Sunday, July 09, 2006

மரணம் இனிக்கிறது - (தேன்கூடு போட்டி)

"உஸ் என்ன எழவுடிது, பத்து மணிக்கெல்லாம் மண்டையெ போட வைக்கிற வெய்லு கொளுத்துன்னு," அங்கலாய்த்துக் கொண்டே 101 வயது ருக்கு கொல்லைப்புறம் இருக்கிற மகவீட்டு திண்ணையிலே விசிறி மட்டையும் கையுமாய் தினமும் தன் கட்டையை சாய்த்துவிடுவாள் ருக்கு கிழவி.

கிழவி வயசுக்கும் விசிறி மட்டைக்கும் ஒரு தொடர்பு இருக்குங்கிற மாதிரி, கிழவி தூங்குதா இல்லை முழிச்சுகிட்டு இருக்குதான்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, ராத்திரி ஒரு மணியா இருந்தாலும் சரி, மூணு மணியா இருந்தாலும் சரி கைமட்டும் விசிறியொட வீசிகிட்டே இருக்கும்.

ருக்கு ஆத்தாவின் உயரம் நல்ல ஆறடிக்கு இருந்திருக்கணும், நல்ல வெட வெடன்னு உயரம், எளமையிலே நல்ல கலரோட இருந்திருக்கும்ன்னு யார் பார்த்தாலும் சொல்லிடலாம். அப்படி ஒரு உடல் வாகு. ஆனால் முதுமையின்னாவே திரும்பவும் குழந்தையா தேய்றதானேன்னு, கிழவியும் தினமும் கொஞ்ச கொஞ்சமா சுருங்கி போய்கிட்டே இருந்தது. உடல் அளவிற்கு. ஆனா மனசு எப்பொழுதும் ஒரே மாதிரிதான். இன்னமும் அதொட கணவர பத்தி பேசி கிண்டல் பண்ணா வெட்கம் பார்க்கமுடியும் அதுகிட்டெ.

ஆனாலும் இப்பவும், நல்ல திடகாத்திரமா, யார் உதவியுமில்லாம தான் உண்டு தன் வேலை உண்டுன்னு குளிக்கிறதிலேருந்து மற்ற எல்லா வேலையுமே காலைலெ டாண்னு அஞ்சு மணிக்கு எல்லாம் எழுந்திருச்சு செஞ்சிடும்.

ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ராத்திரிலே கண் தெரியாம திறந்து கெடந்த கிணத்துக்குள்ளே விழுந்து, கூடையிலே சவாரிச்சு மேலே வந்துச்சு உடைஞ்சுப் போன இடுப்போட, அன்னிலைலிருந்து குமிஞ்சுதான் நடக்கணும்கிற நெலமை.

அப்படி இருந்தாலும் தினமும் நேரத்திலே வீட்டு கொல்லைப்புறம் பெருக்கிறதிலேருந்து, சாமன் சட்டு கழுவுற வரைக்கும் ஒண்ணும் விட்டு வைக்கிறது கிடையாது. ரெண்டு புள்ளைங்க பெத்ததுதான். ஆசைக்கு ஒண்ணுன்னு. இப்பொ மவன் பெரிய ஆபிசர ஊருர போய் உத்தியோகம் பாக்குறான், மவ உள்ளூருலேயே கட்டிக் கொடுத்து, இன்னைக்கும் கிழவிக்கு துணையா இருக்கா.

கிழவிக்கு எந்த குறைச்சலும் இல்லைதான். யாரடவாது பேசிக்கிட்டே இருக்க ஆளுங்க, நல்ல ஊர் கதை பேசும். ஆனா நெளிவு சுளிவுவோட. அப்படியும் எப்பாவது பிரச்சனை வந்து மவ காதுக்கு வரும் போது கொஞ்சம் ரெண்டு பேருக்கும் அரச புரசலா சாப்பாடு நேரத்திலே, "இந்த கிழவிக்கு வாய வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாதா, ஏன் இப்படி பண்ணிவைச்சுத் தொலையுது" அப்படின்னு மவ ஆரம்பிக்க, கிழவி, "அடி நான் என்னடி அப்படி சொல்லிப்புட்டேன், வாயெ புடுங்கினா ஒரு வார்த்தை சொல்லி வைச்சேன்" அப்படிங்கிறது அப்பபொ நடக்கிற பேச்சு.

ஆனா கிழவிக்கு இந்த வெயில் காலம் வந்துருச்சுன்னா சுத்தமா பிடிக்காது. ஏதோ நெஞ்சு பட படன்னு கோழி இறக்கைய அடிச்சுகிறது மாதிரி அடிச்சுகிதுன்னு கம்ளைண்ட் பண்ணிகிட்டே விசிறி மட்டையும் அதுவுமா மரத்துக்கு மரம் போயி உட்கார்ந்து விசிறிகிட்டே இருக்கும். பாக்கவே பாவமா இருக்கும்.

