Saturday, July 07, 2007

*மாயன்*, நாசர் இவர்களுடன் தெகா...!

மாயன்(வலைப்பதிவர் ) அவர்கள் "நாசர்" குறித்தும், மெதுவாக நகரும் படங்களை குறித்தும் தனது பார்வையை இந்தப் பதிவில் "நடிப்புக் கடவுளால் நாசமாகும் தமிழ்சினிமா -அவதாரம் எடுக்கிறார் நாசர்" பின்னூட்டங்களின் மூலமாக தனது எண்ணங்களை வெளிக்கொணர்ந்திருந்தார். அதற்கு நானும் இரண்டு பின்னூட்டங்களை இட்டு எனது எண்ணங்களை அதன் பொருட்டு பகிர்ந்துள்ளேன். அதற்கு ஒரு பின்னூட்டத்திற்கு இட்டது தனிப் பதிவிற்குறிய அந்தஸ்தை (என் பார்வையில் :-) பெற்றதால் தனியாக இங்கே.

இதுதான் மாயனின் பின்னூட்டம்:

மக்களை சினிமாவால் கரையேற்ற முடியும் என்று நம்பும் அப்பாவியாய் இருக்கிறீர்களே.. தெகா..

விவாதம் இரசிப்பு தன்மையைப் பற்றி.. வெளிநாட்டு ஆட்கள் இங்கே வந்து நமது கிராமத்து கலைகளையும், இந்திய தேசத்தில் விரவிக்கிடக்கும் கலைகளையும் கவர் பண்ணிட்டு இருக்கான்.. நாம மேற்கத்திய சினிமாவையும், இலக்கியத்தையும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கோம்...
//ச்சும்மா விசிலடிச்சான் குஞ்சுகளாகவே தேக்கமுற வைச்சிருப்போம், சரிதானே, மாயன். .\//
விசிலடிச்சான் குஞ்சாய் இல்லாமல் அமைதியாய் நாசரின் உலக படங்களை பார்க்கும் படி செய்து விட்டால் சினிமா சமூகத்தை காப்பாற்றுமா..? இன்னைக்கு ரஜினியும், விஜய்யும் கொண்டு போறதை நாளைக்கு நாசர் கொண்டு போவார்... அவ்வளவு தான்..

உலக சினிமாவின் ரசிப்பு தன்மை நம்மாட்களிடம் இருக்கா இல்லையானு விவாதம் வரும் போது அதை பத்தி மட்டும் தானே பேசனும்.. ஏன் தெகா சம்மந்தம் இல்லாம சமூக முன்னேற்றத்தையும் பத்தியும், கரையேத்தறதையும் பத்தி பேசறீங்க..

சனி, ஜூலை 07, 2007 4:01:00 PM

பின் வருவது இந்த அப்பாவி அதாவது சினிமா ஊடகத்தின் வாயிலாக சமுதாய பண்பாட்டு கலைகளை காக்க முடியுமென்று அனியாயமாக நம்பும் தெகாவின் பதில்...

மாயா,

அப்படி என்றால் ஏன் உலக பல்கலை கழகங்களும், பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களும் தென் மாநில நாட்டுப் புற கலைகளின் மீதோ அல்லது தொன்மை வாய்ந்த புராண கால நாடங்களின் மீதோ ஆராய்ச்சி செய்து பாதுகாக்க வேணுமென்ற சிரத்தை எடுத்துக் கொள்கிறது?

நமக்கு காலம் காலமாய் இந்த நாட்டுப்புற பாடல்களும், ஒப்பாரிப் பாடல்களும் அதன் மூலமாக சொல்லப்படும் விசயமும் ஒரு தலை முறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எப்படி கீழிறக்கம் செய்யப் பட்டு வருகிறது? கலப்பிடமேதுமன்றி. அதன் மூலம் ஒரு சமுதாயம் என்னாத்தை பெறுகிறது?

கால வெள்ளத்திலிருந்து அவைகளை பாதுகாத்து, வரும் சந்ததிகளுக்கு சிறிதேனும் விட்டுச் செல்வது ஒரு சமூக பொறுப்பல்லவா? அதெப்படி பொறுப்பற்ற தன்மையாகும். சினிமா என்ற ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்தது. மிகவும் பொருளாதாரத்தை மட்டுமே முன் நிறுத்தி நடத்தப்படும் ஒரு தொழில்தான், என்றாலும், ஒரு கலைவாணர் தன்னாலானதை அவ் ஊடகத்தின் ஊடாக கொடுத்து எதுவும் விட்டுச் செல்ல வில்லையா?

எப்படி அகழ்வாரய்ச்சி செய்து பலங் கால கட்டிடங்களையும், விலங்குகளையும் கண்டுடெடுத்து அவைகளின் மூலமாக நாம் நம்முடைய வரலாற்று இருப்பை தெரிந்து கொள்கிறோமோ அது போலவே இது போன்ற டப்பாங்குத்து படங்களையும் தாண்டி அமைதியாக அமர்ந்து சிறிது சமூக கண்ணோட்டத்துடன் ஆராய்ச்சி செய்து எடுக்கபடும் படங்களையும் பார்த்து ப்ரக்ஞையுருவதும், அதன் பொருட்டு சிறிது அக்கரை காட்டுவதும் இளைஞர்களாகிய நமது கடமைதானே?

என்னுடைய பார்வையில் இது போன்ற எதார்த்த வாழ்வை பற்றி (Satyajit ray, Thakazhi Sivasankara Pillai, Adoor Gopalakrishnan போன்றவர்களும், தமிழகத்தில் இருந்தவர்களும்... இன்று தலையெடுக்க எத்தனிக்கும் சேரன்களையும், பச்சான்களையும், பாலாக்களையும் இந்த காட்டாற்று வெள்ளத்தில் போக விட்டுவிடாமல் சிறிது நம்பிக்கை அளிப்பதும் நமது கடமையே..) சித்தரிக்கும் படங்களும் பெருமளவில் ஊக்குவிக்கப்படுவதின் ஊடாக ஒரு சமூகத்தின் கிடைக்கற்கரிய விசயங்கள் போற்றி பாதுகாக்கப் படுகிறது என்பேன்.

கீழே Satyajit Ray பற்றி மற்ற ஒருவரும், அவரும் கூறுவது இது போன்ற மெதுவாக நகரும் படங்களைப் பற்றி...

... Like Renoir and DeSica, Ray sees that life itself is good no matter how bad it is. It is difficult to discuss art which is an affirmation of life, without fear of becoming maudlin. But is there any other kind of art, on screen or elsewhere? "In cinema," Ray says, "we must select everything for the camera according to the richness of its power to reveal...

Pauline Kael, Film Critic.


