Sunday, August 30, 2020

கரையில் திரிந்த பாலூட்டி திமிங்கலமானது எப்படி? Part 3

தரையில் வாழும் மீன்களைப் பற்றி இரண்டு பதிவிற்கு முன்பு பேசினோம். அவ்வளவு முயற்சி செய்து பல மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கிட்டு தத்தி தவழ்ந்து கரையேறி நீர்நில வாழ்வனவாக படிமலர்ச்சி அடைந்து பிறகு, ஊர்வனவாக ஊர்ந்து டைனோசர்களாகி அதிலிருந்த படியே சிலவை சிறகுகளைப் பெற்று வானத்தில் மிதக்கும் பறவைகளாகின‌ என்றறிந்தோம் (see previous post--> டைனோசர் பறவையான கதை: Part 2).
குளிர் இரத்த உயிரினங்களாகிய ஊர்வனவைகள் பறவைகளாக படிமலர்ச்சி அடைவதற்கான இடைப்பட்ட காலத்தில் பகுதி வெப்ப இரத்தப் (warm blooded) உயிரினங்களாகி, சிறகுகளுக்குத் தேவைப்படும் முடியையும் பெற ஆரம்பித்திருந்தது. சுமாருக்கு 340 மில்லியன் ஆண்டு வாக்கில் ஊர்வன-பறவை இனத்திற்கும் இடைப்பட்ட நிலையிலிருந்த எட்டு அங்குல நீளமுள்ள‌ ஓர் ஊர்வன உயிரினமே முதல் பாலூட்டிக்கான மூதாதை. அது அனேகமாக ஓர் எலியையொத்த பூமிக்கடியில் வாழும் பாலூட்டியாக இருந்திருக்கக் கூடும்.
அதிலிருந்து கிளைத்து பன்முகத்தன்மையோடு பல்கிப் பெருகிய பாலூட்டிகளில் சில
இனங்கள் மீண்டும் தண்ணீருக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது ஏன் என்பதே
இன்றையப் பதிவு. தண்ணீருக்குள் வாழும் பாலூட்டிகள் என்றவுடனே நமக்கு நினைவில் வருபவை திமிங்கலங்கள், டால்பின்கள், கடல்சிங்கம், வால்ரஸ் கடல்பசுக்கள். இவைகள் நிலப்பகுதியில் வாழ்ந்தவைதான் என்றாலும் தண்ணீருக்குள் சென்று வாழப்பழகியது என்பதற்கு என்ன சான்று. அதற்கு நாம உதாரணமாக‌ எடுத்துக் கொள்ள வேண்டிய விலங்கு, நமக்கு ரொம்ப‌ அறிமுகமான நீர்யானை (hippopotamus - hippopotamus amphibius).
இவைகள் பெரும்பகுதியான நேரம் தண்ணீருக்குள்தான் வாழ்கிறது. அதாவது மூக்கையும், கண்ககளையும் மட்டும் தண்ணீர் மட்டத்திற்கு மேல் வைத்துக் கொண்டே அப்படியே தண்ணீருக்குள்ளரயே கிடக்கும் (அட நம்ம எருமை மாடே அப்படித்தானே!). அதற்கென அதோட மூக்கையும், கண்களையும் கவனிங்க எவ்வளவு அழக தண்ணீரில் வாழ்வதற்கான தகவமைவை பெற்றிருக்கிறது என்பது விளங்கும். அது மட்டுமல்ல அவைகள் தண்ணீருக்குள்ளாகவே இனப்பெருக்கத்தையும் செய்கிறது. அதற்குத் தேவையான முழுமையான உணவு மட்டும் அங்கேயே கிடைத்திருந்தால் நிலப்பரப்பிற்கு வந்து மேய்ச்சல் செய்யும் தேவையே இல்லாமல் போயிருக்கக் கூடும்.
இந்தப் பின்னணியில் திமிங்கலங்களின் மூதாதைகளை வைத்துப் பார்த்தால், அவைகள் (ஒட்டகத்தையொத்த‌) குளம்பிகளைக் கொண்ட தாவர உண்ணிகளாகத்தான் இருந்திருக்கிறது என்பது புலனாகும். 52 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இன்டுஹையஸ் (Indohyus) என்ற ஒரு தாவர உண்ணி ஓப்பீட்டுளவில் சிறிய மானளவு கொண்ட குளம்பியொன்று தண்ணீரையொட்டியப் பகுதியில் பாதுகாப்பிற்கெனவும், உணவிற்காகவும் திரிந்து கொண்டு, நிலப்பகுதிக்கும் சென்று உண்டு வாழ்ந்திருக்கிறது. அதனுடைய எலும்பு மற்ற பாலூட்டிகளைக் காட்டிலும் அடர்வானதாக இருந்திருக்கிறது. ஏன் அப்படி பருமனுடன் இருந்திருக்க வேண்டும்; நீரில் மூழ்கும் போது மிதந்து விடாமல் இருக்க. பற்களில் ஐசோடோப் சோதனை செய்து பார்க்கும் பொழுது நீரில் உள்ள பிராணவாயுவை உட்கிரகிக்கும் திறனுடனும் இருப்பது தெரியவந்தது.

