Showing posts with label ஜாதி. Show all posts
Showing posts with label ஜாதி. Show all posts

Friday, February 26, 2021

முதல் கோணல் முற்றும் கோணல்! PMK's Election Stunt

 நானும் அந்த ”பாமக சின்னய்யா” சம்பவத்தை பார்த்தேன். என்ன சொல்லுறதுன்னே தெரியல! இப்படி ஒரு (ஜாதிக்) கட்சியை கருத்தரிச்சு, அதை அடை காத்து தன் சமூக மக்களுக்காகவாவது சிறுக ஆசைப்பட்டு பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கலாம். நீங்க என்னதான் அழி ரப்பர் வைச்சு அழிச்சு நாங்க ஜாதிக் கட்சி இல்லன்னு இனிமே நிரூபிக்க நின்னாலும் எடுபடாது. தமிழக தமிழர்களையே காப்பாத்தறேன் அளவிற்கெல்லாம் யோசிச்சு நீங்க இப்படி இறங்கி இருக்க வேண்டாம். 

யாரையோ நம்பி இப்படி இத்தனை ஆபத்தான ஒரு சூறாவளியில சிக்கிச் சின்னாபின்னமாகிட்டீங்களே.

உங்க உழைப்பெல்லாம் இப்படி அவசரப்பட்டு இந்த கால கட்டத்தில அதுவும் தமிழகம் கொந்தளிச்சு போயி கிடக்கிற நேரத்தில போயி, அவிங்களோட சேர்ந்து உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு சோலியை முடிச்சிக்கிட்டீங்க.

சரி போறதுதான் போறேன் கொஞ்சம் டேமேஜ் செஞ்சிப்புட்டு போவோம்னு...

திராவிட நாடு கோரிக்கையை நிறைவேற்றினாங்களா, அதுக்காக எத்தனை பேரு சுடுகாடு போனாங்கன்னு- சம்பந்தா சம்பந்தமில்லாம எந்த கால கட்டத்தில இருந்த விசயத்தை எந்த கால கட்டத்தோட இணைச்சு டேக் டைவர்ஷன் போட்டு கோர்த்து விடப் பார்த்தீங்க.

அண்ணா எந்த காரணங்களுக்காக அதை படமெடுக்க விட்டர், பின்பு சுருட்டி ஓர் ஓரத்தில வைச்சார்னு ஏன் எங்கயும் படிக்கலயா? ஏன் ஒரு புரட்டு வரலாற்றை  தாங்களே வாசித்து அறிந்து கொள்ள விருப்பமில்லாத ஒரு கூட்டத்திற்கு ஊட்ட நிக்கிறீங்க.

நாம வாழற காலம் என்ன பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உயிரைப் பணயம் வைத்து போராடி இயக்கம் வளர்த்த காலமா? என்ன பெரிசா தியாங்களை செஞ்சு இன்றைக்கு இப்படி நாமல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா ஃபைவ் ஸ்டார் விடுதியில பத்திரிக்கை சந்திப்பு நடத்துர அளவிற்கு வளர்ந்திருக்கோம்.

எத்தனை ஆண்டுகள் நமக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் சிறைச்சாலைகளில் தங்களுடைய பொன்னான காலத்தை கழித்திருப்பார்கள். எத்தனை ஹார்ட்கோர் போராட்டங்களை முன்னின்று வழி நடத்தி இருப்பார்கள். நமக்கு ஒரு மூன்று தேர்தலுக்காக உழைத்த உழைப்பு பலன் கொடுக்க வில்லை என்றவுடன் இத்தனை ஆயாசத்துடன் சாணக்கியன் ஆகுகிறேன் என்று சகுனி வேலை செய்ய தயார் ஆகிவிட்டீர்களே நீங்கள். சரியா?

திராவிட நாடேதான் வேண்டுமென்றால் மற்றுமொரு ஈழத்தை இங்கே அவர் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? மாநில சுய ஆட்சிக்கான அழுத்தத்தை கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ள எடுத்த வியூகத்தை, நடக்கவே முடியாத விசயத்திற்காக எத்தனை பேர் சுடுகாடு போனார்கள் என்று கேக்குறீர்கள். எது மாதிரியான தர்க்கமிது? 

அன்று அண்ணா சாதுர்யமாக காய் நகர்த்த வில்லை என்றால் இன்றைக்கு உங்களுக்கு இந்த மேடையே கிடையாது என்பதை உணருங்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கக் கூடாது. நாமதான் முழுந்துறோம்னா கூடவே இரண்டு பேரை சேர்த்து கூட்டிட்டு போவோம்னு நினைக்கக் கூடாது. Come up with some other valid argument, the one you uttered is utter nonsense!

பி.கு: இந்தப் பதிவு 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போது எழுதியது.

Thursday, December 31, 2020

ஜாதியவாதிகளை பகடி செய்வது தகுமா?

படிக்கிற வயசில போராட்டம், அரசியல் தேவையா?

அரசியல் ஒரு சாக்கடை. படிக்கிற வயசில என்னாத்திற்கு கொள்கை, போராட்டம், ஆர்பாட்டம்னு "அதே கண்கள்" ரேஞ்சிற்கு நம்ம அந்நியன் சங்கர் பட அரசியல் டயலாக் மாதிரி, மத்யமர் மாதிரி குழுக்கள்ல ஓடும்.

இதோ கீழே ஒரு மாதிரி-
...கடை வியாபாரம் செய்வதற்கானது, அரசியல் பேசுவதற்கான இடமல்ல என்றார்.
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.
கல்லூரிகளும் கல்வி கற்பதற்காகவே உருவாக்கப் பெற்றவை, அரசியல் பேசுவதற்கோ ஆர்பாட்டம் செய்வதற்கோ அது சட்டப்படியான இடமல்ல.
எனவே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரிக்குள் இருந்து கொண்டு அரசியல் பேசக்கூடாது, அரசியல் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது.
கல்லூரிகள் கற்பதற்கான இடம், அரசியல் செய்வதற்கான இடமல்ல. ஆசிரியர்கள் கற்பிப்பதற்கானவர்கள்.
அரசியலில் கொள்கை ரீதியான எதிர்ப்பு உள்ளதா ? கல்லூரிகளை விட்டு வெளியேறி வந்து நான்றாகப் போராடலாம் என்றேன்.
எனது நண்பருக்கு எனது இந்தப் பதிலில் திருப்தியில்லை.
நண்பர்களே உங்களுக்கு எனது பதில் சரியென்று தோன்றுகிறதா?
●●●●●●●●
அங்கே என்னோட ஒரு கமெண்ட் 👇. அப்படி கேட்டவர் ஒரு முனைவர், பேராசிரியர் என்பது கூடுதல் தகவல்.
அப்போ political science, law படிக்கும் வயசு என்ன? படிக்கும் வயதில் இந்திய constitutional rightsலிருந்து, இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, யார் வந்தா போனான்னு பண்டைய கால வரலாறு என்று அனைத்தும் சொல்லிக்கொடுக்கப்படணும்.
ஓட்டுப் போடுற வயசு என்ன? அவர்களை இன்று அரசியல் படுத்தினாத்தானே படித்த இளைஞர்களை நாளை நம்மால் அடையாளம் காண முடியும். பின்பு ஏன் பெரும் பெரும் பல்கலைக்கழகங்களில் இடது, வலது (ABVP) போன்றவகளை புழங்க விடுகிறார்கள்? நம் வாழ்க்கையில் எதில் அரசியல் குறுக்கிடாமல் இருக்கிறது? எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. ஏதோ அடிச்சி விட்டுட்டு வந்திருக்கீங்க. @@@@@@@@@