படித்தவர்களே நாம் இப்படி சிந்திக்கும் பொழுது, பிறகு எப்படி அந்த ப்ரக்ஞைகளிலிருந்து அப்பாற்பட்டு நிற்கும் ஒரு சாதாரண குடிமகனுக்கு விழிப்புணர்வேற்ற முடியும்? இந்த டின்சல் சினிமா உலகினை ஒரு பணம் பண்ணும் தொழிற்சாலையாக மட்டும் எண்ணாமல் அவ்வப்பொழுது சமூக நோக்கோடு குறைந்தப்பட்சம் போசவோ, அல்லது சிறிது செயலிலும் காட்ட எத்தனிக்கும் பொழுது, ஆஹா! எது போன்ற விமர்சனங்களையெல்லாம் சமாளித்து மேலே எழும்ப வேண்டியிருக்கிறது... இதுவும் இதில் தான் அடங்குமோ...



P.S: இது தொடர்பான தருமியின் சுட்டியில் பயணித்து கண்டிப்பாக அவரது பதிவையும் படித்து விடுங்கள்.

ரொம்ப பிரயோசனமான பதிவு... "8 M.G.R.>ரஜினி>விஜய்..??? "

Tuesday, July 03, 2007

எப்பொழுதும் ஏழரை இப்ப *எட்டு* பாகம் - II

இன்னும் எட்டுல மூணே முடிக்கலைல்லே, அப்புறம் எப்படி நான் நாலுக்குப் போறது. என்னது இன்னும் அந்த மூணே படிக்கலையா அப்ப இங்கே ஏறி அங்கே இறங்கி சமர்த்தா படிச்சிட்டு வந்திருங்க, ப்ளீஸ்.

என்னடா இவன் மூணைப் போட்டு இந்த இழு இழுக்கிறானேன்னு நினைக்காதீங்க. அதிலதாங்க நிறைய திருப்பு முனையான விசயங்கள் என் வாழ்க்கையில் நடந்துச்சு. இப்ப விசயத்துக்கு வருவோம். அப்படியே படிச்சி கிடிச்சு ஃபெயிலாப் போன அந்த ஒரு பாடத்தையும் எழுதி பாஸு பண்ணி வைச்சிருந்தேன்.

இதற்கிடையில் என்னத்தடா இனிமே படிச்சி வேலை தேடின்னு நினைக்க வைக்கிற மாதிரி கொஞ்சம் வீட்டுக்குள்ள வேற அடுத்தடுத்தப் பசங்க ரெடியாகிட்டானுங்க. கல்லூரி வாசல மிதிக்க. நான் அவங்களுக்கு இடம் கொடுக்கலாமின்னு நினைச்சு, என் முடிவ என் அண்ணன் கிட்ட சொன்னேன், அவரும் முதல் முறையா என் வாழ்க்கையே திருப்பிப் போடுற மாதிரி ஒரு அறிவுரை கூறினார். தம்பி இப்ப இருக்கிற குடும்ப கஷ்டத்தப் பாத்து பயந்து கிடைக்கிறதெ விட்டுறாதே, மேலே படி அதுவும் ஏதாவது வித்தியாசமான்னு சொன்னாரு.

திரும்பவும் எனக்கு வந்துருச்சு வேகம். அந்த வருசம் தி ஹிண்டுவில வந்த அத்துனை வெளி மாநில கல்லூரிகளுக்கும், பல்கலை கழகங்களுக்கும் வித்தியாச வித்தியாசமான முதுகலை பட்டப் படிப்பு என்ன இருக்கோ அதுவாப் பார்த்து அப்ளை பண்ண ஆரம்பிச்சேன். அதில் ஒரு பஞ்சாப் கல்லூரியும், திருப்பதி பல்கலை கழகமும் அடக்கம் (Microbiology, Virology etc.,). அவ்ளோ த்தீ உள்ளர.

திடீர்னு ஒரு நாள் மயிலாடுதுறை ஏ.வி.சி.சி கல்லூரியில இந்த மாதிரி எம்.எஸ்ஸி wildlife biology முதுகலை பட்டப் படிப்பு இருக்காமான்னு விளம்பரம் வந்துச்சு. சரி விடுன்னு விண்ணப்பம் தருவிச்சு அனுப்பியிருந்தேன். நுழைவுத் தேர்வு எழுத கூப்பிட்டுருந்தார்கள். நான் போன பேருந்திலேயே என்னோட இன்னொரு +2 படிச்சவரும் இருந்தார், அவரும் அங்கேதான் போயிட்டு இருக்கார்.

எழுதினோம் இரண்டு பேரும். தேர்ந்தெடுத்தாங்க. அது தாங்க எனக்கு பிள்ளையார் சுழி போட்ட மாதிரி. அன்னைக்கு என் காலில் கட்டிய சக்கரம்தான் மேற்குமலைத் தொடர்களின் எல்லா வாசல்களிலும் நுழைந்து இந்தியாவின் எல்லை வரை எடுத்துட்டுப் போயி, வால்பாறையில் வைத்து ஒரு வெள்ளைக் காரியுடன் ஒரு காட்டுத் தனமான காதலில் விழுந்து அது பிறகு உலகின் சில இடங்களுக்கு செல்லுமளவிற்கு இட்டுச் சென்றது அந்தச் சக்கரம்.

இப்ப ஞாபகம் இருக்கா இந்தக் காட்டான் எ,பி,சி,டி கிணத்துக்குள்ளே இருந்து மக்கடிச்சவன் ஒரு பி.எச்டி தீசிஸ் எழுதுற வரைக்கும் வளர்ந்துட்டான் இந்த பாயிண்ட்ல. இதில ஆங்கிலத்திலதான் பேசிவேங்கிற மாதிரி ஒரு சின்ன குட்டிப் பையன் வேற. எம்பூட்டுத் தூரம் போயாச்சு. திரும்பிப் பார்த்தா 2200மீட்டர் பெருங்குன்றை உட்காராம ஒரே மூச்சுல ஏறி முடிச்ச மாதிரியில்ல இருக்கு.

(நாலு). எம்.எஸ்சிக்கு ஒரு ஆறு மாசம் களப்பணி உண்டு நான் படிச்ச வனவியல் படிப்புக்கு. அதுக்கு டாப்ஸ்லிப் ஏரியாவை தேர்ந்தெடுத்து, காட்டெருமைகள் மேல ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தேன். அங்கே வைச்சுத்தான் ஒரு நாள் எதார்த்தமா என் வருங்கால ப்பி.எச்டி அட்வைசரை (டாக்டர் அஜித் குமார், அப்ப அவரு யாருன்னே தெரியாது எனக்கு), அவரு அவரோட டேராதூன் மாணவர்களுடன் களப்பணிக்கு வந்திருக்கும் பொழுது சந்திக்க நேர்ந்தது. சும்மா ஆர்வக் கோளாறு வந்து எனக்குள்ள சந்தேகத்த யாரோ என் அறைக்கு வெளியே இருந்து நம்ம சப்ஜெக்ட் பேசுறாங்களேன்னு போயி பார்த்தா இவரு உட்கார்ந்து இருந்தார். என் சந்தேகத்தை கேட்டேன். அவரும் ஆர்வமா விளக்கினார்.

