Sunday, March 02, 2025

ஆசானுக்கு ஓர் அஞ்சலி: A Tribute To My Beloved Mentor Dr. Ajith Kumar

இன்றைய காலை இப்படி ஒரு செய்தியுடன் விடிந்திருக்க வேண்டாம். என்னுடைய இளமை காலத்தில் என்னிடம் மண்டிக்கிடந்த பல பொதுப்புத்தி கட்டமைப்புகளை தகர்க்க போதுமான இடமளித்து மனிதனாக வார்த்துக் கொள்ள தனது வீட்டுக் கதவை திறந்து விட்டவர்; இயற்கையோடு கலந்துவிட்டார். 

முனைவர் அஜித்குமார் என்னுடைய Ph.D ஆராய்ச்சி படிப்பிற்கான ஆலோசகர். அவர் தன்னுடைய முனைவர் பட்டத்தை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருத்து பெற்றவர். நான் ஒரு முறை ஏதோச்சையாக என்னுடைய முதுகலை பட்டப்படிப்பு ஆராய்ச்சி நாட்களில், டாப்சிலிப்ல் தங்கி பைசன் பற்றிய ஆய்வில் இருந்த போது, இவரை அவரோட டேராடூன் Wildlife Institute of India மாணவர்களோட வைத்து சந்தித்தேன். இவர் வனவுயிரின ஆராய்ச்சி, பேராசிரியர் என்று அவர்களுக்குள் உரையாடிக் கொண்டதை வைத்து அறிந்து கொண்டேன்.

பிறகு நானே என்னை அவரிடத்தில் அறிமுகப் படித்திக் கொண்டேன். என் ஆராய்ச்சி சார்ந்த என்னிடமுள்ள சில சந்தேககங்களை அவரிடத்தில் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டேன். அதுவே என்னை இவரிடத்தில் பிற்காலத்தில் கொண்டு சேர்க்கும் ஓர் சந்திப்பாக அமையுமென்று அன்று கனவிலும் நினைக்கவில்லை.

மறு ஆண்டு, கோவையில் அமைந்திருக்கும் சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சி நிலையத்தில் (SACON) பல Junior Research Fellowsக்கான ஆட்கள் தேடிய நிலையில் முதுகலை முடித்திருந்த நான் அந்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய அனைத்திந்திய தேர்வில் கலந்து கொண்டேன். அதுவே என் வாழ்வெனும் வறண்ட பூமியில் விழுந்த முதல் மழை!

தேர்வாகி இருந்தவர்களின் பட்டியலில் என்னுடை பெயரை எப்படியோ நினைவில் வைத்திருந்த அஜித் சார், அவருடைய ஆராய்ச்சிக்கென அவருடைய முதல் இரண்டு மாணவர்களில் என்னையும் ஒருவனாக இணைத்துக் கொண்டு பயணிக்க தந்தியின் மூலமாக என்னை அழைந்திருந்தார்.

அன்று எனக்கு 23 வயதாக இருந்திருக்கலாம். அவருடனான உரையாடல்கள், பயணங்கள், கேளிக்கையான நேரங்கள், அடர்ந்த மழைக்காடுகளிக்கிடையே நட்சத்திரங்கள் கொத்தாக தொங்கி மினுமினுக்கும் நீண்ட இரவின் மடியில் முகாம் தீ எரிய ஓல்ட் மாங்குடன் உலகைப் பற்றியான பொது உரையாடல்கள் இன்றும் பசுமையாக என்னுள் உறைந்து கிடக்கிறது..

இது அத்தனையும் எனக்கு அறிமுகப் படுத்தி கொடுத்த எனது ஆசான் NO MORE. எனக்கே இது வரையிலும் வாழ்ந்த அத்தகைய வாழ்வின்பம் இத்தனை மன நிறைவை கொடுத்திருக்கிறது என்றால், அவருக்கு எத்தகைய நிறைவை கொடுத்திருக்கக் கூடும் என்று உணர முடிகிறது. I am sure he must have lived the fullest and given utmost of his best! Such a great human being ever I come across. Long live his scientific achievement in the academic arena.

An add on - I remember this day, after a long gap one day I called you and you took the call like I just spoken to you a half hour before without any void and allowed me to update, and we discussed about Indian political climate how rapidly it is plunging into abysmall darkness. Fondingly you pointed out that you still crack jokes about me in field trips that how I came up with "Menstrual Symptoms" theory in men and pointed out to me how hilariosly true it is! நன்றி! என்றென்றும் உங்கள் நினைவுடன் - அ. பிரபாகர்.

