சமச்சீர் கல்வித் திட்டம் தேவையா இல்லையான்னு ஊரு பூராவும் குறைந்த பட்சம் வலையுலகில் நோட்டீஸ் அடிச்சு ஒட்டிப் பேசுற அளவிற்கு பேசி, உரையாடி கழட்டி காயப்போட்டிருக்காங்க. அதுக்கு முத்தாய்ப்பு வைச்ச மாதிரி நம்ப நண்பர் தேவியர்கள் இல்லத்தில ஒரு பதிவு போட்டுருக்கார் அங்கயும் போயி படிச்சிக்கலாம்.
ஒவ்வொரு முக்கியமான சந்தர்ப்பத்திலும் என்னுடைய குருவி மண்டைக்கு எத்தனை தூரம் எட்டியிருக்கோ அந்த அளவிற்கு எந்த புள்ளி விபரங்களும் இல்லாம லாஜிக்கலாக எனது பார்வையை வைத்து விடுவது என்னுடைய பாணி. இந்த விசயம் பொருட்டு கூடுதலாக எனக்கு பேச அருகதை இருக்கிறது என்பதற்கு நான் படித்து வந்த பள்ளிகளின் தரம் ஒன்றை வைத்தே சொல்லி விட முடியும். நானும் கடைசி பெஞ்ச். ஆனா, போராடி எப்படி முதன்மை தரத்தில் கல்வி பெற்று வருபவர்களோட வெளி உலகம் சென்று போராட வேண்டி வந்தது என்பது இன்னமும் பச்சையாக மனத்தில் பதிந்திருப்பதால் அவசியம் நானும் என்னுடைய பார்வையை வைப்பதில் எந்த தவறுமில்லை என்பதால் இந்த பகிர்வு.
நான் ஒன்னாப்புல இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் அரசாங்க பள்ளிகளில் படித்து தேர்ந்தவன். அந்தப் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களின் திறன், ஆர்வம், அக்கறை சார்ந்தே எனக்குள் இருக்கும் பல நிறை, குறைகளுடன் வார்த்து எடுத்து ஒரு நாள் திடீரெண்டு வெளி உலகத்திற்கு தள்ளப்பட்டேன். அங்கே ஊட்டி ஷெஃப்பர்ட் சர்வதேச பள்ளியில் படித்தவர்களிலிருந்து, சேஷாத்திரி வித்யா நிகேதனில் சிறப்பு பாடம் படித்தவர்களிலிருந்து குருவிக்கரம்பை அரசாங்க மேல் நிலை பள்ளியில் படித்தவர்களுடனும் போட்டி போட்டு வெற்றி பெறுவதாக அமைந்து பட்டிருந்தது அந்த விளையாட்டு மைதானம்.
என் பெற்றோர்கள் ஏதோ சுமாருக்கான அளவில் ஆரம்ப பள்ளியளவில் படித்தவர்களாயினும் அவர்களுக்குள் இருந்த ஆர்வம் அவர்களின் பிள்ளைகளை எப்படியோ தம் கட்டி கல்லூரி வரைக்கும் அனுப்பி வைத்து பார்த்தது. இது போன்ற குடும்பப் பின்னணியில் மிக்க சிரத்தையுடன் குழந்தைகளின் எதிர்கால உளவியல் எப்படியாக அமையும் என்று கருதி காரியத்துடன் வீட்டினுள் கருகருவென சிறப்பு வகுப்புகளும், பெற்றோர்களின் சிறப்பு கவனமும் பேசிக் கொண்டே அன்றைய வகுப்பறையில் நடந்தவைகளை ஊடாடிக் கொண்டோ வளர்த்தெடுக்கும் பின்னணி இல்லை.
அப்படியாக கல்வியறிவு ரீதியான பிரக்ஞையை முற்றும் முழுதுமாக மேற்சொன்ன அனைத்து காரணிகளை என்னுள் வளர்க்க அவர்களும், நானும் ஏன் என்னை ஒத்த முழுச் சமூகம் நான் சென்ற பள்ளியையும், கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையும், கற்பிக்கும் பாட நூல்களையும், அதற்குண்டான உபகரணங்களையுமே நம்பியே அனுப்பப்படுகிறோம்.
இந்த சூழ்நிலையின் அடிப்படையிலேயே அருதிப் பெரும்பான்மையினர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில், பள்ளிகளில் போதுமானளவிற்கு தேவையான கல்வி போதிக்கும் உபகரணங்களும், உலகத்தின் இன்றைய தேவையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட பாடத் திட்டங்களும் அல்லது அணுகுமுறையும் அற்று, எல்லாவற்றிற்கும் மேலாக கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கே போதுமான பொது அறிவும், மாணவர்களிடத்தே புழங்கும் உளவியல் செயற்பாடுகளுக்கான பிரக்ஞையுமற்று ஏதோ சம்பளத்திற்காக வந்து போகிறேன் என்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டால், அந்த எதிர்கால நாட்டின் குடிமகன் எப்படி அதற்கு எதிர் முனையிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு சர்வதேச பள்ளித் சூழ்நிலையில் படித்தவனுடன் முகம் தரிக்க முடியும்? இது ஒரு பகுதி-
அடுத்தது. மேற்சொன்னவைகளில் அரசாங்க பொதுக் கல்வி தோல்வியுற்று இருப்பதாக பெரும்பாலனாவர்களால் உணரப்படுவதாலும், நம்பப்படுவதாலும் தனியார் பள்ளிகளை என் பெற்றோரைப் போன்ற பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களும் தன் விரலுக்கு ஏத்த வீக்கத்தை காட்டிலும் பெரிதாக ஆசைப்பட வேண்டி வருகிறது. அதற்காக அவர்களை குற்றம் சொல்லுவதிற்குமில்லை. ஏனெனில் எந்த பெற்றவர்களுக்குத்தான் தனது பிள்ளைகள் சான்றோன் என்ற சொல்லை கேக்க கசக்கும். எனவே, எங்கே பிடிங்கியாவது தனியார் பள்ளிகளில் போடக் கூடிய ஒரு கட்டாயத்தில் திணிக்கப்படுகிறார்கள்.
