Showing posts with label photography. Show all posts
Showing posts with label photography. Show all posts

Monday, December 16, 2013

வடுவூரில் எதிர்கால நீச்சல் வீரர்கள்: Potential National Swimmers at Vaduvoor

நேற்று வடுவூர் வடக்கு பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றிருந்தோம். எங்கெங்கு நோக்கினும் பச்சைப் பசேல் வயற்காடுகளும், அண்மையில் பெய்து வரும் தொடர் மழையால் மரங்கள் நீரை அருந்தி செழுமையை இலைகளில் காட்டியவாறு தனிந்து நின்று குளுமை காட்டிக் கொண்டிருந்தது.

அருகாமையில் உள்ள நீர் நிலையில் இந்தியாவின் potential divers தங்களின் தேசியத் திறன் அறியாது “அண்ணா, அண்ணா எங்களை படம் பிடியுங்கள்” என்று கூறியவாறே அத்தனை நேர்த்தியையும் காட்டி அரை மணி நேரத்திற்கும் மேலாக காற்றில் சுழன்றபடி நீருக்குள் தங்களவு ஆன்மாவை செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது படத்தில் உள்ள சிறுவனின் நீர் புகும் நேர்த்தியைக் காணுங்கள்! இதுவே ஒலிம்பிக் போட்டிகளில் பல வருடப் பயிற்சியில் செய்யும் ஒரு நீச்சல் வீரர் செய்யும் சாகசமென்று ஆ, ஓன்று கூச்சலிடும் (what an entering) ஒரு திறமை. இங்கே தானே பழகியதில் செய்து காட்டுகிறான்.

இப்படியாகத்தான் நமது கிராமப்புறங்களிலிருந்து பல தேசிய விளையாட்டு வீரர்கள் இந்தியா ஒன்று, இரண்டாவதை பின் தள்ளியவாரே தன்னை மண்ணுக்குள் புதைத்து விட்டு அரை ஜட்டி போட்டு 20/20 மட்டுமே விளையாட்டு என்று ச்சீயர் லீடிங் செய்து வருகிறது. எல்லாமே பணம், வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தூக்கிப் பிடிக்கும் குணம்.

The real talents yet to be found in the heart of India!

1)


2)
3)
4)
5)
6)
7)
8)

Sunday, October 27, 2013

திசைகளறு பயணம் I - கன்யாகுமரி (Photos)

நேற்றிரவிற்கு முந்தைய இரவில் திடீரென்று ஏதோ வீடற்றவன் மனநிலையில் கிடைத்த பேருந்தில் தாவித் தாவி பயணித்ததில் விடியற்காலத்தில் சூரியனார் விழித்து அரைமணி நேரம் கடந்து இறங்கிய இடம் கன்யாகுமரியாக இருந்தது. :)

புதுக்கோட்டையிலிருந்து மதுரைக்கு அந்த நேரத்தில் ஒரு தனியார் பேருந்து ஒன்று கிடைத்தது. போகும் வழியெங்கும் அப்பொழுதே பெய்திருந்த மழை , மரங்களின் இலைகளில் சார்ந்திருந்த ஈரப்பதத்தை காற்றில் பரப்பி, நெஞ்சின் அடியாழம் வரைக்கும் நுரையீரலின் வழியாக உயிரைத் தொட்டுக் வருடிக் கொண்டிருந்தது. கூடவே இளையராஜவின் என்பதுகளின் பாடல் தொகுப்பை மிதமான சப்தத்துடன் ஓட்டுநர் வேறு தவழ விட்டிருந்தார்.

எனது தலைக்கு நேர் மேலாக பெட்டிகளை வைக்கும் தட்டில்  சுற்றியிருந்த ஒரு வெளிப்புற பிளாஸ்டிக் சிறிதே கிழிந்து காற்றில் ஆடியாடி அசைந்தது. அது என்னுடைய கேசமே காற்றில் சிலும்பிப் பறக்கிறதென ஒரு மயக்கத்தை உண்டு பண்ணி என்னுடைய கல்லூரிக்காலத்துப் பயணத்தை மீண்டும் ஞாபகமூட்டியபடியே தனை மறந்து கேசத்தை சிலுப்பிக் கொள்ளும் அவாவை வழங்கிக் கொண்டிருந்தது.

அது இளையராஜாவின் மந்திர விரல்களின் ஊடே கசிந்தொழுகும் பாடல்களுக்கு மட்டுமேயான சாத்தியம் போல!  இல்லாத முடியை, பயணத்திற்கான இலக்கை, வாழ்க்கைக்கான பொருளை, இறந்து போன ஆன்மாவை இன்னும் உயிர்ப்புடனே ஏதோ ஒரு மூலையில் உன் ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று ஞாபகமூட்டுவதற்கான அத்தனை சாத்தியங்களையும் அது வழங்கி, வாடிய மனதை மேகத்திற்கு மேலாக எடுத்துயர்த்தி வைத்து விடும் ஒரு வெண்புரவி போல.