பின்னாலே இரண்டு வருஷம் கழிச்சு நான் தேசீய அளவில நடந்த Jனியர் ஆராய்ச்சி மாணவன் நுழைவுத்தேர்வுல கலந்துகிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டப்ப யாருடா அதுக்கு முதன்மை அறிவியலர் (principle scientist)ன்னு பார்த்தா நான் ஏதோச்சையாக சந்திச்ச நம்ம டாப்ஸ்லிப் ஆசான். அவருக்கும் ஆச்சர்யம் நேர்முக தேர்வில் என் பின்புலத்தை கேட்டப்ப. டாப்ஸ்லிப் சந்திப்பு கண்டிப்பாக அவரின் மனதை விட்டும் அகலவில்லை.

(ஐந்து). முதுகலை முடிச்சுட்டு வீட்டுக் போன முடிஞ்சது கதைன்னு, ஒரு சீனியர் மூலமாக கெஞ்சிக் கூத்தாடி பொள்ளாச்சியில மையமாக கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான "டைகர் நேச்சர் கிளப்"ல என்னைய Ecologistஆ தள்ளிவிட்டாங்க. அதனை நடத்தின அந்த நபர் ஒரு டூபக்கூர் பார்ட்டின்னு பின்னாலே தான் தெரிய வந்தது. என்னைய பொள்ளாச்சியில இருக்கிற முக்கிய வர்த்தக இடங்களுக்கெல்லாம் கூட்டிட்டுப் போய் அந்த நிறுவனத்தின் உறுப்பினர் கிட்டயெல்லாம் இவருதான் நம்ம நிறுவனத்தின் சயிண்டிஸ்ட்ன்னு:-P அறிமுகப் படுத்திவைச்சுட்டு, வசுல அவரு கரெக்டா பாக்கெட் பண்ணிக்குவார் போல.

எனக்கு டாப்ஸ்லிப்ல எப்படியோ தங்க ஒரு இடம் வன அதிகாரிங்கிட பேசி பிடிச்சுக் கொடுத்தார். அங்க உள்ள மெஸ்ஸில சாப்பிட்டுக் கோங்க நான் அக்கவுண்டை கவனிச்சிக்கிறேன்னு சொல்லிட்டு ஆளு எஸ்கேப்பூ. அங்க பணம் கொடுப்பாரோ இல்லையோ, தினமும் பொள்ளாச்சியில இருந்து வார பேருந்துல டைகர் நேச்சர் கிளப்பின் சயிண்ட்டிஸ்க்கு (யாரு நம்மதான்) தவறாம, இருக்கிற அத்துனை நாளிதழ்கள், வார, இரு வார மகஜின்கள் என்று தினமும் சப்ளை நடந்தது.

கீழே இருந்து திருப்பூர் பனியன் கம்பெனி வாலாக்களிலிருந்து மத்த கவுண்டர் குடும்ப ஆட்கள் வரை மேலே வரும் பொழுது என்னை "கைடு" வேலைக்கு அட நம்ம நிறுவன சயிண்ட்டிஸ்ட்னு அள்ளிப் போட்டுக் கொண்டு அங்குள்ள ஜீவராசிகளை சுட்டிக் காட்ட அழைத்துச் செல்வார்கள்.
இவ்வளவுக்கும் சம்பளம் ரூபாய் 500. இன்னமும் டாப்ஸ்லிப் ரேஞ்சர் எல்லார்கிட்டயும் சொல்லி சிரிக்கிறாராம் நான் அங்க இருந்தப்ப இரண்டு மாத மெஸ் பாக்கின்னு. இது கூட எனக்கு இப்ப ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்னால் சென்றப்பத்தான் தெரிய வந்தது.

அந்த "தங்களின்" போதுதான் எனக்கு "தனிமையின்" அவசியம் புரிய ஆரம்பித்தது. பெரும்பாலான நேரங்களில் தனியாகவே கரியஞ்சோலையின் வழியாக நடந்து சென்று அங்குள்ள வாட்ச் டவரில் நிறைய நேரம் அருகமையே உள்ள ஒரு சின்ன நீர் தொட்டியை(water hole) இலக்காகப் பார்த்து அமர்ந்து விடுவதுண்டு. கோடையில் விலங்குகள் தண்ணீர் பற்றாக்குறையின் போது அங்குதானே வரும், அங்கு வைத்துப் பார்ப்பதற்கு ஏதுவாக அந்த தொட்டி. அந்த அனுபவம் எத்துனை கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்கறிய. அது மற்றுமொரு உந்துதல் பலகையாக பின்னாலில் அமைந்தது என்றால் அது தான் உண்மை.

கொஞ்ச நாட்கள் கழிச்சு இது சரிப்பட்டு வராதுப்பான்னு என்னாட வழி இதிலிருந்து மீண்டு கொஞ்சம் நல்லபடி இருக்கன்னு பார்த்தப்பத்தான். முதுமலையில இருக்கிற IISC., CES களப்பணி மையத்தில இருந்து களப்பணியாற்றுவதற்கு ஒரு ஆள் தேவைப்பட்டது தெரிஞ்சது. தலை தெறிக்க ஓடி அங்ஙன விழுந்தேன்.

(ஆறு). அங்கதான் இரண்டாவது(எங்க லைன்ல) பெரிய ஆள இந்தியாவில சந்திச்சேன். முதல்ல நான் டாப்ஸ்லிப்ல சந்திச்ச என் ப்பி.எச்டி அட்வைசர் டாக்டர். அஜித் குமார் இவர் காம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில இருந்து இந்திய சிங்க வால் குரங்குகளின் மீது ஆராய்ச்சி பண்ணி ப்பி. எச்டி பண்ணவர். ஒரு பெரிய குரங்கு ஆராய்ச்சி நிபுணர் இந்தியாவிலிருந்து - உலகத்தில எல்லாருக்கும் தெரியும் இந்த லைன்ல இருக்கவங்களுக்கு. இந்த IISC., களப்பணியில சேர்ந்தப்ப அங்க இரண்டாவது பெரிய ஆள் யானைகளின் மீது ஆராய்ச்சி நடத்துரவர் டாக்டர் சுகுமாரை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.

இதுக்கிடையில் சும்மா கை பரபரக்க எ.ஜே.ட்டி ஜான்சிங், ஆசாட் ரஹ்மானின்னு, ஈஸ்வர் ப்ரகாஷ் யாரெல்லாம் இந்தியாக்குள்ள பெரிய வனவாழ் ஜீவராசிகள் ஆராய்ச்சியாளர்கள் இருக்காங்களோ அவங்களுக்கு நான் யாரு, எவருன்னு சொல்லி வேலை கேட்டோ இல்லைன்னா நான் தனியாக குஜாராத்தில் இருக்கும் சவுக்கு நில காட்டுக் கழுதைகளின் மீது ஆராய்ச்சி செய்யணுமின்னு ப்ரியப் படுறேன் எனக்கு நிதி உதவி கிடைக்குமான்னு கல்லெறிஞ்சு பார்க்கிறது சொந்தக் கடுதாசி மூலமாக. பிரிதொரு நேரத்தில் அவங்கெல்லாம் எங்காவது நான் சந்திக்க நேரும் பொழுது கண்டிப்பாக என் பெயரை கேக்கும் பொழுது ஞாபகத்தில் நிக்கிற மாதிரி அந்த கடுதாசி இருந்ததை சொல்லி கேட்டதுமுண்டு.

