Tuesday, August 30, 2011

துளியளவு தொங்கல் - w/photo

The Kin is Within_Rain Drop


எப்பொழுதும் வெடித்துவிடுவேனென்று
நுனிக்கிளையில் தொங்கியவாறே
என்னுள் பூமியை விரித்துக்கொண்டிருந்தேன்

இப்பொழுதோ அப்பொழுதோ
என்மீது விழும்
மற்றுமொரு மழைத் துளியொன்று
காரணமேயின்றி
என் உலகத்தை
சிதைக்க
என்னைச் சுற்றிலும் விழுந்து
கரைந்து கொண்டிருக்கின்றன...

தூரத்திலொருவர் தனது
நீண்ட நெடிய ஆசையாக
வீடொன்றை
நிதானமாக என்னுள்
எழுப்பிக் கொண்டிருந்தார்
எனதிருப்பையறியாது!





P.S: Discussion in Buzz ...ThuLiyalavu Thongal...

Monday, August 22, 2011

துளிர்ப்பு...




காய்ந்தபடியே மிதந்து கொண்டிருக்கிறேன்
இங்குமங்குமாக இலக்குகளற்று
ஆற்றின் இழுப்பிற்கிணங்க
கடந்து செல்லும் முற்கள்பட்டு
கடந்த வாழ்வின் ரணம் திறக்கிறது
மிதவை மட்டும் நிற்கவேயில்லை...

உதிரச் செல்களின் 
இண்டு இடுக்களிலெல்லாம் நொதித்தலின் 
கனமேற்றியபடியே
ஏதோ ஒரு சுழற்சியொன்று
என் கனமறிந்து உள்வாங்கி
எனதிடம் சென்றடைக்க
கண்ணாடி படிகமாக
வாழ்க்கை!

P.S: Discussion in Buzz ...ThuLirppu...

Saturday, August 20, 2011

நடந்த எப்படி ..? ராஜீவ் படுகொலை விசாரணை. மோகன்ராஜ் CBI அதிகாரி அதிர்ச்சி தகவல்.(VIdeo in)

அட இதப் பாருங்கப்பா... சிபிஐ ல வேல பார்த்தவர் உள்ளர இருந்து என்ன பார்த்திருக்காருன்னு. பெரும் அதிர்ச்சி தகவல் அவரு சொல்லுற உண்மைகள் பூராவும்... :(( very disappointing!!

நடந்த எப்படி ..? ராஜீவ் படுகொலை விசாரணை. மோகன்ராஜ் CBI அதிகாரி அதிர்ச்சி தகவல்.(VIdeo in)

Sunday, August 14, 2011

இது எப்படி சாத்தியமாகிறது...?

அப்பொழுதே சூடாக நடந்தேறி முடிந்திருந்த ஈழ இனப்படுகொலையின் தாக்கத்தின் அடிப்படையில், இந்த கட்டுரை ஜுன் மாதம் 2009ல் எழுதியது. பொங்கி எழும் மனத்தின் ஓலத்தினை தணிப்பதற்கென கொட்டித் தீர்த்தது. பின்னாளில் ஈழ நேசனுக்கு அனுப்பி ஏதோ ஒரு சூழலில் பிரசுரிப்போம் என்றவாக்கில் நிறுத்தி வைத்திருந்ததை, மீண்டும் தூசு தட்டி இங்கு கொண்டு வந்திருக்கிறேன்.

மறைந்த பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை அரக்க பரக்க தூக்கில் தொங்கவிட எத்தனித்து கொண்டிருக்கும் இந்த சூழலில், இணையத்தில் நடக்கும் உரையாடல்கள் சிலவை நாம் உண்மையிலேயே சிந்திப்பு திறனை இழந்து மீடியாக்கள் கொடுப்பதனை அப்படியே ஏற்றுக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்ளும் நிலைக்கு நகர்ந்து வெகு தூரம் சென்றுவிட்டோமோ என்று எண்ணச் செய்கிறது.


உலக அரங்கில் ஈழத்தில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது உண்மையே என்று சானல் 4 கொடுத்த காணொளி ஆவணப்படத்தின் மூலம் இந்த உலகத்தையே பதறச் செய்த செய்தி, இத்தனை பெரிய ஜனநாயகத்தை உள்ளடக்கிய ஒரு நாடு, காந்திய வழியில் செல்லும் அஹிம்சா நாட்டிற்கு பாரா முகம் காட்டும் வெறும் செய்தியாகிப் போனது. இப்பொழுது வேக வேகமாக 20 வருடங்களுக்கு முன்னால் குற்றம் சுமத்தப்பட்டு ஏற்கெனவே தண்டனையும் அனுபவித்தவர்களை மீண்டும் தூக்கிலிட வேண்டிய அவசரமென்ன, என்பது புரியவில்லை.

எங்குதான் சென்று யூ டர்ன் அடிப்போம் என்று பார்க்கலாம். இப்பொழுது ஒரே மொழி பேசினாலும் பல மனங்களை உள்ளடக்கி அதனதன் தேவைகளையொட்டி ஓடித் திரியும் உள்ளங்களுக்கென பொதுவானதொரு வாசிப்பு...

