கவலைப் படுவதற்கென ஒரு விசயமா ரெண்டு விசயமா இந்த உலகத்துல இருக்குது. திரும்பின பக்கமெல்லாம் ஏதாவது பார்த்து தொலைஞ்சு எந்த சுவத்தில மண்டையை முட்டிக்கிறதுங்கிற அளவிலான நாச வேலைகள் நடந்துக்கிட்டே இருக்குதே!
ஒரளவிற்கு எல்லாரும் இன்றைய நாள்ல கேள்விப் பட்டிருப்போம். வளைகுடா மெக்சிகோ
கடலில் கச்சா எண்ணெய்க் கிணறு வெடித்து ஒரு நாளைக்கு சராசரியாய் 60,000 பீப்பாய்கள் அளவிலான கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்து வருகிறதென. நம்மூர்ச் செய்தித் தாள்கள் பெரிய அளவில் இதனைப் பற்றி எழுதியாக எங்கும் தெரியவில்லை. அவர்களுக்கு ஜோடனையில் திரித்து செய்திகள் கொடுப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் பொழுது, உண்மையான விசயங்கள் குறித்து ஆராய்ந்து மக்களுக்கு செய்தி கொடுப்பதற்கு ஏது நேரம்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். கடைசியாக பெரிய அளவில் இது போன்ற கடல் நீர் மாசுபாடு 1989ல் எக்ஷான் வால்டெஷ் என்ற கப்பல் சுமாருக்கு 11 மில்லியன் அளவிலான கச்சா எண்ணெய்யை கடலில் கொட்ட நேர்ந்ததாம், அதுவும் சூழலியல் முக்கியத்துவமுற்ற பகுதியில். அதற்கு பிறகான மிகப் பெரிய சுற்றுச் சூழல் சீரழிவு என்றால் அது கடந்த இரண்டு மாதங்களாக நடந்தேறும் இந்த BP (British Petroleum) கம்பெனிக்கு சொந்தமான எண்ணெய் கிணறு விபத்துதான்.
இது ஒரு ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்கும்,
மற்றுமொரு மனிதப் பேராசைத் திட்டம். இந்த விபத்தினையொட்டி இன்னமும் வெடித்த குழாய் அடைக்க முடியாமல் போக, இன்றைய அமெரிக்கப் அதிபர் பல் வேறுபட்ட அரசியல், அறிவியல் விற்பன்னர்களாலும் விமர்சிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், எனக்கு என்ன புரியவில்லையென்றால் இந்தக் கிணறு யாருடைய ஆட்சிக் காலத்தின் போது ‘ஒகே’வென’ கையெழுத்தானது, அந்த சமயத்தில எது போன்ற திட்ட விவரணைகள் இது போன்றதொரு விபத்து நிகழ்ந்தால், அதனை சமாளிக்கும் விதமாக திட்டம் இருப்பதாக விளக்கியிருப்பார்கள் போன்ற கேள்விகள் எல்லாம் எழும்பாமல், என்னமோ இன்றைய அதிபர் அந்த குழாய் வெடிப்பை அவரே மூச்சடைச்சு, ஆழ்கடல் சென்று அடைத்து விட வேண்டுமென்ற பிம்பத்தை வழங்கி தினமும் தொலைகாட்சிகளில் பேசிவருவது செமையா எரிச்சலூட்டுகிறது.
எது எப்படி இருப்பினும், இந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்து வரும் வேகம் உண்மையிலேயே மிகவும் கவலை அளிக்கக் கூடியது. இது உலகம் தழுவிய முறையில் அதன் பலன்களை அனுபவிக்கக் கூடிய ஒரு மாபெரும் சீரழிவை பெருக்கித் தரும் நிகழ்வு. இந்தக் கழிவு பல்வேறு வகையில் கடல் வாழ் மற்றும் அதனையொட்டிய கரையோர சுற்றுச் சூழலில் பெரிய மாற்றங்களை சங்கிலித் தொடர் போல ஏற்படுத்தும் வல்லமை பெற்றது.
மேலும், இந்தக் கழிவு ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு காற்றின் திசையினைக் கொண்டு கடல் நீர் பயணிக்க இருப்பதால் உலகின் மற்ற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் ஆபாயமிருக்கிறது. சரி, இந்த விபத்தினால் எது போன்ற மாற்றங்களை, பேரழிவுகளை உயிரினங்களும் நாமும் இன்று அனுபவித்திக் கொண்டிருக்கிறோம்; சிலவைகளை மட்டும் பார்ப்போமா...
- எண்ணெய், நீருடன் கலக்கும் பொழுது அது வேதிய மாற்றத்திற்கு உட்பட்டு "mousse" என்ற பிசு பிசுப்பான நிலையைடைந்து விடுகிறதாம். அந்த நிலையில் எது போன்ற ஜீவராசிகள் அதன் அருகாமைக்கு தள்ளப்பட்டாலும் யோசிச்சுப் பார்த்துக்கோங்க... கதை இப்படித்தான் ஆயிப் போகும்.
- பறவைகளில் ஹைபோதெர்மியா வந்து சிறகுகளின் வெப்பச் சுழலேற்றத்தை தடுப்பதின் மூலம் அவைகள் நீரில் மூழ்கும் வாய்ப்பும், பறக்கும் திறனை இழந்து விடுகிறது; சிறகுகளில் எண்ணெய் ஏறி ஹெவியாகி விடுவதால்.