P.S: என்னுடன் தங்கி அஜித்குமார் சாருக்கு கீழ் மற்றுமொரு ஆராய்ச்சி மாணவராக இயங்கிய முனைவர் உமாபதி எழுதிய பதிவில் இரங்கல் பின்னூட்டமாக எழுதியது ...

I have no words to express my gratitude to my advisor - friend Dr Ajith Kumar, he was one of  my earliest times inspiration who helped me to shape myself up to be the person who I am today. I am so fortuanate and proud to call myself I was one of his first hatchlings of Ph.Ds.

I have so much to share about our fondings during those days! My Ph. D colleague Dr Govindhaswamy Umapathy has already elaboarated his academic achievements. He was a prominent and unavoidable icon in the field of Indian primatology and widlife biology; a rainforest conservation expert with profound knowledge of its ecology, with outstanding floral and faunal field identification skills. My deepest condolences to his family, friends, colleagues and I feel terribly sorry that I couldn't be there to bid final good bye! 😪🫡🙏🏽



Art Courtesy: Dr Gokula Varadharajan

Sunday, April 23, 2023

நெறிமுறையற்ற விளையாட்டுத் தளமே வரலாறு: Sapiens - 5

இன்று உலக புத்தக தினம். 

முகநூலில் இதுவரை எழுதிவந்த #சேப்பியன்ஸ் தொடரைப் பற்றிய பதிவுகளை இங்கு அறிமுகம் செய்கிறேன்.

நிறைய வாசிப்போம்..நாம் கடந்து வந்த பாதையை புரிந்து உலகை நேசிப்போம்.

சேப்பியன்ஸ் - 1

https://m.facebook.com/story.php?story_fbid=10216266244002319&id=1639793180

சேப்பியன்ஸ் - 2

https://m.facebook.com/story.php?story_fbid=10216165801571321&id=1639793180

சேப்பியன்ஸ் - 3

https://m.facebook.com/story.php?story_fbid=10216225088013445&id=1639793180

சேப்பியன்ஸ் - 4

https://m.facebook.com/story.php?story_fbid=10216240898848706&id=1639793180


நெறிமுறையற்ற விளையாட்டுத் தளமே வரலாறு: Sapiens - 5


ஹோமோ சேப்பியன்ஸ் நூல் எனக்கு என்னவோ மலிவு விலையில் பதிப்பிக்கப்பட்டு பள்ளி மேற்படிப்பு படித்த அனைவரும் கட்டாயமாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகமாகப்படுகிறது.

இப்பொழுது நான் அந்த புத்தகத்தின் எட்டாவது அத்தியாயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாகரீகங்களுக்குள்ளும் எப்படி சமூக அடுக்கதிகார முறை கட்டமைக்கப்படுகிறது, அது எதன் பொருட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது, அதன் பயன்பாடு என்ன என்று தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

அந்த பக்கங்கங்களை வாசிக்கும் பொழுது எதற்காக இந்த சமூகம் இப்படி ஏற்றத் தாழ்வுகளுடன் இயங்குகிறது என்ற எளிய கேள்விக்கு பதிலுரைக்கிறது. முதல் கட்ட அறிதலின் பொருட்டு வாசிப்பை நாடுபவர்களுக்கு இது ஒரு முக்கியமான அத்தியாயம். 

வரலாறு தோறும் இந்த ஏற்றத் தாழ்வுகளை ஓரளவிற்கேனும் சமப்படுத்த பல அவதார புருஷர்கள் வர வேண்டியத் தேவைதான் என்ன, எதன் பொருட்டு அவர்கள் தொடர்ந்து பேசி, சண்டை செய்ய வேண்டியுள்ளது என்பது அனைத்தும் நமக்கு  விளங்கிவிடும் இந்தப் பக்கங்களை நாம் கடந்துவிடுவதற்குள்.

சமூக அடுக்கு "ஆண்டான் அடிமை" என்ற எளிய கட்டமைப்பில் அதற்குள் பல அடுக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பயன் உயர் அடுக்கில் இருப்பவர்கள் கீழ் அடுக்கில் உள்ளவர்களை சுரண்டி கொழுத்து வாழ்வதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை நிறுவி அதன் பயன்பாட்டினை அறுவடை செய்ய பல கட்டுக்கதைகள் தேவைப்படுகிறது. அதனயொட்டிய புனைக் கதைகள் மனிதர்களின் ஆழ் மனதில் நம்பிக்கை நச்சுக்களாக விதைக்கப்பட்டோ (வர்ணாஷ்ரம), சட்டங்களாக இயற்றியோ (வெள்ளையர்களும், கருப்பினத்தவர்களும் சமமல்ல, ஏழை, பணக்காரர்களின் வாழ்வமைவு ஆசீர்வதிக்கப்பட்டது) காலப்போக்கில் ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.


