Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, March 02, 2025

ஆசானுக்கு ஓர் அஞ்சலி: A Tribute To My Beloved Mentor Dr. Ajith Kumar

இன்றைய காலை இப்படி ஒரு செய்தியுடன் விடிந்திருக்க வேண்டாம். என்னுடைய இளமை காலத்தில் என்னிடம் மண்டிக்கிடந்த பல பொதுப்புத்தி கட்டமைப்புகளை தகர்க்க போதுமான இடமளித்து மனிதனாக வார்த்துக் கொள்ள தனது வீட்டுக் கதவை திறந்து விட்டவர்; இயற்கையோடு கலந்துவிட்டார். 

முனைவர் அஜித்குமார் என்னுடைய Ph.D ஆராய்ச்சி படிப்பிற்கான ஆலோசகர். அவர் தன்னுடைய முனைவர் பட்டத்தை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருத்து பெற்றவர். நான் ஒரு முறை ஏதோச்சையாக என்னுடைய முதுகலை பட்டப்படிப்பு ஆராய்ச்சி நாட்களில், டாப்சிலிப்ல் தங்கி பைசன் பற்றிய ஆய்வில் இருந்த போது, இவரை அவரோட டேராடூன் Wildlife Institute of India மாணவர்களோட வைத்து சந்தித்தேன். இவர் வனவுயிரின ஆராய்ச்சி, பேராசிரியர் என்று அவர்களுக்குள் உரையாடிக் கொண்டதை வைத்து அறிந்து கொண்டேன்.

பிறகு நானே என்னை அவரிடத்தில் அறிமுகப் படித்திக் கொண்டேன். என் ஆராய்ச்சி சார்ந்த என்னிடமுள்ள சில சந்தேககங்களை அவரிடத்தில் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டேன். அதுவே என்னை இவரிடத்தில் பிற்காலத்தில் கொண்டு சேர்க்கும் ஓர் சந்திப்பாக அமையுமென்று அன்று கனவிலும் நினைக்கவில்லை.

மறு ஆண்டு, கோவையில் அமைந்திருக்கும் சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சி நிலையத்தில் (SACON) பல Junior Research Fellowsக்கான ஆட்கள் தேடிய நிலையில் முதுகலை முடித்திருந்த நான் அந்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய அனைத்திந்திய தேர்வில் கலந்து கொண்டேன். அதுவே என் வாழ்வெனும் வறண்ட பூமியில் விழுந்த முதல் மழை!

தேர்வாகி இருந்தவர்களின் பட்டியலில் என்னுடை பெயரை எப்படியோ நினைவில் வைத்திருந்த அஜித் சார், அவருடைய ஆராய்ச்சிக்கென அவருடைய முதல் இரண்டு மாணவர்களில் என்னையும் ஒருவனாக இணைத்துக் கொண்டு பயணிக்க தந்தியின் மூலமாக என்னை அழைந்திருந்தார்.

அன்று எனக்கு 23 வயதாக இருந்திருக்கலாம். அவருடனான உரையாடல்கள், பயணங்கள், கேளிக்கையான நேரங்கள், அடர்ந்த மழைக்காடுகளிக்கிடையே நட்சத்திரங்கள் கொத்தாக தொங்கி மினுமினுக்கும் நீண்ட இரவின் மடியில் முகாம் தீ எரிய ஓல்ட் மாங்குடன் உலகைப் பற்றியான பொது உரையாடல்கள் இன்றும் பசுமையாக என்னுள் உறைந்து கிடக்கிறது..

இது அத்தனையும் எனக்கு அறிமுகப் படுத்தி கொடுத்த எனது ஆசான் NO MORE. எனக்கே இது வரையிலும் வாழ்ந்த அத்தகைய வாழ்வின்பம் இத்தனை மன நிறைவை கொடுத்திருக்கிறது என்றால், அவருக்கு எத்தகைய நிறைவை கொடுத்திருக்கக் கூடும் என்று உணர முடிகிறது. I am sure he must have lived the fullest and given utmost of his best! Such a great human being ever I come across. Long live his scientific achievement in the academic arena.

An add on - I remember this day, after a long gap one day I called you and you took the call like I just spoken to you a half hour before without any void and allowed me to update, and we discussed about Indian political climate how rapidly it is plunging into abysmall darkness. Fondingly you pointed out that you still crack jokes about me in field trips that how I came up with "Menstrual Symptoms" theory in men and pointed out to me how hilariosly true it is! நன்றி! என்றென்றும் உங்கள் நினைவுடன் - அ. பிரபாகர்.

P.S: என்னுடன் தங்கி அஜித்குமார் சாருக்கு கீழ் மற்றுமொரு ஆராய்ச்சி மாணவராக இயங்கிய முனைவர் உமாபதி எழுதிய பதிவில் இரங்கல் பின்னூட்டமாக எழுதியது ...

I have no words to express my gratitude to my advisor - friend Dr Ajith Kumar, he was one of  my earliest times inspiration who helped me to shape myself up to be the person who I am today. I am so fortuanate and proud to call myself I was one of his first hatchlings of Ph.Ds.

I have so much to share about our fondings during those days! My Ph. D colleague Dr Govindhaswamy Umapathy has already elaboarated his academic achievements. He was a prominent and unavoidable icon in the field of Indian primatology and widlife biology; a rainforest conservation expert with profound knowledge of its ecology, with outstanding floral and faunal field identification skills. My deepest condolences to his family, friends, colleagues and I feel terribly sorry that I couldn't be there to bid final good bye! 😪🫡🙏🏽



Art Courtesy: Dr Gokula Varadharajan

Wednesday, February 01, 2023

ஏன் பேனா சினைவுச் சின்னம்

ஒரு பேனா இத்தனை பேரை அலற வைக்க முடியுமா? முடியுமென்றால் அந்தச் சமூகத்தில் ஏதோ பெரியளவில் சம்பவம் நிகழ்த்தப் பெற்றிருக்கிறது என்று தானே புரிந்து கொள்ள முடியும்?


