Sunday, February 26, 2023

கலைஞரின் சற்கர நாற்காலியும் கமலின் ஏகாடியமும்!

கமலோட சக்கர நாற்காலி ஏகடியம் அவருக்கேயான மிக இயல்பான வளர்ப்பிற்கு பின்னான சிறுமையின் எச்சம். அவரோட நிதானத்தையும் தாண்டி இப்படியான வன்மம் பொங்கி வழிகிறது என்றால், இன்னும் சொற்களாக பேசப்படாத, வக்கிர எண்ணங்கள் எவ்வளவு இருக்கக் கூடும்?

அம்பேத்கர், காந்தி, பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் எதனை உணர்ந்து கொண்டதால் சாதரணர்களைக் காட்டிலும் பன்மடங்கு உழைக்க தழைப்பட்டார்கள்? மரணித்த நொடிகளுக்கு முன்பு கூட அய்யோ செய்ய இன்னும் இவ்வளவு இருக்கும் போது, பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்லும் படி ஆகிவிட்டதே என்ற வேதனையே அவர்களிடையே தங்கியிருக்கக் கூடும்.

பெரியாரும், கலைஞரும் அந்தப் பரிதவிப்பை தனது உடல் உபாதைகளைப் புறந்து தள்ளி களத்தில் நின்றதே அதற்குச் சான்று. ஒரு தனி மனித வளர்த்தெடுப்பு என்பது, எத்தனை பிரயத்தனங்களை உள்ளடக்கியது? தொடர் பயணம், சமூக உள்வாங்கல், அது தொடர்பான ஊடாடல்கள், போராட்டக் களங்கள், வரலாற்று வாசிப்பு, இலக்கிய அறிமுகங்கள், அது தொடர்பான எழுத்துப் பணி என்று எத்தனை அனுபவம் அவர்களால் சேகரிக்கப்பட்டிருக்கும். அந்த நிறை மனிதர்களின் சமூகம் சார்ந்த ஆழ்ந்த புலமையை, தான் நேசிக்கும் மக்களோட பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவு செய்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஆழ்ந்த மனித நேய passion இருந்திருக்க வேண்டும்.

இத்தனை அறிவும் ஒருவர் மரணிக்கும் போது அவரோடு சேர்ந்தே பேசப்படாத, வழங்கப்படாத பகுதிகளும் மறைந்து விடுகிறது. காலத்தின் நிலையின்மை உணர்ந்தவன் எப்படி அதனை வீணடிப்பான்? எனவே, ஒரு மனிதரின் நினைவு தவறும் நொடிகளுக்கு முன்பு வரை கூட, ஏரணத்தோடு விசயங்களை தொடர்பு படுத்தி பேசும் திறன் இருக்கும் வரையிலும் அந்த மூளை அந்தச் சமூகத்திற்கு தேவைதான். 

சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே ஸ்டீவன் ஹாகின்ஸ் போன்ற அறிவியலாளர்களின் வாழ்நாள் சாதனைகளையும் அறிந்தவரே கமல். புரியாமல் எல்லாம் கலைஞர் பொருட்டு பேசி இருப்பார் என்று நான் நம்பத் தயாரில்லை. கமலையொத்த குடும்பங்களின் பேச்சு முழுக்க தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்று, குறுக்கி வந்தடைந்த புள்ளிதான் இந்தத் திராவிடத் தலைவர்கள். அவர்களின் சப்கான்ஸியஸ் மனம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றியே இயங்குகிறது.

கமல் பகடியாக பேசியது போல் மற்றுமொரு சிறுமைத் தனமே மோடியை வைத்து, கலைஞரின் இறுதி நாட்களில் அவர் தோளின் மீது கை வைத்து நலம் விசாரிப்பது போல, கலைஞரை திகிலூட்டுவதாக நினைத்து தங்களது வக்கிரப் பகுதியை அவர்கள் சொரிந்து கொண்டதும் என்பேன். அந்தப் புகைப்படத்தை சற்றே உள்வாங்கி ஆராய்பவர்களுக்கு புரியும், துரைமுருகன், கலைஞர் உடற்மொழியை கவனித்தல் பொருட்டு. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, ஏதாவது பேசி அது ஒரு மகிழ்வான தருணத்திற்கு இட்டுச் சென்றிருந்தால், அது மோடியின் தோள் தொடுதலுக்கான நட்பு உணர்ச்சி போல் வெளிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நான் இந்தச் சூழலை ஒரு திட்டமிட்ட எக்ஸ்ப்ரசனாகப் பார்க்கிறேன்.

கமலின் சக்கர நாற்காலி ஏகடியத்திற்கு இணையானதே மோடி குழாமின் தோள் தொடுதலும். இங்கு மறைமுகமாக இவர்கள் அனைவரையும் இயக்குவது சித்தாந்தச் சமரே!

0 comments:

Related Posts with Thumbnails