அதற்காக மிக நீண்ட நாற்பது பக்க அளவில் தன்னுடைய ஆய்வறிக்கையாக அவரின் கருத்துக்களை இப்பொழுது முன் வைத்திருக்கிறார். நல்லது! என்னால் அத்தனை பக்கங்களையும் அவ்வளவு பொறுமையாக அமர்ந்து வாசிக்க முடிய வில்லை. ஏனெனில், அணுக்கதிர் வீச்சின் தாக்கத்தை பற்றியான பாதகங்களில் அவர் எடுத்து முன் வைத்திருக்கும் உதாரணமாக ஹிரோஷிமா மற்றும் நகசாகி விடயத்தில், அந்த வீச்சு பின் வரும் தலை முறைகளுக்கு எந்த பாதிப்பையும் வழங்கியதாக தெரிய வரவில்லை என்று முழு பூசணிக்காயை எதுக்குள்ளோ வைத்து மறைத்து கொடுப்பது மாபெரும் வரலாற்று பிழையாகவும், பாவமாகவும் கருதுவதால் மேற்கொண்டு என்னால் ஏனோ வாசிக்க முடியவில்லை.
நான் ஏற்கெனவே அண்மையில் நிகழ்ந்தேறிய ஜப்பானிய அணு உலை விபத்தினையொட்டி இப்படியாக ஜப்பான் அணு உலைக்குள் உலகத்திற்கான செய்தி: Nuclear Reactor!! கட்டுரை எழுதி சில முக்கியமான கேள்விகளையும் முன் வைத்திருந்தேன். இந்த சூழலில் இப்பொழுது கூடன்குளம் அணு உலை இயக்கப்படக் கூடிய கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ஜெர்மனி மற்றும் சில விழித்துக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் இதே அணு உலைகளுக்கு எதிரான ஒரு நிலைக்கு நகர்ந்து தூய்மையான ஆற்றல் (clean energy/eco friendly) பயன்படுத்தப்படுவதின் அவசியமறிந்து, இருக்கும் உலைகளையும் எப்படி கவணித்து மேலாண்மை செய்வது என்ற கவலையில் ஆழ்ந்திருக்கும் ஒரு கட்டத்தில் நமது கனவு கலாம் அவர்கள், மிக வேகமாக நாட்டை முன்னேற்றுவதற்கான வழிகளில் இதுவும் ஒன்று என்று ஒரு நாட்டின் இதர பகுதி மக்களுக்கென ஒரு மாநிலம் பலியிடப் பட்டாலும் தவறில்லை என்ற நோக்கில் மிகச் சாதாரணமாக தியாகிகளாக அறைகூவல் விட்டிருக்கிறார் அந்தப் பகுதி மக்களுக்கு.
அதற்கென அவர் இட்டுக்கட்டிய உதாரணங்கள் அணைகள் கட்டப்படும் பொழுதும், ஏரோ பிளேன் கண்டிபிடித்த பொழுதும், உயர்ந்த கட்டிடங்கள், இதர மனித சாதனைகளுடன் இந்த அணு சார்ந்த விசயத்திலும் மனித இனம் உற்சாகத்துடனும், மனத் துணிவுடனும் இறங்கி செயலாற்ற வேண்டுமென்று கூறியிருக்கிறார். எனக்கு என்ன விளங்கவில்லையெனில்... அவர் சுட்டிக்காட்டிய அனைத்து விசயங்களிலும் அசம்பாவிதங்கள் நிகழும் கனம் தோறும் பாதிப்பு உடனடியாக அதன் அருகாமையில் இருப்பவருக்கு மட்டுமே நிகழக் கூடும். உயிர் பாதிப்பும் பெருமளவில் இல்லை, அதனை தலைமுறைகளாக கடத்தப் பெறுவதும் கிடையாது என்பதுதான். இந்த அணுக்களை உள்ளடக்கி ஒரு சூட்கேசுக்குள் கொண்டு வரும் சக்தியின் வீரியத்தின் மகத்துவத்தை, இப்பொழுது நாம் டன் கணக்கில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலக்கரியினை எரித்து பெறப்படும் சக்தியின் ஆற்றலோடு ஓப்பிட்டு செய்யும் அதே கனத்தில் அதன் அழிவின் வீரியத்தையும்/வீச்சத்தையும் நாம் ஏன் யோசிக்க தவறுகிறோம்?
