Thursday, September 09, 2010

புனைவுகளின் தீவிரம் உணர்வோம்: To Writers...!!

நேற்று ஒரு நண்பரோட அரட்டைக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தேன். அவரு வலையுலகில் நடக்கும் அவ்வப்போதைய அடிதடிகளிலிருந்து எப்பொழுதாவது எழுதினாலும் கூட செறிவு மிக்க, சிந்தனைகளை தூண்டக் கூடிய விசயங்களை எழுதுபவர்கள் ஏன் விலகியே இருக்கிறார்கள் என்று என்னய சீண்டிப் பார்த்தார். அதுக்காக ”சுயமாக” தன்னை வளர்த்து எடுத்துக்கொண்ட அந்தக் கூட்டத்திற்குள்ளர விழுற ஆள்னு என்னய படிச்சி வைக்காதீங்க.

நான் எதிலும் சேராசேத்தி. இன்னும் நான் அவதானிக்கும் நிலையிலேயே இருக்கிறேன். எனக்கும் திரிச்சு எழுதும் சோ கால்ட் ‘புனைவிற்கும்’ ரொம்பத் தூரம். வலையுலக புனைவு இலக்கியம் படிச்சுப் படிச்சு, புனைவு எழுதுறது அவ்வளவு எளிமையான விசயமாக பட்டாலும் என்னால அப்படி பார்க்க முடியல :). நான் எழுதும் கட்டுரைகளிலிருந்தே புனைவிற்கு தேவையான அனேக கருக்களை எடுத்து கையாள முடியும்தான். இருந்தாலும், புனைவு கொடுப்பதற்கின்னு எனக்கு நானே பல எதிர்பார்ப்புகளை, கட்டுப்போக்குகளை உருவாக்கி வைச்சிருக்கேன்.

எப்பொழுதெல்லாம் என்னாலும் புனைவுகள் கொடுக்க முடியும், என் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக் கொண்ட விசயங்களிலிருந்தே வண்டி வண்டியாக மூக்கை சிந்த வைக்கும், தன்னையே உணர்ந்து (தடவி) பார்த்து கொள்ள வைக்கும் ரேஞ்சிற்கு கூட அனுபவ பாடங்களைக் கொண்டு புனைவு என்ற பெயரில் வாந்தி எடுத்து வைக்க முடியும்தான். அது எனது கட்டுரைகளின் நீளங்களைக் கொண்டே கூட நீங்களும் யூகிக்க முடியும்தானே!

சரி இத்தனை முஸ்தீபுகளைக் கொண்டிருந்தாலும், ஏன் முயற்சி எடுத்துப் பார்க்கவில்லை, என்ற அடிப்படைக் கேள்வி எழும்பலாம். முதலாவது, புனைவுகளின் மூலம் நம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி பாசாங்கு செய்ய முடியாது. நன்கு அறிந்த வாசகர்களிடம் மாட்டிக் கொள்வோம். இரண்டாவதாக, தகவல் பிழையோ, அல்லது தன்னுடைய அரைகுறை மண்டைப் புரிதலை வைத்துக் கொண்டு ஒரு பெண்ணின் மூலமாக அவளுடைய வாழ்வியல் சிக்கலை சொல்கிறேன் என்று தத்துபித்துத் தனமாக நம்முடைய சிறு சாளரத்தின் வழியாக கண்ட விசயத்தை வாந்தி செய்து வைத்தால் அதுவே தம்மை விட இன்னும் பல படிகள் வளர்ச்சியில் பின் தங்கி இருக்கும் மக்களின் மனத்தில் தவறான ஒரு கற்பிதத்தை வளர்த்து விடச் செய்யலாம்.

என்னை பொருத்த மட்டிலும் கதை சொல்லிக்கென்றே பல திறமைகள் வேண்டும். காப்பியடித்து எழுதுவதான எழுத்து நடை, சொல்லாடல், வட்டார மொழி பயனேற்றம் செய்வது மட்டுமே புனைவிற்கான அடிப்படை தகுதிகள் கிடையாது என்று நினைக்கிறேன். அவன் மிக மிக கூடு விட்டு கூடு பாயும் திறன் கொண்டவனாக இருத்தல் அவசியமென்று கருதுகிறேன். அஃறிணை பொருட்கள் கூட சம்பாஷணை செய்து கொண்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை உலகத்திலும் சஞ்சரிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும்.