-மற்ற கடல் வாழ் பாலூட்டிகளின் (seal) குட்டிகளுக்கு கூட ஹைபோதெர்மியாவைக் கொண்டுவருகிறதாம்.
- எண்ணெய், உணவுடன் உட்கொள்ளப் படும் பொழுது நேரடியாக நச்சு உணவாகிப் போய்விடுகிறதாம்; அப்படியே இல்லை என்றாலும் நோய் வாய் பட்டு இறக்க நேரிடுகிறது. மேலும் உணவுச் சங்கிலியில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு சென்று விடுவதாகவும் அறிகிறோம். பவளப் பாறைகளும், shelfishகளும் நேரடியாக தப்பிப் பிழைப்பதற்கு வேறு வழியின்றி பேரழிவை சந்தித்து விடுகிறது.
- பறவைகள் மற்றும் விலங்குகளின் சுவாச மண்டலத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதித்து விடுகிறது.
- இனப்பெருக்கம் செய்வதில் தடை ஏற்படுத்துவதுடன், இனப் பெருக்கம் செய்யும் சுற்றுச் சூழல் பகுதிகளையும் கெடுத்து விடுகிறது நீண்ட நெடிய காலத்திற்கு.
- பறவைகள் மற்றும் கடல் ஆமைகளின் முட்டை ஓடுகள் மெலிவடைய வைத்து விடுகிறது. மீன்களின் லார்வாக்களில் குறைபாடுகளையும் உருவாக்கக் காரணமாகிவிடுகிறது.
- கடற் புற்கள், மற்ற உணவளிக்கும்/பாதுகாப்பு பகுதியாக விளங்கும் கடற் தாவரங்களின் மீதாகவும் இதன் விளைவுகளை விட்டுச் செல்வதுடன், பூஞ்சைக் காளான்களின் மீதும் கை வைத்து விடுவதால், நீரின் மொத்த (பிராணவாயு இழப்பின் மூலமாக) சூழலியத்தையே மாற்றியமைத்ததாகி விடுகிறது.
இத்தனைக்கிடையிலும், என்னைச் சுற்றிலும் இன்னும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தே வருகிறது, இது ஒன்றும் புதிதல்ல என்று; பெரிதாக கவலைப் படுவதற்கில்லை என்று வாதிடுகிறார்கள். அது போன்று ஒரு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மேலே சொன்னவாறு தன்னுடைய ஜால்ஜாபினை முன் வைத்தார் ஒருவர். அவரிடத்தில் நான் சொன்ன ஒரு விசயம், ஆய்வுக் கூடங்களில் நாம் ஒரு வேதியப் பொருளை மற்றொரு வேதியப் பொருளுடன் குறிப்பிட்டளவு கலக்கும் பொழுது அதன் மூலமாக நாம் விரும்பிய மாற்றத்தை அடைய வைக்கிறோம் அல்லது தானாகாவே அது வேறு ஒரு விளைவாக நிறமூட்டிக் காமித்துக் கொள்கிறது - அது போன்றே நாம் இழைக்கும் அத்துனை அநீதிகளுக்கும் இந்த பூமி என்ற பெரிய ஆய்வுக் குடுவை ‘போதும்’ என்ற நிலையை அடைய எந்தக் கடைசி குத்து மல்யுத்த வீரனைச் சாய்ப்பதற்கு இணையாக சாய்க்க வல்லதாக இருக்கப் போகிறதோ அன்று உணர்ந்து கொள்வோம், நம்முடைய தத்துப்பித்து காரணங்களுக்கான உண்மையான விளைவை.
அம்மாம் பெரிய டைனோசாரே ஒன்றுமில்லை என்று போய் விட்டது, இவ்வளவிற்கும் அவைகள் தன்னுடைய அகோர பசிக்கு சதா கண்டதை தின்று வைத்த ஒரு விதயத்திற்கே, அன்னிக்கு இந்தப் பூமியே பார்த்து இவிங்கள வைச்சு மேய்க்க முடியாதுன்னு ஊத்தி மூடி வைச்ச மாதிரி,இன்னிக்கு நம்ம அலும்பு ரொம்பவே ஓவரா இருக்கு, என்னக்கி உள் வாங்கிக்கப் போவுதோ!!
என்னயப் பத்தி
சிதைந்த வரை
எப்பவும் படிக்கலாம்
- Fetna2009 (2)
- photography (26)
- அமெரிக்கா (9)
- அய்ன் ராண்ட் (2)
- அரசியல் (67)
- அறிவியலும் நானும் (42)
- அனுபவம் (105)
- இந்தியா (28)
- இந்தியா09 (4)
- இயற்கை (35)
- ஈழம் (9)
- உலகம் (25)
- எழுத்தாளர்கள் (27)
- ஒலிம்பிக்ஸ் (1)
- கதம்பம் (2)
- கலைஞர் (7)
- கவிதை (17)
- கவிஜா (34)
- காடும் நானும் (18)
- கீழடி (3)
- கைகலப்பு (16)
- கொரோனா (1)
- சதுப்பு நிலம் (2)
- சமூகம் (129)
- சரணாலயம் (3)
- சிறு கதை முயற்சி (1)
- சினிமா (31)
- சீரழிவு (18)
- செய்தி (42)
- செவ்விந்தியர்கள் (1)
- தஞ்சாவூர் (2)
- தமிழ் (1)
- தமிழ் விழா (2)
- தமிழ்நாடு (7)
- தாமரை (1)
- திராவிடம் (9)
- தீவிரவாதம் (10)
- தூக்குத் தண்டனை (1)
- தெளிதல் சார்ந்து (41)
- தொடரழைப்பு (8)
- நிகழ்வுகள் (109)
- நினைவோடை (19)
- நுண்மி (1)
- நோய் (8)
- படிமலர்ச்சி (14)
- பதிவர் வட்டம் (33)
- பயணம் (16)
- பரிணாமம் (14)
- புகைப்படங்கள் (32)
- புத்தகங்கள் (26)
- பூர்வகுடிகள் (2)
- பெரியார் (1)
- மக்களாட்சி (4)
- மதங்களும் நானும் (11)
- மருத்துவம் (2)
- முதுமை (13)
- மொக்கை (49)
- வலைச்சரம் (6)
- வன்முறை (14)
- வாசிப்பாளன் (36)
- விமர்சனம் (32)
- விளையாட்டு (4)
- வைரமுத்து (2)
- ஜாதி (7)
செம தீணி இங்கயும்
தெக்கிக்காட்டு நேரம்
Monday, June 14, 2010
அமெரிக்கா எண்ணெய்க் கசிவும் உலகளாவிய உயிர்ப் பேரழிவும்...