இது எப்படி சாத்தியமாகிறது...?

பூகோளத்தின் பரப்பில் நாம் பிறந்து விழும் இடத்தைக் கொண்டுதான் நம் வாழ்வு முறை பெரும்பான்மையாக தீர்மானிக்கப் படுகிறது. அவ்வாறு வாழப் போகும் வாழ்வு எப்படி நகர்ந்து, ஊர்ந்து அன்றாட வாழ்வில் அடிப்படை தேவைகளுக்கு கூட களைத்து தேய்ந்து விடாமலும், மலர்ந்தும் மலராமல் பிஞ்சிலேயே கசக்கப் படாமலும், கண்கள் மலங்க விழித்த படி அதில் கொத்து மண் விழுந்து, வானம் பார்த்த பிண்டமாய் வீழாமலும் வாழ வைப்பது என்பது அப்பரப்பின் அரசியல் ஆளுமையைப் பொருட்டும், மக்களையாளும் மனித மனங்கள் பொருத்தும், தனி மனிதனின் வாழ்க்கை அமைகிறது. 

அவ்வாறு வாழ, வழி நடத்தி செல்லப்பட சுதந்திரமானதொரு பூகோளப் பரப்பு அவசியமாகிறது. சக மனிதனை கெளரவத்துடன் மதித்து மனித ஆற்றல் வெளிப்பட அந்த சுதந்திரம் மிகவும் இன்றியமைதாகிவிடுகிறது.

அவ்வாறு வாழ வழிவகை கிடைத்தவர்கள் தன் மனத்தினூடாக பார்க்கும் அனைத்தும் அழகுடையதாக பார்ப்பதும் இயற்கைதான். அதே மனது சக மனிதன் ஒருவன் தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்பங்களில் கால் சதவிகிதம் கூட கிடைக்காமல் வாழ்க்கை மறுக்கப்பட்டு துன்பங்களிலேயே உழன்று, சொல்லொண்ணா சித்திரவதைகளை அனுபவித்து வாழ்கிறான் என்பதனை கண்ணுரும் பொழுது பார்வையாளனாகவே இருக்கிறது. 

தான் பேசும் மொழியினாலோ, அல்லது தரித்திருக்கும் தோல் நிறத்தினாலோ சக மனித துயரம் என உணரும் பொழுது அந்த சுகவாசியின் மனதினுள் கூட ஓர் ஓரத்தில் அதிர்ச்சி கலந்த இரக்கம் சுரப்பதும் இயற்கைதான்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு எங்கோ ஓர் இனப்படுகொலை நடந்தேறி அதனின்று தப்பித்து இன்றைக்கு ஒரு நபர் ஒரு புத்தகத்தின் மூலமாக தான் கண்டதை அனுபவித்ததை முன் வைக்கிறார், நாமும் படிக்கிறோம். அந்த வாசிப்பின் ஊடாக நாம் நினைக்கிறோம் மனித நிலையில் இப்படியெல்லாம் சிந்தித்து சக மனிதனை சித்ரவதைத்து தினப்படி கொல்லாமல் கொன்றதை, அந்த ஆசிரியன் அப்படியே விவரிக்கும் பொழுது கண்கள் ஓரத்தில் நீர் வழிய புத்தகத்தை மூடி வைத்து விடத் தோன்றும்.

இப்படி ஒரு மூர்க்க மனம் படைத்த மனிதர்கள் எனும் இனத்தில் நாமும் ஒருவராக பிறந்திருக்கிறோமே என்று நினைத்து நம் பிறப்பிற்கே வெக்கப்பட்டிருப்போம், கண்ணீர் வடித்து சாப்பிட மனமின்றி சில நாட்கள் இருந்திருப்போம்.

மேலே கூறிய அனைத்தும் இன்னமும் மனித நிலையில் ஆரோக்கிய வாழ்வினூடாக வளர்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற எந்த ஒரு மனித மனத்திற்கும் பொருந்தக் கூடும். அது தவிர்த்து, தன் சுய வளர்ச்சிக்காகவும், லாபத்திற்காகவும் வாழும் இந்த ஒரு வாழ்க்கையில் இது போன்ற உணர்வுகளை தொலைத்து சக மனிதன் ஒருவன் பக்கத்து வீட்டில் அலறி துடித்து சாக நேரிடும் பொழுது எப்படி நம்மால் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேளிக்கை சாதனங்களின் ஒலி குப்பியை திருகி அங்கு ஒன்றுமே நடைபெறவில்லை என நடித்துக் கொண்டு நம் வழியிலேயே சொன்று கொண்டிருக்க முடியும்?