மிதக்க மிதக்க அப்பொழுதே ஒரு நோட்டுப் புத்தகத்தில் இளையாராஜவிற்கு செலுத்த வேண்டிய எனது காணிக்கையை எழுத்தின் மூலமாக எழுத வேண்டிய தருணமிது என்று எண்ணும் அளவிற்கு அது என்னை கடந்த காலத்திய ஆயிரக்கணக்கான மைல்களின் பயணிப்புகளின் ஊடே தோன்றிய அனுபவங்களை சார்ந்து இப்பொழுதே மொத்தமாக இறக்கி வைக்கும் தருணமாக அழுத்திக் கொண்டிருந்தது.

ஆனால், இப்பொழுது நான் சொல்ல வந்த விசயம் வேறு. பிரிதொரு சமயம் இளையராஜாவிற்கென ஓர் அமர்வு செய்யலாம்.

எப்பொழுதுமே எனக்கு இந்தியா என்றாலே நெருக்கமான விசயமாக எனக்குள் பற்றிப் படர்வது பேருந்து மற்றும் புகை வண்டிப் பயணங்கள். இது போன்ற தனிப்பட்ட முறையில் இலக்கே அற்று கால் போன போக்கில் கிடைக்கும் ஊர்தியில் ஜன்னலோரமாக அமர்ந்து பிரயாணிப்பதுதான்.

அவ்வாறு பயணிக்கும் பொழுது, பேருந்தின் வேகம்  அதிகரிப்பதனை விட்டு அதனை விட என்னுடைய மனம் வேகம் பிடித்து பிரபஞ்சத்தின் விளிம்பை எட்டிப்பிடித்து விட்டு அதற்கு மேல் அது வளைந்து செல்கிறதே என்ற ஆதங்கத்துடன் பூமிக்கே இறக்கிக் கொண்டு கடந்து செல்லும், ஊர்களையும், மரங்களையும், தண்ணீரற்ற குளம் குட்டைகளையும், மாடு மேய்க்கும் தாத்தாபாட்டிகளையும், சிறார்களையும், மனிதர்களையும் அலுக்காமல் பார்த்துக் கொண்டே அவர்களை பின் தள்ளி முன் நகர்வது ஏதோ வாழ்வின் எதார்த்தத்தை எனக்கு ஞாபகமூட்டியபடியே கடந்து செல்வதாக மனமொரு லயிப்பை எட்ட வைக்கும்.

பெரும்பகுதி இது போன்ற ஊர்திகளின் முன் நகர்வு என்னுடனேயே என்னுள் மையம் கொண்டிருக்க பெரிதும் உதவுகிறது. ஏறி இறங்கும் மனிதர்களின் முகங்களும் அவர்களுடனேயே பயணிக்கும் அனைத்து விதமான வாழ்வு வழங்கிய ரேகைகளும், வீடுகளும் சட் சட்டென திரையிழுத்து காட்சிகளை மாற்றுவதனைப் போல மாறிக் கொண்டே இருக்கும். அது நமது வாழ்வின் நிலையாமைக்கான ஒரு குறியீடாக அமைந்து என்னுள் மென்மேலும் உறங்கிப் போக வடிகாலாக அமைய உதவுவதும் இது போன்ற இலக்கற்ற பயணங்கள் ஒரு கிளர்வுற்ற ஈர்ப்பு நிலையில் நடந்தேற உந்தித் தள்ளுகிறதோ என்று ஒரு முடிவிற்கு வர வேண்டி இருக்கிறது.

இதற்கு முன்பு இது போலவே பல பயணங்களை எனக்கு நானே வழங்கிக் கொண்டிருக்கிறேன். அதிலொன்று வட அமெரிக்காவில் நான் நிகழ்த்திய 2980 மைல் அளவிளான மகிழுந்து பயணம் வாயிலாக ஆறு மாநிலங்களை கடந்து சென்றது. வாழ்வின் மறக்க முடியா பயணங்களில் அதுவும் ஒன்று. அதற்கும் பெரிதாக எந்த ஒரு திட்டமிடலுமில்லை. அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. ஆனால்,  ஏதோ ஒரு வானத்தின் நிலா பின் தொடர்ந்த படியே!

