Thursday, December 31, 2020

சங்கப் பாடல்களில் புலி

 நேற்று வனவியல் ஆராய்ச்சியாளரும், இந்திய வனவுயிரி நிறுவனத்தின் இயக்குநருமான (Wildlife Trust of India) டாக்டர் அஷ்ரஃப் அவர்களின் சங்க இலக்கியத்தில் புலியைப் பற்றிய குறிப்புகள் என்று ஒரு ஒன்னரை மணி நேரம் ஜுமில் காணொளி மூலமாக உரையாற்றினார்.

இவருக்கு தமிழில் இருக்கும் ஆர்வமும், வன உயிரிகள் பொருட்டான ஆழமும் ஓர் அரிய கலவை. அசத்தி விட்டார், மனிதர். நிறைய ஸ்லைடுகள் இடையிடையே காண்பித்து மிக எளிதாக புரிந்து கொள்ளும் படியாக சங்க இலக்கியத்தின் மூலமாக புலிகளின் பங்கு தொன்மைய தமிழ் பண்பாட்டில் எப்படியாக குறிப்பிடப் பட்டிருக்கிறது என்பதை விளக்கினார்.
அந்த மெனக்கெடலுக்கு நிரம்ப வாசிப்பு தேவைப்பட்டிருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஹைலைட்டாக ஒரு சில விசயங்களை அவர் கூறியவற்றில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு மகிழ்வளிக்கும் என்பதால் இங்கே கொண்டு வருகிறேன்.
👉🏿 இந்தியாவிலேயே சங்க இலக்கியத்தில் மட்டுமே புலிகளைப் பற்றிய குறிப்பு அதிகமாக உள்ளதாம்.
👉🏿 புலிகளின் மேல் காணப்படும் வரிகளை வர்ணித்து - கொடுங்கேழ், கொடுவரி, வாள்வரி, குயவரி, பல்வரி, சிறுவரி என்பதாக எழுதப்பட்டிருக்கிறது.
👉🏿 புலிகளுக்கு பல பெயர் உண்டு அவைகள்- உழுவை, வேங்கை, வயம், வயமா(ன்), வல்லியம், கொடுவரி, குயவரி, பல்வரி, சிறுவரி.
👉🏿 பிடித்தமான ஒரு வரி - "கடையல் அம் குரல வாள் வரி உழுவை - அகம். 277" - அதாவது புலியின் உறுமலை சங்கத் தமிழ் பாடல் ஒன்றில், தயிர் கடையும் ஓசையுடன் இணைத்து எழுதி வைத்திருக்கிறார்கள். அதனை அஷ்ரஃப் அவர்கள் மிக அழகாக ஒரு காணொளி துணுக்குடன் இரண்டையும் ஒலிக்க விட்டார். வாவ்!
👉🏿 இருப்பதிலேயே அசத்தலான ஒன்று - வன உயிரிகளை, வனங்களின் பாதுகாப்பு சார்ந்து மண்டை பிளக்கும் விதத்தில் இன்று நாம் ஆராய்ச்சிகளை செய்து, அங்கு வாழும் பூர்வ குடிகள் மீதும், பூமியின் பருவநிலை மாறுபாட்டையும், பனிப்பாறைகள் உருகி வருவதையும், அதீதமான வேட்டையாடலையும் சுட்டிக்காட்டி ஆவணங்கள் தயாரிக்கிறோம்.
ஆனால்...
சங்கப்பாடல் போற போக்கில் இப்படியாக ஆய்ந்தறிந்து முன் வைத்து நகர்கிறது. இரண்டே வரிகள் பல மில்லியன் டாலர் புலிகள் பாதுகாப்பிற்கே வேட்டு வைப்பதனைப் போல...
........புதற்குப் புலியும் வலியே புலிக்குப்
புதலும் வலியாய் விடும்'. (200) ......
அதாவது, காட்டுப் புதரில் (thickets) அடைந்துகொண்டால் புலிக்கு வலிமை. புலி அடைந்திருப்பதால் அந்தக் காட்டிற்கு வலிமை. முடிஞ்சிதா! இதற்கு மேல் என்ன வேணும், Conservation of tiger பற்றிப் பேச.
இப்படியாக டாக்டர் அஷ்ரஃப் மேற்கோள் காட்டி பேசிய அனைத்தும் புதுமை. இந்த ஏரியாவிற்குள் வன உயிரியல், தமிழ் ஆர்வமுள்ள இளம் தலைமுறையை இவர் திருப்ப அநேக வாய்ப்புள்ளது. பயன்படுத்திக் கொள்வோமே! நன்றி
Ashraf Nvk
🙏
பி.கு: இதோ அவருடைய காணொளி இணைப்பு ஒர்த் யுவர் டைம்!

Sunday, December 13, 2020

நீட், மீத்தேன், ஜிஎஸ்டி - யார் தவறு?

 அணுவை பிளக்க முடியும்னு அவன் ஏன் யோசித்தான்?! சோ, நாங்க அணுகுண்டு தயாரிச்சோம்... 😁

அப்படி இருக்கு இந்த பின் வரும் வாதம்.

யார் மீத்தேன், நீட், ஜிஎஸ்டி போன்றவைகளை ஜிந்திச்சா அல்லது நடை முறைப் படுத்த முயற்சித்தான்னு கேக்கிறது என்ன மாதிரியான அறிவுடை வாதம்? 🙄

படித்தவர்கள், நாட்டை பொருளாதார ரீதியாகவும் அறிவுடைய கருவூலமாகவும் ஆக்கிப் பார்க்க அந்தந் துறை நிபுணத்துவம் உள்ளவர்களின் மூளையில் உதிப்பதும், அதனையொட்டி வரைவுகள் உருவாக்கிப் பார்ப்பதும் இயல்பானது. பிறகு எதற்கு எட்டு மணி நேரம் தானும் வேலைக்குப் போகிறேன் என்று சென்று வருவது?

