Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Thursday, December 31, 2020

கொரோனா தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது?: Covid 19 Vaccine

 கோவிட் வைரசோட புரதம் எதனால் ஆனதுன்னு நம்முடைய உடம்பிலுள்ள நோய் எதிர்ப்புச் செல்கள் கண்டுபிடிக்க முடியாம முட்டி மோதிக் கொண்டு இருக்கிறதாலே தான் அந்த நோயின் தாக்கம் நம்மை மரணிக்கும் வரைக்கும் எடுத்துட்டுப் போகுது. இங்கே தான் நாம கண்டுபிடிக்கிற இந்தத் தடுப்பூசி நம்மை அதனின்று காப்பாற்றும் அரணாக அமைகிறது. எப்படி?

கோவிட் வைரசோட புரதம் எதனையொத்ததுன்னு நாம கண்டுபிடிச்சு, அதை நம் உடலினுள் செலுத்தி உண்மையான கோவிட் நம்மை தாக்குவதற்கு முன்னால் நமது உடம்பு உள்ளே நாம தடுப்பூசி மூலம் அனுப்பின புரதத்தை தாக்க வைப்பது. இதனால் என்ன ஆகிறது என்றால், உண்மையான கோவிட் கிருமி உள்ளே நுழையும் போது, "இதோட நாம ஏற்கெனவே சண்டை பிடிச்சு வெளியில அனுப்பி இருக்கோமே"ன்னு நம்மோட உடம்பில் கொரோனாவிற்கான எதிர்ப்பு சக்தியை தயார்படுத்தி வைப்பது.
உடம்பின் நோய் எதிர்ப்புச் செல்களின் ஞாபகத்தில் அந்தச் சண்டையைச் சேமித்து வைத்துக் கொள்வதின் மூலம் உண்மையான கோவிட் நம்மை தாக்கும் போது, குறைந்த நேரத்தில் நமது எதிர்ப்புச் சக்தி, "ஓ இவிங்களான்னு" உடனே கண்டுபிடித்து டேமேஜ் அதிகமில்லாமல் பாதுகாத்து நம்மை நோய்வாய் படுவதில் இருந்து காப்பாற்றி விடுகிறது.
எனவே தடுப்பூசி நம் நோய் எதிர்ப்பு சக்திக்கு கை கொடுப்பான் தோழன்!

Monday, July 22, 2013

வாத மூட்டழற்சி ஓரு மரபணுப் பிறழ்வு - Rheumatoid Arthritis

என்னோட ப்ளஸ்டூ நாட்கள்லே எங்களுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுடைய வீடு என் வீட்டிற்கு போகும் வழியில் சாலையை பார்த்தபடி அமர்ந்திருக்கும். என் வீட்டிலிருந்து நாங்கள் சந்தித்து மாலைகளைக் கொல்லும் இடத்திற்கு மிகச் சரியாக 750 நடையடிகள் பிடிக்கிறதென்றால் அவனுடைய வீடு சரியாக 550வது அடியில் அமைந்திருக்கும்.

மாதத்தின் பல நாட்கள்ல நல்லாத்தான் இருப்பான். திடீரென்று படுத்தபடி எழுந்து அமரவே ரொம்பச் சிரமப்படுவதாகவும், அப்படியே எழுந்து நடந்து திரிந்தாலும் குன்றியபடியோ அல்லது சிரமத்திற்கு இடையேயோ நடந்து திரிவதாகவும் காணக் கிடைப்பான். ஒரு முறை அவனை அருகே அமர்த்தி வைத்து என்ன பிரச்சினை என்று விசாரித்தேன்.

அப்பொழுது கூறினான் எலும்புகளின் சந்திப்புகளில் உபரியாக கால்சியம் படிந்து இணைப்புகளை இயக்கவே முடியாதபடிக்கு வலி உயிர்கொள்வதாக இருக்கிறது என்றான். அதிலும் குளிர்காலங்களிலும், காலை வேலைகளிலும் இந்த பிரச்சினை அதிகமாக இருப்பதாக கூறினான். அன்று அதன் தீவிரம் உணர்ந்து கொள்ள முடிவதாக இல்லை.

இன்று ஒரு 26 வயது மதிக்கத்தக்க பெண்ணை சந்தித்தேன். அவளுடைய பெயர் லோலா ஜேன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள். பேச்சு முதலில் புகை பிடிப்பதனைப் பற்றியதாக அமைந்தது. அப்படியே நகர்ந்து கஞ்சா புகைத்தால் தான் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் அளவையும், கீமோதெரபியின் தேவையையும் குறைத்துக் கொள்ள முடியும் என்று தனது உறவினர், கலிஃபோர்னியாவில் இருந்து கூறியதாக கூறினாள்.

சட்டென்று எனக்கு உள்ளே மணியடித்தது. இத்தனை சிறு வயது, ஆரோக்கியமாக காட்சியளிக்கும் ஒருத்திக்கு எதற்கு கீமோதெரபி தேவைப்படுகிறது. சற்றே தலையை சாய்த்து எதற்காக கீமோ எடுத்துக் கொள்கிறாய் என்று அன்னியத்தை உடைத்தேன்.

அவ்வளவுதான் அடுத்த இருபது நிமிடத்திற்கு மேல் எனக்கு ரூமாட்டாய்ட் ஆர்த்தரைட்டிஸ் (Rheumatoid Arthritis) பற்றி அத்தனை விபரங்களையும் அவளுடைய சொந்த அனுபவத்தின் ஊடாக வழங்கி சில இடங்களில் அவளுடைய வலியையும் எனக்குள் நகர்த்தி மீட்டெடுத்துக் கொண்டாள்.