ஜாதியக் கருவத்தில் அறியாமையின் உட்சத்தில், அறிவியல் உண்மைக்கு மாறாக, இன்னா ஜாதியில் பிறந்தவருக்கு இசை வரும், பணம் பண்ண வரும், வீரம் வரும், மலம் அள்ள வரும் என்று ஒரு நாகரீமடைந்த சமுகத்தில் சொல்லித் திரிபவர்களை கிண்டல் செய்யும் தொனியில் "நீயா நானாவில்" TRPக்காக செய்வது மனித செயலற்றது என்ற ரேஞ்சிற்கு இரக்கப்படுவது சரியா?
சரியில்லை. ஏன்? ஒரு கிராமத்திலிருந்து முதன் முறையாக விமானத்தில் பயணிக்கும் ஒருவர் தடுமாறுவதோ, அல்லது எஸ்கலேட்டர் ஏறப் பயப்படுவதோ புரிந்து கொள்ளக் கூடியது. நாமே நமக்கு பழக்கமில்லாத குளியலறையில் தண்ணீர் திறந்து விடும் புதிய திறப்பான்களை தடவி முழித்து கொண்டிருப்பதில்லையா, அது போலத்தான். அங்கே நவீன வாழ்வின் பொருட்டு ஒருவருக்கு கிடைக்காத, பொருட்கள் சார்ந்த அறிமுகமின்மை; உடனடியாக திருத்திக் கொள்வோம். அது சூழலின் பொருட்டு அமைவது அதனை கிண்டல் செய்தால், பகடி செய்பவரின் வெளி உலக ஊடலும் அடுத்தவர் பொருட்டு கரிசனமும் அற்ற நிலையை காட்டத்தக்கது.
அதே நேரத்தில் ஜாதிய மனநிலை என்பது திமிரின், மன நோயுற்ற நிலையின் உச்சத்தில் வருவது. அது சக மனிதனை தன்னை விட குறுக்கிப் பார்க்கும் புத்தியை தனக்குள்ளாகவே வளர்த்தெடுத்து போகும் போக்கில் அடுத்தவர்களை அந்த கண்ணோட்டத்தில் வைத்து பார்க்கச் சொல்லுவது. அவர்களுக்குத் தேவை திடுக் விளிப்பே...! அந்த "கர்வக்குமிழியை" சிறிதே நெருடி யோசிக்க வைப்பது. எனவே தவறாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

