Thursday, September 08, 2016

மனிதன் பாதி மிருகம் மீதி: மரபணு சீரிஸ் - I

ஒரு புத்தகம் வாசிச்சிட்டு இருக்கேன். அதில சுயநலமற்ற மரபணு எப்படி நம்முடைய பரிணாமத்தின் வழியாக பயணப்பட்டு வந்து சேர்ந்திருக்கணும் என்றும் அதனோட பயன் என்னவா இருக்கும்னும் ஒரு கேள்வியோட போகுது.

நாமும் பார்த்திருக்கலாம். பல விலங்குகள் அது மேம்பட்ட பாலூட்டிகளாகவோ, அல்லது பறவை இனங்களிலிலோ, ஏன் கரையான், எரும்பு வகைகளில் கூட இந்த சுயநலமற்ற செயல்பாடுகள் நடைமுறையில் இருப்பதை கண்டிருக்கலாம்.

உதாரணமாக அணில், ஆட்காட்டி குருவி, அல்லது குரங்கு தனக்கென்று பிரத்யோக பாதுகாப்பினைக் கொடுக்கத்தக்க வகையில் முட்டையிட்டோ அல்லது குஞ்சுகள் கூட்டிலோ அல்லது குட்டிகள் அருகமையோ இல்லாத பேச்சிலராக இருந்தாலும், தனக்கு ஆபத்தை உடனடியாக இழைக்கும் விலங்கு, அல்லது சூழல் இருப்பினும் ஏன் ஒலி எழுப்பி மற்ற தன் இன உறுப்பினர்களை விழிப்பு கொள்ளச் செய்கிறது? தனக்கு உடனடியான மரணமே சம்பவிக்கலாம் என்றாலும் ஏன் அனிச்சையாக செய்து வைக்கிறது என்றபடியாக உள்ளது அந்த கேள்வி.

இதற்கு விடையாக தனி நபர் உயிர், உடல் சார்ந்த விசயங்களை பேணி பாதுகாத்துக் கொள்ள எப்படி சுயநல மரபணு அவைகளிடையே பரிணமித்து ஓர் உயிரினத்தை இனமாக இந்த பூமியில் தக்கன பிழைக்க வைக்க உதவுகிறதோ, அதனையொத்தே இந்த சுயநலமற்ற மரபணு பரிணமிப்பு தன்னையொத்த மரபணுக்களை கொண்ட பிற குடும்ப நபர்களாவது தன் ஒரு உயிரை மாய்த்துக் கொண்டாலும் பரவாயில்லை பெரிதளவில் மிச்சமிருப்பவர்கள் அந்த மரபணுக்களை கடத்திச் செல்ல வாய்ப்பாக அமையுமென்று இந்த தற்சார்பு தற்கொலைக்கு தன்னையும் தாண்டி பரிணாம வழியாக எடுத்து வந்திருப்பதாக பேசுகிறது அந்த புத்தகம்.

இதனையொட்டியே தேனீக்கள், எரும்புகள், கரையான்களிலெல்லாம் ஆயிரக்கணக்கில் இனப்பெருக்கத்திற்கு லாயக்கில்லாத உழைப்பாளி நபர்கள் இருந்தாலும், அவைகளின் ப்ரக்ஞையற்ற தற்கொலைச் செயல்களை இந்த மரபணுவே செயலாற்ற வைக்கிறதுன்னும் புரிஞ்சிக்கிறேன்.

போலவே, நம்முடைய செயல்களிலும் இது போன்றே மரபணு தற்காப்பிற்கெனவும், ஓர் இனமாக பரிணமித்து நம்மை தக்க வைத்துக் கொள்ளவும், எது போன்ற செயல்பாடுகளெல்லாம் இந்த இயற்கை கால ஆற்றில் பயனுள்ளதாக இருக்கிறதோ அதெல்லாம் மரபணுவிற்குள் பொதிக்கப்பட்டு நாம வெறும் இயந்திரம் போன்று ஏன், எதற்குன்னு கேள்வி பதில் செஞ்சிக்காமயே குட்டி போட்டு, வளர்த்து, வெட்டுக் கொத்து நடத்தி அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு போற அளவிலேயே இருக்கோம்... it is just a by product of genetical interest, effortlessly leading by an innate behavior.

*****************************************************************

நேற்று எப்படி தன்னலமற்ற மரபணு நம்முள் கடத்தப்பெற்று அனிச்சையாக தன் இனம் சார்ந்து செயல்படுதுங்கிறதை பத்தி பேசினோம். இன்னிக்கு இன்னொரு கோணத்தில இந்த பிறருக்கு உதவும் இயல்பு (altruism) எந்தளவிற்கு மனித சகோதரத்தில் முன் நிற்கிறது நிக்கலைன்னு இன்னும் கொஞ்சம் கிட்டே போயி பார்ப்போமா!