பேனா என்ற ஓர் அடையாளம் எதனையெல்லாம் சுமந்து நிற்க முடியும்? பேனா - மனித குலத்தின் நாகரீக திசையறியும் திசைகாட்டி. ஒரு சமூகத்தின் மாண்பு! உண்மையை செதுக்கி வைக்கும் உளி. குரலற்றோருக்கு உரக்க குரல் கொடுக்கும் ஓர் ஒலி பெருக்கி. இருட்டின் அடர்வையொத்த பொய்களுக்குள் புதைந்திருக்கும் ஓர் பேரொளி.

பேனாவிற்கு ஏது வேலி, முகம்? ஒரு சமூகத்தில் ஒரு பேனா ஒரு தனி மனிதனின் முகத்தை உன் நெஞ்சிற்குள் ஈட்டியாக இறக்குகிறது என்றால் அந்த முகத்திற்கான சொந்தக்காரன் ஒரு சம்பவத்தை அந்தச் சமூகத்தில் செய்து இருக்கிறான் என்றல்லவா பொருளாகிறது.

எடுத்துக்காட்டாக நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். முதல் முறையாக வேறொரு நாட்டிலிருந்து விமான மார்க்கமாக அந்த பேனா எழுந்து நிற்கும் கடற்கரையோரமாக பறந்து தரை இறங்குகிறேன் என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது அந்தப் பேனா எனக்கு தரும் செய்தி என்னவாக இருக்கும்? எனக்கு அந்தச் சமூகத்தில் புழங்கிய எந்த ஒரு தனிப்பட்ட முகங்களும் பரிச்சயமில்லை எனும் போது, பொதுவான ஓர் ஐடியாவான பேனா - அதனையொட்டிய பெரும் மதிப்பு அந்தச் சமூகத்தின் பொருட்டு இயல்பாகவே ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியாது இல்லையா?

ஏனெனில், வரலாறு தோறும் பேனாவிற்கான இடமப்படி. பேனாவின் மதிப்பு என்பது ஒளவையின் "கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பதற்கு ஒப்பான" ஓர் அண்டத்தின் குறியீடு!

இந்த தமிழ்நாட்டுப் பேனா உங்களுக்கு கலைஞரின் முகத்தை நினைவு படுத்துகிறது என்றால் அது மிகச் சரியாக அவரது விரலிடுக்களில் சுழன்று தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறது என்று விளங்குகிறது. 

அது வரும் தலைமுறையினருக்கும் இடம் சுட்டி பொருள் விளக்கியபடியே நிற்கும். நீங்கள் இன்னும் பலமாக ஓலமிட்டு கதறிக் கொண்டே இருங்கள்!


#பேனா_கலைஞர்

#நினைவுச்சின்னம்

#மீள்

Friday, February 26, 2021

கமல் அரசியல் அபத்தங்கள் - சக்கர நாற்காலி/கிராமசபை கூட்டம்

சக்கர நாற்காலியில் அமர்ந்து சொந்திரவு தரமாட்டேன்!

லெட் மீ கெஸ், கமல் தட்டை தூக்கிட்டு தளபதிகிட்ட போயிருக்கணும். அவரு தம்பி நீ அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே, அப்படி ஓரமா போயி விளையாடுன்னு சொல்லி அனுப்பிட்டார். மிதி தாங்க முடியாம, வெளியில வந்து உலக்கை தன்னோட முன்னோர்கள் வழியில் புத்தியை காட்டி இருக்கும்.

இவனுங்க பூராப்பயலும் காரிய வாதிகள். காரியம் ஆக என்ன வேணா செய்வானுங்க. காலப் பிடிச்சு அதில இருந்து ஒரு படி மேலே பொயிட்டான்னா, அடுத்தப் படிக்கான ஆளை பிடிச்சிருவான், ஏறிவர உதவினவனை எள்ளவு கூட மதிக்கமாட்டானுங்க. இவன மாதிரி ஆளுங்களுக்காக கலைஞர் "#பலிபீடம்_நோக்கி"ன்னு ஒரு சிறிய நூல் எழுதி வைச்சிருக்கார்.
வயசாகி இவனோட மூட்டு கழண்டு போகும் போது தானே கழுத்தை நெரிச்சிக்கிட்டு செத்துடுவான் போல. இவனுக்கெல்லாம் மரியாதை ஒரு கேடு!
Art Courtesy: Gokula Varadharajan

பி.கு: மின்நூல் வேண்டும் என்பவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை விட்டுச் செல்லவும். வெறும் 30 பக்கங்களுக்கும் குறைவான நூல். நன்றி!

@@@@@****@@@@@

நான் தான் கிராமசபை கூட்டம் கண்டுபிடித்தேன்:

கமல் எல்லாம் அரசியல் பழகலேன்னு இப்போ யார் அழுதா? இப்போ என்ன நடந்திட்டு இருக்கு இவரு என்ன பேசிகிட்டு அரசியல் செய்றோம்னு பேர் போட்டுகிட்டு திரியறார்?

ஆட்சியில இல்லாத ஓர் எதிர் கட்சியை நோண்டுறதில உள்ள லாபம், தனக்கு சம்பளம் போடுற மத்திய அரசை நேரடியா விமர்சனம் பண்ற துணிச்சலும் நேர்மையும் இல்லையே, ஏன்? ஏன் அழுத்தமா கிள்ளி வைச்சாத்தான் அடுத்த நகர்விற்கான பேமெண்ட்னு சொல்லிட்டாங்களா?  

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்தப்பெற்றிருந்தா இந்த கிராமக் கூடுதல்கள் தேவையா? முறைபடுத்தப்பட்ட அரசு உள்ளாட்சி கட்டமைப்பு 1000 பேர் வாழும் ஒரு வார்டிலிருந்து 8000 பேர் வாழும் ஊராட்சி வரைக்கும் வீதி பை வீதியாக சென்று பிரச்சினைகளை கண்டறிந்து கொண்டு வந்து சேர்த்து விடும் அமைப்பில்தானே இருந்தது. ஏன் தேர்தல் நடத்தலேன்னு கேக்கணும். யார் செஞ்சா என்ன வேலையானா சரித்தானே? இதிலென்ன போட்டி வேண்டிக்கிடக்கு. அதுவும் கை கறைபடாத ஒரு சொக்கத் தங்கமான நீங்க இப்படி பேருக்கு ஆசைபடலாமா?

