச் செய்தது, உங்களின் உழைப்பும் அது சார்ந்த இந்த கேப்பங்கஞ்சியும். வாழ்த்துக்கள்! நன்றி!!

இப்பக் உங்க கேப்பங்கஞ்சி குடிச்சிக்கிட்டே... பேசுவோமா...


கவிதா: வாங்க தெகாஜி..எப்படி இருக்கீங்க. .வீட்டில் அனைவரும் சுகமா..? அமெரிக்காவில் இருக்கீங்க.அங்கேயிருந்து ஆரம்பிக்கலாமே. பொழுது விடிந்து பொழுது போன.. அமெரிக்காவை நம்பியே உலகம் இருப்பது போன்ற பிரம்மை அதிகமாகிக்கிட்டே போகுது...அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியால் நாம் கண்டிப்பாக அடிப்படுகிறோம், அடிப்படுவோம் என்று தெரிகிறது. 1 லட்சம் அமெரிக்கர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று சமீபத்திய சர்வே சொல்லுகிறது. அங்கே இருக்கும் நம் இந்தியர்களுக்கு வருங்காலத்தில் பாதுகாப்பு இருக்குமா? உங்களால் நிலைமையை ஏதாவது கணிக்க முடியுமா .?

தெகா:- சுகத்துக்கு என்னங்க குறைச்சல், மனசு நம்ம கையாண்ட இருக்கிறதுனாலே எதைதை எப்படி பண்ணிக்கோணுமோ அப்படிப்படிப் பண்ணிப் போட்டு சந்தோஷமா வைச்சிக்க வேண்டியதுதான். எனக்கு இந்த சந்தோஷம் கடையில எடை போட்டு காசு கொடுத்து வாங்கிட முடியுங்கிறதில நம்பிக்கையில்லைங்-கோவ்(அதாவது புறப் பொருட்களின் மூலமாக). இது போலவே வீட்டில இருக்கிறவங்களையும் மனச வைச்சிக்க சொல்லி கேட்டுக்கிறதுனாலே எல்லாரும் நல்லாத்தான் இருக்கணுங்கிற மாதிரி நான் நம்பிக்கிறேன்.

[வாசகர்கள்: கேட்ட கேள்வி ஒரு வரி, இதுக்கு இப்படி எழுதினா எவன் உட்கார்ந்து படிக்கிறதாம் :))]

அமெரிக்காவா, அதை ஏன் கேக்குறீங்க நான் இங்கன வந்த நேரம் அமெரிக்காவை இந்தியாவிற்கு மாத்திட்டாங்களாம். அதுனாலே இங்கிருக்கிற பொருளாதார, கலாச்சார, மற்ற ஏனைய அதிர்வுகளை-யெல்லாம் என்னால் அங்கிருக்கும் செய்தித்தாள்களின் மூலமாகவும், ஏனைய மீடியாக்களின் மூலமாகவும்தான் உணர்ந்து கொள்ள முடிகிறதுன்னா பார்த்துக் கொள்ளுங்களேன் எந்தளவிற்கு உலகம் இறுக்கி கட்டப்பட்டிருக்கிறதா எல்லாரும் உணர்ராங்கன்னு.


இந்தியர்களின் நிலையும், பாதுகாப்பும்: பார்க்கலாம் அது வரப் போகின்ற அமெரிக்கா அதிபர் தேர்தலை ஒட்டியே சந்திக்கவிருக்கும் நிகழ்வுகளவை. குடியரசுக் கட்சி ஆட்சியமைத்தால் நிலமை கொஞ்சம் மேலும் சிக்கலாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமிருப்பதாக எண்ணத் தோணுகிறது. நம்மூர்ல ஐம்பது பேர் மட்டுமே ஏறிப் போர பேருந்தில 110பேரு பேரோம் எனக்கும் ஒரு ஒத்தைக் கால வைச்சிக்க நீங்க தள்ளி நின்னு இடங் கொடுக்காமயா போயிடுவீங்க, அப்படியே என் உசிருக்கு இங்க கேடு வரும் பொழுது அங்கே வாரேன்னா... சொல்லுங்க. எதுக்கும் இரட்டைக் குடியுரிமை வாங்கி வைச்சிட்டோம்ல.

கவிதா: மனித அட்டைகள்? உங்களுடன் முற்றிலுமாக முரண்படுகிறேன். கூட்டுகுடும்ப நிலை மாறுவதால், நிறைய பிரச்சனைகள் நம்மிடையே வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பிரச்சனைகள் நம் இந்திய கலாசாரத்திற்கு எதிராக நம்மை அழைத்து செல்கின்றன. இருவரே இருக்கும் ஒரு வீட்டில், அவர்கள் தவறுகள் செய்யும் போது சொல்லிக்காட்டி திருத்தவோ, சண்டையிடும் போது நடுவில் சென்று சமாதானம் செய்யவோ ஆள் இல்லையென்றால் எல்லோருமே திருமணம் ஆன 2 வருடங்களுக்குள் விவாகரத்து பெறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விடுவார்கள். மட்டுமல்லாது குழந்தைகள் பெரியவர்களின் ஆசிர்வாதத்திலும், அறிவுரை, அன்பிலும் வளருவதே சிறந்தது.. மட்டுமல்லாது முதியோர் இல்லங்கள் உருவாகாது. முதிய வயதில் கண்டிப்பாக நம்மின் அன்பும் அனுசரணையும் அவர்களுக்கு தேவையல்லவா?

தெகா:- இந்த கூட்டுக் குடும்பத்தினால கிடைக்கிற நன்மை தீமைகளை நன்றாகவே அலசித்தான் அந்தப் பதிவில் பேசியிருப்பேன். அதாவது ஒரு காலத்தில இது போன்ற கூட்டமைவு தன்னலமற்ற நிலை சற்றே மேலோங்கி, பொதுநலம் சற்று தூக்கலாக அதாவது தேவைகள் மட்டுக்குள் இருக்கப்பெற்று ஒரு குடும்பத்திற்குள் இருக்கப் பெற்ற அணைவரும் ஏதோ ஒரு வழியில் தனது பங்களிப்பை முன் வைத்து மன முறிவுகளை தவிர்த்து வாழ்ந்திருந்த பட்சத்தில் நீங்கள் கூறியபடி பல விதத்தில் உபயோகமாக இருந்திருக்கலாம் (ஆனா, குடும்பமே அழகிழந்து நிம்மதியில்லாமல் பல ஓட்டைகளுடனுடம், அரசியல் பூசல்களுடனும் வாழ நேரும் பொழுது அங்கே என்ன குழந்தைகளுக்கு சென்றுகிடைக்க வழிவகை இருக்க முடியும்?).

இன்றைய நிலையோ வேறாக இருக்கிறது. தேவைகள் பெருகிவிட்டது, உழைக்காமல் உண்ண வேண்டுமென்றோ அல்லது சட்டை கசங்காமல் பொருளீட்டுவது [இது போன்ற ஒட்டுண்ணி வாழ்வும் இதில வருதாங்க ஒயிட் காலராம்:)] போன்ற எண்ணம் தலைத்தோங்கி பொத்தாம் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் மன நிலையும் வந்த நிலையில் இது போன்ற கூட்டமைவு தேவையற்ற மன உளைச்சல்களயே கொடுக்கிறது குடும்ப உறுப்பினரிடத்தே, அதுவும் குறிப்பாக வயதான பொற்றோர்களுக்கு. திருமணமான தம்பதிகளில் பிற மக்களின் பங்களீப்பு என்பது அத் திருமணம் உடைந்துவிடாமல் பாதுக்காக்கப்படவே என்று சொல்லும் நிலையே, இரு வயதுக்கு வராத சிறு பிள்ளைகளுக்கு எதற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் ஊர்? என்றுதான் மாற்றுக் கேள்வி கேக்க வைக்கிறது. அவர்களே இன்னமும் குழந்தைகளாக தங்களின் அன்றாட வாழ்வியல் முரண்களை உற்று நோக்கி, பேசித் தெளிவு ஏற்படுத்திக் கொள்ளும் மன நிலையில் கூட தங்களை வைத்துக்கொள்ளத் தெரியாத மன பக்குவத்தில் இருக்கும் பொழுது, பிறகு சம்பிரதாயத்திற்காக பிறர் கொடுக்கும் தீர்வுகளை அவர்களது என்று எண்ணி ஏமாற்றிக் கொண்டு வாழும், வாழ்வும் இனிக்கவா செய்யும்? இதிலிருந்து எனக்குத் தெரிய வருவதே, தம்பதிகளின் இடைவெளி எவ்வளவாக மனத்திலும், மணப் பொருத்தத்திலும் இருக்க முடியுமென தெரிகிறது.

இப்பொழுது மேலை நாடுகளில் அவ்வாறு "தன் பொறுப்புணர்த்தி" வாழ வழிவகை செய்யும் குழந்தைகள் அனைத்துமே பெற்றோர்களை உதாசீனப் படுத்துகிறதென்றோ, யாருமே திருமணத்தில் முழுமையாக வாழாமல் இருக்கிறார்களொன்றோ பொருள் கொள்ள முடியுமா? நான் அருகாமையிலிருந்து கவனித்த வரையிலும், பொற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமிருக்கிற உறவு நல்ல நண்பர்கள் நிலையிலிருப்பதால், தூரத்தே பிரிந்து இருந்தாலும், தேவையானதை நன்றாகவே பார்த்து பார்த்து செய்து கொடுப்பதனைப் போல் உள்ளது பொற்றோர்களுக்கு, அவர்களும் தங்களின் நிலையுணர்ந்து எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்வதால் தேவையற்ற மனச் சங்கடங்கள் தவிர்க்கப்படுகிறது.இந்தப் பதிவிலும்... முதுமை ஒரு சாபக்கேடாஅந்தப் பதிவிலும நடை பெருவதினைப் போல நான் இங்கு கண்ணுற்றது கிடையாது.

ஆனால், இங்கு போன்று பொருளாதார, சமூக கட்டமைப்பு நம்மூரில் இன்னமும் அரசாங்கமோ அல்லது மங்களோ அமைத்துக் கொள்ளாத காரணத்தினால் இது போன்ற உதாசீனங்கள், முதுமையில் அப்யூஸ் எல்லாம் பார்க்க வேண்டிய நிலையில் அவர்களை பிடித்து தள்ளிவிடுகிறது.

கவிதா: கருக்கலைப்பு சட்டம் தேவையான்னு ஒரு பதிவு போட்டு இருக்கீங்க. கண்டிப்பா தேவையில்லை. நான் கருவுகிறேன் என்றால் அது என் உடம்பும் மனசும் சம்பந்தப்பட்ட என்னுடைய சொந்த விஷயம், குழந்தை சரியாக வளரவில்லை என்பது மட்டுமல்ல எந்த ஒரு என் சொந்த காரணங்களுக்காக நான் கருவை கலைக்கலாம் என்பதே சரி என்று நினைக்கிறேன். ஒரு பெண் தனக்கு தேவை தேவையில்லை என்று தானே முடிவெடுக்க உரிமை கண்டிப்பாக கொடுக்கப்படவேண்டும் இல்லையா?