சில வருடங்களுக்கு முன்பு ஹிமலயாவிற்கு பக்கத்தில சாமீ கும்பிட போன மக்காவை திடீர்னு பேரிரைச்சலோட மேகம் வெடித்து கொட்டின மழை, வெள்ளமா மாறி மக்களை அடிச்சு எடுத்துகிட்டு போனதா செய்திகள்ல படித்தோம்.

அதில யாரு என்னான்னு தெரியாம அடிச்சு இழுத்துகிட்டு போன பிற வீட்டு மக்காவை குதிச்சு காப்பாத்தினதாவும் சில செய்திகள் வாசிச்சோம். அது போலவே சென்னை வெள்ளம், சுனாமி நிகழ்வுகளின் போதும் நடந்தது.

இருப்பினும் அதற்கு மாறாக மரபணு ரீதியாக இயற்கை எதனை அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து சேர்க்கிறதுன்னு பார்த்தா- ஒரே குடும்பத்தில் அம்மாவின் வளர்ப்பால் வளர்த்தெடுக்கப்படுகிற சகோதரர்கள் அதனை பார்த்து வளர்வதாலேயே தான் அந்த பாசப்பிணைப்பு அதீதமாக பதியவைக்கப்படுகிறதாம். அது தூரம் அதிகமாக அதிகமாக அதனுடைய ஈர்ப்பு குறைகிறதாம்... உதாரணமாக சித்தப்பா, பெரியப்பா மக்கள் இப்படியே இது விரிகிறது.

இதனை இன்னும் நுட்பமாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் காட்டிற்குள் செல்வோம். சிம்பன்சிகள் புரத தேவையையொட்டி தனது குட்டிகளுக்கு கொண்டு வரும் இரண்டு கிலோ மாமீசத்தில் பங்கு பிரித்து பிற பெண் சிம்பன்சிகள் பெற்ற குட்டிகளுக்கும், தன்னுடைய குட்டிகளுக்கும் ஒரே அளவில் பிரித்து கொடுத்து தனது தாராள மனதை காட்டும் பட்சத்தில், அந்த குணமே தனது குட்டிகள் ஊட்டச் சத்து குறைந்து மரணிக்கும் தருவாயில் கொண்டு சென்று நிறுத்தினால், இயற்கை எதனைத் தழுவி அடுத்த கட்டத்திற்கு கடத்தும்? தாராள உள்ளம் படைத்த அந்த அம்மாவையா? அல்லது கொஞ்சம் சுயநலமாக தனது குட்டிகளுக்கு அதிகமாக கொடுக்கும் அம்மாவையா? மாற்று கருத்தே இல்லாமல் கொஞ்சம் சுயநலத்துடன் இயங்கும் அம்மாவின் குணத்தைத் தான் இல்லையா?

அப்படியே இப்போ கேமராவை நம்ம வீட்டிற்குள் நகர்த்துங்க. வெளியில இருந்து வந்து இணையும் இரு வேறு நபர்கள் தங்களது குழந்தைகள் என வரும் பொழுது ஒரே நிலையையும், ஆனால், அவரவர்களின் பெற்றோர், சகோ என்றால் ஒரு நிலையையும் எடுக்கும் லாஜிக் ஏன் என்று புரிகிறதா? ஏனெனில், அங்கே தூரம் தூரமாக வளர்ந்து வருவதால் அந்த பாச பிணைப்பு இருக்க வேண்டுமென்ற ’தூரப் படுத்தல் மரபணு’ அந்த விளையாட்டை நிகழ்த்துகிறது. அது அவர்களாகவே செய்யவில்லை, அனிச்சை செயல் (உஷ் அப்பாடா, தப்பிச்சீங்க).

இப்படி எல்லாத்தையுமே ஒரு மிருக நிலையிலிருந்து நம்மை புரிந்து கொண்டால் எல்லா மனிதர்களையும் நேசிக்கலாம், அவங்கவங்க நிலையிலேயே வைத்துன்னு நினைக்கிறேன்.

இன்னொரு கொசுறுச் செய்தி. ஆண்களுக்கு குடும்பம் என்ற கருதுகோளே கிட்டியிருக்காதாம் அவர்கள் சகோதர/ சகோதரிகளிடன் வாழ்ந்து பார்ப்பதற்கான வாய்ப்பு மட்டும் கிடைத்திருக்காத பட்சத்தில்... அங்குதானே பகிர்ந்து கொள்வது, இரக்கம் காட்டுவது, விட்டுக்கொடுத்து போதல் போன்ற நடைமுறை விசயங்கள் கூர் தீட்டப் படுகிறது.

Related Posts with Thumbnails