விசயம் அப்படியாக இருக்கும் பொழுது மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியைப் போன்றவன் வெறும் பிறர் படைப்புகளையும், உலகச் சினிமாக்களையும், பேருந்து நிலையத்தில் அமர்ந்து வயதான பாட்டி ஒன்று பேருந்தில் ஏறக் கஷ்டப்படும் பொழுது மற்றொருவன் உதவுவதைப் பார்த்து, கேட்டு, வாசித்து கதை சொல்லியாக பக்குவப் பட்டிருந்தால் போதுமா? அது படிக்கும் வாசகனிடத்தில் உண்மையான ஒரு தாக்கத்தை நிகழ்த்தி விட்டுச் செல்ல முடியுமா? அப்படியே பயிற்சியின் மூலமாக ஒரு தேர்ந்த கதை சொல்லியாக பேர் பட்டுப் போனாலும் அது எந்த அளவிற்கு அந்த கதை சொல்லியின் சொந்தப் பார்வையில் தாக்கத்தினைக் கொடுத்து அவன் உண்மையான அகப் பார்வையினை மாற்றியிருக்கக் கூடும்?

உண்மை உலகில் சமூகம் கட்டமைத்த பல நம்பிக்கை, அவ நம்பிக்கைகளை உடைத்து, பிற விளிம்பு நிலை மனிதர்களுக்கெதிரான சமூக அநீதிகளுக்கூடான வாழ்க்கைப் பயணத்தில் தானும் பங்கேற்று எது போன்ற அனுபவப் பொதிகளை சிறிதேனும் தன்னுள் இறக்கி இருப்பார்கள். இது போன்ற என்னுடைய சொந்த எதிர்பார்ப்புகளே ஒரு கதை சொல்லியின் பின்புலமாக இருக்க வேண்டுமென்ற நிலைப்பாடோ என்னவோதான், புனைவிற்கெதிரான படிப்போட்டத்தை இன்றைய நிலையில் தடை செய்து வைத்திருக்கிறது எனதுள்ளம் என்று எண்ணச் செய்கிறது. இருப்பினும் அது போன்ற பயணங்களின் ஊடாக எழுதும் மனிதர்களை என் மனதும் தேடிச் சென்று படிக்கச் சொல்கிறது.

கற்பனை உலகில் சஞ்சரித்து எழுதும் அறிவியல் புனைவுகளின் மீது எனக்கு அலாதியான காதல் இருக்குமளவிற்கு, நம் சமூகத்தில் எழுதும் சமூகம் சார்ந்த எழுத்துக்களை என்னால் படிக்க முடிவதில்லை காரணம், அதனில் நிறைய skewed பார்வை இருக்கிறது. அது நிகழக் காரணமாக இருப்பதற்கு அவர்கள் வாழ்ந்த உலகின் பக்கமாக உள்ள பகுதியை மட்டுமே பார்த்து வளர்ந்ததுனாலேதான் என்று என்னால் கூற முடியும். அதனைத் தாண்டியும் இன்னமும் கதைச் சொல்லிகளே வளரவில்லை என்றுதானே கட்டியம் கூறி நிற்கிறது அவர்களின் படைப்புகளும்.

அப்படியாக நமது சமூகத்தில் நல்ல தேர்ந்த எழுத்தாளர் பல இளைஞர்களுக்கு ஆதர்ஷ குரு என்று பெருமையாக கூறிக் கொள்பவரும் கூட தனது பயணக்கட்டுரைகளில் தன் கண்டக் காட்சிகளை, பிரிதொறு கலாச்சாரத்தில் வாயிலாக பார்க்கும் திறனற்று அதே குறுக்குச் சந்து பார்வையோடு வெகு ஜன பத்திரிக்கைகளில் கூட வாந்தியெடுத்து வைத்திருப்பார். இது போன்ற கட்டுரைகளே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சியை உலகம் பொருத்து, தான் சார்ந்து வாழும் சமூகம் பொருத்து உண்மையான பார்வையினை வைக்கும் முகமாக அமைந்த சாளரம்; அந்த மனிதனை உள் முகமா படிக்க.

