Monday, March 29, 2010

கோடியக்கரை பறவைகள் சரணாலயம்: Photography

கோடியக்கரை விலங்குகள் சரணாலயத்தில இருந்து விழுந்தடித்து வனச்சரகர்கிட்ட பேசி முடிச்சிட்டு பறக்கப் பறக்க சூரியன் ஓடி ஒளிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி அந்தாளைப் பிடிச்சி நிறுத்தி கொஞ்சம் என் கேமரா பெட்டிக்குள்ளர அடைச்சிக்கணுமின்னு ஓடினோம்னு இங்கே சொல்லியிருந்தேன், இல்லையா?

அதே மாதிரியே மிகச் சரியா சூரியனாரும் ஒப்பனை எல்லாம் போட்டுக்கிட்டு சும்மா புது மாப்பிளைக் கணக்கா இருந்தாரா, கீழே பாருங்க நீங்க கூட அழையா விருந்தாளியா விருந்துக்குப் போயி கை நனைச்சிட்டு வந்திருவீங்க, அந்த அளவிற்கு அந்தாளு அம்பூட்டு சேட்டை பண்ணிக் காமிச்சிருக்கார்.

கோடியக்கரை பறவைகள் சரணாலயம் கொஞ்சம் சொல்ல முடியாத அளவிற்கு சில மாற்றங்களை சந்தித்து வருகிறது, நம் கண்ணுக்கு முன்னாடியே திரும்பப் பெற முடியாத பாதையில் நடக்க வைச்சு கூட்டிட்டு போயிட்டு இருக்கோம். :-(

அங்கே இரண்டரை லட்சம் பூ நாரைகள் தரையிறங்கும் காலம் போயி இப்போ வெறும் ஐம்பதனாயிரம் கூட வருவதில்லையாம். தனிப் பதிவா எழுதி பேச வேண்டிய விசயங்கள், அவ்ளோ இருக்கு. சரி, வாங்க நாம சூரிய மாப்பிள்ளை உலாவில் கலந்துக்குவோம் இப்போ...





நிலாவை கொஞ்சம் அப்படியே ஓரங்கட்டி வைச்சிட்டு முகம் சிவக்க ஆரம்பிச்சிருக்கும் பெண்ணான கீழ்வானம்...





கொஞ்சம் பக்கமா போயி பார்ப்போமேன்னு நெருங்கினா - என்னத்தா நான் சொல்லுறது...





முழு சரணாலயத்தின் சிம்னியாக தூரமா நின்னு சிவக்க வைக்கிறாரு பாருங்க...





இன்னும் கொஞ்சமே இழுத்து பிடிச்சிப் பார்த்தா அவரே சிவந்து காமிக்கிறார்...




அதுக்கு கீழே தனிமையில் உப்பு ஏறிப்போன தண்ணீரில் உணவைத் தேடியலையும் வண்ணநிற நாரை (Painted Stork)...



போஸ்ட்கார்டுக்கு உகந்த மாதிரி அழகு காட்டி நிற்கும் மாப்பிள்ளை...






அப்படியே வலப்பக்கமா திரும்பும் போது பார்த்தா, தன் கழுத்துப் பகுதியையே கேள்விக் குறியா மாத்தி சோகத்தோட தன் எதிர்காலத்தைப் பற்றி கவலைப் பட்டு நிற்கும் ஃபளமிங்கோ...





இந்தப் பறவைகளின் வருகைக்கு குறுக்காக நின்று அந்தப் பகுதிகளில் விரைந்து உப்பேற்றம் செய்வதின் பொருட்டு நீரின், நிலத்தின் அமிலத் தன்மையை மாற்றி உணவுப் பெருக்கம் தடுக்கப்படுவதில் ஒரு வேதியற் தொழிற்சாலையின் பங்கு அதிகமென தெரிகிறது, அதன் ஒற்றைக் கை கீழே...





பி.கு: மேலே உள்ள படங்களில் சிலவற்றை சென்னை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் பார்த்திருந்தால் அதற்கு நான் என்ன செய்றது ;-) ...

Monday, March 15, 2010

பேசாத்துணை



கட்டிய துணைவியும்
சுயநலம்வேண்டி
சுமங்கலியாய்
முன்சென்றோட
பிள்ளைகளோ பிழைப்புத்தேடி
அவசர உலகத்தில்
கரைந்து போக...