தெகா:- கருக்கலைப்புச் சட்டம் தேவையா என்ற பதிவில் என்னுடைய நிலையை தெளிவாக கூறிவிட்டேன். அதாவது கருவுற்றிருக்கும் பொழுது ஆரம்ப கால கட்டத்தில் நன்கு தேர்வுற்ற மருத்துவர்களால் கண்டறியப்பட்ட - குழந்தையின் இன்றியமையா உறுப்புகள் பாதிப்புற்று பிறப்பிற்குப் பிறகு தொன்று தொட்டு மருத்துவ தேவைகளையும், பிற மக்களின் அருகமையும், பொற்றோர்களின் ஈடுபாடு அவர்களின் பொருளாதார சூழ்நிலை இவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கே அந்த கருவை வளர்த்து ஈன்றெடுப்பதா வேண்டாமா என்ற இறுதிக் கட்ட முடிவை அவர்களின் பொருட்டே கொடுப்பதே சிறப்பு என்று கூறியிருக்கிறேன் தெளிவாக அந்தப் பதிவின் மூலமாக.

கருத்தடை சாதனம் கொண்டு குழந்தை கட்டுப்பாட்டை தவிர்த்து விடுவதிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. தன்னால் வைத்து பார்க்க முடியாத நிலையிலும் குழந்தை "கடவுள் கொடுத்தது" அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற காலாவதியான கருத்தோட்டத்தில் எந்தவிதமான பொருளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றிகும் மேலாக குழந்தையின் பாலினத்தைப் கண்டறியும் பொருட்டு லக்சுரியில் வைத்துக் கொள்வதும், கலைத்துக் கொள்வதெல்லாம் ரொம்பவே ட்டூ மச். எ பிக் நோ, நோ.

கவிதா:- தீவிரவாதம், வன்முறை போன்ற செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ப்பு முறை, குடும்ப சூழல் காரணம் என்பது தவறான கருத்தாக இருக்கிறது. எனக்கு தெரிந்து நல்ல முறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் தீயநட்பு, சமுதாய தாக்கம் போன்றவற்றால் வாழ்க்கையில் தடம் மாறி போனதை பார்த்து இருக்கிறேன். உங்களின் கருத்து.?!

தெகா:- குழந்தைகள் எது போன்ற சூழலில் வாழ்ந்து வருகிறது என்பதும், எது போன்ற பொற்றோர்களை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு இந்த சமூதாயத்தை முதலில் பருவத்தை எட்டுவதற்கு முன்னமே வீட்டின் வளர்ப்புச் சூழலைக் கொண்டே பார்த்து, கேட்டுத் தெரிந்து கொள்கிறது. அது போன்றே குழந்தைகளின் தனித்துவத்தன்மை பேணல் என்ற கட்டுரையின் மூலமாக எப்படி குழந்தைகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள் என்பதனை விளக்கியிருப்பேன். என்னை பொருத்த மட்டில் பெரியவர்களின் வழிகாட்டுதல்கள் என்று கூறிக்கொண்டு எல்லாவற்றையுமே வலிய குழந்தைகளின் தலையில் வைத்து திணிப்பதனையே ஒரு வன்முறையாகத்தான் பார்க்க முடிகிறது.

மற்றபடி நீங்கள் கூறியபடியே பிரிதொரு சமயத்தில் தானும் ஒரு அடல்டாக எட்டும் நிலையில் கூடா நட்பு, தீய பழக்கம், சமூகத் தாக்கம் இன்ன பிற வன்முறையை நோக்கி அடியெடுத்துச் செல்ல வழிகோணலாமென்றாலும், அது நடைபெறும் காலமும் சூழலும் வேறு. ஆனால், முதல் அடி வளர்ப்புத் தளத்திலயே கோளாறுக்கி விடுவதுதான் மிக்க வருத்தத்துக்குரியது. உதாரணம்: பிடிக்காத ஒரு கல்வியில் கட்டாயப்படுத்தி புகுத்தி விடுவதோ, அல்லது தவறானா முறையில் பிற சமயங்களைப் பற்றியோ, அல்லது பிரிதொரு பாலினத்தின் மீது காழ்புணர்ச்சி வரும் வகையில் தனது புரியாத கருத்துக்களை தனது குழந்தைகளிடத்தே ஊட்டி வளர்த்து விடுவது, இப்படி. வித்தியாசம் புரிகிறதா??

கவிதா:- உங்களின் குட்டி கவிதைகள் படித்தேன்..:))-ஓடி ஒளியும் நாளைய பிணங்கள்!!! எப்படி இப்படி எல்லாம் சிந்திக்க தோன்றுகிறது..? உயிருடம் இருக்கும் நம்மை பிணங்கள் என்று சொல்லலாமா? உணர்வுகள் அற்றவர்களை, மனிதநேயம் இல்லாதவர்களை வேண்டுமானால் சொல்லலாம்.. ஆனால் எல்லோரையுமா? ஓடி ஒளியும் நாளைய பிணங்கள்!!!

தெகா: கவுஜா என்றால் வாழ்வின் முரண்பாடுகளின் மூட்டைகளை தோலுரித்து காட்டுவதற்கெனவே அமைந்தவை இல்லையா? அந்த ரீதியில் வைத்துப் பார்க்கும் பொழுது என்றோ ஒரு நாள் நாம் எல்லாம் மரணிக்கப் போகிறவர்கள்தான் இருந்தாலும், இன்று இறந்தவர் என்னமோ தேவையற்றுப் போனதாகவும், நமக்கு அவரை(பிணத்தை) பார்க்கக் கூட நேரமில்லா தொனியில் பரபரவென்று இருப்பதனைப் போலவும் கண்ணுற நேர்ந்ததால், அப்படி மரணத்தின் மடியில் நான் அமர்ந்து கொண்டு எள்ளி நகையாடுவதனைப் போல அமைத்திருக்கிறேன். பாதி பேரு இங்கே "இறந்த நிலையில்" தானேங்க இன்னமும் வாழ்ந்திட்டு இருக்கோம். எதுக்காகவாவது ஒன்றுக்கு தினமும் பயந்தவாறே.

கவிதா: நீங்கள் இயற்கை நேசி என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.. இது இயற்கை குணமா அல்லது நீங்கள் வளர்த்துகொண்டதா?

தெகா:- நம் எல்லோருக்குள்ளுமே அந்த வேட்டையாடும், இயற்கையுடன் ஒட்டி உறவாடி மகிழும் பொழுது கிடைக்கும் ஆத்ம சுகம் என்றைக்குமே அழியாது இருக்கும், இது குழந்தை பருவத்தையொட்டி பீரிட்டு வெளிப்படுவதனை காண முடியும், ஆனால் மீண்டும் தான் வளரும் சூழலும், வாழ்க்கைத் தேவைகளும் கொஞ்ச கொஞ்சமாக வாழ்வின் எதார்த்தம் மறந்து செயற்கைத் தனத்தில் ஒட்டிக் கொள்ள வழிவாகை செய்துவிடுகிறது. எனக்கு என்னமோ, அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி வானத்தை அன்னாந்து பார்த்து பேட்டரியை (எண்ண) ரீ-சார்ஜ் செய்து கொள்வது பழக்கமாகிப் போன ஒன்று, அதுவும் இரவு வானமென்றால் அலாதி பிரியம். அப்படியே அதற்கு கீழே இருக்கக் கூடிய மரம், மட்டை, பூச்சி அத்துனை ஜந்துக்களையும் பார்க்கும் பொழுது பூமிப் பந்தின் பரிணாமச் சுழற்சியில் நம்முடனே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் தாம், அவைகளன்றி இங்கே நமக்கென்ன பூலோக சொர்க்கம் கிடைக்க வழி, என்றாகிப் பார்க்கத் தோன்றுகிறது.

அது அப்படியாக இருக்க ஏதோ குருட்டாம் போக்கில் நல்ல வேளையாக எனது பொற்றோர்கள் மெத்தப் படித்தவர்களாக இல்லாமல் போக, எனக்கு மூளைச் சலவை பண்ணப்படக் கூடிய வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்ததும் ஒரு லக்கியான நிகழ்வுதான், ஏனெனில் அப்படியாக அமைந்திருந்தால் இன்னேரம் எங்கோ ஒரு கூண்டுக்குள் அமர்ந்து ஆணிப் புடுங்கியிருப்பேன், கண்ணீல் ரத்தம் சொட்டச் சொட்ட. என் கல்லூரி வாழ்க்கை முழுதுமாக பச்சைப் பசேல் மேற்கு மலைக் காடுகளில் அமைந்து போனதும் நேசியாகிப் போனதற்கு மற்றொரு காரணம்.


கவிதா:- எப்படி அடுத்தவர்களை புண்படுத்தாமல் பதிவெழுத நம் மனதை கட்டுப்படுத்த வேண்டும், எப்படி முகமூடிகளாக உலாவராமல் உணமையான பெயரில் பதிவுகளும் , மறுமொழிகளும் இட நம்மை கட்டுப்படுத்தவேண்டும் என்று பதிவுலக நண்பர்களுக்கு சொல்லுங்களேன்.

தெகா: பொதுத் தளத்தில் எது போன்ற புரட்சிக் கருத்துக்களையும், மாற்றுச் சிந்தனைகளையும் யாவரும் பகிர்ந்துகொள்ளல் எண்ணி(பொறுப்போடு) வைப்பதில் நமக்கு உள்ளார்ந்த திருப்தி கிடைக்கிறது என்றாலும், ஏனையோரின் பிரதி விவாதங்களும் அவர்களின் மாற்றுக் கருத்துக்களும் ஒருமித்த சிந்தனையுடனும், இசைபுடனும் இருக்க வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பை சற்றே நம் கட்டுக்குள் வைத்துக் கொண்டாலே, பாதி இரத்த அழுத்தத்தை பங்களீப்பவர் தவிர்த்துக் கொள்ள முடியும். ஏனெனில், அது போன்ற மாற்றுச் சிந்தனைகளை முன் வைப்பவர் என்னுடைய வளர்ச்சி நிலையின் எல்லைக்குள் பிரவேசிக்காமலோ அல்லது அவருக்கு அவர் எடுத்திருக்கும் சார்பு நிலை சரியொன்றோ எண்ணிக் கொண்டிருக்கும் பட்சத்தில், எவரவர் சார்பு நிலையோ அல்லது கருத்துக்களோ தினப்படி பல மாறுதல்களை அவர்கள் எண்ணும் எண்ணமாகவே விட்டு பயணித்து செல்லும் பட்சத்தில் தானாகவே மனத்தினுள் மாற்றங்களை உணர்வர்.

இருந்தாலும், பங்களீப்பவர் அதனை முன்னமே உணர்ந்தவர் என்ற முறையில் நம்முடைய பார்வையை முன் வைக்காலமே தவிர "அடித்து பழுக்க வைத்துவிட முடியும்" என்ற அணுகு முறை ஒரு போதும் பலனளித்ததாக பொருள் கிடையாது என்று கருதி விலகி இருப்பது நலம் பயக்கலாம். பங்களீத்தவர் மனவோட்டம் எப்படியாக இருக்க வேண்டுமெனில் மாற்றுச் சிந்தனையை மனத்தினுள் விதைத்தாகிவிட்டது, காலப் போக்கில் அலசி, ஆராய்ந்து நன்மை தீமைகளை ஏற்றுக் கொள்வது வாசிப்பாளரின் கைவசமென்றெண்ணி அவர்களிடத்தேயே விட்டுவிடுவதாக இருக்க வேண்டும்.