ஆனால், தன் ஊரின் எல்லையையே தாண்டி உலகம் பார்த்திடாத ஒருவர் பிரிதொரு கலாச்சாரத்தின் அத்தனை கூறுகளும் தெரியக் கூடியதாக பாசாங்கு செய்து எழுதும் புனைவுகள் எத்தனை தகவல் பிழைகளை கொண்டிருக்கக் கூடும். தன்னுடைய சொந்த சமூகத்திலேயே விரவிக் கிடக்கும் ஏற்றத் தாழ்வுகளை தனக்குக் கிடைத்த வளர்ப்பு சூழ்நிலைக் கொண்டு அதன் வழியாக குணாதிசியங்களின் மூலமாக குருட்டுத் தனமாக வைத்துப் பேசும் பொழுது, பிரிதொரு கலாச்சாரம், அவர்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றி ஆய்ந்து எப்படி biased பார்வை இல்லாமல் கொடுக்க முடியும்.

இன்றைக்கு இணையம் வழங்கியிருக்கும் வாய்ப்பு தனிப்பட்ட மனித நிலையில் ஏதாவாது எழுதி தானும் ஒரு தேர்ந்த எழுத்தன் என்று அவனளவில் பாராட்டிக் கொள்ளவே பயன்படுத்தப் பட்டிக் கொண்டிருக்குமளவிற்கு செழித்து வளர்ந்து வருகிறது. அரைவேக்காட்டுத்தனமான புரிந்துணர்வோடு மனித உணர்வுகள் சார்ந்து உளறி வைப்பது. ஒற்றைப் பரிமாணத்தில் விசயங்களை அணுகி தன்னுடைய பார்வையை பொது சமூகத்தின் எண்ணமாக புனைந்து வைப்பது என்ன எந்த விதமான பொறுப்புணர்வில்லாமல், எழுத தலைப்படுவதுமென ஜரூரா நடந்து வருகிறது.

இலக்கியம் ஒரு சமூகத்தின் சமகால நிகழ்வுகளை பதியப்படுவதாக அதன் நீள, அகலங்களை அறியும் கண்ணாடியாக அமைய வேண்டும். அதற்கு அதனை படைக்கும் படைப்பாளி எத்தனை தீர்க்கமான, திறந்த மனதுடைய, மாற்றங்களை தழுவிச் செல்லும் ஒரு கருவியாக செயல் பட வேண்டியதிருக்கும். அவன் எப்படி மூடிய நிலையில், சார்பு நிலைகளை கொண்டு இயங்கும் ஒரு சாமான்யனாக இருக்க முடியும். இப்பொழுது இயங்கக் கூடிய பல சமகால எழுத்தாளர்கள் பிளவுற்ற (duality) மன நிலையிலேயே இருப்பதாகப் படுகிறது எனக்கு.

எழுத்து என்பது என் நிலையில் ஒரு தவம் போன்றது. எழுதுவது பிரிதொரு மனிதருடன் உரையாடுவதனைப் போல சிந்தனை சிதறலுக்கு அங்கே வாய்ப்பில்லை. நேரடியாக சமயோசிதமாக, புத்திசாலித்தனமாக சிந்திக்கும் புத்தி செயலிழந்து, நேரடியான ஆத்ம உரையாடல் நடைபெறுகிறது. அப்பொழுது எழுதும் எழுத்தும் நேர்மையாக சுய லாப நோக்குகள் அழிந்து, அறச் சீற்றம் கொள்ளும் நேரத்தில் சரியாக பிரதிபலித்து சமூகத்திற்கு தேவையான விசயங்கள் வந்து சேரும். ஒரு எழுத்தாளன், படைப்பாளியாக இருப்பதால் மற்றவரின் கஷ்ட நஷ்டங்கள், ஒடுக்கப்படும் சமூகத்தில் வாழும் மக்களின் அவல நிலை அவ்வாறாக ஒடுக்கப்படும் சமூகம் தொடர்ந்து அமிழ்த்து வைக்கப்படுமாயின் அது எது போன்ற விளைவுகளை உற்பத்திக்கக் கூடுமென்ற அனைத்து விளைவுகளையும் அறிந்தவனாக இருக்க வேண்டும். அதுவே அவன் பேனா பிடிப்பதற்கான அடிப்படைத் தகுதி கூட!