ஏற்கெனவே சாதியைக் கொண்டும், பண பலத்தைக் கொண்டும் அடுத்த மனிதர்களை எறும்புகளாக மதிக்க கற்றுக் கொண்டு வாழப் பழகின நம்முடைய சமூகத்திற்கு எனது பிள்ளை இது போன்ற பள்ளியில், இத்தனை பணம் கட்டி படிக்கிறது, விடாம ஆங்கிலத்தில் ரைம்ஸ் கக்குது என்று சொல்லி பீத்தி, கூரை வீட்டில் வாழ்பவனைக் கூனி குறுக மற்றொரு வாய்ப்பையும் கொடுத்ததாகத்தான் எடுத்துக் கொண்டு நீ முந்தி, நான் முந்தி என்று கேள்வி கேப்பாடு இல்லாமல் ஈயடிச்சான் காப்பி அடிக்க செல்லுவோம்.
அங்கே ஏன் இப்படி அதிகப்படியான ஃபீஸ் வாங்குகிறார்கள், எந்த வித்தியாசத்தின் அடிப்படையில் இது போன்ற கட்டணச் செலவில் நாம் முன் வந்து நமது பிள்ளையை படிக்க வைக்கிறோம் போன்ற எந்த அடிப்படை கேள்விகளும் கிடையாது. ஆங்கிலம் பேசும், சீருடை அழகாக இருக்கிறது, பக்கத்து வீட்டு மாமி அங்கேதான் தன் பிள்ளையை படிக்க வைத்திருக்கிறாள், அந்தப் பள்ளியில் படிக்க வைத்தால் பெருமை (மற்றதெல்லாம் எருமை), எல்லாத்துக்கும் மேல நம்ம ஸ்டேடஸ்க்கு அதுதான் சரியான பள்ளி. இப்படியாக செல்கிறது இன்றைய நடைமுறை தனியார் பள்ளிகளில் மொய்க்கும் ஈக்களின் எண்ணிக்கையின் பெரும்பாலான எண்ண ஓட்டம்.
இந்த ஆட்டு மந்தை எண்ணத்தை அடிப்படையாக கொண்டு, பணமயமாக்கும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை காளான்கள் பூத்து குலுங்குவதனைப் போன்று இன்று காண்கிறோம். அவர் அவர்களின் வசதிக்கு ஏற்ப தெருவிற்கு ஒன்றாக, பல ஜொலிக்கும் பெயர்களுடன் மண்ட ஆரம்பித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படையில் அமைந்த முதலீடு- ஒரே மாதிரி உடையணியும் ஒரு 5-10 அடிமாட்டு விளைக்கு வாங்கின ஆசிரிய, ஆசிரியைகள். மாணவர்களுக்கு டை கட்டின சீருடை. போதும். நேற்று வரை சாராயம் காச்சி பணம் பெருக்கியவர் கூட இன்றைக்கு பள்ளி தாளாலர் ஆகிவிடலாம். இதே ரேஞ்சுதான் இன்றைய மருத்துவ, இஞ்சினிய, கலைக் கல்லூரிகளில் முதலீடும் கூட என்பது யாவரும் அறிந்ததே!
இப்படியாக ஒரு சமூகம் அமைந்து போனால் எப்படி அந்த நாடு வெளங்கும்? பணம் படைத்தவர்கள் எந்த தொழிலையும் ஆரம்பிப்பது போலவே பணம் பெருக்குவதனையும், பாதுகாப்பான முதலீடு என்ற தொணியிலும் கல்வித் துறைக்குள்ளும் வந்தால் அதனிடத்தில் பொதிக்கப்பட்ட சாதா மனிதர்களின் நிலைதான் என்ன?
பத்தாயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒரு அரசு ஊழியருக்கு தனது இரண்டு பிள்ளைகளை எல்.கே.ஜி_ல் போட ஐம்பது ஆயிரம் டொனேஷன் தலைக்கு என்றால் அந்த மனிதர் எங்கிருந்து அந்த பணத்தை புரட்டிக் கொண்டு வந்து சேர்ப்பார்? அது மட்டுமின்றி மாதமாதம் தன் தலையின் சைஸை விட அதிகமாக பள்ளிக்கு ஆகும் செலவிற்கென அடுத்தவர்களின் மடியில் கை வைக்காமல் எப்படியாக அந்த பணம் புரட்டப்படும்? இப்படியாகத்தான் நமது தேவைகளை நம்மை விட பெரிதளவாக வளர்த்துக் கொள்கிறோம். அதற்கு இந்த சமூகமும் பொறுப்பாகித்தானே போகிறது.
அதன் பின்னணியில் பேருந்து நடத்துனர் ஐம்பது ரூபாயில் சில்லரை பாக்கியாக இரண்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் வரைக்கும் திரும்ப கேட்டால் எரிந்து விழுகிறார் என்று ஏன் கோபித்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனையின் வாசலில் நிற்கும் காப்பாளர் உள்ளே அனுமதிக்க இருபது ரூபாய் கேக்கிறார் என்று எதற்கு கடுப்பேற வேண்டும். அதனை விட சற்று பெரிய வேலையாக அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் தனது பேனாவின் கொண்டை ஆட பணம் கேட்டு இழுத்து அடிக்கிறார்கள் என்று மண்டை காய வேண்டும். அந்த பணத்திற்கான அனைத்து தேவைகளையும் நாம் ஒரு சமூகமாக நம்முள்ளே நாமே வைத்து திணித்துக் கொண்டோம்.
ஆசைகள் பெரிதாகி வருகிறது அதனை தாங்கிப் பிடிக்கும் அமைப்பு அப்படியே இருக்கிறது. ஊழலும், லஞ்சமும் மலிந்து விட்டதென்று மேகத்திலிருந்து இறங்கி வந்து ஓர் அன்னா ஹாசரே நம்மை மீட்டெடுப்பார் என்று கனவில் மயங்கிக் கிடக்கிறோம். மாறாக, அது போன்ற ஊழல், லஞ்சம் பெருகி வழிவதற்கான மூல ஊற்றை கண்டுபிடித்து அடைப்பதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. அந்த ஊற்றுகள் பல முகங்களில் கட்டயாமாக நம்மிடையே நாமே அமைத்துக் கொண்டுள்ளோம். எல்லவற்றின் அடிப்படை கட்டமைப்பு ஆசையும் அரசாங்கத்தின் கையாலாகத்தனமுமே!