ராஜ யோகாசனத்தில்
இன்று நானமர்ந்து பொழுதைக்
கழித்தாலும்
அடுத்தவேளை உணவைத்தேடி
நானெழுந்து அமர்கையில்
அகங்காரமேதுமற்று
பட்டினி நிகழ்த்தாமலும்
பாசத்திற்கு விலைவைக்காமலும்
கூடவே ஒட்டிப்பிறந்தவனாய்
பாரம் சுமக்க காத்துநிற்கும்
கைத்தடி!



குறிப்பு: இதனை என் குரலில் வாசித்து கேக்க-



Wednesday, March 03, 2010

உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா!

இந்த ஜோதியில நானும் கலந்துகிறேனேன்னு எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் என்னுடைய எண்ணங்களை இந்தச் சந்திப்பில் இதன் பொருட்டு முன் வைக்கலைன்னா வரலாறு என்னை மன்னிக்கவே மன்னிக்காது என்பதால் இதோ என்னுடையதும், இந்த தேசிய நீரோடையில் ;-).

அந்த விடியோவை நானும் பார்க்க நேர்ந்தது. அதற்கு முன்னால் அந்த இளமை ததும்பும் அழகிய இளம் கன்று நித்தியின் ஒரு சில யுட்யூப் பிரசங்க க்ளிப்புகளை அளவற்ற எரிச்சலுடன் பார்க்க நேர்ந்தது. அவ்வளவு முதிர்ச்சியற்ற அணுகுமுறை! ம்ம்ம்... சரி இந்த நிலையில் இப்பொழுது இந்த விடியோ. எனக்குப் புரியவில்லை. ஏன், மக்கள் இப்படி ஒரு சாதாரண மனித நிகழ்வினை ஒட்டி இத்தனை வெறுப்பும், அருவறுப்பும் கொள்கிறார்கள். ஒரு நிமிடம் அந்தாளின் காவி உடையை தவிர்த்து பார்த்தால், அந்த க்ளிப்பில் அப்படி என்ன தவறாக அவர் நடந்து கொள்கிறார்?

அந்த காவி உடையைச் சுற்றி நாம் வைத்திருக்கும் நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கென ஒருவரை நடிக்கவும் வைத்து, பிழைப்பும் நடத்தி பின்பு அது நிறமிழக்கும் பொழுது ஏன் வருத்தப் படுகிறோம்? எப்பொழுது இது போன்ற பத்தாம் பசலித்தனத்திலிருந்து நமது மனதிற்கு விடுதலை? அந்த விடியோவில் எனக்கு மிகவும் வருத்தம் தருவதாக அமைந்த ஒரு விசயமென்றல் அது நித்தியின் சோம்பேறித்தனம் அளவற்ற முறையில் வளர்ந்து கிடப்பதனை காணும் பொழுதுதான் :-). அது, தன் வேலையை தானே செய்து கொள்ளக் கூட அடுத்த ஆளை நம்பி இருப்பது போன்ற தோற்றம்...

அப்படி என்னதான் செய்து விட்டார் என்று கேட்டீங்கன்னா, மனுசன் அசையவே மாட்டீங்கிறார், அங்கும் ராஜா கணக்கா கை விரலை சுடுக்கினால் ஓடி ஓடி சேவகம் செய்யும் அந்தப் பெண். அந்தப் பெண்ணும் எவ்வளவு மரியாதையின் நிமித்தமாக செய்வதாக எனக்குப் படுகிறது. அது போன்றே மிக்க பாசத்திலும், காதலிலும் இருவர் இணைந்து இருப்பதாகவே எனக்கு அது விளக்கியது. அங்கே நமக்கு என்ன வேலை?

இந்த சாமியார்/காவி உடை அதனையொட்டிய நமது எதிர்பார்ப்பு, அதற்கென அவர்களின் அளவற்ற நடிப்பு இவைகளை தவிர்த்து பார்த்தால் அங்கே நமக்கு வேலையே கிடையாது. அந்த ஆளு எப்படியோ இருந்திட்டுப் போறார் என்று எண்ணிவிடும் பட்சத்தில். பிரச்சினை நம் பக்கமே அதிகம் என நினைக்கிறேன்.