இந்த வகை ஆர்த்தரைட்டிஸ் கை/கால் விரல்களின் இணைப்புகளில் சிறு வீக்கமாக ஆரம்பிக்கிறது. முதலில் வலியுடன் ஆரம்பித்து எலும்பு கரைவதும், பின்பு சிறுகச் சிறுக விரல்களை வளைக்கிறது. இது ஒரு மரபணு சார்ந்த வியாதி. தன்னுடை உடம்பில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியே தவறாக நம்முடைய உடல் திசுக்களைத் தாக்குவது autoimmune disorder.

இந்த வியாதி எலும்பு இணைப்புகளில் மட்டும் பிரச்சினை கொடுப்பதோடு விடுவதில்லை. தொடர்ந்த உடல் சோர்வும் அவ்வவப்பொழுது உடல் காய்ச்சல் வழங்குவதுமாக தொடர்கிறது. ஒரு சூழலில் மொத்தமாக முடக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்து விடும் நிலைக்கு இட்டுச் செல்வதாக தெரிகிறது.

என்னுடன் பேசிக்கொண்டிருந்த லோலாவின் வீட்டில் நான்கு தலைமுறையாக இது பெண் குழந்தைகளுக்கே அதிகமாக மரபணுவின் மூலமாக கடத்தப் பெற்றிருப்பதாக கூறினாள். இது வரையிலும் இந்த வியாதியை முற்றிலும் குணப்படுத்த மருத்துவத்தில் எந்த தீர்வையும் எட்ட வில்லையாம். மேலாண்மை செய்து வைத்துக் கொள்வது ஒன்றே வழியாம்.

இவர்களுடைய குடும்பத்தில் பல தலைமுறைகளாக இந்த வியாதியை அனுபவித்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒன்றை கவனித்தாகக் கூறினாள். அது கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில் இந்த வியாதிக்கான எந்த அறிகுறியும், வலியும் அண்டுவதில்லை என்பதாக. கொள்ளுப்பாட்டி ஒன்று இதனை அறிந்து தொடர்ச்சியாக பதினொரு வருடங்கள் அடுத்தடுத்து குழந்தைகளை பெற்றிருக்கிறார்.

இல்லையென்றால் சற்கர நாற்காலியில் அமர நேரிடும் என்ற பயத்தின் அடிப்படையில். அது போலவே இனிமேல் குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியாது என்ற நிலையில் சற்கர நாற்காலியில் அமரும் நிலையும் ஏற்பட்டதாம்.

லோலாவின் வலியின் அனுபவம் பற்றி சொல்லும் பொழுது கேட்ட எனக்கே மயிற் கூச்சரிப்பு ஏற்பட்டது. பாதங்களை வைத்து ஒரு அடிக்கு இன்னொரு அடி எடுத்து வைப்போம் என்ற எண்ணமே கிலியை ஏற்படுத்துமாம்; ஏனெனில், ஒவ்வொரு அடியும் ஏதோ உடைந்த கண்ணாடி சிதில்களில் எடுத்து வைப்பதனைப் போன்ற ஷார்ப்பான வலியை கொடுப்பதாக அமையும் என்று கூறினாள்.

ஏன் இங்கு லோலாவைப் பற்றி குறிப்பாக பேசி இந்த வியாதியைப் பற்றி பேச வேண்டும் என்று தோணலாம்.  ஏன்னா, இந்த வியாதி பொதுவாக நாற்பது வயதிலிருந்து அறுபது வயதுடையவர்களிக்கிடையே எட்டிப்பார்ப்பதாக தெரிகிறது. ஆனால், லோலாவிற்கோ 26ஏ வயதுதான், பார்க்க ரொம்ப ஆரோக்கியமான இளம் பெண். விரல்களை நீட்டி இப்பொழுதே இந்த வியாதியின் அறிகுறியாக சிறிதே நுனிப்பகுதி வளைவதை காண்பித்தாள். கண்களில்தான் எத்தனை அயர்ச்சி. இது ஏன் எனக்கு என்பதாக.

ஒரு பெண்ணின் முட்டையும், விந்தணுவும் இணைந்த மறு நொடியிலிருந்துதான் எத்தனை விதமான மரபணு சமிக்கைகள் இரண்டு பெற்றோர்களின் குணாதிசியங்களை உள்ளடக்கி பரிமாறி, மறுபதிப்பு நிகழ்ந்து அதுவும் சரியான இடத்தில் வைக்கப்பெற்று, சரியான காலத்தில் ஒவ்வொரு உடல் சார்ந்த குணாதிசிய பண்புகள் வெளிக்கிளம்ப காரணங்களாகின்றன.

இதனில் எங்காவது ஒரிடத்தில் ஒரு குளறுபடியென்றாலும் வாழ்க்கை முழுதுக்குமே அந்த உயிரினத்தை அரைகுறையாகவோ அல்லது முழுமையாகவோ முடக்கி விடுகிறது. இத்தனை நமது சக்திக்கும் உட்படாத விசயங்களை எல்லாம் ஏதோ இயற்கையின் ஒரு இயங்கு விதிக்கு உட்பட்டு பெறப்பட்ட இந்த உடம்பையும், பரிணாமம் வழங்கிய களிமண் மண்டையும் வைத்துக் கொண்டு நான் அவனை விட செத்த செவப்பா இருக்கேன், காசு இருக்கு என்று ஜல்லி அடித்துக் கொண்டு ஒருவன் உயிரை இன்னொருவன் எடுத்துக் கொண்டிருப்பதை எந்த மரபணு வியாதி இயக்குகிறது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

சுயநலமே உயர்வு என்பதாகப் படுகிறது! அதுவும் மரபணுவில் பொதிக்கப்பட்ட ஒரு விசயம்தானே!!

Related Posts with Thumbnails