ஆசை தனிமனிதனின் சிந்தனையை தொட்டு அணை போட்டும் உடைத்தும் கொள்வதற்கான குமிழ்களை கொண்டது. ஆனால், அரசாங்கத்தின் வலியமைற்ற சட்டங்கள் ஒட்டு மொத்த சமூகத்தையுமே பாதிக்கிறது. சமச்சீர் கல்வி நம் போன்ற சமச்சீரற்ற சமூகத்தில் மிக மிக அவசியம் என்பது என்னுடைய நோக்கு. அதற்கான காரணங்கள் என்னளவில், என்னுடைய குடும்ப அமைப்பை கொண்டே விளக்கியிருக்கிறேன்.
யுனிவெர்சல் பாடத் திட்டங்களையும் கொண்டு வந்து, அரசாங்க பள்ளிகளின் தரத்தினையும் உயர்த்தி, ஆசிரியர்களும் தங்களது பொறுப்பையும், தனிப்பட்ட மாணவர்களின் தேவையறிந்து கருசணையுடன் அணுகி கற்பதில் மாணவர்களுக்கு எந்த விதமான மனத் தடையுமில்லாத ஒரு சூழலை, நண்பகத் தன்மையை உருவாக்குவது நல்ல தன்னம்பிக்கையுள்ள, ஆரோக்கியமான மாணவர்களை/மனிதர்களை உருவாக்க உதவும்.
இப்பொழுது உள்ள சமச்சீர் கல்வியின் தரம் அந்தளவிற்கு உயர்ந்ததாக இல்லையெனில், பின் வரும் காலங்களில் நிச்சயமாக இன்றைய நடைமுறைத் தேவைகளை கருத்தில் கொண்டு உயர்த்திக் கொள்வார்கள் என்று நம்புவோம். இந்த அமைப்பில் அரசியல் சார்புகளை விட்டு விலக்கி கொள்வது அனைவருக்கும் நலம் பயக்கும் - குறைந்த பட்சம் கூடுதல் திருடர்களை உருவாக்குவதனையாவது குறைக்கலாம்.
அமெரிக்காவில் பொது பள்ளிகள்:
பி.கு: அமெரிக்காவில் உயர் நிலை பள்ளி வரையிலான படிப்பிற்கு பெரும்பாலும் இங்க உள்ள மக்கள் அரசாங்க பொதுப் பள்ளிகளையே பயன் படுத்துகின்றனர். தனியார் பள்ளிகள் மிகவும் அரிதாகவே காணக்கிடைக்கிறது. அது போன்ற பள்ளிகளில் மிகவும் பணம் படைத்தவர்களே தங்களது பிள்ளைகளை கல்வித் தரத்திற்குமட்டுமல்லாது வேறு பல காரணங்களுக்காகவும் போடுகிறார்கள். இருப்பினும் பெரும்பான்மையினரின் தேர்வு பொதுப் பள்ளிகளே! எப்படி அவர்களால் நாடு முழுமைக்குமே செல்லு படியாகும் பாடத்திட்டங்களைக் கொண்டு கல்வியும் வழங்கப்பட்டு பள்ளியிலிருந்து கல்லூரிக்குக்கு செல்லும் வாய்ப்பையும் பெற்றுவிட்டால் ஒரு திறன் வாய்ந்த சமூகத்திற்கு பங்களிப்பூட்டும் ஒருவரை பெற்று கொள்ள முடிகிறது?
அது போன்றே ஏன் நம் ஊரில் காளான்களாக முளைத்திருக்கும் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் இங்கு கணக்கற்று காணக் கிடைப்பதில்லை. அவிழ்த்து விட்டு நம் ஊரைப் போலவே இங்கும் தரமற்ற கல்வியை பெற்றுக் கொள்வதற்கு எவ்வளவு நேரமாகும்? அப்படியெனில் எது அவர்களை தடுக்கிறது? பிசினெஸ் செய்யத் தெரியாவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
மற்றொரு விசயம் கவனிக்க வேண்டியது, நம்முடைய சமூகத்தில் இருப்பதனைப் போன்ற தொற்று வியாதி என் பிள்ளை இந்த பள்ளியில் படிக்கிறான் அதனால் நான் ஒரு ’வெண்ணை’ என்று அடுத்தவனின் மூக்கினுள் கையை விடுவது கிடையாது.
காணொளியை உருவாக்கி வழங்கிய ஓசை செல்லாவிற்கு நன்றி!
24 comments:
தெகா...எழுதனும்னு நினச்சேன் எழுதிட்டீங்க..
முக்கியமா கோவைல பெற்றோர்கள் தங்களின் கௌரவத்திற்கும், பலத்தை காட்டுவதற்குமே பெரும்பாலும் பள்ளிகளையும், கல்லூரிகளையும் தேர்ந்தெடுக்கிறார்கள்...சிலர் மட்டுமே கற்பித்தலின் தரத்தை கணக்கில் எடுக்கின்றனர்.. இந்த சமச்சீர்கல்வி வந்ததில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்..ஆறுதல்.. அரசாங்க திட்டம் என்றாலே அந்த தரத்தை குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை... இந்த திட்டத்தில் பாடங்களில் சில தவறுகள் இருக்கலாம்... அதை சரி செய்யத்தான் நாம் முயற்சிக்க வேண்டுமே தவிர கண்ணை மூடிக்கொண்டு it is ridiculous' என்று சொல்லுவது என்ன நியாயம்.. தனியார் பள்ளிகள் புத்தககம் விற்பதில் அதீத லாபம் ஈட்டி பொய்யான ஒரு பிம்பத்தை வளர்த்து வந்தார்கள்.. அது இனி முடியாது...அது தான் அவர்களுக்கு பிரச்சனை.. இந்த பாடத்திட்டத்தில் இருக்கும்
ஆசிரியர்களின் கல்வித் திறன்களை மேபடுத்தி, செயல்வழிக்கற்றல் மூலம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளை ஏற்படுத்தி, குழந்தைகளின் சிந்தனைத்திறனை வலர்த்து, படைப்பாற்றலை மேபடுத்தி அவர்களுக்கு வளமான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஆசிரியர்களும் திட்ட மேலாளர்களும் பாடுபடவேண்டும்.. அதை நாங்கள் முடிந்த அளவிற்கு செய்துகொண்டிருக்கிறோம்..