சரி காங்கிரஸ் ஆட்சியில் மூளைக் குழந்தையாக கருத்தரித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக மாதிரித் திட்டங்களை செய்து பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

மீத்தேனோ, நீட்டோ பின் வரும் நாட்களில் பாதகத்தை தரக் கூடியது என்றறியும் நாளில் குப்பைத் தொட்டியில் கடாசுவது தானே நியாயம். ஆனால், சிந்தித்ததே தவறு என்று எந்த அறிவுடை நம்பியாவது பேசுவானா?🙈 

அதுவும் வாதமென்று சூத்தில் அடித்தான் பல்லு போச்சு என்ற வாதம் செய்கிறார்களே!

எனவே, நீட் நுழைவுத்தேர்வு, டெல்டா மீத்தேன் என்பவை மாதிரிக்கென சிந்தித்தவன் எழுதிப் பார்த்தான் அது தளத் தேவைகளில் அவசியமற்றதுன்னு அறிந்து கொண்ட நாளில் ஓரங்கட்டப்படுவதே அறிவுடமை! 

தாண்டித் திணிப்பேன் என்றால்... அதனை எப்படி புரிந்து கொள்வது என்பதை உங்களுடைய முடிவிற்கே விட்டுவிடுகிறேன்!!

Sunday, November 15, 2020

Eternity (A Peruvian movie 2017) : முடிவற்ற காலம்!

 ஒரு திரைப்படத்தைப் பார்த்தால் அந்தப் படத்தினுடைய கதாபாத்திரங்கள், கடைசியாக நம்முடன் கூடவே வாழ்ந்து போனவர்களாக உணர வைக்கத்தக்க வகையில் வடிவமைக்கப் பட பல காரணிகள் தேவைப்படுவதாக உள்ளது. திரைப்படத்தின் சூல், திரைக்கதை, படமாக்கப்படப் போகும் இடம், கதாப்பாத்திரங்கள் மற்றும் இயக்குனர்.