கி. ராஜநாராயணன் தொகுத்த 'மறைவாய் சொன்ன கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து படித்த ஒரு கதைதான் இந்த இடத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது. அதில் ராஜாவும், மந்திரியும் ஒரு விசித்திரமான ஆராய்ச்சியில் இறங்கி இருப்பார்கள், ஒரு பெண்ணின் கற்புத்தன்மையை கண்டறிய - அவளும் எப்படி அவர்களை ஏமாற்றிவிட்டு அவள் தனக்கு தாம்பத்திய சுகம் மறுக்கப் பட்ட போதும், அவர்கள் இருவரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு கள்ளத்தனமாக ஒருவனுடன் அந்தச் சுகத்தை அடைகிறாள் என்பதே அந்தக் கதையின் கரு - அதற்கு நீதியாக அந்தக் கதை கூறவருவது, மனிதனில் பாலியல் நாட்டம் எப்படியேனும் அடைந்தே தீர வேண்டிய ஒரு நடை முறை உடல் செயற்பாடு. அதனை எப்படி அடைத்து வைத்தாலும் ஏதாவது ஒரு வகையில் வழி கண்டு அதனை அடைந்தே தீரும் என்பதே அது - அதற்கென அது போன்ற செயல்பாடுகள் கொஞ்சமும் நாம் எதிர்பாராத, கற்பனைக்கு எட்டாத முறைகளிலெல்லாம் சென்று அவர்கள் அந்த தாகத்தை அடைந்திருக்க காணக் கூடுமென்று சொல்லி முடித்திருப்பார்கள்.

இதன் அடிப்படையில் வாழ்க்கையை ஓரளவிற்கு அவதானிக்கும் எவரும், இது போன்ற உடற் செயல்பாடுகளின் அவசியத்தை அறிந்து கொள்ள முடியும். அப்படி அறியும் பொழுது இது போன்ற மாயைகளிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ள முடியும். பசி, ஏப்பம், சிரிப்பு, அழுகை, வெக்கம் போன்றதும் தானே பால் நாட்டம், கிளர்ச்சி எனும் விசயமும் மனித உணர்வுகளில் கட்டப்பட்ட ஒரு உணர்ச்சி - விடுங்கப்பா, சாமியார்களின் இமேஜை நாம் எதிர்பார்ப்புகளிலிருந்து கட்டவிழ்த்து. எதிர்கால சாமியார்களே உங்கள நீங்களே ஏன்யா இப்படி திருட்டு வேலையில போட்டுக்கிறீங்க. வாழ்ந்து பார்த்திட்டு வாங்கப்பா! ஹாஹாஹா - ஹையோ! ஹையோ!! என்னயெல்லாம் அட்வைஸு பண்ண வைச்சிட்டாய்ங்களே ...

Monday, March 01, 2010

மலம்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography

ஓர் அருமையான நவம்பரில் மேகங்கள் மலைகளின் மீது புரண்டு அவைகளின் அழகை போர்த்தி மறைத்துக் கொண்டிருந்த நாளில், எங்களின் கார் விரைந்து கொண்டிருந்தது சிறிதே அந்த அழகை பருகிவிட வேண்டுமென்ற கொலை வெறியுடன்.

சூரியனார் கடையை இழுத்து மூடும் பரபரப்பான இயற்கைச் சூழலில் கடைசியே கடைசியென வரைந்து காட்டிவிட்டு ஒளிந்து கொள்ளும் இடைவேளைக்கிடையில் நான் உள்ளே புகுந்து கேமராவிற்குள் சுருட்டிக் கொண்டதை இந்த வையகமும் கண்டு களிக்கட்டுமென்ற ...

சுமாருக்கு ஒரு 75 படிக்கட்டுகளை முட்டி கெஞ்ச கெஞ்ச ஏறியதிற்குப் பிறகு இப்படியாக இருந்துச்சு பூமி கீழே...




மலம்புழா நீர்த் தேக்கத்தின் ஒரு பகுதி மலை முகடுகளை உள்ளடக்கியவாறே...