அருமையா வந்திருக்கு உங்க பார்வை. கொஞ்ச வரிகளை உடைச்சுப் போடுங்க எங்கள மாதிரி ஆளுகளுக்கு.. :)
அரசுத்திட்டம், தமிழ்.... இப்படி சொல்லிகிட்டே போகலாம், நம்ம மக்கள் உடனே இலக்காரமாகப் பார்ப்பவை லிஸ்டில்.
ஏற்றத் தாழ்வோடு பார்ப்பது - என்பது நமது மரபணுக்களுக்குள் புகுந்துடுச்சோன்னு பயமா இருக்கு..
கடவுளில் பெரிசு சின்னது, கலைகளில் பெரிசு சின்னது, வேலையில் பெரிசு சின்னது, சம்பளத்தில் பெரிசு சின்னது, உபயோகப்படுத்தும் பொருட்களில் அதிகவிலை, குறைந்தவிலை.. சொல்லி மாளாத அளவிற்கு இருக்கு பட்டியல்... முடிஇ..யல..
இப்படிப்பட்டவர்களால்தான், மாணவர் தற்கொலைகள் அதிகரிக்கிறது. ஏதோ மாணவனின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணில்தான் குடும்ப கொளரவமே இருப்பது போல ஒரு அழுத்தம் கொடுப்பது.. இப்படி சொல்லிகிட்டே போகலாம்.
நான் உரையாடிய ஒரு சில மாணவர்களை வைத்து சமச்சீர்கல்வித் திட்டம் பற்றி ஒன்றை என்னால் கூறமுடியும். அறிவியல் பயிற்சிக் கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும் விதமே அவர்களுக்கு விடை தேட ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. அது அந்த மாணவர் முகங்களில் தன்னியல்பாக வெளிப்படுகிறது.
"அவர்கள் கேள்விகளை நேசிக்க துவங்குகிறார்கள்."
இது எவ்வளவு பெரிய மாற்றம் அறிவியல் துறைல இல்லையா?
இப்போதைக்கு இதோட நிறுத்திகிறேன்.
சும்மா பிச்சு போட்டு வச்சிருக்கேன் தோன்றியதை எல்லாம். இடுகைக்கு தொடர்பா இருக்குன்னு நம்புறேன்.
குட் போஸ்ட் தெகா..
இன்று பாடி ஆடி குழந்தைகளுக்கு சொல்லித்தராங்கன்னு கேள்விபட்டு நான் வெளிநாட்டுக்காரங்க கிட்ட எல்லாம் கூட எங்க ஊருலயும் அழகா வரப்போது பாருங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தேன்.( கூப்பிடறேனாம் வெளிநாட்டில் இருக்கவங்களை :)
கல்வியையும் மத்தவிசயங்களை கோர்த்து இங்க சரி செய்யுங்க முதலில் ந்னு நல்லா எழுதி இருக்கீங்க..
//இப்பொழுது உள்ள சமச்சீர் கல்வியின் தரம் அந்தளவிற்கு உயர்ந்ததாக இல்லையெனில், பின் வரும் காலங்களில் நிச்சயமாக இன்றைய நடைமுறைத் தேவைகளை கருத்தில் கொண்டு உயர்த்திக் கொள்வார்கள் என்று நம்புவோம்//
எல்லோரும் சொல்லும் இந்தக் குறையும் நீங்கி விடும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதோடு இப்போதே மத்திய அரசிலிருந்து வரும் சில திட்டங்கள் (S.S.A.) கல்வி கற்பிக்கும் முறையை மாற்றி வருகின்றன. ஆசிரியர்களின் வேலை இப்போது நன்கு ‘கடுமையாகிக்’ கொண்டு வருகிறது. ஆனால் இன்னும் ஆசிரியர் பயிற்சிக்காலங்கள் இன்னும் மாறவில்லை. இந்த மாற்றங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நல்ல ஒரு கல்வி முறையை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன்; நம்புகிறேன்.
தி.மு.க. அரசில் நான் மதிப்பு கொடுத்த ஒரே துறை பள்ளித் துறை. அந்த அமைச்சர் தஙம் தென்னரசு மீதும் எனக்குப் பாராட்டு உண்டு.
நேற்று முழுக்க மடிக்கணிணிக்கு வைரஸ் காய்ச்சல். வெளியே போற அவசரத்துல உள்ளே வந்துட்டேன். நண்பர் சொன்ன மாதிரி கொஞ்சம் உடைத்து எழுதினால் என்ன? நிறைய விசயங்களை எழுதியிருக்கீங்க. மங்கை சொல்வது தான நானும். இப்போது கல்வி என்பது கௌரவம் சம்மந்தப்பட்டது போல் ஆகி விட்டது.
அந்த வீடியோ பார்க்க மீண்டும் ஒரு முறை இன்று மாலை வருகின்றேன்.
யாரவது இப்போது மாணவர்களைப் பற்றி கவலைப்படுவதை விட ஆறாப்பு சொல்லிக்கொடுத்துக்கிட்டு 40 000 சம்பளம் வாங்கிக்கொண்டு கந்து வட்டித் தொழிலும் நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களையும்ப் பற்றி எழுதுங்களேன். ஒரு டீச்சரம்மாவுக்கு அவங்க க்ளாஸ் பசங்க வரும் போது காய்கறி வாங்கிக் கொண்டு வர வேண்டுமாம். தேவகோட்டைக்கு பக்கத்தில். அவரவர் தோட்டத்தில் விளைந்த ப்ரெஷ் தான் புடிக்குமாம்.
இருங்க மாலை வர்றேன்.
//அங்கே ஊட்டி ஷெஃப்பர்ட் சர்வதேச பள்ளியில் படித்தவர்களிலிருந்து, சேஷாத்திரி வித்யா நிகேதனில் சிறப்பு பாடம் படித்தவர்களிலிருந்து குருவிக்கரம்பை அரசாங்க மேல் நிலை பள்ளியில் படித்தவர்களுடனும் போட்டி போட்டு வெற்றி பெறுவதாக அமைந்து பட்டிருந்தது அந்த விளையாட்டு மைதானம்.//
ம்ம்.. இந்த நிலையில் ஒருவித தாழ்வு மனப்பான்மை வருவது தவிர்க்க இயலாதது.. கல்லூரியில் சில காலம் எங்களது நிலையும் இதே தான்..