அப்படி எடுத்துக்கிட்டு போறதை விட்டுப்போட்டு, என்னமோ தன்னையே தேவ தூதரா கருதிகிட்டு தானே கிராம சபைகளை இந்தியக் கிராமங்களில் அறிமுகப்படுத்தியது போல பேசுவதை எதனில் சேர்ப்பது...

அப்போ கீழே புகைப்படத்தில் உள்ள, இது போன்ற கூட்டங்களை நடத்தியதையெல்லாம் என்ன பெயர், செயலென்று பெயரிடுவது மிஸ்டர் மய்யம். 😂🙄😏

முதல் கோணல் முற்றும் கோணல்! PMK's Election Stunt

 நானும் அந்த ”பாமக சின்னய்யா” சம்பவத்தை பார்த்தேன். என்ன சொல்லுறதுன்னே தெரியல! இப்படி ஒரு (ஜாதிக்) கட்சியை கருத்தரிச்சு, அதை அடை காத்து தன் சமூக மக்களுக்காகவாவது சிறுக ஆசைப்பட்டு பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கலாம். நீங்க என்னதான் அழி ரப்பர் வைச்சு அழிச்சு நாங்க ஜாதிக் கட்சி இல்லன்னு இனிமே நிரூபிக்க நின்னாலும் எடுபடாது. தமிழக தமிழர்களையே காப்பாத்தறேன் அளவிற்கெல்லாம் யோசிச்சு நீங்க இப்படி இறங்கி இருக்க வேண்டாம். 

யாரையோ நம்பி இப்படி இத்தனை ஆபத்தான ஒரு சூறாவளியில சிக்கிச் சின்னாபின்னமாகிட்டீங்களே.

உங்க உழைப்பெல்லாம் இப்படி அவசரப்பட்டு இந்த கால கட்டத்தில அதுவும் தமிழகம் கொந்தளிச்சு போயி கிடக்கிற நேரத்தில போயி, அவிங்களோட சேர்ந்து உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு சோலியை முடிச்சிக்கிட்டீங்க.

சரி போறதுதான் போறேன் கொஞ்சம் டேமேஜ் செஞ்சிப்புட்டு போவோம்னு...

திராவிட நாடு கோரிக்கையை நிறைவேற்றினாங்களா, அதுக்காக எத்தனை பேரு சுடுகாடு போனாங்கன்னு- சம்பந்தா சம்பந்தமில்லாம எந்த கால கட்டத்தில இருந்த விசயத்தை எந்த கால கட்டத்தோட இணைச்சு டேக் டைவர்ஷன் போட்டு கோர்த்து விடப் பார்த்தீங்க.

அண்ணா எந்த காரணங்களுக்காக அதை படமெடுக்க விட்டர், பின்பு சுருட்டி ஓர் ஓரத்தில வைச்சார்னு ஏன் எங்கயும் படிக்கலயா? ஏன் ஒரு புரட்டு வரலாற்றை  தாங்களே வாசித்து அறிந்து கொள்ள விருப்பமில்லாத ஒரு கூட்டத்திற்கு ஊட்ட நிக்கிறீங்க.

நாம வாழற காலம் என்ன பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உயிரைப் பணயம் வைத்து போராடி இயக்கம் வளர்த்த காலமா? என்ன பெரிசா தியாங்களை செஞ்சு இன்றைக்கு இப்படி நாமல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா ஃபைவ் ஸ்டார் விடுதியில பத்திரிக்கை சந்திப்பு நடத்துர அளவிற்கு வளர்ந்திருக்கோம்.

எத்தனை ஆண்டுகள் நமக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் சிறைச்சாலைகளில் தங்களுடைய பொன்னான காலத்தை கழித்திருப்பார்கள். எத்தனை ஹார்ட்கோர் போராட்டங்களை முன்னின்று வழி நடத்தி இருப்பார்கள். நமக்கு ஒரு மூன்று தேர்தலுக்காக உழைத்த உழைப்பு பலன் கொடுக்க வில்லை என்றவுடன் இத்தனை ஆயாசத்துடன் சாணக்கியன் ஆகுகிறேன் என்று சகுனி வேலை செய்ய தயார் ஆகிவிட்டீர்களே நீங்கள். சரியா?

திராவிட நாடேதான் வேண்டுமென்றால் மற்றுமொரு ஈழத்தை இங்கே அவர் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? மாநில சுய ஆட்சிக்கான அழுத்தத்தை கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ள எடுத்த வியூகத்தை, நடக்கவே முடியாத விசயத்திற்காக எத்தனை பேர் சுடுகாடு போனார்கள் என்று கேக்குறீர்கள். எது மாதிரியான தர்க்கமிது? 

அன்று அண்ணா சாதுர்யமாக காய் நகர்த்த வில்லை என்றால் இன்றைக்கு உங்களுக்கு இந்த மேடையே கிடையாது என்பதை உணருங்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கக் கூடாது. நாமதான் முழுந்துறோம்னா கூடவே இரண்டு பேரை சேர்த்து கூட்டிட்டு போவோம்னு நினைக்கக் கூடாது. Come up with some other valid argument, the one you uttered is utter nonsense!

பி.கு: இந்தப் பதிவு 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போது எழுதியது.

Wednesday, February 24, 2021

ஏன் கலைஞர் கருணாநிதி வெறுக்கவைக்கப்பட்டார்?

 எப்போதுமே நமது மனது புறவயமான மயக்கத்தில் கட்டுண்டு கிடப்பதிலேயே பெரும் உவகை கொள்கிறது. அதற்கென காட்சிப் படுத்தலும், மாயவாத செயல்பாடுகளை காணும் போதும் நாம் வெகு எளிதாக அந்த சூழ்ச்சிகளுக்குள் விழுந்து விடுகிறோம். துப்பாக்கிச் சூடு நடத்திய, பொள்ளாச்சி கூட்டு வன்புணர்வுக்கு காரணமாகிய ஓர் ஆளுங்கட்சி, தேர்தல் கால ஸ்டண்டாக கெடா வெட்டி விருந்து வைத்தாலும், அந்த ஒரு வேளை உணவிற்குப் பின்னாக தாங்கள் இழந்த, இழக்கவிருக்கிற உரிமைகளை எண்ணிப் பார்க்காமல் கை அலம்புகிறோம்.