திமிங்கலமாக அந்த இன்டுஹயஸ் தாண்டியது கால் கிணறு. அதற்கு அடுத்து 50
மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு படிமலர்ச்சியில் வந்த ஆம்புலோசெடஸ் (ambulocetus) என்ற இடைப்பட்ட இனம் கிட்டத்தட்ட முன்னேறி திமிங்கலம் பக்கத்தில் வந்தாலும் இன்னும் நான்கு கால்கள் அதில குளம்புகளோட இருக்கிறது. அதனை வைத்துக் கொண்டு இன்றைய சீல்கள் மாதிரி தரைக்கு வந்து தவழ்ந்து திரிந்து கொண்டிருக்கிறது.
அதிலிருந்து மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னால் வந்த இனமான ரோதோசெடஸ் (rodhocetus) இன்னும் நுட்பமான உறுப்புகளைப் பெறுகிறது; நீண்ட மண்டையோட்டையும், மூக்குத்துளைகள் இன்னும் பின்னாடி நகர்ந்தும் தகவமைவு கொள்கிறது. இருப்பினும் 50 அடி நீளமுடைய ஒரு விலங்கு அத்தனை எடையைத் தூக்கிக் கொண்டு சிறிய இரண்டு முன்னங்கால்களையும், மாற்றமடைந்த இடுப்பு எலும்பையும் கொண்டிருந்ததால் நிலத்தில் நடக்கவே வாய்ப்பற்று முழுதுமாக தண்ணீரில் இருக்கும் நிலைக்கு போனது.
சரி, ஏன் அவைகள் தண்ணீரைத் தேடி சென்றிருக்க வேண்டும்? நிலத்திலும், தண்ணீரிலும் வாழ்ந்த பெரும் பெரும் டைனோசர்கள் மாண்டழிந்த நிலையில் பின்னால் வரும் விலங்குகளுக்கு உணவிற்கோ, தங்களது பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தல் இல்லை எனும் நிலை வருகிறது. அங்கு புதுவிதமான வாழ்விடம் (ecological niche) அவைகளுக்கு முன்னால் பரந்து விரிந்து கிடக்கிறது. அந்த நிலையில் படிமலர்ச்சியில் சிறு சிறு மரபணு மாற்றங்களின் (mutation) மூலமாக‌ வேகமெடுத்து, புதிய வாழ்விடங்களை நிரப்பிக்குள்ளும் நிலைக்கு விலங்கினங்கள் தள்ளப்படும். அப்படியாகத்தான் தாவர உண்ணியாக கரையோரத்தில் நடந்து திரிந்த ஒரு குளம்பி பிற்காலத்தில் திமிங்கலமாக நமக்கு காணக்கிடைத்தது. ஏன்னா, நவீன திமிங்கலம் ஒரு பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடியே தான் முழுமையடைந்த‌தாம்.


Ref: Why Evolution Is True by Jerry A. Coyne

டைனோசர் பறவையான கதை: Part 2

360 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி டிக்டாலிக் ரோஸியே என்ற மீன், எப்படி நீர் நில வாழ்வனவற்றிற்கு இடைப்பட்ட ஒரு மீனினமாக கரையேறி தத்தக்கபித்தாக்கன்னு நடக்க ஆரம்பித்ததால் நிலத்தில் வாழப்போகும் முதுகெலும்புடைய உயிரினங்களுக்கும் அடிப்படையாய் அமைந்ததுன்னு போன பதிவில் பேசிக்கிட்டோம் (காண்க: மீன்கள் நடந்தனவா ஓர் படிமலர்ச்சிப் பார்வை! :Part 1). 