கிழவி வாழ்க்கையிலே எல்லாத்தையும் பார்த்துருச்சு. கணவனே தன்னோட 27 வயசிலேயே சாக கொடுத்திட்டு, அவரு வச்சுட்டுப் போன நெல புலங்களே வைச்சு புள்ளைய படிக்க வைச்சு, கல்யாணமும் பண்ணிக் கொடுத்து, மருமவ வெறுப்பு பார்த்து, மகன் பாசத்துக்கு ஏங்கி, தன் அண்ணன் வீட்டு புள்ளைங்க பசி, பட்டினியா கெடக்கிறத பார்க்க சகிக்காமெ கொல்லைப்புறம ஒரு புள்ளைய வரச் சொல்லி கழுத்துச் செய்ன கழட்டிக் கொடுத்து, மக வீட்டு பசி, பட்டினியிலெ உழண்டு, ஆறுதலா அங்கேயே கிடந்து, ரெண்டு வீட்டு பேரக் குழந்தைங்களயும் பார்த்து வைச்சுருச்சு.

கடைசிய மவ வீட்டு பஞ்சமும் பறந்து போய், பேரக் குழந்தைகளும் அது அதுவும் அங்கொண்னும் இங்கொண்னும்மாய் மணம் முடிச்சுப் போக ஆரம்பிக்கும் போது, அதுக்கு வயது 101 இருக்கலாம். அப்பவும் ஒரே புலம்பல்தான், "என்னாட பசங்களா என்னையெ விட்டுட்டு எல்லாம் போறீங்க, சாகக் கிடக்கையிலே யாரும் பக்கத்திலே இருக்க மாட்டீங்க போலன்னு." அப்படியேதான் நடந்தும் முடிஞ்சிச்சு.

அந்த கிழவி ஒவ்வொரு நாளும் காலன திட்டமா இருந்ததே இல்லை, எப்பெல்லாம் சின்ன வயசு பசங்கலோ இல்லை யாருக்கவாது மாரடைப்பே வந்து செத்து போன கிழவியோட பொலம்பல் இப்பிடித்தான் இருக்கும் "பாவம் நேத்தைக்கு மொளச்ச காளானெ எல்லாம் டக்கு டக்குன்னு பிடிங்கிக்கிறான், பாழப் போன எமதர்ம ராசா, என்னை அழைச்சுக்கிட்டா என்ன கேடு, அதுகளெ வுட்டுபுட்டுன்னு." அப்படி ஒரு மனசு.

அந்த ருக்கு கிழத்துக்கும் ஒரு நாள் அழைப்பு வந்தது. வயித்துபோக்குன்னு. மறுநாள் ரொம்ப அமைதியா தன்னை சுத்தி பேத்தி மக, கொள்ளு பேத்திகள், பேரன்கள் நிக்க, தன் மகளை மட்டும் கூப்பிட்டு ’ஒரு வா தண்ணி குடுடின்னு’ வாங்கி குடிச்சுப்புட்டு, கையிலிருக்க விசிறிமட்டை இன்னும் யாருக்காகவோ விசிறிக்கிட்டு இருக்கிற மாதிரி விசிறிக்கிட்டு இருக்க, மகளை வைச்சக் கண்ணு வாங்காம, தூங்குறத்துக்கு போற மாதிரியா எந்த வலியோ, குழப்பமோ, பயமோ இல்லாமல் இமைங்க மட்டும் படம் பார்த்த வரைக்கும் போதுமின்னு மூடிக் கொண்ட மாதிரி மூடிக்கிச்சு.

இந்த கிழவி பள்ளிக்கூட பக்கம் போனதில்லெ, ஒரு வார்த்தை படிக்கத் தெரியாது. ஆனா நிறையெ பேருக்கு ஏதோ ஒரு விதத்தில உதவிருக்கு. யாருக்குமே சுமையா இல்லாம, சத்தமில்லாமலே வந்து, சத்தமில்லாமலே வாழ்ந்து போயிருக்குது. நெனச்சுப்பார்த்தா மரணத்தை இந்த கிழவியை விட யாருமே அனுபவிச்சு தழுவியிருக்க முடியாதோ அப்படின்னு தோணுது.

20 comments:

இலவசக்கொத்தனார் said...

தெகி,

பாட்டியை எரிச்சாங்களா? புதைச்சாங்களா? :D

நல்லா கதை சொல்லுறீருவே!

துளசி கோபால் said...

இனி விசிறிமட்டை ஆடாதுன்னு முடிச்சுட்டீங்க.