என்னுடைய விட்டேத்தியான ஞாபக சக்தி திறமைக்கு ஓர் ஆறு மாதத்திற்கு முன்பாக பார்த்த படத்தின் கருவோ, அதன் பெயரோ கூட நினைவில் நிறுத்த முடியாத ஆள். பார்த்த படத்தையே, கடல் மணலைப் போல கொட்டிக் கிடக்கும் திரைப்படங்களிக்கிடையே மீண்டும் போஸ்டரைப் பார்த்து ஏமாந்து போய், தேர்வு செய்து பத்து நிமிடங்கள் ஓட விட்டுப் பார்க்கப் பார்க்க பார்த்த மாதிரியே இருக்கே என்று வெளி வந்து விடும் அளவிற்கே உண்டு.
மேலும் படங்கள் கிடைக்கிறதே என்று துணிந்து க்ளிக்கி விடும் ஆளும் கிடையாது. பனி படர்ந்த மலைப்பாங்கான வெளி, பெரிய ஏரி, வானம் தொட்டு நீளும் பாலை அல்லது கடல் அதில் ஒரு படகு... இப்படியாக போஸ்டர் அமையும் படி இருந்தால் அந்த தூண்டிலை கண்டிப்பாக கடிக்கும் ரகம் எனது ரசனை.
அப்படியாக இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு போஸ்டர் கண்ணில் சிக்கியது. அந்தப் படத்தை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. படத்தின் கதாபாத்திரங்களான ஃபாக்சியும் (நிலா), வில்காவும் (கதிரவன்) பெரு நாட்டின் ஆன்டெஸ் மலை உச்சியில் அவர்களுடைய குடிசையோட மனதை விட்டு அகல்வேணா என்று அடம்பிடித்தபடி அமர்ந்து விட்டார்கள். வேறு வழியே தெரியாமல் இதை எழுதத் துணிகிறேன்.
படத்தின் பெயர் எடெர்னிடி (Eternity) 2017லில் வெளி வந்த படம். படத்தினுடைய கதாபாத்திரங்கள் இரண்டு பேருமே அய்மாரா மொழி பேசும் பழங்குடி முதியோர்கள். முதியோர்கள் என்றால் தங்களது அந்திமத்தின் கடைசி நாட்களை (உண்மையிலும்) வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அந்த இருவரைத் தவிர படத்தில் நான்கு செம்மறியாடுகள், ஒரு லாமா, நாய் உண்டு. இவைகளைத் தவிர்த்து அவர்களோடு நாமும் சேர்ந்து உண்டு, உறங்க, சும்மா கைகளாலேயே கருங்கற்களை கொண்டு அடுக்கப்பட்ட சுவரையும், கோரைப் புற்களால் வேயப்பட்ட கூரையுமான ஒரு குடிசை உண்டு. பின்பு வீட்டை விட்டு வெளியே வந்தால் பச்சைப் பசேல் என நெஞ்சில் ஒட்டும் கண்ணுக்கெட்டிய தூரம் கொண்ட ஈரமான புல்வெளி மேடும், பனிகாலத்தில் அதே மலைகள் உறைபனியை போர்த்தியுமென கதை சொல்லும்.
அந்தத் தம்பதிகளுக்கிடையேயான உரையாடல் எந்த ஒரு மிகைப்படுத்தலுமில்லா மெல்லிய ஓடையைப் போல நகர்கிறது. தங்களைச் சுற்றி பரந்து விரிந்துள்ள இயற்கையை அவர்களுடைய வாழ்வின் ஒரு பகுதியாக, கூடவே சுவாசித்து, உண்டு, உறங்கி எழும் ஏனைய உறுப்பினராக கையாள்கிறார்கள்.
ஒரு ஹைலைட் சொல்கிறேன்- கணவரான வில்கா, சேகரித்த தானியத்தை தனது மனைவியான ஃபாக்சியுடன் தூற்றிக் கொண்டிருக்கிறார். நிற்க முடியாமல் நின்று கொண்டு ஒரு கையால் தானியம் நிரம்பிய மடித்துணியை பிடித்த வாரே, மறு கையால் அள்ளி அள்ளி காற்றுப் பட போடுவார். அப்பொழுது, காற்று குறைந்து விடும். வில்கா உன்னால் தான் காற்றை வரவழைக்க முடியுமே, செய்யேன் என்று கூறுவார். சரி, வில்கா உட்காருங்க என்று கூறியபடியே, பெருக்க வைத்திருந்த துடைப்பத்தை காற்றில் சுழற்றி தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து "மிஸ்ட் அழகி வந்திருக்கா வலிமையான காற்றே ஆடிப்பாடிக்கொண்டு வா" என்று ஆடிப்பாடிக் கொண்டே ஃபாக்சி காற்றை அழைப்பாள்... சற்று நேரத்தில் அந்தத் திசையில் நல்ல வேகமான காற்று வீசும். இதில் என்ன சிறப்புன்னா, அந்த ஃப்ரேம் ஒரே டேக்கில் எடுத்தது போலவே இருக்கும். காற்று கூட அவர்களுடன் பேசிப் புழங்குவதைப் போன்ற ஒரு தோற்றத்தை நம்மிடம் கடத்துவார்கள்.