//கூரை வீட்டில் வாழ்பவனைக் கூனி குறுக மற்றொரு வாய்ப்பையும் கொடுத்ததாகத்தான் எடுத்துக் கொண்டு நீ முந்தி, நான் முந்தி என்று கேள்வி கேப்பாடு இல்லாமல் ஈயடிச்சான் காப்பி அடிக்க செல்லுவோம்//
இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. மற்றவர் படிக்க வைக்கிறார் என்பதற்காக யாரும் தன் பிள்ளையைப் படிக்க வைப்பதில்லை.. அவர்களுக்குத் தெரியும், போட்டித் தேர்வுக்கான சூழலில் வெற்றி பெற இதெல்லாம் அவசியமென.. அதே மாதிரி ஒருவர் என்ன படிக்கிறார் என்பது இன்னொருவரைக் கூனிக் குறுக வைக்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.. இந்தப் பள்ளியில் நான் ஏன் படிக்கவில்லை என்றெல்லாம் நினைத்ததில்லை..
சில தொழில்கள் ஓங்கியும் சிலவை குறைவான லாபத்தை ஈட்டுவதாகவும் இருப்பதால், மற்றவரை முந்திச் சென்று தனக்கான இடத்தைக் கைப்பற்றுவதே முக்கிய நோக்கமாக இருக்கிறது..
ஒருவிதமாகப் பார்த்தால், நாமெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை, ஒரு பரீட்சையில் கல்லூரிக்கு வந்து விடுகிறோம்.. இங்குள்ள பிள்ளைகள் கல்லூரிக்கு அப்ளை செய்வதற்கென்றே தமது சி வி ஐ நிரப்ப ஏதேனும் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.. ஒன்றும் புரியாமல் நாங்கள் பணி செய்யும் இடத்தில் உட்கார்ந்து கவனிக்க வருகிறார்கள், அவர்கள் கொட்டாவி விடுவதில் எனக்கே தூக்கம் போய்விடும்.. இப்படியிருக்க, நான் இவ்வளவு காலம் அப்சர்வ் செய்திருக்கிறேன் என்று சி வி யில் விவரம் நிரப்பப்படும்..
//ஆங்கிலம் பேசும், சீருடை அழகாக இருக்கிறது, பக்கத்து வீட்டு மாமி அங்கேதான் தன் பிள்ளையை படிக்க வைத்திருக்கிறாள், அந்தப் பள்ளியில் படிக்க வைத்தால் பெருமை (மற்றதெல்லாம் எருமை), எல்லாத்துக்கும் மேல நம்ம ஸ்டேடஸ்க்கு அதுதான் சரியான பள்ளி.//
ஆங்கில மீடியம் சரிதான்.. ஆனால்.. மறுபடியும்.. இதையெல்லாம் விட, எந்தப் பள்ளி எவ்வளவு மதிப்பெண்களை ஈட்டித் தந்திருக்கிறது, அதன் தேர்ச்சி விகிதம் எவ்வளவு, எவ்வளவு பேர் தொழிற்கல்வியில் நுழைந்திருக்கிறார்கள் என்றெல்லாம் சுமாரான கல்வியறிவு கொண்ட என் பெற்றோர்களே சிந்தித்தார்கள், நான் பதினொன்றாம் வகுப்புக்கு வரும் போது.. நிறைய பெற்றோர்களின் சிந்தனை, அதிலும் குறிப்பாக பதினொன்றாம் வகுப்பில் நுழையும் போது, கல்லூரிகளில் நுழைவதைக் குறித்தே இருக்கிறது..
// நேற்று வரை சாராயம் காச்சி பணம் பெருக்கியவர் கூட இன்றைக்கு பள்ளி தாளாலர் ஆகிவிடலாம். இதே ரேஞ்சுதான் இன்றைய மருத்துவ, இஞ்சினிய, கலைக் கல்லூரிகளில் முதலீடும் கூட என்பது யாவரும் அறிந்ததே!//
// அது மட்டுமின்றி மாதமாதம் தன் தலையின் சைஸை விட அதிகமாக பள்ளிக்கு ஆகும் செலவிற்கென அடுத்தவர்களின் மடியில் கை வைக்காமல் எப்படியாக அந்த பணம் புரட்டப்படும்? //
//இப்பொழுது உள்ள சமச்சீர் கல்வியின் தரம் அந்தளவிற்கு உயர்ந்ததாக இல்லையெனில், பின் வரும் காலங்களில் நிச்சயமாக இன்றைய நடைமுறைத் தேவைகளை கருத்தில்
கொண்டு உயர்த்திக் கொள்வார்கள் என்று நம்புவோம்.//
ம்ம்..
//அது போன்றே ஏன் நம் ஊரில் காளான்களாக முளைத்திருக்கும் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் இங்கு கணக்கற்று காணக் கிடைப்பதில்லை//
பள்ளிகளுக்குச் சரி, ஆனால் கல்லூரிகள் விஷயத்தில் இங்கே அநேகம் தனியார் தானே??
எல்போர்ட்,
//இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. மற்றவர் படிக்க வைக்கிறார் என்பதற்காக யாரும் தன் பிள்ளையைப் படிக்க வைப்பதில்லை..
அதே மாதிரி ஒருவர் என்ன படிக்கிறார் என்பது இன்னொருவரைக் கூனிக் குறுக வைக்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.. //
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. நம்ம காலத்தில வேணா நம்ம பெற்றோர்களுக்கு அந்த மாதிரியான peer pressure இருந்திருக்காதுங்க. இன்னிக்கு நிலமை அப்படி இல்லை. தன் பிள்ளைகள் எந்த பள்ளி கூடத்தில் படிக்கிதுங்கிறது ஒரு பீத்தலுக்கான விசயமாத்தான் நடைமுறையில் இருக்கிறதா எனக்குப் படுது. தெரியுமா, சில நேரங்களில் வியாதிக்கு வைத்தியம் பார்த்துக்கிறதில கூட சொல்லிக் கொள்ளும் மருத்துவமனை பெயரில் கூட பெருமை இருக்கிறது - உ.தா: அப்பெல்லோ :) ...