Posted by Thekkikattan|தெகா at 9:17 AM 58 comments
Labels: அறிவியலும் நானும், சீரழிவு, செய்தி, நிகழ்வுகள்
Friday, June 11, 2010
தொலைத்த வெளி...

நானாகிய என்னைச் சுற்றி
அந்தி மயங்கிய வானம்
தன் பொறுமையிழந்து
எங்கெங்கும்
விசிறியடிக்கும் கருமை...
அதன் முழுமைக்கும்
அழகு சேர்த்தவாறே
சில பறவைகள் தத்தம் ஒவ்வொரு
சிறகசைத்தலுக்கும் எவ்வி
மேலெழும்புகிறது...
தூரத்து மரக்கிளையொன்று
எதற்கோ வெடித்து சிரிக்கும்
இடைவெளியில் சில கருங்குருவிகள்
மரக்குடுமியின் இடமமர்ந்து
பூமி பார்க்கிறது...
Posted by Thekkikattan|தெகா at 12:46 PM 6 comments
Labels: அனுபவம், கவிஜா, தெளிதல் சார்ந்து
Friday, June 04, 2010
பேச்சு, நிதர்சனம், தெளிவு - வெகு தூரம்...
சொல்லுவது, நினைப்பது அனைத்தையுமே புற உலகிலும் சரி, உள் உலகிலும் சரி நடைமுறைப் படுத்துவது என்பது அத்துனை சுலபமா என்ன? என்னவோ எனக்குச் சுலபமாகத்தான் தோன்றியது. போன வாரம் ஒரு முடி திருத்தும் இடத்திற்கு சென்று இருக்கும் ஐநூறு முடிகளை திருத்தக் கொடுத்த நாள் வரையிலும்.
இப்பொழுதெல்லாம் இங்கு அது போன்று திருத்தகங்களில் யாருமே அதிகமாக சீப்பும், கத்தரிக்கோலும் கொண்டு திருத்துவதாகத் தெரியவில்லை. எல்லாமே அவசரமாகவிட்டது. இந்த நிலையில் எனக்கு கிடைத்த அந்த நபரிடம், ”எப்படிச் சீவியிருக்கேனோ அப்படியே வைத்து எவ்வளவு சிறிதாக திருத்த முடியுமோ, செய்து விடுங்கள்” என்று கூறிவிட்டு அமர்ந்தேன். அவர் நியூ சயிண்டிஸ்ட் தன் கடைக்கு வாங்கி படிக்கும் ஆசாமி போல, பக்கத்து டேபிளில் கிடந்தது. பார்த்தேன். பலத்த சிந்தனைகளுக்கிடையே தன் பார்க்கும் வேலையில் இருப்பவராகத் தெரிந்தார்.
எப்பொழுதுமே அது போன்ற கடைகளில் உலக அரசியலும், மதங்கள் தொட்டும், இனம் தொடர்பாகவும் காரசாரமாக பேசிக் கொள்வார்கள். அது போன்றே அன்றும் ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. நிறைய விசய ஞானங்களை தெளித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே என்னைப் போன்றவர்களுக்கு வாய் திறக்க வேலையே இல்லாத அளவிற்கு பெரிய அளவில் பேச்சு ஓடும். சொல்லிவிட்டு அமர்ந்தேன். அடுத்த நொடி என் முன் பக்க மண்டையிலிருந்த 100 முடிக் கற்றைகளை காணவில்லை. மிசின் போட்டு அதுவும் இருப்பதிலேயே சிறிய அளவினாலான ஒன்றைக் கொண்டு தூக்கி விட்டார்.
அது தவறி என் மடியில் விழுந்ததும், ஆ! இவ்வளவு நீளமாக வளரும் வரை விட்டு காட்டுத்தனமாகவா திரிந்திருக்கிறோம்னு நினைத்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தால், அது போன்ற ஓர் ஆளை நான் பார்த்ததே கிடையாது இதற்கு முன்னால் என்பதனைப் போல கண்ணடியில் முன் மண்டை காலியாக ஒருவன் ஆச்சர்யத்தில் கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தான். தலையை ஆட்டிக் கொண்டே திருத்துபவரை பார்த்தேன், அவரும் குழம்பிப் போய் என்னாயிற்று என்பது போல என் கண்களை நேர் கொண்டார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, அப்படியே சில நொடிகள் அமர்ந்து விட்டு சரி keep it going என்று கூறிவிட்டு, சிந்தனை சின்னச்சாமியாக யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.