இல்லையெனில், கோபத்தில் சொல்ல வந்த விசயத்தின் மையக் கருத்து சிதைபட்டு, எதிர்பார்க்கப்பட்ட தாக்கத்தை வாசிப்பாளனிள் விட்டுவிடாமல் இருக்க வாய்ப்புண்டு. இரண்டாவதும், சினமுறும் பொழுது அங்கே எண்ணவோட்டம் சீராக இருப்பதும் கிடையாது. ஒரு நல்ல விசயத்தை முன்னுறுத்தி எழுதப் படும் கருத்து குறைந்த பட்சம் மனத்தினுள் பல மணி நேரங்கள் தக்க வைக்கப்படும் பொருட்டு அங்கே தெளிவான சிந்தனை பிறக்க ஏதுவாகிறது, அப்படியாக முன் வைக்கப்படும் கருத்துக்களும் கண்டிப்பாக "திறந்த நிலை" (தன் முனைப்பில் தன்னை வளர்த்துக் கொள்ள விரும்புபவனை) வாசிப்பாளனை தொட்டுச் செல்லாமல் விட்டுப் போவதுமில்லை என்பது என் கருத்து.


...to be contd -2



Monday, November 05, 2012

Bloggers' Voice : I-T ACT SECTION 66 A

ஏதோ ஒரு காரணத்திற்காக 2006 ஆம் ஆண்டு வாக்கில் இப்படியாக ஆங்கிலத்தில் ஒரு பதிவு இட்டு வைத்திருக்கின்றேன். அதன் தேவையைக் கருதி அந்தப் பதிவின் சுட்டி இங்கே Indian Bloggers, Its a High Time... http://orani-sittingby.blogspot.com/2006/07/indian-bloggers-its-high-time.html

அண்மையக் காலத்தில் வாயைத் திறந்தால் கூண்டுக் கிளி ஆகும் ஹைடியன், மூன்றாம் தர சர்வதிகார போக்கை நோக்கி நகரும் உலகில் கீழே முன் வைத்திருக்கும் சில கோரிக்கைகளை ஒவ்வொரு சமூக வலைத்தளங்களிலும் இயங்கி வரும் வலைஞர்கள் தங்களுடைய எதிர்கால சுதந்திர கருத்து முன்னெடுப்பினை கருதி இதனை விழிப்பு நிலைக்கு கொண்டு வருவது அவசியமாகிறது.

இது தருமியின் தளத்திலிருந்து அனைத்து விதமான சமூக வலை மக்களுக்கும் கொண்டு செல்லும் போக்கில் தொடரப்பட்டு, இறுதியாக உரிய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கென இந்த முயற்சி. எல்லாரும் கலந்துங்க! இப்பொழுது விடயம்...


I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.



 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 


பி.கு: ஏனைய வலைஞர்களின் தொடர் பதிவுகளையும் காண அழுத்துங்க இங்கே... http://dharumi.blogspot.com/2012/11/601-i-t-act-section-66.html

Sunday, October 28, 2012

விழித்துக்கொள்ளும் நேரம்:பொது சந்தை...


வலைப்பதிவர்களின் கூட்டமைப்பு பல புயல்களையும், ஆழிப்பேரலைகளையும் களம் கண்டு மேலெழும்பி வரும் ஒரு சமூகம். இப்பொழுதும் அது போன்றதொரு ஒரு முக்கியமான சுழற்சியில் இந்த அமைப்பு நின்று கொண்டிருக்கிறது. இது ஒரு பரந்த வெளி அண்டத்தில் மிதந்து வரும் பால்வீதிகளைப் போன்றே விட்டு விலகியியும், மறுமுனையில் ஒன்றித்து சுருங்கும் மாபெரும் இயக்கம்.

எழுதப்படிக்க தெரிந்தவர்களும், ஆக்க உந்து சக்தியினை உள்ளடக்கியவர்களும் காலம் தோறும் இணைந்து கொள்ளும் ஒரு மாநதி. ஆனால், அது போன்று புதிது புதிதாக இணைந்து கொள்பவர்களுக்கு சில அடிப்படையான புரிதல்கள், இந்த வெளி எப்படியாக இயங்குகிறது, எங்கு சென்று தனது கருத்துக்களை பரிமாறிக்கொள்வது, பரிமாறிக்கொண்டதிற்கு பிறகான எதிர்வினை எப்படியாக அமைய வேண்டும் என்பதனை அந்த கருத்தினை முன் வைத்தவர்களே முகம் கொடுத்து முடிக்க வேண்டிய பொறுப்பினையும் கொண்டவர்களாகி விடுகிறார்கள்.

இந்த பின்னணியில் தற்பொழுது நடந்து வரும் சர்ச்சை பல பரிமாணங்களைக் கொண்டது. தட்டையாக இதனைச் சுருக்கி ஒரு ஆண்/பெண் சம்பந்தப்பட்டதாக மட்டுமே பார்த்து விட முடியாது. எப்பொழுது விளைந்த ஒரு பயிர் சந்தைக்கு வருகிறதோ, அப்பொழுது நுகர்வோர்களின் விமர்சனத்திற்கும் அந்த விளைச்சலின் தரம் பரிசீலிக்கப்படுகிறது. சமூகம் சார்ந்த கருத்துக்களை முன் வைக்கும் பொழுது, நாம் பலதரப்பட்ட பின்னணியின் ஊடாக நடந்து வரும் மனிதர்களின் சொல்லாடல்களையும்/கருத்துக்களையும் முகம் கொடுக்கும் நிலைக்கு நம்மை நகர்த்திக் கொள்கிறோம் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரிதொரு சமயம் நாம் இதனை கொஞ்சம் விரிவாக அலசலாம்.
அதற்கு முன்னால், கீழே உள்ள கட்டுரையை வாசித்துப் பாருங்கள். இது 2010ல் தமிழ்மணத்தில் நடந்த ஒரு சர்ச்சையின் விளைவாக எனக்குள் எழுந்த எண்ணங்கள். இருப்பினும் இப்பொழுதும் இதற்கான தேவை இருக்கிறது...

உடல் + உடை = அரசியல்!


தமிழ்மணத்தில் வரும் அத்தனை பதிவுகளையும் வாசிக்க முடிந்துவிடுவதில்லை. இப்பொழுதெல்லாம் நண்பர் வட்டம் படித்துவிட்டு இதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் செலவு செய்தால் வீண் விரயமில்லை என்ற வடிகட்டலுக்குப் பிறகே சில நாட்கள், வாரங்களுக்குப் பிறகு நல்ல பதிவுகள் வந்தடைகிறது. இருப்பினும், தான் தோன்றியாக அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆர்வத்தை கிளப்பும் பதிவுகளை நானாகவே கிடைக்கும் நேரங்களில் அங்கு சென்று தழுவிச் செல்லாமலும் விட்டதில்லை.

எழுத்து என்பது என்னைப் பொருத்தமட்டில் ஒரு தானியங்கி முறையில் உள் உந்துதலாக நிகழ வேண்டியதொரு விசயம். அவ்வாறாக நிகழும் பொழுது அங்கே பசப்புத் தனங்களுக்கு இடமிருக்காது என்றே எண்ணுகிறேன். அதனை ஒரு கட்டாயமாக, நிர்பந்தமாக ஆக்கிக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு பயிற்சி தோள் கொடுத்தாலும், எழுத்தில் ஒரு போலித்தனமும், ஆழமின்மையும் மிளிரக் காணமுடியலாம்.

அண்மைய காலங்களில் அதாவது வலைப்பூக்கள் அநாமதேயமாக எங்கிருந்து வேண்டுமானாலும், குறைந்த பட்ச நேரம் மட்டுமே மூலதனமாக செலவு செய்து தன்னிடம் சரக்கு இருக்கிறது, அது இந்த உலகிற்கு சென்றடைய வேண்டுமென்ற ஆவல் உள்ள எவரும் செயற்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிற ஒரு சூழலில், நான் இன்று சந்திக்கின்ற வளரத் துடித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களிடம் கேட்டுக் கொள்வதனைத்தும் "ஏன், நீங்கள் ஒரு ப்ளாக்கர்" கணக்குத் தொடங்கி உங்களின் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதுதான் ;).

அப்படியாக அவரும் தொடங்கும் பொழுது அது அவருக்கு ஒரு ஆரோக்கியமான சுய வளர்ச்சிச் சூழலை உருவாக்கிக் கொடுக்கக் கூடும் என்ற நம்பிக்கையிலேயே, அவ்வாறாக பரிந்துரைக்கிறேன். ஏனெனில், மனித மனமென்பது எப்பொழுதும் தனக்கு பழக்கமான, ஆபத்தற்றதாக கருதிக் கொள்ளும் எல்லைகளிலேயே பயணிக்க பிரியப்படும். அவ்வாறான ஒரு சூழலும் அமைந்து போனால், அதனைத் தாண்டிய ஒரு உலகமும், மனிதர்களும் பல் வேறு பட்ட கருத்து, சமூக, கலாச்சாரங்களின் ஊடான பார்வைகளைக் கொண்டும் இதே தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், என்ற எண்ணத்தையே மறந்து தன்னுடைய எல்லைக்குள்ளாகவே லயித்து இருக்கும். அதன் நேர் பாதையில் ஏதாவது இடர்பாடுகள் இடரும் வரையிலும்...

மனமும் அதன் வளர்ச்சியுமென்பது ஒரு நீரோடையைப் போன்று ஓடிக் கொண்டே இருப்பதும், தேவையான மாற்றங்களை, பிரபஞ்ச விரிதலைப் போன்று எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்வதற்கு எப்பொழுதும் தயாராக்கிக் கொள்வதுமாக அமைந்து போனால் எங்கிருந்து வருகிறது மனச் சோர்வும், இத்தனை முரண்பாடுகளும்? இந்த தயார்படுத்தலுக்கு எழுத்தும், எண்ணமும் மேலும் வழிவகை செய்து கொடுக்கலாம். மனம் கற்றுக் கொள்ளும் நிலையிலேயே என்றுமிருந்தால்.

எனது எழுத்து என்பது என்னை நானே மேலும், மேலும் உட் நோக்கி பார்த்துக் கொள்வதற்கான காலச் சுவடு போன்றதாகக் கருதுகிறேன். அதற்கெனவே, மனதில் ஆழமாக உதித்ததை இங்கு பொதித்து வைத்து விடுகிறேன். பின்பொரு நாளில் கடந்து வந்த வளர்ச்சிப் பாதையின் நீளம், அகலம் அறிந்து கொள்வதற்காக.

அது போன்ற எழுத்தை எல்லார் முன்னிலையிலும் வைக்கக் காரணுமும் எத்தனை பேருக்கு அந்தத் தளத்தின் வீச்சம் பிடிபடுகிறது அல்லது எரடுகிறது என்பதனையும் அறிந்து கொண்டு எனது மேம்பட்ட வளர்ச்சிக்கெனவும் மேலும் பரந்து பட்ட பார்வையை உருவாக்கிக் கொள்ளவும் பயன் படுத்திக் கொண்டுள்ளேன். நமது உலகம், கற்றுக் கொள்ள மனதும் திறந்தே இருக்கும் நிலையில் விரிந்து கொண்டே செல்கிறது என்பதனை இது வரையிலும் எனக்கு ஊறக்கிடைத்த கிணறுகளின் நீள, அகலங்களை அளந்ததின் மூலமாக அறிந்து கொண்டேன். அதன் பொருட்டு இப்பொழுதெல்லாம் சில "கம்பளத் தனமான" வார்த்தைகளை (sweeping statement) விடுவதிலிருந்து முழித்துக் கொள்ள முடிகிறது.