பயணங்கள் எப்பொழுதும் எனக்கு அலுப்பை கொடுத்ததே இல்லை. மனம் வெம்பி சூம்பிக் கிடக்கும் பொழுது இப்படியான பயணங்கள் உள்முகமாக சிந்தனையைத் திருப்பி விடவும், வழியில் தான் சந்திக்கும் புதிய மனிதர்களுடானான உரையாடல் தனக்குள் இருக்கும் உண்மையான இயல்பினை வெளிக்கொணர்ந்து மீண்டும் விரைவாக துளிர்த்தெழும் சாத்தியத்தையும் வழங்குகிறது.

அதனினும் பயணங்களின் பொழுது வாசிக்கும் பழக்கம் இருக்குமாயின் அது மேலும் கூர்மையடைய வாய்ப்பளிக்கிறது. என்னுடைய ஆதர்ச எழுத்தாளரான பாலோவின் த ஸகீர் புத்தகம் வீட்டில் படுத்தவாரே வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த புதினத்தின் ஓட்டம் புத்தகத்தின் எல்லையைத் தொடத் தொட இது இந்த நிலையில் வாசிக்கும் புத்தகமல்ல என்று அவமானமாக உணர்ந்தேன். அதன் விளைவாக அமைந்தது ஒரு நான்கு மணி நேர பேருந்து பயணம். அந்த பேருந்தின் கடைசி நிறுத்தத்திற்கு முன்பாகவே புத்தகத்துனூடான பயணமும் முடிவடைந்தது. பயணத்தின் பிற்பகுதி ஒரு ரம்மியமான மாலை நேரம். காவிரிக் கரையோரமாக பச்சை பசேல் நிறம் பூசிய வயல் காடுகள் அனைத்தும் கலக்கஸ்தான் புல் மேடுகளாக மாறிப்போயிருந்தன.

மீண்டும் கன்யாகுமரி பயணத்திற்கு வருவோம். மதுரையிலிருந்து குமரிக்கு செல்லும் நேரடி அரசு பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்தேன். அரசு பேருந்துகளே இப்பொழுதெல்லாம் தொலை தூர பயணத்திற்கு செல்வதற்கென இயக்கப்படுவதாக கருதுகிறேன். அரசு பேருந்துகளின் பயணச் சீட்டின் விலையும் ஒன்றும் சொல்வதற்கில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் தஞ்சாவூருக்கும் புதுக்கோட்டைக்குமான பயணச் சீட்டின் விலை அரசு பேருந்திற்கும் தனியாருக்கும் ஒன்பது ரூபாய் வித்தியாசங்களை கொண்டதாக இருக்கிறது. முன்பு ஒரு காலத்தில் தனியார் பேருந்துகளிலேயே விலை அதிகமிருக்கும். இப்பொழுது அது தலைகீழாக இருக்கிறது. பேருந்துகளின் நிலையும் ஒன்றும் பெரிதாக மெச்சிக் கொள்ளும் படியாகவுமில்லை.

ஓடும் பேருந்திற்குள் முதல் முறையாக கொசுக்கள் முத்தமிட முத்தமிட பயணித்து மகிழ்ந்தது இதுவே முதல் முறை. ஓட்டுநர் எத்தனை மிதித்தும் பேருந்து மணிக்கு 50கி.மீ வேகத்திற்கும் மேல் சென்றிருக்க வாய்ப்பில்லை.

பேருந்தின் ஜன்னல்களின் கண்ணாடிகள் சிரித்து அதிர்ந்து சிரித்து என கொஞ்சம் கொஞ்சம் எட்டிப்பார்த்த தூக்கத்தையும் கொசுக்களுடன் சேர்ந்து கொண்டு காவல் காத்தது.

இந்தனை சந்தோஷத்திலும் விருட்டென்று அமைந்த பயணத்தினால், கையில் இருந்த கேமராவில் பாட்டரி இருக்கிறதா இல்லையா என்று பார்க்க அச்சப்பட்ட படியே நேரத்தை கடத்திக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காலை மணி மூன்றரையைப் போல எடுத்துப் பார்க்கும் பொழுது சுத்தமாக இறந்து கிடந்தது. கொஞ்சமே என்னை திட்டிக்கொண்டு மேலும் அதனை நினைத்துப் பயணத்தின் இனிமையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அந்த மன அறைக்கு ஒரு பூட்டைப் போட்டு சாத்தி விட்டேன்.