இயல்பாகவே என்னிடம் மாட்டும் நண்ப/பிகளிடத்தில் வாயில் வந்ததெல்லாம் தத்துவ நோக்கில் பேசுவதாக எடுத்துக் கொண்டு பிதற்றுவேன். ஈகோ இருக்கக் கூடாது, தனக்கென்று ஒரு இமேஜ் வைத்துக் கொள்வதில்தான் எத்தனை ஆபத்து, வெங்காயம், கருவேப்பிலை, பச்சடி என்று எவ்வளவு நேரம் எதிராளி தாங்குவார்களோ அவ்வளவு நேரம் பேசுவேன். அதாவது ஒரு நாள் கோவனம் கட்டிக் கொண்டு தெருக்களில் இறங்கி நடந்து திரிவதில் எனக்கொன்றும் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை என்ற ரேஞ்சிற்கு... :)
ஆனால், அது செயலில் காட்டுவதில்தான் மனதிற்கு எத்தனை தயக்கம். வாய் பாட்டிற்கு பேசி விடுகிறது எனக்கென்ன என்று. நடைமுறையில் பேசியவற்றை எடுத்துச் செலுத்வதில் தான் மனதிற்கு எத்தனை பயம். முடி திருத்தி முடித்தவுடன், அவருக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு, தனியாக அமர்ந்து வாகனத்தை செலுத்தியவாறே மீண்டும் எண்ணக் குமிழ்களுக்குள் என்னை அடைத்துக் கொண்டே வெடித்து, மீண்டும் மற்றொன்றிற்குள் என்று விழுந்து வெடித்து வெளி வந்து கொண்டிருந்தேன்.
இந்த சிறு விசயம், புறத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் அடைத்துக் கொண்டு வளர்ந்து நிற்கும் ஒரு விசயம். இதற்கு எத்தனை விதமான எண்ணச் சங்கிலிகள்! அதன் இயல்பான முறையிலிருந்து, சற்றே மாற்றி திருத்தியமைத்துக் கொண்டதிற்கே. விசயம் அப்படியாக இருக்கையில், எதன் பொருட்டும் கேள்விகளே எழுப்பிப் பழகாத மனத்தின் அடியாழத்தில் சென்று தன் பார்த்தே பழகி, நொதித்து வாழ்ந்து அதன் இயல்போடு ஓடி அனிச்சையாக இயங்கும் வாழ்வியல் சார்ந்த விசயங்களில் தன்னைத் திருத்தி அமைத்துக் கொள்வது எத்தனை தூரம் சாத்தியம் என்று நினைக்கும் பொழுது சற்றே மிரட்சியாக இருந்தது.
அந்த விழிப்பு நிலைக்கே தன்னை இட்டுச் சென்று நிறுத்திக் கொள்ள எது போன்ற இன்றைய ‘முடி இழப்பு’ சம்பவம் போல் ஏதாவது ஒரு எதிர்பாராத நிகழ்வு நிகழ்ந்து கண்ணைத் திறக்க வைக்கும் இந்த வாழ்வெனும் இயக்கம்? அப்படியே நிகழ்ந்தாலும் உள்ளே சென்று விழிப்பு நிலையை எட்ட தன்னை தயார் நிலையில் வைத்திருப்போமா; பழகிப்போன விசயங்களிலிருந்து விட்டு விலகி மாற்று சிந்தனைகளை பழகிக் கொள்ள. என்று என்னன்னவோ மனத்தினுள் இந்த முடி இழப்பு, எண்ணங்களாக படையெடுக்க ஆரம்பித்து விட்டது.
வீட்டிற்குள் வந்து நுழைந்ததும் எல்லாருக்கும் என்னைப் பார்த்ததும் முதலில் வந்தது சிரிப்பு மட்டுமே! எனக்கு... ??
Posted by Thekkikattan|தெகா at 9:48 AM 18 comments
Labels: அனுபவம், தெளிதல் சார்ந்து, பதிவர் வட்டம், மொக்கை
Monday, May 24, 2010
பூமியச்சிலிர்ப்பு!
Posted by Thekkikattan|தெகா at 8:38 AM 7 comments
Sunday, May 02, 2010
என் வீட்டு சிட்டுக்குருவி: The House Sparrow
எங்க வீட்டு சிட்டுக்குருவிகளைப் பத்தி பேசணும்னு நான் நினைச்சு, நினைச்சு தள்ளிப் போட்ட விசயத்தைப் எழுத உட்காருவதற்கான நேரம் இன்னக்கி காலையிலதான் அமைஞ்சிருக்கு. கிட்டத்தட்ட என்னோட வேலை இடத்தில நானும் இவைகளை எட்டு வருஷத்திற்கு மேலா பாத்துக்கிட்டு வாரேன்.
என்னய மாதிரி இல்லாம இந்த சிட்டுக்குருவிகள் பாட்டுக்கு அமைதியா எதைப் பற்றியும் கிஞ்சித்தும் அலட்டிக்காம தாவித் தாவி கிடைக்கிற உணவு விசயங்களை கொத்தி எடுத்திட்டு அங்கிட்டும் இங்கிட்டுமா தலையையாட்டி பார்த்திட்டு இருக்கும். தடிமாடு மாதிரி நான் அதன் வழியில நின்னா கொஞ்சம் நகருவனான்னு பார்க்கும் இல்லன்னா பொசுக்கின்னு தலைக்கு மேலே அடப் போப்பா அப்படின்னு பறந்து கூரையில கட்டி வைச்சிருக்க கூட்டில அமர்ந்து உணவு வழங்கிட்டு சிறிது நேரம் உள்ளரயே இருந்திட்டு மீண்டும் இரை தேட கீழே இறங்கிடும்.