தண்ணீருக்கும் நிலத்திற்குமாக சென்றுதான் வாழ வேண்டுமென்ற அந்த இரட்டைதன்மை இல்லாது, முழுமையாக நிலத்திலேயே வாழும் ஊர்வனவாக அடுத்து வந்த காலகட்டங்களில் அவைகளில் சில பரபரவென தேவையானவற்றை பெற்றும், இழந்துமென முழுமையான தகவமைவைப் பெறுகிறது. இது வரையிலுமே அவைகள் யாவும் குளிர் இரத்த உயிரினங்களாகவே (cold blooded animal) உள்ளது. அதாவது அவைகளின் உடல் வெப்பம் சுற்றுப்புறச் சூழலுக்குத் தகுந்த மாதிரி மாறாது.
ஆனா, அதை வைத்துக் கொண்டே இந்தப் பேரினம் ஆயிரக்கணக்கான டைனோசார் இனங்களையும் உள்ளடக்கி ஏறத்தாழ 175 மில்லியன் ஆண்டுகள் இந்தப் பூமியை ஆண்டிருக்கிறது. அவைகள் காகத்தின் ஒரு அளவிலிருந்து மூன்று மாடி கட்டட அளவுடைய டைனோசர்களாக வாழ்ந்த போதிலும் ஏதோ போதாமையொன்று தொடர்ந்து கொண்டே வருகிறது.
காகம் அளவே இருந்த ஒரு டைனோசரையொத்த ஓர் உயிரினமே பறவைக்கும் ஊர்வனவற்றிற்குமான இணைப்பு இனமாக ஆர்க்யோப்ரெக்ஸ் (archaeopteryx) இருந்திருக்கிறது. ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இது முழுமையான ஒரு பறவையுமல்லாமல் ஊர்வனவுமல்லாமல் இருந்திருக்கிறது; ஆனால் அதனை நோக்கிய நடை. அண்மையில் சீனாவில் மேலும் தெளிவான பறவைகளுக்குறிய குணாதிசியங்களுடான இடைப்பட்ட வேறு சில இனங்களும் படிமங்களாக இப்பொழுது கிடைத்திருக்கிறது.
அவற்றில் சில வேகமாக ஓடி முன்னங்கால்களை படக்கென்று காற்றில் வீசி இரையைப் பற்றி வாயிக்கு எடுத்துச் செல்லும் நுட்பம், பறவைகளுக்கு தேவையான அதே தசை கட்டமைப்பை மெல்ல உள்வைத்து நகர்கிறது படிமலர்ச்சி. இதற்கிடையே பறவைகளின் இறகுகளில் இருக்கும் முடியையொத்த ஒரு தகவமைப்பை பெறுகிறது. இது எதற்காக தோன்றியிருக்கக் கூடும் என்பதில் இரண்டு விதமான கருதுகோள்கள் உண்டு: இணையைக் கவர்வதற்கு அல்லது உடலை வெப்பமேற்றி வைத்துகொள்ள.
அப்படியாக தோன்ற ஆரம்பித்த வகைகளில் ஆண்டுகள் ஓட முன்னங் கால்களில் தேவையான அளவு மாற்றங்கள் பெற்று, மரத்தில் தொற்றி ஏறவும் ஆரம்பிக்கிறது. அந்த தகவமைவு ஓர் உயரமான மரத்திலிருந்து மிதந்து ஊர்ந்து அடுத்த மரத்திற்கு செல்ல உதவியது. இங்கே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமானதொரு கேள்வி- இது போன்ற தகவமைகளைப் பெற எது உந்து சக்தியாக அமைகிறது என்பது. உணவிற்கான போட்டி, பாதுகாப்பிற்கென, தகுதியான உடற்கட்டமைப்பை கொண்டு தப்பிப் பிழைப்பதற்கான தகவமைப்பை எது பெற்றிருக்கிறதோ அதனை இயற்கை இயல்பாகவே தக்கவைத்துக் கொள்கிறது.
ஊர்வனவற்றின் தாடைகளிருந்த பற்களை இழந்து, இடைப்பட்ட இனமான வெப்ப இரத்த (warm blooded) தகவமைவைப் பெற்றும், முதுகுத்தண்டுவடம் நேரடியாக மண்டையோட்டோடு இணைவதை தவிர்த்து, கீழிறிருந்து வந்து இணைவதுபோல் பெற்று, எலும்பின் எடை குறைத்து உள்ளீடற்ற எலும்புகளைப் பெற்று, முன்னங்கால்களை பறப்பதற்கு ஏதுவாக அமைத்துக் கொண்ட நாளில் மிதந்து நகர்வதிலிருந்து, வானத்தில் சிறகடித்து பறக்க ஆரம்பித்தது அந்த மாண்டழிந்த டைனோசர்கள்.
பி.கு: சொந்தக் கவனிப்பு - நல்ல உயரமான கோழியை உறிச்சிட்டு கொஞ்சம் கற்பனையை தட்டி விடுங்களேன் நீங்க 🦖 பார்ப்பீங்க.



Read: Why Evolution Is True by Jerry A Coyne.