Monday, April 22, 2019

பொன்பரப்பி கலவரமும் சேப்பியன்ஸ் நூலும்: Sapiens - 5

நெறிமுறையற்ற விளையாட்டுத் தளமே வரலாறு: Sapiens - 5
ஹோமோ சேப்பியன்ஸ் நூல் எனக்கு என்னவோ மலிவு விலையில் பதிப்பிக்கப்பட்டு பள்ளி மேற்படிப்பு படித்த அனைவரும் கட்டாயமாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகமாகப்படுகிறது.
இப்பொழுது நான் அந்த புத்தகத்தின் எட்டாவது அத்தியாயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாகரீகங்களுக்குள்ளும் எப்படி சமூக அடுக்கதிகார முறை கட்டமைக்கப்படுகிறது, அது எதன் பொருட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது, அதன் பயன்பாடு என்ன என்று தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
அந்த பக்கங்கங்களை வாசிக்கும் பொழுது எதற்காக இந்த சமூகம் இப்படி ஏற்றத் தாழ்வுகளுடன் இயங்குகிறது என்ற எளிய கேள்விக்கு பதிலுரைக்கிறது. முதல் கட்ட அறிதலின் பொருட்டு வாசிப்பை நாடுபவர்களுக்கு இது ஒரு முக்கியமான அத்தியாயம்.
வரலாறு தோறும் இந்த ஏற்றத் தாழ்வுகளை ஓரளவிற்கேனும் சமப்படுத்த பல அவதார புருஷர்கள் வர வேண்டியத் தேவைதான் என்ன, எதன் பொருட்டு அவர்கள் தொடர்ந்து பேசி, சண்டை செய்ய வேண்டியுள்ளது என்பது அனைத்தும் நமக்கு விளங்கிவிடும் இந்தப் பக்கங்களை நாம் கடந்துவிடுவதற்குள்.
சமூக அடுக்கு "ஆண்டான் அடிமை" என்ற எளிய கட்டமைப்பில் அதற்குள் பல அடுக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பயன் உயர் அடுக்கில் இருப்பவர்கள் கீழ் அடுக்கில் உள்ளவர்களை சுரண்டி கொழுத்து வாழ்வதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை நிறுவி அதன் பயன்பாட்டினை அறுவடை செய்ய பல கட்டுக்கதைகள் தேவைப்படுகிறது. அதனயொட்டிய புனைக் கதைகள் மனிதர்களின் ஆழ் மனதில் நம்பிக்கை நச்சுக்களாக விதைக்கப்பட்டோ (வர்ணாஷ்ரம), சட்டங்களாக இயற்றியோ (வெள்ளையர்களும், கருப்பினத்தவர்களும் சமமல்ல, ஏழை, பணக்காரர்களின் வாழ்வமைவு ஆசீர்வதிக்கப்பட்டது) காலப்போக்கில் ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
இந்த கட்டமைப்பை விளக்க முற்படும் போது இந்த நூல் மிக தாராளமாக இந்து மதத்தின் பால் பிறந்த சாதிய சமூக அடுக்கு யாரால், எதற்கு உருவாக்கிக் கொள்ளப்பட்டது, அது எவருக்கு பயனளிக்கும் விதத்தில் இன்றும் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை சமகால இந்திய அரசியலமைப்பைக் கொண்டு மிகத் தெளிவாக விளக்க எடுத்து கையாண்டுள்ளார் இந்த நூலின் ஆசிரியர்.
இந்த புத்தகம் உலகம் முழுதிலும் மில்லியன் கணக்கில் விற்பனையாகி இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் சமூக அடுக்கு உருவாக்கத்திற்கு பின்னான அயோக்கியத்தனங்களை, சூழ்ச்சிகளை அப்பட்டமாக அடிக்கோடிட்டு இந்த உலகத்திற்கே புரிய வைக்க இந்துக்களின் சாதியக் கட்டமைப்பை பயன் படுத்திக் கொண்டுள்ளார்.
தீட்டு, தீண்டாமை, தூய்மை, மோலோன், கீழோன் அனைத்தும் ஒருவனை தரம் பிரித்து எவனை எந்தளவிற்கு வளர்ந்து வர இடம் கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்வதற்கும், ஒவ்வொரு முறையும் பின்புலத்தை தோண்டித் துருவி அறிந்து கொள்வதற்கு பதிலாக கூட்டு அடுக்குகளைக் கொண்டு பிரித்து வைத்து விட்டால் பொதுப் புத்தியில் அதற்குண்டான புத்திகளை இவன் உள்ளடக்கியவன் என்ற கற்பிதங்களையும் நம்ப வைத்து அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயங்க வைக்க முடியும் என்பதே இதன் ஏற்பாடு.
இப்பொழுது உதாரணமாக ஒன்று பார்ப்போம். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான். நல்ல திறமையானவன் ஏதோ ஒன்று அவனுடைய இரத்தத்திலோ அல்லது மரபணுவிலோ இருக்கிறது அதனால் தான் கருப்பர்களை விட அதி புத்திசாலிகளாக, பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறியும் அறிஞர்களாக இருக்கிறார்கள் என்ற வாதம்.
இரண்டு, நம்ம ஊரில் ஒரு குறிப்பிட்ட சாதி இனங்களில் பிறந்த குழந்தைகள் இசையிலும், நாட்டியத்திலும் மிக்க திறமை உள்ளவர்களாக இருக்கக் காரணம் இறைவனால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அந்த குலத்தில் பிறப்பதால் தான் என்றொரு வாதம்.
ஆனால், இந்த இரண்டு கதைகளுக்குப் பின்னாலும் மாபெரும் உழைப்புச் சுரண்டலும், சூழ்ச்சியும் புதைந்து கிடக்கிறது என்கிறார் இந்த நூலாசிரியர். பிறக்கும் போது எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் மெருகேற்ற மெருகேற்ற அவைகளை நம்மால் வார்த்தெடுத்துக் கொள்ளும் திறமைகளை உள்ளடக்கியே பிறக்கிறது, ஆனால் அதற்குரிய வசதி, வாய்ப்பு அதற்குண்டான நேரத்தை எப்படி வழங்குவது?
இங்குதான் அந்த சமூக அடுக்கமைவு ஒரு சாரருக்கு எளிய வழியையும், அங்கீகரிப்பையும் கொடுத்து மெருகேற்றிக் கொள்ள, மேல் நிலைக்கு செல்லும் படியாக கட்டமைக்கப்பட்டு பயனளிக்கிறது. பயனளிக்காமல் போகக் கூடிய அந்த போர்வை சாதி'யம் கொண்டு மற்றவர்களிடத்தே கண்டறியப் படுகிறது.
இந்த சாதிய கட்டமைப்பு உடையாமல் கட்டிக் காக்கப்படுவதின் சூட்சுமம் இதுதான். இப்போ சாதி மறுப்பு மணங்கள் பெருகும் போது இந்த அடித்தளம் சுக்கு நூறாக தகர்ந்து விடுமல்லவா? தகர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் தான் ஏனைய சமூக அநீதிகள் அடங்கி இருக்கிறது.
இப்போ புரிகிறதா இந்த நவீன தீண்டாமை உலகில் நீட், கேட் என்ற வடிகட்டல்கள் எதற்கு என்று? அவதாரப் புருஷர்கள் இத்தனை வரலாற்று ரீதியாக சக்தி படைத்த ஒரு சூழ்ச்சிக் கூட்டத்தை வெற்றியடைய வேண்டுமாயின் எத்தனை பெரிய பரந்து பட்ட பொது நோக்கும், கட்டற்ற பரிவும், விசாலமான பார்வையும் கொண்டிருக்க வேண்டும்.
நமக்கு அந்த முழுப் பயன்பாடும் வந்து கிட்டுவதற்கு முன்னதாகவே பல கட்டுக்கதைகளின் மூலமாக அவர்களுடைய பங்களிப்பு முடக்கப்படுகிறது. அந்த அரசியலை நாம் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் பொழுது போராட்டம் மீண்டும் ஒன்றாவது படிக்கி சறுக்கி வந்து நின்றிருக்கும்.
வரலாற்று புத்தகங்களை எந்த கரையிலிருந்து நின்று கொண்டு மீள் வாசிப்பு செய்கிறோமென்பதும், இது போன்ற மானுடவியல் சார்ந்த புத்தகங்களை வயதோடு வாசித்து அவரவர்கள் நிலையில் தெளிவடைதும் முக்கியமாகிறது.
ஏனெனில் வரலாற்றில் எப்படி விளையாண்டோம் என்பது ஒரு பொருட்டே அல்ல! பிழைத்து அடுத்த கட்டத்திற்கு நமது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்வுச் சூழலைக் கொடுத்துச் செல்கிறோமா என்பதே படிமலர்ச்சியில் நம்மை படியெடுக்க இந்த இயற்கை வைத்திருக்கும் ஒரே ரூல்ஸ்!