இந்த கட்டமைப்பை விளக்க முற்படும் போது இந்த நூல் மிக தாராளமாக இந்து மதத்தின் பால் பிறந்த சாதிய சமூக அடுக்கு யாரால், எதற்கு உருவாக்கிக் கொள்ளப்பட்டது, அது எவருக்கு பயனளிக்கும் விதத்தில் இன்றும் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை சமகால இந்திய அரசியலமைப்பைக் கொண்டு மிகத் தெளிவாக விளக்க எடுத்து கையாண்டுள்ளார் இந்த நூலின் ஆசிரியர்.

இந்த புத்தகம் உலகம் முழுதிலும் மில்லியன் கணக்கில் விற்பனையாகி இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் சமூக அடுக்கு உருவாக்கத்திற்கு பின்னான அயோக்கியத்தனங்களை, சூழ்ச்சிகளை அப்பட்டமாக அடிக்கோடிட்டு இந்த உலகத்திற்கே புரிய வைக்க இந்துக்களின் சாதியக் கட்டமைப்பை பயன் படுத்திக் கொண்டுள்ளார். 

தீட்டு, தீண்டாமை, தூய்மை, மோலோன், கீழோன் அனைத்தும் ஒருவனை தரம் பிரித்து எவனை எந்தளவிற்கு வளர்ந்து வர இடம் கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்வதற்கும், ஒவ்வொரு முறையும் பின்புலத்தை தோண்டித் துருவி அறிந்து கொள்வதற்கு பதிலாக கூட்டு அடுக்களைக் கொண்டு பிரித்து வைத்து விட்டால் பொதுப் புத்தியில் அதற்குண்டான புத்திகளை இவன் உள்ளடக்கியவன் என்ற கற்பிதங்களையும் நம்ப வைத்து அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயங்க வைக்க முடியும் என்பதே இதன் ஏற்பாடு.

இப்பொழுது உதாரணமாக ஒன்று பார்ப்போம். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான். நல்ல திறமையானவன் ஏதோ ஒன்று அவனுடைய இரத்தத்திலோ அல்லது மரபணுவிலோ இருக்கிறது அதனால் தான் கருப்பர்களை விட அதி புத்திசாலிகளாக, பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறியும் அறிஞர்களாக இருக்கிறார்கள் என்ற வாதம்.

இரண்டு, நம்ம ஊரில் ஒரு குறிப்பிட்ட சாதி இனங்களில் பிறந்த குழந்தைகள் இசையிலும், நாட்டியத்திலும் மிக்க திறமை உள்ளவர்களாக இருக்கக் காரணம் இறைவனால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அந்த குலத்தில் பிறப்பதால் தான் என்றொரு வாதம்.

ஆனால், இந்த இரண்டு கதைகளுக்குப் பின்னாலும் மாபெரும் உழைப்புச் சுரண்டலும், சூழ்ச்சியும் புதைந்து கிடக்கிறது என்கிறார் இந்த நூலாசிரியர். பிறக்கும் போது எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் மெருகேற்ற மெருகேற்ற அவைகளை நம்மால் வார்த்தெடுத்துக் கொள்ளும் திறமைகளை உள்ளடக்கியே பிறக்கிறது, ஆனால் அதற்குரிய வசதி, வாய்ப்பு அதற்குண்டான நேரத்தை எப்படி வழங்குவது?

இங்குதான் அந்த சமூக அடுக்கமைவு ஒரு சாரருக்கு எளிய வழியையும், அங்கீகரிப்பையும் கொடுத்து மெருகேற்றிக் கொள்ள, மேல் நிலைக்கு செல்லும் படியாக கட்டமைக்கப்பட்டு பயனளிக்கிறது. பயனளிக்காமல் போகக் கூடிய அந்த போர்வை சாதி'யம் கொண்டு மற்றவர்களிடத்தே கண்டறியப் படுகிறது.

இந்த சாதிய கட்டமைப்பு உடையாமல் கட்டிக் காக்கப்படுவதின் சூட்சுமம் இதுதான். இப்போ சாதி மறுப்பு மணங்கள் பெருகும் போது இந்த அடித்தளம் சுக்கு நூறாக தகர்ந்து விடுமல்லவா? தகர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் தான் ஏனைய சமூக அநீதிகள் அடங்கி இருக்கிறது.

இப்போ புரிகிறதா இந்த நவீன தீண்டாமை உலகில் நீட், கேட் என்ற வடிகட்டல்கள் எதற்கு என்று? அவதாரப் புருஷர்கள் இத்தனை வரலாற்று ரீதியாக சக்தி படைத்த ஒரு சூழ்ச்சிக் கூட்டத்தை வெற்றியடைய வேண்டுமாயின் எத்தனை பெரிய பரந்து பட்ட பொது நோக்கும், கட்டற்ற பரிவும், விசாலமான பார்வையும் கொண்டிருக்க வேண்டும். 