ஆனால், என்று நாம் ஒரு சமூகமாக மனிதர்கள் பொருட்டு தீர்க்கமான ஆராய்ச்சியின் பால் காரண காரியங்களை கண்டடைகிறோமோ, அன்று கடைசி நேர மாயவாத மயக்களுக்கு நாம் செவி சாய்க்க மாட்டோம்.
எப்படி இவ்வளவு கோமாளித்தனங்களை அரங்கேற்றிய படியே அதிமுக_வால் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் யாரால் அமரவைக்கப்பட்டு அழகு பார்க்கப்படுகிறது?
ஏன் கலைஞர் கருணாநிதி வெறுக்க வைக்கப்பட்டார்? யாரால் அது போன்ற ஒரு கருத்து, காட்சி கட்டமைக்கப்பட்டது, அவ்வாறு செய்வதற்குபின்னான லாபம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ மேலே வாசிங்க!
🔹️🔹️🔹️🔹️🔹️
எனது முகநூல் பக்கத்திலும், பொதுவான விவாதங்களிலும்...
நீங்கள் கருணாநிதி நல்லவர், வல்லவர் என்கிறீர்கள், ஆனால் மக்கள் அவரை மீண்டும் தேர்ந்தெடுக்கவில்லையே...
நீங்கள் குறை கூறும், அதிமுகவைத் தானே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கின்றனர்!
ஏன் என்ற கேள்வியை முன் வைப்பார்கள்!!!
நியாயமான கேள்வி, அதற்கான பதிலும் நான் கூறிவிடுவேன்,
இருந்தாலும் ஏற்க மறுப்பார்கள், அது அவர்களது உரிமை என்று அடுத்து விவாதம் செய்ய மாட்டேன்!!!
ஏன் கலைஞரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கவில்லை!!
காரணம்,
அதிகார பரவலை, பொருளாதார பரவலை, சாதிய ஏற்றத் தாழ்விண்மையை, மாநில உரிமைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த முயன்றார்!
1. நிலங்களை எல்லோருக்கும் பகிர்ந்தளித்தார்!
2. பேருந்துகளை எல்லோருக்கும் பொதுவாக்கினார்!
3. இடஒதுக்கீட்டை 40% (SC 15%+ BC25%) 48% உயர்த்தி எல்லோருக்கும் கல்வி மற்றும் அரசு வேலைகளை பொதுவாக்கி அதனை உறுதி படுத்தினார்!
4. குடிசை மாற்று வாரியம் மூலமாக, குடிசைகளில் கிடந்தவர்களை அண்ணா நகரில் அடுக்கு மாடிகளில் குடியமர்த்தினார்!
5. குடிசைகளில் வாழ்ந்த பறையர்கள், பள்ளர்கள் சமூக மக்களைப் மக்களைப் பார்த்து "அய்யோ பாவம்" என்று கூறி மகிழ்ந்த குடியானவர்களுக்கு முன்பு, அவர்களை ஓட்டு வீட்டில் வாழ வைத்தார்!
6. உயர்கல்வியை கிராமத்தில் உள்ளவர்களும் படிக்க ஏதுவாக, சென்னை பல்கலைக்கழகத்தை (Madras University) பிரித்து பல பல்கலைக்கழகங்கள் அமைத்து, நிறைய கல்லூரிகளை நிறுவினார்!
7. தாழ்த்தப்பட்டவர்கள் படிக்க ஏதுவாக விடுதிகளை கட்டி விட்டார்!
8. நகரத்தில் மட்டுமே இருந்த வசதிகளை கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்தி விட்டார்! அதனால் நகரத்திற்கு செலவு செய்ய நிதி குறைவாக இருந்தது!
9. பெற்றோர்கள் சொத்தில் பங்கு மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு என்று பெண்களுக்கு, அதிகாரத்தை அள்ளி வழங்கி விட்டார்! உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு என்று அரசியலில் பெண்களை முன்னிலை படுத்திவிட்டார்!
10. இந்தியாவிலேயே, உயர் சாதி மக்கள் மட்டுமே கோலோச்சிய நீதிமன்றத்தில், ஒரு பறையர் சமூகத்தைச் சேர்ந்தவரை நீதிபதியாக நியமனம் செய்தார்!
11. சாதிய படிகளில் கீழ் நிலையில் இருந்த கருணாநிதி முதலமைச்சராகி விட்டார்!
12. கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட ஆட்சியருக்கு இணையானவர் என்று சுதந்திரம் கொடுத்து விட்டார்!
13. மாநில உரிமைகளை பெற, ராஜமன்னார் கமிட்டி அமைத்து, திருமதி இந்திரா அமைச்சரவையிலேயே அதனை சமர்ப்பித்தார்!
14. ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஊடகத்துறையில் (சினிமா, அச்சு) தனது ஆளுமையை செலுத்தினார்!
15. எல்லாவற்றுக்கும் மேலாக...
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டத்தை இயற்றி விட்டார்!
விளைவு...
ஊழல் குற்றச்சாட்டு, தனிமனித தாக்குதல்!!!
அதனைத் தொடர்ந்து கலைஞர் ஆட்சிக்கு வரவிடாமல் பார்த்து கொண்டனர்!
சரி, பயனடைந்த மக்கள்........
அவர்கள் பாவம், அறியாமையிலேயே இருப்பவர்கள்!!

Post- Thanks:
Kandasamy Mariyappan
Art Courtesy:
Gokula Varadharajan

Thursday, December 31, 2020

கலைஞரின் இலவச மின்சாரமும் கமலையும்!

இந்த ஓவியத்தைப் பார்த்ததும் எனது மனது பின்னோக்கி ஓடி, இடை நிலை பள்ளி காலத்தில் உறைந்தது.