எங்களுக்காகவே கடைசி சவாரியென்று காத்து நிற்கும் சேட்டன்கள்...




இங்கிருந்து ஆரம்பிக்கிறது சூரியன் தன் கலையுணர்வை ஓளிக் கற்றைகளைக் கொண்டு, நிறங்கள் அப்பிக்காமிப்பது - மேகத்தின் கு்த்தாட்டத்தையும் கவனிக்கத் தவறாதீர்கள்...




சைனீஸ் ட்ராகன் ஒன்று எதனையோ தாவிப் பிடிக்கும் நோக்கோடு ...




படம் வரைய வானப்பலகை தயாராகி விட்ட நிலையில்...




இன்னும் வண்ணங்களை அடர்வாகக் கலந்து...




அப்படியாக கண்டு மிதந்து கொண்டே வரும் பொழுது கொஞ்சம் வெளி வானத்திற்கு (outer space) கேமராவுடன் சென்று கீழே பூமியைப் பார்க்கும் பொழுது ;-) ...



மீண்டும் திருப்பி படகுக்கே பிடித்து இழுத்துக் கொண்டு வந்திட்டாய்ங்க, இந்தப் படத்தை எடுக்க...




அப்படியே பார்த்திட்டே வரும் போது திடுமென்று இன்னொரு பத்து நிமிடத்திற்குள்ள இப்படியும்...



கூட வந்த நண்பர்களுக்கு அந்த ஒளி வெள்ளம் அவர்களின் இதயத்தை துளை போட்டு எதையோ திருடிக் கொண்டது போல, அவர்களின் நிறமும் கண்களில் இருக்கும் கிறக்கத்தையும் பாருங்க - பார்ததாவே தெரியும் இயற்கைக்கும் நமது மன நிலைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இல்லையா?






பி.கு: தெரியாதவர்களுக்கு - இந்த மலம்புழா அணைக்கட்டு (Malampuzha Dam) பாலக்காட்டிலிருந்து (கேரளா)ஒரு பத்து கிலோமீட்டர்கள் தொலைவிலையே அமைந்திருக்கிறது. வெறும் 40 ரூபாய்க்கு 45 நிமிடத்திற்கும் மேலாக நீரில் நம்மை மிதக்க வைக்கிறார்கள். திட்டமிடாமல் அரக்க பறக்க இருட்டு தட்டிய நேரத்தில் எங்களுக்கு அந்தப் பயணம் கிடைத்தது அதுவே இந்த ஒளியின் விளையாட்டை வாரி எங்களுக்கு வழங்க ஒரு வாய்ப்பை கொடுத்தது...

Friday, February 19, 2010

பதின்ம கால மன டைரிப் பதிவுகள்...

பதின்ம வயது டைரிக் குறிப்பில இருந்து சில பக்கங்கள் அப்படிங்கிற தலைப்பின் கீழே ஒரு வீட்டுப் பாடம் கொடுத்தாக இங்கே சிறுமுயற்சி முத்துலெட்சுமி. சில தொடரழைப்புகளின் தலைப்பை பார்த்தாவே ஹ்ம்ம் நாமும் கலந்துகிடலாமேன்னு ஒரு ஆர்வம் தொத்திக்கும் அதில இதுவும் ஒண்ணு. எழுத கூப்பிட்டாளுக்கு இங்க வைச்சு ஒரு நன்றி சொல்லிக்கிறேன்.

இந்த தலைப்பில ஒரு முரண் இருக்கு என்னயப் பொருத்த மட்டிலும். நான் பதின்மத்தில இருக்கும் போதெல்லாம் ஏற்கெனவே பிரிண்ட் பண்ணி இருக்கிற சொந்தப் புத்தகப் பக்கங்களிலிருந்து மீண்டும் கை ஒடிய ஒடிய வண்டி வண்டியா நோட்டுப் புத்தகங்கள் வாங்கி எழுதித் தள்ளவே அம்மாவை சுரண்டணும். அம்மா, அப்பாகிட்ட போய் நின்னு ஏதாவது கொடுக்கிறத வாங்கிக் கட்டிகிட்டு உபரியா இந்த நோட்டுக்கள் வாங்கித் தர ஒத்துக்க வைக்கிற ஒரு சூழல்.