ஆனால், அண்மையில் நடந்தேறிய ஈழப் படுகொலையின் போது சில விரல் விட்டு எண்ணும் படைப்பாளிகளைத் தவிர ஏனையோர் அனைவரும் முதுகெலும்பு உடைந்தவர்களாக, எழுதவே தகுதியற்றவர்களாக, தான் சார்ந்து வாழும் சமூகத்திற்கு ஒரு சொல்லனாத் துயரம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது பேனாவின் முனை உடைந்து விட்டதாக ஆன்மீக தத்துவங்களும், லத்தீன் இலக்கியமும், சினிமா இயக்குனர்களின் முதுகையும் சொறிந்து கொண்டிருந்தார்கள். பிறகு இவர்களின் படைப்பை எந்த சீற்றத்தை, எந்த உலக ஞானத்தை அடைய நான் வாசிக்க வேண்டும்; இவர்கள் எழுதுவதற்கான அடிப்படைத் தகுதியே இழந்து நிற்கும் பொழுது? அந்த மொழி பேசும், அந்த உணர்விற்காக இந்த துயரங்களை சுமந்து திரிபவர்களின் எலும்பு கூடுகளின் மீது இவர்கள் இலக்கியம் வடித்து அடிக்கி வைக்கும் பொழுது அவர்கள் கல்லறைகளிலிருந்து படைத்த இலக்கியங்களை கொண்டாடுவார்களா?

இதுவே இன்றைய இணைய காலத்தில் பல ’சோ கால்ட்’ எழுத்தாளர்கள் விமர்சனத்திற்கு ஆளாவதும், புனைவுகளைத் தாண்டியும் சமூக நிகழ்வுகளையொட்டி அவர்களின் கருத்துக்களை வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதால், அவர்களின் உண்மையான குறிக்கோளும், வளர்ச்சியும் வெளிப்பட்டு சந்தி சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்களோ என்று எண்ணச் செய்கிறது.

எப்பொழுது ஒரு எழுத்தாளன், படைப்பாளி தான் சார்ந்து வாழும் சமூகத்தை அவதானிக்கத் தவறி, தேவையான ஏற்றத் தாழ்வுகளை செப்பனிடும் பொருட்டு தன் பொறுப்புகளிலிருந்து நழுவி தன் சுய லாபத்திற்காக பாதையை மாற்றிக் கொள்கிறானோ அவன் எழுத்தை வைத்து விபச்சாரம் செய்து வருகிறான் என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது. அதற்கு இது போன்ற புனிதமாக கருதப்படக் கூடிய படைப்புத் திறனை விட்டு விலகி விடல் நலம் பயக்கும்; பிற்கால தலைமுறைகளாவது தப்பிப் பிழைக்கும். நன்றி!

Wednesday, September 08, 2010

*வெளி...*


சோம்பலாக தலையுயர்த்தி
அவசரமொன்றும் எனக்கில்லை
என்றுணர்த்திவிட்டு அரைக்கண்ணால்
பார்த்தவாறு தூங்கிப்போனது
தெருநாயொன்று...

கண்ணில் அறையும்
வாஸ்து பார்த்து நிறமூட்டிய
வீடொன்றில் தேக்கிலிழைத்த
மரக் கதவை பிறாண்டியவாறு
தூக்க மருந்து கொடுத்தும்
திமிர்ந்து எழுந்த நாயொன்று
எஜமான் வரவிற்காய்
கோடிட்டு
பொழுதைக் கழிக்கிறது!




P.S: Photo Courtesy - Net

Sunday, September 05, 2010

ஃபேஷன் ஷோ பகுதி - 2 : Photography in Fashion Show

போன மாசம் ஒரு ஃபேஷன் ஷோ போயிருந்தேன் அங்கே சிக்கின ஒரு வாய்ப்பை எனது காமிரவிற்குள் சுருட்டினேன்னு சொல்லி முதல் பாகமா இங்கே ரிலீஸ் பண்ணியிருந்தேன்.


அதோட தொடர்ச்சிதான் இது. ஆர்வமுள்ளவர்கள் மட்டு’ம் உள்ளர பொயிட்டு வாங்க! நெஞ்சடைச்சிகிறவங்க தூரமா நின்னுக்கோங்க :) .


# 1




#2





#3






#4 நம்புங்க என்ன பார்க்கலை, என் காமிரா லென்ஸைத்தான் பார்த்தாங்கோ...





#5




#6




#7




#8




உள்ளர முடிச்சிட்டு வெளியில வந்து வேற என்ன சிக்குமின்னு பார்த்தா மையமா இந்த ஒலிம்பியன் சிலை ஆக்சன்ல நின்னுச்சு. அங்கே கொஞ்சம் நேரம் நின்னு லபக்கினேன்.




கீழே இருக்கிற படம் எப்படி?




என்னதான் சொல்லுங்க, இதுக்கு இணையாகுமா எதுவும் :) பளீர்னு கண்ணுக்கு இதமா... ஹ்ம்ம்!