இது அண்மையில் தமிழ்மணத்தில் நடந்து வரும் முரண்பாடுகளுக்கு ஊடான பதிவுகளும் , அதற்குண்டான எதிர் வினைகளுக்கும் சிறிது தொடர்பு இருக்கலாம். புதுப் புது பதிவர்களும், வாசகர்களும் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில், அது போன்ற முரண்பாடுகள் ஊடான பதிவுகளும், எதிர் வினைகளும் முடிவற்று நடந்து கொண்டேதான் இருக்கும். அடிப்படையான எண்ணங்களையே அவர்களும் தான் ஊறிக் கிடந்த கிணற்று சாளரத்தின் வழியாக பரந்து பட்ட வானத்தின் ஒரு வட்டத்தைப் பார்த்து அவர்கள் கண்ட வானம் எப்பேர்பட்டது என்பதனை 'பீத்தி' முன் வைக்கலாம், மற்றொருவர் அதற்கு பக்கத்தில் கிடக்கும் கிணற்றிலிருந்து அவர் தரப்பில் கூவிக் கொண்டிருக்கும் அதே வேலையில்.

இப்பொழுது, எனது கிணற்றின் ஊடான அனுபவம் சில வற்றையும், அது எப்படி என் அகக் கண்களை அந்த வேலையில் திறக்க உதவியது, அது போன்று உங்களுக்கும் திறக்க உதவக் கூடுமென்ற நப்பாசையில் இங்கே இறக்கி வைத்து விடுகிறேன் ...

அனுபவம் எண் 1: அப்பொழுது கார்கில் பகுதியில் பாகியுடன் நாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தோமென்று நினைக்கிறேன். அதே நேரத்தில் எனக்கு முன்னமே இந்தியாவிலிருந்து அமெரிக்கா குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழர் எனக்குப் பழக்கமானார். அவர் இஸ்லாத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்தும், படிப்பிற்கும் பொது அறிவிற்கும், பண்பாட்டிற்கும் ஒருவனுடைய அடிப்படை இயல்பிற்கும் எந்த தொடர்புமில்லை என்பதற்கிணங்க, ஒரு அறிவு கெட்ட "கம்பள வார்த்தை" ஒன்றை அவரிடத்தில் மிக்க தேச பக்தியில்(??) உளறி வைத்தேன்.

அந்தக் கம்பள வார்த்தை என்னவெனில், "பாகியை துடைத்தெறிந்திட்டா எல்லா பிரச்சினைகளும் ஓய்ந்துவிடும்" என்பதுதான் அது. அவரும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு, நண்பா! அந்த நாட்டில் இன்னமும் எங்களுக்கு தொடர்புடைய பெரியப்பா, பெரியம்மா வகை சொந்தங்கள் வசிக்கிறார்கள் இன்னமும் வந்து போயிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதாக கூறினார். எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்றே புரியவில்லை. அப்படியே நிலை குலைந்தவனாக அமர்ந்திருந்தேன். ஒரு நிமிடம் என்னை அவர் நிலையில் வைத்துப் பார்த்தேன். என்னுடைய வார்த்தையின் தீவிரம் புரிந்தது. அன்றிலிருந்து, பல சில நேரங்களில் இது போன்ற குருட்டுத் தனமான கம்பள வார்த்தைகளை தவிர்ப்பதின் அவசியத்தை உணர்ந்தேன்.

அனுபவம் எண் 2: இங்கு அமெரிக்கா வந்த பொழுதினில், எங்களைப் போல உண்டா என்று நாளும் ஏதாவது ஒரு வெட்டி வம்பு பேசுவதுண்டு. ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையைக் காண்பதிலிருந்து ஆரம்பித்து, அரை ட்ராயர் போட்டு நடந்து திரியும் பெண்களைக் கண்டால், பார்க்கில் அமர்ந்து அன்நியோன்யமாக வருடிக் கொள்ளும் ஜோடிகளைக் கண்டால், வாயை விட்டு 'ஐ லவ் யு, ஹனி, மகளே, மகனே' எனச் சொல்லிக் கொள்ளும் மக்களைக் கண்டால்னு சகட்டு மேனிக்கு குருட்டுக் கம்பளம் விரித்தேன். எல்லாமே போலி, வேஷமென்று. அதாவது அந்நாளில் என்னுடைய கிணற்று சாளரத்தின் வழியாக எனக்குக் காணக் கிடைத்த வான வெளியுடன் அவர்களின் கலாச்சாரத்தை தேவையில்லாமல் ஒப்பீடு செய்து கொண்டிருந்திருக்கிறேன். என்ன ஏதென்று எனக்குப் புரிய ஆரம்பிப்பதற்கு முன்பாகவே!

அது போன்ற ஒரு நாளில் எனக்குத் தெரிந்த ஒரு இந்திய குடும்பத்தாரை அருகிலிருக்கும் 'ஜோன்ஸ் பீச்சாங்கரைக்கு' அழைத்துச் சென்றேன். அதில் உள்ள கணவன், மனைவி ஐம்பதுகளின் மத்தியிலிருந்தார்கள். பத்தாவது படிக்கும் ஒரு மகன். பீச்சாங்கரையில் ஒரே ஜனத் திரள். எங்கு திரும்பினும் கூட்டம். யூனி ஃபார்மாக அந்த சூழலுக்கேயான உடை. பெண்கள் ட்டூ பீஸ், ஆண்கள் அரை ட்ரவுசர் என ஜோடித்திருந்தார்கள்.

என்னுடன் வந்திருந்த அம்மா வட இந்தியர். சுடிதாருக்கு மேலாக போட்டிருந்த துணியையும் வெயில் காய்கிறதென்று தலையில் போட்டு சுத்தியிருந்தார்கள். கால் முதல், தலை வரை துணியாக பீச்சாங்கரையை வலம் வந்து கொண்டிருந்தார். நாங்களும் ஒரு இடத்தை தேர்வு செய்து, துணிக் கம்பளம் விரித்து, கொண்டு வந்த திண் பட்டங்களை வைத்து கடை விரித்தோம். அருகினில் அமர்ந்திருந்த ஏனைய கூட்டம் எங்களைப் பார்ப்பதும், ஏதோ கிசு கிசுப்பதுமாக இருந்தார்கள். ஒரு அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் எங்களைச் சுற்றி ஒரு 15 மீட்டர் சுற்று வட்டத்தில் யாரையுமே காணோம்!

எங்கடா மக்கள் எல்லாம் என்று பார்த்தால், இந்தக் காட்டுமிராண்டிகளுடன் நமக்கெந்த தொடர்மில்லை என்று தொப்புள் கொடி அறுக்கும் விதமாக விலகிச் சென்றிருக்கிறார்கள். இங்கும் எனக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியாகவே அந்த நிகழ்வும், சூழலும் அமைந்திருந்தது. நம் ஊரில் வாரப் பத்திரிக்கைகளும், தினசரிகளிலும் வெள்ளைக்காரிகள் என்றாலே என்னமோ எப்பொழுதும் ட்டூ பீஸில் அழைந்து கொண்டு, சாலையோரங்களில் கண் அடித்து கவிழ்த்து விடும் பெண்கள் என்ற வித பொதுப் புத்தியை விதைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அன்று அந்த மெஜாரிடி சமூகத்தின் முன்னால்... எங்களுக்கு நிகழ்ந்ததின் பொருள் என்ன?

ஒவ்வொரு பூமியிலும் அந்தந்த காலக் கட்டத்திற்கு ஏற்றார் போல அந்தந்த சமுதாயமும் வசதிக்கேற்ப உடலரசியலை நகர்த்திக் கொள்கிறது. அந்த எல்லைக்குள் வாழும், சமூகக் கண்களுக்கு எது வரையிலும் தோலைக் காமித்தால் முகம் சுழிக்காமல் எடுத்துச் சொல்லக் கூடுமோ அதுவரையிலும் அவர்களுக்கு அது நாகரீகம். அவர்களின் எல்லைக்குள். அதனைக் கொண்டு பிரிதொரு எல்லைக்குள் பிரவேசித்து அதனைப் போல உடலரசியல் செய்யவில்லை என்று கூவுவது எந்த விதத்திலும் நாகரீகமில்லை, அப்படி நிகழ்த்தும் பொழுது அங்கே வீண் பிரச்சினையும், கிணறுகளின் நீள, அகலங்கள் ஒன்றிலிருந்து பிரிதொன்றின் பார்வையில் வித்தியாசப் பட்டுக் கொண்டே போகும். எது வரையிலுமென்றால், அவைகளை விட்டு விலகி மொத்தமாக அந்த வித்தியாசங்களின் கூறுகளை காணும், மனக் கண் திறக்கும் நாள் வரையிலும் என் கிணறு உன் கிணறை விட சிறந்தது/தாழ்ந்தது என்ற முறையிலேயே அமையும்.

பர்தா போட்டிருப்பவர்களின் கண்களுக்கு அதனைப் போடாமல் வெளியே போயி வருபவர்கள் ஆபாசமாகவும், சேலை கட்டிக் கொள்ளாமல் ஜீன்ஸ், ட்டி-ஷர்ட் போட்டுக் கொள்பவர்கள் ஆபாசமாகவும், அவர்களின் கண்களுக்கு மினி ஸ்கர்ட்டும், அரை ட்ரவுசரும் போட்டுக் கொள்பவர்கள் ஆபாசமாகவும் தெரிவது (இந்த வரிசைக்கிரமத்தை பின்னோக்கியாக ஓட்டி ஒருவர் மற்றொருவரை காட்டுமிராண்டி என்று அழைத்துக் கொண்டுமென...) எல்லாமே இந்த கிணற்று சாளரத்தின் வழியாக பார்க்கும் பார்வையில் தான் கோளாறே ஒழிய அந்தந்த தனிப்பட்ட மனிதரின் நிலையில் அது சரியே. பிடித்திருந்தால்/செல்லும் நிகழ்விற்கு ஒத்து வந்தால் எப்படி வேணா யாரும் இருந்துவிட்டுப் போகட்டுமே!





பி.கு: நான் இங்கு லுங்கி கட்டிக்கிட்டு வெளியே சென்று கடுதாசி பொறுக்கிக் கொண்டு வருவதற்குள், என் லுங்கியின் அமைப்பை பார்த்துவிட்டு என்னடா ... a guy dressed in long skirt என்று அதிசயத்து ஓட்டும் வாகனத்தை மட்டுப்படுத்தி குடுபத்தோட, குழந்தை குட்டிகளோட பார்த்தா அதுக்கு நான் என்ன பண்றது :))) ...