பின்னே என்ன இறங்கி கையில் இருந்த சம்சங் s4 வழியாக கிடைத்ததை எடுத்துக் கொண்டேன். இருந்தாலும் காலை நாலரை மணிக்கு சென்றடைந்து விடும் என்ற பேருந்து சரியாக ஆறரை மணிக்கே சென்றடைந்தது. அதற்குள்ளாக சூரியனார் கொஞ்சம் காத்திரமாகி லென்ஸை பதம் பார்க்க ஆரம்பித்து விட்டார். இன்னும் குமரியில் ஐந்து இட்லிகள் பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள்! அந்த பெண்கள் மீன் விற்பனை செய்யும் சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கக் கூடும். சுற்றி நின்று உணவருந்தியவர்களின் தோல் காய்ச்சலைக் கொண்டு அனுமானிக்க முடிந்தது.

அவர்கள் கடலுக்கும் சற்றே அருகே நின்று இந்த வியபாரம் செய்து வருவது அறியாமல் முகம் அலம்பி பல் விளக்கவென மனதில் நிறுத்தி ஒரு வெண் பொங்கலும், காஃபியும்  அருந்த 95 ரூபாய் கொடுத்து  முதல் போனி செய்து வைத்தேன். கொஞ்சமே வருத்தம். அடுத்த முறை ஐந்து இட்லிகள் பத்து ரூபாய் :) .

நான் பருகித் திளைத்ததிலிருந்து ஒரு சில துளிகள் உங்களின் பார்வைக்காகவும்...


1)



2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)

Thursday, July 18, 2013

கற்சிலையொன்று உயிரெழும்பினால்...

ஒண்ணரை மாதமாகவே பூமி சற்றே சுழன்று தன்னுடைய பூமத்திய ரேகையை இடமாற்றிக் கொண்டதோ என்று நம்பும் அளவிற்கு சியாட்டிலில் கொட்டும் மழை போன்றும், நம்மூர் பருவமழை காலங்களையொட்டியே விட்டும் விடாமல் பெய்யும் மழை போன்றும் இங்கே மழை பெய்து வருகிறது.

நேற்று ஒரே பேச்சு. நான் வசிக்கும் இடத்திலிருந்து ஒரு மூணரை மைல் அளவிலே உள்ள பழைய நகரம் கான்யர்ஸில் டொர்னாடோ தரை தொட்டு இரயில் தண்டாவாளத்தையும், நிறைய மரங்களையும், கார்களையும் பொரட்டி போட்டுவிட்டு சென்று விட்டதாக.

சரி என்ன சங்கதி என்று தெரிந்து வருவோமென்று என்னுடைய காலச் சுருட்டியுடன் அந்த பக்கமா நகர்ந்தேன். அங்கே ஒரு பழைய காலத்து டச்சுடன் சிலையொன்று அமர்ந்திருப்பதை எப்போதுமே வைத்தக் கண் எடுக்காமல் அதனைச் சுற்றி காரைச் செலுத்தி கடந்து செல்வதுண்டு.

இன்று கீழே இறங்கி என்னதான் கிடைக்கிதுன்னு நெருங்கினேன். என்னால் நிஜம்மாக அந்த இடத்தை விட்டு நகர மனமேயற்று நாற்பத்தம்பது நிமிடம் சுற்றி வருவது மாதிரி ஆகிவிட்டது. அத்தனை வசீகரம் அந்த முகத்தில்! உச்சி வெயில் வேறு. வண்ணம் குழைத்து அப்பிக் கொள்ள முடியாவிட்டாலும். கிடைத்த வரை சுருட்டிக் கொண்டேன்.

அந்த கருஞ்சிலையின் முகத்தில் உள்ள வசீகரம் என் வீட்டு தோட்டத்தில் மெள்ளமே தவழ்ந்தெழும் ஆங்ரி பேர்டிடமும் ஓட்டி அந்த வசீகரச் சிலைக்கு உயிரோட்டியதைப் போன்ற பிரமை தட்டியதால்... இன்று பக்கம் பக்கமாக வைத்துப் பார்க்கத் தோன்றியது.  :)







இவள்தானோ அவள்!!



Thursday, April 04, 2013

மழை திருடும் குழந்தமை: w/photos...


இது ஓர் அழகிய மழைக்காலம். எப்பொழுதும் மழையென்றாலே எனக்கு அலாதிப் பிரியம். அது எனது குழந்தமையை விடாது உசிப்பு எழுப்பி மீண்டும் துளிர்க்க வைத்து விடும் ஒரு கார்காலச் சங்கிலி. இங்கு நேற்றும் இன்றும் விடாது மழை பெய்து கொண்டிருக்கிறது.