இதினாலே என்னாடா தெகான்னு கேட்டா. அட, அய்யாக்களா இவங்கள எல்லாம் சந்திச்சப்ப நான் தெரிஞ்சுக்கிட்ட விஷயம், எளிமை இவ்வளவு பேரு எடுத்துருந்தாலும், பொண்டாட்டியோட சமையல் கட்டுல நின்னு உதவி பண்றது. தான் சாப்பிட்ட தட்டை தானே கழுவி வைக்கிற டீசன்சி. தன் குழந்தைகள குளிப்பாட்டி விடுறதுன்னு வாழ்க்கையை வாழவும் கத்துக் கொடுத்தாங்க. அது.

(ஏழு). இப்ப நம்ம காதல் கதை. நம்மூர்ல, இருக்கிற ஜாதிக்குள்ள இன்னமும் உப ஜாதியா இருந்தாக் கூட இல்லவே இல்லைன்னு மறுத்து திருமணத்துக்கு ஒத்துக்காத காலக் கட்டத்தில நான் போயி இனம் விட்டு இனம்(race) திருமணம் பண்ண சம்மதிக்க வைக்கணுமின்ன ச்சும்மாவா. ஆத்தாவும், அம்மாவும் விட்டேனா பாருங்க, நான் சின்ன வயசில ஸ்கூலுக்கு இழுத்துட்டுப் போறப்ப எடுத்துகிட்ட கடிக்கிற டிரைனிங் ;-), கிணத்துக்குள்ள இறங்கி எ.பி.சி.டி படிச்ச கெட்டிக்காரத்தனமெல்லாம் பயன்படுத்தினதுனாலே, அந்த நேரத்தில வெற்றி நம்ம பக்கம்தான். பிறகு எல்லோரும் குடும்பத்தோட "மார்ஸ் அட்டாக்" படம் பார்த்திட்டு வெளியே வந்தப்ப அம்மா பயந்து மிரண்டு போயி தம்பி நீ எப்படிடா தனியாள போயி அங்கே(அமெரிக்காவில) சமாளிக்கப் போறேன்னு கேட்டு பீதியக் கெளப்புற அளவுக்கு உண்மையான காட்டானகவே இருந்திருக்கேன்.

இருந்தாலும் என் அம்மாவும் அப்பாவும் போன பிறவியில வெள்ளைக் காரய்ங்களா பொறந்துருப்பாங்களோன்னு அப்பப்ப சந்தேகம் வருது. நான் அடிக்கிற கூத்துக்கெல்லாம் உடன் பட்டு, என்னைய விட்டுப் பார்த்து அதில இருந்து கிடைக்கிறதெ பகிர்ந்துக்கிற அளவிற்கு முதிர்ச்சி எங்கேயிருந்து வந்தது? இன்னமும் கேட்டுக் கிட்டுத்தான் இருக்கேன் அந்தக் கேள்விய. அந்த விசயத்தில் நான் கொடுத்து வைச்சவன். I do love my parents dearly.

இந்த திருமணத்தில என்ன சாதனைன்னா, "சுய பரிசோதனை"ங்கிறது ஒவ்வொருவருக்கும் எவ்ளோ முக்கியமின்னு தெரிஞ்சுக்கிட்டதுதான். எல்லாத்தையும் எனக்கு நானே சொல்லிக் கொடுத்துக்கிட்டு தெரிஞ்சுக்கணுமின்னு, ஏதோ ஒண்ணு என்னை பிடிச்சு தள்ளிக்கிட்டே இருந்துச்சு. இன்னும் அந்த "தனம்" இருக்கு. இந்த கரடு முரடான பாதையின் மூலமாக எனக்கு கிடைச்ச ஒரு சந்தோஷம் என் மகன். :-). இதுவும் சாதனைதானே?

(எட்டு). நான் அமெரிக்கா வந்தப்பெல்லாம் இம்பூட்டு சாஃப்ட்வேர் மக்கள்ஸ் இல்லை இங்க. இப்பத்தான் எங்கே நான் இருக்கேன்னு தெரியாத அளவிற்கு நிறைய இளம்தாரி புள்ளைகள பார்க்க முடியுது. என் முதல் வேலை இங்க வந்தவுடன் பார்த்தது ஒரு விரைவு உணவகத்தில் அதுவும் கடை மூடுற ஷிஃப்ட், விடிகாலை மூன்று மணிக்கு துடைச்சு, மொழுகி, கடையடைச்சுட்டு பனிக்காலங்களில் மிதிவண்டி அழுத்த முடியாதாகையால் கால்நடையாக சில நேரங்களில் முழங்கால் முழுக சரக் சரக்கென்று கொட்டிக் கிடக்கும் snowவின் ஊடே நடந்தே வீடு சேர்வது. சேர்ந்த புதிதில் நிறைய நின்று வேலை செய்தும், டேபில் துடைச்சு பழக்கமில்லாததாலும் இந்திய அசட்டுத் தனத்தில், பாத்ரூம் உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டு அழுததுண்டு.

இப்பொழுது நினைத்தால் நான் எவ்வளவு spoilt bratஆக இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று புரிகிறது. ஆனால் அந்த வேலையின் மூலமாக நான் எப்படி corporate(capitalistic) america வேலை செய்கிறது என்பதனை அறிந்து கொண்டேன்.

வந்த புதிசில இங்க உள்ள நிறைய பல்கலை கழங்களுக்கு போக வாய்ப்பும் கிடைத்தது. அப்படி கிடைச்சப்ப என் தீஸிஸ் எழுத நிறைய ரிபஃரென்ஸ்க்கு அங்குள்ள நூலகங்களையும் பயன் படுத்திக்க முடிஞ்சுச்சு. எப்படி உண்மையான அறிவியல் உலகம் இந்த உலகத்தில் இயங்குகிறதென கண்கூடாக பல அறிவியல் கான்ஃபரென்ஸ்களில் காண நேர்ந்தது.
இங்கும் அதே பல்லவியே பாடப்பட்டது (brown nosing, internal politics, references etc., etc.,). விடாது இந்திய வன ஆராய்ச்சித் துறையில் முனைவர் பட்டத்துடன் இங்கு கணிதத்தை தவிர வேறு எது கொடுத்தாலும் அடித்து விளையாடும் சொந்த நாட்டுக் காரர்களுடன் பேசிச் ஜெயிப்பது என்பது கொம்பாகவே எனக்குப் பட்டது. சிறிது காலங்கள் மோதி விட்டு, எனது ஆர்வத் துறையிலிருந்து நிறைய மாற வேண்டி இருந்ததால்(compromise), துறைசார் வேலையை கொஞ்சம் தள்ளிப் போட்டு விட்டு இப்பொழுது எனக்கு நானே சம்பளம் கொடுத்துக் கொள்வதாக வாழ்வை அமைத்துக் கொண்டது.