பள்ளி சென்று விட்டு வீட்டிற்கு வரும் மாலை வேலைகளில் சில நேரம் அது வரையிலும் எனது அப்பா சால் ஓட்டிக் கொண்டு இருந்தால், நானும் அந்தக் கயிற்றில் ஏறி அமர்ந்து நீர் இறைத்ததுண்டு. நிரம்பப் பொறுமையும், உடல் உழைப்பும் கோரும் வேலை. ஓர் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, நாம் தொல்குடி வேளாண்மையாளர்களாக இருந்திருக்கிறோம் என்று இப்பொழுது எண்ணிப் பார்க்கும் பொழுது தோன்றச் செய்கிறது.
கலைஞரின் மின்சாரத் திட்டம் வருவதற்கு முன்பே அப்பா வேளாண்மையிலிருந்து விலகி விட்டார். இலவச மின்சாரம் வந்த பிறகு இப்பொழுது அந்த எருதுகளைக் கொண்டு கமலை ஓட்டும் பழக்கம் ஒழிந்தே போய் விட்டது என்றே கூறலாம். எங்குமே காண முடிவதில்லை!
அது மட்டுமல்லாது சிறிய அளவில் விவசாயம் செய்தால் கூட வீட்டில் உள்ள அனைவரின் உழைப்பையும், கவனிப்பையும் திகட்டத் திகட்ட கேட்டு நிற்கும் ஒரு தொழில் அது. பத்து வயது சிறுவனாகவே இருந்தாலும் கூட அவன் செய்வதற்கும் சில வேலைகள் காத்துக் கொண்டிருக்கும்.
இதெல்லாம் ஒரு பக்கம். ஆனா, என் அப்பா கூறுவதுண்டு வேளாண்மையில் பரக்கப் பரக்க பாடுபட்டாலும் படுக்கப் பாய் இருக்காது என்று. அப்படியான ஒரு தொழிலில் மேலும் அவர்களின் வயிற்றில் அடிக்க அம்பானி, அதானிகள் குந்துனாப்ல சுரண்டித் திங்க இந்த புதிய வேளாண் சட்டங்கள் உள்ளே நுழைக்கப் பட்டிருக்கிறது.

Wednesday, November 07, 2018

அரை வேக்காட்டு சர்கார்: Crews with a mission!

இந்த இட ஒதுக்கீடும், இலவசங்களும்தான் தமிழகத்தை முன்னேற விடாமல் பிகாருக்கும், உத்திரபிரதேசத்திற்கும் சொல்லப் போனால் மேலைய நாடுகளையொத்த வாழ்க்கைத் தரத்தில் வாழும் வட இந்திய மாநிலங்களை விட படு கேவலமாக பொருளாதார, சுகாதார, கல்வி மேம்பாடுகளில் பின் தங்கிக் கிடக்க காராணமாகி இருக்கிறது; என்பதைப் போல பல பிள்ளை பிடிக்கிகள் கூறி நெருங்குவார்கள்...
இந்த இனிப்பு தடவிய நச்சு லேகியத்தை எவன் கொடுத்தாலும் அவர்களுடைய வாயிக்குள்ளரயே வைச்சு திணிச்சிடறது மேலும் அந்த லேகியம் பரவலைத் தடுக்கும்.
கேள்வி: இலவசங்கள் ஏழைகளை காப்பாற்றவா அல்லது, அவர்களை மேலும் சோம்பேறிகளாக்கவா?
பதில்: இந்த கேள்விக்கு தானே பதிலைடைஞ்சிகணும்னா, உண்மையான சமூக அறிவியலும் அதனையொட்டிய இயலாத மக்களின் உளவியலையும் ஒரு சேர உள்வாங்கினா பதில் கிடைக்கும்.
எப்படின்னா, தனிமனிதனை (குடும்பத்தை) ஆற்றல்படுத்துவது (empowering) என்பது ஒரு நாள் மட்டும் மேடை போட்டு மக்களை உற்சாகப் படுத்துவதோ அல்லது பள்ளி, கல்லூரி மேடைகளை ஆக்ரமித்து ராமாயண, மகாபாரதக் கதைகளை ஒப்பித்து சிறார்களை மூளைச் சலவை செய்வது போலவோ அல்ல!
சமூக சமன்பாட்டு நிலையை எட்டுவது என்பது மக்களின் தினப்படி வாழ்க்கையில் சில உளவியல் மாற்றங்களை உருவாக்கத்தக்க சொல்லாடல்களை ஏற்படுத்திக் கொடுப்பது, அதற்கான உபகரணங்களை எட்டும் தூரத்தில் நகர்த்தி வைப்பதுமாகும்.
இந்த சாத்தியங்கள் ஒரு நாள் ச்சீயர் லீடிங் செய்து விட்டு நகர்ந்து போய்விடுவது கிடையாது. தினப்படி வாழ்க்கை பயன்பாட்டில் இரண்டர கலப்பதால், கூட்டு சமூகத்தின் உளவியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அவ்வாறு ஒரு சமூகமே அந்த திசையில் பயணிக்க ஆரம்பிக்கும் பொழுது அதன் வெளிப்பாடாக சுகாதார, கல்வி ஏனைய சமூக முன்னேற்றம் சார்ந்த விடயங்களில் மக்கள் விழிப்புணர்வடையும் சாத்தியக் கூறுகளை நோக்கி நகரும்படியாக கதவு திறந்து விடப்படுகிறது.
இலவசங்கள், உண்மையில் அது இலவசங்கள் கிடையாது. மக்களின் வெல்ஃபர் சார்ந்த நலத்திட்டங்களை நேரடியாக மக்களுக்கு எடுத்துச் சென்று சேர்க்கும் ஓர் அரசின் அணுகுமுறைதான்.
இப்போ தமிழகம் எந்த அளவில் ஏனைய இந்திய மாநிலங்களைக் காட்டிலும் அடிப்படை கட்டமைப்பு துறைகளில் பின் தங்கிக்கிடக்கிறது? இவையெல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
கூறாய்ந்து பார்த்து நீங்களே கண் திறந்து பார்த்தால் ஒரு தேசமாக உலகரங்கில் உயரவும், மற்ற மாநிலங்களையும் சற்றே நாகரீகமடைந்த மாநிலங்களாக்கி மேலெழுப்பிக் கொள்ளவும் உதவலாம்.

முட்டிக்கொண்டு நிற்கும் தமிழ் தேசியம்!