ஆன்டெஸ் மலையின் 15 ஆயிரம் அடி உயரத்தில் வைத்து படமாக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த மக்களின் நடவடிக்கைகளும் காணவில்லை. வயதான காலத்தில் அந்த தட்பவெப்ப சூழலுக்கு தகுந்தவாறு அங்கு வாழ்வதில் அவர்களுக்கு பிரச்சினை மேல் பிரச்சினையாகுகிறது. தன்னுடைய ஒரே மகன், நகரத்திற்கு சென்று விடுகிறான். நகரம் அவனை மொழியை மறக்கச் செய்து விழுங்கிவிட்டதாக அரற்றுகிறார்கள். ஏன் நம்மை இப்படி தனியாக தவிக்க விட்டுவிட்டுச் சென்று விட்டான், என்ன தவறு இழைத்தோமென்று அவர்களின் உரையாடலுக்கிடையே புலம்பலாக வெளிப்படுத்துகிறார்கள், மகனின் பிரிவை. வருவான் என்ற நம்பிக்கையும், அவ நம்பிக்கையுமென எதிர்பார்ப்பில் நம்மையும் கூடவே அமர வைத்து தூரத்து வெளியைப் பார்க்க வைக்கிறார்கள்.
பிரச்சினையின் தீவிரமாக தீக்குச்சிகள் தீரப்போகிறது. ஃபாக்சி தினமும்
தீக்குச்சிகளை எடுத்து எண்ணி எண்ணிப் பார்த்துவிட்டு வில்காவிடம் புலம்பி வருகிறாள். ஒரு நாள் தீர்ந்தும் விடுகிறது. வேறு வழியில்லாமல், தனக்கு வயதாகிவிட்டது என்று மறுத்தாலும் பக்கத்து ஊருக்கு வில்காவை அனுப்பி வைக்கிறாள். அவரும் லாமாவை துணைக்கழைத்துக் கொண்டு செல்லும் வழியில், முடியாமல் சுருண்டு விழுந்து விடுகிறார். கணவர் இரவுதட்டியும் வீடு திரும்புவதற்கான எந்த அடையாளமும் இல்லாததால், ஃபாக்சி தேடிக்கொண்டு செல்கிறாள். பிறகு இருவருமாக தள்ளாடி வீடு வந்தடைகிறார்கள்.
வந்து பார்த்தால், நாய் வேறு காணாமல் போனச் சூழலில் செம்மறியாடுகள் அனைத்தும் ஓநாயால் கொல்லப்பட்டு கிடக்கிறது. இருவரும் அரற்றி அழுகிறார்கள். அந்த ஃபாக்சியின் அழுகுரல் நம்மை எங்கோ கரையானைப் போல அரித்துக் கொண்டே இருக்கிறது. பிறகு தீக்குச்சிகளும் தீர்ந்து போன நிலையில் நெருப்பை காப்பாற்றி வைக்க சிறு ஓட்டில் சேமித்து வைத்த படி தூங்கச் செல்கிறார்கள். எதிர்பாரா விதத்தில் இரவில் தீ பரவி குடிசையும் எரிந்து நாசமாகி விடுகிறது.
பக்கத்தில் கால்நடைகளுக்கு போட்டு வைத்திருந்த குடிசைக்கு நகர்கிறார்கள், எப்படி கணவர் நோய் வாய்ப்பட, மகனாக வளர்த்த ஒரே லாமாவய் பசிக்கும் கணவருக்காக பலியிடத் துணிகிறாள் என்பதும், அதனை சமைத்து அவருக்கு ஊட்டுவதற்கு முன்பாக அவரின் கைகால்கள் காற்றில் உதறியவாரு உயிர் பிரிகிறது என்பதெல்லாம் நாமும் கூடவே அமர்ந்து அனுபவிப்பதைப் போல அவ்வளவு நேர்த்தியாக படைத்திருக்கிறார்கள்...
படத்தில் வந்த முதியோர்கள் இதற்கு முன்னாள் வேறு எந்த படத்திலும் நடித்ததாகத் தெரியவில்லை. அந்த முகங்கள் அந்தப் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியென அந்த முகமே கதை சொல்கிறது. இசையா மூச்! படத்தில் தாத்தா இசைக்கும் ஒரிரு புல்லாங்குழல் காட்சிகளைத் தவிர இசைக்கு வேலையே இல்லை. எப்படி இந்தப் படத்தை அந்த லெகேஷனில் வைத்து படமாக்கி இருப்பார்கள் என்பதே ஓர் ஆராய்ச்சிக்குறிய விசயம். அழுகாச்சிப் படம்தான். துணையோட பாருங்க, வாழ்வின் பல முரண்கள் கண் முன்னே துகள்களாக உதிர்வதை உணர்வீர்கள்.
ஃபாக்சி, வில்கா பெயர்கள் ஆன்டெஸ் மலைகளைத் தாண்டி நம் காதுகளில் பல நாட்கள் ரீங்காரித்துக் கொண்டிருப்பது உறுதி. A simply awesome movie!