அணுக் கதிர் வீச்சு காற்றின் மூலமாக பரவி உடனடி விளைவுகளை உருவாக்குவதோடு, மனிதனின் மரபணுக்களின் கட்டமைப்பு வரையிலுமாக ஊடுருவி சிதைத்து பல தலைமுறைகளுக்கு பிறக்கும் சந்ததியினரின் உடல் உள்/வெளி உறுப்புகளின் செயல்பாடுகளிலும், அமைப்புகளிலும் எண்ணற்ற விதங்களில் விளையாடி விடுகிறது. அதற்குச் சான்றாக எத்தனையோ காணொளிகள் ஹிரோஷிமா/நகசாகி நிகழ்விற்கு பிறகு இரண்டாம் தலைமுறையிலும் வெளிக் காண்பதனை நம்மால் கவனத்தில் நிறுத்த முடியும்.
அதெப்படி இத்தனை ஆபத்து நிறைந்த ஒரு தொழில்நுட்பத்தை நூறு சதவீகிதம் பாதுகாப்பானது என்று சொல்லிவிட்டு போக முடியும்? 15 வருடங்கள் அந்த அணு உலைகள் கட்டுவதற்கான பொழுதென்றால் அதன் பயன்பாடு வெறும் 50 வருடங்களே இருக்கிறதாம். அதற்கு பிறகு ஸ்விட்ச் ஆஃப் செய்திவிடுவோமென்று திருகியும் அந்த ஆலையை மூடி விட முடியாது. காரணம் ஒரு முறை அந்த அணுக்களின் இயக்கம் தொடங்கிவிட்டால் அதுவாக வீரியமிழந்து அயர்ந்து போகும் வரையில் தொடர்ந்து செயல்பாட்டிலேயே இருக்கிறதாம்; பத்தாயிரம் வருடங்களை தாண்டியும். அதனை மேலாண்மை செய்து பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்வதற்கே சொற்பமான நிதி ஒதுக்கீடு செய்து வைக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு என்று வரும் பொழுது நமக்கெல்லாம் மணி அடிக்கணுமே, அந்த பணம் எப்படி செலவழிக்கப்படும் எதிர்காலத்திலென்று.
சில தொழிற் நுட்ப தேவைகளுக்கென கடற்கரையை ஒட்டியே இது போன்ற அணு உலைகள் கட்டியெழுப்பப்படுகிறது. அதாவது இந்த அணு உலைகளின் இயக்கத்தின் போது உருவாகும் அதீதமான வெப்பத்தினை தணிப்பதற்கென தொடர்ந்து குளிர்வான நீர் உள்ளே சென்று வெளிப்புக வைக்கப்படுகிறது, வெப்பமூட்டப்பட்ட நீர் மீண்டும் கடலுக்குள் தள்ளப்படுவதோடு அதனூடாக தடம் கண்டுபிடிக்க தக்க கதிர்வீச்சும் (traceable amount of radiation) கடல் நீரோடு கலக்கப்படும் வாய்ப்பிருப்பதால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு சென்றடைகிறது, அதனை உட்கொள்ளும் நமக்கு சிறிது சிறிதாக நச்சூட்டப்பட்டு விதவிதமான புற்று நோய் வெளிப்பாடுகள் அறியப்படலாம்.
இந்தியாவில் மொத்தம் எத்தனை அணு உலைகள் இது வரையிலும் உள்ளது? எத்தனையோ பிற கடற்கரையையொட்டிய மாநிலங்கள் இருந்தாலும் இரண்டாவது அணு உலை இங்கே தமிழகத்தில் நிறுவப்பட்டதின் சூட்சுமம் அதன் பாதுகாப்பு கருதியே என்று எண்ணுகிறேன். அதாவது எதிரி நாடுகளின் எட்டித் தொடும் தூரத்திலிருந்து விலகி அமைப்பதற்காக குறிப்பாக பாகிஸ்தான் போன்ற துஷ்ட நாடுகளின் தொட்டு விடும் தூரத்திலிருந்து என்று வைத்துக் கொள்வோம். ஆமா, அதான் இப்போ பாகிஸ்தான், சைனா போன்ற நாடுகளுக்கெல்லாம் ஸ்ரீலங்காவிற்கு நல்ல நண்பராகிப் போனதே அதே பயம் ஏன் இப்பொழுது இங்கும் வரவில்லை? அது அப்படியே இருக்கட்டும்.