Sunday, October 09, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - V


ஐயா ஞானவெட்டியான், ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்திற்குமே அருந்தொண்டு ஆற்றிவருகிறார். இந்த வயதிலும் அவரின் ஆர்வமும், உழைப்பும் என்னை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுவதுண்டு. அவருடைய அத்துனை வலைத்தளங்களும் பொக்கிஷங்களாக பாதுகாத்து அந்தந்த வளர்ச்சி நிலைகளுக்கேற்ப பயன் படுத்திக் கொள்ளத்தக்கது எனினும், நான் அடிக்கடி செல்லும் அவரது வலைத்தளம் ஞானவெட்டியானின் ஞான வேள்வி என்ற தளத்திற்குத்தான் இன்றைய நாட்களில்.

அங்கு அன்பர்களின் ஆன்மீகம் சார்ந்த கேள்விகளுக்கு விடை பகன்று வருகிறார்.

18.மனம் என்பது ஆன்மாவா? என்ற கேள்விகளிலிருந்து மனத்தின் வளர்ச்சி நிலைகள் என்று அடுக்கடுக்கான பதிவுகளை அங்கே காணலாம். இருந்தாலும், தமிழ் மணத்தில் இவரின் பதிவுகள் வந்து போகாமல் நின்று போனது நமக்கெல்லாம் ஒரு இழப்பே!

அறிவியலும் ஆன்மீகமும் என்ற வலைத்தளத்தில் செந்தில் குமரன் என்பவர் முன்பொரு காலத்தில் விடாது பதிவுகளை கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கே மிகவும் எளிய நடையில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணத்தில் இயற்பியல் சார்ந்த ப்ரபஞ்ச கோட்பாடுகளையும், அதன்பால் ஏற்படும் ஆச்சர்யத்தை மறக்காமல் ஆன்மீகக் கேள்விகளுனூடையே

வைத்து கேள்விகளையும் தொடுக்கும் விதம் ஒரே கல்லிள் இரண்டு மாங்காய்கள் அடிப்பதனைப் போன்றே வாசகர்களுக்கு அமைந்திருக்கிறது. அதற்கு உதாரணமாக அறிவியலும் ஆன்மீகமும் - 3 அனுபவித்துப் பாருங்கள். 

பரஞ்சோதி மற்றும் விழியன் நடத்தி வந்த சிறுவர் பூங்காவும் குழந்தைகளுக்கான

சிறு சிறு குட்டிக் கதைகளும், பாப்பாப் பாடல்களையும் வழங்கி வந்தது. அதுவும் ஒரு நேரத்திற்குப் பிறகு நின்று போனது. அதனை எழுதியவர்கள் இன்னமும் இங்குதான் உலாவிக் கொண்டிருக்க வேண்டுமென்று எனக்குப் பல்லி சொன்னாலும் ஏன் அப்படி எழுதுவதை நிறுத்திக் கொண்டார்கள் என்று வினாவ வேண்டும் போல் உள்ளது.

திடீரென்று தஞ்சாவூரான் என்றழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்கே உரித்தான குசும்புடன் ஒருவர் வந்தாரய்யா. பதிவுக்குப் பதிவு நகைச்சுவையும், நக்கலும் மோலோங்கியிருந்தாலும் மறக்காமல் அந்த நகைச்சுவைக்குப் பின்னால் ஒளித்து வைத்திருக்கும் சிந்தனை நம்மை சிரிக்க வைத்து பிறகு யோசிக்க வைக்கத் தவறுவதில்லை. அமெரிக்காவுக்கு இந்தியா வச்ச ஆப்பு! சென்று படித்து வந்தாலே தெரியும் நான் எது போன்றவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேனென்று.

அண்மையில் தமிழ் மணத்துப் பக்கம் வந்து கலக்கிக் கொண்டிருக்கும் சுரேகா! இவரிடம் கதம்பமாக எல்லாத் திறமைகளும் ஒளிந்திருக்கிறது என்பதற்கினங்க வித விதமான பதிவுகளை காணப் பெறலாம் அவர் தளத்தில். சாமி காட்டிய தங்கசாமி! போன்ற வித்தியாசமான மனிதர்களை தின வாழ்க்கையோட்டமென்ற குப்பையிலிருந்து தனித்தெடுத்து நமக்கு அறிமுகப் படுத்துவதாக இருக்கட்டும், பஞ்சு மெத்தையில் படுத்தும் தூக்கம் பெற தவிக்கும் கூட்டத்திற்கிடையே ஈரோட்டுப் பெண்கள் என்ற பதிவில் இப்படியும் சக மனித ஜீவன்கள் இருக்கிறதென்று நம் கண் முன்னே நிறுத்துவதாகட்டும், நல்ல நல்ல வேளைகள் செய்து வருகிறார்.

Tuesday, October 04, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - IV


எனது கடந்த பதிவில் சுய முன்னேற்றக் கட்டுரைகளும் இடம் பெறுகிறதென்று பிதற்றல்கள் என்ற வலைத்தளத்தைப் பற்றி சுட்டிக் காட்டியிருந்தேன். அதே லைனில் என்.கணேசன் என்பவரும் விட்டு விலாசிக் கொண்டுள்ளார். அதே பெயரின் தளத்தின் கீழ், அங்கே அவரே எழுதிய சிறுகதைகள், கவிதைகள், சுய முன்னேற்றம், ஆன்மிகம் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது. அண்மையில் நான் அங்கு வாசித்த படகு புகட்டிய பாடம் என்ற சுய முன்னேற்றக் கதையில் கோபத்தை கையாள்வது எப்படி என்பதனை மிக அழகாக சில உதாரணங்களைக் கொண்டு விளக்கியிருந்தது பிடித்திருந்தது.

அனாதை என்ற பெயரில் ஒருவர் இங்கு உண்மையிலேயே அனாதையாக நிறைய கிடைக்கற்கரிய உலகப் திரைபடங்களைப் பற்றி எழுதிவருகிறார். இவர் தான் பார்த்த அதாவது இன்னா படம்தான் இன்னா மொழிதான் என்றில்லை போல அத்தனை இன, மொழி எல்லைகளையும் தாண்டி படம் பார்த்து அவைகளுக்கு விமர்சனம் எழுதும் திறமை அசத்தலாக உள்ளது. இது போன்ற மக்களும் இங்கு இது போன்ற ரசனையுடன் இருப்பது நமக்குப் பெருமைதானே! இவர் Cronicas / காலக்குறிப்புகள் என்ற தலைப்பின் கீழ் எப்படித் தனக்கு இது போன்ற ஆர்வம் கிளம்பியதென்ற நினைவுகூர்தலுடன் நிறைய விசயங்களை அங்கே பகிர்ந்துர்க்கிறார். சினிமா பிரியர்களுக்கு அத் தளம் ஒரு தங்கச் சுரங்கமாக அமையும்.

K.P. குப்புசாமி என்ற ஓய்வுற்ற காவலதிகாரி ஒருவர் மூலிகை வளம் பற்றி எழுதி வருகிறார். அங்கே அது போன்ற தாவரங்களின் புகைப்படங்கள் அவைகளின் குடும்ப வகை, தாவரப் பெயர் மற்றும் அதன் பயன்பாடுகள் என்று அவரின் பக்கங்கள் மூலிகைச் செடிகள் மற்றும் அவைகள் எவ்வாறு பல்வேறு வியாதிகளுகளை குணப்படுத்தலாம் என்பதனை பட்டியிலிட்டுக் நிறைத்திருக்கிறார். சும்மா பார்ப்பதற்கே கண்களுக்கு

பச்சை நிற செடிகளின் படங்களையும் டெம்ப்ளேட்டையும் கொண்டு குளிர்சியூட்டுகிறார்.

சிங்கநல்லூர் சுகா, இவரை நான் விடுவதே இல்லை. தான் பார்த்து வளர்ந்த விசயங்கள் தன்னைச் சுற்றிலும் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அந் நேரத்தில் ஒரு அனிச்சையாகத்தான் நம் மனத்தில் ஏறி சிம்மாசனமுற்றிருக்கும். ஆனால், ஊரைப் பிரிந்திருந்து விட்டு அவைகளை மீண்டும் அனுபவிக்கும் பொழுது அவைகள் ஒரு புது பரிமாணம் காட்டிப் போகத் தவறுவதில்லை என்பதற்கு இவரின் பல பதிவுகள் சாட்சி. அப்படி ஒரு பதிவாக இவரின் கோடை காலத்து மீண்டும் மழை அமைந்திருக்கும்.

பிறகு "பேருந்து ஜன்னலோர இருக்கை பிரயாணம், பயனங்களும் பாடங்களும்" போன்ற பதிவுகளிலும் ஏனைய பிற இடுகைகளிலிலும் நிறைய அன்றாடம் நாம் இயந்திரத் தனமாக கண்ணுரும் காட்சிகளுக்கு, சுகா ஒரு புது பரிமாணத்தைக் கொடுத்து நமக்கும் அவர் உள்வாங்கி இருக்கும் வீட்சத்திற்கு நம்மையும் இட்டுச் செல்ல முயற்சித்திருப்பார். அத் தளத்திலேயே இவரது பென்சில் ஓவியங்களும் காணக் கிடைக்கும்.

Monday, September 26, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - III


சிங். செயகுமார் என்று ஒரு வலைப்பதிவர் முன்பொரு காலத்தில் நிறைய விசயங்களை கவிதை வடிவாகவும், சிறுகதைகளாகவும் கொடுத்துக் கொண்டுருந்தார். எழுதியவைகளில் அனேகமானவை காதல் சார்ந்தும் அவரின் சமூக பார்வையாகவும் இருந்தது. சமீப காலமாக அவரைக் காண முடிவதில்லை, அச் சமயத்தில் படித்த காதலர்தினம்! என்ற தலைப்பில் ஒரு கவிதை என் மனதில் தைத்துப் போனதை உங்களின் பார்வைக்காக வைத்திருக்கிறேன். ஏனைய பதிவுகளும் அருமையாக இருக்கும், சுவைத்துப் பாருங்கள்.

கூட்டைக் கலைத்த பின் ஒரு பறவைக்கு நேரும் கொடூரத்தை கொடுப்பது போலவே ஒரு கைம்பெண்ணிற்கும் நம் சமூகத்தில் நிகழும் அவலத்தை தோலுரித்திருக்கார் பஹீமாஜஹான் என்பவர் அழிவின் பின்னர்...... என்ற தலைப்பின் கீழ். இவரின் "ஊற்றுக்களை வரவழைப்பவள், தடுமாறும் தனிப்பாதம்" என்ற பதிவுகளும் ஏனைய பதிவுகளும் மிக நேர்த்தியாக இருக்கிறது.


திறந்து வைத்திருக்கிறாள்


என்று ஒரு குழந்தையின் கள்ளமில்லாத்தனத்தை இந்த மூன்று வரிகளுக்குள் வைத்து, மனிதன் வளர்ந்த பிறகு எவ்வளவு சூது, வாதுடையவானுகிறான் என்று எண்ண வைத்து விடுகிறார் ராஜா சந்திரசேகர். மேலும் தொடர்ந்து "மனிதக் காடு" என்று பெயரிட்ட தலைப்பின் கீழ் நாம் மெது மெதுவாக எப்படி நம்முள்ளே இருக்கும் அந்த கபடமற்றக் குழந்தையை எப்படியெல்லாம் தொலைத்து, தேடித் தேடி எங்கே காண்கிறோமென்று அழகாக அந்தக் கவிதையில் பொதித்து வைத்திருக்கிறார். இவரின் இரண்டு மூன்று வரிக் கவிதைகளில் ஏதாவதொன்றை படிக்க நேர்ந்தாலே அடுத்தடுத்து படிக்கத் தோன்றும் மாஜிக் தீம் இருக்கிறது மற்ற மற்ற பதிவுகளிலும்.


