உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியான ஜப்பான் இயற்கை கொடுத்த தொடர் அடியினை சந்தித்து தடுமாறி நிற்கும் இந்த சூழ்நிலையில் அணு சக்தி தொழில் நுட்பத்தை பற்றி மறு பரிசீலனை உலகம் தழுவிய முறையில் செய்வது நமக்கெல்லாம் அவசியமாகிறது.
ஜப்பான் தனது பூமிய இருப்பில் அதிகளவு பூகம்பத்தையும், தொடர்பாக ஆழிப்பேரலையையும் சந்திக்கும் ஓரிடத்தில் அமைந்து போய் தனது இருப்பை நகர்த்தி வருகிறது. அவர்கள் இந்த இயற்கை சார்ந்த பேரழிவினை கடந்த கால அனுபவத்தைக் கொண்டு மிக்க ஆயத்தத்துடன் எதிர் நோக்கும் தன்மை இருப்பினும், இந்த சமீபத்திய பூமியச் சிலிர்ப்பு அவர்களை எதிர்பாராத நிலைகுலைவில் இருத்தி வைத்திருக்கிறது.
நில அதிர்வு ஏற்பட்ட அடுத்த நிமிடத்திலேயே ஆழிப்பேரலையின் பயணம் தொடங்கி விடுகிறது. அதன் வேகமும், நிகழ்த்தப் போகும் சேதாரமும் எதனை ஒத்ததாக இருக்கப் போகிறது என்பது, நாம் கரைப் பகுதியில் அமைத்து வைத்திருக்கும் தொழிற்நுட்பங்களையும், நம்மிடம் இருக்கும் மக்கட் தொகையையும் கொண்டே இறுதியில் கணித்து தெரிந்து கொள்வதாக இருக்கிறது.
அத்தனை பெரிய அனுபவத்தையும், தொழில் நுட்பத்தையும், பொருளாதாரத்தையும், முன் ஏற்பாடுகளையும், நேர்மையாக மக்களுக்கென இயங்கும் அரசாங்க எந்திரத்தையும் கொண்டிருக்கும் ஒரு நாடே இப்படியான ஒரு அவல நிலையில் இந்த அணு சக்தி உலைகளுக்கு நிகழ்ந்த நிகழ்வினால் நிலை குலைந்து நிற்கும் பொழுது ஏனைய மூன்றாம் தர நாடுகளுக்கு இது போன்ற எதிர்பாராத ஒரு இயற்கை பேரழிவினையொட்டி அணு உலை விபத்து நிகழ்ந்தால் என்னவாகும் என்று நினைக்கும் பொழுது மண்டை கிறு கிறுக்கிறது. அதிலும் குறிப்பாக நமது சுரண்டல் அரசாங்கத்தை கொண்ட நாட்டில் எப்படியெல்லாம் விளைவை சந்திப்போம்?
கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் அணு உலை கண்டிப்பாக 35+ வருடங்களுக்கு முன்பாக கட்டமைக்கப்பட்டிருப்பதாகத்தான் இருக்க முடியும். இந்த கால இடைவெளியில் அதன் கட்டமைப்பே கலகலத்துத்தான் போயிக்கொண்டிருக்கும். அங்கே இது போன்ற ஒரு பூகம்பத்தாலோ அல்லது ஏதோ ஒரு தொழிற்நுட்பக் காரணத்தாலோ வெடிப்பு நிகழ்ந்து கதிரியக்கம் நிகழப்படுமாயின் எது போன்ற தற்காப்பு முன்னெடுப்புகள் கை வசத்தில் உள்ளன? அந்த திட்டத்தில், மக்களையும் பங்கு கொள்ள வைத்து தயார் நிலையில் அறிவூட்டி நாம் திட்டங்களை தீட்டி வைத்திருக்கிறோம். இத்தனை மக்கட் தொகையையும் உள்ளடக்கி கொண்டு, சரிவர அவர்களுக்கு இந்த கதிரியக்கத்தின் சாதக பாதகங்களை அறிவுறுத்தி வைக்காமல் எப்படி கண்களை மூடிக் கொண்டு மேலும் மேலும் அணு உலைகளை நாட்டின் இதரப் பகுதிகளுக்கும் பரப்பி வைக்க நம்மால் முடியும்?