அந்தக் கூடு நான் முதன் முறையாக வைத்துப் பார்த்த இடத்திலேயே அப்படியே இருக்கிது. அந்த அமைப்பில என்ன ஒரே ஒரு வித்தியாசம் பார்த்திருக்கேன்னா, கொண்டு வந்து சேர்க்கும் நார்களின் நிறத்தைக் கொண்டு அவை புதிதாக சேர்க்கப் பட்டிருக்கிறது எனவும், கூட்டின் நீளம் நீட்டப் பட்டிருக்கிறது என்றும் அறிந்து வைத்திருக்கிறேன். மற்றபடி வாகுவாக அதன் கூட்டை மிக்க சிரத்தையுடன் செங்கல் சுவற்றிற்கும் நீட்ட வாக்கில் ஓடும் இரும்பு கம்பிக்கும் இடையில் அமைத்து வைத்திருக்கிறது. அந்தக் கூடு என் தலைக்கு நேர் மேலாக இருக்கு, அங்க நின்று கொண்டிருக்கும் பொழுது நில நேரங்கள்ல அவைகளுக்கிடையேயான உரையாடல் சற்றே பலமாக இருக்கும் கீழே நின்று ரசிக்கும்படியாக. பல நேரம் மிக்க அமைதியாக இருந்துவிடுவதுமுண்டு.
என்னோட கூரையில அடையிற குருவி இனம் வந்து வீட்டுச் சிட்டுக்குருவி (the house sparrow - passer domesticus). எனக்கு இவைகளைப் பத்தி எழுதணும்னு ஆர்வம் வந்ததிற்குக் காரணமே இத்தனை வருஷமா இதே இடத்தில் பார்க்கிறேனே, இதுக எத்தனை தலைமுறையா இருக்கும்? அப்படி தலைமுறை தலைமுறையா வந்தா, இதுக எத்தனை வருஷம் வாழுது? எத்தனை முறை வருஷத்தில முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிது? எப்படி பெற்றோர்கள் இருந்த இடத்திலேயே அதுகளோட குஞ்சுகள் மிகச் சரியா அதே கூரையை கண்டுபிடிச்சு வந்து குடும்பம் நடத்துது? அப்படி இப்படின்னு பெரும்பாலும் நான் மொக்கையா இருக்கும் பொழுது இது போன்ற கேள்விகள் மண்டைக்குள்ளர குடைஞ்சதுனாலே இங்க பதிவா கொண்டு வர அளவிற்கு ஆயிப்போச்சு.
சிட்டுக்குருவிகள் ஒரு காலத்தில் நீக்க மற மனித குடியேற்றம் எங்கெல்லாம் அரங்கேறியதோ அங்கெல்லாம் நோக்கத்தோடோ அல்லது திட்டமிடாமலோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான் வாழும் இடத்தில் இது போன்று நகரங்களையொட்டி தட்பவெப்பம் கொஞ்சம் இதமாக இருக்கும் பொழுது மனித வாழ்விடங்களை சார்ந்து வாழ்வதாக அமைத்துக் கொண்டும், குளிர்காலத்தில் கிராமங்களை ஒத்த இடங்களுக்கும் குடி பெயர்ந்து விடுவதாக தெரிகிறது.
இந்த புகைப்படத்தில நீங்க பார்க்கிறது ஒரு ஆண் குருவி. ஆண்/பெண் என அடையாளப் படுத்தி பார்க்கிறது ரொம்பச் சுலபம். ஆண் குருவி நல்லா வண்ணமயமா இருக்கும், செங்கல் நிறம் மற்றும் கருமை நிறக் கோடுகள் அதன் இறக்கையின் மீதும், அலகிற்கு பக்கத்தில் கருமையான ஒரு திட்டும், அலகிற்கு மேலே முன் மண்டையின் மீது சாம்பல் நிறமாகவும் இருக்கும். பெண் குருவிகள் நிறம் குறைச்சலாவும், சாம்பல் நிறத்திலும் இருந்து போகும். இதோட ஆரோக்கியம் அதன் நெஞ்சுப் பகுதியில் இருக்கும் அந்த கருமையான திட்டைக் கொண்டும் அறியலாமாம். நல்லா அடர்த்தியா இருந்தா, ஆரோக்கியமாக இருப்பதாகவும், இனவிருத்தி செஞ்சிட்டும் இருக்காருன்னும் தெரிஞ்சிக்கோங்க.
அதோட அலகு இந்த நாட்டில குளிர்காலத்தில கருமை நிறமாகவும், மிதமான வெப்ப காலங்கள்ல மஞ்சளாவோ அல்லது பிரவுன் நிறத்திலோ இருக்கும்.