அதே போன்றுதான் ஊட்டியில, கோடையில, டேராடூனில் படிக்கிதுன்னா அட சில கண் புருவங்கள் உயராதா :))
நான் இதற்கு காரணமாக தொழில்துறையில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளையே முக்கியக் காரணிகளாக நினைக்கிறேன் (என் குருவி மண்டைக்கு எட்டிய மட்டில் :) ).. கம்ப்யூட்டர்/சாப்ட்வேர் சார்ந்து படித்தால் ஓரளவு நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்புக்கான சாத்தியம் அதிகம் என்ற பட்சத்தில் அதை நோக்கியே பெரும்பாலான நடுத்தர வகுப்பினர் ஓடுவார்கள்.. அதனால் அங்கு போட்டி அதிகமாகும்.. போட்டியில் வெல்ல பள்ளியின் பயிற்சி அவசியம்.. தனியார் பள்ளியில் இதற்கான பயிற்சிக்கான ஆசிரியர் அர்பணிப்பு அதிகம்.. கூடவே ஆங்கிலப் புலமை இன்றைய அளவில் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கருதப்படுகிறது.. இப்படியான முடிச்சாகவே இதைக் காண்கிறேன்..
// சில நேரங்களில் வியாதிக்கு வைத்தியம் பார்த்துக்கிறதில கூட சொல்லிக் கொள்ளும் மருத்துவமனை பெயரில் கூட பெருமை இருக்கிறது - உ.தா: அப்பெல்லோ :) ...//
அங்க பாத்துக்குறாங்கன்னா தரமும் ஒரு கன்சிடரேஷன் தானே?
//அதே போன்றுதான் ஊட்டியில, கோடையில, டேராடூனில் படிக்கிதுன்னா அட சில கண் புருவங்கள் உயராதா :)//
எனக்குப் பாவமா இருக்கும் :)
பள்ளிகளுக்குச் சரி, ஆனால் கல்லூரிகள் விஷயத்தில் இங்கே அநேகம் தனியார் தானே??//
கல்லூரிகள் இருந்தாலும் அவைகளுக்கென்று ஒரு தரம் இருக்கிறது, பாரம்பர்யமிருக்கிறதல்லவா? வருடத்திற்கு எத்தனை புதுக் கல்லூரிகள் இங்கு திறக்கப்படுகின்றன? மேலும், கல்லூரிகளுக்கான கட்டணங்கள் பெரும்பாலும் பெற்றவர்களின் பைகளிலிருந்து சுரண்டப்படுவதில்லையே. எது போன்ற பல்கலையில், அது எந்த ஊரில் அது அமைந்திருக்கின்றது என்பதனை பொருத்தும் அந்த கட்டணம் அமைகிறது தானே?
மாணவர்களே தங்களுக்கு தேவையான பணத்தை வங்கி கடனை பெற்றோ அல்லது சுய சம்பாத்திய சேமிப்பைக் கொண்டோ அல்லவா தங்களது படிப்புச் செலவை முகம் தரிக்கிறார்கள். அது போன்ற கல்வி நிறுவனங்களும் காமா சோமா என்று மாணவர்களையும் சேர்த்து கொள்வதும் கிடையாதே. டொனேஷன் கொடு, புன்னாக்கு கொடு என்பதெல்லாம் எங்கே இருக்கிறது :) ?
அங்க பாத்துக்குறாங்கன்னா தரமும் ஒரு கன்சிடரேஷன் தானே? //
ஒவ்வொரு ஸ்பெஷாலிடியும் ஒவ்வொரு குறிப்பிட்ட வியாதிகளை அனுபவம் கொண்ட லோகல் மருத்துவர்களே அவர்களுக்கான இடத்தில் வைத்து மிகச் சரியாக செய்து கொடுப்பதற்கான வாய்ப்பு இருப்பினும், முதுகை முரண்டுது ஒரு முறையாவது அந்த மருத்துவமனையில தங்கி பார்த்துபுடணுமிய்யான்னு சில ஜந்துக்கள் இருக்கிதுங்க. தன்னோட நிலத்தையே வித்துப்புட்டு அடம் புடிச்சிகிட்டு படுத்துக்கெடக்கிறது :)
தெகா..நல்லா சொன்னீங்க...அன்பின் ஜோதிஜி சொன்ன மாதிரி கந்துவட்டிகாரன் அது தமிழ்நாட்டு ஆசிரியர்கள் தான்.
புள்ளங்களுக்கு சொல்லி கொடுக்க அவங்க இன்னும் நிறைய கத்துகனும் தெகா.
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். To be honest I don't know a lot about the "சமச்சீர் கல்வித்திட்டம்" in India. இலங்கையிலும் இங்கும் எனது அனுபவத்தையே இங்கு குறிப்பிடுகின்றேன்.
நாம் ஜவரும் அரசாங்கப் பள்ளிகள் தான். நான் இங்கு வந்து முதலில் என்ன செய்வதென்ற குழப்பத்தில் ஒரு இரண்டு கிழமைகள் பள்ளி சென்றேன். என் தங்கைகள் நால்வரும் இங்கு பள்ளி சென்றார்கள் எல்லாம் அரசாங்கப் பள்ளிகள் தான். எங்கட அம்மா சொல்லுவா படிக்கிற பிள்ளை எங்க வேண்டுமென்றாலும் படிக்கும் என்று. பள்ளிகளில் பெரிதாக வித்தியாசம் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம். ஆனால் பிள்ளைகளின் கல்வியறிவில் ஒரு ஆரோக்கியமான எதிர்பார்ப்பு பெற்றோர்கள் வைத்திருக்க வேண்டியது பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு நிச்சயம் அவசியம் என நினைக்கிறேன்.
இலங்கையில் நான் இதைப்பற்றி யோசிக்கும் அளவிற்கு பக்குவம் அடைந்திருக்கவில்லை. இங்கு சில தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் கொஞ்சம் தாம் உயரடுக்கு ஆட்கள் என்ற மாதிரியொரு மனப்பான்மை இருக்கிறது எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இங்கு பல தமிழ் மருத்துவர்கள் பிள்ளைகளை எத்தனையோ மாத waiting list இல் வைத்திருந்து தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அவர்களின் (பெற்றோர்களின்) ஒரே இலக்கு பிள்ளை மருத்துவம் படிக்க வேண்டும் என்பது மட்டுமே. அதற்காகப் பிள்ளை இங்கு எடுபடாவிட்டாலும் இலகில் எந்த மூலையில் கிடைக்குமோ அங்கு அனுப்பி வைக்கிறார்கள். அப்பிள்ளைக்கு தானாக உலகில் survive பண்ண எந்தளவு திறன் இருக்குமென்று எனக்குத் தெரியாது. அண்மையில் ஒரு 12 வயதுப் பிள்ளையின் நடன அரங்கேற்றத்தின் பின் அப்பிள்ளையின் அப்பா - இது எல்லாம் எதுக்கு - மருத்துவத்துறைக்கான applicaiton form இல் extra curricular activities இல் போடத்தான் என்றாராம்?!