இந்த மழை ரசிப்புத் தன்மையை உளத்திலிருந்து பிரித்தெடுக்க ஒரு வயதிற்கு ஒரு சூழல் என காலம் தவாறது பல வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கொடுத்து, வயதானவர்களின் அனுபவத்தில் ஒரு கிலியையையும் சேர்த்தே செருகி வைத்து விடச் செய்யும். அது சாலையோரத்து வியாபாரியில் தொடங்கி, லாரி ஓட்டும் ஓட்டுநரைத் தொட்டு, பேருந்திற்கு பரபரப்புடன் காத்திருக்கும் அத்துனை பேரையும் வஞ்சகமில்லாமல் நனைத்தெடுத்து அவர்களின் முகத்தில் ஒரு சேர இறந்த போன குழந்தமையை கன நேரம் மறக்கடித்து துள்ளலானா முக மலர்ச்சியையும், அழுத்தி நமத்துப்போன வயோதிக முக வாட்டங்களையும் ஒரு சேர வெளிக் கொணர எத்தனிக்கும் இந்த மழை.

எனக்கும் அது போன்ற ஒரு கிலியை என் மனதினுள் விதைத்து என் குழந்தமையை திருடிச் செல்ல தலைப்பட்டது. சிறு வயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் நான் கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை நிரூபிக்கும் விதமாக கூரையை பொத்துக் கொண்டு ஒரு சில இடங்களில் ஒழுகி காமித்தது. வீட்டில் பின்புறமாக அடுக்களையை ஒட்டி ஒரு கதவு. நெட்டித் திறந்தால் வெட்ட வெளிக்கு எடுத்துச் செல்ல அத்தனை அம்சக் காட்சிகளையும் உள்ளடக்கியவாறு அமைந்திருக்கும் ஒரு மந்திரக் கதவது.

தாழ்வாரத்தை உடைத்துக் கொண்டு அத்தனை மழை நீரும் உன் அடுக்களைக்குள் கொண்டு வந்து கொட்டுகிறேன் பார் என்று விடாது கொட்டித் தீர்க்கும். பாட்டி அந்த மழையை நைய்ய புடைத்து திட்டியவாரே கிடைக்கும் பாத்திரங்களைக் கொண்டு இரைத்து கொட்டுவாள். பின்பு அப்பா சிறுதொழில் செய்து வந்ததால் வாடிக்கையாளர்களின் வந்து போதலும் பாதிக்கப்பட்டது. இவைகளைப் போன்றே பல சில முகங்களை காட்டி குழந்தமை திருடல் தொடர்ந்து கொண்டே வந்தது. இருந்தாலும் நான் விட்டுக் கொடுப்பதாய் இல்லை. இது ஓர் இயற்கையின் திட்டமிடல். நம்மை அதன் முன்னால் மண்டியிடச் செய்யும் அணுகூலம். அந்த சூத்திரத்தை வென்றெடுப்பவனுக்கே இந்த மொத்த பூமியின் அத்துனை அழகையும் ஒரு சேர கையளித்து அவனை தன்னுடன் ஆரத் தழுவி தன்னுள் கரைத்துக் கொள்கிறது.

அதான் நீட்சியாக இன்று பல நாட்களாக எண்ணத்தில் வைந்திருந்த நீர்க்குமிழ் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. இருப்பினும் குழந்தமைத் திருடல் விடுவதாய் இல்லை. எனது குடையைத் தாண்டி மழை சில் சில்லென்று என் முதுகையும், புகைப்படக் கருவியின் லென்ஸை தொட்டு என் வயோதிக வாடலை படரச் செய்ய எத்தனித்தது. புறம் தள்ளி கிடைத்ததை சுருட்டிக் கொண்டு வந்து விட்டேன். இதோ உங்களுடன் ஒரு சில மழைக்காட்சிகள்.

மழையும் நானும் என்று எழுத வேண்டுமானால் என்னால் குறைந்தது இருநூறு பக்கங்கள் எழுத முடியும் என்றே எண்ணுகிறேன். எப்பத்தானோ! :)

பி.கு: மேலும் ஓய்ந்து போன ஒரு மழை பற்றிய நினைவோடை வாசிக்க - பூவன் கடவுளாகிப் போனான்:காட்டாறு
****************************
********************

1) ஒரு தென்மேற்கு பருவ மழை காலத்தின் போது தொப்பலாக நனைந்து போன கரம்பக்குடி வீதியும், மரங்களும் அந்த ஓட்டு வீடும்.


2) மஞ்சள் வெயிலுனூடாக ஒரு அம்ம்மெரிக்கா மாலை மழை நேரம்.

 

3) இலைகளுக்கு வலிக்காமல் மெல்ல பட்டுப்பரவி உருண்டு திரண்டு...


 


4) இன்றைய மழையில் துளித் துளியாய் முகிழ்ந்து, வெடித்து குடைக்குள் எனையும் காட்டியவாறே...