சரி முடிச்சுடறேன். இதிலிருந்து என்ன தெரிஞ்சுக் கிட்டேன் வாழ்க்கையைப் பற்றின்னா. ரொம்பச் சிம்புல். நீ யாரோ அதுவாகவே இரு. பேப்பர் ரோஸ்டை (அட தோசைங்க) அமெரிக்காவில் இருக்கிறேன் என்பதற்காக fork and knifeவைத்து சாப்பிட்டு உன்னையே காமெடியன் ஆக்கிக்கொள்ளதே :-). படிப்பு என்பது உன் கண்களை திறந்து காட்டி, சிந்திக்க வைப்பதற்கு மட்டுமே அந்த பட்டையங்களை ஈன்று விட்டதின் மூலமாக நான் அதி புத்திசாலியாகிவிட்டதாக பொருள் கிடையாது. அடக்கம் அமரருள் உய்க்கும்.

அட ஆமாமில்ல எட்டு பேர நான் பரிந்துரைக்கணுமில்ல:

மதி கந்தசாமி
நவன்
சுந்தர வடிவேல்
குமரன்(Kumaran)
செல்வ நாயகி
ஞானசேகர்
மங்கை
சுகா

யம்மாடியோவ். தண்ணீ ப்ளீஸ்.

Monday, July 02, 2007

தருமிக்கு ஓர் வாழ்த்துச் செய்தி...!

இன்று திருமண நாள் காணும் திரு சாம் என்ற தருமிக்கு என் மனமார்ந்த *திருமண நாள்* வாழ்த்துக்கள்.
























தம்பதியர் வாழ்க! வாழ்க!! பல்லாண்டு வாழியவே... என்று வாழ்த்தும் மாணவர்களின் ஒருவன் --- காட்டான்ஸ்.

எப்பொழுதும் ஏழரை இப்ப *எட்டு* பாகம் - I

இதுக்கு மேலேயும் நான் காத்துகிட்டு இருந்தேன்னு வைச்சுக்கோங்க ஏதாவது பார்சல்ல எனக்கு அனுப்பி வைச்சுடப் போறாங்க இந்த ஜோதியில கலந்துக் கொள்ளச் சொல்லி கூப்பிட்டுருந்தவர்கள்.

அது என்னமோ தெரியலை என்னையும் மனசில நிறுத்தி மூணு பேரு கூப்பிட்டு இருக்காங்கப்பா. முதலில் கப்பிப் பய கத்தியிருந்தார் இங்கே, பிறகு கவிதா கூவியிருந்தார் இங்கே, கடைசியா நம்ம தருமி கர்ஜித்து இதுதான் உனக்கு மருவாத அம்புட்டுத்தேன், வந்து உள்ளேன் அய்யா சொல்லிட்டு ஓடிப்போன்னு சொன்னதுக்கப்புறமும் வரலைன்னா சரியா வருமா வராது அதான் வந்துட்டேன். இனிமே இது உங்கப் பாடு.

(ஒண்ணு). எங்கே ஆரம்பிக்கிறதுன்னே தெரியலையே. சரி நான் செத்து பொழச்சவண்டாங்கிறதில இருந்து ஆரம்பிப்போம். ஏன்னு கேளுங்க நான் பொறந்தப்பா உசிரோட இருப்பனான்னே நிறைய பேருக்கு சந்தேகமா இருந்துச்சாம். என் பாட்டி சொல்லும் மண்டை மட்டும்தான் இருந்துச்சு மரைக்கா மாட்டமின்னு (தலைபிரட்டை மாதிரி - பாருங்க அப்பவே நான் இயற்கை நேசியா இருந்திருக்கேன் :-) ).

எப்படியோ, அப்படி இப்படின்னு தட்டி கிட்டி அந்த தலைபிரட்டை ஸ்டேஷ்ல இருந்து "துணைவன்" ஸ்டேஷ்க்கு கொண்டுவந்து விட்டுடாங்க. ஏன் துணைவனா, இதுக்கப்பறம் இவன் பிழைச்சா தம்புரான் செயல்னு முருகன்டே நேந்துக்கிட்டாங்களாம். அதான் அந்தப் பட்டப்(பட்டுப் போன?!) பெயர். அந்த பேருக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் பின்னாலே என் மண வாழ்க்கையும் அமைஞ்சுச்சு அதனையும் சொல்றேன்.

(இரண்டு). பள்ளிப் பருவத்தப் பத்தி சொல்றதா இல்லையா. சொல்லாம விட்டா நிறைய விட்டுப் போகுமில்லை. சரிங்க, ஒன்னாப்புல இருந்து மூனாப்பு வரைக்கும் யாரும் என் கிட்ட நெருங்கி ஸ்கூலுன்னு சொல்லவே பயப்படுவாங்களாம். அப்படியே இருந்தாலும் ரெண்டு பேரு தரத்தரன்னு இழுத்து கொண்டுபோய் விடணுமாம், அப்ப இரண்டு பக்கமும் திரும்பி திரும்பி கடிச்சி எல்லாம் வைப்பேனாம்.

பள்ளிக்கூடம் சும்மா பேருக்குத்தான் "அரசாங்க ஆரம்பச் சீரணிப் பள்ளியோ" என்னமோ பேரு. இப்ப என்ன, சொல்லிப்பிடறேன், யாராவது என்னைய தம்பி உனக்கு எ.பி.சி,டி தெரியுமாடான்னு கேட்டுப் புட்டா அடுத்த முறை அவரு என்ன பார்க்க பல மாதங்கள் ஆகலாம். ஒரு முறை என் மாமா ஒருத்தர் பிடிங்கடான்னு என் தம்பியையும், என் சகோதரியையும் விட்டு 500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடுற கணக்கா ஓடுன என்னைய துரத்திப் பிடித்துக் அமுக்கி கொண்டுவந்து அவரு கையில ஒப்படைச்சாங்க. அன்னிக்கு கொஞ்ச நேரம் கூடையில அமர்த்தி கிணத்துக்குள்ள இறக்கி வைச்சாங்க, மனப்பாடம் பண்ணேன், 26 லெட்டர்ஸையும். சாதனை, இல்லையா.

பிறகு பத்தாம் வகுப்பு பரிட்சை. தகிடு தத்தம் போட்டு கடம் அடிச்சி, அடிச்சி பாஸுக்கு மேல பண்ணிப்புடுவேன்னு எழுதி இருந்ததிலே, முதல் நாள் சாயந்திரம் வந்த "மாலை முரசில" எப்படியோ 75ல இருந்து 80க்கு கிடையில் போட வேண்டிய ஹைஃபென்(-) இல்லாம போனதால நான் பெயிலு. இரவு பதினோரு மணி வரைக்கும் வீட்டுக் போறதா வேண்டாமான்னு உட்கார்ந்து இருக்கும் பொழுது அப்பா வந்து "அட வாடா இதுக்கு போயி அலட்டிக்கெல்லாமான்னு" வீட்டுக்கு கூட்டிட்டுப் போயி எல்லோரும் வெளிய படுத்திட்டு என்னைய மட்டும் பத்திரமா உள்ளேயே வச்சுப் பார்த்துக்கிட்டாங்க.