Tuesday, August 24, 2010

பாகிஸ்தான் வெள்ளத்தில் மிதக்கிறது இந்திய நாட்டின் அமைதி!!

ஒரு ஞாயிற்றுக் கிழமையில் என்னை இன்செப்ஷன் படம் பார்க்கத் தூண்டிய தாத்தா இன்று வந்திருந்தார். நானும் தொலைபேசியில் எப்பொழுதும் போல வெட்டி அரட்டையில மூழ்கி கிடந்தேன். தாத்தா சுத்தி சுத்தி வந்து எதனையோ பேச முயற்சிக்கிற மாதிரி ஓர் உணர்வைக் கொடுத்தார். தொலைபேசியை மூர்ச்சையாக்கிட்டு அவரை பார்த்தேன். அவரும் அதுக்காகவே காத்துக்கிட்டு இருந்த மாதிரி, பாகிஸ்தான்ல வெள்ளம் சொல்ல முடியாத அளவிற்கு பெரும் அழிவைக் கொடுத்துருக்கு கவனிச்சிட்டு வாரீயா அப்படின்னு ஒரு கேள்விய தூக்கிப் போட்டார்.

விசயத்திற்குள்ளர போறதிற்கு முன்னாடி அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. அவர் ஒரு வெள்ளையர். அறுபதிகளில் ஹிப்பி இயக்கம் அதி தீவிரமா இயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அதன் ஊடாக பயணித்து உலகத்தின் பால் ஒரு தனி அக்கறையை உருவாக்கிக் கொண்டவர். இன்னமும், அதன் விட்டக் குறை தொட்டக் குறையாக போருக்கு எதிரான அமைதி ஊர்வலங்களில் கலந்து கொள்வதும் அது தொடர்பாக சில நேரங்களில் கைதாகும் நிலைக்குக் கூட தன்னை முன் நிறுத்திக் கொள்பவராகவும் இருந்து வருபவர். அது மட்டுமின்றி உள்நாட்டில் அநீதி இழைக்கும் வழியில் ஏதாவது சட்ட மசோதாக்கள் இயற்றப்பட்டு கடத்தப்படும் நிலைக்கெதிராக அதனையொட்டிய கருத்தரங்கங்கள், கூட்டங்களில் கலந்து கொள்வது, சைட்ல உலகப் படங்களும் அறிவியல் புனைவு படங்களையும் பார்த்து திளைப்பதுவெமென வாழ்க்கையை ஜரூராக நடத்தி வருகிற அறுபதுளின் தொடக்கத்தில் இருக்கும் ஓர் இளங்காளையவர்.

மீண்டும் விசயம் பேசுவோமா? பாகிஸ்தானின் வெள்ளத்தினை ஒட்டிய பேரழிவைப் பற்றி கேள்வியைக் கேட்டாரா. எனக்கு போன வாரத்தில் சி. என். என் -ல் ஒரு நழுவும் செய்தியாக பார்த்ததோட முடிந்து போனது, அந்தச் செய்தி. இருப்பினும் எனக்கு அந்த வாரத்தில கொஞ்சம் ஆட்டம், ஓட்டமென்று சொந்த விசயங்கள் காரணமாகவும் உலக விசயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை ;). இங்கு தமிழ் ப்ளாக்குகளிலும் அவ்வளவாக அதனையொட்டிய பதிவுகளை பார்த்த மாதிரியாக ஞாபகமில்லை. இருந்தாலும் பாகிஸ்தான்ல அதுவும் நம்ம எதிரிங்க கஷ்டப்பட்டா நமக்கு கொண்டாட்டமாத்தானே இருக்கணும்ங்கிற சின்னப் புள்ளத்தனமான நாட்டுப் பற்றும் அவிங்க பண்ணுற அழும்பிற்கு கடவுளே பார்த்து தண்டனைக் கொடுக்கிற ரேஞ்சிற்கு யோசிக்கிற புத்தியும் சேர்ந்திருக்கிறதாலே, இதெல்லாம் நம்மோட பிரச்சினையான்னு விட்டிருப்போம் போல.