நமக்கு அந்த முழுப் பயன்பாடும் வந்து கிட்டுவதற்கு முன்னதாகவே பல கட்டுக்கதைகளின் மூலமாக அவர்களுடைய பங்களிப்பு முடக்கப்படுகிறது. அந்த அரசியலை நாம் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் பொழுது போராட்டம் மீண்டும் ஒன்றாவது படிக்கி சறுக்கி வந்து நின்றிருக்கும்.

வரலாற்று புத்தகங்களை எந்த

கரையிலிருந்து நின்று கொண்டு மீள் வாசிப்பு செய்கிறோமென்பதும், இது போன்ற மானுடவியல் சார்ந்த புத்தகங்களை வயதோடு வாசித்து அவரவர்கள் நிலையில் தெளிவடைதும் முக்கியமாகிறது.

ஏனெனில் வரலாற்றில் எப்படி விளையாண்டோம் என்பது ஒரு பொருட்டே அல்ல! பிழைத்து அடுத்த கட்டத்திற்கு நமது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்வுச் சூழலைக் கொடுத்துச் செல்கிறோமா என்பதே படிமலர்ச்சியில் நம்மை படியெடுக்க இந்த இயற்கை வைத்திருக்கும் ஒரே ரூல்ஸ்!


#சாப்பியன்ஸ் - 5

#Homosapiens book

Sunday, February 26, 2023

கலைஞரின் சற்கர நாற்காலியும் கமலின் ஏகாடியமும்!

கமலோட சக்கர நாற்காலி ஏகடியம் அவருக்கேயான மிக இயல்பான வளர்ப்பிற்கு பின்னான சிறுமையின் எச்சம். அவரோட நிதானத்தையும் தாண்டி இப்படியான வன்மம் பொங்கி வழிகிறது என்றால், இன்னும் சொற்களாக பேசப்படாத, வக்கிர எண்ணங்கள் எவ்வளவு இருக்கக் கூடும்?

அம்பேத்கர், காந்தி, பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் எதனை உணர்ந்து கொண்டதால் சாதரணர்களைக் காட்டிலும் பன்மடங்கு உழைக்க தழைப்பட்டார்கள்? மரணித்த நொடிகளுக்கு முன்பு கூட அய்யோ செய்ய இன்னும் இவ்வளவு இருக்கும் போது, பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்லும் படி ஆகிவிட்டதே என்ற வேதனையே அவர்களிடையே தங்கியிருக்கக் கூடும்.

பெரியாரும், கலைஞரும் அந்தப் பரிதவிப்பை தனது உடல் உபாதைகளைப் புறந்து தள்ளி களத்தில் நின்றதே அதற்குச் சான்று. ஒரு தனி மனித வளர்த்தெடுப்பு என்பது, எத்தனை பிரயத்தனங்களை உள்ளடக்கியது? தொடர் பயணம், சமூக உள்வாங்கல், அது தொடர்பான ஊடாடல்கள், போராட்டக் களங்கள், வரலாற்று வாசிப்பு, இலக்கிய அறிமுகங்கள், அது தொடர்பான எழுத்துப் பணி என்று எத்தனை அனுபவம் அவர்களால் சேகரிக்கப்பட்டிருக்கும். அந்த நிறை மனிதர்களின் சமூகம் சார்ந்த ஆழ்ந்த புலமையை, தான் நேசிக்கும் மக்களோட பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவு செய்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஆழ்ந்த மனித நேய passion இருந்திருக்க வேண்டும்.

இத்தனை அறிவும் ஒருவர் மரணிக்கும் போது அவரோடு சேர்ந்தே பேசப்படாத, வழங்கப்படாத பகுதிகளும் மறைந்து விடுகிறது. காலத்தின் நிலையின்மை உணர்ந்தவன் எப்படி அதனை வீணடிப்பான்? எனவே, ஒரு மனிதரின் நினைவு தவறும் நொடிகளுக்கு முன்பு வரை கூட, ஏரணத்தோடு விசயங்களை தொடர்பு படுத்தி பேசும் திறன் இருக்கும் வரையிலும் அந்த மூளை அந்தச் சமூகத்திற்கு தேவைதான். 

சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே ஸ்டீவன் ஹாகின்ஸ் போன்ற அறிவியலாளர்களின் வாழ்நாள் சாதனைகளையும் அறிந்தவரே கமல். புரியாமல் எல்லாம் கலைஞர் பொருட்டு பேசி இருப்பார் என்று நான் நம்பத் தயாரில்லை. கமலையொத்த குடும்பங்களின் பேச்சு முழுக்க தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்று, குறுக்கி வந்தடைந்த புள்ளிதான் இந்தத் திராவிடத் தலைவர்கள். அவர்களின் சப்கான்ஸியஸ் மனம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றியே இயங்குகிறது.

கமல் பகடியாக பேசியது போல் மற்றுமொரு சிறுமைத் தனமே மோடியை வைத்து, கலைஞரின் இறுதி நாட்களில் அவர் தோளின் மீது கை வைத்து நலம் விசாரிப்பது போல, கலைஞரை திகிலூட்டுவதாக நினைத்து தங்களது வக்கிரப் பகுதியை அவர்கள் சொரிந்து கொண்டதும் என்பேன். அந்தப் புகைப்படத்தை சற்றே உள்வாங்கி ஆராய்பவர்களுக்கு புரியும், துரைமுருகன், கலைஞர் உடற்மொழியை கவனித்தல் பொருட்டு. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, ஏதாவது பேசி அது ஒரு மகிழ்வான தருணத்திற்கு இட்டுச் சென்றிருந்தால், அது மோடியின் தோள் தொடுதலுக்கான நட்பு உணர்ச்சி போல் வெளிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நான் இந்தச் சூழலை ஒரு திட்டமிட்ட எக்ஸ்ப்ரசனாகப் பார்க்கிறேன்.

கமலின் சக்கர நாற்காலி ஏகடியத்திற்கு இணையானதே மோடி குழாமின் தோள் தொடுதலும். இங்கு மறைமுகமாக இவர்கள் அனைவரையும் இயக்குவது சித்தாந்தச் சமரே!

Sunday, February 05, 2023

அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல்!

 = கற்காலமாக்குதலியம்!

கடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.

அண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.

என்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக்   கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது

ஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே?

சரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே? தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு    கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா?

கோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா? எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த "அறநிலையத்துறைக்கு" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு  கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா?

அந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா?

ஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.


அது மட்டுமா? ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது. 

இவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் "அறநிலையத் துறை." இது எத்தனை பெரிய புரட்சி? சமூக சீர் திருத்த எட்டல்??

இதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும்? அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்? எதற்காக?

எது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி!


#மீள்

#AdmkFails _2018

ஜம்தாரா (Jamtara): கடன் அட்டை திருட்டு

இந்திய சினிமாவிற்கு நெட்ப்ளிக்ஸ் வந்ததிலே ஒரு சிறப்பான சம்பவம் நடந்திருக்கின்னா அது பரவலாக பேசப்படதா விசயங்களை பேச வைக்கிற படங்களை கொடுப்பதுதான். நமக்கு இது வரைக்கும் ஹிந்திப்படங்கள் என்றாலே பளபளப்பான பெரிய பெரிய அரண்மனை போன்ற வீடுகளில் ஐட்டம் பாடல்களை ஒத்தப் பின்னணியில் வண்ண வண்ண பெண்டீரையும், இசையையும் தவழ விட்டு நம்மை மயக்கி படம் காட்டுவார்கள்.



ஆனா, இதற்கு நேர்மாறாக இன்று நெட்ப்ளிக்ஸ் வேறு மாதிரியான ஒரு சினிமா அனுபவத்தை நமக்கு வழங்கி வருகிறது. இது வரைக்கும் நான் பார்த்த ஒரு சில படங்களையும், தொடர்களையும் வைத்து இணைத்துப் பார்த்தால், இந்தியா ஏன் மோடி, அமிச்சா, நிர்மலா போன்றவர்களுடன் மாரடித்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கெனவே "தெ ஒயிட் டைகர்" என்ற படத்தைப் பற்றி பேசி ஒரு பகுப்பாய்வு செய்தோம்.

அதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கிற "#ஜம்தாரா (Jamtara)" என்ற தொடரைப் பார்த்தேன். வேலையில்லா இளைஞர்கள் ஒரு சிறு கிராமத்திலிருந்து அலைபேசியைப் பயன்படுத்தி வங்கி அட்டைகளின் செய்திகளைப் வாடிக்கையாளர் களிடமிருந்து கறந்து (Phising) நூதன திருட்டு செய்கிறார்கள் என்பதே படத்தின் ஒன்லைனர். அந்த திருட்டில் ஈடுபடும் மனிதர்கள் வாழும் இடமும், சமூக கட்டமைப்பும் அவர்களுக்கிடையேயான உறவாடலும் எத்தகையது என்பதை கடத்துவதில் தான் இந்த தொடர் சிக்ஸர் அடித்திருக்கிறது எனலாம்.