இருந்தாலும் மறுநாள் காலையில ஒரு சின்ன நம்பிக்கை, எங்க மத்த நாளிதழ்களெ எப்படி இருக்குன்னுப் பார்ப்போமின்னு "தினகரன்" வாங்கிப் பார்த்தா... பார்த்தா.... ஆத்தா நான் பாஸாகிட்டேன்னு வயல் வரப்பில ஓடிட்டு சொல்ற கணக்கா நான் கண்ணு முண்ணு தெரியாமா மிதிவண்டிய அழுத்திகிட்டே போயி எங்க கடையில இருந்த அத்தனை கஸ்டமருக்கும் யோவ் அப்பா எல்லோருக்கும் இலவச ட்டீய போட்டுக் கொடுக்கச் சொல்லுமய்யான்னு ஆர்டர் போடுற அளவிற்கு இன்ப அதிர்ச்சியில மிதந்ததை சொல்லவா.

கணக்க நினைச்சாலே கண்ணு கட்டுனதுனால +2வில ப்யூர் சயின்ஸ்தான் படிப்பேன்னு, ITIதான் உன் வசதிக்கு முடியுமின்னு படிச்சவங்க என்ன சுருட்டிப் போட நினைச்சும், அழுது புரண்டு +2வும் சேர்ந்தாச்சு. அப்பத்தான் அய்யாவுக்கு பர்சனாலிட்டி ப்ரக்ஞை துளிர்விட ஆரம்பிச்ச நேரம் (வயசுக்கு வந்தாச்சில்ல:-).

உடனே ஒடம்ப தேத்தணுமின்னு தமிழ்வாணன் பிரசுரத்தில இருந்து அயிரம் எப்படிகளிலிருந்து "கரத்தே கற்றுக் கொள்ளுங்கள்" VPP மூலமாக தருவிச்சு பணம் டெலிவரியப்ப கொடுக்கிற மாதிரி செஞ்சுருந்தேன். புத்தகமும் வந்துச்சு. அப்பா தான் கடையில இருந்தார். புத்தகத்தையும் பிரிச்சு பார்த்தார். பணத்தை கொடுத்துட்டு, கடுப்பாகி "புல்தடுக்கிப் பயில்வான் மாதிரி இருந்துக்கிட்டு ஏண்டா உனக்கு இந்த வேலை" அப்படின்னுட்டு என்கிட்ட கொடுத்துட்டார். உள்ளர சந்தோஷம் இருந்திருக்கமலா இருந்திருக்கும், அப்பாவுக்கு.

அது என் நண்பர்கள் வட்டத்திற்கு வர இன்னமும் ஊர்ல சில பேர் என்ன செல்லம கூப்பிடுற பேரு "புல்தடுக்கி பயில்வான்." பிறகு சாயந்திர வேளைகளில் ஆ, ஊன்னு கை கால்களை மாத்தி, மாத்தி காத்தில் உதைப்பதை பார்த்து எங்க பாட்டி (ஆத்தா)விலிருந்து, வீட்டுக் கோழிவரை என் பக்கமே வராமல் "அடியே ஒமவனுக்கு என்னமோ ஆயிப்போச்சுடின்னு" சொல்லிக்கிட்டு திரியற அளவிற்கு பாடி பில்டிங் நடந்துச்சு ஒரு நாலு வாரத்துக்கு.

(மூணு). படிப்ப சீரியச எடுக்க அரம்பிச்சது கொஞ்சம் +2விலதான்னு நினைக்கிறேன். ஆனால் அது நாள் வரைக்கும் இங்கிலிபீஸ்னாவே வேப்ப மரந்தான் என் ஞாபகத்துக்கு வந்தது. பள்ளிய முடிச்சுப் போட்டு திருச்சிப் பக்கம் கொண்டு போய் தள்ளிவிட்டுட்டு வந்திட்டாங்க பட்டப் படிப்பிற்கென.

அங்கேயும் கணிதமில்லாத பாடந்தே வேணுமின்னு விலங்கியல் எடுத்தேன். ஆனால், ஆங்கில வழி கல்வியாப் போச்சே. சமாளிச்சேன். அங்கேதான் வாழ்க்கையைப் பற்றிய ப்ரக்ஞை கொஞ்சம் எட்டிப் பார்க்க ஆரம்பிச்சது. ஹாஸ்டல் கிடைக்காம மன்னார்புரத்தில குமார் லாட்ஜில் தங்கி, சாப்பாட்டுக்கு இங்கயும் அங்கயும் அலைஞ்சு, அதுக்கிடையிலேயே, என். எஸ்.பி ரோடு போயி கலர் பார்த்து, ஐஸ்க்ரீம் சாப்பிட கத்துகிட்டு, விடாம குரூப் குரூப்பா சினிமா போயி யாரையும் சினிமா பார்க்கவிடாம தருதலத்தனம் பேசி...

இப்படியே போயிக்கிட்டுருந்த வாழ்க்கை கடைசி செமஸ்டர்ல அலட்சியமா மரபியல், சைட்டோலஜி மற்றும் பரிணாமப் பேப்பர்ல ஜஸ்ட் மிஸ்ஸிடு மூணு மார்க் ரீதியில ஃபெயிலாப் போயி, வீட்டுல ஒரு வருசம் உட்காரப் போயி, நிஜம் இன்னமும் சுட ஆரம்பிச்சது. அடுத்தது என்னான்னு புரியலை. வீட்டுல ஏற்கெனவே ஒரு எம்.எஸ்சி குத்த வைச்சு உட்கார்ந்து இருக்க அதே சமயத்தில் இப்ப நான் வேற. அப்பத்தான் உணர ஆரம்பிச்சேன், ஆங்கிலம் இல்லைன்னா உலகத்தில ஒண்ணுமில்லையோன்னு. ஆங்கில கிறுக்கு பிடிக்க ஆரம்பிச்சுச்சு.

ஊரில் வந்த தி ஹிண்டு, ஸ்போர்ட்ஸ் ஸ்டார், Fரண்ட் லைன், பழைய ரீடர்ஸ் டைசஸ்ட்னு அப்பா சக்திக்கும் மீறி தினமும் பரிட்சைக்கு படிக்கிற மாதிரி ஆங்கில டிக்சனரியும் கையுமாய் ஒரு நாளைக்கு நான்கு ஐந்து மணி நேரம் மேய ஆரம்பித்தேன் ஒரு வேப்ப மரத்தடிக்கு கீழே அமர்ந்து.