Monday, February 25, 2019

முதல் கோணல் முற்றும் கோணல்: Sinking Ship PMK

நானும் அந்த ”பாமக சின்னய்யா” சம்பவத்தை பார்த்தேன் 🤓. என்ன சொல்லுறதுன்னே
தெரியல! இப்படி ஒரு (சாதிக்) கட்சியை கருத்தரிச்சு, அதை அடை காத்து தன் சமூக மக்களுக்காகவாவது சிறுக ஆசைப்பட்டு பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கலாம். நீங்க என்னதான் அழி ரப்பர் வைச்சு அழிச்சு நாங்க சாதிக் கட்சி இல்லன்னு இனிமே நிரூபிக்க நின்னாலும் எடுபடாது. தமிழக தமிழர்களையே காப்பாத்தறேன் அளவிற்கெல்லாம் யோசிச்சு நீங்க இப்படி இறங்கி இருக்க வேண்டாம்.
யாரையோ நம்பி இப்படி இத்தனை ஆபத்தான ஒரு சூறாவளியில சிக்கிச் சின்னாபின்னமாகிட்டீங்களே.
உங்க உழைப்பெல்லாம் இப்படி அவசரப்பட்டு இந்த கால கட்டத்தில அதுவும் தமிழகம் கொந்தளிச்சு போயி கிடக்கிற நேரத்தில போயி, அவிங்களோட சேர்ந்து உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு சோலியை முடிச்சிக்கிட்டீங்க.
சரி போறதுதான் போறேன் கொஞ்சம் டேமேஜ் செஞ்சிப்புட்டு போவோம்னு...
திராவிட நாடு கோரிக்கையை நிறைவேற்றினாங்களா, அதுக்காக எத்தனை பேரு சுடுகாடு போனாங்கன்னு- சம்பந்தா சம்பந்தமில்லாம எந்த கால கட்டத்தில இருந்த விசயத்தை எந்த கால கட்டத்தோட இணைச்சு டேக் டைவர்ஷன் போட்டு கோர்த்து விடப் பார்த்தீங்க 🙄.
அண்ணா எந்த காரணங்களுக்காக அதை சுருட்டி ஓர் ஓரத்தில வைச்சார்னு ஏன் எங்கயும் படிக்கலயா? ஏன் ஒரு புரட்டு வரலாற்றை தாங்களே வாசித்து அறிந்து கொள்ள விருப்பமில்லாத ஒரு கூட்டத்திற்கு ஊட்ட நிக்கிறீங்க.
நாம வாழற காலம் என்ன பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உயிரைப் பணயம் வைத்து போராடி இயக்கம் வளர்த்த காலமா? என்ன பெரிசா தியாங்களை செஞ்சு இன்றைக்கு இப்படி நாமல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா ஃபைவ் ஸ்டார் விடுதியில பத்திரிக்கை சந்திப்பு நடத்துர அளவிற்கு வளர்ந்திருக்கோம்.
எத்தனை ஆண்டுகள் நமக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் சிறைச்சாலைகளில் தங்களுடைய பொன்னான காலத்தை கழித்திருப்பார்கள். எத்தனை ஹார்ட்கோர் போராட்டங்களை முன்னின்று வழி நடத்தி இருப்பார்கள். நமக்கு ஒரு மூன்று தேர்தலுக்காக உழைத்த உழைப்பு பலன் கொடுக்க வில்லை என்றவுடன் இத்தனை ஆயாசத்துடன் சாணக்கியன் ஆகுகிறேன் என்று சகுனி வேலை செய்ய தயார் ஆகிவிட்டீர்களே நீங்கள். சரியா?
திராவிட நாடேதான் வேண்டுமென்றால் மற்றுமொரு ஈழத்தை இங்கே அவர் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? மாநில சுய ஆட்சிக்கான அழுத்தத்தை கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ள எடுத்த வியூகத்தை, நடக்கவே முடியாத விசயத்திற்காக எத்தனை பேர் சுடுகாடு போனார்கள் என்று கேக்குறீர்கள். எது மாதிரியான தர்க்கமிது?
அன்று அண்ணா சாதுர்யமாக காய் நகர்த்த வில்லை என்றால் இன்றைக்கு உங்களுக்கு இந்த மேடையே கிடையாது என்பதை உணருங்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கக் கூடாது. நாமதான் முழுந்துறோம்னா கூடவே இரண்டு பேரை சேர்த்து கூட்டிட்டு போவோம்னு நினைக்கக் கூடாது. Come up with some other valid argument, the one you uttered is utter nonsense!

Tuesday, January 19, 2016

நட்சத்திரம் பயணிக்கச் சென்ற ரோகித் வெமுலா: Casteism!

கரையான் புற்றிலிருந்து கிளம்பும் ஈசல்கள் போல இந்த சமூகத்தில் தான் எத்தனை கோடி தலைகள் இந்த பூமியின் மேலோட்டில் தினமும் சிறகெடுத்து வெளிக்கிளம்பி, போராடி உணவு சேகரித்து, பொருளீட்டி, இனப்பெருக்கம் செய்து கிடைக்கும் அற்ப ஆயுளுக்குள் தங்களுடைய தடயத்தை விட்டுச் செல்ல வித விதமான முறையில் தங்கள் பாதையில் வைக்கப்படும் சவால்களை சந்தித்து மூன்றுக்கு ஆறில் கனிமமாக தங்களை மாற்றிக் கொள்ளும் இடைவெளியில் எதனை வென்றெடுக்க போராடுகின்றது?

ரோகித் வெமுலா வகை மன வெற்றிடங்களை உருவாக்குவதில் தான் இந்த ஈசல்களுக்கு எத்தனை கொண்டாட்டம். இங்கே ஒரு மனதின் நேர்மையான கேள்விகளுக்கு, தன்னுடைய இருப்பின் அவசியமான தேடல்களுக்கு பொய்மையான, வெற்றுத் தனமான போலி அவசியங்களின் பொருட்டு தொடர்ந்து ரோகித்துகளின் சிறகுகள் சிதைக்கப்பட்டு அவர்கள் மலர்ந்து மணம் பறப்புவதற்கு முன்னாலேயே கசக்கி, சமூக கூட்டு கொலை செய்து எதனையோ தொடர்ந்து நீட்டித்து கொள்ளும் அவசியம் இந்த சமூகத்திற்கு இருந்து போகிறது.

அவர்களின் கடின உழைப்பும், எதிர் நீச்சலின் மூலமாக தாங்களே கற்று கொண்ட மொழி, அறிவுச் சுடரின் பேனா முனையில் தங்களையே உள்ளே மையாக நிரப்பி, வைத்திருந்த அத்தனை மனக் குமுறல்களையும் ஓரு ஏ4 சைஸ் தாளில் நிரப்பி வைத்து விட்டு நட்சத்திரங்களை தேடிச் செல்ல வைத்து விடுகிறது இந்த நாற்றமெடுத்த சமூகம்.

இந்த ஈசல்களின் குறுகிய, சாதீயம் என்ற புற்றால் இந்த அறிவியலுக்கே சிறிதும் சம்பந்தமில்லாத கனன்று கொண்டிருக்கும் அந்த ’தீ’ மரபணுக்குள் புகுந்து அடுத்த தலைமுறைக்கும் கடத்தி விட்டுச் செல்லும் அத்தனை சாத்தியங்களையும் கொண்டதாக இந்த தோல் சார் இன வெறுப்பு கையிறக்கம் செய்யதக்கதாக அமையப் பெற்று ஒரு சமூகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் சமூக கூட்டுக் கொலைகளை நிகழ்த்திக் கொண்டே ஒன்றுமே அதில் தங்களுக்கு பங்கு இல்லை என்ற வாக்கிலும் கடந்து போயி கொண்டே இருக்கிறது. இதற்கு அடிப்படையான துர் நாற்றத்தின் மூல குழிதான் எங்கே இருக்கிறது? மருத்துவத்தில் ஒரு புற்றுக் கட்டியை அகற்றி கொள்ள அதற்கான வழிகள் இருக்கிறது. ஆனால், உணர்வுகளில் சாக்கடைத் தண்ணீரை கலந்தது போல இருக்கும் இந்த வெறுப்பை எப்படி டைலயசிஸ் செய்வது கொள்வது? அதனை ஓன் ஆன் ஓன் செய்து கொள்வது சாத்தியமா?

இல்லை, இல்லை என்று கூறி கொண்டே மண்டையின் மறு பக்கம் கோரப் பற்கள் துருத்த, ஓநாயின் எச்சிலை ஒழுக விட்டபடி அடுத்து எங்கே கூட்டு சமூக கொலையை நிகழ்த்த முடியுமென்று தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறோம்.

சமூக ஆற்றின் ஒவ்வொரு துளைகளிலும், இடுக்குகளிலும் இந்த சாக்கடை நீர் கலந்தே இருக்கிறது. கடவுளர்களின் உருவத்தில், அவர்களுக்கு செய்யும் பூஜை அதனையொட்டி செய்யப் படும் சடங்களில், அதுக்கென அழைக்கப்படும் ஈசல் கூட்டங்களில், தோலின் நிறத்தில், அமற வைக்கப்படுமிடத்தில் , திருமண நிச்சயத்தில், பெயர் சூட்டலில், பந்தலில், பேருந்தில், கிணற்றடியில், கல்விச் சாலையில் இது போன்று எத்தனை எத்தனையோ தினசரி வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பிளவுகளை தொடர்ந்து அறிந்தோ அல்லது மூளை என்ற ஒரு வஸ்து தங்களுக்கு இருப்பதே அறியாமலேயோ செய்து கொண்டு தான் வருகிறது.