அப்படி இருக்கும் பொழுது, பள்ளி ஆறோ ஒரு அரசாங்கப் பள்ளி. அங்கே நீந்தி பேர் பட்டு வெளிக் கிளம்பும் காலம் வரையில் எவரும் 'டேய்! டைரின்னா என்னான்னு தெரியுமாடா, அத எப்படியெல்லாம் பயன்படுத்திக் கணுமின்னாவது தெரியுமாடான்னு' கேக்கிற அளவில இருந்த மாதிரி ஆசிரிய/சியைகளும் என் ஞாபக ரேடாருக்கு முன்னாடி துளாவிப் பார்த்தாலும் தெரியவில்லை. இது போன்ற ஒரு வளர்ப்புச் சூழலில், டைரிங்கிற ஒரு விசயமே 17 வயசு வரைக்கும் எட்டிப் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கவில்லைன்னு நான் சொல்லி இனிமே நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நிலையில் இருக்க மாட்டீங்கன்னு தெரியும்.

இருந்தாலும் மண்டைக்குள்ளர இருக்கிற அந்த அளவற்ற நோட்டுப் புத்தகங்களில் பொதிஞ்சு போன பச்சை தாள்களிலிருந்து சிலதை அப்படி விசிறிக் காமிப்பது சிலருக்கும் எனக்கும் தேவைப்படலாங்கிறதாலே... நாலு நாளா இப்படி ஒரு விசயத்தை ஏத்துக்கிட்டமே என்ன எழுதலாம்னு எண்ணியபடியே உள்ளரே தூக்கிப் போட்டுட்டு அப்படியே அப்பப்போ மிதந்து வார விசயங்களின் மீது கொஞ்சம் பார்வையை பட்டுப் படாமல் தடவ விட்டு திரும்பவும் காணாம அடிச்ச படியே நாட்கள் நகர்ந்துச்சு.

இதெல்லாம் எப்படின்னா மறு அசை போடுவது மாதிரிதானே! கிடைக்கும் போது வேக வேகமாக இந்த கால்நடைகள் எல்லாத்தையும் உள்ளே வைச்சு அடைச்சிட்டு பின்பு ஓய்வில் இருக்கும் பொழுது எடுத்து மறு அசை போடுவது போல. என்னுடைய பதின்மத்தின் வழியாக கிடைத்த அனுபவ சேகரிப்புகளை எடுத்து அசை போடுவதில் அப்படி ஒரு கடினம் இருந்து விட முடியாது. ஏனெனில் ஆழமாக உராய்ந்து போன விசயங்கள் அது எதன் பொருட்டு ஆனாலும் பசுமையாக ஓர் ஓரத்தில் படிந்தே கிடக்கும் என்ற நம்பிக்கையில் அமர்ந்தே விட்டேன் இன்று முங்கி எடுக்க.

இந்த பதின்ம வயதினூடாகத்தானே வாழ்வின் அனைத்து உணர்ச்சிகளையும், முரண்களையும், சமூக கட்டமைப்புகளையும் ஓரளவிற்கேனும் வயதிற்கு ஒன்றாக அறிந்திருக்கக் கூடும். வாழ்வின் எதிர்மறை செயல்களான சுயநலமும், பொறாமைக் குணமும் வார்த்தெடுக்க பயன்படுத்தப் போகும் பட்டறையெனவும், ஒரே குடும்பமாக ஒற்றை மின் விசிறிக்கி கீழே காலம் சுழற்றி அடித்து திசைக் கொருவராக பல்லாங்குழி ஆடப்படப் போகிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் உண்டு களித்து ஓட்டுக் கூரையைப் பார்த்தபடி ஏதேதோ பேசிக்கொண்டு உறங்கிப் போன ஒரு அன்பால் பிணைந்த கூட்டம். ஒரே சிந்தனை, மன ஓட்டம் என அன்பைத் தவிர அங்கே பகிர்ந்து கொள்ள வேறு ஒன்றுமில்லை என்றமைந்த குடும்பமைப்பு. வாழ்வின் அருமை உணர்த்தவென அமைந்த பதின்ம படி நிலைகளவை. இவைகளை இன்னதென்று அறிந்து, அதனை முழுமையாக புரிந்து இது போல ஒரு நாள் தலைகீழாக நின்றாலும் அது போன்ற ஒரு காட்சி இன்று கிடைக்காதென நினைந்து வாழ்ந்திருக்கக் கூடிய அறியாப் பருவமும் அந்த பதின்மம் தானே.