ஆனந்தமாய் உண்டு களிக்க நாமே பயிர் செய்கிறோம்


செய்கிறோம்


இந்த ஒரு கட்டுரை வடிவ கவிதையே போதும் இந்த வளர்ந்து வரும் நெஞ்சத்துக்குள் பீறிட்டு வெளிக் கிளம்பும் தொலை நோக்குப் பார்வையும் நவன் என்ற பதிவரின் வாழ்வு சார்ந்த பட்டறிவையும் பறைசாற்ற. மென் மேலும் இவர் தொடர்ந்து தனது எண்ணங்களை இங்கே வைப்பார் என்று நம்புவோம்.

பிதற்றல்கள் என்ற வலைத்தளத்தில் சிரிப்புக்கும், சிந்திப்பதற்கும் ஏற்ப பல பதிவுகளுண்டு. அங்கே அவ்வப்பொழுது பித்தானாந்தாவாக ஒரு புது அவதாரம் எடுத்து விடுவார் அந்தத் தளத்தின் நிர்வாகிகளில் ஒருவர் போலும். அவ்வாறு எடுத்த அவதார கோலத்தில்தான் 262 : பித்தானந்தாவின் போதனை என்ற தலைப்பின் கீழ் ஒரு கவுஜாவை வடிதிருக்கக் கூடும். அதில் விளையாட்டுப் போக்கில் நிறைய தத்துவங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். இரட்டை தன்மையில் வாழும் அனைவரையும் ஒரு முறை உட்முகமாக திரும்ப வைக்கும் ஓர் பதிவு. ஏனைய பதிவுகளில் வெடிச் சிரிப்பிற்கும் (குறிப்பாக பின்னூட்டங்களில்), சுய முன்னேற்றக் கட்டுகரைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.

Thursday, September 22, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - II


தருமி...! இவரை முதன் முதலில் எப்படி சந்திக்க வாய்ப்புகிட்டியது என்று சற்றே பின் சாய்ந்து அமர்ந்து பொறுமையாக யோசிக்க வேண்டியிருந்தது. அந்த சந்திப்பு எனது ஆங்கில வலைப்பூ பக்கத்தின் மூலமாகத்தான் அமைந்திருந்தது என்று நினைக்கிறேன். அங்கே அவரின் பாணியிலேயே ஒரு கேள்வி why we should be different? என்று கேட்டு ஒரு பதிவிட்டிருந்தற்கு இவர் கொடுத்த லிங்கில் சென்று பார்த்த பொழுதுதான், அங்கே ஒரு கடலளவிற்கு பொக்கிசங்களாக நிறைய பதிவுகள் மின்னிக் கொண்டிருந்தன.

அவைகளில் என்னை மீண்டும் சிந்திக்க தூண்டிய பதிவுகளாக அமைந்தது 49. நான் ஏன் மதம் மாறினேன்...? என்ற அவரின் தொடர்ப் பதிவுகள்தான். எல்லா வளர்ச்சி நிலைகளிலுமுள்ளவர்கள் அவசியம் படித்துப் பார்த்து தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் படி மிக நேர்த்தியாக அமைத்திருப்பார் அந்தப் பதிவுகளை. அதற்காக அவர் எவ்வளவு படித்திருக்கக் கூடும் என்று நினைத்துப் பார்க்கும் பொழுதே அவர் பொருட்டு இருக்கும் மரியாதை பல மடங்கு எகிறுகிறது. அதன் பிறகு அவரின் எல்லா பழைய பதிவுகளையும் தோண்டிப் படித்து பல பதிவுகளுக்கும் உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டமெழுதியது இன்னமும் நினைவிருக்கிறது.

பிரிதொரு சமயம் இளவஞ்சி எனக்கு, என் காட்டான் பக்கத்தில் பின்னூட்ட அரசியலை சாடி எழுதியிருந்த பொழுது அங்கே வந்து எனக்கு அறிவுருத்தும் படியாக எழுதிய பின்னூட்டத்தின் மூலமாக அவரின் பதிவுகள் பக்கம் செல்ல நேர்ந்தது. இவரின் எழுத்து நடைக்கு நிகர் இவரே! அவரின் பல பதிவுகளை ரசித்துப் படித்து சிரித்து, சிந்திச்சிருக்கிறேன்.` அண்மையில் தோண்டி எடுத்துப் படித்து சிரித்து, சிந்தித்தது காலச்சுழிப்பில் தொலைந்(த்)தவைகள்.. . அதே தளத்தில் நிறைய புகைப்படங்களையும் சுட்டுத் தள்ளி நமக்கு வழங்கி வருகிறார்.

...இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!...

செல்வநாயகி, இவரைப் பற்றி நான் என்ன சொல்லவிருக்கிறது. நிறங்கள் என்ற தலைப்பில் பளுப்பில் இருக்கும் இவரின் வலைத்தளமே வாழ்வின் முரண்களை அதனிலிருந்தே சுட்டிக் காட்டுவதனைப் போல அமைத்து விளாசி வருகிறார் பல விசயங்களை. இங்கு அவரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க அனேக வாய்ப்புகளுண்டு. இவர் எழுத எடுத்துக் கொள்ளும் விசயங்கள், அதன் பொருட்டு அவரின் எண்ணங்கள் அதனை வெளிக்கொணர பயன் படுத்தும் மொழியின் ஆளுமை இவைகள் எல்லாமே இவர் வலைப் பக்கத்தின்பால் எனை இழுத்து வைத்திருக்கிறது.

கைராப்ட்ரான் (Chiroptera) அதாங்க நம்ம வவ்வாலு தலைகீழாக தொங்கிட்டே காத்துப் புக முடியாத இடத்திக்குள்ளரக் கூட நிஜ வவ்வாலுங்க அல்ட்ராசோனிக் சப்தத்தை அனுப்பி போகும் வழியில் உள்ள விசயங்களை அறிந்து கொள்வது மாதிரி, இவரின் தளத்தில் ஒரு சிறு நூலகத்திற்கு இணையான எல்லா படைப்புகளும் எளிமையான முறையில் திரட்டி தகவல்களாக தந்திருக்கிறார். ஆழ் நீர் நெல் சாகுபடி - பொக்காலி!! இப்படி ஒரு விவசாய முறை இருப்பதே அந்தப் பதிவின் மூலமாகத்தான் எனக்கு தெரிய வந்தது. இது போல ஆச்சர்ய மூட்டக் கூடிய பல பதிவுகள் அங்குண்டு.

Saturday, September 17, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - I


எனது சுய புராணங்களை செய்து முடித்த கையோடு, அடுத்தவர்களின் படைப்புகளையும் எந்தளவிற்கு உள்வாங்கி வருகிறேன் என்று எனது அடுத்தடுத்தப் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

திருச்சி மலைக்கோட்டையில் ஏறி என்னால் ஒரு உணர்ச்சிப் பூர்வமான படைப்பாளியான திரு. ஞானசேகரை தனியாக சந்திக்க முடியுமென்றால் நாளைக்கே எனது பயணம் அமைய விருப்பம் கொள்வேன். அவரின் பல படைப்புகளை படித்துவிட்டு மனம் அன்று பூராவும் அதுனூடே சிக்குண்டு தவித்ததுண்டு.

...பொட்டச்சியப் பெக்கப்போற
பொட்டக் கழுதக்கித்
தொணையெல்லாம் ஏதுக்குன்னு
வெசலூரு கெரகாட்டம்
போயிட்டாரு எம்புருஷன்...

என்று தொடங்கி ஒரு பெண் தனக்குத்தானே சுய'ப்ரசவம் பார்ப்பதனை அழகாக, நேர்த்தியாக கொடுத்திருப்பார். நிறைய சமூதாய ஓட்டைகளையும் அங்கே சுட்டிக்காட்ட தவறாமல். அதே தளத்தில் நிறைய சிறு கதைகளும், கவிதைகளும் உண்டு.

மற்றுமொருவர் இப்படியும் தன்னை விளித்துக் கொள்ள யாரேனும் முட்படுவார்களா என்றால் முடியுமென்று தன்னை "ஆடுமாடு" என்றழைத்துக் கொண்டு "கால்நடைகளுக்குள் புகுந்து" ஒரு கிராமத்தின் மணத்தைப் பரப்பி வருகிறார், ஆடுமாடு. இவரின் அனைத்து படைப்புகளுமே அம் மணம் மாறாமல் அத் தளத்தை நிரப்பிக் கொண்டுள்ளது.

இங்கே ஒருவர் தன்மீது இருக்கும் நம்பிக்கையின் எல்லை எவ்வளவு என்று விடாது, உண்மையாகவே விடாது உழைத்து இப்படியும் தனது மன படபடப்பை படைத்திருக்கிறார். அண்மையில் சிவாஜி பட வெள்ளி விழாவின் போது நமது பிரபலம் பேசிய முரணை தோலுரித்து, மூகச்சீலை அகற்றி இங்கே காட்டியிருந்தது, நான் போட இருந்த பதிவை யாரோ முந்திக் கொண்டு போட்டுவிட்டார்களோ என்பதனைப் போன்ற ஒருமித்த சிந்தனைகள், அதன் பொருட்டு அங்கே எழுப்பியிருந்த வினாக்கள் அமைந்திருந்தது.

ஒரு பெண்ணை எப்படி வளர்க்க வேண்டுமென்ற சமூக கட்டமைப்பினை கையேடாகக் கொண்டு வளர்த்து, திருமணச் சந்தையில் நிறுத்துபவர்களுக்கு சில கேள்விகளுக்கு பதிலும் வேண்டியதில்லை, அப்படி கேள்விகளும் எழ வேண்டுமென்ற கட்டாயமும் இருக்கப் போவதில்லை. ஆனால், இங்கு ரேகுப்தி என்பவர் எவ்வளவுதான் பெண் என்ற அடையாளத்தால் தன் சுயம் இழக்க தேவையில்லை என்பதனை எப்படியெல்லாம் போராடி தக்கவைத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்பதனை...

...மரபு அல்லது பண்பாடு என்ற வெகு அபத்தமான (பண்பாடு என்பது வெறுமனவே ஆறுமுழ சேலையிலும், ஒன்றரைப் பவுன் தங்கத்திலும் மட்டும் தங்கியிருப்பதில்லையென்ற புரிதலுடன்...

என்று தொடங்கி அழகாக ஒரு சிறுகதையை நகர்த்தியுள்ள நேர்த்தி. அவரின் எழுத்து நடை பிடித்திருக்கிறது.


பி.கு: வலைச்சரத்திற்காக எழுதியது 2008ல்...

Sunday, September 11, 2011

வலைச்சரம் தொடுக்கப் போகிறேன்...


சில வருடங்களுக்கு முன்பு வலைச்சரத்தில் எனது மேய்ச்சல் நிலங்களாக பிடித்த சில வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். அதனை தெக்கியிலும் கொண்டு வரும் நோக்கில் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நன்றி!