அடுத்து ஏதாவது எசகு பிசகாக மனித தவறுகளோ, எந்திர கோளாறுகளாலோ, அல்லது தவிர்க்க/அணுமானிக்க முடியாத இயற்கைச் சீற்றத்தால் அணு உலைக்கு சேதம் நிகழ்ந்து போனால், மக்களுக்கென எது போன்ற பாதுகாப்பு வசதிகள் அவர்களை அந்த ஏரியாவில் இருந்து நகர்த்தி வெளி எடுத்துச் செல்லுவதற்கென திட்டங்கள் வைத்திருக்கிறோம். மேலும் இது போன்ற கண்ணுக்கு புலப்படாத கதிர்வீச்சுகள் காற்றிலும் பரவும் குணம் கொண்டதால் அணு உலைகள் எழுப்பப்படும் இடத்தை சுற்றிலும் ஒரு குறிப்பிட்ட மக்கட் தொகைக்கு மேலாக இருக்கக் கூடாது என்பதும் உலக அணு உலை அமைப்பு சட்டத்திலும் ஏதாவது இருக்கக் கூடுமே, அது இங்கே பயன்பாட்டில் உள்ளதா?
அமெரிக்காவில் ஒரு முறை ஆந்தராக்ஸ் புரளியில் இருந்த சமயம், உடனடியாக மக்களிடத்தில் கொந்தளிப்பு எல்லா கடைகளிலிலும் ஜன்னல், கதவோர ஓட்டைகளை அடைப்பதற்கான டக்ட் டேப் வித்து தீர்த்தது. அத்தனை கல்வியூட்டு, மற்றும் விழிப்புணர்வோடும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அதற்கென முன்னெச்செரிக்கையோடு தற்காலிகமாக பாதுகாப்பினை தரும் வீடுகளின் கட்டமைப்பையும் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னமும் நம்மூரில் ஓட்டு வீடுகளும், குச்சியால் வேய்ந்த ஓலை வீடுகளையும் கொண்ட அமைப்பில் இது போன்ற ஓர் அசம்பாவிதங்கள் நிகழுமாயின் எத்தனை தூரம் தாக்கு பிடிக்க முடியும்? அல்லது மக்களுக்கு உண்மையாக அணுக்கதிர் வீச்சு என்றால் என்ன, அது எது போன்ற விளைவுகளை உருவாக்க வல்லது போன்ற அடிப்படை விழிப்புணர்வு வழங்கப்பட்டிருக்கிறதா? பொது ஜனங்களின் நிலைப்பாடு அதன் உண்மையான சாதக/பாதகமறிந்து முழு மனதுடன் அதனை எதிர் கொள்ளும் நிலைக்கு நகர்ந்திருக்கிறார்களா?
இதோ அவர்கள் செய்கிறார்கள், இவர்கள் செய்கிறார்கள் என்று புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வதனைப் போலில்லாமல், லஞ்சம் வாங்கிய அரசு/அரசியல் ஊழியரின் நிலையறிந்து அதனை அரசாங்கமே 10 அல்லது 20% லஞ்சம் வாங்கியவர்களின் ஓய்வூதியத்தில் பிடித்து கொள்ளும் என்ற நிலைக்கு நகர்ந்திருக்கும் ஒரு கேடு கெட்ட நிலையில் இது போன்ற அதி முன்னெச்செரிக்கையும்/திட்டமிடலும் தேவைப்படும் ஒரு ஹை ரிஸ்க், நச்சு தொழிற் நுட்பம் இந்த சமூக பின்னணியில் நமக்குத் தேவையா?
மாறாக வருடத்தின் 300 நாட்களிலும் அடித்து கொளுத்தும் சூரிய வெப்பக் கதிர்களிலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான மின் உற்பத்தியை பெறத் தக்க சோலார் பானல் திட்டத்தினையும், காற்றாலை, ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டங்களையும் (Wind, Water and solar) மேலும் முடிக்கி விட்டு சுற்றுப்புறச் சூழல் பேணலுடன் மக்களின் ஆரோக்கியம் பேணும் திட்டங்களில் இந்த 42,000 ஆயிரம் கோடிகளை கொட்டினால் என்ன? இதன் மூலமாக இந்த அணு உலையின் இயக்கம் 50 வருடங்களுக்குப் பிறகு மண்டையடியுடன் வைத்து மேய்ப்பதற்கென செலவும், ரிஸ்கிலிருந்தும் தப்பிக்கலமால்லவே!
இந்த மொத்த திட்டமும் எனக்கென்னவோ கண்ணை இழந்து சித்திரத்தை வாங்குவதற்கும், கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வதற்கும் இணையாகவே வைத்து பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது.
கீழே உள்ள படம் இப்போ ஜப்பானில் நடந்த அணு உலை கசாமுசாவில் கடலின் மறுகோடியில் இருக்கும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திற்கு 10 நாட்களுக்குள் ட்ரெசபில் கதீர்வீச்சு அறியப்பட்டதாக புரெஜெக்ட் செய்யப்பட்டது...