பெரியாரும், அண்ணாவும் தனி நாடு அடைகிறோம்னு “திராவிட” அடையாளச் சொல்லை தவறாக பயன்படுத்தி தெலுங்கர்களும், கன்னடியர்களும், மலையாளிகளுக்கும் பயன்படும் வண்ணம் செய்து விட்டு தமிழர்களை வஞ்சித்து விட்டார்கள்; என்பதாக, தமிழ் தேசியம் பேசுபவர்கள், அடைந்திருக்கும் உயரங்கள் அனைத்தையும் கேலியும், கிண்டலும் பேசி ஆரியத்தை சுத்தமாக துடைத்தெரிய வேண்டியவர்கள் இன்று ஒன்றாக குடித்தனம் நடத்துகிறார்களே என்ற அளவிலே புலம்புகிறார்கிறார்களே... எனக்கு என்ன புரியலன்னா, இவர்களுக்கு என்னதான் வேண்டும். ஈழம் போன்ற ஓர் உள்நாட்டு யுத்தமா?
தமிழ் தேசியத்தை எப்படி அடைவது? இந்தியா என்ற யூனியனுக்கு கீழே இருந்து கொண்டே? தனி நாடு அமைப்பதா? அமைப்பதெனில் எப்படி? தனிப் படை அமைத்து இஸ்ரேல்/அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் இறக்குமதி செய்து மேற்கு மலைத் தொடர்ச்சி மழைக்காடுகளிலிருந்து யுத்தம் செய்து அடையலாமா?
நடைமுறையில் எப்படி ஆரியம் இரண்டாயிரம் ஆண்டுகள் "அகண்ட" பாரதத்தில் உங்களையும், என்னையும் மூளைச் சலவை செய்து இப்போது அடைந்திருக்கும் உயரத்தைக் கூட அடையவிடாமல் வைத்திருந்தது? அந்த சூழ்ச்சியை விட எதிர் அரசியலுக்காக இனக்கலப்பின் வழி நிறம்மாறி இருந்தாலும், ஓரளவிற்கேனும் இன்னும் சில மரபணுக்களை தூக்கிச் சுமக்கும் நமக்கு பிழைத்துக் கிடக்க வேணும் இந்த அடையாள அரசியல் தேவை இல்லையா?
சிலோன் அளவிற்கெல்லாம் இப்பொழுது மாஸ் பர்ரியல் செய்து கொள்வது உகந்தது அல்லவே. கொஞ்சம் யோசித்து காலத்திற்கு தகுந்தது மாதிரி பிழைக்கிற வழிய கொஞ்சம் சொல்லிக் கொடுங்க.
This is what the most recent evolutionary biological studies suggest...
...It is not the strongest of the species that survive, nor the most intelligent, but the one most responsive to change.
~Charles Darwin

Wednesday, May 02, 2018

வாயால் வடை சுடுவது எப்படி?