குறைந்த பட்சம் இருக்கும் மக்கட் தொகையினை கருத்தில் கொண்டாவது இயற்கை-நண்ப தொழிற்நுட்ப வழியில் இது போன்ற மின் சக்திக்கென அணு உலைகளை பயன்படுத்தி பிற்காலத்தில் அதன் கழிவுகளாலும், விபத்துக் காலங்களில் நடந்தேறும் கதிர் வீச்சுக் கோரங்களை கணக்கில் கொண்டு மாற்றுத் திட்டங்களான காற்று, நீர், சூரிய வெப்பத்தினைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் உக்தியினை சொடுக்கி ஒரு பழக்கமாக ஆக்கிக் கொண்டால்தான் என்ன.
இப்பொழுது ஜப்பானில் அணு உலை வெடித்த இடத்திலிருந்து 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கூட கதிரின் தாக்கம் இருப்பதாக அறியப்படுகிறது. இது போன்றதொருதளவில் நமது நாட்டில் கல்பாக்கத்திலோ அல்லது கூடான் குளத்திலோ நடந்தேறினால் கதிரியக்கத்தின் தாக்கம் எது வரைக்கும் சென்றடையும்? எப்படி மக்களை அப்புறப்படுத்தி எந்த மாநிலத்தில் கொண்டு போய் விடுவோம்? எந்த வீட்டை அது போன்ற ஒரு கதிர் வீச்சு நடைபெறும் நாளில் அடைத்து காற்று கூட உட்புக முடியாதவாறு பூட்டிக் கொண்டு உள்ளயே இருப்போம்?
ஒன்று தெரியுமா? இது போன்ற கதிர்களிலிருந்து வரும் கழிவுப் பொருட்கள் 10 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வருடங்கள் கூட தனது வீரியத்தை இழக்காமல் கதிர் வீச்சை வெளிப்படுத்துகிறதாம். இதனை வைத்து பாதுகாப்பதற்கே இடம் தேடி வருகிறோம், அதாவது கழிவினைக் கூட எப்படி ஜப்பான் அணு உலையினுள் குளிர்ந்த நீரைச் செலுத்தி வெப்பத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள போராடியதோ அதனைப் போன்றே இந்த கழிவினையும் வைத்து கண்ணும், கருத்துமாக பாதுகாத்து வரவேண்டும்.நம்ம பிச்சாத்து போபால் விபத்திலேயே பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை பலி கொடுத்துவிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி துடைச்சி போட்டுட்டு மறந்து போனவிங்க நாம. இனிமே வரப் போறதுக்கு மட்டும் அலட்டிக்கவா போறோம். ஆனா, இந்த அணு கதிர் வீச்சில என்னவொரு மறுக்க முடியாத தடயத்தை விட்டுக்கிட்டே போகுமின்னா நான்கு தலைமுறைக்கும் தள்ளி பிறக்கும் குழந்தைகளில் கூட குறைபாடுகளை மரபணுக்களின் வழியாக வெளிப்படுத்தி நான் இன்னும் உசிரோடதான் இருக்கேன்னு சொல்லிகிட்டே இருக்கும்.
ஜப்பானில் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் விபத்தின் பிரமாண்டத்தைக் கண்டு சைனாவே எல்லா அணு உலைகளுக்கும் போட்டிருந்த எதிர்கால ஒப்பந்தத்தை கடாசப் போகிறதாம். எனவே, நாம சைனாவை பார்த்துத்தானே சூடு போட்டுக்குவோம், இப்போ அவங்கள நகல் படுத்தி ஒரு நல்ல சூடு போட்டுக்குவோம் வாங்க!