Thursday, February 28, 2013

வாழ்வும் வண்ணங்களும்! Photos




கனவு நினைவுருவாக்கம்
கொள்கையில்
வாழ்வும் முதுமையும்
மிகுதிகளாக...







பரந்த வாழ்வு
பாடகசாலையில்
தூரிகைகளைக்
கொண்டு
வண்ண
திட்டமிடுகையில்
அதனதன்வழியில்
அனைத்தும்
தன்னையே
தீட்டிக்கொண்டது!


Saturday, September 22, 2012

கூடங்குளம் - ஒரு சிலந்தியின் செய்தி: With Photos!

நம்மைச் சுற்றியும் எப்பொழுதும் எங்கேயும் விந்தையான விசயங்கள் பின்னிப் பிணைந்தே கிடக்கிறது. அது போன்ற நிகழ்வுகள் யாவும் பெரிய இயக்கங்களாக நம் முன்னால் விரிந்து காட்சி தர வேண்டுமென்று எதிர்பார்ப்பது நுட்பங்களை அவதானிக்க தவறிய சிறு மூளை செயல்பாட்டில் மரத்தன்மை ஊறிப் போனதே காரணம் என்பதனை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள இன்று எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது.

அது ஒரு சிறு நடை. வீட்டின் முன் புறமாக நடந்து இடது பக்கமுள்ள சுவற்றினையொட்டி நின்று மரத்தின் வேர்களை பார்த்து கொண்டிருப்பதெனக்கு பிடிக்கும். அப்படியான ஒரு பயணத்தில் என் கண் முன்னால் கையொப்பம் சிலந்தி (Signature Spider) ஒன்று நெடுக்காக ஓடிய கேபிளுக்கும் அருகாமையே இருந்த புதருக்குமாக ஒரு வலையை தனக்கேயுரிய சிறப்பானதொரு வடிவமைப்பில் பின்னிப் பரப்பி இருந்தது.



கவனிக்காது அதனைப் பிளந்து கொண்டு நடக்க இருந்தவன் சற்றே தமாதித்து கண்களின் குவியத்தை நெருக்கி கொண்டுவர மரத்துப் போன புலன் விலகி, அதன் பிரமாண்டம் கண்ணில் சிக்கிக்கொண்டது. அங்கயே நின்று கவனித்து கொண்டிருக்கையில் அதனைப் பற்றிய விரிவான கட்டுரையொன்று என் மன 70mmல் விரிய ஆரம்பித்தது. திரும்ப நகர்ந்தவன், அதிர்ந்து கையொப்ப சிலந்தின் தவத்தை எனது மனச் சிந்தனை சப்தம் கலைத்து விடாமலிருக்க மிக மெதுவாக எனது எண்ணத்தை உள்ளே வைத்து வெடித்துக் கொண்டுடே நகர்ந்து மீண்டும் புகைப்படக் கருவியுடன் சிலந்தி வீட்டின் முன் வந்து நின்று கொண்டேன்.

இப்பொழுது காற்றின் விசை எங்கள் இருவரின் நோக்கத்தையுமே கேள்விக்குறியாக்கியிருந்தது. கையொப்பச் சிலந்தி ஊஞ்சலில் இறுகப்பற்றிக் கொண்டு அலறி அனுபவித்துக் கொண்டே முன்னும் பின்னுமாக சென்று வரும் ஒரு சிறுமியைப் போல, தன் வலையின் வலிமையை கவனித்துக் கொண்டே ஆடிக்கொண்டிருந்தது. நானோ எனது புகைப்படக் கருவியின் அத்தனை குப்பிகளையும் திருகி கிடைக்கும் வெளிச்சத்திற்கேற்ப சிலந்தியி்ன் தெளிவான படத்தை கொண்டு வந்திருக்கும் பொழுது முன்னும் பின்னுமாக நகர்ந்து சோதனை செய்து கொண்டிருந்தது, காற்று.



அதற்கும் சற்றே சளைத்தவன் நானில்லை என்று மேகமும் அவ்வப்பொழுது சூரியானரை மறைத்தும், வெளிக்காட்டியுமென அடுத்த ரோதனையை நிகழ்த்திக் கொண்டிருந்தது. எனக்கும் அந்த சிலந்திக்குமான இடைவெளி ஒன்றரை அடிதான் இருந்திருக்க முடியும். இடையில் கொசுக்கள் வேறு என்னிடம் அளவற்ற சாப்பாடு கேட்டுக் கொண்டிருந்தது. பகிர்ந்து கொள்வது கருணை மிக்கது என்று கேள்விப்பட்டிந்ததால் சரி சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று அரை டவுசர் போட்டு விட்டுவிட்டேன்.