ஏதாவது ஒரு நிமிடமேனும் நம் ஆழ் மனது தெரிந்தே அவ்வாறு இருந்திருக்கிறோமே என்று, நம் ஒட்டு மொத்த வாழ்க்கையின் வாழ்வு முறையை ஒரு நாள் கேள்விக்கு உட்படுத்தி நம் பிறப்பின் நோக்கத்தையே கேள்வி நிலையில் நிறுத்தி விடாதா? எத்தனையோ பட்டங்களை பெற்றிருக்கலாம். எல்லோரும் அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தை எட்டியிருக்கலாம். ஆனால், மனதிற்கும் தன் உணர்வுகளுக்கும் நெருக்கமான ஒரு சில விடயங்களிலேனும் வாழ்ந்து பார்த்திருக்காத பட்சத்தில் தன் மொத்த வாழ்க்கையுமே அந்த தனிப்பட்ட நபரைப் பொருத்தவரை அவருக்கு இழப்பாகத்தானே தோன்றும்.

இன்று நம் வீட்டிலிருந்து ஒரு 30 கிலோமீட்டர்களே வித்தியாசத்தில் எத்தனையோ அப்பாவி உயிர்கள், எதிரபாராத முறைகளிலெல்லாம் சூறையாடப் பட்டுக்கொண்டிருக்கிறது ஒரு சில அற்ப காரணங்களுக்காக. ஆனால், சுதந்திரமான ஆரோக்கிய சூழலில் சுகவாசியாக வாழும் நாம், நம்மினம் அல்லல் படுவதைக் கண்டு கொதித்தெழுவதை விட்டுவிட்டு, அரிதாரம் பூசிக் கொண்டு ஒன்றுமே செய்ய இயலாத நிலையில் இருப்பதாக கூறி முகம் திருப்பிக் கொள்வது வேதனை அளிப்பது.

பின்னாளில், இக்கோர கொடுமைகள் தாங்கி வெளி வந்த சுயசரிதை வாசிக்குங்கால், என் இனம் தத்தளிக்கும் போது என் குரல் ஓங்கி ஒலிக்கவில்லையே என கண்ணீர் விடுவதால் இன்று நடக்கும் கொடுமைக்கு பயன் ஏது? சிந்தனைவாதிகளாகவும், அறிவு ஜீவிகளாகவும், அரசியல் சாணக்கியர்களாகவும், மனித நேயர்களாகவும் மார்தட்டி இறுமாந்து திரியும் நாம், மெல்லவே முகத்திரை கிழித்து, கதைகள் பேசுவதை நிறுத்தி, ஒற்றுமை வளர உழைப்பது எப்படி என்று சிந்திப்போமா?

Thursday, August 04, 2011

சுயநலம்... (Inspired by ராமராஜன் பாடல்)





பரிணாமத்தின் உச்சத்தில்
மனித குலம்
வெற்றிக்கு பின்னான
மரபணுவின் சூலுக்குள்
பால் கறக்கும் முன்பும்
பின்புமாக
கன்றை அவிழ்த்துவிடும்
சூட்சுமத்தில்
கண் சிமிட்டி பறையடிக்கிறது! 

oo00oo




பி.கு: இந்த அரை டவுசர் ராமராசன் சார் பாட்டு ஒண்ணு பார்த்தேன். ரொம்ப பாசத்தோடு அப்படியே ஒரு பால் கறக்கிறவரின் திறமையோட கன்றுக் குட்டியத் தடவி, முத்தமிட்டுன்னு நடிப்பில சொக்க வைச்சு செய்யப் போற திருட்டு வேலைக்கு அச்சாரம் கொடுத்ததை பார்த்தவுடன் தோன்றியதுதான் மேலே உள்ள கவிஜா :). 


எப்படியெல்லாம் நம்மோட வேல நடக்க இந்த மூளை தகிடுதத்தங்களை யோசிச்சு வைச்சிருக்கு :) - அதுவே நம்மை இன்னிக்கு பரிணாம ஏணியின் உச்சத்தில் வைச்சிருக்கிது. இருப்பினும் ஒரு மானை விட, ஒரு புலியை விட நமக்கு உடல் சார்பில் எந்த ஒரு சிறப்பு தற்காப்பு உப உறுப்புகளும் கிடையாது என்பது உண்மைதானே! சுயநலமே உயர்விற்கு வழி :))


அப்படியே இந்த பாட்டையும் பாருங்க... ராஜா அசத்தியிருப்பாரு ...





Monday, August 01, 2011

மனித’கம்...



எட்டியும் எட்டாததுமாக
வாழ்வுப்படிகள் எட்டியே
வெளிக்கிடும் கணம்தோறும்
கொள்ளளவைக் கொண்டே
கிரகித்து வந்தேன்...

போர்வை விலக்கி
எட்டிப் பார்த்த அந்திமத்தில்
இருளடைந்த அகத்தைத்தாண்டி
அப்போதே
உள்ளே மலர்ந்து கொண்டிருந்தேன்...

அழையா நட்பென
திடுமென என் தோள்பற்றி
உலுக்கி உள்ளிழுத்தது மரணம்.


P.S: Photo Courtesy: Net


Related Posts with Thumbnails