ஆனா, அன்னிக்கு அவர் கேட்ட தொனியே ஏதோ பெரிய அளவில் பிரச்சினை இருப்பதாக எண்ணச் செய்தது. ஒவ்வொரு முறையும் அவருடன் பேசும் பொழுதும் பலத்த சிந்தனைகள் எழும்பும்மாரு கேள்விகளையோ அல்லது சம்பாஷணைகளையோ நிகழ்த்திவிட்டு சென்றுவிடுவார். அப்படியே இன்று என்னிடம் அவர் கேட்ட கேள்வி - இந்தியாவும் பாகிஸ்தானும் எலியும் பூனையுமாக இருப்பதாக அந்தப் பிராந்தியத்தில் காட்டிக் கொள்கிறார்கள். நல்லுறவை பேணும் பொருட்டு நட்புறவை மேம்படுத்திக் கொள்ள இரு நாடுகளுமே பாடுபட வேண்டிய கட்டாயத்திலுள்ளது. மக்களின் மனத்தில் அது போன்ற நன்னம்பிக்கையை விதைத்து தொலை தூர நட்புறவு பாதையில் நடந்து செல்ல வேண்டுமாயின் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் அதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரலாற்று எதார்த்தம் அப்படியாக இருக்கும் பொழுது அண்டைய நாட்டில் அப்படியொரு மாபெரும் இயற்கைச் சீற்றம் நிகழ்ந்து 170 மில்லியன் மக்களில் 60 விழுக்காடுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட நிலையில் உலக நாடுகளின் முன்னால் கெஞ்சிக் கொண்டிருக்கிறது உதவி கேட்டு, இந்தியா ஏன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அந்த நாட்டின் மீதான தனது அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி மக்களின் மனங்களில் நல்லெண்ணங்களை கோலோச்சும் வழியாக ஐந்து மில்லியன் டாலர்களைத் தாண்டி தனது உதவிக் கரங்களை நீட்டியிருக்கக் கூடாது? என்பதே அவரின் கேள்வி.

அதனையொட்டி எப்படி உலக அரங்கில் உலக நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகள் சாதா மக்களின் அன்றைய அவலத் தேவைகளைத் தாண்டியும் கோணல் பார்வையில் அந்தச் சூழலை கடந்து செல்ல வைக்கிறது என்று பேசிக் கொண்டோம்.

ஒரு வியாபாரிக்கு தன்னிடம் இருக்கும் சரக்கை வித்து தீர்க்க வேண்டுமாயின் என்ன தேவையாக இருக்கிறது. சந்தையில் அந்தச் சரக்கின் தேவை. அந்தத் தேவை அதிகரிக்க அதிகரிக்க விலையும் அதனையொட்டியே தீர்மானிக்கப் படுகிறது. அப்படி அந்த வியாபாரி கையிருப்பு அதிகமாக வைத்திருக்கும் பட்சத்தில் ஒரு தற்காலிக வறட்சியை ஏற்படுத்தி பின்பு லாப நோக்கில் வெளியிட்டு அதிக முதலீட்டை திரும்பப் பெற எத்தனிக்கிறான். அதே போர்வையில்தான் எது போன்ற சூழலாக ஒரு அண்டைய நாட்டின் அவலம் அமைந்து போனாலும், உள் நாட்டு அரசியல் வாதிகளும் கண்களை இறுக மூடிக் கொண்டு வாய்ப்புகளை தெரிந்தே நழுவ விட்டு விடுகிறார்கள். எந்த அண்டைய நாட்டுடனும் மற்றொரு நாடு மிகவும் தோழமையுடன் இருந்து போக எத்தனித்தாக தெரியவில்லை. ஏனெனில், பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தனக்குத் தேவையான (தன் தலை தப்பியிருக்க தேவையான) பொழுது பிரச்சினை இருப்பதாக அண்டைய நாட்டுடனான உறவுச் சிக்கலைப் பேசி, தன் உள்நாட்டு குழப்பங்களை தற்காலிமாக மறக்கடிக்க சாதா மக்களுக்கு போதையூட்டு கைச்சித்திரமாக காட்சியப் படுத்த முடியும்; என்ற வாக்கில் எனது வாதத்தினை வைத்தேன்.

இதனை எழுத அமர்வதற்கு முன்னால், இன்னும் காத்திரமாக எனது கருத்துக்களை வைக்க வேண்டுமென்றேதான் நினைத்திருந்தேன். ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியை படிக்கும் பொழுது கொடுத்த ஐந்து மில்லியன் டாலர்களைக் கூட பாகிஸ்தான் அரசு பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்று பரிசிலீத்துக் கொண்டிருக்கிறது என்றும், ஓபாமா அரசு இந்தியாவின் உதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறும் சிபாரிசு பண்ணுமளவிற்கும் இருக்கிறது நிலமை என்று படித்ததும் தான் நான் மேலே குறிப்பிட்ட அரசியல் உள் லாப நிலை பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்று ஊர்ஜித படுத்திக் கொள்ள முடிந்தது.