இத்தனைக்குமிடையே அந்த சிலந்தி ஒரு அற்புதமான விளையாட்டை நிகழ்த்தி காண்பித்தது. இத்தனை போராட்டத்தையும் ”நீ சந்திப்பது ஒன்றுமல்ல” என்று கட்டியம் கூறி நின்றதாக அமைந்ததால்தான் இந்த கட்டுரையே உங்களுக்கு.

அப்படியாக காற்று வீசியதால் ஒரு இலையொன்று அதன் வலையின் மீது சிக்கி தொங்க ஆரம்பித்தது. அதனைக் கவனித்த சிலந்தி உடனே இரண்டே ஸ்விங்கில் அதனிடம் சென்று ஒவ்வொரு இழையாக அறுக்க ஆரம்பித்தது; மேலும் கீழுமாக நகர்ந்து. தொடர்ந்து நானும் எனது புகைப்பட செட்டப்பை மாற்றி மாற்றி முடிந்தளவிற்கு பதிந்து கொண்டேன். முற்றுமாக அதனை எடுத்து பொடீர் என்று கீழே போட்டுவிட்டுத்தான் மறுவேலை செய்தது.


அதன் உடனடி நடவடிக்கையை கவனித்தவன் மனதில் ஓடியது வீட்டில் சிறு சிறு ஓட்டை உடைசல்கள் ஏற்படும் பொழுதெல்லாம் அலட்சியம் காட்டி மொத்தமாக செலவு செய்து சரி செய்து கொள்ளும் மனப் போக்கில் இருக்கும் எனக்கு இந்த சிலந்தியின் உடனடி இயக்கம் எதனையோ சொல்லிக் கொண்டிருப்பதாகப்பட்டது. உடனே மனம் திருந்திய மணவாடு ஆகிவிட்டேன் என்று புரிந்து கொண்டிருக்க மாட்டீர்கள். படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எனக்கொள்க!





இலையை தனது தேவையான இழைகளை அகற்றி அதன் கனம் மொத்தமும் தனது வீட்டை சிதைத்து விடாமலிருக்க நடத்திய அதிரடி நடவடிக்கையில் வெற்றியடைந்த சிலந்தி - புகைப்படத்தின் வாயிலாக...







இந்த அவதானிப்பின் நீதி- வரும் முன் காப்போம். கூடங்குளம் மக்களுக்கு வந்திருக்கிற இந்த விழிப்புணர்வு ஃபுக்கிஷிமா அணு உலை விபத்திற்கு பின்புதானே என்றும், ஒப்பந்தம் போட்டு அடிக்கல்லும் நட்டு இந்தனை கோடிகளை அரசியல் சாணக்கியர்கள் பிரித்துக் கொண்டது போக மிச்சத்தை அங்கே கட்டடம் எழுப்பி 24/7 கரண்ட் வாங்க, நாளை அந்த உணு உலைக்கு ஏதோ நிகழ்ந்தாலோ அல்லது எப்படி அந்த அணு உலை பயன்பாடு நாற்பது வருடங்களுக்குள் முடிந்து அதற்கு பின்னான அணுக் கழிவுகளை 10 ஆயிரம் வருடங்கள் வைத்து பாதுக்காப்பதைப் பற்றியோ கவலை இல்லை என்று கூறுபவர்களுக்கும், ஒப்பந்தம் போட்டு பணம் செலவு செய்தாகிவிட்டது வரும் காலத்தில் மூன்று மாவட்டங்களை பலி கொடுத்தாலும் தகும் என்று சகித்துக் கொள்ள தயாராக உள்ளவர்களுக்கும் இந்த சிலந்தி ஏதோ சொல்ல வருகிறது என்றே தோன்றவும் செய்கிறது.

மேலும் அணு உலை சார்ந்த பழைய கஞ்சி குடிக்க-


1) ஜப்பான் அணு உலைக்குள் உலகத்திற்கான செய்தி: Nuclear Reactor!!

2) கூடன்குளமும் அணுக்களின் நண்பர் அப்துல் கலாமும்...

Sunday, April 08, 2012

வசந்த கால ஒளிச் சிதறல்கள்: Lake Photography - 1

ஓர் ஐந்து நிமிட நடை என் வீட்டருகே எனக்கு இத்தனை புதிதான கண்ணாடி படிகங்களலான ஒளிச் சித்திரங்களை நிரந்தரமாக சுருட்டிக் கொள்ள உதவிச் சென்றது.

கற்றதை, பெற்றதை அதன் மூலமாக அறிந்து கொண்டதை பகிர்ந்து கொள்ளவே இந்த மொழியும், அதற்கான எழுத்து குறியீடுகளும் தோன்றி இருக்கக் கூடுமென்ற அடிப்படையிலேயே இங்கே நான் கண்ட ஒளிக் காட்சிகளை பதிந்து வருகிறேன்.