Wednesday, September 09, 2020

மனிதனின் நாளைய பரிணாமம்: Future of Sapiens

கேள்வி: குரங்குகளின் பரிணாமம் தான் மனிதன் என்றால் இப்பவும் குரங்குகளின் பரிணாமம் தொடர்ந்திருக்க வேண்டும் அதான் அறிவியல் கோட்பாடு. அப்படி இருக்க ஏன் இப்பொழுது குரங்கிலிருந்து மனிதன் இன்னும் பரிணாமம் ஆகாமல் இருக்கிறான்? இதற்கு தயவுசெய்து அறிவியல் evidence மூலம் பதில் அளிக்க வேண்டும் சும்மா அது இது னு சமாளிக்க கூடாது. 

இப்பவும் நாம் படிமலர்ச்சி பாதையில் தான் பயணிக்கிறோங்கிறதிற்கு ஒரு சிறு உதாரணம். இதைப் படிக்கிறவங்க கோவிச்சிக்கப்பிடாது.

பதில்: நாம இன்றைய வாலில்லா குரங்கினங்களிலிருந்து பிரிந்து படிமலர்ச்சியடைய ஆரம்பித்து பல மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த பரிணாமக் கிளையிலிருந்து பிரிந்து நமக்கு இணையான நமது மூதாதையர்கள் வழிப் பாதையில் பெற்றும், இழந்து மென நடந்த மென் நடையில் இன்று சற்றேறக் குறைய ஒன்னரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய நவீன வடிவை எட்டி, ஜஸ்ட் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் குறைவான ஆண்டுகளாகவே நாகரீகமடைந்த கூட்டமாக வாழ்ந்து வருகிறோம்.
Image may contain: one or more peopleஇப்போ நீங்க பரிணாமத்தை நம்பல. நான் அறிவியல் பின்னணியில், கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் ஒப்புக்கொள்கிறவன்னு வைச்சிப்போம். இங்கே இரண்டு விதமான மனித குழுக்கள் பிளவுற்ற நிலையில், ஆனால், சைட் பை சைடாக வாழ்கிறது.
காலப் போக்கில் என்னாகும் இதில் யார் அறிவியலை உள்வாங்கி அடுத்தக் கட்டத் தகவமைவிற்கு தயார் ஆகிறோமோ (உதாரணமாக, ⚠️கோவிட்-19, பொய் - உண்மை, ⚠️தடுப்பூசி, தேவை - தேவையற்றது, ⚠️பூமிச் சூடேட்றம், பொய் - உண்மை, ⚠️ஜாதி, தேவை - தேவையற்றது, ⚠️மதம், தேவை - தேவையற்றது), அவர்கள் முன்னேறுவார்கள். பிறர் மரபணு ரீதியில் கொஞ்சம் கொஞ்சமாக கழிக்கப்பட்டு அழிந்து பட்டு போவர்கள்.
No photo description available.இதுவே எதிர்கால பரிணமிப்பு! அப்போ அந்த அழிந்து போன ஆள் எங்கே காட்டு என்று கேட்க முடியுமா? குரூட் பரிணாமக் கால கட்டத்தில், அலை அலையாக கிளம்பிய போதுதான் அந்த ஹோமினிட்ஸ் இன வகைகள் தேவைப்பட்டது (அவைகளில் சில, ஆஸ்ட்ரோல பித்திகஸ் அ•பரென்சிஸ் ↔️ ஹோமோ எரக்டஸ்↔️ஹோமோ ஹாபிலிஸ்↔️ஹோமோ நாலேடி↔️ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ்,↔️ ஹோமோ சாபியன்ஸ் சாபியன்ஸ்➡️). 

நீங்கள் எதிர்பார்ப்பது இதில 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த நியாண்டர்தால் வெர்சஸ் மாடர்ன் ஹுயுமன் போன்று நேருக்கு நேரான சான்று. நியாண்டர்தால்கள் இன்றைய நவீன சாப்பியன்ஸை, முகம் கொடுத்த போது அவர்களே கூட போட்டியில், மரபணு பின்தங்கிய தகவமைபுக் குறைபாட்டால் மாண்டழிந்தவர்கள் போக, மிஞ்சியவர்கள் இன்றைய வெள்ளையினத்தில் குறிப்பாக ஜெர்மனி பகுதியில் வாழ்பவர்களுடன் இனக் கலப்பு கொண்டு மரபணுக்களாக வாழ்கிறார்கள்.
இன்று அறிவியலை நம்புறவர் வெர்சஸ் நம்பாதவர் என்று மெதுவாக ஊர்ந்து நாளைய மனிதன் படிமலர்ச்சியடைவான். 
ஆர்வம் உள்ளவர்கள் மேலும் வாசிக்க எனது பழைய பதிவுகள்-