இரண்டு நாடுகளும் இத்தனை வறுமைக் கேடுகளை கொண்டிருப்பினும் தனது பாதுகாப்பிற்கென தன்னுடைய நாடுகளின் எல்லைகளுக்குள் அத்தனை இராணுவ தளவாடங்களையும், வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டுப்பாக்கி, வானூர்தி, டேங்குகள் என்றும் பல்லாயிரக்கணக்கில் காவல் பணியில் ஈடுப்பட்டிருக்கும் மனித உயிர்கள் என்றும் பல செலவுகளை கோடிகளில் செய்து கொண்டிருந்தாலும், இன்று நாட்டு முழுமைக்குமே பேராபத்து இயற்கைச் சீற்றத்தால் என்று வரும் பொழுது தன்னுடைய அத்துனை resourcesகளையும் பயன் படுத்தி மக்களை காப்பாற்றி அதன் மூலமாக இவர்கள் எதற்காக அத்தனை பொருளையும் செலவு செய்து காக்கிறார்களோ அந்த செலவீனங்களை மட்டுறுத்தி நிறுவிக் கொள்ள முடியாதா? மக்களின் மனங்களில் அமைதி, சகோதர பாசம் என்ற விதைகளை இது போன்ற அவல நிலைகளின் மூலமாக தங்களுடைய இருப்பைக் காட்டி, கண்களுக்கு புலப்படாத பாசக் கயிற்றைக் கொண்டு கட்டி நீண்ட தூர தீர்விற்கு வழிவகை செய்து கொள்ள முடியாதா...

நாமும் பேருந்து விட்டுப் பார்க்கிறோம். கிரிக்கெட் விளையாண்டு பார்க்கிறோம். பிற நாடுகளுக்குச் சென்று பேச்சு வார்த்தை நிகழ்த்திக் கொள்கிறோம். இருப்பினும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் பக்கத்து பக்கத்து கதவுகளைக் கொண்ட அண்டைய வீட்டுக்காரர்களுக்கு ஒன்றென்றால் ஓடிப் போய் கை கொடுக்கும் வாய்ப்புகளை எல்லாம் உள் அரசியல் லாப நோக்கிற்காக தட்டிக் கழித்துக் கொண்டே எந்த அமைதியை வளர்க்க இவர்கள் பாடுபடுகிறார்கள்? இதெல்லாம் அரசியல் சித்து விளையாட்டுக்களன்றி வேறென்ன? ஏன், சாதா மக்களான நாம் அதனைப் பற்றி யோசிப்பதே இல்லை?

லார்ட் ஆஃப் வார் Nicholas Cage நடித்து வெளி வந்த படம் அதனில் மிகத் தெளிவாக காட்டுவார்கள் எப்படி வளர்ந்த நாடுகளில் உற்பத்தியாகும் இராணுவ விளை பொருட்கள் வளரும் நாடுகளில் விற்பனையாகிறது அதற்கு எப்படியாக வளரும் நாடுகளில் பிரச்சினைகள் உருவாக்கப் பட்டு எண்ணெயிட்டு வளர்த்தெடுத்து பிரச்சினை ஓய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது என்ற ரேஞ்சிற்கு கதை நகரும்; அதுவே உண்மையும் கூட. அதனையும் தாண்டி இன்று நம் அரசியல் வாதிகளுக்கு உள் நாட்டு பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேண்டுமாயின் அண்டைய நாடு தொட்டுக் கொள்ள ஊறுகாயாக வேண்டும் என்பதே அடிப்படை நாதம். அதற்கு மக்கள் உயிரொன்றும் பெரிய விலையல்ல! யாருக்கு வேண்டும் தொலை தூர அமைதியும், தென்றல் காற்றும்...




பி.கு: இதில பெரிய ஜோக் என்னத் தெரியுமா பாகிஸ்தான்ல இப்ப அடிச்சு முடிச்சிருக்கிற வெள்ளத்திற்கு இந்தியாவும், அமெரிக்காவும்தான் காரணமாம். இயற்கையை திசை திருப்பி அங்க ஏவி விட்டாங்களாம். மக்கள ஏமாத்தி போதையிலேயே வைச்சிக்க இதை விட பெரிய கேணத்தனமான சப்பைக் காரணங்களை கூறி தன் நாட்டு மக்களையே முட்டாள்களாக காட்டிக் கொள்ள வேறு யாரும் அஞ்ச மாட்டாங்க இந்த அரசியல் வியாதிகளை விட்டால்.