மீன்கள் நடந்தனவா ஓர் படிமலர்ச்சிப் பார்வை! :Part 1



குரங்கையும் நம்மையும் பக்கம் பக்கமா வைச்சுப் பார்த்திங்கன்னா இரண்டு பேருக்கும் உடல் புற உறுப்புகளின் அமைவு ரீதியாக எந்த விதமான வித்தியாசங்களும் இருக்காது. ஏன் ஆடு மாடுகளுக்கே கூட ஒரே விசயம்தான், இல்லையா? எப்பொழுதாவது எண்ணிப் பார்த்திருக்கீங்களா என்ன பெரிசா நாம மட்டும் பொதக்டீர்னு வானத்திலிருந்து குதித்து வந்து சிறப்பு வாய்ந்த ஒரு பாலூட்டி இனமான மனிதனாகி விட்டோமென்று?
ஒரிரு விசயத்தில நாம அவைகளை காட்டிலும் படிமலர்ச்சியில அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து கொண்டோம். இரண்டு கால்களில் எழுந்து நின்றது, சிந்திப்பது மற்றும் சிக்கலான சொற்களைக் கொண்டு பேசுவது. ஏனைய விசயங்கள் அனைத்தும் நமக்கும் மற்ற பாலூட்டிகளுக்கும் ஒன்றுதான்; கைகள், கால்கள், காதுகள், கண்கள், மூக்கு, வாய், ஆசன வாய், இனப்பெருக்க உறுப்புகள் இத்தியாதி இத்தியாதி...
அப்படி என்றால் எப்படி இது போன்றதொரு ஒத்திசைவுன்னு கேட்கத் தோன்றும் இல்லையா. இதில வாலில்லா குரங்கிற்கும் நமக்கும் ரொம்பவே ஒப்புமையில் நெருங்கி வருவோம். இருப்பினும் அவைகள் முழுதாக மனித நிலையை எட்டாமலும் இருக்கிறது.
இங்கேதான் மனிதன் ஆதிக் குரங்கிலிருந்து வந்தான் என்றால் இடைப்பட்ட (transitional) குரங்கு இப்பொழுது எங்கே என்று கேட்பீர்கள். படிமலர்ச்சி அடைவது என்பது இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது, நுண்ணிய (micro) மற்றும் பெரியளவில் (macro).
இப்போ தண்ணீருக்குள் மட்டுமே வாழ்ந்த முதுகெலும்பு உடைய மீன் எப்படி நீர் நில வாழ்வனவாக (amphibian) படிமலர்ச்சி அடைந்த பொழுது, இடைபட்ட இனம் என்னவெல்லாம் மாற்றமடைந்தது என்பதனைக் கொண்டு நாம் எப்படி இந்த நிலைக்கு வந்து சேர்ந்தோம்னு ஒரு சிறு உதாரணத்தோடு பார்ப்போம்.
மீன்களின் மண்டை, கழுத்தே இல்லாமல் நேரடியாக முதுகெலும்போடு இணைக்கப்பட்டிருக்கும். விலா எலும்புகளும் பெரிய அளவில் ஒரு கூட்டையொத்த அமைவில் இல்லாமல் ஓடியிருக்கும். மேலும் தண்ணீரில் சுவாசிப்பெதற்கென செதில்களை கொண்டிருக்கும், இல்லையா? இவை மூன்றிலும் சுமார் 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்த மீன் இனங்களில் சில மாற்றங்கள் உண்டாக ஆரம்பித்தது.
அதாவது நீரில் இருந்து வெளியேறி ஒரு குட்டையை விட்டு இன்னொரு குட்டைக்கு தாவி ஏறி முறையான நான்கு கால்களைப் பெறாமலேயே முன், பின் துடுப்புகளில் இன்றைய நம் கால், கைகளுக்கு பயன்படுத்தப் போகும் அதே எலும்புகளை மெல்ல மெல்ல படிமலர்ச்சியுனூடாகப் பெற்று வெளிக்கிட விடிந்தது, நீர் நில வாழ்வனவற்றின் முன்னோடி.
அந்த டிக்டாலிக் ரோஸியே (Tiktaalik roseae) என்ற இணைப்பு மீன் இனம் (missing link spp) மட்டும் அந்த ஆபத்தான விளையாட்டை மேற்கொள்ளவில்லை என்றால் நமக்கு கிடைத்த கால், கைகள் கிடைத்திருக்காது. ஏன்னா, அந்த மீனின் கால்களையொத்த துடுப்பில் இருந்த அடிப்படை எலும்பமைவே இன்று இன்னும் நுட்பமான முறையில், நீண்டு ஒடுங்கியென நம்முடைய கை, கால்களில் இருக்கும் அதே எண்ணிக்கையிலான எலும்புகளுமாகும். எத்தனை விந்தையான விசயம்?
இப்படித்தான் படிப்படியாக காலங்கள் தோறும் முயற்சியே திருவினையாக்கும் என்றளவில் உயிரினங்கள் யாவும் படிமலர்ச்சியடைந்ததின் உண்மை.
கீழ்கண்ட புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிக்க வாசிக்க ஆர்வமூட்டக் கூடிய பகுதியை கடக்கும் போது பகிர்ந்து கொள்கிறேன்.
Ref: Why Evolution Is True by Jerry A Coyne







Related Posts with Thumbnails