அப்படியே இன்றைய வட இந்தியாவின் ஒரு மினி சிற்றூரும், சிறு நகரமும் அதிலுள்ள மக்களின் வாழ்வமைவையும் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. வட இந்தியா ஏன் தென் மாநிலங்களை விட மிகவும் பின் தங்கி இருக்கிறது? படை படையாக ஊரையே காலி செய்து கொண்டு புலம் பெயர என்ன காரணம்? ஏன் கொலை, கொள்ளை, திருட்டில் அதிகமாக ஈடுபடுகிறார்கள்? இவை அனைத்தையும் இந்தத் தொடரில் இணைக்கும் புள்ளி ஒன்று இருக்கிறது.

அந்தத் தொடரைப் பார்க்கும் போதே எனக்குத் தோன்றியது, இன்றையத் தமிழ்நாடு அவர்களின் பார்வைக்கு ஒரு மினி சிங்கப்பூராகத்தான் காணக் கிடைக்க வேண்டும். நாம் நிலச்சுவாந்தார்களை கடந்து விட்டோம். மகாபாரத சூழ்ச்சி வாய்ப்பாடுகளை தினசரி வாழ்வில் தொடர்பு படுத்தி செய்யப்போகும் படுபாதக செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டு செய்யும் தனத்திற்கு என்றென்றைக்கும் தொடர்பற்று இருந்திருக்கிறோம். ஆனால், இவை அனைத்தும் வட மாநிலங்களில் இன்னமும் இருப்பதாகத் தெரிகிறது.


இந்தத் தொடரில் ஜாதிய கட்டமைப்பு மிகப் பெரிய பூதமாக எழுந்து நிற்கிறது. ஒரு பிராமண நிலச்சுவாந்தார் அந்த ஊரையே ஆட்டி வைக்கிறார். அனைத்து அதிகாரமும் ஓரிடத்தில் ஒடுங்கிக் கிடக்கிறது. மக்களும், காவல்துறையும் அவரின் கடைக்கண் பார்வையில் கட்டுண்டுக் கிடக்கிறது. அந்த கதாபாத்திரம் வட இந்தியாவின் சமூக நோய்மைத் தன்மையின் மூல ஊற்றை பேசிச் செல்கிறது.

உழைக்கும் வயதில் உள்ள இத்தனை பெரிய மக்கட்தொகையைக் கொண்ட ஒரு நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும், வறுமையும், பேராசையும் ஒன்று சேர்ந்தால் என்னாகும் என்பதற்கு இந்த அலைபேசி வழி வாடிக்கையாளர்களிடம் நடத்தப்படும் கொள்ளையேச் சான்று. நைச்சியமாக ஆசை காட்டி வாடிக்கையாளர்களின் கார்டுகளில் இருக்கும் 16 இலக்க எண்ணைப் பெற்று எப்படியாக பணத்தை பரிமாற்றிக் கொள்கிறார்கள் அத்தனை சிறிய சிற்றூரிலிருந்து என்பது ஆச்சர்யமோ ஆச்சர்யம்.

அதுவும் அந்த வாழ்வுப் பின்னணியோடு லட்சக்கணக்கில் இப்படிச் சுருட்டும் போது பயமாக வருகிறது. தொடர்ந்து மன்மோகன் சிங் கூறிய "முறைப்படுத்தப்பட்ட சுருட்டல்" என்ற பதம், அவர்கள் யார் யாரையோ ஒவ்வொரு முறையும் வங்கிக்கு கூட்டிச் சென்று பணத்தை எடுக்கும் போதும், ஓ! இதற்காகத்தன் நாட்டு மக்களையே பாடாய் படுத்தி வங்கிக் கணக்கு தொடங்கச் சொன்னார்களோ என்பதை நினைவூட்டியதை மறக்க முடியாது.

அண்மைய காலத்திய பணச் சுருட்டலில் இது போல பல திட்டங்களில் மக்களுக்கு சென்றடைய வேண்டிய வங்கிக் கடன்கள் யார் யாருடைய இயக்கப்படாத வங்கிக் கணக்குகளிலெல்லாம் வரவு வைத்து பெரியளவில் ஸ்கேம் செய்திருப்பதையும் தினமும் தொலைக்காட்சி செய்திகளில் கேட்டு வருகிறோம். அதனுடைய இன்னொரு வடிவம் தான் இந்த phising.  இது ஓர் உறுபிணி போல வட மாநிலங்களில் பெருகி வருவதாகத் தெரிகிறது. 