Sunday, September 06, 2020

படிமலர்ச்சிக் கூண்டிற்குள் கடவுள்: Why evolution is true? Part 4

படைத்த கடவுளுக்கு தொழில் சுத்தமாக படைக்கத் தெரியாதா? பறக்கத் தெரியாத பறவைக்கு இறக்கைகள் எதற்கு? வாலில்லாம வாழப் போற நமக்கு எதற்கு வால் எலும்பு? புல்லு, பூண்டு, இலை, தழை, கொடி சாப்பிடாம இருக்கப் போற நமக்கு குடல்வால் எதற்கு? வாங்க படைத்தவனை கூண்டுல நிப்பாட்டி கேள்வி கேட்போம்.
படிமலர்ச்சி நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறக்கிறது என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?
எப்பொழுதாவது எண்ணிப்பார்த்திருக்கீர்களா ஏன் கோழிக்கும், மயிலுக்கும்,
ஆஸ்ட்ரிச்சிற்கும் இறக்கைகள் இருந்தாலும் அவைகள் நீண்ட தூரம் பறக்க உதவுதில்லைன்னு? அதிலும் குறிப்பாக தீவுகளில் வாழும் பல பறவையினங்கள் நில வாழ்வன‌ வகைகளாகத்தான் இருக்கிறது. ஏன் அப்படி? தான் சார்ந்து வாழும் சுற்றுப்புறச் சுழலுக்கு தகுந்த மாதிரிதான் உயிரினங்களின் படிமலர்ச்சி அமைகிறது என்று பார்த்தோம்.
அவ்வாறான தீவுப் பறவை வகைளுக்கு மரங்கள் அதிகமாக இருக்கக் கூடிய வாழ்விடமோ, அங்கு ஆபத்து அதிகமில்லாத பகுதியாகவோ இருந்து போவதால் நாள் போக அவைகளுக்கான பறக்கும் மரபியல் பண்பு தேவையற்றதாகிறது. அந்தப் பின்னணியில் உயிரினங்களின் வாழ்விடத் தேவைகள் பொருட்டே தன்னுடைய இருத்தலை நிலை நிறுத்திக் கொள்ள மரபணுப் பிறழ்ச்சியின் (genetic mutation) ஊடாக சிறப்பியல்புகளை பெற்றும், இழந்தும் அடுத்த நிலைக்கு நகர்கிறது.
நிலத்தில் வாழும் பறவையான‌ ஆஸ்ட்ரிச் ஓடும் பொழுது கவனித்தீர்களேயானால் தன்னை சமநிலைப் படுத்திக் கொள்ள இறக்கைகளை விரித்தவாறே விரைந்து ஓடும். அது போலவே பென்குயின்களுக்கு இறக்கைகள் இருக்கிறது, ஆனால், அதனை தண்ணீருக்குள் அதி விரைவில் நீந்தும் தன்மை கொண்டதாக பயன்படுத்துகிறது. இது ஒரு புறம் என்றால் நமக்கும், திமிங்கிலத்திற்கும் மூதாதைகளால் பயன்பாட்டில் இருந்து வந்த பல (பாக)‌ உறுப்புகள் இப்பொழுது சான்றுறுப்புகளாக (Vegtigial) மட்டுமே இருந்து வருகிறது.
Image may contain: one or more people, text that says 'Lemuy Human an $5 FIGURE 14. Vestigial and atavistic tails. Top left: ruffed lemur (Varecia variegates), the tail (caudal) vertebrae our relatives that have tails, unfused first are labeled But the "tail" coccyx top right the caudal vertebrae fused form vestigial structure. Bottom atavistic tail three month Israeli infant. vertebrae are much larger right)'உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் திமிங்கிலங்கள் நான்கு கால்களை கொண்ட தரைவாழ் விலங்கிலிருந்துதான் படிமலர்ச்சி அடைந்தது என்பதின் எச்சமாக‌ பின்னங்கால்களும், இடுப்பெலும்பும் முற்றிலும் வளர்ச்சியுறா நிலையில் உடலின் உள்ளாகவே ஏதோ நிலையில் இருந்து விடுகிறது. அது போலவே நம்முடைய தூரத்து உறவுகளான குரங்குகளிருந்துதான் நாம் படிமலர்ச்சியடைந்தோம் என்பதனை சான்றளிக்க குடல்வாலும் (appendix), வால் எலும்பும் (tail bone) முழுமையடையா நிலையில் சான்றுறுப்பாக இருக்கிறது. குடல்வால் நம்முடைய தூஊஊரத்து சொந்தக்காரய்ங்களான இலை சாப்பிடும் குரங்களில் செல்லுலோசை செரிப்பதற்கென வாழும் பாக்டீரியாக்களை கொண்ட குடல் பகுதியாக இருந்திருக்கிறது. இப்பொழுது நமக்கு அது தேவையற்ற ஓர் ஆணி.
இன்னும் ஒரு படி மேலே சென்று திடுக்கென அந்த முழு வளர்ச்சியடையா சான்றுறுப்புகள் ஒரு சிலரில் மட்டும், குறிப்பிட்ட‌ மரபணுக்கள் பழைய நினைவிலிருந்து உயிர் பெற்று புற உறுப்புகளாக வளர ஆரம்பித்து விடுவதும் உண்டு. மனித குழந்தைகளில் வாலுடன் பிறப்பது, ஒவ்வொரு 500 திமிங்கிலங்களில் ஒரு திமிங்கிலம் பின்னங்கால்களுடன் வெளிப்புறமாக வளர்ந்த நிலையில் பிறப்பது இவையெல்லாம் அதில் அடங்கும்; இந்த நிலை, மீளுறுப்பு (Atavism) என்றயறிப்படுகிறது.
இவைகளெல்லாம் எதனை நோக்கி நம் கவனத்தைக் கோரி நிற்கிறது? கடவுள்தான் இந்த
உலகத்தை, உயிரினத்தை படைத்தான் என்றால் ஏன் இது போன்று விட்டக் குறை தொட்ட குறை உறுப்புகளை ஒன்றிற்கு மற்றொன்று தொடர்பில்லாத இனங்களிலும் வைத்து படைக்க வேண்டும்? ஏன் படைத்தவனுக்கு சுத்தமாக‌ எந்த கோளாறுகளும் இல்லாமல் படைக்கத் தெரியாதா?
விசயம் அதுவல்ல. படிமலர்ச்சியில் மரபணு பிறழ்வின் போது தேவையானதை அடுத்தக் கட்ட இயற்கை தேர்ந்தெடுப்பின் (Natural Selection) போது ஆதரித்தும், தேவையற்றதை ஊக்கப்படுத்தாமலும் எடுத்துச் செல்கிறது. அவ்வாறு தேவையற்ற மரபணு பண்புகள் முற்றும் முழுதாக நம்முடைய செல்களிலிருந்து துடைத்தழிக்கப்படுவது கிடையாது. செயல்பாட்டில் உள்ளதாகவும், அற்றதாகவும் சில புரதப் பொருட்களால் தூண்டப்படுகிறது. செயல்பாட்டில் இல்லாமல் இருக்கும் அது போன்ற மரபணுக்களை போலி மரபணு (psuedogene) என்கிறார்கள்.
நவீன மரபணு ஆராய்ச்சி முன்னேற்றத்தில் இன்று நாம் கிட்டத்தட்ட நம்முடைய அனைத்து மரபணுக்களையும் அதன் பண்புகளையும் வரைவாக கண்டறிந்திருக்கிறோம். அதில் கிட்டத்தட்ட 3000ம் வகையான மரபணுக்கள் இறந்த மரபணுக்களாக இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். எலிகளில் இருக்கின்ற நுகர்வாற்றல் (Olfactory receptor) நம்மை விட பலப்பல மடங்கு அதிகம். ஆனால், அந்தப் பண்பு நம்மில் மிகக் குறைவு. ஏன் அப்படி? எலிகளுக்கு இரையை, நெருங்கி வரும் ஆபத்தை, இணையை கண்டறிவதில் மிகை நுகவுணர்வு உதவுகிறது. அதே அளவில் நமக்கு தேவையற்றதாகுகிறது. ஏனெனில் நாம் நம்முடைய பார்வையை அதிகளவில் நம்பி இருப்பதால் அதீத நுகர்ச்சி பண்பு சுமையாக அமைகிறது.
சரி உபரியாக அது போன்ற பண்புகளை வைத்துக் கொண்டால் தான் என்ன? என்று ஒரு கேள்வி வரலாம். உதாரணமாக குகைகளில் உள்ள நீர்நிலைகளில் வாழும் மீன்களுக்கு கண்கள் தேவையற்றது. கண்கள் இருந்தால் அதனை பயன்படுத்தப் போவது இல்லை என்றாலும் பாதுகாக்க வேண்டும். அதனை மேலாண்மை செய்ய சக்தி தேவை. இப்படி பல ஆணிகள். எனவேதான் காலப்போக்கில் அது போன்ற மரபணுக்களை செயலற்றதாகவோ, அல்லது மரணித்த நிலையிலேயோ படி எடுக்கப்படுகிறது. இருப்பினும் நமக்கு விட்டுச் செல்லும் ஒரு மரபணு சார்ந்த படிமலர்ச்சி சுவடுகள் இவை.
இதற்கு மேலும் படிமலர்ச்சிக் கோட்பாடு ஒரு பிதற்றல் எனக் கூற முடியுமா?