கிஞ்சித்தும் சக மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஒரு சமூகத்திற்கான கேடு வரலாற்று புத்தகங்களில் நமக்கு பாடமாக கற்றுக் கொடுக்க காத்திருக்கிறது. ரோகித் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டிய “எனது உடலுக்கும் ஆன்மாவிற்குமான தூரம் அதிகரித்து கொண்டே இருக்கிறது” இந்த ஒரு விசயமே அந்த இளைஞனின் மன அழத்தை, அறிவை, பக்குவத்தை, தொலை நோக்கு பார்வையை எடுத்து பறைசாற்றக் கூடியது.

அவன் எவர்களை எதிர்த்து போராடினான்? எதற்காக போராடினான்? தான் வாழும் ஒரு சமூகத்திற்குள்ளயே ‘தன்னுடைய பிறப்பே ஒரு தேவையற்ற விபத்து என்றும் சரியாக அங்கீகரிக்கப்படாத தன்னுடைய குழந்தமை” என்று வெம்பி தொடர் இன்னல்களை அவன் வழியில் பொதித்து மனதை வெற்றிடமாக, நம்பிக்கையிழப்பை உருவாக்கி கொடுத்தது எது? நமது அன்றாட வாழ்க்கையில் நட்சத்திரங்களை பற்றியும், இயற்கையின் இயல்பியலையும் நம்மில் எத்தனை பேர் தொடர்ந்து ஒன்றுடன் மற்றொன்றிற்கு தொடர்பு படுத்தி வாழத் தலைப்படுகிறோம்?

தன்னுடைய தாய் ஒரு சாதாரண தையல் மிஷினைக் கொண்டு அத்தனை தூரம் அவனை கொண்டு வந்ததிற்கு பலனாக அவன் தன்னுடைய இருப்பை அத்தனை பெரிய குன்றில் ஏறி அமர்த்திக் கொள்ள செய்த முயற்சி சரிதானே. அவன் நட்சத்திரங்களையும் இயற்கையின் மான்பையும் போற்றி வாழும் இடத்திற்கு தன்னை நகர்த்திக் கொண்டது அவன் பெற்ற கல்வியும், அந்த இடத்திற்கு தன்னை நகர்த்தி வைத்துக் கொள்ள உதவிய அந்த உண்மையான புத்தகங்களும், அது போன்ற தொலை நோக்கு கொண்ட நல்ல மனிதர்களுமே காரணமாக இருக்க முடியும். சரியான பாதையில் தானே பயணித்து கொண்டிருந்திருக்கிறான்?

ஆனால் இந்த ஈசல்களின் பார்வையில் அதுவே அவனை எதிர் முனையில் நிறுத்தி விட்டது. இன்று அவன் “நான் அந்த நட்சத்திரங்களில் வேறு மாதிரியான வாழ்க்கை ஏதாவது இருக்கிறதா” என்று தேடித் செல்கிறேன் என்று தேடிச் செல்ல வைத்து விட்டது. இது போன்ற எத்தனையோ கடிதங்களை நாமும் வாசித்து கடந்து சென்று கொண்டே இருக்கிறோம்.

அவன் வயதை ஒத்தவர்களும், கல்விச் சாலைகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களும் சமூக அக்கறையும், அறிவும் கொண்டு அரசியல் நிலைப்பாடுகளை இப்பொழுது செதுக்கி கொள்ள வில்லை என்றால் பின்பு எந்த வயதில் அவர்கள் தங்களுக்கான மன வெளிப்பாடுகளை செதிக்கி கொள்ள முடியும். அரசியல் வாதங்களும், நிலைப்பாடுகளும் தானே நம்முடைய வாழ்க்கையையே செதுக்குகிறது. யார் எங்கே இருக்க வேண்டும், எதனை வணங்க வேண்டும், எந்த வழிபாட்டு தளத்துக்குள் யார் நுழைய வேண்டும் நுழையக் கூடாது என்பது வரைக்குமாக அது நீட்டுகிறது. இந்த வயதில் என்ன அரசியல் வேண்டிக் கிடக்கிறது என்று கேட்பவர்களை நோக்கி இந்த கேள்வியை வைக்கிறேன்.

இந்த சமூகத்திற்கு எந்த விதமான கடவுளர்களும், பிழைப்பு வாத நீதிமான்களும், கட்சி தலைவர்களும், மத குருமார்களும், கதை புக் எழுத்தார்களும் உணர்வூட்டமோ, மனசாட்சியோ கொடுத்து விட முடியாது என்பது ஊர்ஜிதமாகி வருகிறது. கூட்டமாக மீண்டு வரவே முடியாத ஒரு பெரும் சாம்பல் பள்ளத் தாக்கை நோக்கி மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.

தான் வணங்கும் ஒரு கடவுளின் அடையாளத்தில் ஒருவன் தன்னுடைய ஆளுமையை, சாதியை காட்டிக் கொள்ள முடியுமெனில் இந்த ஈசல் சமூகம் எப்படி தன்னிரைவோடு தனக்கென அக மன ஆராய்ச்சி செய்து கொள்ளும். வெளியுலகில் இல்லை நரகமும், சொர்க்கமும் அடித்து பிடித்துக் கொண்டு துண்டு போட்டு வைக்க, இங்கயே இப்பொழுதே அதனை உருவாக்கியும், அழித்து வரும் நம் கைகளிலேயே அது உள்ளது.

ஏன் மனிதத்தை நம்பிய ரோகித் போன்றவர்களுக்கு பேய், பிசாசுகளின் பேரிலும் கடவுளர்கள் பேரிலும் நம்பிக்கை இல்லையென்பது, இது போன்ற அகால மரணத்தை தழுவியர்கள் கூட இருண்மையில் அதற்கு காரணமானவர்களை ஒன்றுமே செய்து விட முடியவில்லை என்பதனை தனது நிகழ்கால வலியின் ஊடாக எழுப்பி கொண்ட கேள்விகளின் விளைவாகத்தன் இருக்கக் கூடும்.

எது எப்படியாகினும் சானம் தொடர்ந்து ஒரு சமூகத்தை மென்மேலும் மூடிக் கொண்டே வருகிறது. இங்கே தாராசு தட்டுகளில் இருக்க கூடிய நியாய, அநியாங்களின் எடை சமமானதாக இல்லை. எடுத்து கொண்டிருப்பவர்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கொடுத்து கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இங்கே விட்டு கொடுப்பதும், அனுசரித்து போவதும் பலவீனமாக பார்க்கப் படுகிறது.