அப்பப்போ என்னையும் நினைவில் வைச்சு இப்படி ஏதாவது உருப்படியாக செய்யுமிடத்தில் கூட கூப்பிட்டு விட்டுடுறாங்கப்பா. திக்கித் திணறி இப்பத்தான் என்னோட முதன்மை வலைத் தளத்தில் 99 பதிவுகள் போட்டுருக்கேன், அதுவும் இரண்டு வருட அவகாசத்தில் அப்படின்னா பார்த்துக்கோங்க எவ்வளவு சரக்கு நம்மகிட்ட இருக்குன்னு.

இந்தச் சூழலில் இப்படித் திடீர்னு நெஞ்சடைக்கிற மாதிரி மத்த பதிவுகளை எல்லாம் படிச்சி அவைகளுக்கு தொடுப்பு வேற கொடுக்கணுமின்னு கட்டாயத்தோட இந்த வலைச்சரங்கள் இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டாங்க. எதிர்பார்ப்பை கொஞ்சம் உங்க கைக்குள்ளயே வைச்சிக்கோங்க, இந்தப் பக்கம் வராவங்க இந்த ஒரு வாரத்திற்கு மட்டும்.

நான் எழுத ஆரம்பிச்ச வருஷத்தில இருந்து இன்னிக்கு வரைக்கும் என்கிட்ட ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றமின்னு பார்த்தா, தட்டச்சும் பொழுது இப்ப வேகமாக தமிழில் தட்டச்ச முடிகிறது முன்பிருந்ததை விட. இரண்டாவது, அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி இந்த இடத்தில் இவங்க சொன்ன மாதிரியே எழுத்தில் எந்தவொரு பெரிய மாற்றமுமில்லை, அதே காய்ந்த விசயங்களை பற்றித்தான் பெரும்பாலும் என் பதிவுகள் அமைந்திருக்கிறது. மேலும் எழுத்துப் பிழைகள் கொஞ்சம் மட்டுப் பட்டிருப்தை மறுப்பதற்கில்லை.

என்னோட ஆரம்பக் கால பதிவுகள் ரொம்பவே வேகமாக இருந்தது. அந்த நேரத்தில் இங்கும் நடந்த வலை அரசியல் எல்லாம் தெரியாமல் சமூக அவலங்களை முகமூடி அகற்றி காட்டுகிறேன் பார் என்று புறப்பட்ட பதிவுகள் எல்லாம் உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே சென்று உறங்க ஆரம்பித்தது. அப்பொழுதெல்லாம் சீரங்கத்து எழுத்தாளர் வலை பதிவுகளைப் பற்றி வரையறுத்திருந்தது அதாவது "ஒரு பத்து நிமிட பாப்பிலாரிட்டிக்காகத்தான்" எழுதுகிறேன் என்று விளங்காமலேயே இங்கே பதிப்பித்துக் கொண்டிருந்திருக்கிறேன். ஆனால், இப்பொழுது தான் தெரிகிறது இப்படி இங்கு எழுதுவதற்கு (காசு வாங்காமல்) உளவியல் ரீதியான காரணமிருப்பதை.

அந்த நேரத்தில் ஊரில் பார்த்த காட்சிகளாக, படித்து விட்டு பொற்றோர்களையும், சமூகத்தையும் சுரண்டிச் சாப்பிடும் இளைஞர்களை பார்த்து உதவாக்கரை பட்டாதாரிகள்...! என்றழைத்து ஒரு பதிவும், பிரிதொரு சமயம் அவர்களே எப்படி பரிணமித்து பல்கிப் பெருகி மனித அட்டைகளாக சமூகத்தில் வாழ எத்தனிக்கிறார்கள் என்பதனை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஜீவராசிகள் மனதில் ஈவு இரக்கமற்ற நிலையில் நம்மூர் அனாதைக் குழந்தைகளை அலட்சியம் செய்து அவ் குழந்தைகளை புலம் பெயர வைக்கிறார்கள் என்று தொடர்ந்து கொண்டே செல்லும் அந்நாளைய பதிவுகள்.

பிறகு தமிழ்மணத்திலிருந்து திடீரென்று ஓர் அழைப்பு. அந்த வாரத்தில் நான் வழங்கிய சில பதிவுகள் எனக்கே பிடித்து விட்டதுதான். குழந்தைகளை எப்படி நமது தேவைக்காக நம்முடைய நிறைவேறா எண்ணங்களை அவர்களுனூடையே வைத்து திணித்து நம் அவர்களின் படைப்பாற்றலையும், வாழ்வையுமே பாலடிக்கிறோம் என்பதனை குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்... என்ற பதிவிலும், வளர்ந்து வரும் நாகரீக உலகில் முதலில் எது நாகரீகமென்று கேட்டு விட்டு, பிறகு நட்சத்திர வாரத்தில் அதன் தாக்கம் எங்கே கொண்டு போய் விடுகிறது நம்மை என்பதனை எரோப்ளேனில் நான் கண்ட மேற்கத்தியப் பாதை என்று சொல்லி முடித்திருப்பேன்.

மேலும் இயற்கை நேசி என்ற வலைத் தளத்தில் இயற்கை சார்ந்த விசயங்களை சொந்த அனுபவங்கொண்டு என்னோட (தெகா) வாசனையையும் அதில் குழைத்து பல பதிவுகள் கொடுத்திருக்கிறேன், ஆர்வமுள்ளவர்கள் அங்கே சென்றும் பார்க்கலாம்.


ஊருணியிலும் எனது சிந்தனைகளை வேற்றுக் கிரக வாசிகளும் படிக்க வேண்டும் (முடிந்தால் படிச்சிக்கட்டுங்கிற தைரியத்தோட:) என்ற நல்லெண்ணத்தில் வைத்திருக்கேன். தோண்டிப் பார்க்க நினைக்கிறவங்க தோண்டிப் பாருங்க, ஏதாவது கிடைக்கலாம்.


அப்படா, முடிந்தது சுய-புராணம். அடுத்த பதிவில் இருந்து எப்பலாம் அடுத்தவங்க பதிவு படிக்க நேர்ந்து, அப்படி படித்த பதிவுகளில் எது மனதில் தைத்துப் போனதோ அவர்களை மனதிலிருந்து எடுத்து வெளியே அறிமுகப் படுத்தி வைக்கிறேன்.


அது வரைக்கும் நிம்மதியா மூச்சு வாங்கிக்கோங்க, ஏன்னா, மூச்ச பிடிச்சி திரும்ப இழுத்துப் பிடிக்க வருவேன் அதான்.

Wednesday, July 20, 2011

தமிழ்மணம், தமிழ்மணம் என் பதிவ திரட்டிக்கப்பா :))

தமிழ்மணம் இல்லைன்னா கால் ஒடிஞ்ச மாதிரியில்ல ஆயிப் போச்சு! முடிஞ்ச அளவிற்கு எல்லாரும் கொஞ்சம் பொருளாதார ரீதியில தமிழ்மணத்திற்கு கிள்ளிப் போடுங்க - நானும் செய்றேன். முக்கியமான திரட்டியாச்சே!

நேத்து எனக்கு எட்டின வரைக்கும் சமச்சீர் கல்வியின் தேவையையொட்டி  லஞ்ச ஒழிப்பில் சமச்சீர் கல்வியின் பங்கு’ன்னு...
ஒரு பதிவு  போட்டிருந்தேன். தமிழ்மணத்தில வரவே இல்லை. அதான் திரும்பவும் மைக் டெஸ்டிங். ஏற்கெனவே வாசிச்சவங்க தாண்டி போயிக்கோங்க எதுக்கும் பின்னூட்ட பகுதியை ஒரு எட்டு எட்டிப் பார்த்திட்டு :)... இன்னமும் வாசிக்காதவங்க ஒரு நடை எட்டிப் பாருங்க. நன்றி!

Wednesday, June 15, 2011

கொலைக் களம் : இவிங்களும் மனுசங்களாம்!!

கொஞ்ச காலங்களுக்கு இங்கு எழுதுவதை நிறுத்தி வைப்பதாக எண்ணியிருந்தேன். ஆனால், இந்த சானல் நான்கு நேற்று ஒளிபரப்பிய ஈழ இனப்படுகொலை பற்றிய காணொளி பார்த்ததிலிருந்து மேலும் இந்த உலகம் பற்றியும், பணப் பேய்களின் உளம் பற்றியும் அறியும் பொழுது அவ நம்பிக்கையும், அயற்சியும் இவர்களுடன் இன்னமும் இதே காற்றை சுவாசித்து மாண்டொழியும் நாளை எதிர் பார்த்து வயிற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறோமே என்று நினையும் பொழுது அவமானமாக இருக்கிறது; அதனையொட்டியே இந்த பதிவினை முன் வைக்க வேண்டி வந்திருக்கிறேன்.

இந்த படுகொலையை சந்தித்தவர்களின் கடைசி மணி துளிகளை நினைத்து பார்க்கும் பொழுது இரவு தூக்கம் காணாமல் போவது மிகச் சாதாரணம். அதன் வீரியம் புரியாமலும், புரிந்தும் மனதிற்குள் சிரித்துக் கொள்பவர்களும் இதே நிகழ்வு நாளை நம்மையும், தன் குடும்பத்தாரையும் முற்றுகையிட்டால்... என்ற தொனியில் ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் மனதின் ஓர் ஓரத்தில் இரக்கம் சுரக்கலாம்.

அவசியம் கீழே உள்ள காணொளியை நெஞ்சை இறுக்கி பிடிச்சிகிட்டு பார்த்து முடிச்சுடுங்க. அப்படியே கையோட அதுக்கு கீழே காணும் இணைப்பில் சென்று ஐக்கிய நாட்டு சபையின் மூத்தவர் பான் கீ மூனுக்கு வெளியான போர் குற்ற ஆதாரங்களை கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு உள்ள விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து அனுப்புங்க.

அதில் இரண்டே விசயங்கள்தான் கேட்கப்படுகிறது. உங்கள் பெயரும், மின்னஞ்சல் முகவரியும். எனவே பயப்பிடாம மனசாட்சிக்கு பயந்தாவது செய்யுங்க, மக்களே! நன்றி!!


பகுதி ஒன்று:



பகுதி இரண்டு:



பகுதி மூன்று:




யூ. என் தளத்திற்கு சென்று விண்ணப்பம் செய்ய:

I just signed a petition urging Ban Ki Moon, UN Secretary-General (UNSG) to investigate allegations of war crimes before an international war crimes tribunal. Please share this important petition with your friends and family. If you are on Facebook, Bebo, MySpace or any other social network please put a post up giving others the link to the petition. Also if you run a website or blog please encourage others to support this urgent campaign. SIGN YOUR PETITION HERE

This message was sent from the Sri Lanka Peace Campaign website, www.srilankacampaign.org. Please report any abuse of this service.

Sunday, January 30, 2011

Alternate Perspective #tnfisherman ஒரு பதில்...

மக்கள் வேக வேகமாக ட்விட்டுகளின் வழியாக தங்களின் ஆதங்கத்தை பதிந்து கொண்டிருக்கிறார்கள். நானும் ட்விட்டி கொண்டிருக்கும் பொழுது நம்ம மக்கள் மீனவர்களை காப்பாற்றுங்கள் என்னும் அமைப்பின் கீழ் இயங்கும் தளத்தில் ஒரு கட்டுரையை யாரோ எழுதி அங்கு வெளியிட்டுருந்தார்கள்.