நானும் கிட்டத்தட்ட உங்கட கேஸ் தான். இப்ப யோசிக்கும் போது இலங்கையின் கல்வி அமைப்பு எனக்குப் பொருந்தவில்லை என்றே சொல்வேன். எனக்கு இருந்து நிறைய நேரம் புத்தகத்தைப் படித்து திருப்பிப்படித்து பாடமாக்குவதெல்லாம் முடியவே முடியாத காரியம்.அதற்கான சந்தர்ப்பங்கள் இலங்கையில் மிகக் குறைவு. அத்தோடு அங்கு assignments என்றெல்லாம் எதுவும் இல்லை. வருடம் முழுதும் படித்ததை ஆண்டிருதிப் பரீட்சையில் மட்டுமே மதிப்பிடுவார்கள்.A/L ல் அதையும் விட மோசம். 2 1/2 வருடங்காள் படித்ததை அந்த 2 1/2 வருடங்களின் பின் மட்டுமே மதிப்பிடுவார்கள். ஒரு internal assessments உம் இல்லை. A/L படிக்கும் போது அம்மா என்னை அறைக்குள் பல தடவை பூட்டி வைத்திருக்கிறா. ஓரிடத்தில் இருந்து படிக்கப் பண்ணுவதற்காக. ஒப்பிடும் போது இங்கு பல internal assessments உண்டு. அதுவும் பல பாடங்கள் ஒரு செமெஸ்டெர் (6 மாதங்கள்) மட்டுமே. அநேகமான final semester exams 60% or less தான் இறுதி grade க்கு count பண்ணும். எனக்கு இது மிகவும் ஏதுவாக இருந்தது. அதோடு அநேகமான கேள்விகள் உங்கள் சிந்திக்கும் திறனை வளர்க்கும் விதமாக இருக்கும். அநேகமான கேள்விகளுக்கு புத்தகத்துல் நேரடியாகப் பதில்கள் இருக்காது. It's more practical than theoritical. இதுவே சிறந்த முறை என நான் நினைக்கிறேன். I don't have any passive learning skills, but I think I am very good at active learning. I think this is exactly why research suits me perfectly well.
I think I am completely deraining the topic. :) Sorry.
இந்த சூழ்நிலையின் அடிப்படையிலேயே அருதிப் பெரும்பான்மையினர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில், பள்ளிகளில் போதுமானளவிற்கு தேவையான கல்வி போதிக்கும் உபகரணங்களும், உலகத்தின் இன்றைய தேவையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட பாடத் திட்டங்களும் அல்லது அணுகுமுறையும் அற்று, எல்லாவற்றிற்கும் மேலாக கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கே போதுமான பொது அறிவும், மாணவர்களிடத்தே புழங்கும் உளவியல் செயற்பாடுகளுக்கான பிரக்ஞையுமற்று ஏதோ சம்பளத்திற்காக வந்து போகிறேன் என்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டால், அந்த எதிர்கால நாட்டின் குடிமகன் எப்படி அதற்கு எதிர் முனையிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு சர்வதேச பள்ளித் சூழ்நிலையில் படித்தவனுடன் முகம் தரிக்க முடியும்?
Very well said. இலங்கையில் நிச்சயமாக ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. உளவியல் சம்பந்தமாக ஒரு உதாரணம் அண்மையில் இங்கு இலங்கையில் இருந்து வந்த ஓரு குடும்பத்தில் இரு குழந்தைகள் மகளுக்கு 8 வயது/மகனுக்கு 4 வயது. இங்கு பள்ளி சேர்ந்த முதல் நாளிலிருந்தே மிகுந்த ஆர்வத்துடன் பள்ளி செல்கிறார்கள். அவர்து பெற்றோர் எனக்குச் சொன்னது - அங்கு பல முறை பள்ளி செல்லாமல் இருப்பதற்காக தலை இடிக்குது, வயிறு நோகுது எனப் பொய் சொல்பவர்கள் இங்கு போகாமல் இன்று நிற்கிறாயா என்று கேட்டாலும் மாட்டேன் என்று செல்கிறார்கள்?! இத்தனைக்கும் அங்கு ஆங்கிலம் ஒரு துளி கூட படிக்கவில்லை.
"இப்படியாக ஒரு சமூகம் அமைந்து போனால் எப்படி அந்த நாடு வெளங்கும்? பணம் படைத்தவர்கள் எந்த தொழிலையும் ஆரம்பிப்பது போலவே பணம் பெருக்குவதனையும், பாதுகாப்பான முதலீடு என்ற தொணியிலும் கல்வித் துறைக்குள்ளும் வந்தால் அதனிடத்தில் பொதிக்கப்பட்ட சாதா மனிதர்களின் நிலைதான் என்ன?"
Exactly!
என் மகனுக்கு வாற மாதம் 3 வயதாகிறது. இன்னும் இரு வருடங்களில் பள்ளி தொடங்கப் போகிறான் (It is so scary!). அன்று எதேச்சையாக Educational review office க்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கிருந்து choosing a primary school for five year olds என்ற booklet எடுத்து வந்தனான். இனித்தான் வாசிக்கப் போறேன்.
வாங்க மங்கை,
முதல் கருத்தே உங்ககிட்டே இருந்து வாங்கிறது ரொம்பப் பொருந்தும் :)
//அரசாங்க திட்டம் என்றாலே அந்த தரத்தை குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை...//
நிச்சயமாக சொல்லணும்னு அவசியமே இல்லை.