நட்சத்திரங்களையும், பிரபஞ்ச துகள்களையும் தினசரி வாழ்வில் இணைக்கத் தெரிந்தவன் இங்கு வாழ தகுதியற்றவனாகிறான். சிறுமைக்கு பிறந்தவனாகிறான். தன்னை முனைவர் அளவிற்கும் அறிவியலை மூச்சாக சுவாசிக்க தெரிந்தவன் ‘இன்னொரு உலகிற்கு தனது ஆவியை அனுப்பி பயணம் செய்ய நிர்பந்தப்படுத்தப் படுகிறான்.”

ஒரே கிணற்றுக்குள் கிடந்து உழண்டு கொண்டிருக்கும் தலைபிரட்டைகளில் எது உயர்வு, எது தாழ்வு! இது ஒரு சமூக அவலம்!! வெட்கித் தலை குனிய வேண்டிய விசயம். யாருக்கு என்ன, துடைத்து போட்டு விட்டு நகர்ந்து கொண்டே இருப்போம். எத்தனையோ பார்த்து விட்டோம் இதனையும் பார்க்கத் தெரியாதா!

P.S: இந்த கடிதத்தை வாசிக்கும் பொழுது என்ன மாதிரியான உணர்வுகளை உங்கள் மனது கடந்து செல்கிறது... முதலும் கடைசியுமான கடிதம்


Tuesday, September 13, 2011

இயற்கையின் தேர்ந்தெடுப்பு சாதீக்கலவரம்...

பரமக்குடி, எனது ஊரிலிருந்து இரண்டு மூன்று மணி நேர பேருந்து பயணிப்பில் போய் சேர்ந்து விடக்கூடிய தூரத்தில் அமைந்திருக்கிறது. அது ஒரு வேலிக்கருவை மரங்கள் நிரம்பிய, தண்ணீரற்ற ஒரு வறண்ட பாலையூர்.

அதனை ஒற்றி அமைந்ததே எனது ஊரும். எனவே அந்த ஊருக்கும் எனது ஊருக்கும் பெரியளவில் சிந்தனை வேறுபாடுகளோ மனிதர்களின் ஓநாய்த்தனமான மனத் திண்மைக்கு வித்தியாசமிருந்து விட முடியாது. இந்த புகைப்படத்தை நான் காண நேர்ந்தது. இரண்டு மூன்று நாட்களாக இந்த சாதீக் கலவரம் தொடர்பாக எங்கும் பரப்பரப்பு ஒத்திக் கொண்டு அனலாக தகிக்கிறது.

ஒவ்வொரு முறையும் இந்த காட்டுமிராண்டித் தனத்தின் வக்கிரம் எண்ணிடலங்கா வழிகளில் முகம் தரித்தே காண்பித்து விட்டு ஓடி ஒளிந்து கொள்கிறது, மனித ஓநாய்களின் போலிப் புன்னகைகளுக்கு பின்னே. மீண்டும் சரியான நேரத்தில் தன் கோரப்பற்களை துருத்திக் காட்டுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இதனை பார்த்து வளர்ந்தவர்களுக்கு இதுவு’ம் ஒரு மற்றுமொரு தினசரிச் செய்தியாகிப் போய் விடுகிறது.

ஆங்கிலேயன் இண்டு இடுக்களிலெல்லாம் வெறும் பத்தாயிரம் பேருக்கும் குறைவாக இங்கு கொண்டு வந்து இத்தனை பெரிய பரப்பை அவனால் கட்டி ஆளமுடிந்ததெனில் அதற்கு காரணம் இந்த காட்டுமிராண்டித்தனத்தின் ரேகைகளே காரணமாக இருந்தது 300 வருடங்களுக்கு முன்பும். அவர்களும் வந்தார்கள், அடிமைகளான வாழ்வை நாமும் சுவைத்தோம்.

ஆனால், அதிலிருந்து இந்த தேசமென அழைத்துக் கொள்ளும் கூட்டு தேச இந்தியா ஏதாவது பாடம் கற்றுக் கொண்டாதா? அது போன்ற சாதீய வேறுபாடுகளை களைவதற்கு எத்தனை வலிமையான சட்டங்களை பாய்ச்சி மாக்களை மக்களாக்கி வைத்திருக்கிறது? காலம் நகர்ந்திருக்கிறதே ஒழிய, ஏதாவது மனித மனங்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா? அதனையொட்டிய கற்றறிந்தவர்களின் உழைப்பெங்கே? ஏன் அந்த லைம் லைட்டில் அமர்ந்திருக்கும் பெருசுகள் இதனைப் பற்றி அலட்டிக் கொள்வதே இல்லை?

இப்படி குழுமங்களாக வாழ்வது ஆஃப்ரிகா சமவெளிகளில் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக நம்மை நரி அடித்து தின்றுவிடாமல் இருக்கவும், பிற காட்டுமிராண்டி கூட்டமும் தான் உண்ணும் உணவையும், நிலத்தையும் அபகரித்து கொள்வதினிலிருந்து தற்காத்து வைத்து கொள்ள தேவைப்பட்டிருக்கலாம். காட்டுமிராண்டித் தோல் இருக்கின்னு உணர நினைத்தால் இங்கே அழுத்தி படிச்சிப்போம் மேலே.

ஆனால் இன்றுதான் நாம் நவீன காட்டுமிராண்டிகளாகிவிட்டோமே, நமக்கென்று அழைத்துக் கொள்ள ஒரு நாடு, அரசாங்கம், சட்டம் என்று இருக்கிறது. ஒருவன் வாய்க்குள் போட்ட சோற்றை மற்றொருவன் பிடிங்கி தின்று விட முடியாது, பாதுகாப்பு இருக்கிறது. அதனைத் தவிர்த்து எதனை நாம் தற்காத்து வைத்து அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்ல இப்படி 500 மீட்டர் இடைவெளிக்குள் இருக்கும் உனது வீட்டில் இருப்பவனும் அவன் வீட்டில் இருப்பவனும் இப்படி மூர்க்கமாக தாக்கிக் கொள்கிறீர்கள்?

சரி மேல்தட்டில் அமர்ந்திருக்கும் அந்தக் குழு குடிக்கும் தண்ணீரும், சுவாசிக்கும் காற்றும் என்ன புதன் கிரகத்திலிருந்து இறக்குமதி செய்து குடித்து, சுவாசிக்கிறார்களா? இரண்டு பேரும் பொது இடத்தில் மலம், ஜலம் கழித்து அவை இரண்டற கலந்து நாம் அனைவரும் தானே மீண்டும் உள்ளே தள்ளி உணவாக உண்கிறோம். வளர்கிறோம். அதெப்படி, ஒருத்தனில் இருந்து மற்றொருவன் உயர்வாகிவிடுகிறான்?

யார் நமது ஒற்றுமையை விளக்க பாடம் எடுப்பது? சைனாக்காரனா? இல்லை இயற்கை பேரழிவா? எனக்கு இப்பொழுது இதுதான் தோன்றுகிறது. பூமியில் அதுவும் குறிப்பாக இந்தியாவில் ஜனத்தொகை வீங்கி வெடிக்கிறது. இயற்கையாகவே ஒரு வழியை கண்டடைந்தாலே ஒழிய இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாத ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அமெரிக்காவில் ஒரு சதுர கிலோமீட்டரில் 35 மக்கள் வாழ்கிறார்கள் என்றால் நமது தேசத்தில் சராசரியாக 350 பேர்களை கொண்டிருக்கிறோம்.