வருஷத்திற்கு ரெண்டு, மூணு முறை முட்டையிடும் போல, ஒவ்வொரு முறையும் 2-5 முட்டை வரைக்கும் இட்டு 14-16 நாட்கள் அடைகாக்குதாம். இது பொதுவா ஏப்ரல்-ஆகஸ்ட் மாதம் வரைக்கும் நடை பெறுவதாக தெரிகிறது. கட்டற்ற சுதந்திரத்தோட சுத்தித் திரியற சிட்டுக்குருவிகள் குறைந்தது ஐந்து வருடங்கள் வாழ்வதாகவும், கூண்டில அடைச்சு வாழ வைச்சிப் பார்த்ததில பத்து வருஷம் வரைக்கும் கூட நீட்டிச்சதா சொல்லிக்கிறாங்க. ஆனா, என்னயப் பொருத்த மட்டில அதில உடன்பாடு இல்ல, எத்தனை வருஷம் மூச்சு விட்டுக்கிட்டு திரிஞ்சோங்கிறது முக்கியமில்ல; எத்தனை மணி நேரம் வாழ்ந்தோங்கிறதிலதான் விசயம் இருக்கின்னு நினைக்கிற ஆளு நான். அதுனாலே அதோட வன வாழ்க்கை ஐந்து வருஷமே இனிப்பா இருக்கும் அதுகளுக்கும்; எனக்குமின்னு தெரியுது.
ஆனா, இது போன்ற ரொம்ப சாதாரணமா நாம கண்ணுற்று வந்த பல பறவைகளின் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமா ஒடுக்கப்பட்டு, இப்பெல்லாம் நல்லா கண்ணை கசக்கிட்டு பார்த்தாத்தேன் தட்டுப்படுதுங்கன்னு கவனிச்சிட்டு வாரவங்களுக்குத் தெரியும். உலகம் முழுக்கவுமே இப்போ சிட்டுக்குருவிகள் 7.5% குறைஞ்சிடுச்சின்னும், பறவைகளின் ரெட் புக் இவைகளை அபாயத்தில் இருக்குங்கிற லிஸ்ட்லயும் சேர்த்து வைச்சிருக்கிது.
போன வருஷம் பறவை பார்த்தல் அப்படிங்கிற பதிவில இந்த செல் ஃபோன் டவர்களின் பெருக்கம் இது போன்ற பறவைகளின் இருத்தலை குறைச்சிடுச்சான்னு ஒரு பேச்சு வந்து ஒரு பின்னூட்டத்தின் மூலமா பேசினோம், அதனையும் இங்கே இணைக்கிறேன் ஆர்வமுள்ள மக்கள் எஞ்சாய்! ...
...இயற்கை நேசி|Oruni said...
கல்வெட்டு,
//செல்போன் டவர் மற்றும் அது ஏற்படுத்தும் நுண்ணலைகள் பறவைகள் மற்றும் சிறு பூச்சிகளின் இருப்பை அதிகம் பாதிப்பது உண்மையா? சிட்டுக்குருவிகள் நிறைய தென்படுவது இல்லை இப்போது.//
நல்லதொரு கேள்வியுடன் வந்திருக்கீங்க. இது ஆழமாக அலசப் பட வேண்டிய ஒரு விசயமிங்க. அதுவும் மனிதச் சமூகத்தின் மாறிப்போன வாழ்வு முறையில, கிலோவுக்கு இவ்வளவுன்னு எடை வைத்துக் கொடுக்குமளவிற்கு அலைபேசிகளின் பெருக்கம் அவைகளை சென்றடைய வைப்பதற்கான நுண்ணலை டவர்கள்; அதனையொட்டிய நுண்ணலைகளின் தாக்கம் இன்னமும் நம் புலன்களுக்கு எட்டாத அளவில் சுற்றுப்புறச் சூழலை சிதைச்சிட்டு வருதுன்னே அடிச்சுக் கூறலாம் ...
சிட்டுக்குருவி மட்டுமா? எது போன்ற பறவைகளை நாம் அடிக்கடி இது போன்று நவீன வளர்ச்சிகளுக்கு முன்பு கண்ணூற முடிந்திருக்குமோ (உதாரணத்திற்கு அந்த ப்ராமினி பருந்து, புல்புல் மற்றும் புறா மாதிரியான) அவைகளையெல்லாம் இப்பொழுது எங்கே பார்க்க முடிகிறது அவ்வளவு எளிதாக?
எனக்கு என்னவோ நம்முடைய மாறிப்போன கட்டடங்களின் புற அமைப்பும், சிந்தி சிதறும் தானியங்களின் தட்டுப்பாடு மற்றும் பயன்படுத்தப்படும் உரங்களின் தாக்கம் என நவீனப் படுத்தப்பட்ட எல்லாமே அவைகளை துடைத்தெறிந்து கொண்டு வருகிறதோ என எண்ணச் செய்கிறது. முன்னாலே இப்படி ஒரு பதிவு போட்டுருந்தேன் அவைகள் மற்ற என்ன என்ன காரணங்களால் காணாமல் போகலாமின்னு... "வெர்மின்" விலங்குகளே இன்று அரிதாகும் காரணம்...
யானைகளில் (அல்ட்ரா சோனிக்) நம் காதுகளுக்கு எட்டாத ஒலியெழுப்பி அவைகளுக்குள் கம்யூனிகேஷன் செய்து கொள்வதாக அறிகிறோம்... அப்படியெனில் அவைகளின் உலகமே வேறாகத்தானே இருக்க முடியும் அவைகளின் புலன்களின் மென்மையும், அறியும் திறனையும் கொண்டு பார்க்கும் பொழுது.