//தனியார் பள்ளிகள் புத்தககம் விற்பதில் அதீத லாபம் ஈட்டி பொய்யான ஒரு பிம்பத்தை வளர்த்து வந்தார்கள்.. அது இனி முடியாது...அது தான் அவர்களுக்கு பிரச்சனை.. //
வேலியில் சுகமா மேஞ்சிட்டு இருந்த ஓணானை மண்டை கிள்ளி தூக்கி பிடிச்ச மாதிரி மிகச் சரியாக இதன் பின்னணியில் உள்ள திருட்டை எடுத்து வெளியில போட்டுடீங்க :))
//அதை நாங்கள் முடிந்த அளவிற்கு செய்துகொண்டிருக்கிறோம்...//
அனுபவிச்சு செய்யுங்க...
நாங்க படிச்ச காலத்துல, எங்க கிராமங்கள்ல அரசு பள்ளிகள் மட்டுமே... அதனால, எனக்கு சமச்சீர் கல்வி அப்படின்னா என்னான்னே தெரியாது... இலட்சுமி நாயக்கன் பாளையத்து 2 ஆண்டுகள்... அது தனியார் பெயரில் நடக்கும் அரசு பள்ளி... தமிழ்க்கல்வி... அம்புட்டுதேன்... எதோ பிரவாகரு தமிழ்மணம் பத்தி சொல்றாரேன்னு வாசிக்கப் போயி இங்க வந்துட்டேன்... அட்லாண்டாவுல இருந்துட்டு, சார்ல்சுடன் வரலயே பிரபா??
அருமையான அலசல். ஒவ்வொரு விஷயம்னு எடுத்தாலும் பொதுவா அரசுப்பள்ளி, மெட்ரிகுலேஷன்னு சாதகபாதகம் சொல்லீற முடியாதுன்னு நினைக்கிறேன். சென்னையில அரசுப்பள்ளிக்கு ஆதரவின்மைக்கு இருக்கிற அதே காரணம் ஒரு சிறிய ஊரின் அரசுப்பள்ளிக்கு இருக்காது. அதே மாதிரி பெரிய நகரங்கள்ள புள்ளைங்கள பஸ்லயும் அனுப்ப முடியாம, நடந்து போகவும் விட மனசில்லாம, கொஞ்சம் மேல கீழ இருந்தாலும் ஊட்டுக்கு பக்கத்துல இருக்கிறது அது என்ன சிலபஸ் வேணும்னாலும் இருக்கட்டும்னு சேர்க்கிறது. பெற்றோர்கள் ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்கன்னாலும் இது ஒரு வசதி. புள்ளைங்க நேரத்தோட வீட்டுல வந்து நிக்கும். மெட்ரிகுலேஷன்ல பெண்டெடுக்குறானுங்கப்பா. ஊட்டுப்பாடம், டெஸ்டுன்னு. புள்ள கண்ட பசங்க கூட சேர்ந்து கெட்டு போக வாய்ப்பே இல்லைன்னு எல்லாம் காரணம் கேட்டுருக்கேன். அப்புறம் 13000க்கு கையெழுத்து போட்டு 4000 சம்பளம் வாங்கற டீச்சருங்க அஞ்சாம்பு வரைக்கும் மெட்ரிக்குலேஷன்ல ஈஸி. அரசுப் பள்ளில கஷ்டம். அரசு பாடத்திட்ட பள்ளிலையும் கூட. அது மாதிரி காரணங்களுக்காகத்தான் அந்தப் பள்ளிகள் வளரலைன்னு நின்னைக்கிறேன். 70ல நான் படிச்சப்பவும் சரி, 2000ல என் பையன் படிச்சப்பவும் சரி +2 வரைக்கும் லேப்னா டீச்சர் செஞ்சி காட்டுவாங்க(எங்க ஸ்கூல்ல லேபே கிடையாது) அதும் தண்ணிய கொதிக்க வச்சி குழாய்ல நீராவிய புடிச்சி மூடி போட்ட பீக்கர்ல உட்டா டிஸ்டில்ட் வாட்டர்தான் அதிகம். கலர்தண்ணி காட்டுறது ஒரு வாட்டி நடந்துச்சு.
இன்னைக்கும் சென்னைல பெத்த பேரு பள்ளியோடங்கள்ள கால் க்ரவுண்டு நிலம் கிடையாது விளையாட. ப்ரேயருக்கு கூட ஸ்பீக்கர் வச்சு க்ளாஸ்லதான். கட்டமைப்பு, பாடத்திட்டம், கட்டணம், ஆசிரியர் நலம்னு எல்லாம் கலந்து ஒரு திட்டம் வந்தாலே ஒழிய ஒன்னு தண்ணிக்கிழுத்தா ஒன்னு கரைக்கிழுக்கும்.
ஆசைகள் பெரிதாகி வருகிறது அதனை தாங்கிப் பிடிக்கும் அமைப்பு அப்படியே இருக்கிறது. ஊழலும், லஞ்சமும் மலிந்து விட்டதென்று மேகத்திலிருந்து இறங்கி வந்து ஓர் அன்னா ஹாசரே நம்மை மீட்டெடுப்பார் என்று கனவில் மயங்கிக் கிடக்கிறோம். மாறாக, அது போன்ற ஊழல், லஞ்சம் பெருகி வழிவதற்கான மூல ஊற்றை கண்டுபிடித்து அடைப்பதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. அந்த ஊற்றுகள் பல முகங்களில் கட்டயாமாக நம்மிடையே நாமே அமைத்துக் கொண்டுள்ளோம். எல்லவற்றின் அடிப்படை கட்டமைப்பு ஆசையும் அரசாங்கத்தின் கையாலாகத்தனமுமே!
சபாஷ் சபாஷ் சபாஷ்
எங்கேயிருந்து புடுச்சீங்க இந்த காணொளியை? அற்புதம்.
எந்தப் பெற்றோரும் வெறும் பெருமைக்காக தனியார் பள்ளிகளில் அதிக பணம் குடுத்து சேர்ப்பது இல்லை. அரசாங்கப் பள்ளிகள் தரம் இல்லாமல் போனது தான் காரணம். அதனை சரி செய்வதை விட்டு விட்டு, இது எல்லாம் வெறும் கண் துடைப்பு வேலை.
What the government schools now need is a total paradigm shift. We can not solve the problem with our ideas when we created the problems.
Let all the elected representatives ensure to admit their wards (children,grandchildren and great grand children - because many of our leaders are 70 + ) in government schools, and then preach to the common public
Post a Comment