அதனையொட்டிய இயற்கைசார் தேவைகளை கொண்டே பார்த்தால் கூட, குடிநீருக்கும், சுத்த காத்திற்கும் கூட பெரும் அடிதடி தேவைப்படப் போகிறது. இந்த லட்சணத்தில் அவன் இவனை செத்த சிவப்பாய் இருக்கிறான், என் மூக்கு நீளம் அவனது சிறுசின்னு அதே சாக்கடைக்குள் கிடந்து கொண்டு ஒருத்தன் மீது இன்னொருவன் கல்லை விட்டெறிந்து கொண்டு நாம் இன்னமும் ஒரு லட்சம் வருடத்திற்கு முன்பு வாழ்ந்த அதே ஹோமோ எரெக்டஸ் குரங்கேதான் என்று நிரூபிக்கிறோமே? இதனை எதனில் சேர்ப்பது?

சரி இயற்கையே இப்படி ஒரு மக்கள் தொகை ஒழிப்பை தேர்ந்தெடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதாவது, நமது மூளையின் செயல்பாடுகளையொற்றி நமக்கு நாமே குழி பறித்து கொள்வது. அதன் எதிர் முனையில் நின்று மிருக நிலையில் இருக்கும் நம் புத்தி செயல்பாட்டை எப்படி மனித நிலைக்கு நகர்த்துவது என்று ஏன் கிஞ்சித்தும் எண்ணுவது கிடையாது.

அந்த புகைப்படத்தில் பார்த்தோமானல், ஒரு மனிதனை. நாயை விடக் கேவலமான முறையில் அவன் வாழ்ந்த வீதியிலேயே வைத்து நடத்தப்பெறுவதாக தெரிகிறது. எனக்கு அந்த ஒரு அசையா படத்தினை பார்க்கும் பொழுதே, ஈழத்தில் தமிழர்கள் பட்டிருக்கக் கூடிய சிதைவு நினைவுக்கு பளிச்சென மின்னி மனத்திரையில் வெட்டி மறைகிறது.

அங்கு சிங்களவன் - தமிழன் என்ற இனவெறி இருக்கிறது. இங்கே என்ன கேடு, உங்களுக்கு? அங்கே ஏறி மிதித்து கொண்டு வரும் சிங்களவன் ஒரு நாள் சைனாக்காரனுடன் சேர்ந்து நம்மை பிடரியில் மிதித்தால் அப்பொழுதும் நாம் இருவரும் கம்புச் சண்டை போட்டு நம்முள்ளரயே அடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருப்போமா? அல்லது அவனை சந்திக்க தயாராவோமா? எவன் நமக்கு சரியான பாடத்தை நம் எருமை மூளையில் உறைக்கும்படி உணர வைப்பான்?

இல்ல மொத்தமா இயற்கையின் நகர்வின் பாதையிலேயே சென்று இப்படி வீதிக்கு வீதி, வீட்டிற்கு வீடு அடித்துக் கொண்டு சிறுகச் சிறுக முடித்துக் கொள்வோமா? அதுதான் இயற்கையின் திட்டமுமோ? சிந்திக்க மறுப்பின் எருமை மாட்டு நிலையிலேயே உழண்டு மிருக நிலையிலேயே மரணிப்பும் நிகழ்ந்து, நிகழ்ந்து மீண்டும் மீண்டும் மீசை முறுக்கிக் கொண்டே திரிந்து விடலாமா?

ஒரு குரங்கு எழுந்து வெட்ட வெளியில் நின்று பார்க்க எத்தனித்ததின் விளைவே இன்று புதன் கிரகத்திற்கு ரோபாட் அனுப்பி தண்ணீர் இருக்கிறதா என்று சிந்திக்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது. ஆனால், நம்மில் இன்னும் பலபேர் வெட்டவெளியில் நின்றபடியே உறைந்து விட்டோம்... பிற மனிதர்களோட சமமாக பயணிக்க திராணியற்று. விளைவு, மனித பிணங்கள். வீட்டுக்கு வீடு தலையணைக்கு கீழ் அருவாள்கள் வைத்துக் கொண்டு குரங்கு மூதாதையர்கள் மாதிரியே வாழ்க்கையை நகர்த்த சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா 2020 அல்ல இன்னும் 1000 வருடமானாலும் அங்கயேதான் நாம் தேங்கிக் கிடப்போம். போலோ, நைக்கி ஷு, டையும் மனிதனை வெளிப்புறத்தில்தான் மாற்றியிருக்கிறது பெயருக்கு பின்னான வெறீஈஈஈ ஷெட்டி, நாயர், ஐயர், புதிதாக வன்னி... போன்ற அடைமொழிகளுக்கு உள்ளாக ஒளிந்து கிடக்கிறது நம் பரிணாம ஓநாயின் கூரான, கோரமான பற்கள்.



பி.கு: இந்த பதிவினை எழுதுவதற்கான ஜுவலை இங்கிருந்து கிடைச்சது. அதையெல்லாம் முழுசா படிச்சா நானும் பின்னோக்கி 50 ஆயிரம் வருஷம் நடக்கணும். அதுனாலே முழுசா படிக்கல இருந்தாலும்... ஒரு முறை பாத்து வைங்க. ஒரு தேசத்தின் எதிர்காலம் எங்கே ஒளிந்திருக்கிறது என்பதனையாவது அறிந்து கொள்ளலாம்.

Friday, July 23, 2010

புது ஃபேஷன் ஷெட்டி, ஐயர், ரெட்டி, மேனன்: Is it fool's identity?

”யாதும் ஊரே யாவரும் கேளிர்” இது தமிழில் ரொம்ப பரவலாக பல மேடைகளில், சங்கங்களில், குழுக்களாக கூடி மகிழுமிடங்களில் பயன்பாட்டுக்கு உதவும் ஒரு வாக்கியம். இது வாக்கியம் என்றளவிலேயே பயன்படுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறதோ என்ற ஐயப்பாடு எப்பொழுதும் எனக்கு உண்டு. எனது அவதானிப்பின் படியும், பயணங்களின் ஊடாகவும் நான் அறிந்து கொண்ட ஒரு விடயம், தமிழகத்தைக் காட்டிலும் வட இந்தியா மற்றும் ஏனைய தென்னிந்தியாவில் இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக ராஜ் பட்டேல், ஷில்பா ஷெட்டி, முகேஷ் ஷர்மா, ரேணுகா அய்யர், ப்ரீயா ரெட்டி,  அன்பு மேனன் என்று புழக்கத்தில் இருப்பதனைக் காணும் பொழுது உடம்பெல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது.

பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இது போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த ஜாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.

இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு வாடகைக்கு பிடிக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் xxxx என்றோ, மீரா xxxx என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குழுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?