அப்படியாக இருக்கையில் இது போன்ற மின்னலைகளும், நுண்ணலைகளும் அவைகளின் வாழ்வு முறையில் இடையூறு விளைவிக்காமல் இருக்க முடியாது. பறவைகளில் வலசை போதலே இது போன்ற துருவ மின்காந்த அலைகளை கொண்டே என்பதும் அறியப்பட்ட நிலையில் இருக்கிறது. விசயம் இப்படி இருக்கையில் இது போன்ற அதிகரித்து வரும் electro magnetic radiation பல வகைகளில் நம்மையும், நம்மை சுற்றியுள்ள சூழலையும் பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாகப் படுகிறது.
பூச்சி வகைகள் இதனைக் காட்டிலும் அவைகளின் உலகம் இன்னமும் நுட்பமானது... எனவே சிக்கலும் இறுக இணைத்துதான் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
இங்கே ஒரு ஆர்டிகில் படித்தேன் இதன் விகாரம் கொஞ்சம் பெரிதாகவே விளக்கப்பட்டுள்ளது... Killing Fields - Electromagnetic Radiation ...
Posted by Thekkikattan|தெகா at 8:24 PM 21 comments
Labels: photography, அனுபவம், இயற்கை
Tuesday, April 20, 2010
சுவடுகள் with photos...
அந்தப் புத்தகத்தின் இரண்டு அத்தியாயங்களைப் படித்து முடித்தவுடனேயே இதனையொட்டிய ஒரு கட்டுரையை எழுத வேண்டுமென்ற எனது விரல்களின் நமநமப்பை என்னுள் உணர முடிந்தது. அப்படி ஏன் தோன்றியது என்பதற்கும் காரணங்கள் எனக்கிருக்கிறது. முன்பொரு கால கட்டத்தில் தன்னந்தனியாக முதுகுப் பையுடன், ஒற்றை வார்த்தை பயணம் செய்யும் இடங்களின் மொழி கூட தெரியாமல் சுற்றியலைந்தவன் என்ற முறையிலும் அதிலிருந்து கிடைத்த அனுபவங்களைக் கொண்டும் அவ்வாறாக தோன்றியிருக்கக் காரணமாக அமைந்தது.
வாசிக்க நேர்ந்த புத்தகத்தில், அப்பொழுதே கல்லூரி பட்டப் படிப்பை முடித்த ஓர் இளைஞன் அத்தனை கால இருப்பும், அந்த பட்டய சேகரிப்பும் தன்னை நேசித்தவர்களுக்காக செய்த கடமையாக நினைத்து முடித்து கொடுத்துவிட்டு நாடோடியாக சில வருடங்களை தனிமையில் நடத்தி, இறுதியாக அவனது பயணத்தின் உச்ச இலக்கான அலாஸ்கா வனத்திற்குச் சென்று அங்கு பட்டினிச் சாவும் நிகழ்த்த நேரும். இதற்கு இடைப்பட்ட காலப் பயணிப்பில் அவன் சந்திக்கும் இடங்களும், மக்களும் அவனுள் ஏற்படுத்தும் எண்ணங்களை அவன் வெளிப்படுத்தும் பாங்கு, அன்றாடம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து எவ்வாறாக முற்றிலுமாக மாறுபட்டு, நாமும் சற்றே பின் அமர்ந்து யோசிக்கும் பொழுது, எது போன்ற மகத்தான விசயங்களை இழந்தே நாமும் வாழ்ந்து முடிப்போம் என்ற எண்ணத்தை என்னுள் எழுப்பியதால், அந்தப் புத்தகத்தின் விமர்சனப் பதிவாக இதனை அமைத்துக் கொள்ளாமல் - ஒரு பயணத்தின் பால் எது போன்ற தனிமனித மன விஸ்திகரிப்பிற்கு அடித்தலமாக அமைந்து அதனை நம்முள் கரைத்து வாழும் கணம் தோறும் மனத்தினுள் எது போன்ற உலகத்தினை தரிசித்து வாழக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்பதனை உட்நோக்குவதகாக அமையட்டும்.
...I wanted movement and not a calm course of existence. I wanted excitement and danger and the chance of sacrifice myself for my love. I felt in myself a superabundance of energy which found no outlet in our quiet life...
இன்று பயணம் அதுவும் தூரத்து கண்டங்களுக்கும், தேசத்திற்கு நிகழ்த்துவது என்பது ஒன்றுமே இல்லை என்ற ஒரு நிலைக்குச் சென்றுவிட்டது; குறைந்த பட்சம் வெளிப்பார்வையில். அது போன்ற பயணங்கள் ஒரு இலக்குகளற்ற, அதிலிருந்து பெறுவதற்கு பொருளாதாரமும், பெருமை பட்டுக்கொள்வதற்கான ஒரு வாழ்நாள் சாதனையாகவும் மட்டுமே அணுகும் பட்சத்தில் அதுவே ஒரு வெற்றிடத்தை உருவாக்கி நம்மை பதர்களாகவே வெளியே அனுப்பியும் வைத்து விடக்கூடிய அபாயமாகவும் அமைந்துவிடக் கூடும். எதிர்பாராத விதமாக, அது போன்ற மேம்போக்கான பயணங்களே பலருக்கும் இன்று கிடைத்துக் கொண்டிருக்கிறது!