பாவம் கிழவி.

கதையிலே என்னமோ ஒண்ணு குறையறமாதிரி ஒரு ஃபீலிங்.
என்னன்னு சொல்லத்தெரியலை.
மனசுலே அசை போட்டுட்டு எதுவும் வந்தாச் சொல்றேன்.

நாமக்கல் சிபி said...

//நெனச்சுப்பார்த்தா மரணத்தை இந்த கிழவியை விட யாருமே அனுபவிச்சு தழுவியிருக்க முடியாதோ அப்படின்னு தோணுது//

எனக்கும் அதாம்வே தோணுது!

(அதெல்லாம் இருக்கட்டும் கொத்தனார் கேட்டதுதான் நானும் கேக்கேன், பொதைச்சீங்களா இல்லை எரிச்சீங்களா?)

நாமக்கல் சிபி said...

முதல் ஆளா வந்து முறுக்குன்னு ஒரு தட்டு வெச்சிட்டு போன கொத்தனாரே! எங்களுக்கெல்லாம் முறுக்கு இல்லையா?

Thekkikattan|தெகா said...

இ.கொ,

//பாட்டியை எரிச்சாங்களா? புதைச்சாங்களா? :D//

அதை சொல்லிட்டேன்னா கதையோட முடிச்சே அவிழ்ந்திடுமே...

இது என்னோட முதல் முயற்சி, நன்றிவே, முதல் ஆளா வந்து நரு(;-)க்குன்னு ஒரு குட்டு வைச்சுட்டு போனதுக்கு :-))

Sivabalan said...

தெகா

கதை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்...

கிராம சூழ்நிலையை சொல்லியிருக்கீங்க...

நன்றி.

Thekkikattan|தெகா said...

எப்படா எதிராளி சாய்வான் கபக்குன்னு பிடிச்சுப்புடுவோமின்னு சில பேரு பறக்கும் படையாட்டம் ரவுண்ட்ஸ் வுட்டுகிட்டே இருக்கும் போல.... என்ன ஹி.பிகொ தலைவரே ஞான் சொல்றது :-)))

VSK said...

துளசி கோபால் சொன்ன அதே குறையான ஃபீலிங்தான் எனக்கும் ஏற்பட்டது.
திரும்பவும் ஒரு முறை படிக்க ஆரம்பித்தேன்.
முதல் வரியிலேயே 'பட்'டென்று உறைத்தது!

நிகழ் காலத்தில் ஆரம்பித்த கதை, சென்ற காலத்தை அசை போட்டாலும், திரும்பவும் நிகழ் காலத்துக்கு வராமலே கிழவியின் கதையை முடித்து இருக்கிறீர்கள்!

அப்போ, திண்ணையில் சாய்ந்தது, பாட்டியா, ஆவியா?!

Thekkikattan|தெகா said...

/திரும்பவும் ஒரு முறை படிக்க ஆரம்பித்தேன்.
முதல் வரியிலேயே 'பட்'டென்று உறைத்தது!

நிகழ் காலத்தில் ஆரம்பித்த கதை, சென்ற காலத்தை அசை போட்டாலும், திரும்பவும் நிகழ் காலத்துக்கு வராமலே கிழவியின் கதையை முடித்து இருக்கிறீர்கள்!

அப்போ, திண்ணையில் சாய்ந்தது, பாட்டியா, ஆவியா?!//

எஸ்.கே அய்யா, நன்றி அதனை சுட்டிக் காட்டியதற்கு. ஒரு வரியை மாத்தியிருக்கிறேன். அது அப் பிழையை நிவர்திக்குமா, தெரியவில்லை. இருப்பினும் இது என்னுடைய முதல் முயற்சியே... தவறுகளை சுட்டிகாட்டுவது என்னை வளர்த்து கொள்வதற்கு உதவும். தயவு கூர்ந்து இடித்துரைக்கவும்.

நன்றி.

Thekkikattan|தெகா said...

துள்சிம்மா,

//இனி விசிறிமட்டை ஆடாதுன்னு முடிச்சுட்டீங்க.//

:-)

//பாவம் கிழவி.//

என்னங்க பண்றது, ஒரு நாளைக்கு எல்லோரும் போய்ச் சேர வேண்டிய இடம்தானே அது. ஆனா நம்ம கிழவிக்கு 101 ஆச்சே, நல்ல அனுபவிச்சு வாழ்துருச்சு...

//கதையிலே என்னமோ ஒண்ணு குறையறமாதிரி ஒரு ஃபீலிங்.
என்னன்னு சொல்லத்தெரியலை.
மனசுலே அசை போட்டுட்டு எதுவும் வந்தாச் சொல்றேன்.//

எஸ். கே அய்யா சொன்ன மாதிரித்தான் இருக்கணும், வேற ஏதாவது இருந்த சொல்லுங்க அது மாதிரி யோசிச்சுப் பார்க்கிறேன்.