அந்த கட்டுரை மிக்க கரிசனத்துடன் ஆரம்பிப்பது போல ஆரம்பித்து எல்லாமே நம்ம தப்பு. இலங்கை கப்பற்படையின் மீது எந்த தப்புமே இல்லங்கிற மாதிரி முழு பூசணிக்காயையும் மறைத்து அவ்வளவு அழகாக எழுதியிருக்கார். படிச்சா, நீங்களும் நம்பி விட வாய்ப்பு இருக்கு. அந்த கட்டுரையில் சொல்லி இருக்கு விடுதலை புலிகளை மீனவர்கள் ஒரு காலத்தில் ஆதரித்ததால், இலங்கை இவர்களை வெறுப்பதற்கு எல்லா முகாந்திரமும் இருப்பதாக சப்பையும் கட்டி இருக்கிறார். ஒரு இடத்தில கூட கச்சை தீவை நாம ‘தாரை’ வார்த்துக் கொடுத்திருக்க கூடாதுன்னு ஃபீல் பண்ணவே இல்லை. இன்னும் என்னன்னவோ உளறி கொட்டப்பட்டிருக்கிறது நீங்களே படிச்சிக்கோங்க இங்க...

Alternate Perspective on Tamil Nadu Fishermen issues .

படிச்சவுடன் எனக்கு நியாயமாக தோன்றிய பதிலையும், கேள்வியையும் அங்கயே பதிஞ்சிருக்கேன். என்னுடன் தருமியும் கூடவே இருந்ததால் அவரிடமும் அந்த இணைப்பை கொடுத்து படிக்க வைத்ததின் பெயரில் அவரும் பதில் கொடுத்திருக்கார். இப்போ இருவரின் பதிலையும் இங்கு கொடுக்கிறோம், நீங்க அந்த கட்டுரையை படிச்சிட்டு வாசிச்ச மேட்டர் புரியும். நன்றி!

இது என்னோட பின்னூட்டம் அங்கே இட்டது:

A well written essay with lots of 'bullet' points darted against Indian fisherman interest. So, unregulated, over exploitation of harvest is happening in Indian waters by Tamil fisherman in particular. Therefore, in order to regulate give it to open market so that small scale fisherman can completely be wiped out one day in the future from their only known profession which is fishing for their livelyhood.

Anyway, here is my question - in the first place way before GOI handed down "the Kacchatheevu" to Sri Lanka, did they study the pros and cons of Indian fisherman loss due to signing off the island? Did they conduct any general consensus and dialogues with Indian east coast fisherman?

Why is that only our side of population should reduce their needs, lose their lands and yet get blamed with surmounting needs of our own population. I do not understand your foreign policy, with such a huge bulging population of ours we go ahead give away the very little land(the island) we have, however it is also geopolitically strategical hot spot!! Still you are trying to justify; ignoring the facts where and how we strategically failed. I believe we pay a big price geopolitically one day by losing that piece of land! Shame on us!!

இது தருமியோட பின்னூட்டம் அங்கே இட்டது:

I very much consider this post a badly timed one. It tries to side track people from the ISSUE that is being discussed now – it is all about the life and safety of OUR fishermen and NOT on the economic cobwebs between the nations.

The economic and trade affairs talked about in the essay – a very inconvenient place to discuss it here. Actual problem is entirely different. The author very CONVENIENTLY forgets the naked and vulgar truth before us now.

//SL considers them as enemies//

Yes .. It is very natural with the relationships between Tamils and Singhalese. The natural enmity is there for long. Everyone knows it. Present problem is hatched only by this enmity.

//if our fishermen are going to SL borders to catch then its definitely wrong,/

GOOD LOGIC. But how many Singhalese fishermen were arrested/ tortured/ Killed/ maimed by indian coast guard so far? How come on one side you have so much brutality? Are the fishermen of Sri Lanka are saints not entering indian border? And above all, on whose side are you? Are you talking for the 500 plus killed Tamil fishermen or their killers, I wonder?

//“rettai madi valai”?//

No baby on earth would imagine that all these are all due to the “rettai madi valai”

//we also helped LTTE which is legitimate to us but terrorists to SL//

GREAT. You have hit the bull’s eye at last!

//mistake is very much on our side too.//

YES… we have an inefficient govt at the centre and state and many fickle minded people like you among us.

//we can never resolve this problem by a Defense mechanism.//

should we follow our great gandhian dharma??!! Shall we start some SATYAGRAHA?! And our kind-hearted rajapakshae will settle all the problems smoothly!!

இந்தக் கட்டுரையை எழுதியவர் நீரோவிற்கு உறவினரா? வீடு இங்கே தீப்பிடித்து எரிகிறது. இவர் பொருளாதாரம் பேசுகிறார்!


பி.கு: தருமியின் பதிவு இங்கே...470. Alternate Perspective #tnfisherman ... ஒரு பதில்..

Thursday, January 27, 2011

நான் டிவிட்டின கதை: #tnfisherman

இன்னிக்கு மதியம் ஆல் இன் ஆல் கடையில ஒரு விளம்பரம் பார்த்தேன். அதில ட்விட்டர்ல ஒரு பெரிய இயக்கமா தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டித்து ட்விட்டுவதாக சொல்லியிருந்தாங்க. அதன் மூலமாக இந்திய முழுதுக்கும் (ஏன் உலகத்திற்குமே) இந்த செய்தியை கொண்டு சேர்க்க முடியுமென்று கூறி நம்மையும் கலந்துக்கும் படி இங்கே வைச்சு அழைப்பு விட்டிருந்தார்.


ட்விட் பக்கமே தலை வைச்சு படுக்க வேண்டாம்னு நினைச்சிட்டு இருந்தேன். என்னமோ அப்படி தோணுச்சு! ஆனா, இந்த விசயத்தை கேள்விப் பட்டவுடன் உடனே ஒரு கணக்கை தொடங்கினேன். ரொம்ப ஈசியா ஒரு மின்னஞ்சல் முகவரி, பயனர் பேர் அவ்வளவுதான் உள்ளர விட்டிருச்சு. அங்கே தேடுதல் பகுதியில #tnfisherman அப்படின்னு அடிச்சா ஓடிக் கொண்டிருக்கும் அத்தனை ட்விட்களும் காமிக்கிது.

மேலே நம்ம பெயர் காமிக்கும் இடத்திற்கு பக்கதில new twit அப்படின்னு ஒரு பென்சில் சிம்பலோட இருக்கிறதை சொடுக்கினா, நம்மோட ட்விட் விட்டுறலாம். இப்போதைக்கு இந்தியா முழுமைக்கும் இதுவே முதன்மை செய்தியா இருக்கிற மாதிரி காமிக்கிது. மக்கள் கடுமையா இந்த செய்தியை உலகச் செய்தியாக்க போராடிட்டு இருக்காங்க. போங்க நீங்களும் போயி ஒரு கை கொடுங்க!

ம்ம்ம் இன்னொன்னு உங்களுக்கு ஏதும் சொல்லத் தோணலையா. விடுங்க, யாராவது சொன்னது பிடிச்சிருந்தா ஜஸ்ட் RT அப்படின்னு வெட்டி ஒட்டுற செய்திக்கும் முன்னாடி போட்டு அப்படியே ஒட்டிருங்க. உங்க வேல முடிஞ்சிச்சு.

என்னோட ட்விட்களில் சில...

* சிங்கள இனவெறி கடல் கடக்கிறதா??#tnfisherman

* Habitual killing becomes ones CHARACTER... so is the reason behind the killing of 500+

* Serial killers can never overcome their temptation of killing, so the SL racist

* இப்பொழுது புரிகிறது தீவிரவாதம் ஏன் ஒரு சில குழுவினரை உலகெங்கிலும் கட்டித் தழுவிக் கொள்கிறதென

* Does SL racism over spills onto T.nadu shores??#tnfisherman


இதுவும் மீனவர்களின் செய்தியை கொண்டு சேர்பதற்கென உருவாக்கப்பட்ட தளம் தான் - தமிழக மீனவர்களை காப்பாற்றுங்கள்.

ட்விட்டர் இணைய தளம்... twitter.com

ஏன் ட்விட்றாங்கன்னு தெரியலையா இந்த காணொளியை பார்த்தா புரியும்.

Saturday, January 15, 2011

சூரியக் குளியலுக்கான தமிழ்மண விருது: நன்றி!

இன்னிக்கு நண்பர் ஜோதிஜி மூலமா பொங்கல் நாளும் அதுவுமா ஒரு இனிப்பான செய்தி கிடைச்சிச்சு. தமிழ்மண திரட்டி நடத்திய 2010க்கான விருதுகளுக்கான போட்டியில் என்னுடைய புகைப்பட பதிவு முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது என்பதே அந்தச் செய்தி.



இதுவே முதல் முறை எனக்கு இது போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அனுபவம். எப்படி இருக்கு இதனையையொட்டிய உணர்வுன்னு கிட்ட வந்து கேட்டீங்கன்னா - ’கூல்’ அப்படின்னு சொல்லத் தோணுது.

இதுக்காக பல பேர் பாடுபட்டிருக்காங்கன்னு மட்டும் தெரியுது. முன்னய மாதிரி இல்லாம இப்பொழுது நிறைய புதிய பதிவர்கள் திரட்டிகளில் இணைந்து பங்களிப்பு செய்து வருகிறார்கள். மிகப் பெரிய முன்னேற்றமிது! அதுவும் போன வருடத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கு அதிகமான பதிவுகள் அப்படின்னு படிக்கும் பொழுதே கண்ணக் கட்டுது. எப்படி இதிலிருந்து வடிகட்டி கண்களுக்குள் சிக்கும் எண்களாக குறைத்து, அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார்கள் என்பதனையெல்லாம் அறிந்து கொள்ளும் பொழுது, இதற்கு பின்னான உழைப்பு மலைக்க வைக்கிறது.

இதற்கென உழைத்தவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட எனது புகைப்பட பதிவிற்கென இப்பொழுதும் நான் அரக்க பறக்க கோடியக்கரைக்கு ஓடிய அந்த நாளும், கிரக்கமூட்டும் அந்த சூரியக் குளியலும் என் மனதில் வந்து அவ்வப்பொழுது நனைத்து போவதனை மென்மேலும் ஞாபகமூட்டும் வகையில் இந்த ‘விருதும்’ ஒரு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும்; எப்பொழுதெல்லாம் இந்த விருது என் கண்களில் படுகிறதோ அப்பொழுதெல்லாம் என்பதில் சந்தேகமில்லை.

இந்த விருதினை ஈட்டிக் கொடுத்த சக வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், நடுவர்களுக்கும், தமிழ்மண நிர்வாகத்திற்கும் எனது நன்றிகள்! வாழ்க! வளர்க!!

-அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்-

இது கண்களுக்கு குளிர்ச்சியூட்டுவதற்கென - அந்த புகைப்பட தொகுப்பிலிருந்து ஒன்று - From Flickers...



Sunset in Point Calimere

Sunset in Point Calimere

Air drenched with day
Slowly closes its eyes
Obedient to the radiant sun
Breeding love through
Shimmering water
Reflects with silent tremors
Enamored with brilliant color
Painted Stork crossing
The twilight in its silhouette...


- Poem Courtesy goes to Kaattaaru

Related Posts with Thumbnails