ஊசித் தட்டானாக சிறகடித்து காணாங் கோழியாக நாள் முழுக்கவும் இங்குதான் செல்கிறோம், இதுதான் எங்களுடைய இன்றைய மிஷன் என்று சொல்லி தீர்மானித்துவிட முடியாதபடிக்கு அமைந்த தினப்படி நண்பர்களுடனான கேளிக்கை விளையாட்டுக்கள் தான் எத்தனை. பரிணாமத்தில் வேட்டையாடி பிழைத்து இன்று மனிதர்களாக காட்டிக் கொள்ள எத்தனிக்கும் மனிதர்களுக்கிடையே இருந்து அப்பவே விட்டு விலகி மணிக் கணக்காக வேலி ஓணான்களையும், சிறு வகை வேலிப் பறவைகளையும் தேடி திரிந்த காலமது. மண்டை உடைதல்களும், சிறு சிறு வீரத் தழும்புகளுமென உடலெங்கும் காயங்களால் எழுதிக் கொண்டதும் அதுவே சுவடுகளாக தன் பதின்மம் சுட்டும் கையேடு என்றறியாமல் எழுதி தீர்த்ததும் அதே பதின்மத்தில்தானே.

காதலுக்கென பள்ளி நண்பி ஒருத்தியின் வீட்டுப் பாட நோட்டை கெஞ்சி அடித்து வீட்டுக்கு வாங்கி வந்து அச்சு பிறழாமல், அவள் எழுத்துகளில் போடும் சுழிப்புகளின் அழகில் மயங்கிய நேரம் போக அந்த நோட்டு/புத்தகங்களுக்கு, எதிர்த்த வீட்டில் சினிமா கொட்டகையில் வேலை பார்க்கும் ஒருவரிடம் அழகான சினிமா போஸ்டர் வாங்கி அதில் எனது பதின்ம வயதுக் காதலை குறியீடாக காட்ட அட்டை போட்டு கொடுத்தனுப்பி எனது வேதிய உடற் செயற்பாடுகளை அறிந்து கொள்ள உதவியதும் இந்தப் பதின்மம்தான்.

பள்ளிப் பருவத்தில் தொடங்கிய பள்ளிகளின் மீதான வெறுப்பு அப்படியே இங்கும் தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறது. பள்ளி சென்ற நேரத்தில் சக நண்பர்களுடன் புழங்கிய நேரம் போக பள்ளி கட்டடத்தின் வேலிகளுக்குள் ஒரு வேற்றுக் கிரக வாசியாக தடித்த தோல்களுடனும், வெம்பிய மனதுடனும் சிறைப் பறவையாக திரிந்திருக்கக் கூடுமென்று இப்பொழுதும் என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. மாலை வேலையில் எனக்குப் பிடித்த நண்பர்களுடன் வரும் வழியில் செய்யும் அட்டகாசங்கள் அந்த எட்டு மணி நேர வாசனையை துடைந்தெறிந்து நாளைய நோக்கிய எதிர்பார்ப்பை விதைத்து அந்த மன நிலையை கடக்க வைத்திருக்கிறது. இப்பொழுது நிதானமாக நின்று யோசித்தால் அது யார் மீதான தவறு என்பது கொஞ்சமே விளங்குகிறது.