Thekkikattan|தெகா said...

ச்சிபி,

//(அதெல்லாம் இருக்கட்டும் கொத்தனார் கேட்டதுதான் நானும் கேக்கேன், பொதைச்சீங்களா இல்லை எரிச்சீங்களா?)//

வுமக்கு வேற தனியா சொல்லணுமா, கொத்தனாருக்கு சொன்னதுதாமைய்ய வுமக்கும்.

கடைசியா சொல்றேங்கானும்... சித்தெ பொருமய்யா ;-)

Thekkikattan|தெகா said...

சிவா,

//கிராம சூழ்நிலையை சொல்லியிருக்கீங்க...//

முதல் முயற்சி போகப் போக இன்னும் நல்ல சொல்ல முடியுமான்னு பார்ப்போம்.

நன்றி!

தருமி said...

முதல் முயற்சி என்ற அளவில் - ஓகே! :(

நாகை சிவா said...

தெ.கா. ஏதோ நவரசம் சொன்னதால் வேகமாக ஒடி வந்தேன். வந்து பாத்தா இனிப்பு மட்டும் தான் இருக்கு(அதுவும் தலைப்பில்) மத்தது எல்லாம் எங்க

இனிப்பே நல்லா இருக்குய்யா :)

manki said...

தெ.கா, என்னவோ தெரியலைங்க.. கதை ரொம்ப அமைதியா நகர்ந்தாலும், இதுல ஏதோ ஒண்ணு இருக்கு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

முதல் முயற்சி நல்லாவே வந்திருக்கு.. தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்!!

Thekkikattan|தெகா said...

தருமி,

//முதல் முயற்சி என்ற அளவில் - ஓகே! ***:( *** //


அதுக்கு ஏங்க நீங்க சோகப் படுறீங்க... அது பாட்டீக்காகவா இல்லை இந்த பொடியன் இப்படி எழுதிப் புட்டானேன்னு வருத்தப்பட்டா?

இந்த கட்டுரைக்குப் பின்னால் இன்னும் ஃபாலோ அப் இருக்குங்க சில மெடிகல் உண்மைங்க... நான் கொடுக்கிறேன் அதொ பின்னால ஒரு தனிப் பதிவா...

Thekkikattan|தெகா said...

தருமி,

//முதல் முயற்சி என்ற அளவில் - ஓகே! ***:( *** //

அதுக்கு ஏங்க நீங்க சோகப் படுறீங்க... அது பாட்டீக்காகவா இல்லை இந்த பொடியன் இப்படி எழுதிப் புட்டானேன்னு வருத்தப்பட்டா?

இந்த கட்டுரைக்குப் பின்னால் இன்னும் ஃபாலோ அப் இருக்குங்க சில மெடிகல் உண்மைங்க... நான் கொடுக்கிறேன் அதொ பின்னால ஒரு தனிப் பதிவா...

Thekkikattan|தெகா said...

நாகையாரே,

//தெ.கா. ஏதோ நவரசம் சொன்னதால் வேகமாக ஒடி வந்தேன். வந்து பாத்தா இனிப்பு மட்டும் தான் இருக்கு(அதுவும் தலைப்பில்) மத்தது எல்லாம் எங்க

இனிப்பே நல்லா இருக்குய்யா :)//

அடி நாதத்திலே அந்த பாட்டி ஒரு மாதிரி ஜோவியல வாழ்ந்த மாதிரி தெரியாலையா? எங்காவது மரணத்தை நினைச்சு பயப்பட்ட மாதிரி காமிச்சுருக்கா? மரணமின்ன ஒரு பயப்படுற விசயமாத்தானே மத்த கதைங்க எழுதப் பட்டிருக்கலாங்கிறத நினைச்சுத்தான், பயமுறுத்தாத "நவரச" கதை அப்படின்னு சொல்லியிருப்பேன்...

சரி விடுங்க பின்னாலே நான் என் பாணியிலேயே அது எப்படி அந்த பாட்டிக்கு வசப்பட்டது அப்படின்னு எழுதிப் புடுவோம் :-)

பொன்ஸ்~~Poorna said...

//முதல் முயற்சி என்ற அளவில் - ஓகே! :(//
ஐய்யோ தருமி.. கதையை முதல் முதல் படிச்சிட்டு நானும் இதே தாங்க சொன்னேன்.. தெகா, பார்த்தீங்களா?

aaradhana said...

மரணம் ஒரு நாளும் இனிக்காது.. தெ.கா

Related Posts with Thumbnails