பிறகு இரவு முழுக்க ரேடியோவை தலைக்கு பக்கத்தில வைச்சுக்கிட்டு, voice of america, radio masco அப்படி இப்படின்னு sw2ல போட்டு விடிய விடிய கேக்கிறது. திரும்பவும் ஆத்தாதான் எல்லார்கிட்டயும் பொழம்பித் தள்ளும், எங்கடி அவன் தூங்கிறான் ரா முழுக்க என்னாதான் அந்த ரோடியோ பொட்டியில இருக்கோ அதப் பிடிச்சு நோண்டிக் கிட்டே இருக்கான்னு சொல்லும். அதனை இன்னமும் அப்பாவும், அம்மாவும் எனது கடின உழைப்பிற்கு கீழே அந்த நாட்களை சேர்த்துக் கொள்வார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் பிரியற மாதிரி இருந்துச்சு.

பிறகு ஒரு மன நோயாளி கணக்கா கொல்லைக்கு போறப்ப, வாரப்ப, தனியா நடந்து திரியறப்பன்னு எனக்கு நானே ரெண்டு காரெக்டர்வச்சுக்கிட்டு (hi, how are you - i am fine) கேள்வியும் நானே பதிலும் நானேன்னு பேச்சு ஆங்கிலத்த வளர்த்துக்க பேசித் திரிவேன்.

இருந்தாலும் பாருங்க, உச்சரிப்பு இன்னமும் கைகூடலை. அதுவும் நம்ம ரேடார்ங்கிற ப்ரக்ஞைக்கு கீழே வராத நேரம். அது தொடர்ப நிறைய அசிங்கப் பட்டதுமுண்டு.அதுக்கு ஒரு உதாரணம் Pony Horseக்கு Bony Horseன்னு சொல்லி எல்லாரையும சிரிக்க வைச்சது. அது எல்லாருக்கும் சிரிப்பு எனக்கு நெருப்பா இருந்துச்சு. அது எதுக்காக சிரிக்கிறாங்கன்னு தெரியலை. முட்டி மோதி தெரிஞ்சிக்கிட்டப்ப கையில the oxford dictionary pronunciationக்கு உதவி பண்ண வந்துச்சு...

மிச்சத்தை அடுத்த அடுத்தப் பதிவில சொல்லிக்கிட்டே வாரேன்... பதிவு பெருசாப் போயிக்கிட்டே இருக்கு, உடைச்சு உடைச்சுத் தாரேன்...

தொடரும் பாகம் - 2ல.

Friday, June 08, 2007

உலக வியபாரச் சந்தையில் *மனிதம்*...

இன்றைய தினத்தில் குழந்தை கருவிலிருக்கும் பொழுதே நம்ம ஊரு ஜனங்க பில் கேட்ஸ் பேரைச் சொல்லிச் சொல்லி அவரு மாதிரியே ஒரு பெரிய ஆளா (திருடனா) வரணும் என்ன சொல்றது கேக்குதா அப்படின்னு சொல்லிச் சொல்லி வளர்க்கிறாங்கப்பா. எனக்கு என்னமோ இந்த ஊர் புடிக்கிற புஷ்க்கும், இந்த ஆளுக்கும் ஒரு பெரிய வித்தியாசமில்லைன்னுதான் படுது.

என்ன கொஞ்ச வித்தியாசம் இருக்கு. இந்த முதல்ல குறிப்பிட்ட ஆள் ரத்தம் பார்க்கிறார் தான் அடைய வேண்டிய இலக்கை நோக்கி செல்லும் பாதையில. ஆனா, இந்த இரண்டாமாவர், தான் புஷ்யைக் காட்டிலும் புத்திசாலிங்கிற முறையில கொஞ்சம் கொஞ்சமா இந்த முழு உலகத்தையுமே தனது கண்டுபிடிப்பின் பரிணாம வளர்ச்சியின் அடிமைகளாக்கி அவர்களின் பொருளாதாரத்தை சுரண்டி, தனது வர்த்தகத்தின் மீது அசைக்க முடியா நம்பி இருக்கக் கூடிய (dependency) சூழலை வளர்த்து அதன் மீது தனது அரசாட்சியை தனக்காகவும், தன் நாட்டிற்காகவும் நிலை நாட்டி வருகிறார்.

இதில் எது எதுதெல்லாம் வியாபார உக்திகளாக மாற வேண்டும் என்ற விவஸ்தை இல்லாமல் எல்லாமே வியபாரமாக ஆகிப் போனதுதான் மனிதம் இறந்து கொண்டிருப்பதற்கான ஒரு சாட்சி.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சினிமா பாணியில் ஒரு ஸ்டண்ட் அடித்து ஒரு 60 மில்லியன் டாலர்களை மக்களின் நலத்திற்காக அள்ளி விடுகிறேன் என்று விட்டுவிட்டு, பில்லியன்களை திரும்பப் பெரும் ஒரு உக்தியும் இதில் அடக்கம் தானே. இந்த "Monopoly" மக்களை சிறுகச் சிறுக சுரண்டி முழுதுமாக கொள்ளை அடிக்கும் எண்ணத்தை தவிர வேறு என்னாவாக இருக்க முடியும்.

இந்த லட்சனத்தில் நமது கிளிப்பிள்ளை அப்பா அம்மாக்கள், தனது பிள்ளைகள், தன்னால் முடியாத ஒரு ஆசையை அதுவும் மற்றவர்களுக்காக நிகழ்த்தி காட்ட வேணுமென்று இபொழுது டாக்டர், இஞ்சினியர் ஆகும் பாட்டை நிறுத்தி விட்டு, மா திருடன் பில்லு கேட்ஸு மாதிரி நீயும் ஆகணுமென்று சொல்லி வருகிறார்கள்.

இப்பொழுது இந்தியாவில் முக்கால் வாசி குழுந்தைகளுக்கும் மேலாக தனது "ரோல் மாடலாக" இவரைத்தான் சொல்லிக் கொள்கிறார்கள் (சொல்லிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...). இவரே தாதா, எல்லா உலக "monopoly"களுக்கும் வழிகாட்டி என்பதனை மறந்து, நினைக்கவே எரிச்சலாக வருகிறது. இந்த மக்களை என்னவென்று சொல்லுவது.



P.S: ஒரு கொசுருச் செய்தி இப்பொழுது இந்தியாவில் இந்த Windows Monopolyயை வளர்க்கும் உத்தியில் piratedபிரதியை எல்லா பயனாளிகளும் பயன்படுத்தி மக்களை பழக்கும் உத்தியில் ஈடுப்பட்டிருப்பதாக ஒரு பேச்சும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

Thursday, May 03, 2007

பதினோரு வருட பிரிவும் சந்திப்பும்: புகைப்படத்துடன்..

எப்படித்தான் இந்த தேர்தல் நேரங்களில் சூறாவளிப் பிரச்சாரம் பண்றேன்னு சொல்லிக்கிட்டு நம்ம ஊர்ச் சாலைகளில், முழுக்க முழுக்க குளீருட்டப்பட்ட அறையிலேயே இருந்து காலத்தை கழித்துவிட்டு தேர்தல் சமயத்தில் மட்டும் இப்படி உடல் நோவையும் பொருட்படுத்தாமல் அலைய முடிகிறது நமது அரசியல் வாதிகளால் என்பதனை, கரம்பக்குடியிலிருந்து கோவைக்கு டாடா சுமோ (the family killerஆம் செல்லமாக;-) என்ற கட்டை வண்டியில் சென்ற போது உடல் ரோதனையை உணர முடிந்தது :-P .