வரும் காலங்களில் இடப்பெயர்வின் மூலமாக அடைந்து கொள்ளும் வேலை வாய்ப்புகளைத் தாண்டி, அந்தந்த மாநில அரசுகள் ஏதாவது வாழ்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுத்து வாழவைத்துப் பார்க்க வில்லை என்றால், மென்மேலும் கூட்டம் கூட்டமாக தெற்கு புறமாக வந்து அள்ளிக் கொண்டு ஓடி மறைந்து கொள்ளும் கூட்டம் பெருகக் கூடும்.

#ஜம்தாரா

#Jamtara_Netflix_Series

Friday, February 03, 2023

The White Tiger: வெள்ளை புலி!

நேற்று நெட்ப்ளிக்ஸ்ல "த ஒயிட் டைகர்"நு ஒரு படம் பார்த்தேன். இந்தப் படத்தோட கதை புத்தகமாக வெளி வந்திருக்கிறது. ஆனா, அந்தப் புத்தகம் பெரிய அளவில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. சுதந்திர இந்தியா ஏன் முற்று முழுதுமாக அனைத்து மக்களுக்குமான நாடாக இன்னும் தலையெடுக்க முடியவில்லை என்பதை இந்தப்படம் ஃப்ரேம் பை ஃப்ரேமாக சுழன்று மிக அழுத்தமான கதைக்களத்துடன் பேசுகிறது.


வட இந்திய கிராமங்களை உங்கள் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் சில காட்சிகளும் உண்டு. சைக்கிள் ரிக்ஷா இழுக்கும் கதாநாயகனின் அப்பா. வாழுமிடத்திற்கு கந்து வட்டியாய் பணம் வசூல் செய்யும் பண்ணையார் கூட்டம், கதாநாயகனின் அப்பாவை தெரு முனையில் நிற்க வைத்து கன்னத்தில் அறையப்படுவதை காண்கிறான்.

அப்பா, சைக்கிள் ரிக்‌ஷா இழுக்கும் ஒரு நாள் நுரையீரலை கரைத்து இரத்த வாந்தியாய் எடுத்து இறந்து போகிறார். கதாநாயகன் பள்ளிப்படிப்பு இடைநிற்றலாகி கூலி வேலைக்குச் செல்கிறான். நிலச்சுவான்தாரான ஊர்த்தலையின் பிள்ளைகளில் ஒன்று அமெரிக்கா ரிடர்ன்.

அமெரிக்காவில் நான் வாழ்ந்தாலும் என்னுடைய அகம் என்னவோ இந்தியப் புத்தியாய்த் தான் இருக்கிறது என்கிறான். அவன் பேசும் வசனங்கள் ரொம்ப முக்கியமானது. அவனுடைய மனைவி அமெரிக்காவில் படித்து மருத்துவராகப் பணியாற்றுகிறவர். அவளே கதாநாயகனை ஒரு விதத்தில் எம்பவர் செய்பவளாய் இருக்கிறாள். ஒவ்வொரு கேரக்டரும் அளவோடு இந்தியாவின் அவலத்தை பேசவோ, கோர முகத்தை எடுத்துக் காட்டவோ அமைக்கப்பட்டவை. அவனிடத்தில் வேலைக்குச் சேர கதாநாயகன் ஆசைப்பட்டு கிராமத்திலிருந்து கிளம்பிச் சென்று கார் ஓட்டுநராகச் ஆகிவிடுகிறான்.

அந்தக் கிராமும் கதாநாயகனோட குடும்பமும் இந்தியா இரண்டிலிருந்து வருபவர்கள் என்றால், பண்ணையார் தனக்குடும்பம் முதல் தர வாழ்வமைவு கொண்ட முதல் இந்தியாவைப் பற்றிப் பேசுகிறது. ஏன் நான் அடிமையாக இருக்கிறேன் என்று கதாநாயகன் தன்னுடைய லோயல் தனம் முழுமையும் காட்டி வேலை செய்யும் பொழுதும், நாயை விடக் கேவலமாக நடத்தப்படும் பொழுது அவனுக்குள்ளாகவே உரையாடிக் கொள்ளும் வசனங்கள் மிக முக்கியமானவை.

படத்தில் இரண்டே சீன் என்னை கவிழ்த்து விட்டது எனலாம். கதாநாயகன் தன்னுடைய பல்லின் கறையை எடுக்க முதன் முதலாக பிரஸ், டூத் பேஸ்ட் எடுத்து கண்ணாடிக்கு முன் நின்று ஒரே நாளில் விளக்கி விளக்கி பற்களின் வெள்ளைத் தன்மையை கொண்டு வர முயற்சிப்பது போல ஒரு காட்சி...