இப்பொழுது இங்கே வசந்த காலம். சூரியனாரின் காத்திரமான ஒளியும் கூட புதுப் பெண்ணாக பளிச்சிட்டு நிற்கும் மரங்களின் பசுமையின் மீது படும்பொழுது அந்த வெளிச்சம் வெட்கி மேலும் அழகூட்டி நிற்கிறது.


மரங்களுக்கும் கண்ணாடி காமிக்கும் முயற்சியில்...


பெரியவன் ஒருவன் அப்படியே நெடுக விழுந்து அழகிற்கு அழகு சேர்த்து, நீந்திச் செல்லும் பறவைகளுக்கு ஒய்வெடுக்கும் சுமைதாங்கியாகிப்போனான் ...



தூரத்தில் தெரியும் மரங்களுக்கு டார்ச் அடிச்சுப் பார்க்கும் சூரியனார். அப்படியே ஆயில் பெயிண்டிங்காக தூரிகை இல்லாமல் வரைந்து காட்டும் வேளையில்...

#1


#2


மேகத்திற்கு பட்டுடுத்தி, தரையிறக்கி கண்ணாடியிலும் பொதித்து...

a)


b)


பளிங்கித் தரையில் சிறிதே தண்ணீர் தெளித்து வெளிச்சத்தின் ஊடாக காணும் பொழுதாக...

c)


d)


e)


இந்த காட்சிகளை மிக அருகிலேயே ஏகாந்தத்தின் உச்சத்தில் அமர்ந்து பருக காத்திருக்கும் ஓர் அமைதிக் குடில்...


Friday, November 11, 2011

நிறங்களணிவகுப்பு : Fall Color's Photography

இயற்கைதான் எத்தனை நிறங்களைத் தன்னைச் சுற்றிலும் எப்பொழுதும் படைத்து, அழித்து செய்து கொண்டே இருக்கிறது. அதன் கற்பனை எப்பொழுதும் வற்றா ஜீவநதி. தொடர்ந்து ஆச்சர்யங்களை உள்ளடக்கி பூமி முழுதுக்குமே பரப்பி வைத்திருக்கிறது. கண்ணுற்று கண்களை அகல விரிப்பத்தற்குத்தான் அதே இயற்கை படைத்த ஜீவராசிகளுக்கு கற்பனை வறட்சி போலும்...

ஒரு மாலை வேளையில் என்னை கிறங்கடித்த ஒளி வெள்ளத்தில் எனைச் சுற்றிலும் மிதந்து கொண்டிருந்த நிறங்களை எனது புகைப்பட லென்ஸின் வழியாக சுருட்டிக் கொள்ள முனைந்ததின் விளைவு நீங்கள் இங்கே கண்ணுருவது.

# 1 - டெலிடப்பீஸ்கள் வாழும் வீட்டைச் சுற்றிலும் - இயற்கையின் அழகு பெரிதா நான் தயாரித்த வீட்டின் நிறத்தின் அழகா...!!



























# 2 - மிக மெதுவாக இரவு பகலென்று மிதமான குளிரும், சரேலென்று ஒரு நாள் காயும் வெயிலும் இலைகளின் நிறங்களை மெருகூட்டிக் கொண்டே வருகிறது...



































# 3 - அவைகளின் அணிவகுப்பு..




























# 4 ... பச்சையத்தை எரித்துக் கொண்டே...



































# 5 - எத்தனைதான் ஜொலிக்கும் சிவப்புக் கம்பளங்களை தரைப்படுகைளாக நாம் விரித்தாலும் இந்த நிறங்களுக்கு இணையாகுமா...




























# 6 ... அணிலொன்று தனது வீட்டை விட்டுவிட்டு தற்காலிக நகர்வு செய்திருப்பதும் ஏதோ நீண்ட நூழிழையில் முடிச்சொன்றை இட்டு சென்றிப்பதாக படுகிறது...




























# 7 - வண்ணங்களை நான் என் தலையில் கொட்டிக் கொள்வதற்கு சற்று முன்பாக :-) ...




# 8 - இன்னும் கீழே இறங்கி ...



கே. ஜே. ஏசுதாசின் இந்த பாடலைக் கேளுங்க... பூமிக்கு எத்தனை நிறமூட்டி பாடி பார்த்திருக்கிறார்னு. அழகான பாடல்...

பூமியென்னும் பெண்ணும்
பொட்டு வைத்துக் கொண்டு
பச்சையாடை கட்டிப்பார்த்தாள்...
கோடைப் பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்...

Related Posts with Thumbnails