பயணங்களின் போது நம்முடைய வளர்ச்சி சார்ந்த நிறைகளை மட்டுமே தன்னுள்ளே அடக்கிக் கொண்டு அந்தச் சாளரத்தின் வழியாக, நம் தோளோடு உரசிச் செல்லும் மக்களையும், கலாச்சாரங்களையும், இயற்கையையும் கூட அணுகி ஓப்பீட்டளவில் கண்ணுற்று, அதனின்று கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற திறந்த மனப்போக்கு இல்லாமல் பல வருடங்கள் பிரிதொரு சூழலில் வாழக் கிடைத்திருந்தாலும், அதே செக்குமாட்டுத்தனத்துடன் வாழ்ந்து தொடங்கிய இடத்திலேயே வந்தும் அமர்ந்து நம் பார்வையில்கிட்டும் மற்ற மக்களை நம் வெற்றிடத்தைக் கொண்டு அவர்களை நிறைத்துக் கொண்டிருப்போம்.
பயணங்கள் - நமக்கு நம்முள் தேங்கிக் குட்டையாகிப் போன நாற்றமடித்துக் கொண்டிருக்கும் பார்வைகளை வெளிக்கொணர்ந்து, ஒரு பரந்து பட்ட பார்வையை வளர்த்துக் கொள்ள உதவ வேண்டும். அதுவே நாட்பட நாட்பட உலகியல் பார்வையில் பரந்த ஒரு படத்தினை பார்த்துக் கொண்டிருப்பதனைப் போன்ற ஒரு பிரக்ஞையை நம்முள் அழுத்தமாக விட்டுச் செல்வதற்கான படி நிலையாக அமைய வேண்டும். அது போன்ற உணர்வு நம்முள் புகுந்து வெளிக்கிளம்ப நம்முடைய மனத்தை திறந்து வைத்திருந்தாலே ஒழிய அதற்கான சாத்தியங்களே இல்லை - முன் முடிவுகளோடு நாம் யாவற்றையும் அணுகும் பட்சத்தில்.
பல மொழிகள் பேசத் தெரிந்தவர்களாக, எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாகவும், பல தேசங்களில் கால் பதித்திருந்தவர்களாகவும் அமைந்தும் இது போன்ற ஒரு திறந்த மனநிலையையற்றவர்கள் அது போன்ற பயணங்களின் மூலமாக எதனையுமே தன்னுள் கடத்திக் கொண்டிருக்க முடியாது, தேக்கமட்டுமே அங்கும் சாத்தியப்பட்டு மேலும் வாசனை கொண்டவர்களாக பரிணமித்து நிற்பதனை நம்முன்னால் இன்றும் கூட காண முடியும். எப்படி அங்கே உண்மையான வளர்ச்சியும், முழுமையும் கிட்டியிருக்க முடியும்?
உதாரணத்திற்கு ஒருவர் சக மனிதனை அடிமையாக குளிர்சாதன பெட்டியின் குமிழை முடிக்கி விடுவதற்கும், தனக்கு வந்த கடிதங்களின் உரையைக் கிழித்து கொடுப்பதற்குமான மனித வளத்தை ஓர் ஆளூமையின் திறன் என்று பறைசாற்றிக் கொண்டால், அதற்குப் பின்னான தன் நாட்டின் வறுமையும், மக்களின் சிறுமையும், சக மக்களின் இயலாத்தனத்தையும் கருத்தில் கொள்ளாமால் அவைகளைக் கூறி பிரிதொரு கலாச்சாரத்தில் திளைத்துக் கொள்ளும் மேட்டிமைத்தன எண்ணம் எங்கிருந்து புறப்பட்டிருக்க முடியும். அதனையொட்டியே உணவு, உடை பழக்க வழக்கங்களை வைத்து பிரிதொரு கலாச்சாரத்தை கீழே போடுவது, சாதீயக் கூறுகளை மண்டைக்குள் தூக்கித் திரிந்து கொண்டே க்ராண்ட் கன்யானின் அழகினை கண்டு வியந்து, ரசித்துக் கொண்டிருக்கும் கணத்தில் பிரபஞ்சத்தின் சூத்திரம் அறிய முடியாமல் போக நிற்பதும், இது போன்ற விழிப்பு நிலையற்ற, தேக்கமுற்ற மனநிலையேயன்றி வேறு எது போன்ற காரணிகள் முன் நிற்க முடியும்?
இது போன்ற மனிதர்கள் எது போன்ற சுவடுகளை ஏனையவர்களின் மனத்தினுள் விதைத்துச் சென்றிருப்பார்கள்? அங்கே நான் காண்பது வெற்றீடமான நடந்து திரியும் ஒரு கண்ணாடிக் குடுவை உள்ளே அடைத்து வைத்திருக்கும் தன் கழிவுகளை சமூகப் பார்வைக்கு முன் வைத்தவாரே நகர்ந்து கொண்டிருப்பதாக...
பி.கு: அந்த மின் புத்தகம் எல்லாருக்கும் பிடிக்குமின்னு சொல்ல முடியாட்டியும் அங்கே இங்கேன்னு சில கேசுகள் இருக்கத்தான் செய்யுமின்னும் தெரியறதுனாலே வேணுங்கிறவங்க, மின்னஞ்சல் செய்யுங்க புத்தக டெலிவரிக்கு...
Posted by Thekkikattan|தெகா at 11:47 AM 25 comments
Labels: அனுபவம், இயற்கை, காடும் நானும், பயணம், புகைப்படங்கள், புத்தகங்கள்
Thursday, April 08, 2010
காலச்சுழற்சி

Posted by Thekkikattan|தெகா at 8:49 AM 13 comments
Labels: அனுபவம், கவிஜா, தெளிதல் சார்ந்து