இதுவரையிலுமே கவனித்திருக்கக் கூடும் பள்ளிப் புத்தகங்களை தவிர்த்து பிற விசயங்களை படிப்பதற்கான ஒரு புறச் சூழல் அமையா வாழ்வமைப்பு என்பதனை. இருப்பினும் அப்பாம்மாவின் உறுத்தலற்ற வாழ்வியல் சூத்திரங்களான, தனித்துவம் பேணல், தனி மனித மனச் சுதந்திரத்தின் அவசியம், விரும்பிய அளவில் சுதந்திரமாக விட்டுத் திருப்புவது, எனக்கும் அப்பாவிற்குமான இயல்பான நட்பு முறை - கடைசியாக பள்ளி இறுதியாண்டில் "தம்பீ, தோலுக்கு மேலே வளர்ந்திட்டே, நண்பன் மாதிரிதான் இனிமே பாவிக்க முடியுமென்ற அந்த பண்பான வார்த்தைகளும்," யார் ஏதாவது என்னைப் பற்றி அப்படி இப்படிக் கூறினாலும் "அவன் அப்படி செய்திருக்க மாட்டானே"ங்கிற இன்றளவும் உள்ள அம்மாவின் அசாத்தியமான நம்பிக்கையும் கூடுதல் பொறுப்பை என்னிடமே வழங்கிவிட்டது. அன்று தொடங்கிய வாழ்வியல் பாடம் அந்தப் பட்டறையில் பயின்ற எனக்கு இன்றளவும் தோல்விக்கும்/வெற்றிக்குமான முழு பொறுப்புகளை நானே முகம் கொடுத்து யார் மீதும் விரல் நீட்டும் கெட்ட பழக்கத்தை பழகிக் கொள்ளாதவாறு பார்த்துப் பழகிக் கொண்டதும் அந்தப் பதின்மத்தில்தானே.

அப்பாவின் அந்தப் பண்பு நிலையும் அம்மாவின் பொறுப்புணர்வும் ஒரு கலவையாக என்னுள் இறங்க 15 வயதிற்குப் பிறகு பள்ளியில் கொஞ்சம் ஈடுபாடு கூடிக்கொண்டது. அதற்கு என்னைச் சுற்றி அமைந்த சமூக மக்களின் அழுத்தமும் ஒரு காரணமாக அமைந்து போனது. இருப்பினும் அங்கும் என் விருப்பப்படியே கணக்குப் பாடங்களுக்கு ஒளிந்து உயிரியல் பிரிவை தேர்ந்தெடுத்ததும் அதற்குத் துணையாக வீட்டில் உள்ளவர்களின் "கணக்குப் போட்டுப் பாடங்களை" தேர்ந்தெடுக்க வைக்கும் குறுக்கீடுகளும் இல்லாமல் போக படிப்பு விசயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த உதவியாக இருந்தது.

அதுவே பின்னாளில் காடுகண்டிக் கழுதையாக மேற்கு மலைத் தொடர்களில் சறுக்கித் திரியும் வாய்ப்பையும் பெற்று, இன்றும் பொருளாதார ரீதியில் பெரிய அளவில் சாதித்துக் காட்ட முடியாதெனினும் மனசிற்கு நெருக்கமாக எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கையை திருப்பிக் கொள்ளும் அந்த திசை திருப்பும் துடுப்பை என் கையிலேயே அமைத்துப் பார்க்கும் அளவிற்கு அந்தப் பதின்ம வாழ்வுப் பட்டறை சுதந்திரத்தை கொடுத்துப் பார்த்தது.

அதுவே பள்ளிகளில் இருந்த போதும் சரி, கல்லூரிகளின் தொடக்கத்தில் ஆரம்பித்த பதின்மத்தின் இறுதி நிலையிலும் சரி உடை அலங்காரங்களில் கொஞ்சம் வித்தியாசமாக தலைக்கு எண்ணெய் வைக்காமல் நீண்ட கேசத்துடன் போவதற்கும், குத்தூசி போன்ற ஒடிந்த தேகம் உடையவனாகினும் கை வைக்காத செய்தித் தாள்களை ஒத்த டி-ஷர்ட்கள் அணிந்து செல்வது என நீண்டது. அப்பொழுதெல்லாம் வகுப்பு ஆசிரியர்கள் மீண்டும் வீட்டுக்கு அனுப்பியோ அல்லது வார்னிங் கொடுத்து மீண்டும் மற்றவர்களுடன் சேர்த்து கொள்வது வரைக்குமான தனித்துவம் பேணலாக தொக்கி நிற்கிது ;-).

இன்றளவிலும் 'தெக்கிக்காட்டான்' பெயர் வைத்துக் கொள்வது வரைக்குமாக தொடர்கிறது. அதற்கும் இதற்குமான வயது வித்தியாசம் 21 வருடங்கள். எனினும், இன்னும் சில பேருக்கு நம்பிக்கை இருக்கிறது நான் ஒரு தண்ணியில் வெந்துவிடுவேன் என்று. பார்ப்போம். இறுதியில் யார் வெல்கிறார்கள் என்று;-) .