Photo Courtesy: Net

Friday, August 20, 2010

இத படிக்காம விட்டுடுங்க பார்ப்போம் - :)

ஒருத்தரு கவின் ஜாலங்கிற பேர்ல தனியா ஒரு கடை திறந்து பட்டைய கிளப்பிட்டு இருக்காரு. சிகரெட்டிற்கும் அதனுடன் உறவு கொண்டாடுவருக்குமான நெருக்கம் அது சொல்லி விளங்கக் கூடியதல்ல... ஆனால் அதன் பின்னணியில் எது போன்ற நட்பாக இருக்கிறதின்னு சொல்லி கவி பாடி இருக்காரு பாருங்க நீங்களே...




...புகைத்துக் கொல்லும்

`நான்கு அங்குல’ தீவிரவாதி..


புற்று நோயின்

அழகிய அந்தரங்க காரியதரிசி


வெள்ளை உடுத்தி வரும்

இவள்..

உண்மையில்

பல உயிர்களைக் கொள்ளையிடும்
ச(ர்)ம்பல் கொள்ளைக்காரி!...


Tuesday, August 10, 2010

ஃபேஷன் ஷோவில் காமிராப் பார்வை: Fashion Show Photographs

இப்படி ஒரு இன்ப நிகழ்ச்சியும் கலந்ததுதான் இன்னிக்கு நான் கலந்துகிட்ட ஷோவின்னு தெரியாமயே டவுண்ட்டவுன் ஜியார்ஜியா காங்கிரஸ் செண்டருக்கு நண்பர்கள் கூப்பிட்டுருந்தாங்கன்னு போயிருந்தேன். அங்கே பார்த்தா... அட நான் என்னாத்த சொல்லுறது நீங்களே பார்த்துக்கோங்க...

இங்கதான் அந்த நிகழ்ச்சி நடந்துச்சு...




# 1 - அள்ளி முடிஞ்ச கொண்டையோட...





# 2 - இது என்ன பார்வையோ; ரொம்ப நேரம் நின்னுருப்பேனோ...



#3 - தலையில வாசமில்லாப் பூவோட...




#4 - என்ன மூட் பாருங்க படத்தில...






#5 - ம்ம்ம் வீட்டில எதையோ மறந்து வைச்சிட்டு வந்திருப்பாங்களோ...




#6 - அந்தப் பார்வை என்னய நோக்கி வந்ததுதான்... ஜஸ்ட் மிஸ்ட் ;)



# 7 - ஏன்ன்ன்ன்ன்...



#8 - தலைக் கோபுரத்திற்காக இந்தப் படம்...



#9 - புகைப்படத்தின் பின்னணி நல்லாருக்கில்ல...



#10 - இது கொசுரு, அங்கன மூணு அக்காக்க ஆடுனிச்சு இதுக்கு மேலே இங்க சரியா வராதுன்னு பிடிச்சி வைச்சிக்கிட்டேன்... முடியல்ல ரேஞ்ச் அதெல்லாம் :)

Saturday, July 31, 2010

இவரை நான் சேலஞ்ச் பண்ணிட்டேனாம்...

போன முறை கோடியக்கரை போயிருந்தப்போ, கீழே இருக்கிற தாதாகிட்ட ரொம்ப நெருங்கிப் போயி ஒரு கடவுச் சீட்டளவு புகைப்படம் எடுக்கிறேன்னு கிட்ட போக, என்னய பிடித்து ஒரு மூன்று நிமிடத்திற்கு மேலே நிக்க வைச்சிடுச்சு. எனக்கு தேவைதான். ரொம்ப பேராசை! சரி, நகருவோம்னு அப்படி இப்படி உடம்பை அசைச்சா எக்கச் சக்க மிரட்டல். கடைசியா மக்களை கூப்பிட்டு என்னய இந்தாளுகிட்டயிருந்து மீட்க வேண்டியதாப் போச்சு.

ஃப்ளிக்கர்ல ஏத்தினேன் அப்படியே இங்கயும் காட்டிடுவோமேன்னு.

When I Monkeyed - Bonnet Macaque (Macaca radiata)

Related Posts with Thumbnails