அண்மைய காலத்தில் தமிழகத்தில் அது போன்ற ‘ஜாதி அடைமொழிகள்’ சிறிதே வெளிப்பார்வைக்கு எழுதி அறிவித்துக் கொள்வது குறைந்திருப்பதாகவே தெரிகிறது. இருப்பினும் லோ கட் ஜீனும் , யூ பெட் என்ற வாசகத்தை கொண்ட டீ சர்ட்டும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டறியாத உடை உடுத்திகளின் மண்டைகளை கொண்ட ட்ரெண்ட் செட்டர்களின் நடவடிக்கைகளைப் போல, நவீன யுவன்/யுவதிகளில் பலர் ஐயர்களையும், படையாச்சிகளையும், ரெட்டிகளையும், ஷெட்டிகளையும் தங்களின் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தி வருவதும் ’ட்ரெண்ட் செட்டிங்’ அவதானிப்பிலேயே என்னால் கண்ணுற்று கடந்து போக முடியவில்லை.

ஏனெனில் இன்று நாம் தொலைத் தொடர்பு சாதனங்களின் உதவியால் இந்த பரந்து விரிந்து கிடந்த உலகத்தை ஒருங்கே இணைத்துக் கட்டி, ஒரு சொடுக்கு நிகழ்த்தும் நிகழ்விற்கும் குறைவான காலத்தில் ஒரு மண்டைக்குள் இருக்கும் எண்ணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அது உலகம் முழுதுமே கற்றறிந்தவர்கள் என்று கூறிக் கொண்டு - ஃபேஸ் புக், டிவிட்டர், ப்ளாக் என்று மாய்ந்து, மாய்ந்து எழுதி, படித்து உலகம் சுற்றி தனது மண்டை வளர்ந்து விட்டதாக அறிவித்துக் கொள்ளும் கால கட்டத்தில் இன்னமும் இந்த அடைமொழியின் மூலமாக எது போன்ற விளைவுகளை இந்த மனிதக் கடலில் கலக்க எண்ணி கலக்கிறோம். இது போன்ற அறிவு முண்டியடிக்கும் ஒரு கால கட்டத்தில், அது போன்ற துருத்தல்கள் எது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிந்து கொள்ளக் கூட வாய்ப்பு கிட்டாமலா போய்விடும்?

அப்படி அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது ?

சரி அரைகுறைகளை விட்டுவிடுவோம். காலம் வரும் பொழுது தானாகவே விளங்கிக் கொள்வார்கள் என்ற நப்பாசையில். கலைச் சேவையோ அல்லது லைம் லைட்டிற்கு கீழே நிற்கும் மனிதர்களை எடுத்துக் கொள்வோம். ஒரு இயக்குனர் தனது படங்களின் மூலமாகவோ, அல்லது தனது புத்தகத்தின் மூலமாகவோ சில சமூக கருத்துக்களை முன் வைக்கும் இடத்தில் இருப்பவர் எப்படி தான் ஒரு முட்டாள், இன்னும் அந்தக் கட்டத்தையே தாண்டவில்லை என்ற குறைந்த பட்ச விழிப்புணர்வே அற்ற நிலையில் இப்படி சமூகத்தில் தன்னை அது போன்ற ஒரு ’நச்சு அடைமொழியுடன்’ முன் நிறுத்திக் கொண்டிருக்க முடியும்.

அடுத்து, அண்மையில் வெளிவந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படமான ’அங்காடித் தெரு’ நல்ல ஒரு சமூக கருத்தை முன் வைத்து எடுக்கப்பட்ட படம். அதனில் இரண்டு பாடல்கள் அப்படியே தூக்கி மிதக்க வைத்த பாடல்கள் அந்த வசிகரமான குரலும், பாடலின் ஆழமும் திளைக்க வைத்து எங்கோ நம்மை எடுத்துச் சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கே அந்தக் குரலுக்கு சொந்தமான மனிதர்களின் பெயரோ, புற அடையாளங்களோ முன் நிறுத்தப் படாத வரையிலும் எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாமல் இருக்கும் பொழுது நம்மால் லயித்திருக்க முடிந்தது, ஆனால் எதார்த்தமான ஒரு சூழலில் அந்தப் பாடலை பாடியவரின் பெயருக்குப் பின்னால் கண்ட இந்த அடைமொழிகள் - ஜானகி அய்யர், நரேஷ் அய்யர் போன்றவைகள் மீண்டும் நம்மை பூமிக்கே கொண்டு வந்து ஒரு அர்ப்பனாக்கி மாடுகளை கட்டுத்தறியில் கட்டி வைத்ததிற்கிணையாக நம்மை சிக்குற வைத்து விடாதா? இது போன்ற முன்னிருத்தல்கள் எல்லாம் எதற்காக; அதுவும் மனிதத்தின் மேன்மை பண்புகளான நேசம், பாசம், காதல், பரிவுகளைப் பற்றி பாடி மனிதர்களின் இறுக்கங்களை தளர்த்தும் ஒரு தளத்தில் இருப்பவர்களுக்கு. உண்மையாகவே எனக்கு புரியவில்லை!

அப்படியெனில் இது வரையிலும் அது போன்ற மனிதர்கள் இதன் பின்னணியில் இருக்கும் அபாயத்தை/அபத்தத்தை உணரவே இல்லையா? தான் இந்தத் துருத்தலை தூக்கிக் கொண்டு அலைவதால் முதலில் தான் ஒரு முட்டாள் என்பதனை ஊரறிய ஒத்துக் கொள்பவனாகவும், அடுத்த மனிதர்களை சஞ்சலமடையவும், உணர்வுகளை நசுங்க வைத்துக் கொண்டிருக்கும் ஓர் உணர்வற்ற மூடனாகத்தானே நம்மால் புரிந்து கொள்ள முடியும்?

இப்படி குழுக்களாக, சிறிது சிறிதாக உடைத்து உடைத்து ஒரே நாட்டிற்குள் வாழ நேர்ந்து போனால், எப்படி நாமும் 2020க்குள் இது போன்ற சில்லறைத் தனமான விடயங்களிலிருந்து வெளிப்பட்டு உலக அரங்கில் ‘சூப்பரு பவரு’ன்னு அறியப் படுத்திக்கிறது; இவ்வளவு ஓட்டை ஊழல்களை நம்மிடம் வைத்துக் கொண்டு.

எது போன்ற வாழ்க்கை கல்வி, இவர்களின் வாழ்க்கையை எந்தச் சூழலில் பேரிடியாக அடித்து சக மனிதனை மனிதனாக மட்டுமே பார்த்து பழகும் ஒரு நல்ல பண்பை ஊட்டும் வகையில் ஒரு வாய்ப்பை வழங்கப் போகிறது? Morons!

இது என்னுடைய சுய விசாரிப்புகளாக எழுந்த எண்ணங்களே! அப்படியே இந்தப் பாட்டை கேட்டு கொஞ்சம் நேரம் மறந்து மிதப்போம்...



NK Dreams¨‘°ºO™ - Un Perai Sollum .mp3
Found at bee mp3 search engine

Related Posts with Thumbnails