முதலில் 2020ல் இந்தியாவை சூப்பர் பவராக வளர்த்தெடுப்போம் என்றார்கள். ஆனால், இப்பொழுதோ நம்மைச் சுற்றி நடந்தேறும் நிகழ்வுகளை காணும் பொழுது 1920களுக்கு முன்பிருந்த காலத்திற்கு முன்பாக நம்மை கடத்திச் சென்று விட்டார்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது.
வாயால் வடை சுட முடியுமா? முடியும் என்கிறார்கள் முழித்துக் கொண்டே கனவு காணச் சொல்பவர்கள். கடந்த நான்கு வருடங்களில் என்ன மாதிரியான அடிப்படை கட்டமைப்புகள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் சென்றடைந்திருக்கிறது.
எந்தப் பக்கம் திரும்பினாலும் எதிர் மறையான செயல்பாடுகளும் அதனையொட்டிய ஓலங்களும் தான் காதில், கண்ணில் விழுகிறது. வெற்று மாயையைக் கொண்டு ஊதிப் பெருக்குவதால் யாருக்கு லாபம்? அவர்களைச் சுற்றி உடனடியாக லாபமடையும் ஒரு சில சதவிகிதத்தினரைத் தவிர. அது உண்மையான வளர்ச்சியா, நிலைக்குமா? வந்த மாதிரியே ஒரு நாள் அதற்கும் கூடுதலாக பிய்த்துக் கொண்டு சென்று விடாதா?
அப்படிச் சமச்சீரற்ற ஒரு வளர்ச்சிக்குள் வாழ எத்தனிப்பவர்களும் அதே நிலப்பரப்பையும் இயற்கை வளங்களையும், சாலைகளையும் தானே பகிர்ந்து கொண்டு ஒரு தேசத்து மக்களாக வாழ வேண்டும். எப்படி ஆயிரம் ஆண்டு காலங்களாக அதே மனிதமற்ற முறையில் மேல் கீழ் என மக்களை பிரித்து, பகிர்ந்து கொண்டு வாழ மனமற்ற மடையர்களாக வாழ்ந்தோமோ அப்படியே மீண்டும் இந்த நவீன காலத்திலும் எப்படி ஒப்பேத்த முடியும்?
நடிப்பும், பொய்யும் புரட்டும் செய்து மக்களை என்னவோ நேற்றே அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட காட்டு வாசிகளைப் போல நினைத்துக் கொண்டு அத்தனை சூழ்ச்சிகளோடு தங்களுக்கு வேண்டியதை இன்று அரசு அதிகாரம் தங்கள் கைகளில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எப்படிச் சுரண்டி வஞ்சிக்க முடியும்?
இது அனைவருக்குமான தேசமில்லையா? எப்படி வெக்கமே இல்லாமல் நாடு நாடாக சென்று அதுவும் தனிவொரு விமானத்தில் பறந்து ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்து இறங்கி வரும் தேவ தூதனைப் போல கைகளை ஆட்டிக் கொண்டே உலாவித் திரிய முடிகிறது?
நீ வரும் ஊரிலிருந்துதானே பத்து வயதிற்கும் குறைந்த வயதுடைய சிறுமிகளை கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள்? இன்னொரு இடத்தில் இன்னொரு சிறுமியை வன்புணர்ந்து கொன்றவனுக்கு தண்டனையாக ஆறு மாதம் தண்ணீர் சப்ளை செய்யச் சொல்வதும், மாட்டுக்கறி வைத்திருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் அடித்துக் கொல்வதும், தன் மதம் சாரா தன்னுடைய நாட்டு குடிமக்களை வேற்றொரு நிலத்து மக்களாக பாவிக்கச் சொல்லி வெறுப்பு அரசியல் பேசுவதும், அனைவருக்கும் சென்றடைய வேண்டிய கல்வியை தட்டிப் பறித்து நுழைவுத் தேர்வு என்ற பெயரில் பிற மாநில கல்வி திட்டத்தில் படித்து தேர்ந்த மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி இத்தனை பெரிய மக்கட் தொகை கொண்ட தேசத்தில் எது போன்ற கூட்டு பங்களீப்பு கடைசி கிராமம் வரை சென்றடையும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற வாக்கில் செய்து முடித்திருக்க முடியும்.
மோடியைப் பற்றி இது வரையிலும் நேரடியான எது போன்ற விமர்சனங்களும் என்னிடமிருந்து வைத்தது கிடையாது. ஆனால், இப்பொழுது வைக்கிறேன். இது வரையிலும் ஊதிப் பெருக்கிய அளவிற்கு கட்டியெழுப்பப் பட்ட பிம்பத்திற்கு பைசாவிற்கும் உபயோகமற்ற ஒரு பிரதமரே இவர். தன்னுடைய தேசம் பொருத்தும், அதன் பிரச்சினைகள் குறித்தும், தன்னையொத்த பிற்படுத்தப்பட்ட மிகவும் கீழ் நிலையில் வாழும் சக தேச மனிதர்களைப் பற்றியும் கிஞ்சித்தும் அறிவற்ற ஒரு மூடராகத்தான் ஓடித் தேய்கிறார்.
நல்ல உடைகளையும், உணவையும் வழங்கி, எழுதிக் கொடுப்பதை பல நாள் பழக்கிக் கொண்ட (எரிச்சலூட்டும்) உடல் மொழியைக் கொண்டு வழங்குவதற்காக, ஒரு வாடகைக்கு அமர்த்திக் கொண்ட உள்ளீடற்ற ஒரு மனிதராகாத்தான் இவரை என்னால் பார்க்க முடிகிறது.
நாம் 1980களிலேயே கவர்ச்சி அரசியல் என்றால் என்ன அதன் விளைவுகள் எது போன்றது என்பதனை எம்.ஜி.ஆரிடமிருந்து கற்றுக் கொண்டோம். இவர் இப்பொழுதே இந்த இணைய பலூனை நம்பி சாலையை பெருக்கிறார். கங்கையை சுத்தம் செய்கிறார். கழிவரைக்கு குழி தோண்டி செங்கல் வைத்து சிமெண்ட் பூசுகிறார். கிழவிக்கு செருப்பு போட்டு விடுவது என்று காலாவதியாகிப் போன மயக்க அரசியல் அதுவும் உலகம் விழித்துக் கொண்ட வேலையில் செய்து வருகிறார். இது யாரை ஏமாற்ற? தன்னையே ஏமாற்றிக் கொள்கிறோமே ஒரு பிரதமராக என்று ஒரு நொடி மின்னலாக தோன்றி மறையாதா?
அத்தனையும் வெற்று வார்த்தைகள். அண்மையில் வந்த ஒரு செய்தி- உலகில் வாழ
லாயக்கற்ற அதி மாசுப்பட்ட நகரங்களில் 15ல், பதினான்கு நகரங்கள் இந்தியாவில் இருக்கிறது என்று ஓர் அறிக்கை தெரிவித்திருக்கிறது. அனைத்தும் இவருடைய ஆட்கள் ஆளும் மாநிலங்கள். இப்படி தலை வெட்டுப்பட்ட கோழி போல ஓடும் திசையறியாமல் ஓடிக் கொண்டும், தன்னுடைய மக்களுக்கிடையே வெறுப்பு அரசியலை விதைத்து “கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வதற்கு” இணையாக அரசியல் செய்து கொண்டிமிருந்தால், அவைகள் கடைசியாக நம்மை எங்கே கொண்டு நிறுத்தும்?

ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தனுக்கும் கீழே... அதி விரையில் அது சாத்தியமே. வரும் 2019ல் மட்டும் வெற்றியை அவர் தலையில் தூக்கி வைத்து விட்டால், புரோகிதர் இல்லாமலே காரியம் செய்து விடுவார்கள்.