இரண்டாவது, வேலையை விட்டு விலக்கி வைப்பது போல ஒரு சூழல், அதே நேரத்தில் அமெரிக்கா ரிடர்ன் பண்ணையாரின் மகன் டில்லியில் தங்கி அரசியல் வாதிகளுக்கு தினம் தினம் பை பையாக லஞ்சப் பணம் கொண்டு சென்று கொடுப்பதுமாக பிசியாக இயங்கிக் கொண்டிருப்பான் அதனை ஓட்டுநராக கவனித்துக் கொண்டிருப்பான் கதாநாயகன். 

இவை இரண்டையும் இணைத்து போகும் வழியில் திறந்த வெளியில், வானுயர எழுந்து நிற்கிற கட்டிடப் பின்னணியில் மலம் கழித்துக் கொண்டிருப்பவர் ஒருவருடன் தானும் பேன்ட்டை தளர்த்தி நேர் எதிராக அமர்ந்து அவனுடன் சேர்ந்து கதாநாயனும் ஒரு மேனியாக் தனமாக அலறிச் சிரிக்குமொரு காட்சி, ஒட்டு மொத்த இந்திய மனநிலை, அரசியல் போக்கு, பணம், அதிகாரம் படைத்தவர்களின் பொறுப்பற்றத் தனத்தை எள்ளலாகச் சுட்டிக்காட்டும் நுட்பத்தனமென அமைந்தது... 

படத்தில் அது போல பலப்பல காட்சி அமைப்புகள்... நிகழ்கால அரசியல் சூழலை போகிறப் போக்கில் எள்ளி நகையாடிச் செல்கிறது. A must watch movie! 


#Cinema 

#சினிமா

#TheWhiteTiger

Wednesday, February 01, 2023

ஏன் பேனா சினைவுச் சின்னம்

ஒரு பேனா இத்தனை பேரை அலற வைக்க முடியுமா? முடியுமென்றால் அந்தச் சமூகத்தில் ஏதோ பெரியளவில் சம்பவம் நிகழ்த்தப் பெற்றிருக்கிறது என்று தானே புரிந்து கொள்ள முடியும்?


பேனா என்ற ஓர் அடையாளம் எதனையெல்லாம் சுமந்து நிற்க முடியும்? பேனா - மனித குலத்தின் நாகரீக திசையறியும் திசைகாட்டி. ஒரு சமூகத்தின் மாண்பு! உண்மையை செதுக்கி வைக்கும் உளி. குரலற்றோருக்கு உரக்க குரல் கொடுக்கும் ஓர் ஒலி பெருக்கி. இருட்டின் அடர்வையொத்த பொய்களுக்குள் புதைந்திருக்கும் ஓர் பேரொளி.

பேனாவிற்கு ஏது வேலி, முகம்? ஒரு சமூகத்தில் ஒரு பேனா ஒரு தனி மனிதனின் முகத்தை உன் நெஞ்சிற்குள் ஈட்டியாக இறக்குகிறது என்றால் அந்த முகத்திற்கான சொந்தக்காரன் ஒரு சம்பவத்தை அந்தச் சமூகத்தில் செய்து இருக்கிறான் என்றல்லவா பொருளாகிறது.

எடுத்துக்காட்டாக நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். முதல் முறையாக வேறொரு நாட்டிலிருந்து விமான மார்க்கமாக அந்த பேனா எழுந்து நிற்கும் கடற்கரையோரமாக பறந்து தரை இறங்குகிறேன் என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது அந்தப் பேனா எனக்கு தரும் செய்தி என்னவாக இருக்கும்? எனக்கு அந்தச் சமூகத்தில் புழங்கிய எந்த ஒரு தனிப்பட்ட முகங்களும் பரிச்சயமில்லை எனும் போது, பொதுவான ஓர் ஐடியாவான பேனா - அதனையொட்டிய பெரும் மதிப்பு அந்தச் சமூகத்தின் பொருட்டு இயல்பாகவே ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியாது இல்லையா?

ஏனெனில், வரலாறு தோறும் பேனாவிற்கான இடமப்படி. பேனாவின் மதிப்பு என்பது ஒளவையின் "கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பதற்கு ஒப்பான" ஓர் அண்டத்தின் குறியீடு!

இந்த தமிழ்நாட்டுப் பேனா உங்களுக்கு கலைஞரின் முகத்தை நினைவு படுத்துகிறது என்றால் அது மிகச் சரியாக அவரது விரலிடுக்களில் சுழன்று தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறது என்று விளங்குகிறது. 

அது வரும் தலைமுறையினருக்கும் இடம் சுட்டி பொருள் விளக்கியபடியே நிற்கும். நீங்கள் இன்னும் பலமாக ஓலமிட்டு கதறிக் கொண்டே இருங்கள்!


#பேனா_கலைஞர்

#நினைவுச்சின்னம்

#மீள்

Related Posts with Thumbnails