கூட்டிக் கழித்து எனது பதின்மத்தை திரும்பிப் பார்த்தால் வாழ்க்கை எனக்கு குறைவில்லாமல் அந்த கூர்மைத் தீட்டல்களுக்கான ஆயத்தங்களை வாழ்வுச் சாலையின் இரு மருங்கிலும் வஞ்சகமில்லாமல் காட்சியகப் படுத்தியே வந்திருப்பதாய் இன்று மெல்ல மறு அசை போடும் பொழுது என்னால் உணர முடிகிறது.


இத் தொடரைத் தொடர நான் அழைக்க விரும்புவது...

தருமி

காட்டாறு

மீன்துள்ளியான்

செல்வநாயகி

Wednesday, February 17, 2010

அன்னியமுணர்ந்த ஒரு பொழுதினில்...





மகளின் உச்சி முகர்ந்து
வழிந்தோடிய கண்ணீர் மறந்து
முடிக் கற்றைகளினூடாக
கன்னத் திட்டுக்களில்
உதடு பதிக்க
முயன்ற பொழுதினில்...
கண்ணீரின் உப்புச்சுவை நாவறிய
மகளென்றும் பாரா துதறி
அனிச்சையாக எனை மறந்த
ஒரு பொழுதினில்
நானும் புத்தனானேன்
மனைவி மக்கள் துறவாமல்...

நொடிநேர சுயகொப்பளிப்புகள்
உறவின் முண்டுகளில்
வலிமுட்களேற்றும் ரணங்களறிவதில்லை!

Sunday, February 14, 2010

எங்க ஊரிலும் வெள்ளை மழை: Snow Photography

கடைசியாக சொல்லிக்கிற மாதிரி வெள்ளை மழை பெய்தது அட்லாண்டாவில் 2001ல் தான். அப்பொழுது கிட்டத்தட்ட ஒரு அடிக்கும் அதிகமாக பொழிந்தது. அதுக்குப் பிறகு இப்போதாங்க ஓர் ஒண்ணரை நாள் கிடப்பது போல 6 இஞ்சிற்கும் மேலாக வெள்ளி மதியம் தொடங்கி நள்ளிரவு வரையிலும் பெய்தது.

சனிக்கிழமை காலையில எழுந்தவுடன் முதல் வேலை எனக்கு வேணுங்கிற மட்டும் புகைப்படங்கள் தட்டிக்கிறதுதான். அவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கும். கோடை காலம் வரப் போகுது பாருங்க, கொஞ்சம் குளு குளுன்னு இருக்கட்டுமேன்னுதான் ;-).


கிடைச்ச இரவு ஒளியை பயன்படுத்தி...


என் கூடு இருக்கும் வீதி - நிறத்தை வைத்து தெக்கி வீட்டை கண்டுபிடிச்சிக்கோங்க :) : ஒளியின் விளையாட்டை கவனிக்க ஆரம்பிங்க...


உடையணிந்து அழகு பார்க்கும் நேரத்தில் பிழம்பு கொண்டு உருக்கிப் பார்க்க ஆசைப்படும் சூரியன்...



நீல நிற வானத்திற்கு வெள்ளை வண்ணம் அப்பிப்பார்க்க எத்தனிக்கும் மரத்தூரிகை...



ஒளியின் விளையாட்டு...



மேலும் ஒளியின் வர்ணஜாலம்...



மோதிரம் அணிந்து கொண்ட நிலையில்...



எங்களுக்கும் கை உறை பூட்டிப்பார்க்க ஆசை அதான்...




பி.கு: வெள்ளை மழை பொழிகிறது என்று கூறியவுடன் எனக்கு நிறைய புகைப்படங்கள் வேணும்னு கேட்டு என்னய உற்சாக கோதாவில இறக்கி விட்ட என் தம்பீ மீன்துள்ளியானுக்கு ஜில்லுன்னு இந்தப் புகைப்படங்களை கொடுக்கிறேன்... :)

Related Posts with Thumbnails