Wednesday, March 07, 2018

பெரியார் எப்போது யாருக்காக சாதி வெறியர் ஆனார்?: Periyar

தொலைக்காட்சி விவாதங்களில் அபாண்டமாக ஓர் உண்மைக்கு எதிராக பரப்பப்படும் பிரச்சார வாதங்களை சொல்லிவிட்டு, அதனை எதிர் தரப்பினர் அவர்கள் எத்தனை பொய்யர்கள் என்பதாக சான்றோடு எதிர் வாதம் வைக்கும் பொழுது- பொய்யர்களுக்கு ச்சீ இதுவும் ஒரு பொழப்பா என்று கூனிக் குறுகும் உடல் மொழியை காண்பதில் ஒரு சுவராசியம் இருக்கிறது.
அப்படியான ஒரு விவாதத்தை புதிய தலைமுறையில் கண்டேன். பெரியார் ஒரு சாதி வெறியர் என்றும், சாமி சிலைகளை உடைத்தார் என்றும் அப்பட்டமான ஒரு பொய்யை தான் சாமார்த்தியமாக எடுத்து வைப்பதாக வைத்து விட்டு நகர்ந்தார். அதற்கு பதிலுரைக்கும் விதமாக தொல். திருமா அவர்கள் மிக அழகான விதத்தில் அந்த உண்மையை எடுத்து வைத்தார். அப்பொழுது அந்த மய்யநிலையாளர் அவசரமாக தண்ணீர் எடுத்து அருந்திய விதம் பார்க்க கண் கோடி வேண்டுமென்பதாக இருந்தது.
பெரியார் சாதி வெறியை ஊட்டி வளர்த்திருப்பாராயின் எதற்காக அவரை நீங்கள் எதிர்த்திருக்க வேண்டும்? உங்களுடைய அரசியலே சாதிய கருத்தாக்கத்தில், பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில் தானே ஆயிரம் ஆண்டு காலங்களாக ஒப்பேறி வருகிறது. அதற்கு வெடி வைக்க வேண்டித் தானே, அதன் ஆணி வேரான இறை நம்பிக்கை என்ற பெயரில் மனிதனை பிரித்தாளும் இடமான நீங்களே நம்பாத அந்த கடவுளர்கள் சன்னிதிக்குள் நீங்கள் விரும்பாத பிற இந்து மனிதர்களையும் அழைத்துக் கொண்டு நுழைய வேண்டி வந்தது.
அந்த ஊரில் உள்ள அனைத்து ஹோமோ செப்பியன்ஸ்ம் ஆலயத்திற்குள் நுழைய வேண்டுமென்றவர் எப்படி ஒரு சாதி வெறியர் ஆகிப்போனார்? பெரியார் என்ன நாட்டில் உள்ள அனைவரும் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக்க வேண்டுமென்றா ஓர் இயக்கத்தை நடத்தினார்? ஒரு முட்டாளுக்கு கூடத் தெரியும் அது எந்த நாட்டிலும் முடியாத விடயமென்று.
ஏனெனில் அதனின்று விடுபட சில அடிப்படை அறிவு விரிவாக்க பயிற்சி தேவைப்படுகிறது. மனத்திண்மை தேவைப்படுகிறது. எதனையும் கேள்விக்குள்ளாக்கும் ஆராய்ச்சி மனோபாவம் தேவைப்படுகிறது. இயல்பாக நமக்கு வருவது எந்த வித சலனமுமில்லாத தன் முயற்சியற்ற மரவட்டை வாழ்க்கை. அந்த ஓட்டத்தில் இத்தனை ஆழமாக சிந்திக்க திராணி ஏது?
எனவே பெரியார் நம் எல்லாரும் துணுக்குற்று முழித்துக் கொள்ளும் வகையில் எதனை எதிர்த்தால் கவனத்தைப் பெற முடியுமோ அந்த இடத்தை கேள்விக்குள்ளாக்கினார். அதிலொன்றுதான், தானே காசு கொடுத்து வாங்கி போட்டுடைத்த பிள்ளையார் சிலை உடைப்பு. அதனை அன்றைய நீதி மன்றமே கூட அவரிடத்தில் கேள்வி எழுப்பும் பொழுது என்னுடைய காசு நான் வாங்கி உடைத்தேன் என்றாராம்.
வரலாற்றிலிருந்து எதனை யாரிடமிருந்து மறைப்பதற்காக இத்தனை பொய்களை, இத்தனை அதிகார பீடத்திலிருந்து இயக்குகிறார்கள்? அப்படியாயின் யார் எதனைப் பெறக்கூடாது? இது இன்று நேற்று தொடங்கியதாக தெரியவில்லை. வீழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு 300, 500 வருடங்களையும் தாக்கு பிடித்து மீண்டும் மீண்டும் மனித மேன்மைக்கு எதிரான துரு பிடித்து நாசியை துளைக்கும் கேவலத்தை அரங்கேற்ற துடிக்கிறார்கள்.
அதற்கு உதவியாக ஜீன்ஸும், டிஷர்ட்டும் போட்ட புது யுக இளைஞ, இளைஞிகளும், கமலும், ரசியினும் இன்னும் புதுப்புது வேடமணிந்து தொடர் மனித மேம்பாட்டிற்கு எதிரான காட்டுமிராண்டி அடிமை தனத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போவது மனித இன அவலமன்றி வேறென்ன?

Thursday, February 22, 2018

திராவிடத்தால் வாழ்ந்தோம்: Impact of Dravida Movement

திராவிட ஆட்சிகாலங்களில் ”அ, ஆ, இ, ஈ...” என்று
பள்ளிகளுக்கு சென்று படிக்க ஆரம்பித்தவர்களுக்கு...

ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். என்னை போன்ற ”இந்தியா 2” (have not) பகுதியிலிருந்து படித்து முன்னேறியவர்களின் அறைகூவலிது. திராவிட இயக்கம் மட்டும் தோன்றாமலிருந்து இருந்தால் இன்னமும் நானெல்லாம் ஏதாவது ஒரு பொட்டல் காட்டில் ஆடு, மாடு மேய்த்து கொண்டிருப்பேன்.

ஹிந்துத்துவா பிள்ளை பிடிப்பவர்கள் என் கையில் ஒரு காவி கொடியை சொருகி அவனை அடி, இவனை பிடி என்று ஏவும் வேலைகளை செய்து கொண்டிருப்பேன்.

எதுவும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாதுதானே? அப்படி கிடைத்துப் போனால் அதற்கு பின்னான உழைப்பின் மகிமையை நாம் உணர்ந்திருக்க மாட்டோம் தானே?

அந்த இடத்தை நாம் அடைய நிறைய இழப்புகளை நமக்கு முன்னானவர்கள் அனுபவித்திருப்பார்கள். அதன் பலனை மட்டும் நாம் அனுபவிக்க அனுபவிக்க நம் பாதையின் அருமை மறப்போம்... அப்பொழுதான் இந்த குறளை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

உரை: ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
**********************

வரலாறு வாசிக்கிற நேரம் வந்திருச்சு. மேலோட்டமான திரித்தலுக்கு மீண்டும் பலியாகிவிட்டால் மீண்டு எழ பல யுகங்கள் ஆகலாம். ஆழ சிந்திக்க வாசிப்பு அவசியம். இதுவே தூசி தட்ட சரியான தருணம்.

Tuesday, February 13, 2018

அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல் = Deprogressive Move!

கடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.

அண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.

என்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக் கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது

ஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே?

சரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே? தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா?

கோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா? எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த "அறநிலையத்துறைக்கு" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா?

அந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா?

ஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.

அது மட்டுமா? ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் "அறநிலையத் துறை." இது எத்தனை பெரிய புரட்சி? சமூக சீர் திருத்த எட்டல்??

இதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும்? அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்? எதற்காக?

எது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி!

Related Posts with Thumbnails