Ref: Why Evolution Is True by Jerry A. Coyne
Photo Courtesy: Net

Sunday, August 30, 2020

கரையில் திரிந்த பாலூட்டி திமிங்கலமானது எப்படி? Part 3

தரையில் வாழும் மீன்களைப் பற்றி இரண்டு பதிவிற்கு முன்பு பேசினோம். அவ்வளவு முயற்சி செய்து பல மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கிட்டு தத்தி தவழ்ந்து கரையேறி நீர்நில வாழ்வனவாக படிமலர்ச்சி அடைந்து பிறகு, ஊர்வனவாக ஊர்ந்து டைனோசர்களாகி அதிலிருந்த படியே சிலவை சிறகுகளைப் பெற்று வானத்தில் மிதக்கும் பறவைகளாகின‌ என்றறிந்தோம் (see previous post--> டைனோசர் பறவையான கதை: Part 2).
குளிர் இரத்த உயிரினங்களாகிய ஊர்வனவைகள் பறவைகளாக படிமலர்ச்சி அடைவதற்கான இடைப்பட்ட காலத்தில் பகுதி வெப்ப இரத்தப் (warm blooded) உயிரினங்களாகி, சிறகுகளுக்குத் தேவைப்படும் முடியையும் பெற ஆரம்பித்திருந்தது. சுமாருக்கு 340 மில்லியன் ஆண்டு வாக்கில் ஊர்வன-பறவை இனத்திற்கும் இடைப்பட்ட நிலையிலிருந்த எட்டு அங்குல நீளமுள்ள‌ ஓர் ஊர்வன உயிரினமே முதல் பாலூட்டிக்கான மூதாதை. அது அனேகமாக ஓர் எலியையொத்த பூமிக்கடியில் வாழும் பாலூட்டியாக இருந்திருக்கக் கூடும்.
அதிலிருந்து கிளைத்து பன்முகத்தன்மையோடு பல்கிப் பெருகிய பாலூட்டிகளில் சில
இனங்கள் மீண்டும் தண்ணீருக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது ஏன் என்பதே
இன்றையப் பதிவு. தண்ணீருக்குள் வாழும் பாலூட்டிகள் என்றவுடனே நமக்கு நினைவில் வருபவை திமிங்கலங்கள், டால்பின்கள், கடல்சிங்கம், வால்ரஸ் கடல்பசுக்கள். இவைகள் நிலப்பகுதியில் வாழ்ந்தவைதான் என்றாலும் தண்ணீருக்குள் சென்று வாழப்பழகியது என்பதற்கு என்ன சான்று. அதற்கு நாம உதாரணமாக‌ எடுத்துக் கொள்ள வேண்டிய விலங்கு, நமக்கு ரொம்ப‌ அறிமுகமான நீர்யானை (hippopotamus - hippopotamus amphibius).
இவைகள் பெரும்பகுதியான நேரம் தண்ணீருக்குள்தான் வாழ்கிறது. அதாவது மூக்கையும், கண்ககளையும் மட்டும் தண்ணீர் மட்டத்திற்கு மேல் வைத்துக் கொண்டே அப்படியே தண்ணீருக்குள்ளரயே கிடக்கும் (அட நம்ம எருமை மாடே அப்படித்தானே!). அதற்கென அதோட மூக்கையும், கண்களையும் கவனிங்க எவ்வளவு அழக தண்ணீரில் வாழ்வதற்கான தகவமைவை பெற்றிருக்கிறது என்பது விளங்கும். அது மட்டுமல்ல அவைகள் தண்ணீருக்குள்ளாகவே இனப்பெருக்கத்தையும் செய்கிறது. அதற்குத் தேவையான முழுமையான உணவு மட்டும் அங்கேயே கிடைத்திருந்தால் நிலப்பரப்பிற்கு வந்து மேய்ச்சல் செய்யும் தேவையே இல்லாமல் போயிருக்கக் கூடும்.
இந்தப் பின்னணியில் திமிங்கலங்களின் மூதாதைகளை வைத்துப் பார்த்தால், அவைகள் (ஒட்டகத்தையொத்த‌) குளம்பிகளைக் கொண்ட தாவர உண்ணிகளாகத்தான் இருந்திருக்கிறது என்பது புலனாகும். 52 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இன்டுஹையஸ் (Indohyus) என்ற ஒரு தாவர உண்ணி ஓப்பீட்டுளவில் சிறிய மானளவு கொண்ட குளம்பியொன்று தண்ணீரையொட்டியப் பகுதியில் பாதுகாப்பிற்கெனவும், உணவிற்காகவும் திரிந்து கொண்டு, நிலப்பகுதிக்கும் சென்று உண்டு வாழ்ந்திருக்கிறது. அதனுடைய எலும்பு மற்ற பாலூட்டிகளைக் காட்டிலும் அடர்வானதாக இருந்திருக்கிறது. ஏன் அப்படி பருமனுடன் இருந்திருக்க வேண்டும்; நீரில் மூழ்கும் போது மிதந்து விடாமல் இருக்க. பற்களில் ஐசோடோப் சோதனை செய்து பார்க்கும் பொழுது நீரில் உள்ள பிராணவாயுவை உட்கிரகிக்கும் திறனுடனும் இருப்பது தெரியவந்தது.

திமிங்கலமாக அந்த இன்டுஹயஸ் தாண்டியது கால் கிணறு. அதற்கு அடுத்து 50
மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு படிமலர்ச்சியில் வந்த ஆம்புலோசெடஸ் (ambulocetus) என்ற இடைப்பட்ட இனம் கிட்டத்தட்ட முன்னேறி திமிங்கலம் பக்கத்தில் வந்தாலும் இன்னும் நான்கு கால்கள் அதில குளம்புகளோட இருக்கிறது. அதனை வைத்துக் கொண்டு இன்றைய சீல்கள் மாதிரி தரைக்கு வந்து தவழ்ந்து திரிந்து கொண்டிருக்கிறது.
அதிலிருந்து மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னால் வந்த இனமான ரோதோசெடஸ் (rodhocetus) இன்னும் நுட்பமான உறுப்புகளைப் பெறுகிறது; நீண்ட மண்டையோட்டையும், மூக்குத்துளைகள் இன்னும் பின்னாடி நகர்ந்தும் தகவமைவு கொள்கிறது. இருப்பினும் 50 அடி நீளமுடைய ஒரு விலங்கு அத்தனை எடையைத் தூக்கிக் கொண்டு சிறிய இரண்டு முன்னங்கால்களையும், மாற்றமடைந்த இடுப்பு எலும்பையும் கொண்டிருந்ததால் நிலத்தில் நடக்கவே வாய்ப்பற்று முழுதுமாக தண்ணீரில் இருக்கும் நிலைக்கு போனது.
சரி, ஏன் அவைகள் தண்ணீரைத் தேடி சென்றிருக்க வேண்டும்? நிலத்திலும், தண்ணீரிலும் வாழ்ந்த பெரும் பெரும் டைனோசர்கள் மாண்டழிந்த நிலையில் பின்னால் வரும் விலங்குகளுக்கு உணவிற்கோ, தங்களது பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தல் இல்லை எனும் நிலை வருகிறது. அங்கு புதுவிதமான வாழ்விடம் (ecological niche) அவைகளுக்கு முன்னால் பரந்து விரிந்து கிடக்கிறது. அந்த நிலையில் படிமலர்ச்சியில் சிறு சிறு மரபணு மாற்றங்களின் (mutation) மூலமாக‌ வேகமெடுத்து, புதிய வாழ்விடங்களை நிரப்பிக்குள்ளும் நிலைக்கு விலங்கினங்கள் தள்ளப்படும். அப்படியாகத்தான் தாவர உண்ணியாக கரையோரத்தில் நடந்து திரிந்த ஒரு குளம்பி பிற்காலத்தில் திமிங்கலமாக நமக்கு காணக்கிடைத்தது. ஏன்னா, நவீன திமிங்கலம் ஒரு பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடியே தான் முழுமையடைந்த‌தாம்.