என்ன இருந்தாலும் இரண்டு பேருக்கு மட்டுமே அந்த வண்டிப் பயணம் என்பது கொஞ்சம் மனதை அறுப்பதாக இருந்தது. சரி, அப்படி என்ன வெரைசா போயி கோவையில பண்ணப்பேனேன் அப்படின்னு யோசிக்கிறீங்களா.

ஏற்கெனவே எனது சில பதிவுகளில் பேசியிருக்கிற நமது நண்பரை டாப்சிலிப்பில் உள்ள வரகலியார்ங்கிற யானை முகாமில் சென்று சந்திப்பதுதான் எனது இந்தப் பயணத்தின் லட்சியம். அவரு எனக்கும் கோகுலாங்கிற இன்னொரு நண்பருக்கும் தள ஆராய்ச்சி உதவியாளார உதவினவரு. அவரை கடைசியா நான் கண்டது என்னுடன் வால்பாறையில் தங்கி இருந்தப்போ எனது மற்றுமொரு ஆராய்ச்சிக்கு உதவும் சமயத்தில்தான். அதுவும் 1996ல், அதற்கு பிறகு இதோ இப்பொழுது தாங்க.

ரொம்ப ஆவலுகளுக்கிடையே நம்ம "குடும்பபக் கொல்வானை (Tata Sumo)" முக்க முனக வைத்து அந்த வேண்டுமென்றே செப்பணிடப்படாத சாலையில் பயணித்து வழியெங்கும் நீலகிரி மற்றும் சிங்க வால் குரங்குகள், இருவாட்சி பறவை அப்படின்னு பயணம் நீண்ண்ண்டு கிட்டே போயி கடைசியா நமது நண்பரை யானை முகாமில் வைத்து சந்தித்தேன். அந்தச் சந்திப்பு சொல்லி வைத்தது போலவும், எனக்காகவே அவர் காத்து இருப்பது போலவும் நிகழ்ந்தேறியது, அவரும் ஏதோச்சையாக அங்கு தனது மகள்களுடன் வந்து நிற்கப்போக.

அது ஒரு எமொஷனல் சந்திப்பு. தன்னைப் போலவே தனது மகளும் இளைத்துப் போய், பல வருடங்கள் தனது உண்மையான இருக்கும் வயதை முன் தள்ளி அவர்களின் உடல் அதனைக் காட்டிலும் முன்னேறியிருந்தை காண முடிந்தது. கட்டியணைத்து அவரின் ஸ்பரிசம் உணர்ந்தேன். கடந்த முறை ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பு, இரண்டு லுங்கிகளும், நிறைய மெழுகு வர்த்திகளும், அவர் விரும்பும் பீடிக்கட்டுகளுமாய் அவரை நடந்தே சென்று சந்திக்க முயற்சித்து வீண் போய், நான் வாங்கிச் சென்ற வஸ்துகள் அணைத்தும், நாங்கள் அங்குதான் செல்கிறோம் நண்பரிடம் ஒப்படைத்து விடுகிறோம் என்று கூறி பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு வன அலுவலரால் கபளீகரம் செய்யப் பட்டதை நினைவில் நிறுத்தி இந்த முறையும் அப்படி நடக்க வாய்ப்புகள் அதிகமிருப்பதை நினைந்து ஒன்றும் வாங்கிச் செல்லவில்லை.

இருப்பினும் அவரை நேரில் சந்தித்த சமயத்தில் மனதெங்கும் எதனையோ இழந்ததை கண்டெடுத்து விட்டதைப் போன்ற ஒரு வித பூரிப்பு, என்னையும் அறியாமல் அந்த ஃபாசில் நண்பரின் கைகளுக்குள் என் கை எதனையோ பறிமாறிக்கு கொண்டது.

என் மனத்தினுள் மீண்டும் அதே கேள்விக் கணைகள். அந்த புகைப் படத்தில் எங்களுக்கு பின்னால் பரந்து விரிந்து கிடக்கும் மலைதான் 'பெருங்குன்று' அதற்கு கீழே ஜமுக்காளமாக வரகலியார் சோலை. இவைகள் இரண்டும்தான் எனது நண்பரின் இணைபிரிய அடையாளங்கள். இவருக்கு அந்த மலை சாட்சியாகவும், மலைக்கு இவர் சாட்சியாகவும் வாழ்ந்து, வளர்ந்து, தேய்ந்து வருகிறார்கள்.

எனக்கு எழுந்த கேள்வி இந்த பதினோரு வருட பிரிவில், காட்டானாகிய நான் எங்கெங்கோ ஓடித்திரிந்து, என்னத்தையோ கண்டுபிடிச்சு இந்த பூமி உருண்டை சுத்தறதெ ஒரு செகண்டு குறைச்சு ஓட வைக்க முயற்சிக்கிற மாதிரி இங்க ஒட்றேன், அங்க ஓட்றேன், இதப் பேசுறேன், அதப் பேசுறேன்... ஆனா ஒரு மண்ணாங்கட்டியும் நடந்த மாதிரி தெரியலை, ஆனா, இன்னைக்கு நம்ம நண்பரும் அந்த மலையும் எல்லாத்தையும் வேடிக்கைப் பார்த்துகிட்டு செவனேன்னு ஒரு பார்வையாளராக இருப்பதைப் போன்ற தோற்றத்தை எனக்கு வழங்கியது.

இதில் யார் பார்வை 20/20...? யார் முழுமையாக வாழ்ந்தவராகிறார்கள்...??

Wednesday, May 02, 2007

காட்டானின் மறு வருகை ஆ'ரம்பம்...

ஹி... ஹி...ஹி யாரோ, என்னமோ இங்கன ஒருத்தன் காட்டான் காட்டான்னு எழுதி நாட்டையே திருத்திக்கிட்டு இருந்தானே பொக்குன்னு ஆளையே காணமேன்னு மக்கள்ஸ் எல்லாம் வலை போட்டு தேடின மாதிரியும், திரும்ப வரும் போதே, இதோ வந்துட்டேன்னு சவுண்டு வேற விட்டுக்கிட்டு வாரேன்.

சரி அப்படித்தான் யாராவது இத்தனிக்கூண்டு என்னைப் பத்தி யோசிச்சு இருந்தா அவங்களுக்கு, நான் தெரிவிச்சுக்கிறது என்னான்னா, காடு கண்ட கழுதையா இந்தியா பக்கமா போயி ஒரு மூன்றரை மாதம் எல்லாத்தையும் அனுபவிச்சுப்புட்டு திரும்ப வந்துருக்கேன்.

நிறைய இருக்கு உங்க கிட்டப் பேசி பொலம்பறதுக்கு. ஏன்னா, என் ப்ளாக்கர் முகப்பே "ஏன் இப்படி"த்தானே, பர்சனாலிடி மெயிண்டைன் பண்ணணுமில்ல... ;-) வாரேன், பார்ப்போம்.

Related Posts with Thumbnails