Ref: Why Evolution Is True by Jerry A. Coyne

டைனோசர் பறவையான கதை: Part 2

360 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி டிக்டாலிக் ரோஸியே என்ற மீன், எப்படி நீர் நில வாழ்வனவற்றிற்கு இடைப்பட்ட ஒரு மீனினமாக கரையேறி தத்தக்கபித்தாக்கன்னு நடக்க ஆரம்பித்ததால் நிலத்தில் வாழப்போகும் முதுகெலும்புடைய உயிரினங்களுக்கும் அடிப்படையாய் அமைந்ததுன்னு போன பதிவில் பேசிக்கிட்டோம் (காண்க: மீன்கள் நடந்தனவா ஓர் படிமலர்ச்சிப் பார்வை! :Part 1). 


தண்ணீருக்கும் நிலத்திற்குமாக சென்றுதான் வாழ வேண்டுமென்ற அந்த இரட்டைதன்மை இல்லாது, முழுமையாக நிலத்திலேயே வாழும் ஊர்வனவாக அடுத்து வந்த காலகட்டங்களில் அவைகளில் சில பரபரவென தேவையானவற்றை பெற்றும், இழந்துமென முழுமையான தகவமைவைப் பெறுகிறது. இது வரையிலுமே அவைகள் யாவும் குளிர் இரத்த உயிரினங்களாகவே (cold blooded animal) உள்ளது. அதாவது அவைகளின் உடல் வெப்பம் சுற்றுப்புறச் சூழலுக்குத் தகுந்த மாதிரி மாறாது.
ஆனா, அதை வைத்துக் கொண்டே இந்தப் பேரினம் ஆயிரக்கணக்கான டைனோசார் இனங்களையும் உள்ளடக்கி ஏறத்தாழ 175 மில்லியன் ஆண்டுகள் இந்தப் பூமியை ஆண்டிருக்கிறது. அவைகள் காகத்தின் ஒரு அளவிலிருந்து மூன்று மாடி கட்டட அளவுடைய டைனோசர்களாக வாழ்ந்த போதிலும் ஏதோ போதாமையொன்று தொடர்ந்து கொண்டே வருகிறது.
காகம் அளவே இருந்த ஒரு டைனோசரையொத்த ஓர் உயிரினமே பறவைக்கும் ஊர்வனவற்றிற்குமான இணைப்பு இனமாக ஆர்க்யோப்ரெக்ஸ் (archaeopteryx) இருந்திருக்கிறது. ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இது முழுமையான ஒரு பறவையுமல்லாமல் ஊர்வனவுமல்லாமல் இருந்திருக்கிறது; ஆனால் அதனை நோக்கிய நடை. அண்மையில் சீனாவில் மேலும் தெளிவான பறவைகளுக்குறிய குணாதிசியங்களுடான இடைப்பட்ட வேறு சில இனங்களும் படிமங்களாக இப்பொழுது கிடைத்திருக்கிறது.
அவற்றில் சில வேகமாக ஓடி முன்னங்கால்களை படக்கென்று காற்றில் வீசி இரையைப் பற்றி வாயிக்கு எடுத்துச் செல்லும் நுட்பம், பறவைகளுக்கு தேவையான அதே தசை கட்டமைப்பை மெல்ல உள்வைத்து நகர்கிறது படிமலர்ச்சி. இதற்கிடையே பறவைகளின் இறகுகளில் இருக்கும் முடியையொத்த ஒரு தகவமைப்பை பெறுகிறது. இது எதற்காக தோன்றியிருக்கக் கூடும் என்பதில் இரண்டு விதமான கருதுகோள்கள் உண்டு: இணையைக் கவர்வதற்கு அல்லது உடலை வெப்பமேற்றி வைத்துகொள்ள.
அப்படியாக தோன்ற ஆரம்பித்த வகைகளில் ஆண்டுகள் ஓட முன்னங் கால்களில் தேவையான அளவு மாற்றங்கள் பெற்று, மரத்தில் தொற்றி ஏறவும் ஆரம்பிக்கிறது. அந்த தகவமைவு ஓர் உயரமான மரத்திலிருந்து மிதந்து ஊர்ந்து அடுத்த மரத்திற்கு செல்ல உதவியது. இங்கே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமானதொரு கேள்வி- இது போன்ற தகவமைகளைப் பெற எது உந்து சக்தியாக அமைகிறது என்பது. உணவிற்கான போட்டி, பாதுகாப்பிற்கென, தகுதியான உடற்கட்டமைப்பை கொண்டு தப்பிப் பிழைப்பதற்கான தகவமைப்பை எது பெற்றிருக்கிறதோ அதனை இயற்கை இயல்பாகவே தக்கவைத்துக் கொள்கிறது.
ஊர்வனவற்றின் தாடைகளிருந்த பற்களை இழந்து, இடைப்பட்ட இனமான வெப்ப இரத்த (warm blooded) தகவமைவைப் பெற்றும், முதுகுத்தண்டுவடம் நேரடியாக மண்டையோட்டோடு இணைவதை தவிர்த்து, கீழிறிருந்து வந்து இணைவதுபோல் பெற்று, எலும்பின் எடை குறைத்து உள்ளீடற்ற எலும்புகளைப் பெற்று, முன்னங்கால்களை பறப்பதற்கு ஏதுவாக அமைத்துக் கொண்ட நாளில் மிதந்து நகர்வதிலிருந்து, வானத்தில் சிறகடித்து பறக்க ஆரம்பித்தது அந்த மாண்டழிந்த டைனோசர்கள்.
பி.கு: சொந்தக் கவனிப்பு - நல்ல உயரமான கோழியை உறிச்சிட்டு கொஞ்சம் கற்பனையை தட்டி விடுங்களேன் நீங்க 🦖 பார்ப்பீங்க.



Read: Why Evolution Is True by Jerry A Coyne.

Related Posts with Thumbnails